எழுமின் விழிமின் – 6

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.


<< முந்தைய பகுதி 

தொடர்ச்சி..

சமயமே பாரதத்தின் ஆன்மா!

ஒவ்வொரு ராஷ்டிரமும் நிறைவேற்ற வேண்டிய ஒர் விதிக்கடன் உள்ளது. வாங்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. பூர்த்தி செய்ய வேண்டிய தெய்வீகப் பணியொன்று உள்ளது. ஆகவே ஆரம்பமுதலே நமது சொந்த இனத்தின் தெய்வீகப் பணியை, அது நிறைவேற்ற வேண்டிய விதிக்கடனை, உலக நாடுகளின் அணி வகுப்பில் அமைந்து இருக்க வேண்டிய இடத்தை, எல்லா இனங்களும் இணைந்து எழுப்பும் இன்னிசையில் சேர்க்க வேண்டிய சுருதியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஹிந்துக்கள்:

நாம் ஹிந்துக்களாவோம். ஹிந்து என்ற சொல்லைத் தப்பான அர்த்தத்தில் நான் பயன் படுத்த வில்லை. அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருளுண்டு என நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. பழங்காலத்தில் அச்சொல் சிந்துவுக்கு மறுபுறம் வசிப்பவர்கள் என்று மட்டும் பொருள்பட்டது. இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும் பெயரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஹிந்து என்ற பெயர் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆத்மீகத் தொடர்புடைய அனைத்தையும் குறிக்கும் சொல்லாக விளங்குமா அல்லது நிந்தனைச் சொல்லாகச் சுக்குண்டவர்களை, உதவாக்கரைகளை, பாவிகளைக் குறிப்பதாக விளங்குமா என்பது நம்மைப் பொறுத்த விஷயமாகும். தற்பொழுது “ஹிந்து” என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதானால் கவலைப்பட வேண்டாம். எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும், இதை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க நமது செயல்மூலம் முற்படுவோம்.

என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப்படாமலிருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று. உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையர்களின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும், வீர நம்பிக்கையையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது. பெரியோர்களான நமது முன்னோர் களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது.

தொன்மைப் புகழ் வாய்ந்த அந்த ஆசிரியர்களின் புதல்வர்களே!

இறைவனருளால் உங்களுக்கும் அதே பெருமிதம் உண்டாகட்டும். உங்களது முன்னோர்களிடம் இருந்த அந்த நம்பிக்கை உங்கள் உதிரத்தில் கலக்கட்டும். அது உங்கள் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத பகுதியாக விளங்கட்டும். அது உலகை உய்விக்கத் தொண்டு புரியும்படி உங்களைத் தூண்டட்டும்.

ஒவ்வொரு ராஷ்டிரமும் நிறைவேற்ற வேண்டிய விதிக்கடன் ஒன்று உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிச்சிறப்புத் தன்மை இருப்பது போல ஒவ்வொரு ராஷ்டிரத்துக்கும் ஒரு தனிச்சிறப்புத் தன்மை உள்ளது. ஒவ்வொரு மனிதனும் பிற மனிதரிலிருந்து சில குறிப்பான விஷயங்களில் அவனுக்கே உரித்தான சில சிறப்புக் குணங்களில் வேறுபட்டுத் தனியாக உள்ளது போல் ஓர் இனமும் பிற இனத்திலிருந்து சில குறிப்பான குண விசேஷங்களில் வேறுபட்டுள்ளது. இயற்கையின் ஏற்பாட்டின்படி ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டியது அவன் விதிக்கடனாகும். அவனது முந்தைய கர்மாவின்படி அவனுக்கு ஒரு குறிப்பிட்ட பாதை வகுக்கப்பட்டிருக்கிறது. அது போலவேதான் தேசங்களின் நிலையும். ஒவ்வொரு தேசமும் பூர்த்தி செய்ய வேண்டிய விதிக்கடன் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு ராஷ்டிரமும் ஆற்றி முடிக்க வேண்டிய தெய்வீகப் பணியொன்று இருக்கிறது. ஆகவே ஆரம்பம் முதலே நமது சொந்த இனத்தில் தெய்வீகப் பணியை, அது நிறைவேற்ற வேண்டிய விதிக்கடனை, உலக நாடுகளின் ஆணிவகுப்பில் அமைந்திருக்க வேண்டிய இடத்தை எல்லா இனங்களும் இணைந்து எழும்பும் இன்னிசையில் சேர்க்க வேண்டிய சுருதியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஷ்டிரத்தின் ஆன்மா:

நமது நாட்டின் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதையொன்று உண்டு. சிலவகைச் சர்ப்பங்களின் தலையில் மாணிக்கம் இருந்தனவாம். ஒருவன் அந்தச் சர்பத்தை என்ன செய்தாலும் மாணிக்கம் தலையில் இருக்கும் வரை கொல்ல முடியாது என்று கேட்டிருக்கிறோம். அரக்கர்களைப் பற்றிக் கதை கேட்டிருக்கிறோம். அவர்களது ஆத்மாவை, குறிப்பிட்ட சில சிறு பறவைகளில் வைத்திருந்தார்களாம். அந்தப் பறவை பத்திரமாக இருக்கிற வரையில் அந்த அரக்கனைக் கொல்ல உலகத்தில் எந்த விதமான சக்தியினாலும் இயலாதாம். அவர்களைத் துண்டு துண்டாகச் சிதைத்தாலும் இஷ்டப்படி என்ன செய்தாலும் அவ்வரக்கர்கள் சாகமாட்டார்களாம். அது போலத்தான் தேசங்களும். ஒரு நாட்டின் ஜீவன் ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியில் உறைந்துள்ளது. அதில் தான் அந்த ராஷ்டிடத்தின் ‘ராஷ்டிரத்வம்’ (தேசியம்) அமைந்துள்ளது. அதைத் தொடாத வரை அந்த ராஷ்டிரம் இறவாது.

மீண்டும் மற்றொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு தேசத்தின் தேசீயக் குறிக்கோளுடன் தொடர்பில்லாத சில உரிமைகளை இழந்தால் அந்த தேசம் பிரமாதமாக முணுமுணுக்காது. அத்தகையை எல்லா உரிமைகளையும் பிடுங்கினாலும் சரி, அது குமுறாது. ஆனால் அதன் தேசீய வாழ்கை எதன் மீது உறைகிறதோ, அதனை மெல்லத் தாக்கினாலும் கூட, அக்கணமே அபார சக்தியுடன் அது எதிர்த்துத் தாக்குகிறது.

பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் குணப்பண்புகள்:

உதாரணமாக உயிருடன் வாழும் மூன்று தேசங்களை எடுத்துக் கொள்வோம். அவற்றின் வரலாறு ஓரளவு உங்களுக்குத் தெரியும். அதாவது பிரான்ஸ், இங்கிலாந்து, ஹிந்துதேசம். அரசியல் சுதந்திரம் பிரெஞ்சுக் குணப்பண்பின் முதுகெலும்பாகும். பிரெஞ்சுக் குடிமக்கள் எல்லாவிதமான கொடுமைகளையும் அமைதியாகச் சகிப்பார்கள். வரிச்சுமையை ஏற்றி வையுங்கள். அவற்றுக்கு விரோதமாகச் சிறிதும் குரலெழுப்ப மாட்டார்கள். நாடு முழுவதையும் ராணுவத்தில் சேர வற்புறுத்தினாலும் ஒரு போதும் குறைகூற மாட்டார்கள். ஆனால் யாராவது அரசியல் சுதந்திரத்தின் மீது கைவைத்தால் நாடு முழுவதும் ஒரே மனிதனைப் போலெழுந்து வெறி பிடித்தாற்போல் எதிர்த்துத் தாக்குவர். அவர் கூறுவர்: “எந்த ஒரு தனி மனிதனும் எங்கள் மீது அதிகாரம் செலுத்த அனுமதியோம். படித்தவனோ பாமரனோ, பணக்காரனோ, ஏழையோ, உயர்குடிப் பிறந்தவனோ, தாழ்ந்த மக்களைச் சார்ந்தவனோ யாராயினும் சரி, எங்கள் சமூகத்தைச் சுதந்திரமாக வழி நடத்துவதில், எங்கள் நாட்டு ஆட்சியில் எங்களனைவருக்கும் சமமான பங்குள்ளது” என்று. இதுதான் பிரெஞ்சு நாட்டினரின் குணப்பண்பினுடைய மூலக் கொள்கையாகும். இந்தச் சுதந்திரத்தில் குறுக்கிடுகிறவன் அவதிப்பட்டே தீரவேண்டும்.

ஆங்கிலேயரின் குணப்பண்பில், வியாபாரியின் வியாபாரக் கொள்கையான “கொடுத்து, வாங்குதல்” முக்கியமாக இயற்கையாகவே பொதிந்துள்ளது. ஆங்கிலேயருக்கு நேர்மை உரிமைகளைச் சமமாகப்பங்கிடுதல் என்பன முக்கியமான நாட்டமாகும். ஆங்கிலேயன், மன்னனுக்கும் பிரபுக்களின் உரிமைகள் வணக்கத்துடன் கீழ்படிகிறான். ஆனால் தனது பையிலிருந்து ஒரு சல்லிகாசாவது கொடுக்க வேண்டுமென்றால் அதர்கான கணக்கை அவன் கேட்டே தீர்ப்பான். மன்னர் இருக்கிறார். அதெல்லாம் சரிதான். அவருக்குக் கீழ்ப்படியவும் மரியாதை செலுத்தவும் சித்தமாக இருக்கிறான். ஆனால் அரசன் பணம் கேட்டால் ஆங்கிலேயன் சொல்வான், “சரிதான், முதலாவதாக, அது எதற்காகத் தேவைப்படுகிறது என்பதை எனக்குப் புரிய வையுங்கள்; அதனால் என்ன நன்மை வரும்; அடுத்தபடியாக, அது எப்படிச் செலவிடப்படும் என்ற விஷயத்தில் எனது அபிப்பிராயத்துக்கும் இடமிருக்க வேண்டும்.அதன் பிறகே நான் கொடுப்பேன்” என்பான். மன்னர் ஒரு தடவை ஆங்கில மக்களிடமிருந்துபலவந்தமாகப் பணம் பறிக்க முயன்ற போது ஒரு பெரிய புரட்சி எழுந்து விட்டது. அரசனையே கொன்று விட்டார்கள்.

ஹிந்துவின் குணப்பண்பு:

அரசியல், சமூக சுதந்திரங்களெல்லாம் நல்லது தான்; ஆனால் உண்மைப் பொருள் ஆத்மீக விடுதலைதான், முக்திதான் என்கிறான் ஹிந்து. இது தான் நமது தேசீயக் குறிக்கோள். வைதிகர், ஜைனர், பௌத்தர், அத்வைதிகள், விசிஷ்டாத்வைதிகள் அல்லது துவைதிகள் ஆகிய எவரைப் பார்த்தாலும் அந்த விஷயத்தில் அவர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் தான் இருக்கிறார்கள். அந்த விஷயத்தின் மீது கைவைக்காமல், எதை வேண்டுமானாலும் செய்து கொள். ஹிந்து சிறிதும் கவலைப்படமாட்டான், மௌனமாக இருப்பான். ஆனால் அந்த ஆத்மீக விடுதலை விஷயத்தில் தவறாக நடந்தால் ஜாக்கிரதை, நீ தொலைந்தாய்!

அவனிடமுள்ளது அனைத்தையும் கொள்ளை கொண்டு விடு; அவனைக் காலால் உதைத்துத் தள்ளு; “கறுப்பன்” என்றோ வேறு வசையோ பேசு,; அவன் அதிகமாகக் கவலைப்பட மாட்டான். ஆனால் சமயம் என்கிற ஆசாரவாயிலைச் சுதந்திரமாகவும் கறைப்படுத்தாமலும் விட்டுவை. அதுதான் அவன் உயிர் மூச்சு. நவீன காலத்தில் பட்டாணிய வம்சங்கள் வந்தன; போய்க்கொண்டேயிருந்தன. ஆனால் பாரத சாம்ராஜ்யத்தில் காலூன்ற உறுதியான பிடி அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் ஹிந்துவின் சமயத்தைத் தாக்கி வந்தார்கள். முகலாய சாம்ராஜ்யம் எவ்வளவு உறுதியான அஸ்திவார முள்ளதாக, மகத்தான சக்தி வாய்ந்ததாக இருந்தது, பாருங்கள். ஏன்? முகலாயர்கள் சமயத்தைத் தொடாமல் விட்டனர். உண்மையில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு ஹிந்துக்கள் தான் ஊன்று கோலாக விளங்கினார்கள்.

நமது சக்தித் துடிப்பு, நமது பலம், ஏன் நமது தேசீய உயிர் நாடியே நமது சமயத்தில் தான் உறைந்துள்ளது என்று கண்டோம். அது சரியா, தவறா? நல்லதா, கெடுதலா? நாளடைவில் அது லாபகரமானதா, இல்லையா என்பது குறித்து நான் இப்பொழுது விவாதிக்கப் போவதில்லை. நல்லதோ, கெடுதலோ அது அப்படித்தான் இருக்கிறது. அதிலிருந்து மீள முடியாது. அவ்வாறே இப்பொழுதும், எப்பொழுதும் இருக்கும். நமது சமயத்தில் எனக்கிருக்கும் நம்பிக்கை உங்களுக்கு இல்லாவிடினும் கூட அதற்குப் பக்க பலமாக நீங்கள் நிற்கவே வேண்டும். நாம் அதனுடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அதனைக் கைவிட்டால் உருக்குலைந்து சிதறிப் போவோம். அதுதான் நமது இனத்தின் ஜீவன், அதனைப் பலப்படுத்தியே தீரவேண்டும்.

சோமநாதபுரம் ஏராளமான படிப்பினையை அளிக்கும்:

சமயத்தைப் பற்றி நீங்கள் மிடுந்த அக்கறை செலுத்திப் பேணி வந்தீர்கள். அதற்காக மற்ற அனைத்தையும் தியாகம் செய்தீர்கள். அந்த ஒரு காரணத்தினால் தான் பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கோரமான படையெடுப்புகளின் அதிர்ச்சிகளை உங்களால் தாங்க முடிந்தது. உங்களது முன்னோர்கள் கொடுமைகள் அனைத்தையும் தீரத்துடன் அநுபவித்தார்கள். மரணத்தையும் ஏற்றார்கள். ஆனால் சமயத்தைப் பாதுகாத்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளன் ஒவ்வொரு கோயிலாக இடித்துத் தள்ளினான். ஆனால் அந்த அலை திரும்பியவுடன் கோயிலின் கோபுரமும் மீண்டும் உயிர்ந்தெழுந்தது.

தென்னாட்டின் சில பழைய கோயில்களும், குஜராத்திலுள்ள சோமநாதபுர ஆலையமும் ஏராளமான சரித்திர ஞானத்தை உங்களுக்கு அளிக்கும். எத்தனையோ புத்தகங்களைப் படிப்பதை விட அதிகக் கூர்மையான சூட்சுமப் பார்வையை உங்களுக்கு அவை தரும். கவனித்துப் பாருங்கள். இந்தக் கோயில்களில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் வடுக்களும், புனர் நிர்மாணத்தின் நூற்றுக்கணக்கான சின்னங்களும் உறைந்துள்ளதைப் பாருங்கள். தொடர்ந்து அவை அழிக்கப்பட்டன. இடிபாடுகளிலிருந்து தொடர்ந்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் வழக்கமான வீறுடன் எழுந்தன. அதுவேதான் தேசிய ஜீவசக்தியாகும். அதனைப் பின் பற்றிச் செல்வீராகுக. உங்களைப் புகழ் நிலைக்கு அது இட்டுச் செல்லும். அதனைக் கைவிட்டால் இறந்தொழிவீர்கள். செத்து மடிவதே முடிவாகும். அந்த ஜீவசக்தியை மீறிப் புறக்கணித்தால் அக்கணமே – பூண்டற்றுப் போவது தான் ஒரே முடிவு.

அரசியல் அல்லது சமூக முன்னேற்றங்கள் தேவையில்லையென நான் கூறுவதாக நீங்கள் கருதக் கூடாது. நான் நினைப்பது இது தான். நீங்கள் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும். மற்ற முன்னேற்றங்களெல்லாம் இரண்டாம் பட்சமானவை. சமயம் தான் முதல் தேவை!

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

One Reply to “எழுமின் விழிமின் – 6”

  1. சுவாமி விவேகானந்தரை என் மானசீஹ குருவாக என்றும் நினைத்துவரும் நான் இக் கட்டுரையை வாசிப்பதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அவரது இந்தக் கருத்துக்கள் மித அர்த்தம்முடையவை. இவை அனைத்தும் ஒவொரு இந்துவும் வாசிக்க வேண்டிய ,மறுமலர்ச்சியை விதைக்கின்ற அவரது எண்ணங்கள்.
    இந்த புனிதமான காரியத்தை செய்த உங்கள்ளுக்கு என் நன்றிகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *