நம்பிக் கெட்டவர் இல்லை

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

விஞ்ஞானம் என்ற சொல்லுக்கு பிரத்தியட்சம், தர்க்கவாதம் என்ற பொருளையே தற்போது பயன்படுத்துகிறோம். இதனை சிந்தனைக்கான வழிமுறையாக தேர்வு செய்துகொண்டு புராதனமானதும் சனாதனமானதுமான தர்மத்தை எதிர்ப்பது நீண்டகால வழக்கமாக உள்ளது.  

“வேதங்களில் எல்லாம் இருக்கிறதாம்…” போன்ற ஏளனத்தோடு நம்மவர்களே நம் கலாச்சாரத்தை அவமதிக்கத் தொடங்கி அதுவே நாகரீகம் என்பதாக வளர்த்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, நம் கலாச்சாரத்தின் மீது மதிப்பும் அன்பும் வைத்துள்ள சிலர் மேற்சொன்ன அறிவாளிகளுக்கு பதில் அளிப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். மகிழ்ச்சியே.

ஆனால் இந்த விளக்கங்கள் சில இடங்களில் அளவுக்கு அதிகமாக செயற்கையாகவும் நீர்த்துப்போயும் தோற்றமளித்து சனாதன தர்மக் கருத்துகள் மீது கௌரவத்தை தளர்வு செய்யும்படியாக உள்ளன.

ஒரு விஷயத்திற்கு தர்க்கம், பிரத்தியட்சப் பிரமாணம் இவற்றின் மூலம் விடை தற்போதைக்கு கிடைக்காமல் போகலாம். அதற்காக அந்த விஷயமே பொருளற்றது என்று முடிவெடுக்க இயலாது. நம் தினசரி வாழ்க்கை விவகாரங்களையும் மனித நடத்தையையும்  ஆராய்ந்து பார்த்தாலே எத்தனை தூரம் சமூகத்திற்கு ஏற்பில்லாத, குழப்பமானதும் இயல்புக்கு மாறானதுமான கருத்துகள் தென்படுகின்றன என்பது புரியும். அவை எதுவும் தர்க்கத்துக்கு எட்டாதவையே!

இவர்களின் பிரத்யட்சவாத  கேள்விக்கு பதில் அளிக்காததால் நம் கலாச்சாரத்தில் விஞ்ஞானம் இல்லை என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக,  நம்பிக்கைகளுக்கு கொடுக்கும் ஆதரவுக்கும் வேத புராண இதிகாச சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்ட பிரமாணங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஏதாவது ஒரு ஆசாரத்தையோ சம்பிரதாயத்தையோ நிரூபிப்பதற்கு நாம் வைதிக சாஸ்திரங்களை முக்கியமான ஆதாரமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த சாஸ்திரங்கள் சயின்ஸுக்கு ஏற்ப ஒத்து வருமா வராதா என்ற கேள்வி முக்கியமானது. சயின்ஸின் பிரமாணங்கள் வேறு.

வேதம் குறித்து கூறுகையில்… எங்கு பிரத்யக்ஷம் போன்ற புலனறிவுகள் விடை கூற இயலாமல் மௌனம் வகிக்கிறதோ அங்கு வேதம் பதில் அளிக்கிறது என்று விளக்கினர் மகரிஷிகள்.

சயின்ஸ் என்பது ஒரு தொடர் பயணம். அவற்றின் ஆராய்ச்சிக்கு முடிவில்லை. மாற்றத்தோடு கூடிய பௌதிக நடைக்கு உள்ள இயல்பே சயின்ஸுக்கும் உள்ளது.

அதற்காக வேத விஞ்ஞானத்தில் பௌதீக விஞ்ஞானம் இல்லை என்று அல்ல. தேவைக்கு அதிகமாகவே உள்ளது. அவற்றையெல்லாம் கூறி அவற்றுக்கு மேலும் கூறியுள்ளது வேதம். அது என்ன என்பதை பரிசோதித்து தெரிவிப்பதற்கு இப்போது முயற்சிக்கிறார்கள்.

அவ்வாறு சயின்ஸ் ஒப்புக்  கொள்ளாவிடில் நம் ஆசாரங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று கூறும் அதிமேதாவி வர்க்கம் ஒன்று தயாராகி உள்ளது. ஒவ்வொரு சம்பிரதாயத்தையும் எதிர்த்துக் கொண்டே போனால் நமக்கென்று எதுவும் மீதி இருக்காது. இன்று ஒப்புக் கொள்ளாத சயன்ஸ் இன்னும் சிறிது காலம் கழித்து சற்று வளர்ச்சி அடைந்தபின், “இந்த சம்பிரதாயம் உண்மை என்று புரிகிறது” என்று தீர்மானிக்கலாம். ஆனால் அதற்குள் அந்த சம்பிரதாயம் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. சயின்ஸ் ஒப்புக்கொள்ளாத வைதிக தர்மத்தை எதிர்ப்பதை விட, வேதம் அங்கீகரிக்காத சயின்ஸ் கருத்தை வேண்டாம் என்று கூறினால் உண்மையில் எந்த ஆபத்தும் இருக்காது.

அண்மைகாலமாக, வேதத்திலிருந்து பிறந்த ஜோதிட சாஸ்திரத்தை விஞ்ஞானம் அல்ல என்று எடுத்தெறிந்து பேசுவதற்கு நம் மேதாவிகள் முயற்சித்து வருகிறார்கள். “வேண்டுமானால் யோகம், ஆயுர்வேதம் போன்றவற்றை பயிற்சி அம்சங்களாக வையுங்கள். ஏனென்றால் அவை சயின்டிஃபிகாக ஏற்கக் கூடியவை என்று நிரூபிக்கப்பட்டதால் மேல்நாட்டு மேதாவிகள் கூட அவற்றை அனுசரித்து கடைபிடிக்கிறார்கள்” என்று விளக்கமும் விமரிசனமும் அளித்தார்கள். 

ஆனால் சிறிது காலம் முன்பு வரை இந்த வெளிநாட்டு மேதாவிகளும் இந்த சயின்டிஸ்ட்களும்  ஆயுர்வேதத்தையும் யோகக் கலையையும்  எடுத்தெறிந்து பேசினார்கள் என்ற விஷயத்தை மறக்கக்கூடாது. இவற்றை அசயின்டிஃபிக் என்று சாற்றுவதற்கு இவர்கள் முடிந்தவரை முயற்சித்தார்கள். பல நூல்களை எரித்து அழித்தனர். பல போராட்டங்களை நடத்தினர். உலகமெங்கும் அங்கீகரித்தாலும் இப்போதும் பிரிட்டிஷார் அங்கீகரிக்காமல் உள்ளனர். பல நூற்றாண்டுகள் அவர்களின் ஆட்சியின் கீழ் கடந்த பின்… இயல்பாகவே ஆளப்பட்டவர்களிடமிருக்கும் அடிமை மனநிலையோடு நம்மவர்களும் அவர்களுக்கு பஜனை செய்தார்கள். செய்து வருகிறார்கள்.

ஒரு உதாரணம்… “ஆயுர்வேதம் என்பது பைத்தியக்காரர்களின் பஞ்சாயத்து என்றும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானித்தது. அது அறிவியலுக்கு எதிரானது என்று நிரூபிப்பதற்கு ஒரு குழுவை அமைத்து அதைக் கொண்டு அஸ்வகந்தா, பலா அதிபலா போன்ற மூலிகைகளை பயனற்ற செடிகள் என்று முடிவு செய்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரத பூமியில் இருக்கும் ஆயுர்வேத சாஸ்திரத்தை அடியோடு புதைத்து விடுவதற்கு முயற்சித்தார்கள்” என்று திருமல ராமச்சந்திரா அவர்கள் ஹம்பிலிருந்து ஹரப்பா வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். கேரளாவில் பல ஆயுர்வேத நூல்களை தீக்கிரையாக்கினர் கூட.

இவ்வாறு நம் கல்வி, கலைகளை அழிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளாக முயற்சிக்கின்றனர். அப்போது அன்னிய அரசுகள் அந்த வேலையைச் செய்தன. அவர்கள் போன பின் தற்போது குடியரசில் நம்மவர்களே நம் கலைகளை அலட்சியம் செய்து அபூர்வமான நம் சம்பிரதாய ஞானச் செல்வத்தை அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். 

அன்று அவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய ஆயுர்வேதத்தை இப்போது அங்கீகரித்து பயின்று பயிற்சி செய்வது போலவே இப்போது தேவையற்றது என்று ஒதுக்கும் ஜோதிட சாஸ்திரத்தையும் மந்திர விஞ்ஞானத்தையும் இன்னும் சில ஆண்டுகள் கழிந்தபின் சிறந்தவை என்று ஏற்பார்கள். ஆனால் அவர்களின் அங்கீகார முத்திரை விழுவதற்குள் நாம் எத்தனை எத்தனை புராதனக் கலைகளை இழுந்து நிற்போமோ! சிந்திக்கவேண்டும்.

இறுதியில் சிறந்த பழக்க வழக்கங்களைக் கூட ஏதேதோ பதில்களைக் கூறி அழியாமற்பேணும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம் என்பது வருத்தத்தை அளிக்கிறது. மஞ்சள் பூசிக் கொண்டால் ஆன்டிபயாடிக் என்று கூறி அந்த பழக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள் சிலர். “வேறு ஏதாவது ஆண்டிபயாட்டிக் பயன்படுத்தினால் போகிறது” என்று நையாண்டி செய்வார்கள். எனவே இத்தகைய பதில்களால் சம்பிரதாயத்தை பராமரிக்க  முடியாது. நம் புராண கதைகளைக் கூட அதேபோல் வேறு ஏதேதோ கூறி பேண வேண்டும் என்று முயற்சிப்பதும் வீண். “ராமா” என்று கூறுவதால் விளையும் வைப்ரேஷனால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் போன்ற விளக்கங்களால் ‘ஏற்க’ வைப்பதைவிட ‘ராமா’ என்று அழைத்தால் ராமன் அருள்புரிவான் என்ற பக்தியோடு கூடிய பதில் மேலானது.

இப்போது சயின்ஸ் மூலம் வெளிப்பட்ட உயர்ந்த விஷயங்களை, “நம்வர்கள் எப்போதோ கூறி விட்டார்கள்” என்று கூறுவதை விட நம்மவர்கள் எப்போதோ கூறிய உயர்ந்த விஷயங்களை சயின்டிஃபிகாக நாம் வெளியிட முயற்சி செய்வது புத்திசாலித்தனம். அந்த வழியில் அறிஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

இதுவரை சாஸ்திரங்களை கற்பவர்களுக்கு உலகில் சயின்ஸ் பற்றி தெரியாமல் போவதும் சயின்ஸ் தெரிந்தவர்களுக்கு முழுமையான சனாதன சாஸ்திரங்களின் பயிற்சி இல்லாமல் போவதும் ஒரு பூர்த்தி செய்ய இயலாத குறையாகவே இருந்தது. அதனால் அரைகுறை அறிவு கொண்ட புத்திசாலிகளும்  விமரிசகர்களும் செய்த வாதங்களின் எல்லையிலேயே இவை சிக்கிக் கிடந்தன.

அவ்வாறின்றி, நம் சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டு சில பௌதிக கருத்துக்களைக் கூட நிரூபித்து அதன்பின், இந்த உலகியல் கருத்துக்களைக் கூறி இதற்குப் பின் உள்ள சிறந்த காரணங்களை நம் வைதீக விஞ்ஞானம் கூறுகிறது என்று ஆத்ம விளக்கத்தை அளிக்கும் உபநிஷதங்களின் தீர்ப்பை எடுத்துக்கூறும் முயற்சியே தற்போதைய தேவை.

சயின்ஸ் வேத சம்பிரதாயத்தை அங்கீகரிக்காமல் போகலாம். ஆனால் வேதம் சயின்ஸை ஏற்கிறது. விஞ்ஞானத்தில் பௌதிகம் என்றும் பௌதிகமல்லாதது என்றும் இரண்டு இல்லை. அனுபவத்திற்கு எட்டுவது, எட்டாதது என்ற பிரிவுகளே உள்ளன. இந்த விஞ்ஞான கணக்குகளுக்கு எட்டாத பல ரகசியங்கள் சாதகர்கள் பலரின் அனுபவத்திற்கு எட்டியுள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்ட விஞ்ஞானச் செல்வம் நம்மிடம் அளவற்றதாக உள்ளது. அதனை பாதுகாத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் நம்மால் இயலாவிட்டாலும் நம் பின்னர் வரும் சந்ததிகள் ஆராய்வதற்காகவாவது நாம் விட்டுச் செல்ல வேண்டும்.

அன்று அன்னிய ஆட்சியாளர் செய்ததையே இன்று நாமும், நம் ஆட்சியாளர்களும் செய்கிறோம் என்றால், நமக்கு விடுதலை வந்ததாகப் பொருளா? நம்மை நாமே அரசாண்டு கொள்வது மட்டுமே சுதந்திரம் அல்ல அல்லவா? நம் கலாச்சாரத்தை நாம் காப்பாற்றிக் கொள்வதில்தான் 

உண்மையான சுதந்திரம் உள்ளது. அத்தகைய விடுதலை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

நம் முன்னோரான மேதைகள், உண்மையான பாரதியர்கள் கனவு கண்ட சுதந்திரம் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. நம் கலாச்சாரத்தை அழித்து விட வேண்டும் என்று சில நூற்றாண்டுகளாக போராடிய வெளிநாட்டு வன்முறையாளர்கள் கனவு கண்ட சுதந்திரம்தான் நமக்கு கிடைத்துள்ளது. அவர்கள் செல்லும் போது தம் சிந்தனைகளின் பிரதிநிதிகளை நம் தலைவர்கள், மேதாவிகள் என்ற வடிவங்களில் விட்டுச் சென்றுள்ளார்கள் என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.

இப்போது இந்த ‘பாதுகாத்துக் கொள்ளும்’ பொறுப்பு நம்முடையதே! மிகச்சிறந்த மாற்றங்களை சில இடங்களில் காணமுடிகிறது. வெளிநாட்டு மேதைகளும் நம் அறிஞர்களும் நம் சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டு பௌதீக விஞ்ஞானத்தை வெளியிட்டு வருகிறார்கள். பௌதிக, நாஸ்திக வாதங்களை வாயடக்கி வருகிறார்கள். இது இன்னும் தொடர வேண்டும். தொடரும்.

வருத்தமான விஷயம் என்னவென்றால் நம் கலாச்சாரம் குறித்து எதைப்  பேசினாலும் ‘மதம்’ என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடும் மந்தைகள் நிறைய கிளம்பியுள்ளன. எங்கு இந்த கலாச்சாரச் செல்வம் பிறந்து வளர்ந்ததோ அங்கே அதனை பாதுகாக்கும் அரசாங்கமே இல்லாமல் போனது மிகக் கொடூரம்! பிற நாடுகளில் அவ்வாறு அல்ல. அங்கு பிறந்த கலாச்சாரத்தை  கௌரவித்துப் போற்றும் அரசியல் அமைப்பு உள்ளது. நாம் அத்தகைய அதிர்ஷ்டத்தை அடையமுடியவில்லை.

இதற்குள்ளேயே பிரபஞ்சத்தில் பல அழகான, சூட்சுமமான, சிறந்த கலாச்சாரங்களை இரண்டு பிரபல மதங்கள் துவம்சம் செய்து அழித்து விட்டன என்பது வரலாறு அங்கீகரித்த உண்மை. இன்னமும் அத்தகைய செயல்களில் அவை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதும் அனைவரும் அறிந்த வாஸ்தவம். இந்தச் சூழலில் நாமே நம் கலாச்சாரத்தை காத்துக் கொள்வதற்கு நம் எல்லைக்குள்  பாடுபடவேண்டும்.

இன்றைக்கு நம் கலாச்சாரம் இந்த அளவாவது இருக்கிறது என்றால் அது சாமானிய மக்களின் ஈடுபாட்டால்தான். “ஆசாரப்ரபவோ தர்ம:”  கடைபிடிப்பதால் தர்மம் நிலைநிற்கும். நாம் கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருந்தால் போதும்! “தர்மோ ரக்ஷதி ரக்ஷித:”

(ஆகஸ்ட் 2001 ருஷிபீடம் மாத இதழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *