பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

short_stories_from_pakistan

பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது.

பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து மத அடைப்படையில் பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் என்றும் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. அவர்கள் கலாசாரமும் வாழ்நோக்கும் சரித்திரமும் வேறு. என்றுமே அவர்கள் ஹிந்துக்கள் ind_pak-migrationபெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம்- இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம்தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன்தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன்தான். அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம், அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?

நமக்கு தோப்பில் முகம்மது மீரானோ, ஜாகீர் ராஜாவோ, சல்மாவோ காட்டும் உலகம், ஏதோ வேற்று நாட்டவர் உலகம் அல்ல. வாஸ்தவம், அவர்கள் வாழ்க்கை நியதிகள் கட்டுப்படும் தர்மங்கள், அவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவை. எந்த சிறு பிரிவுகளுக்கும் இடையே இந்த வேறுபாடு காணப்படும்தான். ஆனால் அவை நமக்குப் பரிச்சயமானவை. பரிச்சயம் என்ற நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழமாக நமக்கு உணர்த்துபவை. அத்தகைய புரிதலிலிருந்து வேறுபட்டவை அல்ல, பாகிஸ்தானில் வாழும் சிந்திகளின் வாழ்க்கையோ பஞ்சாபிகளின் வாழ்க்கையோ. அதே போலத்தான் பங்களாதேஷில் வாழும் வங்க முஸ்லீம்களின் வாழ்க்கையும். அவை நமக்குப் பரிச்சயமானவை தான். சாதத் ஹஸன் மண்டோ இந்தியாவிலிருந்து கொண்டு எழுதுவதும் பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து எழுதுவதும் பின்னப்பட்டு விடுமா என்ன? பலூச்சிஸ்தானிலும் எல்லைப்புறப் பிரதேசங்களிலும் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வேண்டுமானால் நமக்குப் பரிச்சயமில்லாததாக இருக்கலாம்

.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் லாகூர் பெரிய திரைப்படக் கேந்திரமாக இருந்தது. அந்த இடத்தை பிரிவினைக்குப் பின் மும்பை பறித்துக் கொண்டது. நிகழ்ந்தது இடமாற்றம்தான். பம்பாய் ஹிந்திப் படங்கள் என்றால் பாகிஸ்தானில், ஒரு வெறிபிடித்த வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்தி பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷாருக் கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன. (ஒரு ஜோக் பரவலாக எந்த பாகிஸ்தானியும் சொல்வது, “மாதுரி தீக்ஷித்தைக் கொடுத்தால், கஷ்மீரை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்”) எந்த பாகிஸ்தானி அதிகாரியோ, மந்திரியோ ப்ரெசிடெண்டோ எவனானாலும் அவனது இந்தியாவுக்கு எதிரான பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான். அதோடு அவன் மிக எளிதாக ஆர்வத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இது ஒரு காட்சி. ஒரு தரத்து மக்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் என்றும் சொல்லவேண்டும். இது சாதாரண மக்களின் ரசனையையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்று முஸ்லீம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வேறுபட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின், நாட்டின், அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டெடுத்து வளர்க்கவும் விரும்பினார்கள். பாகிஸ்தான் 1947-இல் உருவானதாக, அறுபது வருடங்களே ஆன ஒரு புதிய நாடாக நமது சரித்திரம் சொல்லும். ஆனால் பாகிஸ்தானியர் தம் வரலாற்றை இஸ்லாம் தோற்றம் கொண்ட கணத்திலிருந்து தொடங்குவார்களா அல்லது முதல் இஸ்லாமியப் படையெடுப்பை தன் வரலாற்றுத் தொடக்கமாகக் கொள்வதா என்பதில்தான் அவர்களுக்குள் சர்ச்சை. படையெடுத்து தன் முன்னோர்களையும் நாட்டையும் நாசப்படுத்தியவர்களை, பலவந்தமாக மதம் மாற்றியவர்களை, தம் தேச ஸ்தாபகர்களாகக் கொள்ளும் விசித்திரம் அது. அவர்கள் தம்மை இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள்தாம், பின்னர் மதம் காரணமாகப் பிரிந்தவர்கள் என எண்ணுவதில்லை. அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே அவர்கள் தம்மைக் காண்கிறார்கள், அல்லது காண விரும்புகிறார்கள், காணத் தொடங்கியுள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.

அதிகார வர்க்கமும் அது சார்ந்த அறிவுஜீவிக் கூட்டமும் மதத் தலைமைகளும் விரும்புவதும் திட்டமிட்டுச் செயல்படுவதும்- ஆனால் சாதாரண மக்கள் தம் இயல்பான வாழ்க்கையை காண்பதும் நேர் எதிரானதாக உள்ளன. முதலில் சொன்னது லதா மங்கே‌ஷ்கரையும் ஹிந்தி சினிமாவையும் உள்ளே வர அனுமதிக்காது. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதக் கலைஞர்கள் பெரும்[பாலோர் முஸ்லீம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை. ஆனால் ஹிந்திப் படங்களையும் லதா மங்கேஷ்கரின் பாடல்களையும் தாங்கிய திருட்டு டிவிடிக்கள் லாகூரிலிருந்து பெஷாவர் வரை எல்லா பஜார்களிலும் தடையின்று எளிதாகக் கிடைக்கும். காபூலில் கூட கிடைத்து வந்தது இடையில் தடை செய்யப்பட்டு இப்போது மறுபடியும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ள இந்தஜார் ஹுஸேனுக்கு இந்தப் பிரச்சினைகள் முன்னின்றன. அதைப் பற்றியும் தன் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உருவான பிறகு, ஒரு புதிய தேசிய உணர்வு பிறக்க வேண்டும். அப்படி ஓர் உணர்வு இருப்பதாகச் சொல்லி, தானே தனியாகப் பிரிந்து செல்ல சண்டையிட்டனர். மேலும் பிரிவினைக்குப் பிறகு அதன் சரித்திரமும் அரசியல் சூழலும் தனியாகத் தான் உருவெடுக்கத் தொடங்கின. ஜனநாயகம் என்பது அவ்வப்போது பேருக்கு எட்டிப் பார்த்தாலும், பெரும்பாலும் இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் பாகிஸ்தானில் நிலவியது. உறவுகளும் மத்தியக் கிழக்கு நாடுகளோடு தான் விரும்பபட்டது.. மத உணர்வு ஓர் உச்சகட்ட தீவிரத்திற்குப் புகட்டப்பட்டது. எழுப்பப்பட்டது. ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாம்தரக் குடிகளாகி ஒதுக்கப்பட்டனர். கிறித்துவர்களும் அப்படியே. ஹிந்துக் கோயில்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. ஆனால் தக்ஷசீலம் இன்றும் ஒரு புராதன சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. தக்ஷசீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்தப் புராதன நகரம், நாலந்தா போல் ஒரு புராதனப் பல்கலைக் கழகத்துக்குப் பிரசித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. ஒருவேளை பாமியான் புத்தரை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்களின் வருகைக்குக் காத்திருக்கிறார்களோ என்னவோ.

இந்த மாதிரியான குழப்பமான ஊஞ்சலாட்டத்தில், யதார்த்தத்திற்கும் மத அதிகார அரசியலுக்கும் .இடையேயான இழுபறியில் எழுத்தாளர்கள் உலகம் என்னவாக இருந்திருக்கும்? இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும்? எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசிய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப்படும்? பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப காலகட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசிய உணர்வுகளின் எச்ச சொச்சங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி, பின்னர் எழும் எழுத்துகளை pakistanமாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசிய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துகளை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார், பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துகளே எழுதப்பட்டன என்றும் அதன்பின் விட்டு விட்டுத் தொடர்ந்த இராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துகள் சாத்தியமில்லாமல் போயின என்றும். காரணம் இராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாகச் சொல்லும் யதார்த்த வகை எழுத்துகள் எப்படி எழக்கூடும்?. யாருக்கு அந்தத் தைரியம் இருக்கும்? எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்து முறை கையாளப் பட்டது. ”குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது” என்கிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்த தொகுப்பாளர் இந்தஜார் ஹுச்ஸேன் சொல்கிறார். அதுவும் கண்டனங்களுக்கும் வரவேற்புக்கும் ஆளாகியது என்றும் சொல்கிறார். இருந்தாலும் தான் அனேக சிறந்த கதைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், பாகிஸ்தானின் 50 ஆண்டு கால சிறுகதை வளர்ச்சியை இது பிரதிபலிக்கும் என்றும் சொல்கிறார்.

இத்தொகுப்பில் பாகிஸ்தானில் பேசப்படும், உருது, பஞ்சாபி, சிந்தி, புஷ்டோ, சரைக்கி, பலூச்சி ஆகிய எல்லா மொழிகளிலிருந்தும் கதைகள் உள்ளன. மொத்தம் 32 கதைகளில், 23 உருது, 3 சிந்தி, 2 பஞ்சாபி, புஷ்டோ, சரைக்கி இரண்டிலும் ஒவ்வொன்று, பலூச்சியிலிருந்து இரண்டு. உருது மொழியில் எழுதியவர்கள் எந்தப் பிராந்தியத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம்.. அது எல்லோராலும் பேசப்படும், புரிந்து கொள்ளப்படும் அதிகார மொழியும் ஆகும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கிய எனக்கு இது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. இந்தஜார் ஹுஸேனும் சிறுகதை எழுதுபவர்தான். எனினும் தன்முனைப்போடு அவர் செயல்படவில்லை. ஆஸிஃப் ஃபரூக்கி என்பவருடன் கூட்டாகவே இத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

intizar-hussain

இந்தஜார் ஹுஸேனின் கதையையே எடுத்துக்கொள்வோமே. அவர் தந்தது இந்தக் கதையை தன் எழுத்தின் சிறந்த அடையாளமாக, பாகிஸ்தானின் இன்றைய தேச உணர்வுகளின் பிரநிதித்துவப் படுத்தும் ஒன்றாகத் தான் கருதியிருப்பார். படகு என்று அந்தக் கதையின் தலைப்பு.. அந்தக் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோவெல்லாமோ தன்னிஷ்டத்துக்குப் பயணம் செய்கிறது. பயணிகள். ஒயாது பெய்யும் மழை. எப்போது தம் பயணத்தைத் தொடங்கினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறார்கள். மழை பெய்யத் தொடங்காத அன்றுதான் கிளம்பியிருப்பார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அடுத்து கில்காமேஷும் தன் சக பயணிகளுடன் பேசுகிறான். உத்னாபிஷ்டமிடம் கடவுள் சொன்னாராம். ”நீ தப்ப விரும்பினால் வீட்டை இடி, படகைக் கட்டு” என்றாராம். “ஒவ்வொரு உயிரினத்திலிருந்து ஒன்றைப் படகில் ஏற்றிக்கொள், தப்பிச் செல்” என்றாராம். பின் லாமாக் வருகிறான். நோவா வருகிறான். அடுத்து “ஒரு பிரும்ம முகூர்த்தத்தில் தொட்டியில் ஒரு மீன் வளர்ந்து தொட்டியை விடப் பெரிதாகிறது. அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் அது ஆற்றையும் மீறி வளரவே அதை சமுத்திரத்தில் விடுகிறார் மனு. மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறைவன் ஒரு பிரளயம் வரப் போகிறதென்றும், அதிலிருந்து தப்ப “ஒரு படகைக் கட்டு. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒன்றாக படகில் ஏற்றித் தப்பித்துக்கொள்” என்றாராம். ஒரு பெரிய சர்ப்பம் தோன்ற, இந்தச் சர்ப்பத்தால் இந்தப் படகை மீசையோடு இறுக்கிக் கட்டு” என்று இறைவன் பணிக்க, அடுத்த பாராவில் ஹஸரத் நோவாவின் மனைவி அவனை நோக்கி வருகிறாள். அவள் முகத்தில் சாம்பல் துகள். கைகளில் கோதுமை மாவு…… இப்படி கதை போகிறது. “போதுமடா சாமீ”…. என்று கதறத்தான் தோன்றுகிறது. கஜினி முகம்மதுவிலிருந்து பாகிஸ்தான் வரலாற்றைத் தொடங்குகிறவர்கள் கற்பனையில் விஷ்ணுவும், மனுவும், தர்ப்பணமும், பிரும்ம முகூர்த்தமும் கில்காமேஷும் நோவாவும் வந்து தொந்திரவு செய்வது வேடிக்கைதான்.

இது போன்றுதான் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் நிறைந்துள்ளன. என் எளிய மூளைக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. நம்ம ஊர் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள், போஸ்ட் மாடர்னிஸ்டுகள், மந்திர யதார்த்தவாதிகளுக்கு புரியலாமோ என்னவோ. யதார்த்தம் மீறிய கற்பனை, கதை புனைவு என்பது நம் மரபில் உள்ளதுதான். பல நூற்றாண்டுகளாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. நமது புராணங்கள், பஞ்ச தந்திரக் கதைகள், நமது பழம் காவியங்கள், (பகுத்தறிவாளர்கள் கோஷமிடும் சிலப்பதிகாரத்தையும் சேர்த்து) விக்கிரமாதித்தன் கதைகள் என நிறைய உண்டு. அவற்றை நாம் சலிப்பில்லாது படிக்க முடியும். அவை யதார்த்தம் மீறிய ஓர் உலகை சிருஷ்டித்தாலும் அவற்றின் பேச்சிலும் சம்பவங்களிலும் நடப்பிலும் ஓர் அர்த்தம் இருக்கும்; தர்க்கம் இருக்கும்.

இராணுவ அடக்கு முறைகளை மீறி எழுத வந்தவர்கள் இப்படி கற்பனைகளில் ஆழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றால், இவை என்ன அர்த்தத்தில் இராணுவ அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, நமக்கு ரகசியமாக என்ன செய்தியைச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஜாலங்களே கதையாக உள்ளவை அனைத்தையும் நான் ஒதுக்கிவிடுகிறேன். மாதிரிக்கென ஒன்றைச் சொல்லியாயிற்று. உருது மொழியில்தான் இம்மாதிரியான கதைகள் நிரம்பத் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 503 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் படிப்பது ரொம்பவும் பொறுமையைச் சோதிக்கிற காரியமாகப் பட்டது. கடைசியில் 32 கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவை படித்தும் பாகிஸ்தான் பற்றி ஏதும் பிம்பமோ உணர்வோ எழவில்லை.

ஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. முதலில் “ஸதத் ஹஸன் மண்டோ“-வின் “ஜன்னலைத் திறங்கோ”. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். அவர்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். பின்னர் அம்ரித்ஸரில் வயல் வெளியில் பயந்து ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளுக்கு உணவும் ஆறுதலும் அளித்து லாரியில் எடுத்துச் செல்கிறார்கள். முகாமுக்குப் பக்கத்தில் ரயில் பாதைக்கருகில் ஒரு பெண் மூச்சற்றுக் கிடப்பதைப் பார்த்த சிலர் அவளை முகாமின் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். தன் மகளெனத் தெரிந்து பார்க்க, சிராஜ்ஜுதீன் அங்கு வர, டாக்டர் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் பார்க்க, அவள் விரல்கள் அசைய, நல்ல வேளை உயிருடன் இருக்கிறாள் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத்தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லீம்களையா?

பிரிவினைக்கு முன்னும் பின்னும், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் எழுதியவர் மண்டோ. அவர் யார்?

இந்தஜார் ஹுஸேன் மண்டோ பாகிஸ்தானுக்குப் போனபின் எழுதிய கதையிலிருந்துதான் பாகிஸ்தானிய கதை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையிலிருந்து மண்டோ எந்த வகைப்படுத்தலில் அகப்படுகிறார்?

 

பகவன் தாஸ் மேஸ்திரி என்று ஒரு கதை ஷௌக்கத் சித்திக் என்பவர் எழுதியது. யார் நிலத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது என்பது ஒரு கிராமத்துக் கலவரப் பிரசினை. கலவரம் வெட்டு குத்து என்று வளரும் ஒன்று. இரண்டு தரப்புகளும் மோதிக்கொள்ளும் போது பகவன் தாஸ் மேஸ்திரி எந்த அதிகாரமும் இல்லாத போதும் தன் எளிமையும் இல்லாமையுமே தன் தார்மீக பலமாக அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். இவர்கள் ஜீலம், சிந்து நதிக்கரையில் வாழும் நிலப் பிரபுக்கள் இல்லை. மலைப் பகுதிகளில் வாழும் இனக்குழு மக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய மனுஷர்; நீதிமன்றமாக இருப்பவர்; சர்தார் மஜாரி. அவர் எந்த வழக்கையும் தள்ளிப் போடும் சுபாவத்தவர். ஒரு பழைய வழக்கைத் தீர்த்தே ஆகவேண்டும். எத்தனை காலம்தான் தல்ளிப் போடுவது? இரண்டு தரப்பையும் அபராதம் கட்டச் சொல்லி, அதை, அந்த அபராதத்தை பகவான் தாஸ் மேஸ்திரிக்குக் கொடுக்கிறார். இதுவும் ஒரு மாதிரியான கட்டைப் பஞ்சாயத்துதான். அதில் சர்தார் மஜாரியிடம் பாதுகாப்பு பெறுவது, அங்கு அந்த மலைப் பிரதேச இனக் குழு முஸ்லீம்களிடையே தனித்து விடப்பட்ட பலமற்ற ஹிந்து மேஸ்திரி.

 

கதவு எண் 34, ஒரு சிந்தி கதை. சக்கர் அணைக்கட்டை பார்வையிட வந்த காவலாளி அங்கு ஒரு கதவில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்து ரொம்ப விசுவாசமாக, நல்ல பிரஜையாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறான். அங்குள்ள போலீஸும் நம்மூர் போலீஸ் மாதிரிதான். நீண்ட வாதத்திற்குப் பின், அதைத் தள்ளிவிட முடியாது, ஓர் ஆளை அனுப்பிப் பார்த்து வரச் சொல்கிறான். பார்த்தவன் அது கதவு 35-ல் தொங்குவதால் தன் ஆணைக்குட்பட்டதல்ல என்று இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுகிறான். அத்தோடு அந்தப் பிணத்தை அடுத்த கதவில் தொங்கவிடச் செய்து விடுகிறான். இதே கதை அடுத்த போலீஸ் ஸ்டேஷனிலும் நடக்கிறது. அதைப் பார்வையிடச் சென்றவன் அது கதவு என் 34-ல் தொங்குவதால் தன் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று சொல்லி அந்தப் பிணத்தை மறுபடியும் கதவு 34-லிருந்து 35-க்கு எடுத்துச் சென்று தொங்கவிடுகிறான். எந்த போலீஸும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத அந்தப் பிணம் கடைசியில் ஆற்றில் தூக்கி எறியப்பட்டு கேஸ் க்ளோஸ் செய்யப்படுகிறது விசாரணை இல்லாமலேயே. இவர்கள் நல்லவர்கள் என்று தோன்றுகிறது. நம்மூரில் புகார் சொல்லவந்தவன் கொலைகாரனாவான், எந்தக் கட்சிக்காரன் என்று விசாரித்து. அல்லது அவனிடம் பணம் பிடுங்கலாமா என்று பார்ப்பான்.

 

இஸ்மெய்ல் கௌஹரின், ‘அப்பா’ கதை புஷ்டோ கதை. பட்டாணிய இன மக்களைத்தான் நமக்குத் தெரியுமே. ஒரு நிலத் தகராறு. வெளியில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டதும் துப்பாக்கி எடுத்து வெளியே வருகிறார் அப்பா. மனைவி தடுக்கிறாள். இரண்டு மகன்களும் அழுகிறார்கள். வெளியேவந்த அப்பா தகராறு செய்த குல்மீரின் இரண்டு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் வெகுநாட்கள் கழித்து பிடிபட்டதும் அவர் கோபம் தணிந்து கிராமத்துப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு பணிவதாகச் சொல்கிறார். பஞ்சாயத்து பெரியவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரு லக்ஷம் பணம் நஷ்ட ஈடாகவும் அத்தோடு ஒரு பெண்ணையும், அப்பா .குல்மீருக்குக் கொடுக்கவேண்டும். கொடுப்பதற்கு அப்பாவிடம் இருக்கும் பெண் அவர் மனைவிதான். அப்பா தன் இரு மகன்களோடு தனித்து விடப்படுகிறார். குல்தீனுக்கு ஒரு லக்ஷம் பணமும் ஒரு பெண்ணும் கிடைக்கிறது. பஞ்சாயத்துத் தீர்ப்பை கிராமமே ஒத்துக்கொண்டு சமாதானமடைகிறது.

நீறு பூத்த நெருப்பு– சரைக்கி இலாகாவைச் சேர்ந்த கதை. இன்றைக்கான கதை. என்றைக்குமான கதை. தால் பாலைவனத்தில் தலைமறைவில் வாழும் ஓர் இரகசியப் புரட்சியாளர் கூட்டம். ஹூஸ்னி தலை மறைவாக வாழ் இடம் தேடி வருகிறார். கடைசியில் விசாரித்து வந்த இடம், இரண்டு பெண்கள் தனித்து வாழும் ஒரு குடிசை. ஒரு பெண் ஆசிரியை. இன்னொருத்தி இளையவள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவல் எடுத்துச் செல்பவள். கதை நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை. அவர்கள் அங்கு வாழும் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டு பெண்கள். ரகசிய வாழ்வில். பேப்பரில் ஹூஸ்னியின் பெயர் வந்து விடுகிறது. ஹூஸ்னி அந்த இடத்தை விட்டு மறுபடியும் வெளியேறுகிறார். வழியில் தான் வழி கேட்ட பக்கிரி ஹூஸ்னியைக் கடிந்து கொள்கிறார்.

 

இப்படி இன்னும் ஒரு சில கதைகள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானின் காட்சிகள் சிலவற்றை நமக்குச் சித்திரித்துக் காட்டுபவை.

ஆனால் மொத்தத்தில் 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயாஜாலங்கள். நாம் அவை எதுவும் சொல்கின்றனவா என்று தலையைச் சொரிந்து கொள்ளவேண்டியதுதான். அப்படி என்ன இந்த மாயா ஜாலங்கள் இராணுவ அரசை எதிர்த்து இரகசிய மொழியில் என்ன சொல்ல முயல்கின்றன, தெரியவில்லை.

pakistan-short-stories 
“பாகிஸ்தான் சிறுகதைகள்”
தொகுப்பு: இந்தஜார் ஹுஸேன்.
தமிழாக்கம்: மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்”

வெளியீடு
சாகித்ய அகாடமி,
குணா பில்டிங்ஸ்,
தேனாம்பேட்டை,
அண்ணா சாலை,
சென்னை-600 001

பக்கங்கள் 503
விலை ரூ 220

 

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

16 Replies to “பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]”

  1. //அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத்தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லீம்களையா?//

    இது யாரைப்ப்ற்றி சொன்னால் என்ன. மணம் கணமானது தான் மிச்சம்.

  2. ///அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் அது ஆற்றையும் மீறி வளரவே அதை சமுத்திரத்தில் விடுகிறார் மனு. மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறைவன் ஒரு பிரளயம் வரப் போகிறதென்றும், ///

    இந்தப் பகுதி நாராயணீயத்தில் பட்டத்ரியால் தசகம்-32ல் (மத்ஸ்ய அவதார:) சொல்லப்பட்டிருக்கிறது.. தர்ப்பணம் செய்துகொண்டிருந்த அந்த அரசன் திராவிட மன்னனான ஸத்தியவிரதன்; மிகப் பெரிதாகிவிட்ட மீனை சமுத்திரத்தில் விட்டபின், பிரளயத்தைக் காண ஆசைப்பட்ட அரசனுக்காக அதை 7 நாளில் உண்டாக்கி, ஹயக்ரீவன் என்னும் அசுரனை அழித்து அவனிடமிருந்து பிரும்மதேவன் பறிகொடுத்த வேதங்களைக் காக்க எடுத்த அவதாரம் என்பதாக இருக்கிறது… மீன் உருவில் இருக்கும் நாராயணனால் பின்னர் வைவஸ்தன் என்ற பெயர்கொண்டு மனு ஆகிறான். தோணியை இழுப்பது கதையில் இருப்பதுபோல் சர்ப்பம் அல்ல; விஷ்ணுவின் அவதாரமான அதே மத்ஸ்யமே.

    ஆங்காங்கே கொஞ்சம் புனைவு போலிருக்கிறது 🙂

  3. அன்புள்ள ஜெயஸ்ரி கோவிந்த ராஜன்,

    தங்கள் தகவலுக்கு நன்றி.

    இந்தக் கதை எந்த புராணந்த்திலிருந்து எடுக்கப் பட்டுள்ளது என்ற தகவல் என் போன்ற வர்களுக்கு அவ்வளவாக விஷய ஞானம் இல்லாதவர்களுக்கு அவசியம் தான். ஆனால் என் மனதில், பாகிஸ்தான் உருவான சரித்திரம் நமக்குத்தெரியும், ஒவ்வொரு ஹிந்துவும் ஒரு காஃபிர் அவர்களை ஒழித்துக்கட்டினால், ஜன்னத்தில் ம்ஸ்லின் துணி அனிந்து வாட் ௬௯ நிரப்பிய குடங்களோடு அரபு தேவதைகள் காத்திருப்பார்கள்என்று உருவேற்றப்பட்டிருக்கும் முஸ்லீம் உள்மனது நமக்குத் தெரியும் 50 வருட பகைமை நமக்குத் தெரியும் – இவ்வளவுக்குப் பிறகும் அந்த மனத்தில், ஹிந்து புராணம் உள்ளே நுழைந்து சமயம் பார்த்து இப்படி உலகறிய வெளியே குதித்து ஆட்டம் போடுவது, எவ்வாறு, எப்படி?, ஏன்? – இதற்கான பதிலைத் தான் நான் தமிழ் ஹிந்து அன்பர்களிடம் எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றியும் சற்று யோசியுங்களேன்.

  4. கதைப் புனைவுகளில் புராணம் எங்கே வந்தது என்று யோசித்துப் பார்த்த்தால் என்னதான் மதம் மாறி நின்றாலும் அவர்களது ஜீனில் இந்து வாசனை இருக்குமோ என்னவோ? நான் இருக்கும் திருவல்லிகேணியில் தெருவில் திரியும் மாடுகள் ஏராளம்! தினமும் ஒரு முஸ்லிம் பெண்மணி கருப்பு பர்தா அணிந்தவாறு அகத்திக் கீரைக்கட்டுகளைக் கொண்டுவந்து சில பசுமாடுகளுக்கு அளித்து வலம் வந்து வணங்கிசெல்வதை பார்த்திருக்கிறேன். ஆச்சர்யம் அடைந்தது நான் அல்ல என் மனைவி. என் பள்ளி நாட்களில் கடலூர் புதுபாளையத்தில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோயிலில் என்னுடன் படித்த அப்துல் கனி தவறாமல் வலம் வந்து நெற்றி நிறைய விபூதி குங்குமம் அணிந்து பள்ளிக்கு வருவான். எங்கள் தமிழாசிரியர் திரு சீதாராமன் அவனை “பிள்ளையார் கோயில் நவாப்”என்று சந்தோஷமாகக் கூறுவார். காலம் மாறும் என்று நம்புவோம். நமது கலாச்சாரத்தின் மாண்பினை உணர்ந்து மனம் திருந்த பாரத மாதா அருள் செய்யட்டும்.

  5. ஸ்ரீ வெங்கட் ஸ்வாமிநாதன் ஜி, நல்ல கருத்துத் தொகுப்பு.

    \\\\\\\\\\\\\ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதக் கலைஞர்கள் பெரும்[பாலோர் முஸ்லீம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை.\\\\\\\\\\\

    மேற்கண்ட கருத்திலிருந்து மாறுபடுகிறேன். பாகிஸ்தானிய சங்கீதத்தின் பெரும்பகுதி “ஸூஃபியானா கலாம்” “கவ்வாலி” “கஜல்” (Hinudsthani semi classical forms) போன்ற வடிவங்களால் நிரப்பப் பட்டாலும் “ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதமும்” (த்ருவ்பத், டும்ரி, கயால் போன்ற வடிவங்கள்) “ஹிந்துஸ்தானி” என்ற பெயர் அப்புறப்படுத்தலுடன் முகத்திறைக்குப்பின் உள்ளது. “கதக்” நாட்ய கலைஞர்களும் உண்டு. பாடல் மற்றும் நடனம் சேர்ந்த “முஷாயிரா” என்ற வடிவமும் ப்ரஸித்தம். இவையெல்லாம் உத்தர பாரதத்து ஹிந்துஸ்தானத்திலும் உண்டு.என் செய்வது “ஹிந்து” என்ற சொல் பாரத்திலிருந்து வெறுப்பின் பாற் பிளந்து பின்னர் அதே வெறுப்பால் பிளக்கப்பட்ட BAQI STHAN ல் சகிக்கவொண்ணாச்சொல். பாகிஸ்தானிய கலைஞர்கள் தில்லியில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் அளிக்கிறார்கள். கஜலில் ஜனாப் குலாம் அலி ஸூஃபியானா கலாமில் உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலிகான் மற்றும் அதாவுல்லாகான் மற்றும் பேகம் அபீதா பர்வீன் போன்றோர் ஹிந்துஸ்தானத்தில் மிக ப்ரபலம்.

    \\\\\\தக்ஷசீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்தப் புராதன நகரம், நாலந்தா போல் ஒரு புராதனப் பல்கலைக் கழகத்துக்குப் பிரசித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. \\\\\\

    பலோசிஸ்தானில் உள்ள ஹிங்கலஜ் மாதா மந்திர் (நானி கி மந்திர்) 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஸர்கார் பாதுகாக்கிறதோ இல்லையோ இன்றளவும் பாகிஸ்தானிய முஸல்மான்களுட்பட இந்த ஸ்தலத்தில் மதிப்பு வைத்திருக்கிறார்கள். கீழே சுட்டி பார்க்கவும்.

    https://en.wikipedia.org/wiki/Hinglaj

    \\\\\\\\\எவ்வளவுதான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்தி பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷாருக் கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன.\\\\\

    ஷம்ஷாத்பேகம், ஸுரையா, நூர்ஜஹான் (இவர் பட்டுவாடாவின் போது பாகிஸ்தான் ஏகியவர்), மொஹம்மது ரஃபி, லதா மங்கேஷ்கர், முகேஷ், கிஷோர்குமார் போன்றோர் இன்றளவும் பாகிஸ்தானில் விரும்பி கேழ்க்கப்படும் பாடகர்கள். ஹிந்துஸ்தானத்து பாலிவுட் திரைப்பட பாடல்களின் திருட்டு MP3 பாடல்களுக்காக பாகிஸ்தானில் பல இணையதளங்கள். நம்தேசத்தினரே இந்த தளங்களிலிருந்து பாடல்களை பதிவு செய்கிறார்கள்.

    \\\\\\\ பாகிஸ்தான் என்று முஸ்லீம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வேறுபட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின், நாட்டின், அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டெடுத்து வளர்க்கவும் விரும்பினார்கள்.\\\\\\\\\

    இன்றளவும் கானல் நீர். நீர் என்பதை நீள்ளு, ஜலம், பானி என்று சொல்வதால் அதன் ஸ்வரூபம் மாறுபடும் என்று நினைப்பது போல்தான்.

    ஹிந்துஸ்தானத்தில் பிறந்த பாகிஸ்தானிய அதிபர் முஷர்ரஃப், பாகிஸ்தானில் பிறந்த ஹிந்துஸ்தானின் ப்ரதமமந்த்ரி ஸ்ரீ மன்மோஹன்சிங்க் மற்றும் ப்ரதிபக்ஷத்தின் தலைவர் ஸ்ரீ லால்க்ருஷ்ண அத்வானி இவர்கள் சொல்லாமல் சொல்லும் செய்தி அகண்ட பாரதம் என்றும் அமரத்வமுள்ளது.

    \\\\\\\\\\ஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. \\\\\\\\\

    முதலில் “ஸதத் ஹஸன் மண்டோ“-வின் “ஜன்னலைத் திறங்கோ”. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். \\\\\\

    நம்மால் புரிந்து கொள்ளமுடிபவை என்பதாலோ? பின்னிட்டும் லங்காபுரியில் தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நமக்கு உறைப்பது போல் உத்தரபாரதத்து மக்களுக்கு உறைப்பதில்லை என்பது என் அனுமானம். பாரத பாகிஸ்தான் பிரிவினை இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தவறு என்று பாரதத்திலிருந்து பாகிஸ்தான் பெயர்ந்த முஸல்மான்களின் தலைவரான ஜனாப் அல்டாஃப் ஹுஸைன் (முட்டாஹிடா க்வாமி மூவ்மெண்ட்) சொல்லியுள்ளார். சமீபத்திய பாலிவுட் திரைப்படம் “கதர் ஏக் ப்ரேம் கதா” பாரத பாகிஸ்தான் பிரிவினையின் கோரமுகத்தையும் அதற்குப்பின் சம்பவங்களையும் காட்டுகிறது.

  6. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    இரண்டே இரண்டு கருத்துக்கள் மாத்திரம்.

    பாப், கஜல், சினிமா பாட்டுக்கள் பற்றி நான் பேசவில்லை. சாஸ்திரிய சங்கீதம் பாகிஸ்தானில் தடை. இங்கிருக்கும் சாஸ்திரிய கலைஞர்கள் பெரும்பாலோர் முஸ்லீம்கள். ஒரு சிலர் பாகிஸ்தான் பிறந்த வேகத்தில் பாகிஸ்தானுக்குப் போய் பின்னர் அங்கு ஆதரவில்லாது மனமுடைந்து இந்தியாவுக்குத் திரும்பினார்கள். எனக்க்த் தெரிந்து அங்கேயே இருந்தவர்கள் நஜாகத் அலி சலாமத் அலி சகோதரகள் தான். அவர்கள் அங்கேயே பிறந்தவர்கள்.

    அடுத்து அங்கு கஜல் கவ்வாலி சினிமா பாட்டுக்களுக்குதான் அங்கு வரவேற்பு. அதுவும் அங்கே இருக்கும் பாகிஸ்தானியர்களுக்கு மாத்திரம். இங்கிருந்து லதா மங்கேஷ்கருக்கோ, மற்ற கஜல் பாடகர்களுக்கொ இல்லை. இங்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் குலாம் அலியும், ஃபதே அலிகானும் பர்வீனும் வரலாம். இங்கிருந்து யாரும் அங்கு வரவேற்பு பெற்றதில்லை. பாலிவுட் கான்களைத் தவிர.

    அடுத்து கதக். கதக் அப்படி ஒன்றும் விசேஷமான கலை அல்ல. அதை கலையாக நான் பார்த்ததில்லை. நவாப் தர்பார்களில் அதற்கு வரவேற்பு இருந்தது. இப்போது பாகிஸ்தானில் கதக் ஆடும் ஒரே ஒரு பெண்மணி, ஏதோ அபூர்வ பிராணியைப் போல்தான்.

    இன்னும் தாலிபான்கள் அதிகாரம் பெறவில்லை. அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்தால் பிறகு நடப்பதைப் பார்க்கலாம். உடனே இங்கிருக்கும் முஸ்லீமக்ளுக்கும் வேகம் வரும். அப்போது அவர்கள் போடும் ஆட்டம் வேறாகத்தான் இருக்கும்.

  7. அன்புள்ள் ஸ்ரீ க்ருஷ்ண குமார்,
    ஸ்ரீ லால் கிஷன் அத்வானி, ஸ்ரீ மன்மோஹன் ஸிங் இருவரும் பிறந்த போது பாகிஸ்தான் என்கிற செயற்கை தேசம் உலக வரைபடத்திலேயே இல்லை. எனவே பிரிவினைக்கு முந்தைய ஸிந்துவில், பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபில் பிறந்தவ்ர்கள் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.

    மான்டோ, இஸ்மத் சுக்தாய் இருவரும் பிரிவினையைக் கடுமையாய் எதிர்த்தார்கள். சிறந்த சிறுகதை எழுத்தாளர்களான அவர்கள் நாற்பதுகளில் முப்பைத் திரையுலகில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்கள். இருவருமே முகமதிய மதவாதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர்கள். வழக்குகளை எதிர்கொண்டு அலைக்கழிந்தவர்கள்.
    மான்டோ பாகிஸ்தான் செல்வதாக இல்லை. மும்பையைப் பிரிந்து வாழ அவர் விரும்பியதில்லை. ஆனால் அப்போததைய பதட்டமான சூழலில் கோபமும் எரிச்சலும் பொங்கிய சமயத்தில் நீங்கள் எப்போது பாகிஸ்தானுக்குப்போகப் போகிறீர்கள் என்று நண்பர்களில் யாரோ கேட்டதால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்குப் போனார். அங்கும் அவரால் நிம்மதியாக வாழ இயலவில்லை. ஒரு லட்சம் ஹிந்துக்களும் ஒரு லட்சம் முகமதியரும் இறந்தால் இரண்டு லட்சம் மக்கள் இறந்ததாக எழுதுங்கள் என்று அவர் சொன்னார். அவர் எழுதிய டோபா டேக் ஸிங் பிரிவினையை அவர் பாணியில் கண்டனம் செய்து எழுதப்பட்ட அருமையான எள்ளல் சிறுகதை. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமதிய வெறியர்களே முகமதியப் பெண்களை சீரழித்த சம்பவங்களையும் அவர் சிறுகதைகளில் காணலாம்.

    இஸ்மத் சுக்தாய் என் மதம் முகமதியம் என்பதால் எனது பாரம்பரியமான ஹிந்து கலசாரத்தை என்னால் இழ்க்க இயலாது என்று பகிரங்கமாக அறிவித்தவர். ஸ்ரீ க்ருஷ்ணப் பிரியையான அவர் பெண்களின் மரியாதை காத்த, பெண்டிருக்கு சமூகத்தில் அந்தஸ்தை நிலைபெறச் செய்த பெண்களின் நண்பர் ஸ்ரீ க்ருஷ்ணர் என்று சொன்னவர். இறந்தபின் தனது சடலம் எரியூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியவர்.

    மான்டோ, சுக்தாய் இருவரும் மனமொத்த நண்பர்கள். துணிகரமான சிறுகதைகள் எழுதி அவர்களது மத போதகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர்கள்.
    மான்டோ மிர்ஜா காலிப் படத்திற்குத் திரைக் கதை, வசனம் எழுதியவர். அது ஒரு நல்ல படம். அதில் இடம் பெற்ற தலத் முஹமத் ஸாபின் பாடல்களை மறக்கவியலாது.
    -மலர்மன்னன்

  8. மதக்கண்ணாடி அனிந்து எதை பார்த்தாலும்
    அது உங்கள் மதத்தின் நிறத்திலேயே பார்பீர்கள்.
    பிரிவினையின் போது கொன்றவன் எவனாக இருந்தாலும்
    அது பாவம் என்ற நினைப்பு உங்களுக்கு வராமல் அவனிடம்
    கேட்பது…. இந்துவையா..?முஸ்லீமையா என கேட்பது வியப்பு?
    //அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே அவர்கள் //தம்மைக் காண்கிறார்கள்நீங்கள் சொல்லும் ஒரே இந்தியா எந்த கால கட்டத்தில் இருந்தது என்று சொல்ல முடியுமா?இந்தியாவில் ஒரே கலாசாரமென்று ஒன்று இல்லை….ஆனால் கலாசாரங்களுக்கு இடையில் சில ஓறுமைகளையே கானமுடியும்..அதுதான் பாகிச்தானிலும் உள்ளது..உடை,மொழி,இசை மற்றும் உணவு விஷயத்தில் என்ன வேறுபாடு கான முடியும்?.மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தால் மட்டுமே..கலையை கலையாக பார்க்கும் என்னம் வரும்

  9. \\மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தால் மட்டுமே..கலையை கலையாக பார்க்கும் என்னம் வரும்\\

    ஹிந்துக்கள் காலம் காலமாக அப்படி தான் வாழ்கிறார்கள். அதனால் தான் இங்கு இத்தனை மதங்களும், கலாச்சாரமும் வாழ்ந்து வருகிறது. சகிப்புதன்மையை பற்றி வேறுயாருக்காவது பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும்.

    ஹிந்து மதத்திற்கு சொந்தமான கலைகளை எடுத்து கண்டவன் கண்ட மாதிரி எழுதுவான் பேசுவான் அதை எல்லாம் கலை அது அனைவருகும் பொது என்று வாயை மூடி இருக்க வேண்டும் என்று நினைத்தால் மன்னிக்கவும், அதை ஒருக்காலும் செய்ய இயலாது.

    நமது பாரம்பரிய கலைகளை தாராளமாக கற்கலாம். ஆனால் அதில் ஆப்ரகாமிய சாக்கடையை கலப்பது என்பது ஏற்க இயலாத ஒன்று.

    \\உடை,மொழி,இசை மற்றும் உணவு விஷயத்தில் என்ன வேறுபாடு கான முடியும்\\

    இந்த கேள்வியை கேட்கும் முன்பு ஒரு முறை அரேபிய பண்பாட்டிற்கு மாறிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்று வாருங்கள் நன்றாக தெரியும்.

    அப்படி என்றால் பொது சிவில் சட்டத்திற்கு அவர்கள் தயாரா?

  10. //அப்படி என்றால் பொது சிவில் சட்டத்திற்கு அவர்கள் தயாரா?-கோமதி செட்டி //

    வாழ்க நீவிர், நீடூழி. உங்களுடைய இந்த்க் கேள்வி ஒன்றே போதும், இந்த வேதம் ஓதும் சாத்தான்களுக்கு.
    உங்களுடைய விழிப்புணர்வு ஏனையோருக்கும் விழிப்பூட்டுவதாக உள்ளது.

    மனிதம் பற்றி யாருக்கு யார் கற்றுத்தருவது? எதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா?
    பாகிஸ்தான் சிறுகதைகளின் தொகுப்பை இங்கு சாஹித்ய அகாடமியே வெளியிட, அது எமது தலை சிறந்த கலை-இலக்கியத் திறனாய்வாளர் ஸ்ரீ வெங்கட் சாமிநாதனால் விமர்சிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது. நிலைமை இவ்வாறிருக்க,
    சாத்தான் இங்கு வந்து வேதம் ஓதுகிறது!
    -மலர்மன்னன்

  11. மனிதம் மட்டும் என்று லேபில் ஒட்டிக்கொண்டு பொது மேடைக்கு வருகிறவர் தன முகத்தோடு வரவேண்டும். மனிதம் மட்டும் என்று வெற்று வார்த்தையை/ முகமுடியை அணிந்துகொண்டு அல்ல அது கோழைத் தனம். புதிய அறிமுகம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவேண்டும். பர்தா கோஷா கலா சாரத்தில் வாழும் ஜீவனோ ஒருவேளை.? அந்தக் கலாசாரம் பேணும் உலகத்திலேயே வாழட்டுமே. இங்கு என்ன வேலை?

  12. மனிதம் மட்டும் கூறுகிறது
    நீங்கள் சொல்லும் ஒரே இந்தியா எந்த கால கட்டத்தில் இருந்தது என்று சொல்ல முடியுமா?இந்தியாவில் ஒரே கலாசாரமென்று ஒன்று இல்லை….ஆனால் கலாசாரங்களுக்கு இடையில் சில ஓறுமைகளையே கானமுடியும்..அதுதான் பாகிச்தானிலும் உள்ளது.
    ஏன் அய்யா? இந்தியா எந்த காலக்கட்டத்தில் இருந்ததது எங்கிறீர்களே வேறு எந்த தேசம் அரசியல் ரீதியில் ஒன்றாக இன்று இருப்பது போல் இருந்தது. சொல்லுங்கள். மனிதம் மட்டும் மதமின்றி மொழியின்றி எங்கே இருக்கிறது. காட்டுங்கள். மத அடிப்படையில் மனிதர்கள் வேட்டையாடப்படும் போது மனிதம் எங்கே?
    எம்மைப்பொருத்தவரை இந்தியா என்னும் தேசம் என்றும் இருந்ததாதாக பண்பாட்டின் அடிப்ப்டையில் ஆன்மீக அடிப்படையில் நம்புகிறோம். உலக நாடுகள் எங்கேனும் தேடினும் கிடைக்காத ஒற்றுமை ஒருமைப்பாடு, நம்பிக்கை, வேறுபாடுகளை அங்கீகரிக்கும் தன்மை( சகிப்பு தன்மையன்று ஏற்கும் மதிக்கும் தன்மை) ஹிந்துக்களுக்கு பாரதீயர்களுக்கு இன்று மட்டுமல்ல பன்னெடுங்காலம் உண்டு. கன்யாகுமரித்தமிழன் காஸ்மீர ஹிந்துவின் திருமண சடங்குகளை புரிந்து கொள்ள முடியும்.

  13. \\\\\\\\ஸ்ரீ லால் கிஷன் அத்வானி, ஸ்ரீ மன்மோஹன் ஸிங் இருவரும் பிறந்த போது பாகிஸ்தான் என்கிற செயற்கை தேசம் உலக வரைபடத்திலேயே இல்லை. எனவே பிரிவினைக்கு முந்தைய ஸிந்துவில், பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபில் பிறந்தவ்ர்கள் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.\\\\\\\\\

    மிகமிகச்சரியான பார்வை மலர்மன்னன் மஹாசய்.

    \\\\\\\\\\இவ்வளவுக்குப் பிறகும் அந்த மனத்தில், ஹிந்து புராணம் உள்ளே நுழைந்து சமயம் பார்த்து இப்படி உலகறிய வெளியே குதித்து ஆட்டம் போடுவது, எவ்வாறு, எப்படி?, ஏன்? – இதற்கான பதிலைத் தான் நான் தமிழ் ஹிந்து அன்பர்களிடம் எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றியும் சற்று யோசியுங்களேன்.\\\\\\\\\

    ஸ்ரீ வெ.ஸ்வாமிநாதன்ஜி, இதே கோணத்திலிருந்து பதிலிறுக்கவே முனைந்தேன். தாமதத்திற்கு க்ஷமிக்கவும்.

    ஒவ்வொரு விஷயமாக.

    \\\\\\\பாப், கஜல், சினிமா பாட்டுக்கள் பற்றி நான் பேசவில்லை. சாஸ்திரிய சங்கீதம் பாகிஸ்தானில் தடை. \\\\

    எனது அடிப்படை கர்நாடக சங்கீத அறிவு (சொல்பம்) மற்றும் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் அவ்வப்போது கேழ்ப்பது என்பதின் அடிப்படையிலும் இணைய தளங்களில் சேகரித்த செய்திகள் வாயிலாகவும் தங்கள் கேள்விகளுக்கு பதிலிறுக்க முனைகிறேன்.

    ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்திற்கு எனதறிமுகம் காலஞ்சென்ற பண்டிட் பீம்ஸேன் ஜோஷி அவர்களது பாடல்களே. அதுவும் பெரும்பாலும் தாசரபதகளு எனும் கன்னட அஷ்ட தாஸர்களது க்ருதிகள் மற்றும் மஹாராஷ்ட்ர அபங்கங்கள். மிக அழகான கர்நாடக ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் சங்கமம் என்று சொல்வேன். பின் பலரது வாய்ப்பாட்டு மற்றும் வாத்ய இசை. ஸ்ரீமதி கங்குபாய் ஹங்கல், பண்டிட் மல்லிகார்ஜுன் மன்ஸுர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் மற்றும் அம்ஜத் அலி கான் குறிப்பிட வேண்டியவர்கள்.

    கர்நாடக சங்கீதம் போலன்றி ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்திற்கு பல வடிவங்கள். த்ருவ்பத், தமார், கயால், டும்ரி, டப்பா என (இதில் கஜல் காயகியும் சேர்த்தியே). எனக்கு தெரிந்தவரை ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்தில் மிக புராதனமாக கருதப்படுவது த்ருவ்பத் (த்ருபத்).

    கண்ணனுடன் கண்ணனுக்காகவே ப்ருந்தாவனத்தில் வாழ்ந்த ஸ்வாமி ஹரிதாஸ் அவர்கள் இந்த த்ருவ்பத பரம்பரையை சார்ந்த மூத்த கலைஞராக சொல்லப்படுகிறார். கண்ணனது அர்ச்சா விக்ரஹமான “பாங்கே பிஹாரி” இவருக்கு ராஸலீலை நடந்த ஸ்தலமான ப்ருந்தாவனத்து நிதுவனத்தில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அவரது சிஷ்யர்களான மியா தான்ஸேன் மற்றும் பைஜு பாவரா போன்றோரும் இந்த பரம்பரையில் அறியப்படுகின்றனர்.

    ஆனால் மிகப்ரபலமான வடிவம் பரம்பராகதமாய் ஹிந்து மற்றும் முஸல்மான் குருபரம்பரைகளால் பயிற்றுவிக்கப்படும் கயால் காயகி(khyal / khayal gayaki). “பரம்பராகத” என்ற சொல்லுக்கு ஸமானாந்தர பதமான “கரானா” (gharana)என்ற சொல் மூலம் அறியப்படுகிறது.

    ஆக்ரா கரானா, ஜெய்பூர் கரானா, க்வாலியர் கரானா, கிரானா கரானா, படியாலா கரானா, ராம்பூர் கரானா மேவாடி (ராஜஸ்தான் ஹரியாணாவுக்கிடைப்பட்ட பகுதி) கரானா என பல பரம்பரைகள். ஸ்ரீ பீம்ஸேன் ஜோஷி அவர்கள் கிரானா கரானாவைச்சார்ந்த பாடகர்.

    இசைக்காக பாகிஸ்தானில் பல இணையதளங்கள். ஹிந்தி திருட்டு திரைப்பட பாடல்களுக்கான தளங்கள் மிக ப்ரசித்தம். விட்டலாச்சாரியா படம் போல baqi sthan என்ற செயற்கை தேசம் ஒரு ராக்ஷசனாகவே ஆனாலும் அவனது உயிர்க்கூடு ஹிந்துஸ்தானமே. திருடியாவது ஹிந்தித் திரைப்பட பாடல்கள் கேழ்க்கவேணும் என்பதான அவர்களது அலாதி ஆசையை என் சொல்வது!!!! ஹாய் ரப்பா (கடவுளே)!!! தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடுகின்றதன்றோ? திரை இசை பற்றிய எனது உத்தரம் இந்த செய்தியைச்சார்ந்தே. ஒரு வேளை தெளிவாகச் சொல்லாமலிருந்திருக்கலாம்.

    தரமான சங்கீதத்திற்கான தளம் சதாரங்க். உஸ்தாத் ரோஷன் அப்பாஸ் அவர்களின் பேட்டி கீழ்க்கண்ட சுட்டியில் வாசிக்கவும்.

    https://www.sadarang.com/roshan_abbas.htm

    நான் முன்னம் சொன்னது போல் மிகக் கவனமாக ஹிந்துஸ்தானி என்ற பதம் தவிர்த்தே பேட்டி முழுதும். தனது க்வாலியர் கரானா பாரம்பர்யம் பற்றி பேசுகிறார். சரோத் வாத்ய கலைஞர் ஸ்ரீ அம்ஜத் அலிகான் மற்றும் அவரது புதல்வர்கள் அமான் அலிகான் மற்றும் அயான் அலி கான் இந்த கரானாவைச்சேர்ந்தவர்கள். இசை நுணுக்கங்கள் பற்றி அவர் சொல்வது சரியாக புரியவில்லை. மற்ற விஷயங்கள் தங்களது கேள்விகளுக்கு பதில் தரும். baqi sthani pop சங்கீதத்தை paap சங்கீதம் என்று அவர் சொல்வதில் கூட ஒரு நேர்த்தி மற்றும் ஹிந்துஸ்தானத்து அலகீடு. ரோஜா புஷ்பத்தை குலாப் (gulab) என்று சொல்வதால் மணம் மாறாதன்றோ. ஆம் baqi sthanல் சாஸ்த்ரீய சங்கீதத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ச்ரமமே. ஆனாலும் கொண்டுசெல்லப்படுகிறது. அதன் வித்து அகண்ட பாரதம் என்பது அசைக்க முடியாத ஸத்யம்.

    தமிழகத்து ஜெயா விஜய் தொலைக்காட்சிகள் போல் இங்கு உத்தரபாரதத்தில் zee tv ல் நடாத்தப்பெறும் சங்கீதப்போட்டிகளில் baqi sthan பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள். கயால் காயகி மற்றும் ஸூஃபியானா கலாம் பின்னணி உள்ள தரமான பாடகர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து பேசுவார்கள். பின்னும் ஹிந்துஸ்தானத்து வடவ்ருக்ஷத்தின் வேர் ஸர்ஹத்பாரில் (எல்லையின் அப்புறம்) த்ருடமாக இருப்பதும் இளந்தலைமுறையினர் உயர்ந்த சங்கீதத்தில் ஈடுபடுவதும் மன நிறைவையே தருகிறது.

    \\\\\\\\\அடுத்து அங்கு கஜல் கவ்வாலி சினிமா பாட்டுக்களுக்குதான் அங்கு வரவேற்பு. அதுவும் அங்கே இருக்கும் பாகிஸ்தானியர்களுக்கு மாத்திரம். இங்கிருந்து லதா மங்கேஷ்கருக்கோ, மற்ற கஜல் பாடகர்களுக்கொ இல்லை.\\\\\\\\\

    கஜல் காயகியை தாங்கள் சாஸ்த்ரீய சங்கீதத்திலிருந்து பிரித்தது ஏன் தெரியவில்லை. கஜல் மெல்லிசை நோக்கி பயணிக்கிறது என்பது சரியாக இருக்கலாம். காலஞ்சென்ற பேகம் அக்தர் போன்றோரது கஜல் காயகி மற்ற சாஸ்த்ரீய வடிவங்களுக்கு அணுக்கமாகத்தான் தெரிகிறது. கவ்வாலி திரைப்படங்களிலும் உள்ளது ஆனால் அது முழுதுமாக திரைஇசை அல்லவே. மற்றபடி ஹிந்துஸ்தானியர் ஸர்ஹத்பார் (எல்லையின் அப்புறம்) சென்று நிகழ்ச்சி நடாத்தியுள்ளனரா? பார்ப்போம்.

    ஸ்ரீ கஜல் ஸ்ரீநிவாஸ் அவர்கள் திருப்பதியில் கஜல் சங்கீதம் திருமலையானுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
    கீழே சுட்டி பார்க்கவும்.
    http://www.youtube.com/watch?v=dIj16w947q0

    ந்ருத்யம் பற்றி நான் வாசித்ததை அடுத்த உத்தரத்தில் பகிர்கிறேன்.

  14. நமது பொதிகை தொலைக்காட்சியில் எல்லாமே சங்கீதம் தான் என்று ஒரு நிகழ்ச்சி. ஸ்ரீமதி அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீராம் பரசுராம் அவர்களும் இணந்து வழங்கும் நிகழ்ச்சி. இது போல் DD Bharathi தொலைக்காட்சியில் “மௌஸிகி ஏக் கோஜ்” என்ற நிகழ்ச்சி. தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ராகம் – ஹிந்தோளம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணம்; அதில் அமைந்த ஒரு கர்நாடக பாடல்; திரை இசைப்பாடல்; ஒரு ஹிந்துஸ்தானி பாடல் என அந்த ராகத்தை மனதிலிறுத்தும் படி விளக்கம். இதே போன்ற DD Bharathi நிகழ்ச்சியில் மால்கௌன்ஸ் என்று ஒரு ராகம் எடுத்துக்கொண்டு அந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணம், ஒரு ஆலாப் (ஆலாபனை), ஒரு திரை இசைப்பாடல், ஒரு கஜல், ஒரு பஜன் என விளக்கம். சொல்ல வரும் விஷயம் உத்தர பாரதமோ தக்ஷிண பாரதமோ கலை நுட்பங்களில் ஸாம்யதை. மேலும் கஜல் வடிவம் சாஸ்த்ரீய சங்கீதத்தில் அடங்கும் என்ற விஷயம்.

    ஸ்ரீ பீம்ஸேன் ஜோஷி அவர்களின் “பாக்யதா லக்ஷ்மி பாரம்மா” மற்றும் “மத்வாந்தர்கத வேத வ்யாஸ” போன்ற ஹிந்துஸ்தானி இசையிலமைந்த பாடல்கள் அவசியம் கேளுங்கள். மிக தெய்வீக மயமான குரல். மனதுக்கு அமைதி தரும் இசை. கர்நாடக சங்கீத ஸாஹித்யம் ஹிந்துஸ்தானி இசையில். அழகான சங்கமம்.

    \\\\\\\\\\அடுத்து கதக். கதக் அப்படி ஒன்றும் விசேஷமான கலை அல்ல. அதை கலையாக நான் பார்த்ததில்லை. நவாப் தர்பார்களில் அதற்கு வரவேற்பு இருந்தது. இப்போது பாகிஸ்தானில் கதக் ஆடும் ஒரே ஒரு பெண்மணி, ஏதோ அபூர்வ பிராணியைப் போல்தான்.\\\\\\\

    ஐயன்மீர், க்ஷமிக்கவும். கருத்திலிருந்து மாறுபடுகிறேன். எப்படி பரத நாட்யம், குச்சுபுடி, கதகளி, மோஹினியாட்டம் போன்றவை தக்ஷிண பாரதத்து செவ்வியல் நடனங்களோ அதுபோன்றே கதக், ஒடிஸி மற்றும் மணிபுரி ந்ருத்ய வடிவங்கள் செவ்வியல் நடனங்களே என்பதென் புரிதல். தவறாக இருந்தால் திருத்தவும்.

    பாகிஸ்தானில் இதன் பதிவுகள் பார்ப்போம்.

    கீழே கண்ட சுட்டியை வாசிக்கவும்.

    https://www.jazbah.org/tehreemam.php

    தையல் தெஹ்ரிமா மீடி அவர்களின் கதக் பின்னணி சம்பந்தமான பேட்டி. உஸ்தாத் ரோஷன் அப்பாஸ் அவர்களது நுணுக்கங்கள் நிறைந்த கறாரான த்வனியிலான பேட்டிக்கு நேர் மாறானது. அதுவும் மிக பரிச்ரமப்பட்டு பரத நாட்யத்திற்கு பாரதம் சம்பந்தமில்லாதது என அவர் கொடுக்கும் வ்யாக்யானம் ஏற்புடையதாய் இல்லை. அதையும் மீறி பேட்டியில் அவரது தாயார் அபின்னமான ஹிந்துஸ்தானத்தில் தில்லி மற்றும் மதராஸ் கலாக்ஷேத்ராவில் நாட்டியம் கற்றது போன்றவை இழையோடும் முக்யமான செய்தி ஸர்ஹத்பாரில் நமது ந்ருத்யத்தின் தாக்கம். பேட்டியின் இடையே அவர் “அரங்கேற்றம்” என்ற தமிழ் பதத்தை குறிப்பிடுவதையும் காணவும்.

    இன்னொரு செய்தி. baqi sthan ஆண்கள் என்றால் சராசரியாக மதவெறி பிடித்த முஸல்மான் என்றும் கலைக்கும் அவனுக்கும் தூரம் என எண்ணத்தோணலாம். குறிப்பாக நாட்டியம். முஸல்மான் நாடுகளில் ஆண்களும் பெண்களும் குழந்தை பெறும் யந்த்ரமாகவே நோக்கப்படுகிறார்கள் பொதுவில். இதை மீறி கதக் ந்ருத்யம் கற்ற ஒரு நபர் பற்றிய செய்தி. கீழ்க்கண்ட சுட்டியில்

    https://www.artspak.com/UmairKathak.htm

    முஹம்மத் உமைர் ஆரிஃப் என்ற கதக் ந்ருத்ய கலைஞருக்கான இணைய தளம். கதக் ந்ருத்யம் தக்ஷசீலத்தில் (taxila) துவங்கியது என்கிறார். திரும்பவும் ஹிந்து என்ற பதம் மிகக் கவனமாக கையாளாது ஆரிய கடவுளர்களைப் பற்றியும் நீதிக்கதைகளைப்பற்றியும் கோவில்களில் (அந்த ப்ராந்தியத்தில்) ஆடப்பெற்ற ந்ருத்யம் என்பதை சொல்கிறார். பின் ஆங்கே இது அவர்கள் பாணிக்கு மாறுதல்கள் செய்யப்பட்டமை. விஷயம் ஹிந்துஸ்தானத்து கலாசார வேர்.

    கதக் ந்ருத்யமாடும் ஒரு baqi sthani ஹிந்துப்பெண்மணி பற்றி “மிரர்” இதழில் படித்ததாய் ஞாபகம். தேடினேன். குறிப்புகள் கிட்டவில்லை.

    இதுவெல்லாம் ஒரு புறம். ஒரு சராசரி பாகிஸ்தானி ந்ருத்யம் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை பாருங்கள். கீழே சுட்டியில்

    https://www.paklinks.com/gs/culture-literature-and-linguistics/151438-kathak-dance-and-pakistan.html

    ஒரு சராசரி baqi sthani கலைகளின்பால் காட்டும் வெறுப்பும் அதற்கு பதிலில் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் விஜயத்தின் போது நிகழ்த்தப்பட்ட டாக்டர் உமாஷர்மாவின் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்த பதில்கள்.

    தங்கள் கேள்வியின் வ்யாஜத்தில் ஸர்ஹத்பார் பற்றி படிக்கநேர்ந்தது மகிழ்ச்சியே.

    \\\\\\\\இன்னும் தாலிபான்கள் அதிகாரம் பெறவில்லை. அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்தால் பிறகு நடப்பதைப் பார்க்கலாம். உடனே இங்கிருக்கும் முஸ்லீமக்ளுக்கும் வேகம் வரும். அப்போது அவர்கள் போடும் ஆட்டம் வேறாகத்தான் இருக்கும்.\\\\\\\\\\

    மேற்கண்ட கூற்றில் அனுமானம் ஆழமான அனுபவத்திலானது. ஆனால் என் உள்மனம் சொல்கிறது, ஹிந்துஸ்தானத்து கலாசாரம் அழிவில்லாதது. ஆப்ரஹாமிய மதவெறியர்களால் அழிக்க முனையப்பட்டாலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *