அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 9 | பகுதி 10
(தொடர்ச்சி…)
தேக ஆன்ம பாவனையை விடுதலில் சாதகன் தனது உடல் உள்ளிட்ட அனைத்தையும் விடுத்து, அனைத்தும் இறைவனின் பொறுப்பு என்றிருந்து, அமைதியாகத் தனது சாதனையில் ஈடுபடுதல் அவசியம். அப்படி இல்லாது இருப்பதற்கு ரமணர் ஒரு உபமானம் கொடுத்து விளக்குகிறார்.
பூபரம் தாங்க இறை போலி உயிர் தாங்கல் அது
கோபுரம் தாங்கி உருக் கோரணி காண் – மாபரம் கொள்
வண்டி செலுவான் சுமையை வண்டி வையாது தலை
கொண்டு நலி கொண்டது எவர் கோது?
பொருள்: இறைவன் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களின் பாரம் முழுவதையும், தான் தாங்கிக் கொண்டிருக்க, இருப்பற்ற போலியான ஜீவன் அதைத் தாங்குவதாக எண்ணுவது கோபுரத்தைத் தாங்குவதாக வடித்திருக்கும் கோபுரத்தில் உள்ள பொம்மை தான் தான் கோபுரத்தைத் தாங்குவதாக நினைக்கும் கேலிக் கூத்தைப் போன்றது என்று அறி. பெரிய பாரத்தைத் தாங்கும் வண்டியில் செல்கின்ற ஒருவன், தன்னுடைய சுமையை வண்டியில் வைக்காமல் தன் தலையின் மேலேயே சுமந்து கொண்டு, அந்தப் பாரத்தினால் துன்பப்படுவது யாருடைய குற்றமாகும்?
ஆத்மானுபவம் வேண்டி ஒருவன் அதற்கான முயற்சியில் மனத்தை வெளிவிடாது அதை உண்முகமாகத் திருப்பும் போது, அவனுக்கு ஒரு அமைதியான சூழ்நிலை வேண்டும். இல்லையேல் காத்திருக்கும் அகந்தை அவனை வெளிப்புறம் நோக்கச் செய்து உலகியலில் மூழ்க வைக்கும். இங்குதான் ஒருவனின் வைராக்கியம் அவனுக்குக் கைகொடுத்து அவனை நிலைகுலையச் செய்யாது காக்கும். சாதகர்கள் எல்லோருக்கும் அது ஒரு தேர்வுச் சூழ்நிலையே.
அப்படியே அவன் உலகியலில் ஈடுபடத்தான் வேண்டும் என்ற அவசியம் இருந்தால், அவனது நோக்கில் ஒரு சிறிய மாற்றத்தைக் கடைப்பிடித்து அப்போதும் அவன் சாதனையைத் தொடர முடியும். உலகில் அவன் ஆற்ற வேண்டிய கடமைக்கு உண்டான பொறுப்பை தான் ஏற்றுச் செய்தாலும், அது இறைவனுக்காகச் செய்யப்படுவது, அதைச் செய்ய முடிவதும் இறையருளால்தான், அதன் பலாபலன்களைக் கொடுப்பதும் இறைவனே என்று அனைத்து பாரங்களையும் இறைவன் மேல் போடுவதுதான் அந்தச் சிறிய மாற்றம்.
அதுதான் உண்மை என்றாலும், அதுவரை நாம்தான் எல்லாவற்றையும் தலையில் போட்டுக்கொண்டு சம்சார பாரத்தைத் தாங்குவதாக நமக்கு நினைப்பு. அது எப்படி இருக்கிறது என்பதை விளக்க ஒரு உதாரணம் கொடுக்கிறார் ரமணர். கோபுரத்தில் உள்ள ஒரு பொம்மை கோபுரத்தைத் தாங்குவது போல் செதுக்கப்பட்டு இருக்கும். அது கோபுரத்தைத் தான் தான் தாங்குவதாக நினைத்தால் அது எப்படியோ அப்படித்தான் இதுவும் என்கிறார் ரமணர். உண்மையில் அந்த பொம்மையையும் கோபுரம்தானே தாங்குகிறது? தான் தான் எல்லாம் என்கிற அந்த நினைப்பு போக வேண்டும். அப்போது இறைவனே எல்லாவற்றையும் வகித்துக் கொள்கிறார் என்ற எண்ணம் நமக்கு வரும்போது எல்லாம் சரியாகவே நடக்கும் என்பதால், நமக்கும் அமைதி கிடைக்கும். நாமும் நமது பயிற்சியைத் தொடர முடியும்.
அப்படிச் செய்யாது, அவன் தான் தான் எல்லா பாரத்தையும் தாங்குவதாக நினைத்தால் அது அவனது தவறுதானே? ஒரு வண்டியில் ஏறி அமர்ந்திருக்கும் ஒருவன் தான் கொண்டு வந்துள்ள பெட்டி, படுக்கைகளை வண்டியில் வைக்காது தன் தலையிலேயே வைத்துக் கொண்டிருந்தால் அது யாருடைய தவறு என்றும் இன்னுமொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.
அப்படியானால் இன்னொருவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் அமைதியாக இருப்பது என்பது பொறுப்பற்றத் தன்மையல்லவா என்று பலருக்கும் சந்தேகம் வரலாம் அல்லவா? இயற்கையிலேயே பொறுப்பற்றவர்கள் இதை ஒரு எளிய வழியாகக் கொண்டு இப்படி இருந்துவிடலாம் என்று நினைக்கலாம் அல்லவா? உண்மைதான், இறைவன் இன்னொருவர் என்றால் அது உண்மைதான். ஆனால் இறைவன் இன்னொருவரா? அவர் நம்மைக் கடந்தும் நம் உள்ளும் இருக்கும் கடவுள் என்றால் அவர் இன்னொருவர் ஆக முடியாது. அவர் அன்றி நாம் இல்லை என்றால், அவர் இன்னொருவர் ஆவது எப்படி? ஆகவே இங்கு சொல்லப்பட்டிருப்பதை முதலில் ஒரு உத்தியாக எடுத்துக்கொண்டு பழகப் பழக நாளடைவில் நாம் அதன் உண்மை நிலையையும் உணர்வோம்.
இது போன்று உலகில் எந்த மனநிலையில் எப்படி இருந்தால் நாம் தினசரி செய்யும் செயலிலேயே, இந்த உலகிலேயே இறைவனைக் காண முடியும் என்று மேலும் ரமணர் சொல்வதைக் கேட்போம்.
விதவிதமாம் நிலைகளெலாம் விசாரம் செய்து
மிச்சை அறு பரம பதம் யாதொன்று உண்டோ
அதனையே திடமாக அகத்தால் பற்றி
அனவரதமும் உலகில் விளையாடுவீரா
எது சகல விதமான தோற்றங்கட்கும்
எதார்த்தமதாய் அகத்துளதோ அதை அறிந்தாய்
அதனால் அப்பார்வையினை அகலாதென்றும்
ஆசைபோல் உலகில் விளையாடுவீரா
பொருள்: பற்பல விதமாகத் தோன்றும் நிலைகளையெல்லாம் விசாரம் செய்து, அஞ்ஞானத்தை அழித்து இறுதியில் மெய்யாய் நிற்கும் பரமார்த்த பதமாகிய நிலை எது ஒன்று இருக்கின்றதோ, அந்த நிலையையே உறுதியாக உள்ளத்தில் பற்றி, வீரனே! எப்போதும் உலக விவகாரங்களை, விளையாட்டைப் போல் அதன் பணிகளைச் செய்வாயாக. இந்த சகல விதமான தோற்றங்களுக்கும் ஆதாரமானதாக எதுவொன்று உள்ளத்தே உள்ளதோ, அதை நீ அறிந்தாய். ஆதலினால் அந்த ஞான திருஷ்டியை கொஞ்சமும் அகலாமல் மறவாது எப்போதும் வீரமுடையவனே, உலகப்பற்று உடையவன் போல, உலகத்தில் விளையாடுவாயாக.
ஒருவனின் மனதே உலகில் பலவித காட்சிகளையும் பார்க்கத் தூண்டுகிறது என்பதை தீர்க்கமாக அறிந்துள்ளவன், அந்த மனத்திற்கும் ஆதாரமாக உள்ள தன் ஆன்ம சொரூபத்தை உணர்ந்த பின் அக்காட்சிகள் எல்லாவற்றையும் அந்த ஆத்மாவின் பிரதிபலிப்புகளாவே பார்க்கிறான். அத்தகைய நிலையில் உள்ளவனுக்குச் சொல்லப்பட்டிருப்பதுதான் இந்தச் செய்யுளில் இருக்கிறது.
இராமபிரானுக்கு வசிஷ்ட மகாமுனிவர் சொல்லிய “யோக வாசிஷ்டம்” எனும் ஞான நூலில் உள்ள சுலோகத்தை இங்கு ரமணர் மொழி பெயர்த்து அருளியிருக்கிறார். இதை நாம் படித்துப் பொருள் கேட்கும் போது, நாம் இராமபிரானின் யோக ஸ்ரேஷ்ட நிலை என்ன என்பதை மனதினில் இருத்திக் கொள்வது அவசியம். இல்லையேல், ஏதோ நம் இஷ்டப்படி வாழ்வதற்கு ஒரு எளிதான வழி ஒன்று கிடைத்துள்ளது என்று தவறாகப் புரிந்து கொண்டுவிடுவோம்.
“திடமாக அகத்தால் பற்றி” என்பதிலிருந்து இது ஒருவனின் உள்ளுணர்வு எவ்வளவு ஆழமாக இருத்தல் அவசியம் என்பதை உணரலாம். வெறும் மேம்போக்காக “நாம் எல்லோரும் ஆன்மாவே” என்னும் புத்தி பூர்வமாக நின்றுவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறது. “…அதை அறிந்தாய் அதனால்…” என்பதனாலும் சாதகனின் சத்திய உணர்வு நிலைக்குப் பின்பே எழும் வாழும் முறை இது எனக் கொள்ளல் பொருத்தமாகும்.
இந்த உலகமெல்லாம் அந்தப் பேரறிவின் வடிவமாய்ப் பிரகாசிக்கிறது என்பதை அறிந்ததால், ஒருவன் தான் இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் உலக சுக துக்கங்களை அனுபவித்து தன் வாழ்க்கையை ஒரு விளையாட்டைப் போல் கருதி வாழ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக ஒருவன் இக்கரையிலிருந்து அக்கரை செல்வது போன்றதுதான் வாழ்க்கையெனும் படகில் செல்வதும். நீரில் படகு செல்ல வேண்டுமே அன்றி, நீர் படகுக்குள் செல்லக்கூடாது. அதேபோன்று உலகில் உள்ளவைகளை ஒருவன் தேவைக்கேற்ப அனுபவிக்கலாமே தவிர, அந்த அனுபவங்களே அவனை ஆட்டுவிக்கும் அளவு இருக்கக்கூடாது. அறிந்தவர்கள், தெளிந்தவர்கள் “உலகில் உள்ளதெல்லாம் உனக்குத்தான்” என்றால் “உனக்குத்தான் அவைகள், நீ அவைகளுக்கு அல்ல” என்பதுதான் அதன் பொருள். தெளியாதவர்கள் வேறு மாதிரி பொருள் கொள்வார்கள். எல்லாம் அறிந்த ஞானிகள் கட்டைபோல நீரில் மிதப்பார்கள், அஞ்ஞானிகளோ குடம் போல நீரை உள்ளே மொண்டு கொண்டு நீரின் உள்ளே ஆழ்ந்து விடுவார்கள். அப்படி இல்லாது இருந்தால் உலக காரியங்களை விளையாட்டாகச் செய்துகொண்டு போக முடியும்.
போலி மன எழுச்சி மகிழ்வு உற்றோனாகிப்
போலி மனப் பதைப்பு வெறுப்பு உற்றோனாகிப்
போலி முயல்வாம் தொடக்கம் உற்றோனாகிப்
புரையிலனாய் உலகில் விளையாடு வீரா
மாலெனும் பல்கட்டு விடுபட்டோன் ஆகி
மன்னு சமனாகி எல்லா நிலைமைக் கண்ணும்
வேலைகள் வேடத்து இயைவ வெளியில் செய்து
வேண்டியவாறு உலகில் விளையாடு வீரா
பொருள்: போலியான மனக் குதூகலமும், மகிழ்ச்சியும் உள்ளவன் போலவும், போலியான மன வெறுப்பும், பதைப்பும் கொண்டவன் போலவும், எந்தச் செயலையும் போலியாக முயன்று தொடங்குபவன் போலவும் இருந்து, வீரா! அவற்றின் உயர்வினிலோ, பெருமையினிலோ பற்றில்லாதவனாக விளையாடுவாயாக. ஆசாபாச மயக்கமாகிய பலவித பந்தங்களிலிருந்தும் விடுபட்டவனாக, எல்லா நிலைமைகளிலும் நிலைபெற்ற உறுதியுடன் சமசித்தம் உடையவனாகி, வேஷத்திற்குத் தகுந்தாற்போல் வேலைகளை வெளியில் செய்து, வீரா! உன் இஷ்டப்படி இந்த உலகில் வேண்டியவாறு விளையாடுவாயாக.
இந்தச் செய்யுளும் முந்தையது போல் “யோக வாசிஷ்டம்” ஸ்லோகம் ஒன்றின் தமிழ் ஆக்கம் தான். இது முதல் செய்யுளில் கூறப்பட்டதன் தொடர்ச்சி என்று சொல்லலாம். அங்கு உலகியலில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டது. இங்கு அது எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. தன்னை உணர்ந்தவன் மற்றவர்களை விட்டு விலக வேண்டும் என்றோ, அவர்களின் சுக துக்கத்தில் பங்கு கொள்ளவேண்டாம் என்றோ கூறப்படவில்லை.
தனது யதார்த்த நிலையிலிருந்து வழுவாது, தனக்கும் எல்லா உணர்ச்சிகளின் தாக்கம் உள்ளது போலவே இருந்து கொண்டு, அவரவர் சுற்றுச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது. எதிலும், எங்கும் உள்ள இறைவனின் கருணை இல்லாது எதுவும் நடக்க இயலாது என்பவனுக்கு இதுதான் செய்யலாம், இது கூடாது என்றெல்லாம் எப்படித் தோன்ற முடியும்? அப்படி உலகியலில் ஈடுபட்டாலும் தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும் படாமலும் நின்று கடமையை ஆற்ற வேண்டும். இல்லையேல் எப்படியாவது தனது ஆளுமையை நாட்ட முயலும் அகங்காரம் தலை தூக்கி ஒருவனை மறுபடியும் அறியாமையில் இழுத்துவிடும் வாய்ப்பு வலுக்கும். ஆதலால், ஒரு நடிகன் தன் வேஷம் எதுவாகினும் தான் வேறு தன் வேஷம் வேறு என்றிருப்பது போல், நாமும் நமது உண்மை நிலையை மறவாது, மற்றபடி நமது உலகியல் கடமையைச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்பவனைப் பார்த்து முந்தைய செய்யுட்கள் இரண்டிலும் “வீரா!” என்று அழைக்கின்றார் அல்லவா? அந்த வீரனின் லக்ஷணத்தைப் பற்றி வரும் செய்யுளில் விவரிக்கின்றார்.
அறிவு உண்மை நிட்டனாம் ஆன்மவித்து ஆவான்
அறிவால் புலன் செற்றான் ஆர்தான் – அறிவங்கி
யாவன் அறிவாம் குலிசத்தான் கால காலன் அவன்
சாவினை மாய் வீரன் எனச் சாற்று
பொருள்: ஆத்ம ஞானத்தினால் உண்மைப் பொருளில் நிஷ்டனாகியவன் அந்த மெய்ப்பொருளில் நிலைபெற்ற ஞானி ஆவான். மெய்யறிவினால் ஐம்புலன்களின் வாசனைகளை அழித்தவன் எவனோ, அவன் அறிவாகிய ஞானாக்னியாவான். அவனே அறிவாகிய வஜ்ராயுதத்தைக் கொண்டவன் ஆவான்; காலனாகிய யமனுக்கும் காலனாகிய சிவனாவான். அவன்தான் சாவை வென்ற வீரன் என்று சொல்வாய், அறிவாய்.
தன்னைத் தேடி தன்னில் ஆழ்ந்து தனை உணர்ந்து தானாய் இருப்பவன், தனது ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான். புலன்களினால் வரும் தூல பயன்களையும், நுண்ணிய உணர்வுகளையும் தனது அறிவு எனும் ஞான அக்னியில் புடம் போட்டதால், அவன் தானே அறிவுமயமாய் இருப்பதையும் உணர்பவன். அந்த அறிவு கொடுக்கும் வலிமையால் அவன் வஜ்ராயுதம் கொண்ட இந்திரன் போன்ற வலிமை கொண்டவன். தனது உடலோடும், உணர்வுகளோடும் தன்னைக் குறுக்கிக் கொள்ளாததால் அவன் காலத்தை வென்றவன். அதனால் அவன் காலனை வென்ற காலாதீதனான சிவனாகவும் ஆகிறான். அத்தகையவனே மரணத்தை வென்றவன். ஆதலால் அவனே வீரன் எனப்படுகிறான்.
புலன்களை வெல்லாது, தனது எண்ணங்களாலும், செயல்களாலும், புஜ பராக்கிரமங்களாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்களைத்தான் நாம் வீரர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத, மேலே விவரித்துள்ளது போல வாழும் காலத்தை வென்ற ஞானிகளே உண்மையில் வீரர்கள். அவர்களைப் பற்றி அறிவாய், மற்றோருக்கும் சொல்வாய் என்கிறார் ரமணர்.
(தொடரும் …)
கடினமான கருத்துக்களை எளிமையாக விளக்குகிறீர்கள்.
மிக மிக நன்றி.
நான் செல்லும் தியான வகுப்பொன்றில் கேட்டது.
ஏதேனும் சாதகம் செய்வதென்றால் கோபமே இல்லாமல் இருப்பது என்று பொருள்ளல்ல-அப்படி இருந்தால் உலக வாழ்க்கையில் இருப்போருக்கு சிரமங்கள் ஏற்படும்- பல நேரங்களில் கோபப்படுவது ;போல நாம் நடிக்க வேண்டியிருக்கும்-நடியுங்கள்-ஆனால் யார் மேலும் மனதளவில் கோபம் கொள்ளாதீர்கள் .
நீங்கள் அழகாக விளக்கும் செய்யுளும் இதையே தான் சொல்கிறது- உலகியல் மக்களுக்கு மிக தேவையான அறிவுரை- மெதுவாக கடைபிடிக்க ஆரம்பித்தால் குருவின் அருளால் தெளிவு கிடைக்கும்.
அன்புடன்
சரவணன்
மிக்க நன்று.மிக நல்ல விளக்கங்கள் ஒவ்வொன்றுக்கும்.