எழுமின் விழிமின் – 24

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

கண்ணோட்டங்கள்

சரித்திர உண்மையை மையமாகக் கொண்டிருந்தாலும் கொண்டிராவிடினும் ஒவ்வொரு புராணமும் ஒரு பேருண்மையைக் கற்பிக்கிறது.

[1987 பிப்ரவரி மாதம் சென்னை ஹிந்து பத்திரிகையில் வெளியான நிருபர் பேட்டியிலிருந்து…]

ஒவ்வொரு புராணத்துக்கும் கருவாக ஒவ்வொரு சரித்திர உண்மை அமைந்துள்ளது. மேன்மையான உண்மையைப் பலவித வடிவங்களில் மனிதகுலத்திற்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கமாகும். அவற்றில் சரித்திர உண்மை எதுவும் பொதிந்திராமற்போனாலும், அவை நமது மனத்தில் பதிப்பிக்கிற மிக உயர்ந்த உண்மைக்கு, மகத்தான பிரமாண நூலாக அமைகின்றன. உதாரணமாக இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். அது ஒழுக்கத்தை வளர்ப்பதில் மேம்பட்ட நூலாகத் திகழ்கிறது. அந்த ரீதியில் அந்த நூலை நோக்குவதற்கு ராமர் என்ற ஒருவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. இராமாயணமும் மகாபாரதமும் மிக உயர்ந்த சட்டங்களைக் காட்டியுணர்த்துகின்றன. ராமர் அல்லது கிருஷ்ணர் என்று ஒரு மனிதர் வாழ்ந்திருந்தாரா இல்லையா என்பதன் உண்மையைப் பொருத்து உயர்ந்த அந்தச் சட்டங்கள் நிலை கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் வாழவில்லை என்றே கொண்டாலும் சரி; மனித குலத்தின் முன்னிலையில் அவை உயர்ந்த கருத்துகளை வைத்துள்ளன. அவ்வுயர்ந்த கருத்துகளுக்கு அவை பிரமாண நூல்கள் என்று கொள்ள முடியும்.

நமது தத்துவ சாஸ்திரங்கள் விளக்குகிற பேருண்மைகள் எந்த ஒரு மகா புருஷரையும் சார்ந்ததாக இல்லை. இவ்வாறாக ஸ்ரீ கிருஷ்ணர் உலகத்துக்குப் புதிதாகவோ சுய கற்பனையாகவோ உள்ள எதனையும் கற்பிக்கவில்லை; அல்லது சாஸ்திரங்களில் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் இராமாயணம் வெளியிடவில்லை. ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவ சமயம் கிறிஸ்து இன்றி நிலைபெற முடியாது, முகம்மது நபியின்றி முகம்மதிய சமயமும், புத்தரின்றி புத்த சமயமும் நிற்க முடியாது. ஆனால் ஹிந்து சமயம் எந்த ஒரு மனிதனையும் சாராமல் சுதந்திரமாக நிற்கிறது. அன்றியும் எந்த ஒரு புராணத்தில் பொதிந்துள்ள தத்துவரீதியான உண்மையை மதிப்பிட்டு அறிவதற்காக, அந்தப் புராணத்தில் பேசப்படுகிற மனிதர்கள் உண்மையில் வாழ்ந்தனரா அல்லது அவர்கள் கற்பனைப் பாத்திரங்களா என்று நாம் ஆலோசிக்கத் தேவையில்லை. புராணங்களின் நோக்கம் மனித குலத்துக்கு ஞானம் புகட்டுவது தான். அவற்றை இயற்றிய ரிஷிகள் ஏதாவது ஒரு சரித்திர புருஷனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அந்த மனிதன் மீது தேவைக்குத் தக்கபடி மிக உயர்ந்த குணங்களையோ, மிக மோசமான குணங்களையோ சுமத்தி ஒட்ட வைத்தார்கள். அத்துடன் மனித குலம் நடக்கவேண்டிய முறை பற்றிய தர்மநெறி ஒழுக்கங்களை வகுத்து வைத்தார்கள். இராமாயணத்தில் குறிப்பிட்டபடி பத்துதலை ராட்சதன் ஒருவன் உண்மையாகவே வாழ்ந்திருக்க வேண்டியது அத்யாவசியமா? தசமுகன் உண்மையாக வாழ்ந்தானா அல்லது கற்பனைப் பாத்திரமா என்பது ஒருபுறம் இருக்க, ஆராயத்தக்க ஓர் உண்மையை அது விளக்குகிறது என்பதே முக்கியமான விஷயம். கிருஷ்ணனை இப்போது நீங்கள் மிகமிக அழகாக வர்ணித்துக் கொள்ளுங்கள். உங்களது லட்சியத்தின் உயர்வுக்குத் தக்கபடி உங்கள் வர்ணனையும் இருக்கும். ஆனால் புராணங்களில் பொதிந்துள்ள மகத்தான தத்துவ ஞானம் எப்பொழுதும் நிலைத்து நிற்கிறது.

எதிர்ப்பு இயக்கங்கள், எப்பொழுதும்
தாம் எதிர்க்கிற வெறுக்கிற கொள்கைகளுடன்
மடிந்து விடுகின்றன

[Extract from, ‘Historical Evolution of India’ (The Complete Works/ Vol VI)]

பாரதத்தின் தென்பகுதியில் ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமனுஜர் ஆகியோரின் ஆன்மிக எழுச்சிக்குப் பின் அதைத் தொடர்ந்து வழக்கம் போல மக்கள் இனங்களின் ஒற்றுமையும், சக்தி மிக்க சாம்ராஜ்யங்களும் தோன்றின. வடபாரதம் முழுவதும்- இரு கடல்களுக்கிடையே திகழும் பகுதி முழுவதும்– மத்திய ஆசியப் படையெடுப்பாளரின் காலடியின் கீழ் கட்டுண்டு கிடந்த போது தென் பாரதம் பாரத சமயத்துக்கும் நாகரிகத்தும் புகலிடமாக விளங்கியது. முகம்மதியர்கள் பல நூற்றாண்டுகளாகத் தென்பகுதியை அடிமைப்படுத்தி அடக்கிவைக்க முயன்றார்கள். ஆனால் அவர்களுக்கு வலிமைக் கோட்டையாக வாய்ந்த ஓரிடமும் கிடைக்கவில்லை என்று கூறத்தான் வேண்டும். மிகுந்த வலிமையும் ஒற்றுமையும் வாய்ந்த முகலாய சாம்ராஜ்யம் தென்பாரதத்தை வென்று வாகை சூடும் நிலையை அநேகமாய் எய்திவிட்ட சந்தர்ப்பத்தில் குதிரைப்படை வீரர்களான உழவர்கள் தெற்கேயுள்ள குன்றுகளிலிருந்தும் பீடபூமியிலிருந்தும் வெள்ளம் போலப் பாய்ந்தோடி வந்தார்கள். இராமதாசர் பிரசாரம் செய்து, துகாராம் புகழ் பாடிய தமது சமயத்துக்காக உயிரையும் அளிக்க உறுதியுடன் விரைந்து வந்தார்கள். மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக முகலாயர்களின் பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் வெறும் பெயரளவுக்கு ஆகிவிட்டது.

முகம்மதிய ஆட்சியின் போது வடபாரதத்தில் தோன்றிய இயக்கங்களெல்லாம், படையெடுத்து வென்ற ஆக்கிரமிப்பாளரின் சமயத்தைப் பொதுமக்கள் கைக்கொள்ளாதபடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொதுவான ஒரே லட்சியத்துடன் எழுந்தவையே ஆகும். அம்முயற்சியின் விளைவாக சமூக சமத்துவமும் ஆன்மிக சமத்துவமும் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இராமானந்தர், கபீர், தாது, சைதன்யர், குருநானக் ஆகியோரால் நிறுவப்பட்ட சந்நியாச ஆசிரமங்களைச் சார்ந்தவர்கள் அவரவர் தத்துவப்போதனையில் எவ்வளவு தான் வேறுபட்டிருந்தாலும் மனிதரிடையே சமத்துவத்தைப் போதிக்கும் விஷயத்தில் ஒன்றுபட்டே இருந்தார்கள். பொதுமக்களிடையே இஸ்லாம் வெகுவேகமாகப் பரவிவந்ததைத் தடுக்கவே அவர்களது சக்தியின் பெரும்பகுதி செல்வாயிற்று. ஆகவே, புதிதாகச் சிந்தித்துப் புதிய கருத்துகளையும், ஆர்வங்களையும் எடுத்துக்காட்ட முடியாமற் போயிற்று. பழைய சமயத்தின் அரவணைப்பிலேயே பாமர மக்களைப் பாதுகாப்பதில் அவர்கள் உண்மையிலேயே வெற்றிபெற்றார்கள். முகம்மதியர்களின் மத வெறியைத் தணித்தார்கள். இருப்பினுங்கூடத் தற்காப்பு நோக்குடன், உயிர்வாழ அனுமதி கோரி, உயிருக்கு மன்றாடி வாழ்கிறவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

இருப்பினும் ஒரு பெரிய தீர்க்கதரிசி வடக்கில் தோன்றினார். சீக்கியர்களின் கடைசி குருவான அந்த குரு கோவிந்தசிங் நிர்மாண மேதாவிலாசத்துடன் விளங்கினார். அவரது ஆன்மிகப் பணியின் விளைவாக, அதனைத் தொடர்ந்து சீக்கியர்களின் புகழ்பெற்ற அரசியல் இயக்கம் தோன்றியது. பாரதத்தின் வரலாறு முழுவதிலும், ஒரு விஷயத்தைக் காண்கிறோம். அதாவது ஆன்மிகக் கிளர்ச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அதைத்தொடர்ந்து அநேகமாக நாடு முழுவதும் பரவிய அரசியல் ஒற்றுமை இயக்கம் தோன்றும். அந்த இயக்கம் தனது உற்பத்திக்குக் காரணமான ஆன்மிக அபிலாஷைகளைப் பலப்படுத்தும். ஆனால் மராட்டியர் அல்லது சீக்கியர் இவர்களின் சாம்ராஜ்யத்துக்கு முன்னோடியாக எழுந்த ஆன்மிக அபிலாஷையானது எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முகலாயர்களின் அரசசபையில் இருந்த அறிவுச் சுடரில் ஒரு கதிரைக் கூட பூனா அரசவையிலோ, லாகூர் அரசவையிலோ காணமுடியவில்லை; அப்படியிருக்க மாளவ சாம்ராஜ்யத்திலோ வித்யா நகரப் பேரரசிலோ காணப்பட்ட அறிவு ஜோதியைக் காணலாம் என எதிர்பார்ப்பது வீண் அல்லவா? பாரத நாட்டு வரலாற்றிலே அறிவுத் துறையில் அந்தக் காலம்தான் காரிருள் மண்டிய காலமெனலாம். வால் நட்சத்திரம் போலத் திடீரெனத் தோன்றி உச்ச நிலையை அடைந்து மறைந்த அந்தச் சாம்ராஜ்யங்கள் பாமர மக்களின் வெறியுணர்ச்சியின் பிரதிநிதியாக விளங்கின. உயர்ந்த பண்பாட்டை அம்மக்கள் முழு மனத்துடனும் வெறுத்தனர். தாம் வெறுத்த முகம்மதியர்களின் ஆட்சியை அழிப்பதில் வெற்றிகண்ட உடனேயே இம்மக்களுக்கு ஊக்கம் தந்த லட்சிய சக்தி அடியோடு மாய்ந்தே போயிற்று.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

3 Replies to “எழுமின் விழிமின் – 24”

 1. இந்துக்களுக்கு எவனும் தலைவனோ, தலைவியோ கிடையாது.இந்து என்றாலே சுயம்பு என்று பொருள். இந்து என்றாலே சுயமரியாதை உள்ளவன் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் , 1999 – ஆம் ஆண்டு , காஞ்சியை சேர்ந்த என் நண்பர் நடராசன் என்னிடம், கிறித்தவர்களையும், இஸ்லாமியர்களையும் போல நாமும் ஏதாவது ஒரு புத்தகத்தை எழுதி அதனை எல்லோரும் புனித நூல் என்று சொல்லி, ஏற்றுக்கொண்டுவிட்டால், மதமாற்றங்களை தடுக்கலாம்/ ஆபிரகாமியர்களுக்கு ஒரு பெரிய தோல்வியை கொடுத்துவிடலாம் என்று ஆரம்பித்தார். அவருடைய மனைவி கிறித்தவ மதத்துக்கு மாறியவர். எனவே, விரக்தி அடைந்து இவ்வாறு கூறினார்.

  எந்த மதநூலும் கடவுளால் உண்மையிலேயே எழுதப்பட்டது அல்ல. கடவுளுக்கு என்று எந்த மொழியும் கிடையாது. கடவுளுக்கு ஒரு மொழி உண்டு என்றால் , மற்ற மொழிபேசுபவர்கள் எல்லாம் கடவுளின் எதிரி என்று ஆகிவிடும். கடவுள் என்றாலே எல்லோருக்கும் பொதுவானவர் ஆகும். கடவுள் என்பவன் நாத்திகர்களையும் படைத்தவன் ஆவான். நாத்திகர்களை கடவுள் படைக்கவில்லை என்றால், கடவுளை தவிர வேறு யாரோ ஒரு படைக்கும் சக்தி உள்ளது என்று ஆகிவிடும். எனவே, கடவுள் சர்வ சக்தி உடையவர் என்பது நகைப்புக்கு இடமாகிவிடும். கடவுளை போலவே , வேறு ஒருவன் நாத்திகர்களை படைக்கிறான் என்றால், கடவுளின் எல்லை, ( jurisdiction ) குறைந்து , கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிடுகிறது.

  கடவுள் நம்பிக்கை என்பது , தனி நபரை நம்பி உருவாக முடியாது. அப்படி உருவானால், அந்த தனி நபர் மறைந்தவுடன், அந்த நம்பிக்கை குறையத்தொடங்கிவுடும்.இந்த உலகில், உருவாக்கப்பட்டை எல்லாம் மாறுதலுக்கும் அழிவுக்கும் உள்ளாகும். ” பழையன கழிதலும், புதியன புகுதலும் காலவரையினானே “- என்ற தமிழ் முதுமொழிக்கு ஒப்ப , ஒருவனால் படைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மதங்கள், பிறந்தவை மறையும் என்ற விதிப்படி அழியும். சாசுவதமானது பிறப்பதும் இல்லை, எனவே அழிவதும் இல்லை. ஒரே மதநூல் என்ற, காட்டுமிராண்டித்தனம் இந்துக்களிடம் இல்லாமல் இருப்பது நல்லது. ஆபிரகாமியர்களை போல, ஒரே மதநூல், ஒரே வழிபாட்டுமுறை, ஒரே மொழி , ஒரே பெண்ணடிமை , என்று உலகம் உலகம் முழுவதும் என்றும் மாறமுடியாது. உலகில் பன்முகத்தன்மையை அழிக்க நினைக்கும் எந்த சக்தியையும் , கடவுள் அழித்துவிடுவார். இந்த பூமி இருக்கும் வரை, எல்லோரும் பல்வேறு வித்தியாசமான சுவைகளைக்கொண்டும், பல்வேறு மொழிபெசியும், பல்வேறுவகை உணவு உண்டும், பல்வேறமதங்களை பின்பற்றியும், சிலர் நாத்திகராயும் தான் வாழ்வார்கள் . இதனை எந்த கொம்பனும் மாற்றமுடியாது. அப்படி முயல்வோரை , காலம் சாக்கடையில் தூக்கி போட்டுவிடும். அவர்களுக்கு, ஆபிரகாமியர்களின் மீள நரகமே கடைசி புகலிடம். என் வாதத்தை கேட்டு, என் நண்பர் நீங்கள் சொல்வது சரிதான் என்று கூறிவிட்டு , புறப்பட்டு சென்றார்.

 2. //
  முகலாயர்களின் அரசசபையில் இருந்த அறிவுச் சுடரில் ஒரு கதிரைக் கூட பூனா அரசவையிலோ, லாகூர் அரசவையிலோ காணமுடியவில்லை; அப்படியிருக்க மாளவ சாம்ராஜ்யத்திலோ வித்யா நகரப் பேரரசிலோ காணப்பட்ட அறிவு ஜோதியைக் காணலாம் என எதிர்பார்ப்பது வீண் அல்லவா?
  //
  புரியலையே சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *