மணிமேகலையின் ஜாவா – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

(6)

மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் –

வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து

ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும் உரை
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்

ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத்
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்

– என்ற பகுதியில் வரும் சில குறிப்புகளை ஆய்ந்தேன்.

அட்சயபாத்திரத்துடன் வான் வழியே (அந்தரம் ஆறாப்) பறந்து சென்று சாவகத்தீவில் இந்திரன் வழிவந்தோர் ஆளும் பதியில் ஒரு சோலையில் இறங்கும் மணிமேகலை அங்கு எதிர்ப்படும் தருமசாவகன் என்னும் முனிவரை வணங்கி அந்தநகரின் பெயரையும், அதை ஆளும் மன்னவன் யாரென்றும் வினவ, அந்தப்பதியின் பெயர் நாகபுரம் என்றும் அதை ஆள்வோன் பூமிசந்திரன் மகனான புண்ணியராசன் என்றும் அவன் பிறந்த நாள் முதலாய் வான்மழை பிழையாது பெய்திருக்க மண்செழித்து வளம்பல பெருகி மக்களும் பிணி நீங்கி மகிழ்ந்து வாழ்வதாய்ச் சொல்கிறார் அந்த அருந்தவமுனி தருமசாவகன்.

நாகபுரம், தருமசாவகன்!

நான் கரவாங் (Karawang) என்ற நகரில் சிதாரும் (Citarum) என்ற நதிக்கரையில் வாழ்ந்திருந்தேன்.

அந்த நதியின் பண்டைப்பெயர் ஸ்ரீதர்மநதியென்று தற்செயலாய்த் தெரியவந்தது. அந்த நதியை ஒட்டிய பிரதேசமே முன்னாளில் தருமநகரா என்ற ஹிந்துப்பேரரசாய் இருந்ததையும் அதைப் பொ.ச.நான்காம் நூற்றாண்டு (?) காலத்தில் ஆண்ட பூர்ணவர்மன் என்ற மன்னன் தன்னை விஷ்ணுவின் பிரதிநிதியாய்க் கொண்டு விஷ்ணுபாதம் என்று ஒன்றைச் செதுக்கி நல்லாட்சி செய்த செய்தியெல்லாம் பின்னர் தெரியவந்தது.

https://en.wikipedia.org/wiki/Tarumanagara

தருமசாவகன் நிச்சயம் இந்தப்பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாகபுரத்தைத் தேடும் முயற்சியில் பாண்டுங் என்ற மேற்குஜாவாவின் பிரதான நகரின் அருகில் காம்புங் நாகா (Kampung Naga) என்றோர் இடம் இருப்பதாகத் தெரியவந்தது. உடன் புறப்பட்டேன்.

java_manimekalai

மிகமிகத் தொன்மையான பகுதியது. நாகமலை எனும் மலையினூடே வளைந்து செல்லும் பாதை. இயற்கையின் அபரிமிதமான கொடையில் மரகதப்பச்சை அரசாட்சி.

பொது நீரோட்டத்தில் கலக்காமல் தங்களின் தொல்மரபின்படியே அந்த ஊர்மக்கள் இன்றும் தனித்து வாழ்கிறார்கள்.

https://en.wikipedia.org/wiki/Kampung_Naga

அவர்கள் இன்றைய சுந்தானிய மொழியே பேசினாலும், முதியவர் சிலரிடம் துருவிக்கேட்டதில் தங்களின் தொல்மொழி பேசுவோர் மறைந்து விட்டதாகச் சொன்னார்கள். தங்களின் முன்னோர் வகுத்துத்தந்த மரபின் படி வாழ்வதே பெரும்பாடாய் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவர்களின் குலதேவதைக் கோயில் ஒன்று ஊர் மத்தியில் இருப்பதைக் கண்டேன். சுற்றிலும் துணியால் சுற்றி மறைத்திருந்தனர். அங்கு மட்டும் வெளியார்க்கு அனுமதி இல்லை என்று சொல்ல நான் அவர்களைப் போலவே இன்றும் உயிர்த்திருக்கும் தொல்குடியைச் சேர்ந்தவன், இந்தியாவிலிருந்து வந்திருப்பவன் என்று பணிவாய்க் கேட்டும் மறுக்க, பிரிய மனமின்றித் திரும்பினேன்.

மொழியையே தொலைத்துவிட்ட அவர்களுக்கு ஆபுத்திரன் கதையும் தெரிந்திருக்கவில்லை. சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்திருந்தால் அவர்கள் நம்பிக்கை பெற்றபின் பல அரியதகவல்கள் தெரியவரலாம். அதற்கு எனக்கு வாய்ப்பும் நேரமும் இல்லாமல் போய்விட்டது.

அடுத்து ‘தவளமால்வரை’ கண்டடைந்த காதை.

(7)

நாகபுரத்தின் சோலையொன்றில் உள்ள தருமசாவகன் குடிலில் மணிமேகலை என்றொரு பெண்துறவி வந்திருக்கும் செய்திகேட்டுத் தேடிவருகிறான் மன்னன் புண்ணியராசன்.

//அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன //

பெருவனப்புடன் கையில் பாத்திரமேந்தி அறவடிவாய் நிற்கும் இந்தப்பெண் யாரென்று வினவ, மணிமேகலை தற்போது தன் கையில் இருக்கும் அந்தப்பாத்திரம் முற்பிறவியில் மன்னன் புண்ணியராசன், ஆபுத்திரன் என்ற பெயரில் பிறந்து மதுரையில் சரஸ்வதி அருளால் பெற்ற அமுதசுரபி என்று சொல்லி, அதைக் கொண்டு ஜாவானியர் பசிதீர்க்க அவன் வங்கமேறி வந்து வழியில் தொலைந்துபோய், அவன் இந்தப்பிறவியிலும் ஆவழித் தோன்றிய கதையையும் சொல்கிறாள் மணிமேகலை.

தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.
தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.

மணிபல்லவத் தீவுக்கு உடன் புறப்பட்டு வருவான் எனில் அவன் முற்பிறவிக் கதையனைத்தும் நினைவுக்கு வரும் என்றும் அதன்பின் அவன் பிறவிப்பிணியறுத்து அறவழிச் செல்வதும் எளிதாகும் என்றழைத்துப் பறந்து செல்ல, மன்னன் அமைச்சிடம் ஒரு திங்கள் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மரக்கலமேறி மணிபல்லவத்தீவுக்கு சென்று அங்கு தன் முற்பிறவிக் கதையெல்லாம் ஆடியில் தெரிவது போல் கண்டு தெளிய அவனுக்கு நல்லறம் நல்கி மீண்டும் அவனை சாவகம் திரும்பச் சொல்லிவிட்டு வஞ்சிமாநகரம் நோக்கி வான்வழியேறி மீள்கிறாள் மணிமேகலை.

புண்ணியராசன் சாவகம் மீண்டு தன் முற்பிறவிப் பெயரான ஆபுத்திரன் என்ற பெயரிலேயே ஆட்சியைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்பது இன்னும் அதே பெயரைச் சூட்டிக்கொள்ளும் ஜாவானிய ‘ஆபுத்ரா’க்களால் அறிய வருகிறது.

மன்னன் புண்ணியராசனுக்கு முற்பிறவியில் ஆபுத்திரன் என்று பெயர்வரக் காரணமாயிருந்த, எங்கோ குமரி மாவட்டத்தில் வயனங்கோட்டில் பிறந்த சிசுவை ஏழுநாட்கள் பாலூட்டிக் காத்திருந்த பசுவும் அவனுக்கு முன்னதாகவே ஜாவாவில் ‘தவளமால்வரை’ என்ற குளிர்ந்த மலைப்பகுதியில் ‘மண்முகன்’ என்ற முனியின் ஆசிரமத்தில் தோன்றி அவன் பிறக்கக் காத்திருந்ததாகவும் மணிமேகலை காப்பியத்தால் அறிகிறோம்.

அந்நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்என் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம்
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து

மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்
பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய//

எங்கிருக்கிறது தண்என் சாவகத் தவளமால்வரை!

(8)

தவளமால்வரை! சங்கதத்தில் தவளம் என்றால் வெண்மை. குளிர்ந்திருக்கும் வெண்குன்றம். தருமநகர மன்னர் ஆண்டது மாலவன் பாதம் கொண்டு என்று முன்னரே கண்டோம்.

இந்தோநேசிய விக்கிபக்கத்தில் கல்வெட்டு ஆதாரங்களைத் தெளிவாகவே தந்திருக்கிறார்கள். இந்தச்சுட்டியில் பாட்டூஜயா (Batujaya) வளாகத்தில் கிட்டிய விஷ்ணு சிலைகளையும் காணலாம்:

https://id.wikipedia.org/wiki/Kerajaan_Tarumanegara

//Kedua (jejak) telapak kaki yang seperti (telapak kaki) Wisnu ini kepunyaan raja dunia yang gagah berani yang termashur Purnawarman penguasa Tarumanagara//

மேலும் மணிமேகலை ‘அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து’ வருமிடத்தில் இந்திரன் வழித்தோன்றல்களே அங்கே அரசாள்பவர் என்பதைச் சுட்டும் வண்ணம் இதுவும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது:

//jayavi s halasya tarumendrsaya hastinah airavatabhasya vibhatidam padadavayam

Located nearby is the Prasasti Kebon Kopi I, also called Telapak Gadjah stone, with an inscription and the engraving of two large elephant footprints. The inscription read: These elephant foot soles, akin to those of the strong Airwata (elephant, which God Indra used to ride), belongs to Tarumanagara King who is successful and full of control.//

விக்கியின் ஆங்கிலப்பதிப்பில் இவ்வளவு விளக்கமாய் இல்லையென்றாலும் இதே குறிப்பிருக்கிறது:

ஆனால் தவளமால்வரை எங்கிருக்கிறது?

மலை என்றால் இந்தோநேசிய மொழியில் குணுங் (Gunung). வெள்ளைமலை – Gunung Putih – என்று எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்க அந்தப்பெயரில் ஓரிடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அது எங்கோ போர்னியோத்தீவில் வடக்கு கலிமந்தனில். சோர்வு தந்தாலும் தொடர்ந்து ஜாவாவின் மேற்குப்பகுதியில் தேடியிருந்தேன்

இந்தத்தேடலில் எனக்குத் துணையாய் இருந்தவன் எனக்குப் பல வருடங்கள் காரோட்டியும், உற்ற நண்பனுமான நூருதீன் என்பான். வலக்கரம் போலிருந்தவன். ஒரு சனியன்று என்னிடம் நீங்கள் தேடியிருக்கும் வெள்ளைமலை எங்கிருக்கிறதென்று தெரியாவிட்டாலும் வெள்ளை மடு (Kawah putih) ஒன்றிருக்கிறது ஒரு மலையுச்சியில் போகலாமா என்றான். உடன் கிளம்பினோம்.

java_kawah_putih_1

பாண்டுங் நகரைத் தாண்டி சிவிதே (Ciwidey) என்ற சிற்றூரின் அருகில் பாதுவா (Gunung Patuha) என்ற பசுமை ததும்பி வழியும் மலைப்பாதையில் பயணிக்கையிலேயே குளிர் தொடங்கிவிட்டது. மேலே செல்லச் செல்ல கடுங்குளிர். கிட்டத்தட்ட பத்துடிகிரிக்குச் சட்டென்று மாறும் வானிலை.

மதியம் 2 மணிக்கு மேல் உச்சியில் மேகம் வந்து மூடி விடும் என்பதால் வேகமாய்ச் சென்றோம்.

வெளியே சரிவிலெங்கும் மானாவாரியாய் ஸ்ட்ராபெர்ரிச் செடிகளைப் பயிரிட்டிருந்தார்கள்.

உச்சியை நெருங்கு முன்னே கந்தகநெடி மூக்கைத் துளைத்துச் செல்ல காரை நிறுத்திவிட்டு இறங்கினால் கல், மண் என்று திரும்பிய பக்கமெல்லாம் வெண்மை போர்த்தியிருந்தது!

java_kawah_putih_2

சற்றுத் தொலைவே இருந்தாலும் அதற்குமேல் உச்சிக்குப்போக தனியே ஜீப்பில் செல்ல வேண்டும். 2400 மீட்டர் உயரமான மலையது. அந்தப் பிரதேசமே சுண்ணாம்புக்கற்கள் நிறைந்து ஒளிவீசியிருக்க அந்த எரிமலையின் வாயை நெருங்கினோம். அதனுள்ளே இளம்பச்சை, வெளிர்நீலம் என்று நிறம் மாறி மாறித் தோன்றும் ஓர் ஆழமான துல்லியமான ஏரி. மூச்சடைக்க நின்றேன். என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அற்புதக்காட்சியது.

தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.
தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.

கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை.

அந்த மலையின் பக்கங்களிலிருந்து சுனைநீர் ஓடிச்சென்று சற்றுத் தொலைவில் தருமநகரப் பிரதேசத்தினூடே ஓடியிருக்கும் தருமநதியில் கலக்கிறது.

https://en.wikipedia.org/wiki/Kawah_Putih

அந்த மலையும் அமிலமடுவும் அப்பகுதி மக்களுக்கு மிகப்புனிதமானதும், பல அதிசயங்களும், ரகசியங்களும் கொண்டதென்று அறிய வந்தது. தங்கள் மூதாதையர் இறங்கிவந்து சந்திக்கும் இடமது என்பது அவர் நம்பிக்கை.

java_kawah_putih_3

கீழே இறங்கித் திரும்புகையில் பசீர்ஜம்பு (Pasir Jambu) என்றொரு கிராமத்தைக் கண்டு நிறுத்தி இறங்கினேன். தவளமால்வரை அருகில் மண்முக முனி இருந்த இடமோ!

பசீர் என்றால் மண். ஜம்பு என்றால் பாரதம். யாவத்வீப மண்ணில் ஜம்புத்வீபத்தின் பாரதமண் வந்து கலந்த இடமோ!

ஈராயிரமாண்டுகள் கடந்தும் நினைவூட்டி நிற்கும் பெயர்கள்.

மணிமேகலா தெய்வத்தைத் தொடர்கிறேன்.

(9)


திரை இரும் பௌவத்துத் தெய்வம்

இந்தத் தேடலின் இறுதிப்பகுதியிது. மணிமேகலை காப்பியத்துக்குப்பின் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் பதியப்பெறாத கதையிது என்றும் சொல்லலாம். இன்றவள் பெருமையை என் மூலம் சொல்ல வைப்பதும் அந்தக் கடலம்மையே.

காப்பியத்தின் நாயகி மணிமேகலை வாழ்வினை முற்றாய் ஊழ்வழி நடத்திச் சென்று அந்த அப்பிறவியில் அவள் காமத்தை வென்று துறவுக்கோலமாம் அறக்கோலம் பூணவைப்பதும் மணிமேகலா தெய்வமே.

கோவலனின் குலதேவதை மணிமேகலா என்ற அந்தக் கடலரசி. அவள் திரவியம் தேடித் திரைகடலோடியிருந்த வணிகர்களைக் காக்கும் தெய்வம். மாதவி மூலம் பிறக்கும் குழந்தைக்குத் தன் குலதெய்வத்தின் பெயரையே கோவலன் வைப்பதன் பின்னணிக்கதை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் வருகிறது:

//இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்!
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக!’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று//

கோவலன் மூதாதை ஒருமுறை கடலோடிச் செல்கையில் மரக்கலம் உடைந்து தத்தளித்திருக்கையில் அவன் செய்த அருந்தவப் பலனால், இந்திரன் ஏவலில் கடல்மிசை வாழ்ந்திருக்கும் மணிமேகலா எனும் அதிதேவதை அவன்முன் வந்து தோன்றி அஞ்சேல் என்று அவனைக் காத்துக் கரைசேர்த்த கதையினை நினைவுகூர்ந்து அந்த மணிமேகலாவின் பெயரே குழந்தைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாதவியின் கனவிலும் அந்தத் தேவதை தோன்றி தம் உருக்காட்டி மறைகிறது.

‘பரப்பு நீர்ப் பவ்வம் (பெருங்கடல்) பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ என்றும் மணிமேகலை காப்பியத்தில் குறிக்கப்படும் அந்தக் கடலரசி, மணிமேகலையை மயக்கிலாழ்த்திக் கொண்டு சென்று மணிபல்லவத்தீவில் வைத்துத் துயிலெழுப்பி அவள் வாழ்வின் பயனை எடுத்தியம்பிப் பின்னர் ‘வேற்றுருவு எய்தவும், அந்தரம் திரியவும், ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க!’ என்றும், ‘மக்கள் யாக்கை உணவின் பிண்டம் ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்’ என்றும் – விரும்பியவண்ணம் உருமாறவும், வான்மிசை ஏறிப்பறக்கவும், பசியை வெல்லவும் வல்ல – மூன்று மந்திரங்களைச் சொல்லித் தருகிறாள்.

manimekala_java_4

இறுதியில்

//வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்// என்று வானோர்க்குப் பூசனையும் இந்திரவிழாவும் மறந்து போன பூம்புகாரைக் கடற்கோளில் மறைப்பதும் அவளே.

காப்பதும் அழிப்பதும் அந்தக் கடலன்னையே.

இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே!

எப்படி, எந்தப் பெயரில்?

(10)

பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காத்திருக்கும் கடலரசி ராத்து கிடுல்

அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). Ratu என்றால் ராணி Kidul என்றால் கடல். அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி!

ஆனால் இந்தோனேசியர் எவரும் அவளைக் கடலரசி என்று தவறியும் வேறேதும் அடைமொழியின்றிச் சொல்லிவிட மாட்டார்கள். தேவி ராத்து கிடுல், பெருமதிப்புக்குரிய தலைவி ராத்து கிடுல் (Kyai Kanjeng Ratu Kidul) என்றே மிகமிக அச்சம் கலந்த மரியாதையுடன் அவளை விளிப்பர்.

அவளே தென்கடலாம் ஹிந்துமஹாசமுத்திரத்தின் பேரரசி.

https://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul

Ratu_kidul_1

பெருங்கடல் சூழ்ந்த தீவுக்கூட்டங்களால் ஆன நாடான (Archipelago) இந்தோநேசியாவுக்கு அவளே காவல் தேவதை. ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்.

Ratu_Kidul_deity_and_Sukarnoஇந்தோநேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்ணோ இந்தக் கடலரசியின் பெரும்பக்தர். ஜாவாவின் தென்மேற்குமுனையில் ‘ப்லாபுவான் ராத்து’ (ராணியின் துறைமுகம்) என்றோர் கடற்கரையோரச் சிற்றூர் இருக்கிறது [ Pelabuhan_Ratu ] இது இந்தக்கடலரசி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பது ஜாவானியரின் தொன்னாள் நம்பிக்கை. இங்குதான் அதிபர் சுகர்ணோ ஒரு வாதாமரத்தின் கீழ் கடலரசியின் பல சக்திகள் கைவரப் பெற்றதாய்ச் சொல்வர். அதே இடத்தில் கடற்கரையோரம் ஒரு பிரம்மாண்டமான எட்டடுக்கு மாளிகை ஹோட்டல் (Samudra Beach Hotel) ஒன்றையும் சுகர்ணோவே கட்டி எழுப்பினார்.

இன்றும் இந்த ஹோட்டலில் ஓர் அறை (அறை எண் 308) இந்தக் கடலரசிக்கென்று பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்டு தினமும் பகலில் தேவிக்குப் பலவித பூஜைகள் செய்யப்பட்டு இரவில் பூட்டப்பட்டுவிடும். அவள் இரவில் வந்து போகும் அடையாளங்கள் இருப்பதை அங்கே பூஜை செய்வோர் நான் போயிருந்தபோது சுட்டிக் காட்டினர். அங்கே சில மணித்துளிகள் விசேட அனுமதி பெற்றுத் தொழுது வந்தேன்.

இந்த அறை குறித்து விவரமாய் வலையில் தேடிப் படிக்கலாம். மாதிரிக்கு ஒன்று இங்கே.

Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java
Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java

இந்தப்பகுதியில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் மாதத்தில் மீனவமக்கள் வந்து கூடி இரண்டு நாள் இந்தக் கடலரசிக்குத் திருவிழா கொண்டாடுவது வழக்கம். எந்த எதிர்ப்பு வந்தாலும் கடலன்னைக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவை யாரும் தடுக்க முடியாது. இதை விமர்சிக்க முயல்வோரே பேராபத்துகளில் சிக்கிக்கொள்ளும் கதைகள் இருப்பதால் இன்றுவரை இது தொடர்கிறது.

வரும் ஏப்ரலில் கொண்டாடப்பட இருக்கும் இந்த விழாகுறித்த அரசறிக்கை:

Sea offerings ceremony in Pelabuhan Ratu

Ratu_kidul_2பண்டுநாள்முதல் இவளின் காட்சி கிட்டிய ஜாவானியர் இவளை இடையில் மணியொளி வீசும் மேகலை அணிந்த தெய்வமாகவே வர்ணிக்கின்றனர். அதுபோலவே இவளை வரைந்திருப்பதை எல்லாப் படங்களிலும் காணலாம்.

இன்றும் இந்தக் கடலரசியின் உள்ளூர்க்கதைகள் பல பலவிதங்களில் பாடப்படுகின்றன. அவற்றில் குறிப்பாய் நம் காப்பியத்தில் காணும் வண்ணமே வேண்டியபடி உருமாறவல்ல, எங்கும் மனோவேகத்தில் பறக்கவல்ல இவள் வல்லமைகளே புகழ்ந்து பாடப்படுவன. இவளின் தமிழகத் தொடர்புகள் இன்று அறுந்து விட்டாலும் இவளே மணிமேகலா தெய்வம் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தென்பெருங்கடலின் பேரரசி மணிமேகலையின் கதையை எழுத அருள்புரிந்த தருமமாநகரத்தின் கடைசி மாமன்னன் ப்ரபு சிலிவாங்கியின் (Prabu Siliwangi) திருப்பாதங்களை வணங்கி முடிக்கிறேன்.

சமர்ப்பணம்:

மணிமேகலை காப்பியத்தை அரும்பாடுபட்டுத் தேடிச்சேகரித்து நமக்குத் தந்திருக்கும் தமிழ்த்தாத்தா பெரியார் உ.வே.சா. அவர்களுக்கு.

“அடிக்குறிப்பில் நான் எழுதிய குறிப்புரையோடு, புத்தகம் அச்சாகத் தொடங்கியது. முதல் பாரத்தைப் பார்த்து உத்தரவு கொடுத்த போது என் உள்ளத்தில் இருந்த உவகைப் பெருக்கை இறைவனே உணர்வான்! ‘இந்த நூலையும் நாம் பதிப்பிப்போமா!’ என்று அலந்திருந்தவனாதலின் அதற்கு ஓர் உருவும் ஏற்பட்டதைப் பார்த்து என் உள்ளமும் உடலும் பூரித்தன.

மகா வித்துவான்கள் பலர் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச்சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்டஉழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்”

– உ.வே.சா நினைவுக் குறிப்புக்கள்

10 Replies to “மணிமேகலையின் ஜாவா – 2”

 1. நல்ல ஆராய்வு. உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. தொடர்ந்து எழுதுங்கள்.

 2. பாதுகாக்கப்பட வேண்டிய பல அரிய ஆய்வுக் குறிப்புகள்! வாழ்த்துக்கள்!

 3. உங்கள் வார்த்தைகளால்,உங்கள் வர்ணிப்பால், நீங்கள் அடைந்த சந்தோசத்தை நேரில் கண்டது போல் நாங்களும் அடைந்தோம். மிக்க நன்றி.

 4. ஜாவானியர் வணங்கியிருக்கும் தேவி ராதுகிடுல் எனும் கடலரசியே மணிமேகலா தெய்வம் என்ற என் கருதுகோளுக்கு ஏதும் மாற்றுக்கருத்து கொண்டோர் அவர்தம் கருத்தையும் எழுத வேண்டுகிறேன்.

 5. https://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul
  //Another aspect of her mythology was her ability to change shape several times a day.[7] Sultan Hamengkubuwono IX of Yogyakarta described his experience on spiritual encounters with the spirit Queen in his memoire; the queen could change shapes and appearance, as a beautiful young woman usually during full moon, and appear as an old woman at other times.[8]//

  மணிமேகலை – 5-100
  மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  இந்திர கோடணை விழா அணி விரும்பி
  வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
  பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி..

  மணிமேகலை – மந்திரங் கொடுத்த காதை 10-080
  வேற்று உரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
  மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி..

 6. அன்பார்ந்த ஸ்ரீ ஜாவாகுமார்

  அருமையான விளக்கங்கள்.

  கண்ணைக்கவரும் புகைப்படங்கள். பொலிவு மிகு தென் தமிழகச் சீமையையும் கேரளத்தையும் பார்ப்பது போலிருந்தது உங்கள் புகைப்படத்தில் நதிக்கரையை ஒட்டிய கூரை வீடுகளும் ஓங்கிய தென்னை மரங்களும்(?).

  சிந்தாதேவி என்றழைக்கப்படும் ஜாவானிய சரஸ்வதிதேவியின் பொலிவு மிகு புகைப்படத்தை பதிவு செய்திருந்தீர்கள். ஜாவாவின் பாஷையில் சரஸ்வதி தேவையை எவ்வாறு அழைக்கின்றனர்? வஜ்ரயான பௌத்தத்தில் இருபத்தியொரு ரூபம் கொண்டவளான “எகவிம்சதி தாரா” எனவழைக்கப்படும் ஆபத்துக்களை விலக்குபவளாகவும் “வேதமாதா” (பௌத்தத்தில்!!!) என்றும் சுட்டப்படும் தாராதேவியின் ஒரு அம்சமா இந்த சரஸ்வதி தேவி?

  மணிமேகலையின் காலம் பொ.யு 2ம் நூற்றாண்டு என்று நிறுவுகிறீர்களா? மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பட்டதும் பொ.யு 2ம் நூற்றாண்டா?

 7. மிக அழகான மற்றும் அறிவுபூர்வமான கட்டுரை. இயற்றியமைக்கு மிக்க நன்றி குமார் அவர்களே. இராமசந்திர தீட்சிதர் சரித்திரரீதியாக இட்ட வாதங்களையும் மத்திய ஜாவாவில் உள்ள கோயிலின் படங்களையும் இணைத்த முறை ரசிக்கும் விதமாக இருந்தது. “சாவகம்” என்ற சொல்லை மேலோட்டமாகவே வாசித்து விட்டு அதைப்பற்றி சிந்திக்காமலே இருந்துவிட்டேன். அதற்குள் இத்தனை விஷயங்களா! இந்த கட்டுரையில் உள்ள புகைப்படங்களை ஹை-ரிசல்யுஷனில் பதிப்பித்தால் இன்னும் நாராக இருக்குமே?

  கலவை வெங்கட்

 8. அன்புசால் ஸ்ரீக்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,

  ஜாவானிய வீடுகள் கேரளபாணியில் அமைந்தவை. அவை தென்னை மரங்களே.

  சரஸ்வதி அந்தப்பெயரிலேயே (Saraswati) வணங்கப்படுகிறாள். இந்தோநேசிய இஸ்லாமியர் வாஷிங்டன் தூதரகத்தில் பிரம்மாண்டமான சரஸ்வதி சிலை ஒன்றை நிறுவிய அண்மைச்செய்தியை அறிந்திருக்கலாம்.
  https://samvada.org/2013/news-digest/muslim-majority-indonesia-gifts-goddess-saraswatis-statue-to-american-capital-city-of-washington/

  மணிமேகலையின் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது எனலாம். சாவகத் தொடர்புகள் மட்டும் மயிலையார் கட்டுரையில் தெளிவாக இல்லாமையால் அவற்றை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மற்றபடி அறுதியிட்டுச் சொல்வது கடினம். கூலவாணிகன் சாத்தனார் தானிய வணிகர் என்பதால் அவரும் சாவகப்பகுதிகளை கலமேறிக் கண்டு வந்திருக்கலாம். அவரும் சங்கப்புலவருள் ஒருவரல்லவா!

 9. அன்புள்ள கலவையார்க்கு: தங்களின் வாழ்த்து மிகுந்த ஊக்கமளிக்கிறது. நல்ல புகைப்படங்களைத் தேடி இணைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *