முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2
தொடர்ச்சி…
பேரறிவு ஒளிரவேண்டும் என்றால் ஒளிரவேண்டியதுதானே? அது ஒன்றே உண்மை என்றால் பொய்யாகிய திரை எப்படி குறுக்கே நிற்க முடியும்? அது ஏன் வருகிறது? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம். இப்போதைக்கு அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டாம். ஏனென்றால், இவைகளுக்கு பதில் சொன்னால் புரிவதற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் விவரங்கள் தேவை. அதனால் மேலே போவோம்.
2.
बोधोsन्यसाधनेभ्यो हि साक्षान्मोक्षैकसाधनम् |
पाकस्य वह्निवज्ज्ञानं विना मोक्षो न सिध्यति ||
போ³தோ⁴sந்யஸாத⁴னேப்⁴யோ ஹி ஸாக்ஷான்மோக்ஷைகஸாத⁴னம் |
பாகஸ்ய வஹ்னிவஜ்ஜ்ஞானம்ʼ வினா மோக்ஷோ ந ஸித்⁴யதி ||
அறிவொன்றே நேர்முக்தி சாதன மாகும்
பிற சாதனங்களின் பேறாம் – அறிவின்றி
ஆகாது முக்தியுறல் அக்கினியின்றிப் பாகம்
ஆகாதவாறு என்று அறி
[எப்படி மற்ற எல்லாப் பொருட்கள் இருந்தாலும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யமுடியாதோ, அப்படியே ஞானம் இல்லாது ஒருவனுக்கு முக்தி சித்திக்காது. ஏனென்றால் மற்ற வழிகள் எல்லாவற்றையும் விட தன்னைப் பற்றிய ஞானம் ஒன்றுதான் முக்தி அடைய நேர்வழி ஆகும்.]
இந்தச் செய்யுளில் ரமணர் “அறிவு” என்ற சொல்லை பேரறிவை உணர்த்தும் ஞானம் என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார். முன்பகுதியில் ‘அறிவு’ என்பதை நமது மூளையால் அலசப்பட்டு நமக்கு வரும் “knowledge” என்ற சொல்லைக் குறிப்பிடப் பயன்படுத்தினேன்.
இந்தச் செய்யுளை அலசுவதற்கு முன்னால், நாம் சிறிது பின்னோக்கி ஆதி சங்கரர் காலத்துக்குச் செல்லவேண்டும். அவரது காலத்தில் பற்பல சித்தாந்தக் கருத்துகள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று பூர்வ மீமாம்ச வாதம். அதன்படி வேதத்தின் நோக்கம் ஒருவன் செய்யவேண்டிய கர்மங்களை விவரமாகக் கூறுவதே. அந்த முறைப்படி செய்யப்படும் எந்த விதமான யாகம், யக்ஞம் போன்ற கர்மத்திற்கும் பலன்கள் உண்டு. ஆதலால் அதற்கென்றே உண்டான சில யக்ஞங்களைச் செய்து ஒருவன் முக்தி நிலையையும் அடையலாம் என்பதே அவர்களுடைய நிலை. அவர்களுக்கு கர்மம் வெறும் ஜடம், அதற்குப் பலன் தருவது கர்மபல தாதாவாகிய இறைவன் என்பதை வாதங்கள் செய்து நிரூபித்து, அவர்களில் சிலரை, பாரதம் முழுதும் சுற்றி வந்து, தான் பரப்பிக் கொண்டிருந்த அத்வைத மார்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஆதி சங்கரர். அப்படி மாறி வந்தவர்களில் ஒருவரான மண்டன மிஸ்ரர் என்பவர்தான் சுரேச்வராசார்யர் என்று பெயர் மாறி ஆதி சங்கரரின் பிரதம சீடர்களில் ஒருவராகி, சிருங்கேரி சங்கர மடத்தின் முதல் ஆச்சாரியராக நியமிக்கப்படுகிறார்.
ரமணர் இயற்றிய “உபதேச உந்தியார்” நூலில் இதே போன்ற நிகழ்ச்சிகளாக தாருக வனத்தில் இருந்த கர்ம காண்டிகளுக்கு “வினைப்பயன் வித்தாய் விளிவுற்று வினைக்கடல் வீழ்த்திடும், வீடு தரல் இல்லை” என்று பரமசிவனே மகாவிஷ்ணுவுடன் அங்கு வந்து அறிவுரை கூறுவதாக வரும். இறைவனை நினைத்துச் செய்யப்படும் செயல்கள் யாவும் நம் கருத்தைத் திருத்திக் கதி வழி காண்பிக்கும். ஆக கர்ம யோகம் வழி காட்டும் என்பது சரி. அது போன்றே மற்ற யோகங்களும் ஒவ்வொரு விதத்தில் நம்மை முக்தியை நோக்கி இட்டுச் செல்லும். பூஜை, ஜெபம், தியானம் முறையே இறைவனிடம் உள்ள பக்தியால் உடலாலும், வாக்காலும், உள்ளத்தாலும் செய்யப்படும் கர்மமே என்றும் அதில் கூறுவார். அதில் முன்னது ஸ்தூலமாகவும், பின்னது நுண்ணியதாவும் இருப்பதால், நுண்ணியதாக இருப்பதே மற்றதைவிட மிக உயர்ந்தது என்பார். அதற்குக் காரணம் நாம் இவைகளினின்றும் நுண்ணியதான எண்ணத்தையும் தாண்டி உள்ளதை அடைந்து அந்தப் பேரறிவை உணர வேண்டும் என்பதே. அப்படிச் செல்லக்கூடிய ஞான வழி ஒன்றே நமது தவறான எண்ணத்தைச் சரி செய்து நமக்கு முக்தி அளிக்கும் என்றும் அதில் விவரமாகக் கூறுவார். அதுவே யோகங்களில் எல்லாம் சிறந்த மகா யோகம் என்று ரமணர் ஓர் இடத்தில் குறிப்பிடுவார்.
நால்வரில் ஒருவரான மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகத்தில் வரும் “திருவுந்தியார்” பாடலைப் போன்று எழுதப்பட்டதுதான் ரமணரின் “உபதேச உந்தியார்” நூலும். அதன் ஒவ்வொரு பாடலிலும் கடைசியில் வரும் “உந்தீபற” என்ற சொல்லினால்தான் அந்த நூல் “உந்தியார்” என்ற வகையிலும் வருகிறது. இந்தச் சொல்லை, ஒரு பாடலின் இலக்கணப்படி அதன் அசை அளவைச் சீர் செய்ய வரும் என்னோ, கொல்லோ போன்று வரும் இன்னுமொரு அசைச் சொல் என்பார்கள். வேறு சிலரோ இந்த ஈரசைச் சொல்லை “உந்தி” என்றும் “பற” என்று இரண்டாகப் பிரித்தும் பொருள் கொள்வார்கள்.
அதன்படி முமுக்ஷூ ஒருவன் அந்த அளவுக்கு விவேகம் கொண்டு, வேகத்தோடு “உந்து”வதால் அடையும் திறன் கொண்டு, அவன் “பற”க்கும் நிலைக்கு வரவேண்டும் என்றும் பொருள் கொள்வார்கள். ஓர் ஆகாய விமானம் தரையில் வேகமாகச் சென்று உந்திக்கொண்டு பறக்கும் நிலையை அடைவது போன்றதுதான் இதுவும். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரை வழியாக ஓர் இடத்தை அடைவதைவிட ஆகாய மார்க்கமாக அங்கு அடைவது ஒரு நேர் கோட்டில் செல்வதாகவும் இருக்கிறது, அதே சமயம் தரையில் இருக்கும் மலை, ஆறு போன்ற பல தடைகளையும் தாண்டுவதாகவும் அமைகிறது. அதே போன்று இங்கும் இந்த ஞான மார்க்கத்தில் சென்றால் உடல், மனம் இவைகளினால் வரும் தடைகளையும் தாண்டி, நேராக முக்தி நிலையை அடைய முடிகிறது. இது அர்ஜுனன் பறவையைக் குறிபார்த்து அம்பெய்தும் போது, அதன் கண் மட்டும்தான் தெரிகிறது, வேறெதுவும் தெரியவில்லை என்பது போலவும்தான்.
முக்தியடைய வெவ்வேறு வழிகள் சொல்லப்பட்டிருப்பதன் காரணமே ஒவ்வொருவரும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றார்கள் என்பதே. பலருக்கும் தன் வாழ்க்கையின் பயனைப் பற்றியோ, அல்லது அதன் காரணத்தைப் பற்றியோ யோசனை வருவதில்லை. எல்லோருக்கும் வாழ வேண்டும் என்றும், வாழ்க்கையில் சுகமாய் இருக்க வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் எதைச் செய்தால் அந்த சுகம் கிடைக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதென்றால், பலரும் உலகை ஒட்டியும் அதன் பலப்பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி சிலவற்றை அடைவதிலும், வேறு சிலவற்றை ஒதுக்குவதிலும் இன்பம் காண்கிறார்கள். அப்படி அவர்கள் செல்லும்போது விரும்பியதைத் தான் அடையாதபோதும், அதே சமயம் மற்றவர்கள் அதை அடையும்போதும் அவர்கள் துன்பம் அனுபவிக்கிறார்கள். அதே சமயம், தான் விரும்பியதைப் பெற்றாலும், அதை இன்பத்துடன் அனுபவித்த நாட்கள் கொஞ்சம் கழிந்ததும், அவர்களுக்கு அந்தப் பொருள்கள் மேல் இருந்த ஆர்வம் குறையவே, அவைகளுக்குப் பதிலாக வேறு பொருள்களை நாடுகிறார்கள். இப்படியாக அவர்கள் நாடுதல்- இன்பம்- தவிர்த்தல் என்ற ஒரு சக்கரச் சுழற்சியில் வாழ்நாளைக் கழிக்கின்றார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளும் மாறி, அதன் மேல் உள்ள ஆசையும் மாறி ஒரு விதமாக ஓயும்போதும், அல்லது என்னதான் முயன்றும் ஏதும் நாம் ஆசைப்பட்டது கிடைக்காமலோ, கிடைத்தும் அதை அனுபவிக்க முயலாமல் போவதாலோ விரக்தி வரும்போதும், ஒருவனுக்கு உலகின் மீதும் அதன் பொருள்களின் மீதும் உள்ள கண்ணோட்டம் நாளடைவில் மாறுகின்றன. எது செய்கிறதோ இல்லையோ, காலம் இந்த நிலைக்கு ஒருவனைத் தள்ளிக்கொண்டு வரும். சிலருக்கு இந்தக் கால அளவு குறைவாகவும், வேறு சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கலாமே தவிர கடைசியில் ஒருவன் இந்நிலைக்கு வந்தே ஆக வேண்டும். அப்போதும் ஒருவனது மனோநிலையைப் பொருத்தே அவன் எப்படி மாறுவான், அடுத்து என்ன செய்வான் என்பதும் இருக்கிறது. ஏனென்றால் எந்த நிலையிலும் மனிதன் மனிதன் தான். அவனது மிஞ்சியிருக்கும் ஆசாபாசங்களைப் பொருத்தே மேலே வரப்போவது அமையும்.
அப்படிப் பல நிலைகளைக் கடந்து வந்த முமுக்ஷூ தான் செய்த தவங்களின் பலனாய் அவனுக்குக் கிடைத்த பல வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன்படி சென்று கொண்டிருக்கும்போது முன்பு அவன் காணாத பல அனுபவங்களையும் பெறுகிறான்; புதிய சூழ்நிலைகளையும் எதிர்நோக்குகிறான். முன்பு உலகக் காரியங்களில் ஈடுபட்ட போது காரணம்-விளைவு என்று நடந்ததுபோலவே இப்போதும் நடக்கிறது என்றும், ஆனால் விளைவுகள் வெறும் தூலமாக இல்லாமல் மேலும் நுண்ணியதாக அமைகின்றன என்றும் உணர்கின்றான். அதாவது எதைக் கொடுக்கிறானோ அதற்கேற்றாற்போல் ஒன்றைப் பெறுகிறான். அப்படிக் கொடுப்பதால் பெறுவது என்றவொரு நிலை இல்லாமல், எப்போதும் இருப்பது என்பது என்ன என்று அவன் ஆராய முயற்சிக்கும்போது அவன் ஏதும் கொடுக்காமல் அதனால் எதுவும் பெறாமலும், ஆனால் அந்த நிலையை அனுபவித்துக்கொண்டு வெறுமனே இருப்பது என்றால் என்ன என்ற அந்த நிலைக்கு அவன் தயாராகிறான். இப்படியாகப் பல விதங்களிலும் உலகக் காரியங்களில் ஈடுபட்ட அவன், தன் அனுபவங்களால் உந்தப்பட்டு, பின் தான் கண்ட பல வழிகளிலும் வாழ்வின் உண்மையை உணரத் துடித்து, இறுதியில் தன் இருப்பு என்னும் அனுபவத்தைக் காணும் நிலைக்கு வருகிறான்.
முமுக்ஷூவுக்குப் பல வழிகள் இருந்தன என்று சொன்னோம். அதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம்சம் இறைவனிடம் சரண் அடைவது. இது வெறும் சொல்லளவிலே மட்டும் இல்லாது மனத்தளவில் ஆழமாக இருந்தால்தான், அது பரிபூரண சரணாகதி ஆகும். அப்படி இருந்தால் சரணடைந்தவன் நான் தான் இறைவனிடம் சரணடைந்துவிட்டேனே, எனக்கு இது நடக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே என்று நினைக்கவும் மாட்டான், சொல்லவும் மாட்டான். அப்படிச் சரணடையும்போது மனம் பூரண அமைதி கொள்ளும். அப்போது அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருப்பவன் யார் என்று கேட்டால் அவனால் என்ன சொல்லமுடியும்? நான் என்று சொல்வானா அல்லது இறைவன் என்பானா, அல்லது இறைவன் தன்னுள் இருப்பதால் என்பானா? அப்படியே எதுவும் சொன்னாலும் முன்பு இறைவன் அவனுள் இல்லாது போயிருந்தானா, இல்லாது போய் இருந்தால் அப்போது அவன் என்னவாய் இருந்தான் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வரும்? ஆக பக்தி வழி மன அமைதியைக் கொடுக்கும் என்பதோடு சரி. அமைதியாய் இருக்கும் அவன் யார் என்பதற்கு அங்கு பதில் இல்லை. பக்தி வழியில் வரும் பெரும்பாலானோரின் செயலாக பூஜையையும், ஜெபத்தையும் எடுத்துக்கொண்டு, ரமணர் அவைகளை முறையே உடலாலும், வாக்காலும் செய்யப்படும் கர்மம் என்பார்.
அடுத்ததாக நாம் இறைவனிடம் ஒன்றாவதையே சிலர் யோகம் என்பார்கள். அல்லது நமது மனம் செல்லும் வழிகளைக் கட்டுப்படுத்த நமது புத்தியை ஒருமைப்படுத்துவது என்று சொல்லலாம். ராஜ யோகத்தில் பெரும்பாலும் இது மனதை உண்முகமாகச் செலுத்தி, அதை அமைதிப்படுத்த ஏதேனும் சில பயிற்சிகளை உடலளவில் செய்வார்கள். நமது உடல் தூலம் என்றால், அந்த உடலுடனேயே முதலிலிருந்து இறுதிவரை இருப்பது சுவாசம் என்பதால், அதுதான் நாம் உயிருடன் இருப்பதைப் பிறர் அறியவும் உதவும் காணக்கூடிய பொருள். அது உடலைவிட நுண்ணியதானது. அதைப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தினால் நாம் காணமுடியாத நமது நுண்ணிய தேகமும் வசப்படும். அதன் மூலம் தூலமாய் இல்லாது நுண்ணிய வடிவில் இருக்கும் இறைவனுடன் நாம் ஐக்கியம் ஆகலாம் என்று பல தியான முறைகளையும் அவர்கள் சொல்வார்கள். அப்படித் தியானிப்பதாலும் மற்ற பல பயிற்சிகளாலும் மனமும் அமைதி அடையலாம், தூலமாய் விளங்கும் உலகின் மீதும் பற்றுதல் இல்லாது அதன் விஷயங்களிலிருந்தும் விலகியிருக்கலாம். ஆனால் அப்படி விலகியிருப்பவன் யார், அமைதியை அனுபவிப்பவன் யார் என்று கேட்டால் பதில் இருக்காது. இந்த யோகத்தின் அங்கமாய் விளங்கும் தியானத்தை ரமணர் உள்ளத்தால் செய்யப்படும் கர்மம் என்பார்.
மேலே சொல்லப்பட்ட முறைகள் எல்லாமே ரமணரைப் பொருத்தவரை விதம் விதமான கர்ம யோகங்கள்தான். இவை தவிர, செய்யப்படும் எந்தச் செயலும் இறைவனுக்காக என்றும், இறைவன் நமக்குக் கொடுத்த சக்தியால் என்றும் கருதிச் செய்வதையே குறிப்பாக கர்ம யோகம் என்கிறார்கள். மேலே சொன்னதுபோல இதுவும் நிச்சயம் கதி வழி காட்டும். மன அமைதியையும் கொடுக்கும். ஆனாலும் நாம் செய்யும் கர்மத்தோடு பந்தப்பட்டது போல, அதாவது கட்டுண்டது போல, ‘நாம் செய்கிறோம்’ என்கிற நினைப்பு நமக்குச் சிறிதாவது இருக்கலாம். அதிலிருந்தும் கர்மத்திற்கு உண்டான விளைவுகளை எதிர்பார்ப்பதில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்குமா என்றால் அது நாம் செய்யும் கர்மத்தால் இல்லை என்பதே பதில். விடுதலை அல்லது முக்தி வேண்டுமானால், அதற்கு உரிய மனோநிலையும், அறிவும் வேண்டும். வெறும் கர்மத்தால் அது ஆவது இல்லை. மேலும் கர்மத்தில் ஈடுபடுவதால் அதன் நேரடி விளைவாக ஆன்மாவைப் பற்றித் தெளியலாமா என்றால் அதுவும் இல்லை.
சாஸ்திரங்கள் சொல்கிறபடி கர்மங்கள், அதன் விளைவுகளையும், முறைகளையும் பொருத்து நான்கு வகைகளில் இருக்கின்றன.
ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறலாம். இது ‘ஆப்ய கர்மம்’ எனப்படுகிறது. அதாவது ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று அரிசி வாங்குவதையும், ஒரு பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆன்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாததால் ஆன்மாவை அப்படி அடைய முடியாது.
கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது ‘உத்பாத்ய கர்மம்’ எனப்படுகிறது. ஆன்மா இப்போது இல்லாது வேறொரு சமயத்தில் கிடைக்கும் என்பதும் கிடையாது. ஏனென்றால் ஆன்மா எங்கும் அல்லாது எப்போதும் இருப்பது.
மூன்றாவது வகையான கர்மம், ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது ‘விகார்ய கர்மம்’ எனப்படுகிறது. இது பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை அப்படி மாற்றுவதற்கு முன்பு ஓர் உருவம், பின்பு வேறொன்று என்று அதற்குக் கிடையாது என்பதால் ஆன்மாவை அப்படியும் அறிய முடியாது.
நாலாவதாக ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்கினால் அந்தப் பொருளை நன்கு காணலாம். அதற்கு ‘சம்ஸ்கார்ய கர்மம்’ என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவில் அசுத்தம் என்று ஏதும் கிடையாது. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே. ஆக இந்தக் கர்மம் செய்தும் நாம் ஆன்மாவை உணர முடியாது.
இப்படியாக எந்த விதமான யோக முறைகளைப் பின்பற்றினாலும் அதைச் செய்வதில் மனம் ஈடுபடுவதால், மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். ஆக எல்லா வழிகளும் நன்மை தருபவையே. ஆனால் ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம்.
சமையல் செய்வதற்கு பாத்திரம், அடுப்பு, பல வகைச் சாமான்கள், தண்ணீர் என்று எல்லாம் வேண்டும் என்பது போல மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் சங்கரர். இங்கு முக்கியமாக என்ன இல்லை என்றால் அடுப்பை உபயோகிக்க வேண்டும் என்றால் நெருப்பு வேண்டுமல்லவா, அது இல்லாதுபோனால் மற்றவை இருந்து என்ன பயன்? அதேபோல மன அமைதி, உலகில் பற்றில்லாமை, நுண்ணிய அறிவு என்ற மற்றதெல்லாம் இருந்தும் அமைதி கொள்பவன் யார், பற்றில்லாதிருப்பவன் யார், அறிவுடன் இருப்பவன் யார் என்ற அந்தத் தேடல் இல்லாதுபோனால் மற்றவை இருந்தும் பயன் இல்லை என்கிறார். ஆகவே அந்தத் தேடலின் மூலம் நமக்கு சித்திக்கும் ஞானம் இல்லாது போனால் மற்றவை பயனில்லை என்று ஆகிறது.
(தொடரும்)
மிக அருமை. எளிமை. நன்றாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தெளிவுரை.
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் கத்திருக்கிறோம்.