சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

இன்று டிசம்பர்-11 மகாகவி பாரதி பிறந்த நாள்.

bharathi_chellamma_2விஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’

அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில் மூழ்கி முக்குளிக்கும் சுகானுபவ ருசியைக் கவிஞருக்கு முதன் முதலில் ஊட்டியது அவர் பாசம் பொங்கப் பொங்கக் ‘குவளைக் கண்ணன்’ என்று குறிப்பிடுகிற பொல்லாத குவளையூர் கிருஷ்ணமாச்சாரி தான்..

“மேற்கே ஊருக்கு வெளியே தியாகராஜப் பிள்ளை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மடு ஒன்று இருக்கிறது. அதனால் அதைத் தியாகராஜப் பிள்ளை மடு என்றே எல்லாரும் சொல்வார்கள். என்றைக்குமே வற்றாத ஊற்றுப் பள்ளம். பளிங்கு மாதிரி ஜலம். சுனை நீர் போலச் சுத்தம். பொழுது விடிவதற்கு முன்னால் நாலு மணிக்கே போனால் கூட்டம் இராது. பிறர் தொந்தரவு இல்லாமல் ஆனந்தமாய் வேண்டிய மட்டும் ஜலக்ரீடை பண்ணிக் கொண்டிருக்கலாம். தினப்படி அங்கே போய்க் குளித்துவிட்டு வருவோமா? ஆனால் நம் வீட்டிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு மைலாவது இருக்கும்” என்று திடீரென ஒருநாள் கவிஞருக்கு ஆசைகாட்டினார், குவளைக் கண்ணன்.

இயற்கையுடன் ஏகாந்தமாய் ஒன்றிப் போவதில் கவிஞருக்குள்ள நாட்டம் அவர் அறிந்ததுதான். அவர் எதிர்பார்த்தது போலவே கவிஞர் ஆவலுடன் துள்ளி எழுந்தார்.

“அட, அப்படியா? இதை ஏன் முன்பே சொல்லவில்லை? நாளை யிலிருந்தே அங்கு போகத்தொடங்கிவிடுவோம். விடிகாலை நாலு மணிக்கெல்லாம் வந்துவிடு; போகலாம்” என்றார், கவிஞர், உற்சாகம் பொங்க.

மறுநாள் அதிகாலை சொன்னபடியே சரியாக நான்கு மணிக்குக் கவிஞர் வீட்டுக்கு வந்து அவசரமாகக் கதவைத் தட்டினார், குவளை. ‘யாரது’ என்று கவிஞர் கம்பீரமாக அதட்டல் போட்ட வாறு கதவைத் திறந்தார். எதிரே குவளைக் கண்ணன் நிற்பதைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

”போவோமா, மடுவுக்கு?” என்றார், குவளை.

கவிஞர் அட்டகாசமாகச் சிரித்தார்.

”எதற்குச் சிரிப்பு? இப்போ என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டார்,
குவளை.

”திருப்பாவையில் ஆண்டாள் ‘அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செயும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்’ என்று பாடிக் கண்ணனை எழுப்பினாள். இங்கே என்னடாவென்றால் கண்ணன் வந்து என்னை எழுப்பிக் குளிக்கக் கூப்பிடுகிறான்! சிரிப்பு வராதா?”

இப்போது குவளையும் சேர்ந்து சிரித்தார்.

”சரி, நாழியாகிறது, புறப்படுங்கள். அப்புறம் ஜனங்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.”

இருவருமாக மடுவை நோக்கி நடந்தார்கள்.

விடியிருள் இன்னும் விலகவில்லை. ஆனால் விடியல் அரையிருட்டாக அனைத்தையும் நிழல் ரூபமாய்ப் புலப்படச் செய்தது. ஊருக்கு வெளியே வந்ததுமே மண்பாதையின் இருபுறமும் வயல்வெளிகளும் மரங்களும் சுற்றுச் சூழலுக்கு எழிலூட்டின. மென்மையாக வீசிய இளங் குளிர் காற்று உடலை வருடி மெய்சிலிர்ப்பூட்டியது.

கவிஞர் மடுவில் இறங்கிக் கழுத்தளவு நீரில் ஆசை தீரக் குளித்தார். வெகு நேரம் நீரில் மூழ்கிக் கிடந்தபின் பொழுது விடியத்தொடங்கிவிட்டதால், குவளையின் அவசரப்படுத்து தலையும் தாங்க மாட்டாமல் மனமின்றியே கரையேறினார். சொட்டச் சொட்ட நனைந்த உடலின் ஈரம் அகற்றாமலே வீடு திரும்பியவர், இனிமேல் தினப்படி தியாகராஜப் பிள்ளை மடுவில்தான் குளி என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

அடுத்த நாளும் குவளை சரியாகக் குறித்த நேரத்திற்கு வந்து கவிஞரை மடுவுக்கு அழைத்துச் செல்லத் தவறவில்லை. ஆனால் மூன்றாம் நாள்தான் ஆளைக் காணோம்!

வருவார் வருவார் எனக் காத்திருந்து சலித்த கவிஞர், அந்த அதிகாலைப் போதில் குவளைக் கண்ணனின் வீட்டிற்கே சென்று வாசற் கதவைப் படபடவென்று தட்டி, ’கிருஷ்ணா’ என்று உரக்கக் குரலும் கொடுத்தார்.

கவிஞர்தான் தன்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார், என்று பரபரப்படைந்தார், குவளை..

”யாரு வந்து இப்பிடிக் கதவை ஒடைக்கற மாதிரி தட்டறா, பொழுது விடியறதுக்கு முன்னாடியே” என்று திகைத்தார், குவளையின் தாயார்.

”நான் அடிக்கடி சொல்வேனே, அந்த சுதேசிக் கவி சுப்பிரமணிய பாரதிதான் வந்திருக்கார் போலிருக்கு அம்மா” என்றார், குவளை மகிழ்ச்சியுடன்.

bharathiportarit”அட, அப்படியா,” என்று ஆவலுடன் கதவைத் திறந்து கவிஞரை வரவேற்றார், அம்மையார். கவிஞர் வயதில் மிகவும் குறைந்த இளைஞராகத் தோற்றமளித்ததால் அம்மையாருக்கு அவரையும் தம் மகனாகவே எண்ணத் தோன்றியது.

”ஏண்டா கிருஷ்ணா, இவனைத்தானே நன்றாகப் பாடுவான் என்று சொன்னாய்? எங்கே ஒரு ஸுப்ரபாதம் பாடச் சொல்லு கேட்போம்., இநதக் காலைப் போதுக்குக் கேட்கச் சுகமாயிருக்கும்” என்றார், அம்மையார், உரிமையுடன்.

”ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டார், கவிஞர்.

“என்னடா இது! ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?–அம்மாவின் குரலில் ஏளனம் சிறிது தூக்கலாகவே இருந்தது. ஆனால் கவிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. சிரிப்பு மாறாமல் நின்றார்.

“அம்மா, நீ நினைக்கிற மாதிரி இவர் மற்றவர்கள் எழுதி வெச்ச பாட்டுகளைப் பாடுகிற பாகவதர் இல்லே, கேட்டதும் ஒரு ஸுப்ரபாதம் பாடறதுக்கு!. இவராகவே பாட்டுக் கட்டி, அதை அற்புதமாகப் பாடறவர். புரிஞ்சுதா? சரி. நாங்கள் மடுவுக்குக் குளிக்கப் போறோம். கதவைச் சாத்திக்கோ” என்று கவிஞரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார், குவளை.

“அப்ப்டின்னா தானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே பெருமாள் மேல! ஒண்ணுக்கு ரெண்டா இருக்குமோல்லியோ” என்றவாறு வாயிற் கதவைத் தாழிட்டுக் கொண்டார், குவளையின் தாயார்.

அந்த அம்மையார் கடைசியாகச் சொன்னது கவிஞரின் மனதைக் குடையத்தொடங்கியது-‘அப்படின்னா தானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே…’

“ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குவளையிடம் மீண்டும் வேண்டுமென்றே கேட்டார், கவிஞர். காசியில் விச்வநாதருக் கென்று உள்ள ஸுப்ரபாதத்தையும் சென்னையில் வெங்கடேசப் பெருமாள் ஸுப்ரபாதத்தையும் அவர் காது குளிரக் கேட்டதே இல்லையா, என்ன?

“ஸுப்ரபாதம் என்றால் திருப்பள்ளி எழுச்சி” என்றார், குவளை, சுருக்கமாக.

“யாருக்குத் திருப்பள்ளி எழுச்சி?”

“இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில் மஹா விஷ்ணுவுக்கு. சிவன் கோவில் என்றால் பரம சிவனுக்கு!”

“எங்கே, உனக்குத் தெரிந்த ஸுப்ரபாதம் ஒன்று சொல்லு கேட்போம்” என்று சிரித்தார், கவிஞர்.

பாசுரங்கள் பலவும் மனப் பாடமாய் வைத்திருந்த குவளை அதேபோல் வெங்கடேச ஸுப்ர பாதத்தையும் அறிந்திருந்ததால் உடனே அதனைப் பாடலானார். குரல் வளம் இல்லாவிட்டால் என்ன? குழந்தையுள்ளத்தில் ஆழ வேர்கொண்ட தெய்வ நம்பிக்கை இருக்கிறதே அது ஒன்றே போதாதா?

“கண்ணா, ஸுப்ரபாதம் என்றால் புனித்மான புலர்காலைப் பொழுது என்றுதான் நேரடியான அர்த்தம். காலைப் போதில் எழுவது முழுமுதற் கடன் ஆதலால் தமிழில் ஸுப்ரபாதத்தைத் திருப்பளள்ளி எழுச்சி என்கிறோம். ஆனால் சதா சர்வ காலமும் அறிதுயிலில் புன்முறுவலுடன் படுத்திருக்கிற திருமாலுக்கும் இமைப் பொழுதும் சோராத கூத்தபிரான் சிவனுக்கும் திருப்பள்ளி எழுச்சியா? பாரேன், இந்த மனுஷ்ய மனப்போக்கை; பக்தி முற்றி, தெய்வத்தையும் தன்போலொரு மனிதனாகவே பாவிக்கத் தோன்றிவிடுகிறது. தான் வழிபடுகிற தெய்வத்துக்குக் காலையில் கண்விழிக்கச் செய்வது தொடங்கி, இரவு பள்ளியறைக்கு அனுப்பி வைப்பதுவரை எல்லாம் செய்தாகிறது. பக்தியில் மூழ்கிவிட்டால் அப்புறம் தான் வேறு, தெய்வம் வேறில்லை. தன்னைப்போலவே தெய்வமும் என்கிற நிச்சயம், மனித வடிவில் தெய்வம் கண்டு மனிதனுக்குள்ளதெல்லாம் தெய்வத்திற்கும் உண்டென உபசாரம் செய்யத்தோன்றுகிறது! இந்த விஷயத்தில் ஆண்டாள் விவரம் தெரிந்தவள். அவளும் நந்தகோபனையும் பலராமனையும் எழுந்திருக்கச் சொல்கிறாள்தான். தாயார் யசோதையை வேறு அழைத்து அவர்களை எழுப்பிவிடவும் சொல்கிறாள், ஆனால் ‘எல்லே இளங் கிளியே இன்னம் உறங்குதியோ’ என்று அவள் கூடுதலும் கூவியழைத்து எழுப்புவது தன் தோழிமார்களையும் உறவுமுறைப் பெண்களையும்தான், அல்லவா” என்றார், கவிஞர்.

“நீங்கள் சொன்னால் அது சரியில்லாமல் இருக்குமா” என்றார், குவளை, தேவதா விசுவாசத்துடன்.

அதன் பிறகு .கவிஞர் ஏதும் பேசவில்லை. ஏதோ யோசனையாய் நடந்தார். அன்று ஆசையாய் மடுவில் இறங்கிய போதிலும் நீராடு வதில் அதிக ஈடுபாடு காட்டாமல் தம் எண்ண அலைகளுக் குள்ளாகவே மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்.

மேலும் இரண்டு தினங்கள் அவர்கள் தியாகராஜப் பிள்ளை மடுவுக்குக் குளிக்கச் செல்வது தொடர்ந்தது. ஆனால் கவிஞர் அதிகம் பேசாமலே வழி நடந்தார்.

அடுத்த நாள் காலை மடுவுக்குச் செல்லத் தாமே மறுபடியும் குவளையின் வீட்டுக்கு வந்துவிட்டார், கவிஞர். உற்சாகம் ததும்ப, “கண்ணா, ஸுப்ரபாதம் பாடச் சொன்னார் அல்லவா உன் தாயார்? சுயமாக இட்டுக்கட்டிப் பாடவும் சொன்னார். இப்போ ஸுப்ரபாதம், அதாவது நீ சொன்னாயே, திருப்பள்ளி எழுச்சி, அது உடனடியாகத் தேவைப்படுவது நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துள்ள நமது பாரத அன்னைக்குத்தான். bharata-mataஅவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன், பாரத மாதாவுக்கு ஒரு திருப்பள்ளி எழுச்சி; அம்மா, நீங்களும் கேளுங்கள்” என்று,

”பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்.
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி,
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
வியப்பிதுகாண்! பள்ளி யெழுந்தரு ளாயே!”

என உணர்ச்சி வேகத்துடன் பாடத்தொடங்கினார், கவிஞர்.

அம்மாவும் பிள்ளையும் அவர் பாடுவதை இறுதிவரை பிரமிப்பு மாறாமல் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆதாரம்: ரா. அ. பத்மநாபன் தயாரித்த ‘சித்திர பாரதி,’ ‘பாரதி புதையல்’ மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள குவளை கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய கட்டுரை.

(இக்கதை அமுத சுரபி டிசம்பர் 2010 இதழிலும் வெளிவந்தது)

15 Replies to “சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை”

 1. மலர்மன்னன் அய்யா

  அற்புதமாக இருக்கிறது – நன்றி

 2. ஐயா, பாரதியார் தெய்வ கவி. அன்று அவர் பாடிய சுப்ரபாதம் இன்றும் நாளையும் என்றென்றும் நம்மை நித்ரையிலிருந்து எழுப்ப தேவையானது.

  பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
  புன்மை யிருட்கணம் போயின யாவும்.

  தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
  தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்

  தேசத்தை கபளீகரம் செய்ய விழையும் அசுர இருள் சக்திகளுக்கும் அவற்றை எதிர் கொள்ள விழையும் ஒளி பொருந்திய தேசியவாத சக்திகளுக்கும் இடையே யுத்தம் இடைவிடாது நடக்கிறது. பாரத மாதாவின் உலகோச்சும் பெருமை மீளும் வரையிலும் அசுர சக்திகள் சமூலம் சம்ஹாரம் செய்யபடுவது வரையிலும் தேசிய வாத சக்திகள் நித்ரை அறவே நீங்க வேண்டும்.

 3. நன்றி, ஸ்ரீ சாரங், ஸ்ரீ க்ருஷ்ணகுமார்.

  பாரதியாரையும் , அவரது அனைத்து ஆக்கங்களளையும் குறித்து இருந்துவரும் ஈடுபாட்டை மேலும் தூண்டிவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துச் சிறுகதைகள் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு சிறுகதைகள் வெளியாகிவிட்டன. ஒரு சிறுகதை எழுதியாகி, அச்சுக்குக் காத்திருக்கிறது. குறைந்த பட்சம் மேலும் ஐந்து அல்லது ஏழு சிறுகதைகளாவது எழுத உத்தேசம். (மொத்தம் பத்து அல்லது பன்னிரண்டு சிறுகதைகள்; இவ்வாறு வரம்பு ஏதும் வைத்துக்கொள்ளாமல் தோன்றும் போதெல்லாம் எழுதிக்கொண்டே இருங்கள் என்று பாரதி அன்பர்கள் பலர் கட்டலையிட்டு வருகிறார்கள்! பாரதி வாழ்வியல் படைப்பிலக்கியம் என்பதாக ஒரு தனித் துறை இதனால் உருவாகிவருவதாக சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் பாரதி பிறந்த் நாளையொட்டி இந்த ஆண்டு டிசம்பர் 11 மாலை வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசப்பட்டதாகக் கேள்வியுற்றேன்). ஆனால் வேறுபல எழுத்து வேலைகளுக் கிடையிலேதான் இதையும் செய்ய வேண்டியுள்ளது.

  பாரதியார் சிறுகதைகள் அனைத்தும் வெளியானபின் நாயகன் பாரதி என்ற தலைப்பில் அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும். பாரதியார் ஹிந்து சமய-சமூக நலன்களில் தீவிர கவனம் செலுத்துபவராக இருந்தார் என்பதை உணர்த்தும் சான்றுகள் பலவற்றுள் நாயகன் பாரதி சிறுகதைத் தொகுப்பும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
  -மலர்மன்னன்

 4. Pingback: Indli.com
 5. இப்போதும் இந்த சுப்ரபாதத்தை பாடித்தான் பாரத மாதாவை துயில் எழுப்ப வேண்டும்போல! நன்றி!
  ஆனால் அப்போது போல இல்லாமல் இப்போது நிறைய துரோகிகள் பெருகி விட்டார்கள்!
  ஒரு சந்தேகம், ஏன் எல்லோருமே ஆங்கில தேதியை வைத்தே தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். சனாதன தர்மம், அழியாதது என்றெல்லாம் சொல்கிறோமே , தமிழில் மாதங்களோ இல்லை தலைவர்கள் பிறந்த தினங்களோ வர முடியாதா?. தமிழ் ஹிந்து பல விஷயங்களைப் பற்றி க் கட்டுரைகளை எழுதுகிறது. இதைப் பற்றி யாரவது எழுதி எல்லோரையுமே கடைபிடிக்கும்படிச் செய்யலாமே!
  ஆங்கிலத்தையோ அதற்கு உண்டான பெருமைகளையோ தவிர்க்கச் சொல்லவில்லை. கணினியின் அருகில் அமர்ந்து தமிழ் ஹிந்துவைப் படிக்கும் வாய்ப்பு சிறிதளவாவது ஆங்கில அறிவு உள்ளதினாலேயே கிடைத்தது!
  நன்றி!

 6. மலர்மன்னன் அவர்களுக்கு,

  கவிமன்னன் பாரதி பற்றிய கற்பனையுடன் கலந்து தமிழ்நயம் கொஞ்ச வரலாறு பேசும் சிறுகதைகளை தாங்கள் எழுதி வருவதாகவும் அவற்றைத் தொகுத்து நூலாக்க இருப்பதாயும் இங்கே மறுமொழி இட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தங்களின் நூலுக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும் என்பதற்கிணங்க பாரதியின் உள்ளம் தூய்மையாக இரந்தது. மாசற்று நிர்மலமாக விளங்கியது. அதனால் அவரது வார்த்தைகளும் கவிதைகளும் எழுத்துக்களும் நிர்மலமாக உன்னதமாக விளங்குகின்றன.

  பாரதி பட்ட பாடுகளை எழுதுங்கள். அவன் அப்பாடுகளுக்கு நடுவே எப்படி தமிழ்த் தொண்டாற்றினான் என்று எழுதுங்கள். அவனுக்கு மஹாசக்தி மீது… பாரதமாதா மீது… ஹிந்து தர்மத்தின் மீது இருந்த பற்றை எழுதுங்கள்..

  சாவா மூவா கவிச் சிங்கமான பாரதியின் நிர்மலமான ஆத்மாவிற்கு தமிழ் பேசும் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

 7. இந்த நிகழ்ச்சி குறித்து பாரதிதாசன் சொல்கிறார், மடுவில் குளித்துவிட்டுத் திரும்பும் வழியெல்லாம் ஒரே ஆட்டம் பாட்டம் தான். பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் பாரதி வருகிறார். பாரதிக்கு இலக்கணப் பயிற்சி இல்லை என்பது சிலரது கூற்று. ஆனால் அவன் தமிழிலக்கிய மரபில் பாடியவைதான் அதிகம். மாலையும், அந்தாதியும், தூதும் பள்ளும், திருப்பள்ளி எழுச்சியும், திருத்தசாங்கமும், புதிய ஆத்திசூடியும் சீட்டுக்கவியும், வாழ்த்து, இரங்கல், காப்பிய இலக்கண நெறியோடு பாஞ்சாலி சபதம், பாக்கள் பெயரோடு அமைந்த இலக்கியங்கள், உம்: மகாசக்தி வெண்பா, விடுதலை வெண்பா, போற்றி அகவல், விருத்தம், இளசை ஒரு பா ஒரு பஹது, அகப்பொருள் (கண்ணன்) பாடல் என்று பண்டைய இலக்கிய வழியில் வந்த புலவன் பாரதி. அவனது நூற்றி இருபத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந்த நாளில் நினைவு கூற வைத்த மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி.

 8. பாரதியைப் புரட்சிக் கவிஞன் புதுமைக் கவிஞன் என்கிறோம். அவனது புரட்சிகளில் ஒன்று இந்த பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் பார்க்கலாம். பொதுவாக தூங்கும் குழந்தைகளைத்தான் தாய் எழுப்புவது வழக்கம். ஆனால் இங்கே தூங்கும் பாரதத் தாயை குழந்தைகள் எழுப்புகின்றன. குழந்தைகள் எழுப்ப தாய் துயில் கொள்ளலாமோ என்பதில் உள்ள புதுமையைப் பாராட்டுகிறேன். தாலாட்டுப் பாடி உறங்க வைக்காத புலவன், பாரதத் தாயை துயில் எழுப்பக் காரணம், அவள் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள், அவள் அடிமைத் துயரை நீக்கப் பிள்ளைகளான நாங்கள் காத்திருக்கிறோம். தாயே! எழுந்திரு என்பதுதான் பாரதி சொல்ல வந்த கருத்து. சுப்ரபாதம் பாடி கடவுளை எழுப்பவோ, தாலாட்டுப் பாடி இறைவனை தூங்க வைப்பதற்கோ பாரதி பாடவில்லை. பாரதி மனிதனை நினைத்தான், அவன் அடிமைத்தனத்தை நினைத்தான், பாடினான், நிலை பெற்று நிற்கிறான், இனியும் நிற்பான்.

 9. //இந்த நிகழ்ச்சி குறித்து பாரதிதாசன் சொல்கிறார், மடுவில் குளித்துவிட்டுத் திரும்பும் வழியெல்லாம் ஒரே ஆட்டம் பாட்டம் தான். பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் பாரதி வருகிறார்.- ஸ்ரீ தஞ்சை வெ. கோபாலன்//

  நன்றி, ஸ்ரீ கோபாலன். இச்செய்தி பற்றிய குறிப்பு என்னிடமும் உள்ளது. பாரதிதாசன் குறிப்பிடும் சம்பவம் பிறிதொருமுறை நிகழ்ந்ததாயிருக்கலாம். நான் குவளை கிருஷ்ணமாசாரியாரின் தகவலையே எடுத்துக்கொண்டேன். ஏனெனில் இத்தகவலில்தான் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடுவதற் கான தூண்டுதல் உள்ளது. நீங்கள் அடுத்த மறுமொழியில் தெரிவித்துள்ள கருத்துகளின் குறிப்பும் சிறுகதையில் உள்ளது. அல்லவா? பாரதியின் அன்பர்களான நம்ம்மில் பலரும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இச்சிறுகதைகள் வாய்ப்பளித்து வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரீமதி லலிதா பாரதியும் இச்சிறுகதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகிறார் என்று அமுத சுரபி ஆசிரியர் ஸ்ரீ திருபூர் கிருஷ்ணன் தெரிவிக்கிறார்..
  -மலர்மன்னன்

 10. //ஒரு சந்தேகம், ஏன் எல்லோருமே ஆங்கில தேதியை வைத்தே தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்-snkm//
  நன்றி, ஸ்ரீ எஸென்கேஎம். நியாயமான கேள்விதான் நீங்கள் கேட்டிருப்பது. ஆனால் உங்கள் பெயருக்கு ஏன் வெறும் ஆங்கில எழுத்துகள்? ஆங்கில தேதி என்பதை விடவும் கிறிஸ்தவ காலண்டர் படியிலான தேதி என்பதே சரியாக இருக்கும். ஹிந்து அமைப்புகள் பலவும் நமது காலக் கணக்கிலேயே வருடம், மாதம் தேதி ஆகியவற்றைத் தெரிவித்து வருகின்றன (கூடவே அடைப்புக் குறிக்குள் நடைமுறையில் உள்ள கிறிஸ்தவ காலண்டர் படியுள்ள தேதி மாதம் வருட விவரங்களையும் குறிப்பிடுகின்றன. தமிழ் ஹிந்து இதனைக் கடைப்பிடிக்ககலாம்)). எனினும் சர்வ தேச நடைமுறை யில் கிறிஸ்தவ காலண்டரே இருப்பதால் குழப்பம் தவிர்க்க நாமனைவரும் அதனைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பலரும் கிறிஸ்தவ கால்ண்டர் பிரகாரம் முக்கிய தினங்களை அனுசரிக்கையில் நாம் வேறு தினங்களிலான இலக்கத்தையும், வேறு வருடம் மாதம் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு அதே விசேஷங்களை அனுசரிப்பது வீண் குழப்பங்களுக்கு இடமளிக்கும் என்பதால் சர்வ தேச நடைமுறைக்கு ஒத்துப் போக வேண்டியுள்ளது. பிடிவாதமாக நாம் நமது சுய காலக் கணக்கினை மட்டும் அனுசரிக்கத்தொடங்கினால் அது பழக்கத்திற்கு வந்துவிடும்.
  -மலர்மன்னன்.

 11. //தங்களின் நூலுக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -ஸ்ரீ மயூரகிரி சர்மா//
  மிக்க நன்றி, சர்மாஜி. உங்கள் பெயரே என்னை மிகவும் கவர்ந்து உங்கள் கட்டுரைகளைப் படிக்கத் தூண்டுகிறது. உங்கள் எழுத்தை நாங்கள் தொடர்ந்து படித்து எங்கள் அறிவை விருத்தி செய்து வருகிறோம். ஆகவே நீங்களூம் தொடர்ந்து எழுதிவர வேண்டுகிறேன்.
  -மலர்மன்னன்

 12. நன்றி! பெயரில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வரக் கூடிய அளவில் கணினி அறிவு எனக்கு வரவில்லை. தெரிந்து கொண்ட வுடன் அவ்வாறே மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்!

 13. குவளைக்கன்னனுக்கு பாடவராது என்பதையும் சொல்லியிருக்கிற நுட்பத்தைப் பாராட்டுகிறேன்.
  அன்புடன்
  சுப்பு

 14. அருமையான கட்டுரை

  நன்றி திரு மலர்மன்னன் அவர்களே

  வந்தே மாதரம்

  ம. மணிவண்ணன்
  புதுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *