பாரதியின் சாக்தம் – 4

பாரதியின் சாக்தம்பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

(தொடர்ச்சி…)

tridevi

பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவள், சுயமாக சுதந்திரம் உடையவள் அன்று எனச் சமுதாயம் கூறுகிறது என்றால் அந்தக் காலத்திலேயே அதற்கான மாற்றுச் சிந்தனை, சமய மொழியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆணே பெண்ணில் அடக்கம், அத்தனை வல்லமையும் சக்தி என்ற மூல மாசக்தியில் அடக்கமாகிவிடுகிறது. ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, மாற்றும் சக்தி என அனைத்தும் ஆதிபராசக்தியின் அம்சங்களே. அவளோ மூலப் பரம்பொருளான ஹரி நாராயணரின் யோக நித்திரை வடிவானவள். சிவத்துடன் ஐக்கியமாகும் சக்தியாக சாதாக்யா என்று கூறப்படுபவள். இத்தகைய மொழி நமக்கு வெறும் புராணப் பேச்சாகத்தான் ஒலிக்கிறது. ஆனால் அன்று இவற்றுகான sub-texts, inter textual connotations சமுதாய, ஆண்பெண் உறவின் மாற்றுச் சிந்தனையாகவும் பதிவு பெறுகிறது. மூலப்பரம்பொருள் பெண்ணாக இருக்கிறது என்ற சிந்தனையே பெரும் பரவலான பிரதி சிந்தனைகளை எழுப்பிவிடும் நெம்பு சிந்தனையாகும். ஹிந்து தன் சமுதாயம், அன்றாட வாழ்க்கை, பலவித மக்கள் உறவுகள், உள்நாட்டார், வெளிநாட்டார் பிரச்சினைகள், கல்வி வேலைவாய்ப்பு என அனைத்து உலகப் பொதுவான பிரச்சினைகளையும் ஹிந்து தன் மதம் என்ற உலகத்தினுள் ஆன்மிக சமய மொழி என்பதை வைத்தே பேசியிருக்கிறாள். இதை நன்கு கண்டறிந்து சுட்டிக் காட்டிய பெருமை விவேகானந்தருக்கே உரியதாகும்.

shakthi4பெண் என்னும் சமச்சான்றாண்மை மிக்க மானுடப் பிரிவைத் தாயாகவும் காதலியாகவும் தோழியாகவும் காண வேண்டும் என்று சொல்ல ஹிந்துவுக்கு, சாக்தம் என்னும் சமய மொழி வாய்ப்பாக இருந்திருக்கிறது. அறிவு பூர்வமான விவாதமாகச் சொல்லியிருந்தாலும் மனித ஆளுமையில் இந்தச் சேதி போய் எட்டுவதற்குக் கஷ்டப்பட்டிருக்கும்; நிலைக்கவும் செய்யாது. ஆனால் சமய மொழி என்ற பக்திப் பாசனமாக இதே சேதி தரப்படும்போது ஆளுமையின் அந்தரங்கத்தில் போய் அது வேர் பிடிப்பதை ஹிந்து நன்றாகவே உணர்ந்திருந்தாள். தக்ஷிணாசாரம், வாமாசாரம் என்ற வகைப்பாடுகளில் சாக்தம் கூறாத ஆண்பெண் அணுகுமுறைப் பிரச்சினைகள் இல்லை எனலாம். ஆனால் பிரச்சினைகள் தத்வார்த்தமான நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சமய மொழியில் முன்னிறுத்தப்படுகிறது.

சாக்தத்தின் இந்த முயற்சி மக்கள் நிலைக்கும் ஆழ்ந்த உணர்வு இல்லாதார் கைகளிலும் வந்து சேரும் போது தத்வார்த்தமான மையப் பகுதிதான் முதலில் ஒதுக்கப் படுகிறது. பொறுப்பற்ற, மறைமுக நோக்கங்களுக்குப் போர்வையாய் உயர்ந்த அறிவு முயற்சிகள் தடக்களவு செய்யப் படுகின்றன. இவற்றைப் பின்னொரு காலத்தில் உள்ளபடியே அவற்றின் மெய்ப்பொருள் உணர்வதும் கூட அரிதாகிவிடுகிறது. மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர். அவற்றில் ஒருவராகத் தமிழ்நாட்டுக்கு வாய்த்தவர் பாரதி. அதற்கு அவர் பயின்ற பெரும்பள்ளிகளில் முக்கியமானது விவேகானந்த–நிவேதிதா என்னும் காலப்பெரும் ஊக்கம்.

woman-dhrishti-creations1மனோன்மணி யென் மாசக்தி வையத் தேவி,
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்ய மணித் தாமரை நேர் முகத்தாள், காதல்
வனத்தினிலே தன்னை யொரு மலரைப் போலும்
வண்டினைப் போ லெனையு முரு மாற்றிவிட்டாள்.
தீராத காலமெல்லாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்விதழ்ச்சி
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்; நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்; புணர்ச்சி கொண்டால்
நேராக மோன மஹாநந்த வாழ்வை
நிலத்தின் மிசை யளித் தமரத் தன்மை யீவாள்.

இவ்வாறு அறுபத்தாறு என்னும் பகுதியில் பாடுகிறார் பாரதி. அதே பகுதியில் வேறொரு இடத்தில் காதலின் மகிமையை ஆணித்தரமாக உரைக்கும் பாரதி,

பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே

என்று இடையிட்ட ஒரு கடவுள் வாழ்த்து போல் சொல்லிவிட்டுத் தொடர்வது:–

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்!
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்
கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்
———–
காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்.

இவ்வளவும் பாடிய பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதலை தான் நிச்சயமாய்க் குறிப்பிடவில்லை. அத்தகைய விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்.

பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால்
வேதனை யொன்றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்;
விடுதலையாம் காதலெனில் பொய்மைக் காதல்;

இவ்வாறு காதலைப் பற்றிக் கவனமாகத் தன் கருத்தைத் தெரிவிக்கும் பாரதி, இதையே இன்னும் நாடகப் பாங்குடன் தெரிவிக்கும் பாடல் ‘மது’. அந்தப் பாடலில், ‘எந்த அணுகுமுறை சரியானது? உலகமே இன்பம் துய்க்கத்தான் என்னும் போகியின் அணுகுமுறை சரியா? அன்றேல் ஐம்புலன்களின் மேல் ஆட்சி கொண்டு, ஆசைகளை வென்று மனத்தின் அடக்கத்தில் யோக நிலையில் அடையும் ஆன்மிக இன்பமே நாட வேண்டியது, இவ்வுலகம் தள்ளத் தக்கது என்னும் யோகியின் நிலை சரியான அணுகுமுறையா?‘ என்ற நாடகத்தை நடத்திப் பின் வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினை ‘ஞானி’யின் கருத்தாகக் கூறித் தன் கருத்தைத் தெரிவிக்கின்றார் பாரதி.

மாதரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசைப் பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்
marriage4கள்ளின் இன்பம் கலைகளின் இன்பம்
பூதலத்தை ஆள்வதின் இன்பம்
பொய்மையல்ல இவ்வின்பங்கள் எல்லாம்
யாதும் சக்தி இயல்பெனக் கண்டோர்
இனிய துய்ப்பர் இதய மகிழ்ந்தே

இன்ப துன்பம் அனைத்தும் கலந்தே
இச்சகத்தின் இயல்வலியாகி
முன்பு பின்பு இலதாகி எந்நாளும்
மூண்டு செல்லும் பராசக்தியோடே
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவயோகத்து
அறிவு தன்னில் ஒருப்பட்டு நிற்பார்
துன்ப நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்ப மிகச்சுவை கண்டே

துறவு என்பது ஆன்மிக நாட்டத்தில் வாழ்வு முழுவதையும் செலுத்தும் ஆர்வமிக்கோரது வழிமுறையாயினும் இவ்வுலகின் அனுபவங்கள் அனைத்தையும் அறம், ஞானம் இரண்டையும் கைக்கொண்டு துய்ப்பது பொதுவான நெறியாகக் கூறுகிறார் பாரதி. தாம் இவ்வாறு ஆழ்பொருள் கண்டு உரைக்கும் நெறியாகிய நவசக்தி மார்க்கம் இன்னது என்பதை பாரதியே பட்டவர்த்தனமாய் உரைநடையில் பேசுகிறார்– சக்தி தர்மம் என்ற கட்டுரையில், நவசக்தி மார்க்கம் என்ற உள்தலைப்பில்.

“சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரம் கொடுப்பதில்லை.

mother-kaliபரமாத்மா வேறாகவும், பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால் சாக்த மதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி “லோக மாதா” என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “எனது தாய் காளி” என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் “லோகமாதா” இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம்.

இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்கிறார்:

“பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டெக்காலமும், பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு, காய சித்திக ளுமுண்டு” (மலைவளர் காதலி, முதற்பாட்டு)

இந்த மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இஹலோகத்திலிருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.”

(– காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 8, பக் 471)

அந்திப் பொழுது என்ற பாட்டிலும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார் பாரதி.

செவ்விது செவ்விது பெண்மை — ஆ
bharathi2செவ்விது செவ்விது செவ்விது காதல்
காதலினால் உயிர் தோன்றும் — இங்கு
காதலினால் உயிர் வீரத்தி லேறும்
காதலினால் அறிவெய்தும் — இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
——————————
கோலமிட்டு விளக்கினை ஏற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை ஏற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்
காத லென்பதோர் கோயிலின் கண்ணே

சகோதரி நிவேதிதா எத்தகைய மன விகாஸத்தைப் பாரதிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை நிவேதிதாவின் உபதேசத்தை பாரதி பாடலாக வடித்த ‘புதுமைப் பெண்’ என்ற பாடலில் காணலாம். (இஃது நிவேதிதாவின் உபதேசத்தைப் பாரதி பாடலாக வடித்தது என்பது என் எண்ணம். இன்னும் பாரதி எழுத்தின் திறனாய்வாளர்கள் இதன் பக்கம் கவனம் செலுத்தவில்லை.)

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியிவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

காதல் என்றால் என்ன என்பதிலும் ஆரம்ப முதற்கொண்டே மிகத் தெளிவான கருத்துடையவர் பாரதி.

‘காதல்‘ என்ற சொல்லை, நாம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பொதுவா யிருப்பதாகிய ‘காமம்’ என்ற அர்த்தத்திலே வழங்கவில்லை. அறிவு சம்பந்தப்படாத வெறும் உடலாசை ‘காதல்’ அல்லது ‘பிரேமை’ என்று சொல்வதற்குத் தகுதியுடையதில்லை. ……..

உடற் பிரேமையைக் காட்டிலும் அறிவுப் பிரேமை விசேஷமானதென்றும் அறிவுப் பிரேமையைக் காட்டிலும் ‘உயிர்க்காதல்’ அல்லது ‘ஆத்மப் பிரேமை’ சிறந்ததென்றும் இனிது விளங்கும். இந்த ஆத்மப் பிரேமையைத்தான் கற்புடைமை என்று சொல்கிறார்கள். இந்த ‘உயிர்க்காதல்’ எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஊஹித்துச் சொல்வது கஷ்டமாக இருக்கிறது.”

(– சக்ரவர்த்தினி ஜூலை 1906, காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1, பக் 236-237)

எத்தகைய மூடு மறைவும் இன்றிப் பச்சைத் தமிழில் பாரதி உடைத்துச் சொல்லவும் செய்கிறார் தமது ‘இனி’ என்ற கட்டுரையில்

“கவனி! அண்ட பஹிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளேயிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழவும் அநந்தகோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.” இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ, அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை. …..

shakthi3கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வமெல்லாம் உனது தாய், மனைவி, ஸஹோதரி, மகள் முதலிய பெண்களின் இடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தி மஹிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள் மனைவி, ஸஹோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்கவேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம் நீ. உன் பிதா, உன் ஸஹோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடையவேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.

சிவன் நீ; சக்தி உன் மனைவி.
விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
ப்ரும்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்த மனிதரைத் தேவ நிலையில் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.

இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.”

(சுதேசமித்திரன் 7-12-1917, காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 9, பக் 429-431)

ஆண்பெண் சமத்துவத்தைத் தன் பெரும் பணிகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டு சாக்தம் சமய ஆன்மிக மொழியில் சமுதாய மாற்றம் உட்கிடையாக உஜ்ஜயினி பட்டணத்து விக்கிரமாதித்தன் சரித்திரம் வாயிலாக உணர்த்துகிறது என்பதை பாரதியின் எழுத்து மூலமாகவே நாம் காணவேண்டுமானால் அவருடைய ‘உஜ்ஜயிநீ’ என்ற கட்டுரையைப் படிக்க வேண்டும். (காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 9, பக் 372 –374)

ஆண் உயர்வு, பெண் அதில் அடக்கம் என்ற மன நிலைக்கு மாற்றாக ஆணொடு பெண் சரி நிகர் ஸமானம் என்பதை உலகியலின் இலட்சியக் காதலையும் சாக்தத்தின் பாரமார்த்திக போதத்தையும் ஒருங்கிணைத்துப் பாரதியார் தமது ‘கதவு’ என்ற கதைச் சித்திரம் ஒன்றில், ஓரரசனுக்கு மௌன குருவொருவர் எழுதிக்காட்டும் உபதேசமாக வைத்துச் சொல்கின்றார்.:

marriage1“ராஜா மௌன ஸ்வாமியிடம் கேட்டான், “மூலம் எது?” என்று.

அப்போது மந்திரியை நோக்கி மௌன ஸ்வாமி கண்ணைக் காட்டினார்.

மந்திரி, “உலகத்துக்கும் ஓங்காரமே வேர்” என்றான்.

அதற்கு ராஜா, “உம்மைக் கேட்கவில்லை. நீர் சும்மா இரும். நான் மௌன ஸ்வாமியிடம் இன்னும் தெளிவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்” என்றான்.

அப்போது மௌன ஸ்வாமி எழுதிக் காட்டுகிறார்:

“ஓம்காரமே ஸ்ருஷ்டியின் காரணம். ஓம்காரமாவது காதல். – ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளத் தொடர்பு. அதனால் படைப்புண்டாகிறது. அந்தக் காதலை ஸாமான்ய மனுஷ்ய வியாபாரமாகக் கருதி நடப்போர் மனுஷ்யர்; மிருக வியாபாரமாகக் கருதி நடப்போர் மிருகங்கள்; தேவ வியாபாரமாக — அதாவது ஆத்ம ஸம்பந்தமாக, அதாவது சதியாகிய பத்தினியை சக்தியாகவும் தானேயாகவும் எண்ணி நடப்போர் தேவர். இந்த அறிவே ஞானம். அன்பைத் தவிர வேறு ஞானம் கிடையாது.”

(– சுதேசமித்திரன் 12-12-1917 வருஷமலர், காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 9, பக் 438)

இனி நாம் சாக்தத்தைப் பாரதியார் மேலும் எந்தத் தளத்திற்குக் கொண்டு சென்றார் என்பதையும், அதற்கும் எவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ண-விவேகானந்த-நிவேதிதா மூலம் கிடைக்கப் பெற்ற விளக்கச் சுடரே முன் நடத்தும் தீபமாய்த் திகழ்ந்தது என்பதையும் காண்போம்.

பண்டைய சாக்தத்தினின்றும் நவசக்தி மார்கத்தைக் கண்டு கொண்ட பாரதியார், தமது சாக்தத்தைப் பற்றிய விளக்கமும் வேதங்களின் ஆழ்பொருள் போதிக்கும் துலக்கமும் ஒன்றாவதைக் கூறுகிறார்.

‘நீல மூல வன்ன அத்துவாக்கள் கால்கள் ஆறுடையதெனக் கண்டு, மறைகாணும் முனிவோர் உரைத்தார் பண்டு’.

காதலைப் புலன் நுகர்விலும் மன மகிழ்விலும் வைத்துக் காணுதலின்றி ஆத்மாவில் உணர்வின் பெருக்கமாகக் காணுதல் என்பதை நவசக்தி மார்க்கத்தின் கருத்தாகக் காட்டும் பாரதி, சக்தி வழிபாட்டை இன்னும் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார் என்பது கருதற்குரியது.

தனிமனிதன் தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும், சக மனிதரோடும் கொள்ள வேண்டிய உறவின் பாவங்களை நவசக்தி மார்க்கத்தின் விளக்கத்தில் கண்டவர், மனித சமுதாயம் சேர்ந்து வாழும் நாடு என்பதை எப்படிக் கண்டார் என்பதில்தான் சுவாரஸ்யம் கூடுகிறது. ஏனெனில் நாடு என்று சொல்லும் பொழுது ஒரு நிலப்பரப்பு எப்படியும் அடிப்படையில் வந்து அமைகிறது. ஒன்றியைந்த ஒரு பண்பாட்டுக் கூட்டியக்கம் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அமைந்த நிலப்பரப்பில் காலம் காலமாகப் பயின்று வருகிறது என்ற வரலாற்றுணர்வின் உதயத்தில்தான் தேசியம் என்னும் தத்துவம் பிறக்கிறது. இந்தியாவை விட இன்னும் நிலப்பரப்பில் குறைந்த புவிப்பரப்பில் அமைந்த நாடுகள் தம்முள் ஒத்த பண்பாட்டின் இயக்கம் இல்லாது முற்றிலும் முரணுகின்ற பண்பாடுகள் பொருதும் களங்களாய்க் காட்சியளிக்கின்றன. ஆனால்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேலது
ஆனிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
(புறம் 6, 1-10)

என்று காரிக்கிழார் பாடியவாறு ஆழ நெடுங் காலப் பழமையாகவே இந்திய நிலப்பரப்பு பல மொழிகளும் பல இனங்களும் பல வழிபாடுகளும் பல வழக்கங்களும் கொண்ட ஒன்றியைந்த பண்பாட்டுக் கோலம் திகழும் ஒரு தனிக் குவலயமாகவே இருந்து வருகிறது.

இவ்வாறு பெருவியப்புக்கு உரியதான இந்திய நிலப்பரப்பு ஏன் இவ்வளவு காலமாகத் தனக்கென ஒரு தேசியத்தை வனைந்துகொள்ளவில்லை என்பது பெரும் புதிரானது. குப்தர்கள் காலத்திலும் இன்னும் சில பேரரசர்களின் காலத்திலும் இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதி தழுவிய அரசாட்சியும் இறையாண்மையும் சிறுகாலத்திற்காகவேனும் நிலவியது உண்மையாயினும் நிலைத்த, சுயமான, இயல்புக்குப் பொருந்திய தேசியம் ஏன் எழவில்லை என்பது ஒரு கேள்விக்குறியே.

இந்தக் கேள்விக்குறியை எதிர்நோக்கியே ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துகள் எழுந்தன.

“For the next fifty years this alone shall be our keynote – this, our great Mother India. Let all other vain gods disappear for the time from our minds. This is the only god that is awake, our own race – “everywhere his hands, everywhere his feet, everywhere his ears, he covers everything.” All other gods are sleeping. What vain gods shall we go after and yet cannot worship the god that we see all round us, the Virtue? When we have worshipped this, we shall be able to worship all other gods.” (–The Complete Works of Swami Vivekananda, Vol 3, pp300-301, May 1991)

விவேகானந்தரின் கருத்துகளை நன்கு திறம்பட உள்வாங்கி விளக்குவதையே வாழ்வின் முக்கியப் பணிகளில் ஒன்றாகக் கொண்ட நிவேதிதா, ஸ்வாமிஜியின் இந்தக் கருத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு செல்லும் விதம் வியத்தற்குரியது:

“He (Swami Vivekananda) took it that consciousness of life was a nucleus of national unity. I think that there is no economic problem of more consequence in this country, that there is no social problem of any greater consequence to this country and that there is no educational problem of more consequence to this country than that great problem, namely, “How India should remain India?” That is a great problem. The answer is, “by means of the national consciousness”. (– The Complete Works of Sister Nivedita, Vol 1, April 2006, pp384)

எனவே விவேகானந்தர் ஒரு புதிய வழிபாட்டைத் திறந்துவிடுகிறார். இதுவரையில் வணங்கி வழிபட்ட கடவுளர்களையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு, உயிர் ததும்பும் ஒரு பெரும் கடவுளை நேரடியாக உபாஸிக்கும் வழிபாட்டு முறைக்கு வித்திடுகிறார் வங்கத் துறவி. அந்த உபாஸனை எப்படிச் சாத்தியமாகும் என்பதை நிவேதிதா விரிவுபட விளக்குகிறார். தேசிய சைதன்யம் விழித்து எழுதலே, விளங்கி நிற்றலே இந்தியா என்னும் நாடு இந்தியாவாக இருத்தலுக்கான வழி என்கிறார் நிவேதிதா. விராட் சொருபமாகத் திகழும் சமுதாய உருவிலான கடவுளை விட்டு எந்தக் கடவுளை எங்குத் தேடுகிறீர்கள்? என்பது விவேகானந்தரின் கால போதமான வினா. இந்தியா என்ற அன்னை தெய்வத்தின் வழிபாடு ஒன்றே இனி எங்கும் நிலவட்டும் என்பது அவரின் கட்டளை. அந்தக் கருத்தை ஏற்று காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். விளைவு சுதேசிய எழுச்சி 1906-இல். விவேகானந்தரின் உபதேசம் விளைந்த இடமே சென்னை மாநகரம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.

bharatha-matha-durgaமுப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்பு மொழிபதி ,னெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன் றுடையாள்
……
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் — தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்
…….
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாளெங்கள் தாய் — கையி
லொற்றைத் திகிரிகொண் டேழுல காளு
மொருவனை யுந்தொழு வாள்
………….
வெண்மை வளரிம யாசலன் றந்த
விறன்மக ளாமெங்கள் தாய் — அவன்
திண்மை மறையினுந் தான்மறை யாணித்தஞ்
சீருறு வாளெங்கள் தாய்

— என்ற பாட்டில் பாரதி வடிவு தரும் தேவி பாரதமாதேவிதான் என்றாலும் அது பராசக்தியின் அவதாரமும்தான் என்பதை தெள்ளத் தெளிவாகப் பதிவுசெய்கிறார் பாரதி.

அவருடைய தேச பக்திப் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த குரு சிஷ்ய ஆம்னாயத்தில் வந்து அமைபவை.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?

— என்று கேட்டு எழும் அவருடைய ‘பாரத மாதா’ பாடல் பாரதி வனைந்தெடுக்கும் அவரது புதிய சாக்த தர்சனத்தின் பண்குறிப்பேயாகும்.

(தொடரும்…)

5 Replies to “பாரதியின் சாக்தம் – 4”

  1. Pingback: Indli.com
  2. Very nice series. Needs a patient read and cannot be read in a hurry. Took my time to read and digest. Wonderful quotes and good points.
    Thanks.

  3. திரு மோகனரங்கன்

    புல்லரிக்கும் தொடர். தொடர்ந்து படித்து கடைசியில் ‘முப்பது கோடி முகமுடையாள் …’ என்று படித்தபோது சிலிர்ப்பு கண்டது. (பட்டம்மாளின் குரல் நினைவில் நெருடிச் செல்கிறது .)

    தங்கள் தமிழ்ப் புலமை மற்றும் தொகுப்புத் திறம் சிறப்பு. தமிழ் ஹிந்து தளம் இந்தத் தொடரை ஒற்றை பதிவாக pdf போன்ற தொகுப்புஆக வெளியிடலாம்.

  4. மிக இயல்பான நடை, செய்தி சொல்லப்பட்ட விதம் எளிமையாக அதே சமயம் சரியாக இருக்கிறது. கதை வெளி வந்த சமயம் – பூஜை வாரம் – இதைவிட சரியான சமயம் இருக்காது.

  5. இந்த சிறந்த தொடரை எழுதிய திரு. மோகனரங்கன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சக்தியின் ஸ்வரூபத்தில் லயித்து “காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்” என்று பணிந்த பாரதியின் எழுத்துக்கள் பொன்னனைய பொக்கிஷம். அவற்றை மேற்கொள் காட்டி விளக்கி எழுதப்பட்ட கட்டுரை சிறந்த ஒன்று.

    “வஞ்சனையின்றி பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம்
    தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *