(1)
மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது.
’மணிபல்லவத்திடை
மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிர் உயச்
சாவகத்து உதித்தனன்’
முற்பிறவியில் தென்மதுரையில் பிறந்து சிந்தாதேவி தந்த அமுதசுரபியென்னும் பாத்திரம் பெற்றுப் பலவுயிர்களைக் காத்துப்பின் மணிபல்லவமெனும் தீவில் இறக்கும் ஆபுத்திரன் பின்பு சாவக நாட்டுள்ள நாகபுரத்தில் உலகுய்ய வேண்டிப் பிறக்கிறான்.
புகார் நகரில் நடக்கும் இந்திரவிழாவைக் காண வரும் மணிமேகலா என்ற தேவதை மணிமேகலையை தூக்கிச் சென்று மணிபல்லவத்தீவில் விட அங்கு தீவதிலகை எனும் தேவதையின் அருளால் முற்பிறவியில் ஆபுத்திரன் கையில் இருந்த அன்னம் குன்றாத அமுதசுரபி மணிமேகலைக்குக் கிட்ட பின்னர் ஊர் திரும்பிச் சென்று அவள் பலரின் பசிப்பிணி தீர்ப்பதாய்ச் சொல்லும் அந்தக்காப்பியம்.
பின்னர் அறவண அடிகளின் மூலம் ஆபுத்திரன் ஜாவாவில் பிறந்திருப்பதை அறிந்து அவனைத் தேடி அங்கு பறந்து வருகிறாள் மணிமேகலை.
நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் தங்கியிருக்க அங்குவந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்.
பூமிசந்திரன் என்ற மன்னனுக்கு மகனாய் புண்ணியராசன் என்று இப்பிறவியில் சாவகத்தின் அரசகுமாரனாய் இருக்கும் ஆபுத்திரனை அவன் முற்பிறவிக் கதையைத் தெரிந்து கொள்ளுமாறு மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்று பின்னர் மணிமேகலை அவனுக்கு அறவழியைப் போதித்துச் செல்வதாய்ச் சொல்கிறது அக்காப்பியம்.
இப்படித் தெளிவுபட தமிழகத்துக்கும் இன்று ஜாவா என்று வழங்கப்படும் சாவகத்துக்கும் மணிமேகலை காலத்திலிருந்து இருக்கும் தொடர்புகள் குறித்து முறைப்படி ஆய்வுகள் நடந்துள்ளனவா என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.
முதலில் மணிமேகலையின் காலம் எது என்றே பல்வேறு குழப்பங்கள். சிலப்பதிகாரம் பொ.ச. 2’ம் நூற்றாண்டின் இறுதியில் நடப்பதாய்க் கொண்டால் அதன் தொடர்ச்சியான மணிமேகலை?
தமிழ் விக்கிபீடியாவில் காமெடிப்பக்கம் ஒன்று சொல்வது:
//ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.//
(2)
மணிமேகலையின் காலம் பொது சகாப்தம் 2’ம் நூற்றாண்டு வாக்கிலேயே இருக்கும் என்று அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றை மயிலை சீனி.வெங்கடசாமி எழுதியுள்ளார்.
அந்த நீண்ட கட்டுரையிலிருந்து இத்திறக்கில் தொடர்புடைய பகுதியை மட்டும் பார்ப்போம்:
// சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது.
‘சாவகம்’ என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி. 400 இல் சென்ற ‘பாஹியன்’ (Fa-Hien) என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற ‘இத்-ஸிங்’ (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும், இத்ஸிங் என்பவரும் அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.
இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R. இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:
முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.
இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.
மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.
இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.
பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார் //
ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.
மயிலையார் இந்த ஆய்வை மேற்கொண்ட காலத்தில் சில உண்மைகள் வெளிவரவில்லை. எனவேதான் பிற சான்றுகள் வலுவாயிருப்பினும் இதில் மட்டும் சற்றே உறுதிப்படாமல் எழுதியுள்ளார். மணிமேகலையின் ஜாவானியத் தொடர்புகளை ஐயந்திரிபற நிறுவும் ஆதாரங்களை இனிக் காண்போம்.
(3)
ஜாவா என்ற பெயரே இந்தியர் வைத்த பெயர்தான்.
யாவாத்வீபா என்ற சங்கதப்பெயரிலிருந்து மருவி தமிழில் சாவகம் ஆனது. உலகின் தொன்மையான உணவுப்பயிர்களில் ஒன்றான பார்லிப்பயிர் செழித்திருந்த தீவு என்பதால் அப்பெயர்.
https://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/tamil/recherche
32 yava 3 m. barley (in the earliest times , prob. any grain or corn yielding flour or meal ; pl. barley-corns) RV. ; a barley-corn (either as a measure of length = 1/6 or 1/8 of an An3gula VarBr2S. ; or as a weight= 6 or 12 mustard seeds= 1/2 Gun5ja1 Mn. Ya1jn5.) ; any grain of seed or seed corn Bhpr. ; (in palmistry) a figure or mark on the hand resembling a barley-corn (supposed to indicate good fortune) VarBr2S.
35 yavadvIpa m. the island Yava R. (v.l. %{jala-d-}) Buddh.
யாவத்வீபம் என்ற பெயர் ஜாவா நெடுக பல பண்டைய அரசுகளின் கல்வெட்டுகளில் கிட்டுகிறது. காட்டாய் ஒன்று (விக்கிபீடியாவிலிருந்து):
The Canggal inscription was discovered in Canggal village, Southwest from the town of Magelang. This inscription was written in Pallava letters and in Sanskrit, and tells about the erection of a linga (symbol of Shiva) on the hill in Kunjarakunja area. This area is located at a noble island called Yawadwipa (Java) which is blessed with abundance of rice and gold. This inscription tells that Yawadwipa was reigned by King Sanna, whose long period of reign was marked with wisdom and virtue.
பாரதத்துடன் ஜாவானியத் தொடர்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதை வால்மீகி ராமாயணம் தொடங்கி (சுக்ரீவன் சீதையைத் தேடி நால்திசையிலும் வானரசேனையை அனுப்புகையில் யாவாத்வீபத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது) பிற நூலாதாரங்களின் மூலமும் அறியலாம். மதுரைக்காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் சாவகர் பற்றிய குறிப்பிருக்கிறது.
மிக முக்கியமான தாலமியின் குறிப்பு இங்கே:
Ptolemy, the astronomer of Alexandria who wrote his geography about the middle of the 2nd century A. D, refers to Java as Jabadieu (Yavadvipa) a name which he himself translates as the island of barley. Thus the Sanskrit name of the island was already known to foreigners. Chinese chronicles mention that about 132 A. D.
Tiao Picn (Deva Varman ?), the king of Ye-tiao (Yavadvipa), sent an embassy to China. The Emperor presented to Tiao Pien a seal of gold and a violot ribbon.
According to Ye Tiao, in Yavadvipa the first Chinese contact with a Hinduized Java occurred as early as 132 A.D. On the basis of the above document, G. Ferrand, in a 1919 issue of Journal Asiatique, stated that “Indonesia’s first contact with Hinduism must have occurred before the Christian Era”.
**Indian navigators were highly active in this region from before the Christian Era. They became even more active in the second and third centuries.**
வங்கம் என்னும் பாய்மரக்கப்பல் மூலம் கடல்வழிப் போக்குவரத்து தமிழகத்துக்கும் ஜாவாவுக்கும் இருந்தது என்று மணிமேகலையிலேயே குறிப்பிருக்கிறது:
‘ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
“சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!” என்றலும்
“அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து” என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்’
(4)
மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு வால்மீகி ராமாயண காலத்திலிருந்து யாவாத்வீபம் என்ற ஜாவாத்தீவே சாவகம் என்று கண்டோம்.
ஆனால் பொதுயுகம் (CE – Common Era) இரண்டாம் நூற்றாண்டில் அங்கு பௌத்தம் பரவியிருந்தமைக்கு ஆதாரம் இல்லையென்று பலர் சொல்வதற்குக் காரணம் மயிலயார் காலத்தில் சரியான சான்றுகள் கிட்டியிருக்கவில்லை என்பதால். ஆபுத்திரன் மறுபிறவி எடுத்தது சுமத்திராவிலா அல்லது போர்னியோவிலா என்றுகூடத் தேடியிருந்தனர்.
சாவகத்தீவில் 2’ம் நூற்றாண்டில் பௌத்தம் இருந்ததில்லை என்ற வாதம் 1997’ல் தெரியவந்த ஒரு முக்கிய ஆதாரத்தில் முழுமையாய் அடிபட்டுப் போனது.
அச்சமயம் நான் ஜாவாவில் இருந்தேன்.
மேற்குஜாவாவில் ’Batujaya’ என்ற இடத்தில் புராதனமான கோயில்நகரம் ஒன்று 1984’ல் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் பல சிதிலமான ஆலயங்கள். கார்பன் டேட்டிங்கில் 2’ம் நூற்றாண்டுக்கு முந்தையவை என்றும் கண்டனர். குறிப்பாய் ‘Candi Jiwa’ என்ற காம்ப்லெக்ஸ் மட்டும் சற்றே வித்தியாசமாய் பௌத்தத்துடன் தொடர்புடையதெனத் தெரியவர உடன் அங்கு சென்றிருந்தேன்.
ஆம். சிதாரும் என்ற மேற்குஜாவாவின் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த சண்டி ஜீவா பௌத்த பாணியில் அமைந்திருந்தது.
மேலும் விவரம் தேவையென்றால் கூகிளில் கிடைக்கும்.
https://en.wikipedia.org/wiki/Batujaya_Archaeological_Site
Batujaya is an archeological site located in the village of Batujaya, Karawang in West Java, Indonesia. The site is five square kilometers in area and comprises more than 20 structural remains buried in what Sundanese call hunyur or unur (high mounds of earth consisting of artifacts). Unur is similar to the manapo found at the Muara Jambi archaeological site.
The site was first found and examined by archaeologists from the University of Indonesia in 1984. Excavations have since uncovered 17 unur, of which three are in the form of pools. The structures found are made of bricks composed of a mixtures of clay and rice husks, not volcanic rock which is difficult to find in Batujaya. Two structures recovered are in the form of temples, one of which, known as Jiwa Temple, has been restored. According to Dr Tony Djubiantono, the head of Bandung Archeology Agency, Jiwa was built in the 2nd century.
மேலும் புகைப்படங்கள் இங்கே https://www.panoramio.com/photo/34743335
//AREA of SITUS SEGARAN BATUJAYA Blandongan Temple and Jiwa is 2 temple among 24 ” UNUR” ( local resident call to situs) ( Year data 2006),this temple finish restoration in 2010. This Situs spread over to cover in 2 countryside, that is Countryside of Segaran, District of Batujaya and Countryside of Telagajaya, District of Pakisjaya Seen from its for temples here have religion background of Buddha. Pursuant to analysis of carbon dating ( C14 ) indicating that culture here started at century second. //
(5)
மேற்குஜாவாவில் இந்த வளாகத்தைக் கண்டுவந்த நாள்முதலாய் என் தேடல் தீவிரமானது.
மணிமேகலையில் சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன்.
நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்.
முதலில் அந்தக் காப்பியத்தின் நாயகி மணிமேகலையின் பெயர் எங்கும் இதுவரை கிட்டவில்லை. மேலும் மணிமேகலை மந்திரசக்தியால் ககனமார்க்கமாய் அங்கு சென்றிறங்கி ஆபுத்திரனைச் சந்தித்துவிட்டுச் சின்னாளில் தமிழகம் திரும்பிச் சென்று விடுவதால் ஜாவானியர்களுக்கு அவள் வரலாறு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்து பிற சான்றுகளைத் தொடர்ந்தேன்.
அடுத்து ஆபுத்திரன். அவன் முன்கதை சுருக்கமாய்:
எங்கோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்மதுரையில் பிறந்து கன்னியாகுமரியில் பசுவொன்றின் பராமரிப்பில் அனாதையாய்த் தாய் விட்டுச் செல்ல மறையவர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்துவர சில கசப்பான சம்பவங்களால் வீட்டைவிட்டு வெளியேறி மதுரைக்கு வந்து ஊரம்பலத்தில் தங்கி பிச்சையெடுத்து அதை வறியவர்க்கும் வழங்கிப் பின்னர் சிந்தாதேவியெனும் வாணியின் அருளால் அவன் கைவரும் அமுதசுரபியால் அள்ள அள்ளக் குறையாத அன்னம் பெருகிவர மதுரையில் வறுமையை அறவே போக்கிய அருளாளன் ஒரு கட்டத்தில் ஆபுத்திரன் சாவகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.
உலகியற்கைக்கு முரணாய் ஆபுத்திரன் வழங்கியிருந்த இலவச உணவுத்திட்டம் கண்டு பொறுக்காத இந்திரன் மழைவளைத்தைப் பெருக்கி தக்கணமதுரையில் பஞ்சமே இல்லாது செய்ய ஆபுத்திரன் கடிஞை பயனற்றுப் போகிறது. அந்த நேரத்தில் சாவகத்திலிருந்து திரைகடலோடி வந்தோர் அத்தீவில் மழை பொய்த்துப் பசிப்பிணி சூழ்ந்திருப்பதாய்ச் சொல்ல அதைத் தீர்க்கும் பேராவலில் வங்கமொன்றில் ஏறி சாவகம் நோக்கிப் பயணிக்கிறான் ஆபுத்திரன்.
வழியில் புயலில் சிக்கிய வங்கத்தின் பாய்மரம் கிழிய மணிபல்லவத்தீவில் தங்க நேரிடுகிறது. அவனைத் தவறுதலாய் அத்தீவிலேயே கப்பல் விட்டுச் செல்ல அங்கேயே அமுதசுரபியைத் தக்கோர் வரும் நாளில் அவர் கையில் கிட்டுமாறு தீவதிலகையெனும் தேவதையிடம் வேண்டிக்கொண்டு உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கிறான் ஆபுத்திரன்.
சாவகம் செல்லும் இச்சை கொண்டு உயிர் துறந்தமையால் அங்கேயே மறுபிறவி எடுக்கிறான். ஆவின்பால் அன்புகொண்ட ஆபுத்திரன் அங்கே ஒரு பசுவிடமே தோன்றுவதாய்ச் சொல்லும் மணிமேகலை. பிள்ளையில்லாத ஜாவானிய மன்னன் பூமிசந்திரன் அவனைத் தத்தெடுத்து வளர்க்கிறான்.
ஆபுத்திரன் தன் முற்பிறவிக்கதையை மணிமேகலை தேடிவந்து நினைவூட்டியபடி மேற்கு ஜாவாவில் நல்லாட்சி செய்து மக்கள் பசி தீர்த்திருக்க வேண்டும்.
எனவேதான் ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர். Aputra Indonesia என்று வலையில் தேடிப்பாருங்கள். அதே போல் Bumi Candra (Chandra இல்லை) என்ற பெயரும் சுந்தானிய மக்களிடை வைத்திருக்கக் கண்டேன். நான் தேடியவரை ஆபுத்திரன் கதை எனக்குக் கிட்டவில்லை. ஜாவானிய அரசபரம்பரை வந்தோர் ரகசியமாய்க் காத்திருப்பதாய்ச் சொல்லப்படும் லோந்தார் (Lontar) என்ற பழஞ்சுவடிகளில் மறைந்திருக்கலாம்.
தருமசாவகனைத் தேடும்போதுதான் ஆச்சர்யம் காத்திருந்தது.
(தொடரும்)
சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் நீ களைவாய்!(மணிமேகலையில் ஆபுத்திரன் மதுரை அம்பலத்தில் வாணியைத் தொழுதேத்தும் பாடல்)
அருமை அருமை அசத்துகிறீர்கள் போங்கள். பள்ளியில் ஆறு ஏழு எட்டு வகுப்புகளில் படித்தபோது தமிழ்காவியமான மணிமேகலையைப்பற்றிய இந்த கதையைப்படித்தேன் மீண்டும் பிஏ படிக்கும்போது தமிழ் முதல் தாளீல் முதல்பருவத்திலும் மீண்டும் இவற்றை ப்படித்ததாக நினைவு. ஆண்டுகள் ஓடிவிட்டன அப்போது என்னுள் எழுந்தக்கேள்விகளுக்கு ஜாவா குமார் அவர்களின் கட்டுரை பதிலளிப்பது அதிசயம் அன்றி அற்புதம் அன்றி வேறென்ன.
மணிமேகலை புத்த பீடிகையை வணங்கினார். மணிபல்லவத்தீவுக்கு சென்றாள். ஆபுத்திரனின் அமுத சுரபியைப்பெற்றாள். இதெல்லாம் கதையா? உண்மையில் மணிபல்லவத்தீவு இருக்கிறதா என்று அப்போது எனக்குள் எழுந்தன வினாக்கள். ஆம் அவை இன்னும் இருக்கின்றன என் கிறார் ஸ்ரீ குமார். தொடருங்கள் எழுதுவதை நாமும் படிப்போம்.
மிகவும் அருமை, தொடருங்கள்.
அபூர்வமான தகவல்களுடன், உணர்வுகளைத் தூண்டும் அற்புதமான கட்டுரை.
திரு. குமார் அவர்களுக்கு எனது நன்றிகளும், வணக்கங்களும்.
அற்புதமான கட்டுரை. வாழ்த்துக்கள்.
சாவகத்தீவில் மணிமேகலை தெய்வத்தினைக் கண்டுபிடித்த சாவகக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜாவானிய சமயம் பண்பாடு பற்றிய தங்களதுக் கட்டுரைகளை தொடர்ந்து தமிழ் ஹிந்துவில் எதிர்பார்க்கும்.
சிவசிவ
வாழ்த்திய அன்பர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
சிவத்திரு.விபூதிபூஷண் அவர்களுக்கு,
இந்தத் தேடலில் சாவகத்தீவில் நடந்த மணிமேகலையின் தொடர்புடைய பகுதிகளையே தொகுத்திருக்கிறேன்.
மணிபல்லவத்தீவு ஒரு மர்மத்தீவென்றே எண்ண வேண்டியிருக்கிறது.
அது ஒரு புதிய பரிமாணத்தில் பெர்முடா முக்கோணத்தைப் போலொரு மிஸ்டிக் பிரதேசத்தில் இருக்கலாம் என்று விடுத்தேன். ஹாரிபாட்டரின் 9 3/4 நடைமேடையைப் போல் அங்கு செல்லத் தனிவழி திறக்கலாம். 🙂
மேலும், மணிமேகலை காப்பியப்படியே அது ஆளரவமற்ற மீளாத்தீவு. அங்கிருக்கும் தேவதைகள் மனது வைத்தாலன்றி மீண்டு வரவியலாது. அங்கே முற்பிறவியில் மடிந்த தன் உடலின் எலும்புக்கூட்டையும், தன்னைத் தேடிவந்து மடிந்த ஒன்பது ‘செட்டி’களின் எலும்புகளையும் அத்தீவின் காவல்தேவதையான தீவதிலகை காட்டுகையில் மயங்கிப் போகிறான் ஆபுத்திரன்.அவனைத் தேற்றி அனுப்பிவைப்பது மணிமேகலையின் அருள்.
ஒரு சிலர் இதை இலங்கையைச் சேர்ந்த நயினாத்தீவு என்றும் நம்புகிறார்கள்.
https://www.nayinai.com/ நயினாதீவு
காப்பியப்படி இத்தீவு புகாரிலிருந்து 30 யோசனை தொலைவில் அமைந்திருப்பதாய் அறிகிறோம். அது கப்பல் செல்லும் வழிக்கணக்கிலா அல்லது பறவை பறக்கும் நேர்க்கோட்டில் மணிமேகலா தேவதை பறந்து செல்லும் அளவிலா என்பதும் புதிர்.
இத்தொடரினை8 முன்பு வாசிக்கத் தவறிவிட்டேன். இப்பொழுதுதான்வாய்த்தது. மிக அற்புதமான செய்திகள். மணிமேகலையைச் சுவைக்கப் புதிய செய்திகள். குமார் அவர்கள் ஜாவாகுமாராக ஆனதால் நமக்குக் கிடைத்துள்ள பயன் இத்தொடர்ர்.