அறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]

 அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 |  பகுதி 8பகுதி 9 | பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 

(தொடர்ச்சி…)

ramana

தானன்றி யாருண்டு தன்னை யார் என்சொலின் என்
தான் தன்னை வாழ்த்துகினும் தாழ்த்துகினும் – தான் என்ன
தான் பிறர் என்று ஓராமல் தன்னிலையில் பேராமல்
தான் என்றும் நின்றிடவே தான்

பொருள்: தனக்கு அன்னியமாக யார் இருக்கிறார்கள்? தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னால் என்ன? தன்னை வாழ்த்தினால்தான் என்ன, அல்லது தன்னை தாழ்த்திப் பேசினால்தான் என்ன? நான், எனக்கு அந்நியமானவர் என்று எண்ணாமல் தனது யதார்த்தமான நிலையில் இருந்து வழுவாமல், தான் எப்போதும் தானாக இருப்பதே ஒருவனின் உண்மையான நிலையாகும்.

ஆன்ம நாட்டம் கொண்டுள்ளவனுக்கு, அல்லது அப்படி இல்லாதவனுக்கு என்றில்லாமல் பொதுவாக அனைவருக்குமே இங்கு சொல்லப்பட்டுள்ளது பொருந்தும். நான்-நீ பேதங்கள் இல்லாதபோது பிறர் சொல்வதையும் தனது கருத்துகளாகவே எடுத்துக் கொள்ளும் மனோபாவம் நமக்கு இருக்கும். ஆனால், நான்-நீ என்ற பேதங்கள் எப்போது இல்லாது இருக்கும்?

ஒன்று அவனுக்கு இறையுணர்வு மேலிட்டு எவரையுமே, மற்றும் எதையுமே இறைவனின் அம்சமாகப் பார்க்கும் மனோநிலை வளர்ந்திருக்கும்; அல்லது தான் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்று உண்மையாகவே உணர்பவனுக்கு– தனக்கு என்றாலோ பிறர் எவருக்கும் என்றாலோ– எல்லாம் ஒன்றுதான் என்ற மனோநிலை ஓர் உள்ளுணர்வாகவாவது இருக்கும். அப்படிப்பட்டவன், ஒருவர் சொல்லை, அது அவனை வாழ்த்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ எப்படி இருந்தாலும், கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, அது தன்னை மிகவும் பாதிக்கும் அளவு அதை பொருட்படுத்த மாட்டான்.

இந்தக் காரண-காரியங்களையே திருப்பிப் பார்த்தால் ஒருவன் தன்னை எதுவும் பாதிக்காத அளவு தனது மனநிலையை வளர்த்துக் கொண்டால், அவனுக்கு நிச்சயமாக அவனது கண்ணோட்டத்தின்படி இறையுணர்வோ, சமுதாயச் சிந்தனையோ தானே வளரும். ஆனால் இவ்விரு கண்ணோட்டங்களிலே, இறையுணர்வு கொண்டவனே, “தான் அன்றி யார் உண்டு” என்பதை நன்கு உணர்ந்திருப்பான். அத்தகைய உணர்வு சமுதாயச் சிந்தனை கொண்டவனுக்கு இருக்கும்போது, அது அவனது அகங்காரத்தின் நுண்ணிய வடிவாகவே இருக்கும். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்காக உழைத்தாலும் தான் சமுதாயத்தில் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பதால், தனது தனித்தன்மையை இன்னமும் விட்டுக்கொடுக்காது அதிக பட்சமாக நான்-நீ பேதத்தை முற்றிலும் விடாது சற்றே நீர்த்துப் போகச் செய்திருக்கிறான் என்றுதான் கொள்ள முடியும். அதையும் தாண்டி வரும்போதுதான் அவனுக்கு தனது உண்மை நிலை தெளிந்து, அந்நிலையிலேயே நிற்க முடியும்.

திருமதி. கனகம்மாள், “உடலைவிட்டு உலகமென்று தனியாக ஒன்றில்லை. அந்தவுடலும் மனதையன்றி தனியாயில்லை. மனமும் அறிவே வடிவமானச் சித்தையன்றி வேறில்லை. அந்தச் சித்தும் என்றுமுள்ள பொருளாகிய சத்தைவிட்டு அன்னியமாயில்லை. ஆக எது எது இருப்பதைப்போல் தோன்றினாலும் அவையத்தனையும் காண்பானாகிய இவனுக்கன்னியமாயில்லை. இதைத்தான் ‘தானன்றி யாருண்டு’ என்று விளக்குகிறார் ரமணர்” என்பார்.

எல்லாம் ஒன்று என்றால், ஒருவர் தன் கடமையைத் தவிர்ப்பதற்காக உலகில் தான் ஒரு காரியத்தைச் செய்தால் என்ன அல்லது வேறொருவர் செய்தால் என்ன என்று சமாதானம் சொல்லலாம் அல்லவா? அது சரியான வாதம் ஆகுமா? எல்லாம் ஒன்றுதான் என்றால், சீடனுக்கு, தானும் குருவும் ஒன்றுதானே என்ற சந்தேகம் கூட வரலாம் அல்லவா? இங்குதான் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்தபின், ஒருவன் உலகில் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க – புத்திரனே
அத்துவிதம் மூவுலகத்து ஆகும் குருவினோடு
அத்துவிதம் ஆகாது அறி

பொருள்: இரண்டற்ற பரிபூரண உண்மையை எக்காலத்திலும் உள்ளத்தில் உணர்வாயாக. ஒரு நாளும் அத்வைதத்தை செய்கையில் காட்டாதே. புத்திரனே! நீ மூவுலகத்தினோடும் அத்வைதப்படி பழகினாலும், பரசொரூப வடிவாகிய குருவினோடு மாத்திரம் அத்வைதம் ஆகாது என்ற உண்மையை அறிவாயாக.

இது ஆதி சங்கரர் இயற்றிய சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்றை மொழிபெயர்த்து ரமணர் அருளியது.

அத்வைதம் என்பது இரண்டற்றது என்பதால் எல்லாம் ஒன்று என்றுதான் ஆகிறது. தான் இருப்பதை யாரும் தனக்கு அறிவிக்க வேண்டிய தேவை இல்லாததால், இருப்பது ஒன்றானால் அந்த ஒன்றுதான் தான் என்பதே இதிலிருந்து வெளிப்படும் உண்மை. எப்போது ஒன்று என்று வந்து விட்டதோ அப்போதே ஒருவன் அந்த ஒன்றைத் தன்னுள் தேடி, இருக்கும் ஒன்றான அதுவே தானாய் இருக்கும் மட்டும் எல்லாம் சரியாய் இருக்கும்.

எப்போது ஒருவன் தனக்கு வெளியே என்று எதையாவது காண்கிறானோ அப்போது அத்வைதம் இருக்க முடியாது. ஆகவே ஞானிக்கு அத்வைதம் என்பது அனுபவமாய் இருக்கிறது; சாதகனுக்கோ அத்வைதம் தியானப் பயிற்சிக்கு உதவுகிறது என்பதையே ரமணர் கூறுவார்.

ramanar3செய்கை என்று வந்து விட்டால், “த்ரிபுடி” எனப்படும் முப்புடிகளான செய்பவன்-செயல்-செய்யப்பட்ட பொருள் என்று வந்து விடுகிறது. அங்கு எப்படி அத்வைதம் இருக்க முடியும்? “எல்லாம் ஒன்றே” என்ற நிலையை தான் அடைந்து, அதைச் சாதகனுக்கு விளக்கி, அந்த நிலையை அவன் அடையும்வரை அவனுக்கு உறுதுணையாய் இருக்கும் குரு, சாதகனுக்கு உள்ளேயும் வெளியேயுமாய் இருந்து அவனை இயக்குகிறார். அந்த குருவின் துணை இல்லாது அவனால் பயிற்சியைத் துவங்கவும் முடியாது; துவங்கினாலும் ஆசாபாசங்களில் சிக்காது மேலே செல்லவும் முடியாது; முடிவான அதீத நிலையை அறிந்தாலும் அதில் நிலைக்க முடியாது அவனுடைய வாசனைகள் அவனை அலைக்கழிக்கும்.

குருவின் அருட்பார்வையில் அகப்பட்டவர் அவரிடமிருந்து இறுதி நிலை அடையும்வரை தப்ப முடியாது என்றிருந்தாலும் ஒவ்வொரு சீடனின் துவக்கமும் இயக்கமும் வெவ்வேறாக இருப்பதால் குருவின் வழிகாட்டுதல் அவசியம் ஆகிறது. சீடனின் முன்வினைப் பயனால் இறைவனே குரு வடிவில் அவனுக்கு எல்லாமாய் இருந்து அவனைக் கடைதேற்றுகிறார் என்றுதான் ஆன்றோர்கள் அருளியுள்ளனர். இப்படி, சீடனுக்கு துவக்கத்திலிருந்து இறுதிவரை அவனுடன் பயணிக்கும் குருவும் சீடனும் எப்படி ஒன்றாக முடியும்?
 
முழுமுதற் கடவுளர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையுமே தனக்கு அன்னியமில்லாது சீடன் அத்வைத பாவனையில் தியானம் செய்யலாம். ஆனாலும் மானசீகமாகவோ, ஒரு வடிவுடனோ நம் முன் நின்று நமக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடும் குருவிடம் அத்வைத பாவனை கொள்ளமுடியாது. நம்மை அறியாது இறைவனுக்கு நாம் செய்யும் பாபங்களை குருவின் அருளினால் கழுவிக்கொள்ள முடியும். ஆனால் குருவிடம் நாம் செய்யும் அபசாரத்தை இறைவனாலும் மாற்ற முடியாது. ஆக இரண்டற்ற நிலையை குருவிடம் காட்டினால், அதனால் ஒருவனுக்கு வரும் துன்பங்கள் பிறவிகள் தோறும் தொடரும் அபாயம் உண்டு.
 
உள்ளது நாற்பது அனுபந்தத்தின் நாற்பதாவது செய்யுளில் ரமணர் இவ்வாறு கூறுகிறார்:

அகில வேதாந்த சித்தாந்த சாரத்தை
அகம் உண்மையாக அறைவன் – அகம் செத்து
அகம் அதுவாகில் அறிவுருவாம் அவ்
அகமதே மிச்சம் அறி.

பொருள்: அனைத்து வேதாந்த சித்தாந்தங்களின் முடிவான உபதேசத்தின் சாரத்தை நான் உண்மையாக உள்ளபடி சொல்வேன். நான் என்னும் அகந்தை அழிந்து, பிரம்மமே நான் என்னும் அநுபூதி உண்டானால், அறிவே சொரூபமான அந்த ஆத்மாவே மிச்சமென்று அறிவாயாக.

மனம், வாக்கு இவைகளுக்கு எட்டாத அத்வைத உண்மையை அனுபவத்தில் உணர்ந்தால் அன்றி, எவருக்குமே சம்சார பந்தம் ஒழியாது என்பதே வேத, உபநிஷத்துகளின் கருத்து என்பதையே ரமணர் இங்கு கூறுகிறார்.

வேதத்தின் முடிவான பாகமாக உள்ளவை உபநிஷத்துகள். உபநிஷத்துகள் கூறும் உண்மையை உள்ளபடி சித்தத்தில் ஏற்றிக்கொள்வதுதான் சித்தாந்தம். அதை அனுபவத்தில்தான் உணர முடியும். அந்த அநுபூதி நிலையில் மனம், அது கற்பிக்கும் உலகம், ஈச-சீவர்களான இரட்டைகள், அதைச் சார்ந்த முப்புடிகளோடு, அவை அனைத்துக்கும் காரணமான அகந்தையும் ஒருசேர ஒழியும். அங்கு நாம-ரூபங்களும் இருக்காது. எதனால் அவை அனைத்தும் இருப்பதாகத் தோன்றியதோ அது ஒன்றே மீதமாய் உள்ள பொருளாய் இருக்கும். அதை அனுபவித்தே உணர முடியும்.

“…. சாதகன் செய்யத் தகுந்தது ஆத்மா விசாரமே. அடையத் தகுந்தது தன் நிஜ சொரூபமே. விடத் தகுந்தது அகந்தை மனமே. சகல துன்பங்களும் ஒழியும்படி அடைக்கலமாகப் புகுந்து நிலைபெற வேண்டிய புகலிடமாவது தன் மூலஸ்தானமான இதயமே, ஆன்மாவே.

தியானிக்க வேண்டியது இறைவனது திருவடிகளேயாகும். சேர்ந்து கூட வேண்டியது சத்சங்கமாகும். உள்ளத்தில் பொங்கித் ததும்ப வேண்டியது சாந்தமே சொரூபமான ஆத்மானந்தமாகும். இதுவே அகில வேதாந்த சித்தாந்த சாரம் என்று (ரமணர்) உபதேசிக்கிறார்,”

— என்று தனது நூலில் திருமதி. கனகம்மாள் கூறி முடிக்கிறார்.

பின்னுரை:

காலக்கிரமப்படிப் பார்த்தால் ரமணர் அருளிய பாடல் தொகுப்புகளின் வரிசை அருணாச்சல அக்ஷர மணமாலை, உபதேச உந்தியார், உள்ளது நாற்பது…. என்று போகும். அவரது படைப்புகள் அனைத்திலுமே அக்ஷர மணமாலை உள்ளடக்கிய அருணாச்சல ஸ்துதி பஞ்சகம் ஒன்றில்தான் பக்தி ரசம் ததும்பும். ஏனைய தொகுப்புகள் எல்லாமே ஞான ரசம் கொண்டவைதான். படிப்பதற்கும், புரிந்து கொள்ளுவதற்கும் மேற்கண்ட வரிசையில் உள்ள படைப்புகளில் முன்னே வருவது எளிதானதாகவும், பின்னே வருவது போகப்போகக் கடினமானதாகவும் இருக்கிறது என்பது பலரது அனுபவம்.

ஆனாலும் நான் செய்த முன்வினைப் பயனோ என்னவோ, எனக்கு முதலில் அறிமுகமாகியது “உள்ளது நாற்பது” பாடல்களே. அவைகள் எனக்கு அறிமுகம் ஆகும் சமயம், அந்த நூலின் பிரதியும் என்னிடம் கிடையாது. மும்பையில் வேலை பார்த்து விட்டு ஒய்வு பெறும் போது சென்னை வந்து தங்கிய JBS என்று நாங்கள் அழைத்த திரு. J.பாலசுப்பிரமணியன் என்ற ஒரு பெரியவரிடம்தான் நான் அவைகளை 1975-ஆம் ஆண்டில் கற்றேன். தனது வாழ்நாளின் இறுதி வருடங்களில் இந்தப் பணியை அவர் என் பொருட்டு செய்து முடித்தார். அவர் சொல்லி நான் கேட்டு ஒவ்வொரு செய்யுளையும் என் கைப்பிரதியாக எழுதி வைத்துக்கொண்டேன். அந்த 83 பாடல்களையும் அவர் எனக்கு சுமார் நான்கு நாள்களில் படித்து, பொருள் சொல்லி, விளக்கி, அவ்வப்போது கேள்வியும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரும் என்னைப் போலவே மும்பையில் இன்னொரு ரமண பக்தரிடம் அவை அனைத்தையும் குருமுகமாகக் கற்றுக் கொண்டாராம்.
 
உள்ளது நாற்பது” கற்று முடித்த பின்புதான் “உபதேச உந்தியார்“-உம், அதன் பின்னரே “அக்ஷர மணமாலை“-யும் படித்தேன். ஆக எனது பயணம் இந்த மூன்று தொகுப்புகளைப் பொருத்தவரை பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனாலும் கடினத்தில் தொடங்கி எளிதானதிற்குச் சென்றதால் எனது பயணம் சுகமானதாகத்தான் இருந்தது.

அந்தப் பெரியவர் அன்று போட்ட அஸ்திவாரத்தில்தான் இந்தக் கட்டுரையை இப்போது என்னால் எழுத முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. நான் பெற்ற அந்தப் பெரும்பயனை மற்றோரும் ஓரளவுக்கேனும் பெறலாமே எனும் எண்ணத்தில்தான் இத்தொடரைத் தொடங்கினேன். இதைப் படித்த பலரில் ஒரு சிலரேனும் இப்பணியைத் தொடருவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

அண்மையில் காலமாகிய ரமண பக்தர் திருமதி. கனகம்மாள் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆகியதே ஓர் அதிசய சந்திப்பில்தான். அவர் ஒரு சுற்றுலாப் பயணியாக நியூயார்க் நகரில் Queens பகுதியில் இருக்கும் “அருணாச்சல ஆஸ்ரம“த்திற்கு வந்திருந்தார். அப்போது நானும் அங்கு எதேச்சையாகப் போயிருந்தேன். அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராததால், அவரது தமிழ்ப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியாக அவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ரமணாஸ்ரமத்தின் அருகிலேயே தங்கியிருந்ததால் சென்ற வருடம்வரை அவ்வப்போது அவரை நான் சந்தித்துக் கொண்டிருந்தேன்.

அவர் எழுதி ரமணாஸ்ரமம் வெளியிட்டுள்ள “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை” ஒன்றையே எனது துணை நூலாகக் கொண்டு இந்தத் தொடரை அளித்துள்ளேன். “உள்ளது நாற்பது” தொகுப்பில் இருந்து இந்தத் தொடரின் தலைப்புக்கு ஏற்ற சில பாடல்களை மட்டுமே இத்தொடருக்கு எடுத்துக் கொண்டேன். மற்ற பாடல்களும் தத்துவ சாரத்தைப் பிழிந்து கொடுப்பவைதாம். இந்தத் தொடர் மூலம் வாசகர்கள் எவரேனும் “உள்ளது நாற்பது”-ஐ முதன்முதலாக அறிந்து கொண்டவர்கள் என்றால், அவர்கள் மற்ற பாடல்களையும் தங்கள் முயற்சியினால் படித்து அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

இதுகாறும் இந்தக் கட்டுரைகளைப் படித்து வந்த அன்பர்களுக்கும், இதனைப் படித்து மேலும் ஊக்கம் கொடுத்த, மற்றும் மறுமொழி அளித்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப்போது சொல்லிக் கொள்கிறேன். மேலும் திரு. J.B.S. அவர்களையும், திருமதி.கனகம்மாள் அவர்களையும் பக்தியுடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.

One Reply to “அறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *