எழுமின் விழிமின் – 12

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..


நமது நாடு ஆழ்ந்த தாமச குணத்தில் மூழ்கி உள்ளது

உலகம் முழுவதையும் சுற்றி வந்துள்ளேன். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டு மக்கள் ஆழ்ந்த தமோகுணத்தில் (மந்த நிலையில்) ஆழ்ந்துள்ளதைக் காண்கிறேன். வெளித் தோற்றத்தில் சாத்துவிக நிலையில் (அமைதியும் சமச்சித்தமும் வாய்ந்திருத்தல்) இருப்பது போலப் பொய்ப் பாசாங்கு பண்ணுகிறார்கள். ஆனால், உள்ளுக்குள்ளே ஜடவஸ்துக்களையும் கல்லையும் போல அடி மட்டமான மந்தத்தனமை உள்ளது. இப்படிப்பட்ட மக்களால் உலகில் என்ன காரியம் செய்ய முடியும்?

இது போன்ற மந்தமான, சோம்பேறிகளான, புலனுணர்ச்சியில் மூழ்கிய மக்கள் உலகில் எத்தனை நாள் வாழ முடியும்? முதலில் மேற்கு நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த பிறகு என் வார்த்தைகளை மறுத்துப் பேசுங்கள். மேற்கு நாட்டு மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு துணிச்சல், வேலையினிடம் பக்தி, எவ்வளவு உற்சாகத் துடிப்பு, ரஜோ குணத்தின் பிரத்தியட்ச தரிசனம் தெரிகின்றது !

உங்களது நாட்டில் இரத்தம் இதயத்திலேயே உறைந்துவிட்டது போலவும், அது இரத்தக் குழாய்களில் ஓடிப் பெருகுவதில்லை போலவும், உடலைப் பாரிசவாய்வு தாக்கி உடல் பலவீனப்பட்டு விட்டது போலவும் உள்ளது.

தமோ குண அலையை ரஜோ குண எதிரலையால் மூழ்கடிப்போம்

பாரதத்தில் ரஜோ குணம் இல்லையென்றே சொல்லலாம். அது போன்றே மேலை நாடுகளில் சத்துவகுணம் அமைந்திருக்கவில்லை. ஆதலால், பாரதத்தில் இருந்து பெருகிவரும் சத்துவமாம் பெரு வெள்ளத்தை, ஞானச்சுடர் வெள்ளத்தை ஏற்பதைப் பொறுத்துத்தான் மேனாட்டவரின் உண்மை வாழ்க்கை அமையும்.

அதே போல நம் தாமசத் தன்மையை அதன் எதிரிடைக் குணமான ரஜோ குணத்தின் எதிரலையால் வென்று மூழ்கடித்தாலன்றி நாம் ஒரு போதும் இவ்வுலக நன்மையையோ, இல்வாழ்க்கையின் நலத்தையோ இந்தப் பிறவியில் பெற முடியாது என்பது உறுதி.

அத்துடன் நம் மறுமை வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட மிகச் சிறந்த லட்சியங்களையும் விருப்பங்களையும் அடைவதற்கான பாதையில் கணக்கில்லாத பிரம்மாண்டமான தடைகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம்.

துறவைத் தவிர அதிகமான அமைதி தருவது வேறு எது ? ஒரு கணத்தில் அழியக்கூடிய உலக இன்பம் தருவதைக் காட்டிலும் மாளாத பெருநலம் அளிக்கும் ஒன்று மிகச் சிறந்ததில்லையா? இதில் சந்தேகமே இல்லை. கலப்பற்ற தனி உள்ளத் தூய்மையைக் காட்டிலும், சத்துவ குணத்தைக் காட்டிலும் – வலிவுமிக்க சக்தி வேறொன்று உண்டோ ?

ஆன்ம ஞானப் பேரொளிக்கு முன் மற்ற அறிவனைத்தும் அஞ்ஞான இருட் பிழம்புகளே என்பதுதான் உண்மை. நான் உங்களிடம் கேட்கிறேன்: “சத்துவ குணத்தைப் பெற இந்த உலகத்தில் எத்தனை பேர்கள் பாக்கியம் செய்திருக்கிறார்கள்?”

பாரத நாட்டில் அப்படி எத்தனை பேர்கள் இருக்கின்றனர்? கூறுங்கள். “நான்”, “என்னுடைய” என்ற எண்ணத்தை வேருடன் பிடுங்கி எறிந்து, தங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் துறக்கக் கூடிய உயர் வீரத்தைப் பெற்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

உலக இன்பங்கள் எல்லாம் மிகப்பெரிய வீண்பெருமைகள் என்ற பெருநோக்கு வாய்ந்த ஞானத்தை, அருளைப் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? கடவுளின் அழகையும் மகிமையையும் குறித்துத் தியானித்து அதிலேயே தனது சொந்த உடலைக்கூட மறந்துவிடக்கூடிய பரந்த உள்ளம் வாய்ந்த மனிதன் எங்கே இருக்கிறான்? நாடு முழுவதிலும் உள்ள ஜனத்தொகையில் இத்தகையோர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். இச்சிறு  தொகையினர் மோட்சம் அடைவதற்காகக் கோடிக்கணக்கான ஆண்களும், பெண்களும் இக்கால சமூகம், சமயம் ஆகியவற்றின் கீழ் நசுக்கப்பட வேண்டுமா ?

அப்படி நசுக்கப்படுவதால் என்ன பயன்?

சிறுகுழந்தைக்கு நாம் துறவறத்தின் உண்மையைக் கற்பிக்க முடியாது. ஏனெனில், அது பிறவி மூலம் ஆசைகள் நிரம்பிய நம்பிக்கைவாதி. அதன் வாழ்க்கை முழுவதும் அதன் புலன்களிலும், புலன்வழி இன்பங்களை அனுபவிப்பதிலுமேயே ஊறி நிறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு சமூகத்திலும் குழந்தையைப் போன்ற உணர்ச்சி பெற்றவ்ர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஓரளவு சுகபோக அனுபவம் தேவை. அப்பொழுதுதான் அவர்களுக்கு போகமெல்லாம் வீண் ஆடம்பரம் என்பது தெரியவரும். அதன் பின்னர் துறவு நிலை தானாகவே வரும். அப்படிப்பட்டவர்களுக்காக நமது நூல்களில் போதுமான ஏற்பாடு செய்துவைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாகப் பிற்காலத்தில் சன்னியாசிகளைக் கட்டிப் பிணைத்திருக்கிற சட்டங்களைக் கொண்டு ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தி ஒடுக்கி வைக்கிற மனப்பான்மை ஏற்பட்டது. அதுதான் பெருத்த தவறாயிற்று. அப்படி மட்டும் அது நடந்திராது போனால் பாரதத்தில் நீங்கள் இப்போது காண்கின்ற பெருமளவு ஏழ்மையும் துன்பமும் ஏற்பட்டிருக்கவே போவதில்லை.

தமோ குணமயக்கத்தினால் நாம் தாழ்வுற்றுவிட்டோம்

மக்கள் சத்துவகுணம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு சிறிது சிறிதாக அஞ்ஞானம் என்ற காரிருளில் தமோகுணம் என்ற மாபெரும் கடலில் மூழ்கிப் போவதை நீங்கள் கண்கூடாகக் காணவில்லையா ?

அறிவு சிறிதும் இல்லாத மூடர்களும், தங்களுக்கு மேலான ஆன்மஞானம் அடையும் அவா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு தங்களது முட்டாள்தனத்தை மறைப்பது உங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லையா?

உடற் செயல்களுக்கும், உள்ளச் செயல்களுக்கும் அப்பாற்பட்டு, அனைத்தையும் கடந்து விளங்கும் பரம்பொருளை அறியும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறதா?

பிறவி முதற் கொண்டே சோம்பித் திரிந்து கொண்டிருந்தவன், வேலை செய்யத் திறமையின்மையைக் காட்டிக் கொள்ளாமல், திடீரெனச் சன்னியாசியின் உடையைப் போர்த்துக் கொள்வதாகச் சொன்னால், நம்பலாமா ?

மிருக சுபாவமுள்ளவர்கள் தமது கொடிய தன்மையைத் தவ வேடத்தில் மூடி மறைத்திருக்கிறார்கள்.

ஒருவருக்கும் தமது சக்தி இன்மை தெரியவில்லை. ஆனால், முழுக் குற்றத்தையும் பிறர் மீது சுமத்த ஆயத்தமாக இருக்கிறார்கள்.

மற்றவர்கள் அசை போட்டுத் தின்றதைத் தானும் அசை போடுவது தான் தெய்வீக ஞானம் என்று கருதுகிறார்கள்; முன்னோர்களின் பெயரைப் பெருமையுடன் முழங்குவது மிகப் பெரும் புகழ்ச் செயல் என எண்ணுகிறார்கள்.

நாடு பயங்கரமான தமோ குணத்தில் ஆழ்ந்து கொண்டு வருகிறது என்பதை நிரூபிக்க இதைத் தவிர வேறு ஏதாவது சான்று தேவையா, என்ன ?

ஆதலால், சத்துவ குணம் அல்லது கலப்பற்ற தூய்மை என்பது நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால், நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை. எனினும், கலப்பற்ற தூய பரமஹம்ஸ நிலையை எய்துவதற்குத் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

அப்படிப் பட்டவர்கள் ராஜஸ குணத்தில் பழகிச் சுறுசுறுப்பான வேலையில் ஈடுபடுவது மிகுந்த நன்மை தரும்.

ஒருவன் ராஜஸ குணத்தின் வாயிலாகச் சென்றாலன்றி சாத்துவிக நிலையை அடைவது என்பது சாத்தியமாகுமா? ஒருவன் போகத்தையோ, இன்பத்தையோ முன்னரே அநுபவித்துத் தீர்க்காமற் போனால், யோகமோ அல்லது கடவுளுடன் இரண்டறக் கலத்தலோ முடியாது என்பது திண்ணம். போகத்தைப் புறக்கணித்து அவற்றின் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவற்றின் மோக வலைகளை அறுக்காமற் போனால், துறவு வாழ்க்கையை அடைய முடியுமா?

எண்ணிப்பாருங்கள்.

உண்மையான தேசம் குடிசையில் வாழ்கிறது

கடந்த நூற்றாண்டில் பழக்கத்தில் கொண்டுவரப் பெற்ற சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவை வெறும் அலங்காரத்துக்குத் தான். இந்தச் சீர்திருத்தங்களில் ஒவ்வொன்றும் முதலிரண்டு ஜாதியினரைத் தவிர வேறு எவரையும் தீண்டுவதில்லை. பாரத மாதர்களில் நூற்றுக்கு எழுபது பேர்களை விதவா விவாகப் பிரச்சினை பாதிப்பதில்லை.

நான் கூறுவதைக் கவனியுங்கள். அது போன்ற பிரச்னைகளெலாம் பாமர மக்களின் செலவினால் படித்துக் கல்வி பெற்ற பாரத மக்களில் உயர்ந்த வகுப்பினரையே பாதிக்கிறது.

நமது சொந்த வீடுகளைத் தூய்மைப் படுத்துவதிலேயே ஒவ்வொரு முயற்சியும் செலவாகி இருக்கிறது. அது சீர்திருத்தமல்ல.

அந்த விஷயத்தின் மூலகாரணத்தை, ஆணிவேரை நீங்கள் ஆராய வேண்டும். அடிப்படைச் சீர்திருத்தம் என்று நான் அதனையே குறிப்பிடுகிறேன். அடியிலே தீ மூட்டுங்கள். அது மேலே கொழுந்து விட்டெரிந்து பாரத தேசத்தைத் தீர்மானிக்கட்டும்.

இதற்காகச் சமயத்தைக் குறை கூறக்கூடாது. ஏனெனில், ஒரு விக்கிரகம் வளர்வதோ குறைவதோ மாறுதலை உண்டு பண்ணாது. குறை முழுவதும் இங்கே தான் இருக்கிறது. குடிசைகளில் வாழும் உண்மையான தேசம் தனது தனிச்சிறப்பை மறந்து விட்டது… அவர்களுக்கு… “குடிசை மக்களுக்கு” அறிவு புகட்ட வேண்டும்…

அவர்கள் இழந்த தனிச்சிறப்புத் தன்மையை மீட்டுத் தர வேண்டும்

குடிசையில் வாழும் பாமரர்களுக்குக் கருத்துக்களை அளிக்க வேண்டும். அவர்களைச் சுற்றியுள்ல உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும். அதன் பின்னர் தமது சொந்த முன்னேற்றத்திற்கு அவர்களே வழி வகுத்துக் கொள்ளுவார்கள். ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு ஆணும் பெண்ணும், தமது முன்னேற்றத்துக்காகத் தாமேதான் வேலை செய்ய வேண்டும்.

அவர்களுக்குக் கருத்துக்களை அளியுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவி அதுவே. மற்றவையெல்லாம் பிறகு நிழலைப் போலப் பின் தொடர்ந்து வரும். நாம் ரசாயனப் பொருள்களைக் கூட்டிச் சேர்த்து வைப்போம். இயற்கை விதிப்படி அவை படிகங்களாக மாறும்.

அவர்கள் அறிவில் நாம் கருத்துக்களை ஊன்றுவோம்; மற்றவற்றை அவர்கள் தாமே செய்வார்கள். பாரதத்தில் செய்யப்பட வேண்டியது இதுதான்.

“பாமர மக்களின் சமயத்தைத் தாக்கிப் புண்படுத்தாமல் அவர்களை உயர்த்த வேண்டும்” என்ற குறிக்கோளை நம் முன் கொள்வோம்.

பாமர மக்களிடையே கல்வியைப் பரப்புதல் ஒன்றே பரிகாரம்

கல்வியும் கலாச்சாரமும் மேன்மக்களிடம் இருந்து பாமர மக்களுக்குப் படிப்படியாகப் பரவி வரத் தொடங்கியது. அதில் இருந்து மேலை நாடுகளில் நிலவும் இக்கால நாகரிகத்துக்கும் பாரதம், எகிப்து, ரோம் முதலியவற்றில் நிலவிய தொன்மையான நாகரிகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு வளரத் தொடங்கியது.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அது பொது மக்களுக்குக் கல்வியும் ஞானமும் பரப்புகிற அளவைப் பொறுத்துத்தான் உள்ளது. இதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.

கர்வமும் அரசியல் அதிகாரமும் கொண்ட சிலர் இந்நாட்டின் கல்வியையும், புத்திசாலித்தனத்தையும் தமது ஏகபோக உரிமையாகத் தம்மிடமே குவித்துக் கொண்டார்கள். இதுதான் பாரதத்தின் அழிவுக்கு முக்கியமான காரணம். நாம் மீண்டும் உயர வேண்டுமானால் அதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதாவது, பாமர மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டும்.

கல்வியினால் தன்னம்பிக்கை ஏற்படுகிறது

முஸ்லீம்கள் தம்முடன் எத்தனை போர்வீரர்களைக் கொண்டு வந்தார்கள்? எத்தனை ஆங்கிலேயர்கள் இப்பொழுது உள்ளார்கள்? ஆறே ரூபாய்களுக்காகத் தங்களுடைய தகப்பன், தம்பிமார் இவர்களுடைய கழுத்தை வெட்டும் லட்சக்கணக்கான மக்கள் பாரதத்தைத் தவிர, வேறு எங்கே தான் இருக்கப் போகிறார்கள்?

எழுநூறு ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியில், அறுநூறு லட்சம் முஸ்லீம்களும், ஒரு நூற்றாண்டு ஆங்கில ஆட்சியில் இருபது லட்சம் கிறுஸ்தவர்களும் ஏற்படுவதற்குக் காரணம் என்ன ?

தாமே சொந்தமாக ஒரு காரியத்தைச் செய்கிற திறமை நாட்டை விட்டு ஏன் அழிந்து விட்டது?

மிகுந்த கைத்திறன் வாய்ந்த தொழிலாளர்கள் நாளுக்கு நாள் ஐரோப்பியர் போட்டியைத் தாங்கமாட்டாமல் மடிகிறார்களே, ஏன்?

பல நூற்றாண்டுகளாக உறுதியாகக் காலூன்றி நிமிர்ந்து நின்ற ஆங்கிலத் தொழிலாளியின் நிலையை, ஜெர்மானிய உழைப்பாளி, எந்தச் சக்தியினால் குலைத்தான்?

கல்வி ! கல்வி ! கல்வியே இதற்குக் காரணம். ஐரோப்பாவிலுள்ல பல நகரங்களையும் நான் சென்று பார்த்ததில் அந்தந்த நாட்டு ஏழை மக்களின் இன்ப நிலையையும், கல்வியறிவையும் கண்டேன்.

அப்பொழுது என் நாட்டு ஏழை மக்களின் நிலை பற்றியே கண்ணீர் உகுப்பது வழக்கம். ஏன் இந்த வித்தியாசம்? எனக்குத் தோன்றிய விடை “கல்வியே”. கல்வியினால்தான் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வருகிறது.

உங்களது புராணத்தில் உள்ள முப்பத்து முக்கோடி தெய்வங்கள் அனைத்திடமும் உங்களுக்குப் பக்தி இருந்து, அந்நியர்கள் அவ்வப்போது உங்களிடையே நுழைத்து வரும் எல்லாத் தெய்வங்களிடமும் பக்தியிருந்து, அதன் பிறகும் கூட உங்களிடம் உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் கடைத்தேற முடியாது.

தன்னம்பிக்கை பூணுங்கள். இந்த நம்பிக்கையின் மீது எழுந்து நின்று வலிமை பெறுங்கள். அதுதான் நமக்குத் தேவை.

உரிய காலத்தில் நாட்டு மக்களிடையே சுறுசுறுப்பும், சுயபலத்தை நம்பி எழும் நிலையும் வந்தே தீரும்.

நான் தெளிவாக அதனைக் காண்கிறேன். அதில் இருந்து தப்ப முடியாது. புத்திசாலியான மனிதன் அடுத்து வரப்போகும் மூன்று யுகங்களின் காட்சியைத் தெளிவாக முன்கூட்டிக் காணலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரகாலம் முதல் கீழ்த்திசையின் அடிவானத்தில் இளஞ்சூரியனின் கதிர்களினால் அருணோதய ஒளிதோன்றி உள்ளது. காலம் செல்லச் செல்ல அது இந்த நாட்டை மத்தியான காலச் சூரியனின் வெளிச்சத்தால் ஒளிபெறச் செய்யும்.

(தொடரும்..)

அடுத்த பகுதி >>>

One Reply to “எழுமின் விழிமின் – 12”

  1. இப்படி ஒரு சொல் கூட வீணாகாமல் உருப்படியான சொல்லாக எழுதவும் பேசவும் ஸ்வாமி விவேகானந்தரைத் தவிர வேறொருவரால் முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்வாமிஜியோ அப்படிப் பலரும்/அனைவரும் உருவாக வேண்டும் என்று தூண்டி விடுவதற்காகவே அவதரித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *