பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ
பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்

பிள்ளையார் சுழி

நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.

‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..

பிள்ளையார்

எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.

அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

பிள்ளையாரின் பிறப்பு

ஆதியும் அந்தமுமில்லாத பெருமானுக்கு பிறப்பேது? ஆனாலும் இறைவன் உயிர்கள் மேற் கொண்ட பெருங்கருணையால் அவதாரம் செய்கிறான். எனினும் விநாயகரை ஒரு அவதாரமாகக் கொள்ளலாமா? என்பது ஒரு கேள்வியே.. இவர் ஸ்ரீராமர் போல.. கிருஷ்ணர் போல மண்ணில் அவதரித்தவர் அன்று. எனினும், புராணங்களில் விநாயக உற்பத்தி பற்றி பல செய்திகள் கிடைக்கிறது. மத்ஸ்யபுராணத்தில் உமாதேவி தான் நீராடிய போது தன் உடல் அழுக்குகளைத் திரட்டி வைக்க அப்போது பிள்ளையார் பிறந்தார் என்கிறது. இதனைக் கூறுவது போல விநாயக சஹஸ்ரநாமத்திலும் ஒரு நாமம் உண்டு. ஆனால் இதனை இப்படியே பொருள் கொள்ளலாமா? அல்லது வேறு தத்துவ செய்தி உண்டா? அல்லது இக்கதையை விலக்க வேண்டுமா? ஆராயப்பட வேண்டியது.

விநாயகபுராணம்

மிகப்பெரிய சிக்கல் என்ன எனில் கந்தப்பெருமானுக்கு கந்தபுராணம் போல, விநாயகருக்கு விநாயக புராணம் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயக புராணம் பதிணெண் புராணங்களுள் அடங்காதது. பிற்காலத்தது என்று கருதப்படுவது. அத்துடன் பல முரணான செய்திகள் இங்கு ஒருங்கே இருந்து பெரும் சிக்கலைத் தருகின்றன. இவற்றால் இப்புராணம் அறிஞர்களின் பார்வையிலிருந்து விலகியே இருக்கிறது.

விநாயக அவதாரம் பற்றி விநாயகபுராணத்தில் ‘மூவர் உபாசித்த படலத்தில்’ ஒருவாறாயும், சிந்தாமணி விநாயகர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், விக்னராசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், மயூரேசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், பலப்பல வகையே சொல்லப்படுகின்றன.

ஆனால் இவைகளை எல்லாம் நம்மவர்கள் ஏற்றுப் போற்றினாரில்லை. முக்கியமானதான, பிரணவத்தின் வடிவமாக பிள்ளையார் தோன்றினார் என்பதையே ஏற்றுக் கொண்டனர். உமாதேவியும் சிவபெருமானும் சித்திரமாக வரையப்பட்டிருந்த சமஷ்டிப் பிரணவத்தைப் பார்த்தபோது அதில் அகரம் களிறாக, உகரம் பிடியானதாம். அவை கூடிய போது விநாயகர் தோன்றினார்.

இதைத் திருஞானசம்பந்தர்

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே

என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம். இச்செய்தி அற்புதமான தத்துவச் செறிவுடையதாக விளங்குகிறது. விநாயகரின் உருவமே ஓங்காரவடிவம். எனது சிறுவயதில் ஓ என்ற எழுத்தை எழுதி அதனை பின் பிள்ளையாராக வரைந்து பார்க்கிற வழக்கம் இருந்தது ஞாபகம் வருகிறது.

220 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர் என்கிற பெரியவர் விநாயகபுராணத்தைத் தமிழில் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்கள் கொண்ட இப்புராணம் லீலா காண்டம், உபாசனா காண்டம் என்ற இருபிரிவுகள் கொண்டதாயிருக்கிறது. இப்புராணத்தில் இருந்து தான் காரியசித்தி மாலை என்ற எட்டுப்பாடல்கள் தொகுக்கப்பட்டு பலராலும் ஓதப்பட்டு வருகின்றன.

அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்

என்பது முதலாயிருக்கிய கச்சியப்ப முனிவரரரின் பாடல்கள் நனிச்சுவை நிறைந்தவையாயுள்ளன. எனினும் இப்புராணமும் மக்கள் மத்தியில் பெருவழக்கு உடையதாயில்லை என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.

இலங்கையில் இன்றும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ஏகாதசிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரிப்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருத்தணிகைப்புராணம் என்று பல்வேறு புராணங்களும் ஆலயங்களில் முறைப்படி புராண படனம் செய்யப்படுகிறது. எனினும் விநாயகபுராணத்தைப் படனம் செய்வதாக அறியமுடியவில்லை. எனினும் கச்சியப்ப முனிவராரின் தனிச்செய்யுட்கள் தனிச்சிறப்புடன் ஓதப்பட்டு வருவதைக் காணக்கிடைக்கிறது.

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராஜபண்டிதர் என்னும் வரதபண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதை என்று ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்கள். இது பிள்ளையார் வைபவத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்ட இப் பிள்ளையார் கதை செய்யுள் நடையில் உள்ளது. கவித்துவம் நிறைந்தது. இது இலங்கையில் மிகப்பிரபலமாயுள்ளது.

‘மந்தரகிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ் சோலை இராசமாநகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டி..’ இப்படி இக்கதை நீண்டு செல்கிறது. ஆனால் இக்கதையூடே விநாயகர் வரலாற்று முறைமை முழுமை பெற்றதாகச் சொல்ல இயலாதிருக்கிறது.

lords-vinayaka-shankara-parvati

எழிலார் விநாயகர் வடிவம்

சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர். அவரது திருமுகம் யானை வடிவம். அவரது திருக்கரங்கள் தேவவடிவம். ஆவரின் மேனி மனித வடிவம். அவரது திருவடிகள் பூதவடிவம் என்பர். அவர் மயூரேசராக மயிலேறி வலம் வரும் போது பறவையினத்தையும் அவர் இணைத்துக் கொள்கிறார். ஆக, சகல உயிர்களின் இணைப்பை சித்தரிப்பது போல பிள்ளையாரின் வடிவம் அமைகிறது.

பிள்ளையார் நிறைய உணவு உண்ணும் சாமி என்பது பலரின் தவறான எண்ணம். ஆதனால் தான் அவர் பெரிய வயிறோடு இருக்கிறாராம்.  உண்மை என்ன எனில், இதுவும் பிற்காலத்தைய தவறான அபிப்ராயங்களின் விளைவே என நம்பலாம். அண்டப்பிரம்மாண்டமே தன் வயிற்றில் கொண்டதால் தான் பிள்ளையாருக்கு பருத்த வயிறு அமைந்தது என்பதும் சில தத்துவ அறிஞர்களின் கூற்று. இதுவும் சிந்தனைக்குரியதே.

பிள்ளையார் குழந்தை உருவினராகவே பழைய இலக்கியங்களில்.. மந்திரங்களில், தோத்திரங்களில் சித்தரிக்கப்படுகிறார்.

ஆதிசங்கரர் சுப்பிரம்மண்யபுஜங்கத்தில் ஸதாபாலரூபர் என்று விநாயகரைப் போற்றுவார். விநாயகர் குழந்தை உருவினர் என்பதாலேயே நம் தமிழர்கள் பிள்ளை-யார் என்றே அழைக்கிறார்கள். குழந்தைப் பிள்ளை மெல்லிதாக இருப்பதைக் காட்டிலும் சிறிது பருமனாக.. இருப்பதையே விரும்புவர். குழந்தைக் கடவுளான பிள்ளையாரும் அந்தளவில் தான் பருத்த வயிற்றராயிருக்கிறார். ஆனாலும் அவர் என்றும் சுறுசுறுப்பானவர். எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..

விநாயகர் கஜமுகன், உதத்தன், துந்தரன், நக்கிரன், கிருத்திராசூரன், சேமன், குசேலன், குரூராசூரன், பாலாசூரன், வியோமாசூரன், துந்துபி, தர்பாசூரன், சிந்தூரன் இப்படி எராளமான அசுரர்களை அழித்ததாக விநாயக புராணமே சொல்கிறது. இவ்வாறாகில் எவ்வளவு வீரதீரக்கடவுளாக விநாயகர் அமைதல் வேண்டும். இதை விட கணேசக்கடவுள் தன் கரங்களில் அங்குசம், பாசம் முதலிய ஆயுதங்களை வைத்திருப்பதால் அவரது எழுச்சியம்.. அவர் எப்போதும் தன்னடியார்களைக் காத்தருளும் திறனும் வெளிப்படுகிறது.

விநாயகரின் கையில் பூரணத்தின் வடிவமான மோதகத்தைக் காணலாம். அவர் கையிலிருக்கும் மோதக இனிப்பின் ஊடாக பிள்ளையார் தன் அடியவர்களிற்கு இனியன தருவார் என நம்புகிறார். குணநிதியான கணபதியின் வலது திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தனது தனித்துவமான உறுப்பாகிய தந்தத்தை பிள்ளையாரே ஒடித்து தனது கரத்தில் வைத்திருக்கிறார். அது எப்படி?

ganapati_2

வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார். பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார். முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத பூரணத்துவம் கொண்ட தந்தது பதிஞானத்தையும் காட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது. எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு

கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே வளரும் என்பது திண்ணம். இதனையை

நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்

என்கிறது திருவருட்பயன்.

‘ஐந்து கரத்தன்’ என்று பிள்ளையாரைப் போற்றுவார்கள். அதில் ஒரு கரம் பாசம் ஏந்துகிறது. பாசக் கயிறு பிணைப்பதற்கு உதவும். அந்தப் பிணிப்பு பிறப்பை உண்டாக்கும். ஆக, அதன் ஊடாக படைத்தல் தொழில் காண்பிக்கப்படுகிறது. இன்னொரு கரம் அங்குசம் ஏந்துகிறது. அது தீமைகளை அழிக்கும். எனவே அது அழித்தல் தொழிலின் அடையாளம். மோதகம் ஏந்திய கரம் அருளலைக் குறிக்கும். அபயகரம் மறைத்தலையும் துதிக்கை காத்தலையும் குறிக்கும் என்றும் விளக்குவர்.

பிள்ளையாரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடுவர். பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி ,ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி,த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.

ஆனால், தற்போது விநாயக சதுர்த்தி நாட்களில் விதம் விதமாக எல்லாம் பிள்ளையாரைப் பார்க்கிறோம். ஆனால், அவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து காட்சி தரவல்ல கடவுள் விநாயகர் தானே? ஆனாலும் அதற்காக கடவுளுக்கே உரிய அழகை அழியாத நிலையில் வடிவங்களை உருவாக்குவது மிகத் தவறானது. அவை கண்டிக்கப்படவேண்டியனவுமாகும். பஞ்சரத்னங்கள் பல உண்டு. அவற்றில் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கணேச பஞ்சரத்னம் என்கிற ‘முதாகரார்த்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்’ என்கிற ஐந்தும் இசை கூடுகிற போது அமைகிற அழகிருக்கிறதே.. இது பஞ்சரத்ன நாயகம் என்கிற பெருமை பெற்று விடுகிறது.

வேதத்தை ஏற்றுக் கொண்டவர்களான வைதீக இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்களும் பௌத்தர்களும் கூட விநாயகரை வணங்கி வருகிறார்கள். விநாயகரும் எந்தப் பேதமுமில்லாமல் எல்லொருக்கும் அருள் செய்கிறார். இவர் விண்வெளிப்பயணம் செய்தவரல்லவா?

தன்னை நினையத் தருகின்றான்

சைவத்திருமுறைகள் கண்டெடுக்கப்படுவதற்கு விநாயகப்பெருமான் காரணராக விளங்கினார் என்பது ஐதீகம். திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்து அதன் மூலமே கல்வி, கலை யாவும் அப்பிள்ளையாரிடமே கற்றவர் நம்பியாண்டார் நம்பிகள்.

அந்த நம்பியடிகளும் இராஜராஜனும் இணைந்து செய்த ஒப்புயர்வற்ற திருப்பணி தான் திருமுறைகள் கண்டெடுத்தமையும் அவற்றை முறைப்படுத்தியமையுமாகும். இதற்கெல்லாம் நம்பிகளின் உள் நின்று வழிகாட்டியவர் மூத்த பிள்ளையாகிய விநாயகர். இவ்வாறெல்லாம் தனக்கு அளப்பெருங்கருணை புரிந்த விநாயகர் மீது நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை பாடியிருக்கிறார்.

என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்

என்பது முதலாயுள்ள இப்பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கன. இங்கே இப்பாடலில் ‘தன்னை நினையத் தருகின்றான்’ என்ற வரிகள் இன்பம் பயக்க வல்லன. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இத்துடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கது.

திருஞானசம்பந்தர் தேரழுந்தூர் வந்த போது சிவன் கோயிலைக் காட்டியவர் பிள்ளையார் தானாம். அது போல, திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அளித்த போது அதனை ஒழுங்காக வழங்கியவர் பிள்ளையார் தானாம். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை கூப்பிட்ட கூப்பிட்ட பிள்ளையாரையும், திருவாரூரில் அவருக்காக மாற்றுரைத்த கணபதியையும் பார்க்கலாம்.

பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்

என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.

muruga-valli-pillaiyar தமிழ்க்கடவுளான முருகனின் அண்ணனாகிய பிள்ளையாரும் தமிழ்க்கடவுள் தான். ஆனால் சில மேற்றிசை அறிஞர்கள்(?) சில போலித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு அறிஞர்(?) சிலரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பிள்ளையார் மராட்டியக்கடவுள் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் அவர் தமிழருக்குத் தான் அதிகம் சொந்தக்காரர். விநாயகர் ஓங்கார வடிவம் என்று சொல்கிறோம். ஓ என்ற தமிழ் எழுத்தின் வடிவமாகவே அவர் முகம் அமையக் காணலாம். இது வேற்று மொழிகளில் காண்பதரிது.

பிள்ளையாருக்குரிய  பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன. இம்மோதகம் செய்  முறை தமிழ்நாட்டின் சிறந்த சமையற் கலையின் வடிவமாகவே இன்று வரை துலங்குகிறது. இலங்கையில் மோதகம் இல்லாத விசேஷங்களை காண இயலாது. மோதகம் செய் முறைமையை நோக்கின் இது ஒரு சமையற் கலையின் உன்னதப்படைப்பு என்பதும் புலப்படும்.

யானையும் தமிழ்நாட்டின் சேரதேசத்தின் முதன்மை விலங்கு.. ஆக, பழந்தமிழரின் பெரும் செல்வம். நால் வகைப்படையில் கஜ,ரத,துரக,பதாதி என்கிற போது முன் நிற்பது கஜமே. ‘மலைநாடு வேழமுடைத்து’ என்பதும் தமிழ்நாட்டுச் சிறப்பல்லவா? ஆக, வேழமுகனுக்கும் தமிழ்நாடே உரித்து. வாதாபி காலத்தில் திருச்செங்கோட்டுப் பிள்ளையாரை வாதாபி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கலாம்.

அனாலும் அதற்கு முன்னரே நிறைவான விநாயகர் வணக்கம் இருந்திருக்க வேண்டும். இது இப்படியிருக்க, சங்ககாலத்தில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் என்று ஒரு வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டின் தலைநகர் வஞ்சியில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் இருந்ததாகவும் அது கையிற் பாசத்துடன் இருப்பதாயும், அதர்மத்தை அழித்து நன்மையை அது நிலைநாட்டுவதாயும் குறிப்புக்கள் உள. இவை விநாயகர் வழிபாட்டின் அடித்தளமாக இருக்கலாம். பிள்ளையாரையும் பூதநாதன், கணநாதன் என்று சுட்டுவது ஈண்டு சிந்திப்பதற்குரியது.

இலங்கையின் அனுராதபுரத்தில் கிறிஸ்து பிறக்க முன் 2ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் இருகரங்களும் யானை முகமும் கொண்ட உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாவல என்கிற ஆய்வாளர் ஆய்வு செய்து கணநாதன் வடிவம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

எளிமையின் தெய்வம்

vinayaka-t
அறுகும் எருக்கும் பிள்ளையாருக்குரியன. வயல் வெளிகளில் தேடுவாரற்று கிடக்கிற மருத்துவப் பொருளான அறுகை பிள்ளையார் தன் தலையில் சாற்றிக் கொள்வதை விரும்புகிறார். அது போல, எருக்கமிலையை எவருமே நாடுவதே இல்லை.. வெள்ளெருக்கம் வேரில் கூட பிள்ளையார் உறைகிறார் என்று வழிபடுவர். எவரும் விரும்பாத அதனை தன் மிக உவப்பான வில்வமாகக் கொண்டு பிள்ளையார் மட்டும் கருணை செய்கிறார்.

தோர்பி கர்ணம் தான் வேழமுகப்பெருமானுக்கு மிக உயர்ந்த வழிபாடு. தோர்பி என்றால் கைகளினால் என்றும் கர்ணம் என்றால் காது என்றும் பொருள் கொண்டு கைகளால் காதைப்பிடித்துக் கொள்வதை இது குறிக்கும் என்பர். இப்படியே மும்முறை முழந்தாளழவு இருந்து எழுந்து இவ்வழிபாடடைச் செய்வர். இலவச உடற்பயிற்சியாக அமையும் இப்பயிற்சியால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதன் மூலம் குண்டலினி சக்தியிலும் எழுச்சி உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.

ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.

ஏற்றப்பாடல் ஒன்று

பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்

இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார். எனவே, அப்பெருமானை பெருவயிறராகக் காண்பது இவ்விடத்தும் சரியாகத் தெரியவில்லை.

பிள்ளையாரும் நகைச்சுவையும்

விநாயகர் தன் ஆடலைக் கண்டு நகைத்த சந்திரனைக் கோபித்து சாபம் கொடுத்து பின் அதே சந்திரனைத் தன் முடியில் சூடிக் கொண்டு பெருமை தந்தவர் என்பது புராணச் செய்தி. ஆக, நகைச் சுவையை என்றைக்கும் பிள்ளையார் விரும்பினார்.

இன்றைக்கு விநாயக சதுர்த்தி நாட்களில் சந்திரனுக்கும் பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இது விநாயகரின் அதிசய கருணையைக் காட்டும். சங்கடஹர சதுர்த்தி (தேய்பிறைச் சதுர்த்தி) களில் சந்திர தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

காஞ்சியில் விகடசக்கர கணபதியாகப் பிள்ளையார் இருக்கிறார். இக்கடவுளைப் போற்றியே கந்தபுராணக் காப்புச் செய்யுள் அமைந்திருக்கிறது. இவை காரணமாக பிள்ளையாருக்கு விகடராஜர் என்றும் பெயர் உள்ளது.

பிள்ளையார் மூஷிக வானராக விளங்குவதும் அவரது எளிமையை, எல்லாருக்கும் இரங்கும் பேருண்மையைக் காட்டுகிறது. இதை காளமேகப் புலர் காஞ்சியில் கண்டார். அவர் கடவுளர்களை நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். அதாவது மேலோட்டமாகப் பார்க்கும் போது நிந்தனை போல இருக்கும் அக்கவிகளில் உள்ளார்த்தம் போற்றுதலாயமையும். அவர் பாடுகிறார்.

மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்

இவ்வாறான சம்பவங்களுக்கும் இடங்கொடுத்துக் காக்கிற கணபதி நம் பிள்ளையார் தானே? திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.

உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்

நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும்.

17 Replies to “பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை”

  1. திரு மயூரகிரி சர்மா பிள்ளையார் பெருமையை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். ஆனால் விநாயகப்பெருமான் பிரமனின் அம்சம் என்பதையும் முருகப்பெருமான் திருமாலின் அம்சம் என்பதையும் அவர் இன்னும் விளக்க வேண்டும். வேத, வேதாந்த, இதிகாச, புராண, அடிப்படைகளில் இக்கருத்தை அவர் நிறுவ வேண்டும்.
    அவரது இந்தக்கருத்தை சைவர்களோ அல்லது வைணவர்களோ ஏற்கமாட்டார்கள் என்பது திண்ணம். பரம் பொருளான சிவபெருமானின் திருக்குமரர்களான விநாயகரும் முருகனும் சிவவடிவமேயன்றி மும்முர்த்திகளின் அம்சமாகமாட்டார்கள் என்பதே சைவர்களின் நம்பிக்கை. அருளாளர் பாம்பன் சுவாமிகள் ஐந்து முக சிவமே ஆறுமுக சிவம் என்று கூறுவது இங்கே குறிப்பிடத்தகுந்தது

  2. அன்பிற்குரிய விபூதிபூஷண் அவர்களுக்கு,

    இக்கட்டுரையில் எம்மூர்த்தியும் எம்மூர்த்தியினதும் அம்சம் என்று சொல்லவில்லை… ஆனால் பிரம்ம வடிவம், விஷ்ணு வடிவம் என்று மட்டும் சொன்னோம்… அதாவது முருகனைப் பார்த்தால் வைணவருக்கு விஷ்ணுவின் எண்ணம் தோன்றும்.. அது போலவே பிரம்ம வடிவம் பிள்ளையாரைப் பார்க்கிற போது தோன்றுவதும் இயல்பே .. இது எப்படித் தவறு?

    ஆனால், முருகனுக்கு சைவமக்களுக்கு எவ்வளவு உரிமையுண்டோ? அது போல, அவ்வளவுக்கு வைணவர்களுக்கும் உரிமையிருக்கிறது… இதை மறுக்க இயலாது… முருகன் சைவ வைணவ சமரசத் தெய்வம்.. இது எனது தாழ்மையான , உறுதியான கோட்பாடு…

    இதற்கு தமிழகத்துப் பழமுதிர்சோலை (அழகர் கோயில்) , இலங்கைக் கதிர்காமம், கர்நாடக சுப்பிரமணியா, ஆந்திராவின் திருப்பதி முதலிய பல ஸ்தலங்கள் ஆதாரம்..

    அழகர் கோயிலில் இருக்கிற பெருமாளைத் தான் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக போற்றியிருக்கின்றனரா? என்ற ஐயப்பாடும் எனக்குண்டு… இது பற்றி விரிவாக விவாதிக்கலாம்..

  3. // அதாவது முருகனைப் பார்த்தால் வைணவருக்கு விஷ்ணுவின் எண்ணம் தோன்றும்.. அது போலவே பிரம்ம வடிவம் பிள்ளையாரைப் பார்க்கிற போது தோன்றுவதும் இயல்பே .. இது எப்படித் தவறு? //

    அன்பர்கள் மயூரகிரி சர்மா மற்றும் விபூதிபூஷண் அவர்களுக்கு,

    பரம வைஷ்ணவர்களுக்குப் பெருமதிப்பிற்குரிய எவரைப் பார்த்தாலும் விஷ்ணுவின் எண்ணம் தோன்றும் என்பதில் ஐயமில்லை. இந்த ரீதியில் முருகனைப் பற்றி பகவத் கீதையிலே சான்று இருக்கிறது: “சேனபதிகளில் நான் ஸ்கந்தனாக இருக்கிறேன்” (10.24). ஆனால் இது பரமார்த்த நிலை. கீதையில் அதே இடத்தில் “தேவர்களில் இந்திரனாக இருக்கிறேன்”, “மலைகளில் மேருவாக இருக்கின்றேன்” (10.23), “நதிகளில் கங்கையாக இருக்கின்றேன்” (10.31), “நீர்நிலைகளில் பெராழியாக இருக்கின்றேன்” (10.24) என்பனவும் வருகின்றன.

    மேற்கண்ட தத்துவவியல் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், வியாசர் ஸ்ரீமன் நாராயணனுடைய அம்சாவதாரம் என்று புராணங்கள் கூறுவது போல, பலராமன் ஆதி சேஷனின் அவதாரம் என்று கூறுவது போல, முருகன் திருமாலின் அம்சம் என்றும் விநாயகர் பிரம்மாவின் அம்சம் என்றும் கருதுவதற்கு வேத – இதிகாச புராணக் குறிப்போ, வரலாற்று ரீதியில் இலக்கிய/கல்வெட்டுச் சான்றோ இருக்கிறதா என்பது தான் விபூதி பூஷண் அவர்கள் கேள்வி என நினைக்கிறேன். இக் கேள்வியில் தவறிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    // இதற்கு தமிழகத்துப் பழமுதிர்சோலை (அழகர் கோயில்) , இலங்கைக் கதிர்காமம், கர்நாடக சுப்பிரமணியா, ஆந்திராவின் திருப்பதி முதலிய பல ஸ்தலங்கள் ஆதாரம்..//

    வரலாற்று, சமூகவியல் ரீதியில் இத்தகைய ஒற்றுமை மேலும் பல இடங்களில் காணப்படுகிறது – திருக்கரம்பனூர் உத்தமர் கோயில், திருக்குறுங்குடி, திருச் சித்திரக்கூடம் / தில்லை, முதலானவை.

  4. அருள்திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி. விவாதம் என்பது காலம் காலமாக நமது பாரம்பரியத்தில் தொடரும் ஒரு வழிமுறை. நீங்கள் விநாயகரின் வடிவம் பிரம்ம தேவரின் வடிவத்தொடும் முருகப்பெருமானின் வடிவம் திருமால் போன்றும் ஒத்துள்ளது என்று கருதுகிறீர்கள். அழகில் முருகப்பெருமானும் தம் மாமனை ஒத்துள்ளார் அதில் முரணில்லை. முலாதார மூர்த்தி என்று பிரம்மதேவரும் விநாயகரும் குறிப்பிடப்படுவதும் ஒருவகையில் உங்கள் கருத்தோடு இசைகிறது.
    அழகர் கோயில் திருமலை ஆகியவற்றில் உள்ள மூர்த்தி யார் என்பது பற்றி நெடும் சர்ச்சை இருந்திருக்கிறது என அறிகிறேன். அது இன்றைய காலகட்டத்தில் நமக்கு வேண்டாம் என்றே உணர்கிறேன்.

  5. திரு விபூதி பூஷண் அவர்களே,

    // அழகர் கோயில் திருமலை ஆகியவற்றில் உள்ள மூர்த்தி யார் என்பது பற்றி நெடும் சர்ச்சை இருந்திருக்கிறது என அறிகிறேன். அது இன்றைய காலகட்டத்தில் நமக்கு வேண்டாம் என்றே உணர்கிறேன். //

    சிலர் பொழுது போகவில்லை என்று இம்மாதிரிச் சர்ச்சைகளைக் கிளப்பி அறிவாளிகளையும் மயக்குகின்றனர். ஆனால், உண்மையில் சர்ச்சைக்குச் சிறிதும் இடமில்லை:

    திருப்பதி பெருமாள் சங்கு சக்கரத்துடன் எழுந்தருளியிருப்பது சிலப்பதிகாரத்தில் தெளிவாக உள்ளது. Coincidentally, என்னுடைய அடுத்த கட்டுரையில் இது பற்றிய குறிப்புகள் வரப்போகின்றன. திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் பற்றி சங்க இலக்கியமாகிய பரிபாடலில் தெளிவாகத் திருமால் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் சிலப்பதிகாரத்திலும் திருமால் கோயிலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆதாரமில்லாமல் இம்மாதிரி சர்ச்சையை வளர்ப்பது வீண் சண்டையில் கொண்டு போய் முடியும் என்பதே என்னுடைய கருத்தும்.

  6. மதிப்பிற்குரிய கந்தர்வன் அவர்களுக்கு,

    தாங்கள் குறிப்பிடுவது போல, சங்க மருவிய காலத்திற்குரியதான சிலப்பதிகாரத்தில் திருமாலிருஞ்சோலை பற்றி அங்கு சங்கு சக்கரதாரியாகப் பெருமாள் எழுந்தருளியிருப்பது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளமை உண்மையே..

    ஆனால் சங்ககாலத்துப் பத்துப்பாட்டு நூல்களுள் முதற்பாட்டான திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்சோலை என்று அதே தலத்தை திருமுருகன் திருத்தலமாகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது..

    இதன் மூலம் தெரியவருவது என்ன எனில், நான் கருதுவது இத்தலம் கண்ணனுக்கும் கந்தனுக்கும் உரிய தலமாக விளங்கியிருக்கிறது..

    கண்ணன் அடியவர்களான ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் இளங்கொவடிகள் போன்றவர்களும் அதை விஷ்ணுஸ்தலமாகப் போற்றினார்கள்.
    அதே தலத்தையே அருணகிரிநாதர், நக்கீரர், கச்சியப்பசிவாச்சார்யார், போன்ற முருகபக்தர்கள் திருமுருகத்தலமாக, அதிலும் முக்கியமாக, ஆறுபடைவீடுகளுள் ஒன்றாகக் கண்டார்கள்.

    பிரிக்கவொண்ணாச் சைவ வைஷ்ணவ சமரச ஸ்தலமாக விளங்குகிறது அழகர் கோயில். (திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை).. முருகனும் அழகன்.. திருமாலும் அழகன்.

    “சேண் நின்று இழுமென இழிதரும் அருவி பழமுதிர்சோலை மலைக்கிழவோனே’ (முருகாற்றுப்படை)

  7. திரு மயூரகிரி சர்மா அவர்களே,

    சங்கம் மருவிய காலம் மட்டுமன்றி அதற்கு முன்பே எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலிலும் திருமாளிருன்ஜோளைமலை பற்றி உள்ளது. பதினைந்தாம் பரிபாடல் முழுவதும் திருமாலிருஞ்சோலை மலை பற்றியதே. பாடலின் சில வரிகள் இதோ:

    ” நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
    ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
    அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
    எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.”

    “சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்
    சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்”

    இன்றைக்கும் திருமாலிருஞ்சோலையில் உள்ள நீரோடையை “சிலம்பாறு” என்று தமிழிலும், “நூபுர கங்கை” என்று அதே பொருளை உடைய வடமொழிச் சொல்லாலும் வழங்கப்படுகிறது.

    தொன்று தொட்டு அதே ஸ்தலத்தில் முருகன் கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்னும் கருத்தோடு இது முரண்படாது என்றே நினைக்கிறேன்.

    சங்க நூல்களில் பழமுதிர்ச் சோலை மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றமும் “சீறலைவாய்” என்னும் திருச்செந்தூரில் முருகன் கோயிலும்

  8. Dear Sharma
    Please write about the current plight of Hindus in Sri lanka. Hindus and Hinduism are facing threats from Sinhala Buddhist government and Monks. Thousnads of Hindus are converted to christianity during and after the war. Wherever Hindus are affected by war and threatend by Armed forces of the government, it is always Chrisitian priests run to help them. There is no Hindu priest or organisation visit them and offer help. Hindus like you write about Gods and temples that have no relevance to the day to day life of the present day Hindus in Sri lanka and Malaysia who are facing threats and destruction at the hands of other religious groups.

    I ask all Hindus to see the reality and address the issues that confronts Hindus today. There is no point in writing about philosophy and past history.

    In Sri lanka Hindus are dying without basic amenities. Give them food clothes and shelter now. Give them tools for them to work and earn for their living. Don’t send any help through Sri lankan Government. You could send direct to affected Hindus or through Ramakrishna Mission and All Ceylon Hindu Congress or Sivathondan Society.

    Mr Sharma knows very well that while Hindu temples are neglected and Hindus are made to beg, Sri lankan Government is building big Buddhist temples in areas where Hindus are living. In every junction Buddha statue is built when there is no Buddhist to pray. Chrisitian churches are being built by missionaries with foreign money. Temples like Thiruppathi, Meenadchi Amman, Sabarimalai Aiyappan are flodded with money but they have no social vision or care. We need more articles to expose these points instead of Hindu Gods.
    RISHI

  9. ஸ்ரீ மயூரகிரிசர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.

    விநாயகர் பற்றிய அழகான ஹாரம் போன்ற வ்யாசத்திற்கு தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிய

    “சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாட”

    என்றாரம்பித்து

    “வித்தக விநாயக விரைகழல் சரணே”

    என நிறைவு பெறும் எங்கள் நித்யானுசந்தானத்தில் உள்ள “விநாயகர் அகவல்” ஸ்துதியை பதக்கமாக சமர்ப்பிக்கிறேன்.

    \\\\\\\\\பிள்ளையாருக்குரிய பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன.\\\\\\\\

    “முதாகராத்த மோதகம்” மற்றும் “மூஷிக வாஹன மோதக ஹஸ்த” போன்ற ஸ்துதிகளிலும் மோதகம் சிறப்பக சொல்லப்படுகிறது.

    ஆனால் வள்ளல் அருணகிரியின் திருப்புகழ்ப் பாமாலைகளில்

    “கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி”

    மற்றும்

    “இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
    எட்பொரி அவற்றுவரை இளநீர்

    வண்டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
    வெளரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்

    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளும்”

    என பிள்ளையாருக்குகந்த வ்யஞ்சனங்களின் நீள் பட்டியலில் மோதகம் (கவவு) காணக்கிட்டிலேன். கருத்தூன்றிப் பயில வேண்டும் போலும். மற்ற திருப்புகழ்களில் இருக்கலாம்.

    \\\\\\அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.\\\\\\\\

    மேற்கண்ட வாசகத்தில் “ப்ரத்யேகமாக” என்ற சொல் தொக்கி நிற்பதாகத் தெரிகிறது.

    கந்தனுக்கும் கணபதிக்குமிடையேயான ப்ராத்ரு வாத்ஸல்யத்தை வள்ளல் பெருமான் உகந்து பாடுகிறார்.

    “போதநிர்க்குண போதா நமோ நமோ” என்ற திருப்புகழில் “விநாயகப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே” என்று ஸ்கந்தனை விநாயகனுக்குப் ப்ரிய வேலாயுதா என்றுகந்தேத்துகிறாரன்றோ?

    அதனால் தான் போலும், வேழமழைத்த பெருமாளின் சித்திரம் இந்த வ்யாசத்தில் பார்க்கையில் கீழ்க்கண்ட திருப்புகழ் நினைவில் வருகிறது :-

    பூளை யெருக்கு …… மதிநாக
    பூண ரளித்த …… சிறியோனே
    வேளை தனக்கு …… சிதமாக
    வேழ மழைத்த …… பெருமாளே.

    வேழம் அந்தர்தானமாகிய போது மறுதளித்த வள்ளியை அச்சமுறுத்தி இணங்க வைக்கவேண்டி வாவென்றழைக்க ஆவிர்பவமாகிய வேழமுகத்தோனையும் வள்ளி மணவாளனையும் இத்திருப்புகழில் பாடுகிறார்.

  10. யாழ்ப்பாணத்து விநாயகர் வழிபாடு பற்றியும் சொல்ல வேண்டும்.. 12ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தவர்கள் ஆரியச் சக்கரவத்திகள் என்ற தமிழரசர்கள்.. அவர்கள் பிள்ளையாருக்குப் பல்வேறு ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள்..

    யாழ்ப்பாணத்து நல்லூரில் கைலாசப்பிளளையார், இணுவிலில் கருணாகரப்பிள்ளையார், செகராஜசேகரப்பிள்ளையார், நீர்வேலியில் அரசகேசரிப்பிள்ளையார்போன்றவை இவர்கள் அமைத்ததாகும். இவற்றில் ஒன்றான நிர்வேலி என்ற எனது சொந்த ஊரில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் பற்றிய சிறுகுறிப்பு கீழ் வருமாறு..

    வளம் பொருந்திய நீர்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோயில். இக்கோயிலில் இராஜசிம்ம கணபதி எனப் போற்றப்படும் அரசகேசரி கணபதிக்கு அருகிலேயே பாலாம்பிகை சமேதராக வைத்தீஸ்வரர் காட்சி கொடுக்கிறார்.

    வாயிலிலே பஞ்சதள ராஜகோபுரம்.. உள்ளே நுழைந்தால் ஒரு சிவாலயத்திற்குரிய அத்தனை இலட்சணங்களும் கொண்ட அமைப்பு. உள்வீதியில் வலம் வருகிற போது திருமஞ்சனக்கிணற்றையும் பார்க்கிறோம்.

    இது தான் இறைவனுக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பயன்படும் தீர்த்தக்கிணறு. கூபதீர்த்தமான இது மனிதர்களால் வெட்டப்படாதது. மூன்றடி விட்டமும் பதினெட்டு முழம் ஆழமும் கொண்ட இக்கிணற்றிலிருந்து அள்ள அள்ளக்குறையாத அமுதஜலம் பிரவாகிக்கிறது.

    இக்கிணற்றினை வைத்தே இவ்வாலய வரலாறும் ஆரம்பிப்பதால் இனிமை ததும்பும் இத்தீர்த்தத்துளியுடன் வரலாற்றுத் துளியையும் நோக்கலாம்.
    இந்த கிணற்றின் ஆரம்பம் தொடர்பில் பல ஐயப்பாடுகள் உள. ஸ்ரீ ராமர் இராவண வதம் நிறைவுற்றதும் சீதாதேவியுடன் இப்பகுதி வழியே வந்த போது தன் வில்லை ஊன்றிய இடத்தில் உருவானது இக்கிணறு என்ற கருத்தும் உண்டு.

    இது எவ்வாறாகிலும், 1591-1616 காலப்பகுதியில் நல்லூரை இராசதானியாகக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண்டவன் சிங்கைப் பரராஜசேகரன் என்ற பேரரசன்.
    தமிழார்வம் மிக்கவனான இவன் நல்லூரில் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தமிழாய்ந்திருக்கிறான். யமுனா ஏரியைக் கட்டுவித்திருக்கிறான். புல இலக்கியங்களின் எழுச்சிக்கு காரணனாக விளங்கியிருக்கிறான்.

    இந்த பரராஜசேகரனுக்கு உற்ற துணையாக அவனது மஹாமந்திரியாயும், மருகனாயும் விளங்கியவன் அரசகேசரி. இவன் மந்திரி மட்டுமல்ல.. வடமொழியில் காளிதாசர் செய்த இரகுவம்சத்தைத் தமிழில் பாடிய கவியரசனுமாவான். ஆவன் ஓரிரவில் ஒரு கனவு கண்டான்.

    அரசகேசரியின் கனவில் தோன்றிய ஆனைமாமுகத்து ஐங்கரப்பெருமான் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதிகாலையிலேயே எழுந்து கண்ட கனவின் உண்மையறிய தன் புரவியில் ஏறிப்பறந்தான்.

    இன்றைக்கும் இராஜவீதி என்றழைக்கப்படுகிற வீதியூடே அவனது குதிரை பறந்தது. வழியில்.. தன் கனவில் கண்ட பனந்தோப்பு ஊடாக தன் குதிரையைச் செலுத்தினான். கடவுள் காட்டிய இடம் எது? தேடினான். ..தேடினான்… அவனது தேடலில் ஒன்றும் தென்படவில்லை. .. நா வறண்டது.. தாகம் வாட்டியது.. இப்போது அவன் தண்ணீர் தேடினான். அப்போது ஆச்சர்யமான கிணறு ஒன்றைக் கண்டான். அள்ளிப் பருகினான்.
    ஆஹா.. அமிர்தமாக இனித்தது. ஆச்சர்யம் பொங்க கண்களை விரிக்க, அங்கே கிணற்றின் அருகில் அம்மையப்பருடன் ஆனைமாமுகக் கடவுள் அழகான சிலை வடிவில் காட்சி கொடுத்தார். ஆனந்தக் கூத்தாடிய அரசகேசரி தான் கண்ட கனவின் பயன் இது.. கண்ட இடம் இது என்று மகிழ்ந்தான். ஆகம விதிப்படி கோயிலை கட்டி குடமுழுக்குச் செய்தான்.

    இவ்வாலயத்தின் திருமுற்றத்தில் வைத்தே, தான் செம்பாட்டுக்களால் தமிழில் பாடிய இரகுவம்சப் பெருங்காவியத்தையும் அரங்கேற்றினான். இவை காரணமாக, இக்கோயில் .. இன்று அரசகேசரிப்பிள்ளையார் கோயில் என்றும் செம்பாட்டுப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டுப் போற்றப்படுகிறது.

    இன்றைக்கு அரசகேசரி கட்டிய கோயில் இல்லை.. அதனை போர்த்துக் கேய மத வெறியர்கள் அழித்து விட்டார்கள். ஒல்லாந்தர் காலத்திற்கும் பின் இன்றைய கோயில் சிறு குடிலாக மீள ஆரம்பமானது. இன்றைக்கு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோயில்.
    ஆலயத்தினைச் சுற்றி ஸ்ரீ கணேசா சனசமூக நிலையம், ஸ்ரீ கணேசா முன்பள்ளி, ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை, அறுபத்து மூவர் குருபூஜை மடம், சீ.சீ.த.க. பாடசாலை, அன்னதான மடம், போன்ற அறப்பணி நிலையங்கள் அமைந்து அறம் வழவாப் பணியாற்றி வருகின்றன.அண்மைக் காலத்தில் வாழ்ந்த சிவதொண்டன் ஸ்ரீமத் செல்லத்துரை சுவாமிகளின் குலதெய்வமும் அரசகேசரி ஆண்டவனே..

    இவ்வாறாக, அந்தணரும், அரசர்களும், அற்புதத் துறவியரும், அறிஞர்களும், கவிஞர்களும்,வணிகர்களும் விவசாயப் பெருமக்களும் யாபேரும் காதலித்துப் போற்றிடும் அரசகேசரி ஆண்டவனை நம்பினால் அவன் கைவிட மாட்டான் என்று ஆலயம் சார்ந்த அன்பர்கள் உறுதி கூறுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவின் மகிழ்ச்சி எல்லோருடனும் தங்கட்டும்..

  11. அன்பிற்கினிய ப்ரம்மஸ்ரீ சர்மா அவர்களுக்கு, ஈழத்தில் விநாயகர் வழிபாடு பற்ரிய தங்கள் பின்னூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். பல புதிய செய்திகள் அதில் காணப்படுகின்றன. நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இயற்றியருளிய மானியம்பதி மருதடி விநாயகர் பதிகம் எம் பாராயணநூலாக இருந்து வருகின்றது.
    “திருவளரும் கல்விவரும் தீவினைக ளோடும்
    குருவருளும் வீடுங் கைகூடும் – பெருவளஞ்சேர்
    மானி மருதடியில் வந்தருளும் ஐந்துகரத்
    தானைமுகத் தானைநினைத் தால்”

    மானி மருதடி கற்பகப்பிள்ளையார் குறித்த அரிய செய்திகள் தாங்கள் அறிந்திருப்பின் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
    முத்துக்குமாரசுவாமி

  12. திருவிளையாடற் புராணத்தை நாம் ஏற்கிறோம். விநாயகருக்கும் முருகனுக்குமிடையிலான போட்டி விளையாட்டு அதில் இடம்பெறுகிறது.

    இந்தத் திருவிளையாடல் புராணம் இயற்றப்பட்ட காலத்தைப் பற்றியே தெளிவில்லாதவர்கள் (விநாயகர் வழிபாட்டுக் கேலியாளர்கள்), அவ்விளையாடல் நிகழ்ந்த காலத்தை எப்படி வரையறை செய்வார்கள் ?
    ஆங்கிலக் காலண்டர்க் கணக்கில் விநாயகர் பிறந்த நாள், ஸ்ரீ ராமர் பிறந்த நாள்… அவர்களுக்கு வயது… என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிற மகா மேதாவிகளின் அறிவாழத்தை எண்ணி எண்ணி வியப்பு வருகிறது.

    விநாயகருக்கு உருவம் சமைத்து வழிபட்டது எவர் காலத்திலிருந்து தொடங்கியிருந்தாலும் இருக்கட்டும். விநாயகர் என்கிற தத்துவம் தமிழர்களுக்குப் புதிதல்ல.

    இந்தக் கேலியாளர்கள் விநாயக வழிபாட்டை மட்டுமா கொச்சைப் படுத்த முயற்சி செய்கிறார்கள் ! சித்திரை மாத வருடப் பிறப்பு, முருகனின் கந்த சஷ்டி, வாமன மூர்த்தியின் திருவவதாரம், வாலி வதம், ஐயப்பனின் அவதாரம், தீபாவளி, கார்த்திகைத் திருநாள் (பிரத்தியேகமாகத் தமிழ் மண்ணுக்கே உரியது), வைகுண்ட ஏகாதசி, திருவாதிரைத் திருநாள், தைப் பூசம், பங்குனி உத்தரம்… என மூச்சு முட்ட நீட்டிக்கொண்டே போகலாம் இவர்கள் கேலிக் கயிறு திரித்து வம்பு செய்யும் விழாக்களையும் விரதங்களையும் பண்டிகைகளையும்.

    இவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது என்ன பயனைத் தரப் போகிறது ? என்னவோ கால நிர்ணயம் தெரிந்தால் உடனே இவர்கள் வெளிப்படையான ஆன்மீகவாதிகளாக ஆகப் போவதைப்போல… கடவுளுக்குக் கால நிர்ணயம் செய்ய முடியுமானால் அப்புறம் அவர் எப்படி எல்லாம் கடந்தவராக இருக்க முடியும் ?

    மொத்தத்தில் தூய ஆன்மீகமும் அதை நோக்கிய பயணமாக (ஒரு விதத்தில்) அமைந்துள்ள தூய நாத்திகமும் பகுத்தறிவு வழிகளே !

    ஆனால் போலித்தனங்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளின் எத்துப் பிதற்றல்களையும் என்ன கணக்கில் கொள்வது ? இவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பகுத்தறிவா என்ன ?

    வாதாபியாம்…வந்தாராம்…அதற்கு முன்னாள் தமிழர்களுக்கு கணபதியைத் தெரியாதாம்…இந்தக் ‘கருணை’ கீதை உபதேசத்தையும் கேட்க வேண்டிய கலிக் கொடுமை இது.

  13. திருவிளையாடற் புராணத்தை நாம் ஏற்கிறோம். விநாயகருக்கும் முருகனுக்குமிடையிலான போட்டி விளையாட்டு அதில் இடம்பெறுகிறது.

    இந்தத் திருவிளையாடல் புராணம் இயற்றப்பட்ட காலத்தைப் பற்றியே தெளிவில்லாதவர்கள் (விநாயகர் வழிபாட்டுக் கேலியாளர்கள்), அவ்விளையாடல் நிகழ்ந்த காலத்தை எப்படி வரையறை செய்வார்கள் ?
    ஆங்கிலக் காலண்டர்க் கணக்கில் விநாயகர் பிறந்த நாள், ஸ்ரீ ராமர் பிறந்த நாள்… அவர்களுக்கு வயது… என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிற மகா மேதாவிகளின் அறிவாழத்தை எண்ணி எண்ணி வியப்பு வருகிறது.

    விநாயகருக்கு உருவம் சமைத்து வழிபட்டது எவர் காலத்திலிருந்து தொடங்கியிருந்தாலும் இருக்கட்டும். விநாயகர் என்கிற தத்துவம் தமிழர்களுக்குப் புதிதல்ல.

    இந்தக் கேலியாளர்கள் விநாயக வழிபாட்டை மட்டுமா கொச்சைப் படுத்த முயற்சி செய்கிறார்கள் ! சித்திரை மாத வருடப் பிறப்பு, முருகனின் கந்த சஷ்டி, வாமன மூர்த்தியின் திருவவதாரம், வாலி வதம், ஐயப்பனின் அவதாரம், தீபாவளி, கார்த்திகைத் திருநாள் (பிரத்தியேகமாகத் தமிழ் மண்ணுக்கே உரியது), வைகுண்ட ஏகாதசி, திருவாதிரைத் திருநாள், தைப் பூசம், பங்குனி உத்தரம்… என மூச்சு முட்ட நீட்டிக்கொண்டே போகலாம் இவர்கள் கேலிக் கயிறு திரித்து வம்பு செய்யும் விழாக்களையும் விரதங்களையும் பண்டிகைகளையும்.

    இவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது என்ன பயனைத் தரப் போகிறது ? என்னவோ கால நிர்ணயம் தெரிந்தால் உடனே இவர்கள் வெளிப்படையான ஆன்மீகவாதிகளாக ஆகப் போவதைப்போல… கடவுளுக்குக் கால நிர்ணயம் செய்ய முடியுமானால் அப்புறம் அவர் எப்படி எல்லாம் கடந்தவராக இருக்க முடியும் ?

    மொத்தத்தில் தூய ஆன்மீகமும் அதை நோக்கிய பயணமாக (ஒரு விதத்தில்) அமைந்துள்ள தூய நாத்திகமும் பகுத்தறிவு வழிகளே !

    ஆனால் போலித்தனங்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளின் எத்துப் பிதற்றல்களையும் என்ன கணக்கில் கொள்வது ? இவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பகுத்தறிவா என்ன ?

    வாதாபியாம்…வந்தாராம்…அதற்கு முன்னால் தமிழர்களுக்கு கணபதியைத் தெரியாதாம்…இந்தக் ‘கருணை’ கீதை உபதேசத்தையும் கேட்க வேண்டிய கலிக் கொடுமை இது.

  14. @rishi

    u said correct,but eventhough there’s lot of hindu temples and tamil societies have helped the peoples who are in refugee camps in vavuniya,and please express your statements clear.because catholic churches are the people who are helped the tamil peoples with food and medical Aids,but catholics never forced the people to change religion to enjoy their helps.but the true face of the protestants are shown by the NRC people ,the hindu or other religion people not likely to send their helps through these people.the only help they have done is,converting the effected people into their religion with their fake statements,God will give you the rest,God is the only pacifier……there’s no physical helps given by those people ……!!!!!!!!!!!!!

  15. விநாயகர் வழிபாடும் புராணமும் சக்தி/குண்டலினி தத்துவத்தோடு வருவது. மற்றை புராணங்களும் பிள்ளையார் கதை என்பதும் முழுமையான கொச்சைகள். பாரத கடவுள் தத்துவத்திற்கு முற்றிலும்
    புறம்பானது. இந்த புராண கதைகள் இந்தியாவிற்கு வந்தேறு குடிகளான தம்மை ஆரியர் என்று கூரிகொண்டோரால் உருவாக்கப்பட்டது. இவர்களே “பிராமணம்” என்பதை வெறும் பூணூல் சடங்காக மாற்றிய “ஆரிய பிராமணத்தின்”/ தீண்டாமையின் விதைகள்.
    இப்பொழுது இந்த கலியுக சூத்திரனுகலாகிய பூணூல் சூத்திரம் அல்லாத சூத்திரனும் இந்த புராண புத்தகங்களை கிழித்து எறிந்துகொண்டு விவாதங்களில் ஈடுபடுகிறனர். இந்த பூணூல் சூத்திரனும் இவனால் பாதிக்கப்பட்ட “திராவிட” சூதிரனுகளும் அடித்து கொள்வதால் விளைவது ஒன்றும் இல்லை, ஆட்குறைப்பை தவிர.
    உண்மையான பாரத தத்துவம் அறிவாய், அறிவு உள்ளவனுக்கு தெளிவாய் உள்ளது. உணர்தவன் தேடி வருகிறான்……. அல்லாதவன் விலகி செல்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *