46 பாரத செவிலியர் தாயகம் திரும்பியது இந்திய வெளியுறவுத்துறையின் செயலாக்கத்திலும் பார்வையிலும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்த விஷயத்தில் இதுவரைக்குமான இந்திய அரசாங்கங்களின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. குறிப்பாக இந்திய தூதரக அதிகாரிகள் பிற நாடுகளில் வாழும் சக இந்தியர்களின் கஷ்டங்களை கண்டு கொள்ளாமல் நடந்து கொள்ளும் விதம் இவ்வாறு பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் மீதே வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் இம்முறை விஷயங்கள் வேறாக இருந்துள்ளன என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் தேசத்தவர் இவ்வாறு கடத்தப்படும் போது செயல்படும் விதம் என்றைக்குமே இந்தியர்களின் ஆற்றாமைக்கு இலக்காகியுள்ளது. என்றைக்கு இந்தியாவிலும் இப்படி இந்தியர்களின் உயிர்களை மதிக்கும் ஒரு அரசு செயல்பட ஆரம்பிக்கும் எனும் ஆதங்கம் ’எண்டபி’ நிகழ்வை பார்க்கும் போதெல்லாம் இந்தியர்களுக்கு ஏற்படும். வாஜ்பாய் அரசாங்கத்தின் காலகட்டத்தில் நிகழ்ந்த காண்டகார் விமான கடத்தலின் போது இந்தியாவில் இருந்த ஊடகங்கள் மிக தீவிரமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கடத்தப்பட்ட விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களை பயன்படுத்தி ஒரு உணர்ச்சிகர மிரட்டலை (emotional blackmail) செய்ததையும் பின்னர் இந்திய உயிர்களுக்காக பயங்கரவாதி விடுவிக்கப்பட்ட அந்த அவமானகரமான நிகழ்வையும் பின்னர் அதை வைத்தே வெட்கமில்லாமல் அதே ஊடகங்கள் பாஜகவை விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது.
இம்முறையும் அதே கதையை மீண்டும் செயல்படுத்த ஊடகங்கள் முனைந்தன என்பதுதான் உண்மை. ஆனால் அதிர்ஷ்டவசமாக இம்முறை அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டது, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது மற்ற அரசியல் நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இந்த பிரச்சனைக்காக உழைத்தார். ஈராக்கை சுற்றியுள்ள பிற அராபிய நாடுகளைத் தொடர்பு கொண்டார். இந்த அரசுகளின் ஒத்துழைப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்திய அரசு அரசுக்கு அப்பால் சதாம் ஹூசைன் ஆதரவு அமைப்புகளிடம் கூட தொடர்பு கொண்டது. ஜூன் 25 நெருக்கடி முற்றிய காலகட்டம். நரேந்திர மோதி ஒரு உயர்மட்ட அதிகாரிகளின் குழுவைக் கூட்டினார். தேசிய பாதுகாப்பு அதிகாரி அஜித் தோவல் அவர்களுக்கும் தேசிய உளவுத்துறை இயக்குநர் அஸீப் இப்ராஹீம் இருவரும் ரகசிய செயல்திட்டத்துடன் ஈராக் சென்றனர். (NSA Doval went on secret mission to Iraq, தி இண்டு, ஜூலை-8-2014) அஜித் தோவல் பல சாகசங்கள் நிகழ்த்தியவர். எப்படி பயங்கரவாத இயக்கங்களை சமரச மேசைக்கு கொண்டு வருவது எனும் கலை அறிந்தவர். பாகிஸ்தான் ஆகட்டும் வடகிழக்கு பிரிவினைவாத இயக்கம் ஆகட்டும் எங்கும் ஊடுருவி திறம்பட விஷயங்களை முடிப்பதில் அவரது திறமை திரைப்படத்தில் காட்டப்படும் உளவாளிகளின் சாகசங்களையும் முறியடிக்கும். மிஸோரம் பிரிவினைவாதிகளை சமரச மேடைக்கு கொண்டு வந்த இவரது பங்கு இன்றளவும் உளவுத்துறை வட்டாரங்களில் வியந்து பேசப்படுவது. அஸீப் இப்ராஹீமும் ஒன்றும் இளைத்தவர் அல்ல. தோவல் போலவே காரசாரமான நேர்மையான அதிகாரி. தேசிய உளவுத்துறையின் முதல் இஸ்லாமிய இயக்குநர் என்பது அவரது பயோடேட்டாவின் ஒரு தரவு மட்டும்தான். ஆனால் எவ்வித தயவு தாட்சண்யமும் பார்க்காத நேர்மையாளர். அவரது நேர்மைக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அவர் இயக்குனரான போதுதான் இஷ்ரத் ஜகான் விஷயத்தை வைத்து காங்கிரஸ் சிபிஐ மூலமாக மோதிக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தியது. அதற்காக தேச பாதுகாப்பைக் குறித்து கூட கவலைப்படாமல் காங்கிரஸ் இயங்கியது. அதைத் தடுத்து உளவுத்துறையின் செயல்பாட்டை ஆதரித்து இயங்கி காங்கிரஸாரின் வெறுப்பையும் அன்றைய சிபிஐயின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர். ஆனால் மதம், அரசியல் விளையாட்டு ஆகியவற்றை மீறி உண்மையை பெரிதாக மதித்ததால் காங்கிரஸால் அன்று மோதியை எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அட்டகாசமான இருவர் ஜோடிதான் ஈராக்கில் களமிறங்கியது.
விளைவுகளை நாம் நம் வீட்டு தொலைகாட்சிகளில் கண்டோம். அவர்கள் திரும்பியது ஆனந்தம். அவர்கள் குடும்பங்களுடன் இணைந்த காட்சிகள் சந்தோஷம். ஆனால் அண்மையில் பெரியவர் பாரதிமணி சொன்னது போல அவர்கள் தம் உறவினரை அணுகுவதற்கு முன் வேட்டை நாய்களென பாய்ந்த ஊடகர்களின் வெறித்தனம் அசிங்கமாகத்தான் இருந்தது. கேரள செவிலியரின் மிக மோசமான ஆங்கில ஒலி வெள்ளம் செய்தியோடைகளை மூழ்கடித்தன. வழக்கம் போல ஸ்டாக்ஹோல்ம் சிண்ட்ரோமுடன் ’போற்றிப்பாடடி பெண்ணே பயங்கரவாதி காலடி மண்ணே’ என்கிற ரீதியில் அவர்கள் கொடுத்த பேட்டிகளை கர்மசிரத்தையாக நம் உள்ளூர் அடிப்படைவாதிகள் தலை வெட்டப்பட்டு சாகும் ஷியாக்களின் மரணத்தையும் வெடிவைத்து தகர்க்கப்படும் பல ஷியா மசூதிகளின் அழிவையும் ஹலால் ஆக்கினர். சரி விஷயத்துக்கு மீண்டும் வருவோம். இப்படியெல்லாம் நம் ஊடகங்கள் கோமாளி கூத்தடிக்கும் போது உண்மையாக இதற்காக உழைத்தவர்கள் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் ஏவுகணைகள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. ஈராக்கில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றுவதற்காக இவை அங்கே நிலைநிறுத்தப்பட்டன. (India deploys warship in Persian Gulf, PTI, June-28-2014) 46 செவிலியரை மட்டுமல்லாமல் இன்னும் 130 இந்தியர்களை மீட்டதில் இவற்றின் பங்கு என்ன என்பது ஒருவேளை வரலாற்றில் என்றென்றைக்கும் வராமலே போய்விடலாம்.
இந்திய அயலுறவுத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த அக்பரூதீன் இது குறித்து கூறியுள்ளது முக்கியமானது. “நம் மக்கள் இன்னும் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிடித்திருப்பவர்களைக் குறித்து நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்போது இது குறித்து கூறப்படும் எதுவும் (எங்கள் மீட்பு முயற்சியை) பாதிக்கலாம்.எனவே எவருடன் இணைந்து இந்த விடுதலையை சாத்தியமாக்கினோம். எப்படி சாத்தியமாக்கினோம் என்பதைக் குறித்து இப்போது சொல்வதற்கில்லை. நாங்கள் அனைத்து கதவுகளையும் பயன்படுத்துகிறோம். தேசத்தின் அனைத்து சக்தியையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம்.” ஒரேயடியாக பயங்கரவாதிகளுக்கு பணிந்து போவது என்பதற்கும் தேவையற்ற ஊடக அழுத்தங்கள் என்பதற்கும் அப்பால் இந்திய அரசு செயலாற்ற முடியும் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை, உளவுத்துறை ஆகியவை இணைந்து செய்து காட்டியுள்ளன. இதற்காகவெல்லாம் மோதி தலைமையிலான அரசை இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் பாராட்டும் என நினைத்திட வேண்டாம். அவை தம் கடமையை தம் ஏவல் எஜமானர்களுக்காக விசுவாசத்துடன் செய்யும்.
தமிழர்களாகிய நாம் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. இதில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நடத்தை மிகவும் நேர்மறையாக இருந்தது. இதை அவர் அரசியலாக்காமல் விவேகமாக செயல்பட்டார். கேரள செவிலியரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் அதை வைத்து அரசியல் செய்வதில் அவர் காட்டவில்லை. இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழர்களை பயன்படுத்தி நம் அரசியல்வாதிகள் அடித்த கோமாளி கூத்துகளை கொஞ்சம் நினைவுப்படுத்திப் பார்க்கலாம். குறைந்த பட்சம் இப்போதாவது எஞ்சியிருக்கும் தமிழர்களை மீண்டெழ வைக்க நாம் அறிவுசார்ந்து நெடுநோக்குத் திட்டத்துடன் என்ன செய்கிறோம் என யோசித்தால் உணர்ச்சிகர கோஷங்களுக்கு அப்பால் எதுவுமில்லை. தமிழக மீனவர்களுக்காக உணர்ச்சிகர அரசியலாக்குதலுக்கு அப்பால் எழும் ஒரே அக்கபூர்வமான வேதனை குரல் ஜோ டி குரூஸுடையது மட்டும்தான். தமிழக அரசியல் கேரளத்தை பார்த்து படிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. கட்சி பேதமற்று தமிழர்களுக்காக உணர்ச்சி பூர்வ அரசியலைத் தாண்டி ஆக்கபூர்வமாக செயல்படுவது எப்படி என்பது அது. ஆனால் தமிழ் வெறுப்பும் சிங்கள ஆதரவும் கொண்ட High level கைக்கூலிகள் தமிழர்களுக்கு வாய்த்திருக்கும் ஒரு சாபக்கேடு அந்த சாபக்கேடு மலையாளிகளுக்கு இல்லை என்பதும் மற்றொரு கசப்பான யதார்த்தம்.
இன்னும் பஞ்சாபைச் சார்ந்த 39 இந்தியர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் இடங்களில் உள்ளனர். அவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் இந்திய அரசு வெற்றி பெற வேண்டுமென்று ஒவ்வொரு உண்மையான இந்தியனும் விரும்புகிறார் என்பதில் ஐயமில்லை. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும். தமிழர்களாகிய நாம் இந்த சரியான அரசை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கும் மலேசிய தமிழர்களுக்கும் ஏன் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான சுயமரியாதையும் வளமும் கொண்ட வாழ்வை ஏற்படுத்த தங்கள் முழு அறிவையும் அரசியலுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும்.
இது முடிவல்ல… தொடக்கம்.
//வழக்கம் போல ஸ்டாக்ஹோல்ம் சிண்ட்ரோமுடன் ’போற்றிப்பாடடி பெண்ணே பயங்கரவாதி காலடி மண்ணே’ என்கிற ரீதியில் அவர்கள் கொடுத்த பேட்டி//
இனியேனும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படுபவர்களை உடனடியாக மீடியாக்களிடம் பேச விடக்கூடாது. ஓரிரு நாள்களேனும் அவர்களைத் தனி இடத்தில் வைத்து, உளவியல் நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளித்து, ஸ்டாக்ஹோல்ம் சின்ட்ரோமிலிருந்து மீண்ட பின்னரே, ஊடக பயங்கரவாதிகளைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். மீட்புக் குழுவில் உளவியல் நிபுணர்களும் இடம்பெறுவது அவசியம்.
வெளியுறவுத்துறை என்றால் என்ன என்பதை இந்த அரசு காட்டியுள்ளது. இதை வெளிகொணர்ந்த இந்த பதிவு மிகவும் அருமை.
//விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ்//
இவ்விரண்டு கப்பல்களிலும் ஏவுகணைகள் பொருத்தப் பட்டுள்ளனவே அன்றி, விமானம் தாங்கியவை அல்ல. நம்மிடம் தற்பொழுதுள்ள விமானங்கள் தாங்கிய போர்கப்பல்கள் இரண்டு – ஐ.என்.எஸ்.விராட் மற்றும் ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா.
மோடி அரசுக்கு நமது பாராட்டுக்கள்.
நமது இந்திய செவிலியர்களை மிகவும் கண்ணியமாக நடத்திய போராளிகள் தாங்கள் நோன்பிருந்தாலும் நோன்பிருக்காத அந்த சகோதரிகளுக்கு அந்த இக்கட்டான நிலையிலும் உணவுக்கு ஏற்பாடு செய்தனர். ‘நீங்கள் எங்களின் எதிரிகளல்ல. நீங்கள் எங்களின் சகோதரிகள்’ என்று கூறி எங்களின் மேல் ஒரு துரும்பு கூட படாமல் கண்ணியமாக இந்திய ஹைகமிஷனிடம் எங்களை ஒப்படைத்தனர். அந்த போராளிகள் மிகவும் நல்லவர்கள்’ என்று அனைத்து செவிலியர்களும் பேட்டியாக கொடுத்ததை அநீ வசதியாக மறந்து விட்டார்.
அந்த போராளிகள் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள் என்பதாலேயே அனைத்து பெண்களும் கண்ணியமாக திருப்பி அனுப்பப் பட்டனர். இதில் மோடி அரசோ, சுஷ்மாவின் வெளியுறவுத் துறையோ போர் மேகம் சூழ்ந்த அந்த இடத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. மோடியின் பேச்சையோ, சுஷ்மாவின் பேச்சையோ கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை என்பதை அநீ அறியாதவர் அல்ல.
எனவேதான் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தம் ‘ஈராக்கில் போரிடும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறாதீர்கள்: போராளிகள் என்று கூறுங்கள்’ என்று சட்டமன்றத்திலேயே உரக்க கூறினார். இதையும் அநீ வசதியாக மறந்து விட்டார்.
எப்படியோ நமது சகோதரிகள் பாதுகாப்பாக வந்து தங்கள் உறவினர்களை சந்தித்தது பெருத்த மகிழ்ச்சியை நம் அனைவருக்கும் கொடுத்தது.
Excellent as usual Mr Neelakandan. But why only Tamils? All Indians should utilise the present government.
//எனவேதான் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தம் ‘ஈராக்கில் போரிடும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறாதீர்கள்: போராளிகள் என்று கூறுங்கள்’ என்று சட்டமன்றத்திலேயே உரக்க கூறினார். இதையும் அநீ வசதியாக மறந்து விட்டார்.//
திரு சுவனபிரியன்
முஸ்லிம்களின் வோட்டு ஒன்றுதான் ஆட்சியைப் பிடிக்க ஒரே வழி என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளில் அவரும் ஒருவர். அவர் வேறு எப்படிப் பேசுவார்.
இந்த ‘போராளிகள்’ புதிதாக ஒரு உலகப்படம் வரைந்து அதில் இந்தியா முழுவதும் இஸ்லாமிய நாடாக காண்பித்து இருக்கின்றார்களே அது உங்களுக்கு சரி என்று படுகின்றதா ? ஏனெனில் எங்களுக்கு அதில் நிச்சயம் சம்மதம் இல்லை.
மிக மிக அருமையான கட்டுரை. மோடி சர்கர்தான் இந்தியாவின் உண்மையான சர்கராய் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இது சுபாஷ், பட்டேல், மோடி என்ற நேர் வரிசை மற்றும் நேர்மையான வரிசை.
பஞ்சாப்பை சேர்ந்த 39 பேரும் இவ்வாறு விடுவிக்கப்பட விரும்புகிறேன்
////////முஸ்லிம்களின் வோட்டு ஒன்றுதான் ஆட்சியைப் பிடிக்க ஒரே வழி என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளில் அவரும் ஒருவர்////////
ஒருவரைப் பற்றி நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.மற்றவர்களைப் பற்றி நான் சொல்லுகிறேன் திரு ரங்கன் சார். திரு EMS முஸ்லிம்களை திருப்தி படுத்த மல்லபுரம் என்ற புதிய மாவட்டத்தை ஏற்படுத்த உதவினார்.
மேற்கு வங்காளத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க இடதுசாரிகள் முன்வந்தனர்.
இமாம்களின் சம்பளத்தை உயர்த்தி தரவும் உருது மொழியின் அந்தஸ்தை உயர்த்தவும் திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.
கேரளாவில் கல்வி அமைச்சர் அரசு பள்ளிகளில் கரும்பலகையினை பச்சை பலகையாக மாற்ற உத்தரவிட்டார். மேலும் குஞ்சலிகுட்டிஎன்ற முஸ்லிம் லீக் கட்சி காரர் மத காரணம் காட்டி குத்துவிளக்கை ஏற்ற மறுத்துவிட்டார். ஆனால் தமிழ்நாட்டிலோ ரம்ஜான் நோன்பு திறப்பின்போது நம்மவர்கள் குல்லா அணிந்து சட்டையின் காலரில் மடித்த கைக்குட்டையை வைத்து லுங்கி கட்டிக்கொண்டு கஞ்சி குடிப்பார்கள்.
ஒரு ஈழத் தமிழானக இந்தக் கட்டுரையை ஒரு ஆக்க பூர்வமானது என ஏற்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. மிகச் சிறந்த பார்வை.