ம(மா)ரியம்மா – 11

This entry is part 11 of 14 in the series ம(மா)ரியம்மா

மறு நாள் பொழுது விடிகிறது. கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது. சேனல் குழுவினர் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். கண்ணில் படுபவர்களிடமெல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். ஒவ்வொரு சேனல் குழுவும் தமது அரசியலுக்கு ஏற்ப பேசச் சொல்லி எழுதிக் கொடுக்கின்றன.

நீங்க எந்த மதத்துக்கு மாறுவதா இருக்கீங்க..?

இஸ்லாமுக்குத்தான்.

ஏன்?

இது என்ன கேள்வி. நீங்கதான இஸ்லாமுக்கு மாறறதா சொல்லச் சொன்னீங்க. ரெண்டாயிரம் ரூபா கூடக் கொடுத்தீங்களே. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?

கட் கட் கட்….

இந்த கேள்விக்கு, இஸ்லாம் தான் உலகத்துலயே நல்ல மதம். அதனால மாறறேன் அப்படின்னு சொல்லணும்.

அதை நீங்க சொல்லித் தரலியே.

சரி. இப்ப சொல்லித் தந்தாச்சுல்ல. சொல்லுங்க.

அப்படியா… சரி… எடுங்க இன்னொரு 2000.

அதான் நேத்திக்குக் கொடுத்தேனே.

அது ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு. ரெண்டாவது கேள்வி கேட்டா இன்னொரு 2000 தரணும்.

சேனல்காரர் சற்று தயங்குகிறார்.

வேண்டாம்னா போ… கிறிஸ்தவத்துக்குத்தான் மாறுவேன்னு சொன்னா 3000 தர்றாங்களாம்.

இந்தா இந்தா 2000… இங்கயே இரு. என்று சொல்லியபடியே 2000த்தை எடுத்துக் கொடுக்கிறார்.

இஸ்லாம்தான் சிறந்தது என்று சொல்லிவிட்டுப் புறப்படுபவரை இன்னொரு சேனல் இழுத்துக்கொண்டு போகிறது. கேமரா மேன் கழுத்தில் தங்கச் சிலுவை மின்னுகிறது.

இப்பத்தான்யா இஸ்லாம்தான் சிறந்ததுன்னு சொன்னேன். உடனேயே கிறிஸ்தவம்னு சொன்னா சிரிப்பாங்கய்யா…

அதெல்லாம் பரவாயில்லை. இஸ்லாம்ல இருக்கற கெடுதல்கள் எல்லாம் இப்பத்தான் தெரியவந்தது. அதனால கிறிஸ்தவத்துக்கு மாறப்போறேனு சொல்லுங்க.

டயலாக் ரொம்ப நீளமா இருக்கே.

சரி… சரி… இந்தாங்க ஐந்தாயிரம்.

தம்பி விவரமானவன்தான். பிழைச்சுப்ப. நான் போய் வேற ட்ரெஸ் போட்டுட்டு வர்றேன். சரியா என்று சொல்லியபடியே தன் வீட்டுக்குள் செல்கிறார் அந்த கிராமவாசி.

*

இன்னொரு சேனல் குழு, ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம் ரகசியமாகப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண், முழு பர்தா அணிந்திருப்பதோடு ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் இருந்து பேசுகிறார்.

பர்தா அணிவது பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க. இந்து மதத்துல இருந்து மதம் மாறி வர விரும்பற பெண்களுக்கு இது சம்பந்தமா சில சந்தேகங்கள், எதிர்ப்புகள் இருக்கு. நீங்க நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இதை அணிந்திருக்கீங்க இல்லையா?

ஆமாம்.

இது உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு இல்லையா?

அப்படிச் சொல்ல முடியாது.

(சற்று தடுமாறி) அதாவது, நீங்க எங்கயாவது வெளிய போய்ட்டு வர்றதுன்னா இது பாதுகாப்பா இருக்கு இல்லையா. உடம்பு தெரிஞ்சா அவனவன் வெறிச்சுப் பார்ப்பான். காதுபடக் கிண்டல் பண்ணுவான்.

அப்படில்லாம் சொல்லமுடியாது. எனக்கு வாய்ப்பு கிடைச்சா நான் இதைக் கழற்றிட்டு சாதாரணமான டிரெஸ் போட்டுக்கிட்டு, சுதந்தரமா வெளியில போயிட்டு வர விரும்பறேன்.

நிர்பயாவுக்கு நடந்தது தெரியும்ல?

அவ லட்சத்துல கோடில ஒருத்தி. அதே ஊர்ல அதே ராத்ரில ஆயிரம் பேர் பத்திரமா வீடும் திரும்பியிருப்பாங்க. விபத்து நடக்கும்னு பயந்தா வீதியில வண்டியே இருக்காது. அப்பறம் பர்தா போட்டுட்டு போயிருந்தாலும் அது நடந்திருக்கும். ராத்திரிகள்ல பாதுகாப்பு இல்லாம பாதுகாப்பு இல்லாத இடங்களுக்குப் போகக்கூடாது.

பாலியல் வன்கொடுமைகள்னால பாதிக்கப்படற பெண்கள்லயே முஸ்லிம் பெண்களோட எண்ணிக்கைதான் ரொம்ப ரொம்பக் குறைவு.

வன் கொடுமைங்கறதுக்கு உங்களை மாதிரியான ஆண்களோட அகராதில இருக்கற அர்த்தத்துக்கும் எங்களோட அகராதில இருக்கற அர்த்தத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு பையா.

பர்தா மூலமாவும் சில கட்டுப்பாடுகள் மூலமாவும் உங்க மதம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுத்திருக்குல்ல?

ஆமா, ஜெயில் மாதிரியான பாதுகாப்பு.

சுதந்தரம்னு எதைச் சொல்றீங்க. அரையும் குறையுமா டிரெஸ் போட்டுக்கிட்டு, சிகரெட் மதுன்னு குடிச்சுட்டு, டிஸ்கொதெ, பார்ட்டிகள் கூத்தடிக்கறதையா..?

அது வெஸ்டர்ன் சுதந்தரம். அதாவது கிறிஸ்டியன் சுதந்தரம். எனக்கு புடவை தாவணி போட்டுக்கிட்டு, அப்பா அம்மா கூட வெளிய போயிட்டு ஸ்கூல், ஆஸ்பத்ரின்னு வேலை பார்த்து இருட்டறதுக்குள்ள வீடு திரும்பிட்டு… பாதி சுதந்தரம் பாதி பொறுப்புன்னு இருக்கணும்னு விரும்பறேன்.

அப்படின்னா நீங்க இந்துவா மதம் மாறப்போறீங்களா..?

அது முடியாது. ஆனா, அந்த சுதந்தரமும் பொறுப்பும் அங்கதான் இருக்குன்னு நீங்களே நம்பும்போது அந்த இந்து சகோதரிகள் கிட்ட ஒண்ணே ஒண்ணுமட்டும் சொல்ல விரும்பறேன்: பெஹன்… நீங்களாவது நல்லா இருங்க.

சரி… கடைசியா உங்க முகத்தை வெளியில காட்டுங்க.

இதை நீங்க டெலிகாஸ்ட் பண்ணினதுக்கு அப்பறம் என் உயிருக்கு உங்களால உத்தரவாதம் தரமுடியுமா?

பேட்டி எடுத்தவர் மௌனமாக இருக்கிறார்.

*

இன்னொரு சேனல் எடுத்த பேட்டி.

எங்களுக்கு தனி மாதா கோவிலு. தனி கல்லறைத் தோட்டம். எங்க வீட்டுல அவங்க கை நனைக்கமாட்டாங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கமாட்டாங்க. எங்க பாதிரியை குருத்தோலை ஞாயிறுக்கு ஜெபிக்க விடமாட்டாங்க. கொடி ஏத்தவிடமாட்டாங்க. தேர்ல ஏற விடமாட்டாங்க. உங்களையெல்லாம் மனுஷங்கன்னு ஊர்ல நடமாடவிட்ருக்கறதே பெரிசுடான்னு சொல்றாங்க.

இதெல்லாம் இந்து மதத்துல இருந்தப்பயும் இருந்ததுதான.

இந்து மதத்துல இருக்கற இந்தக் கொடுமைல்லாம் இங்க இருக்காது. எங்க வேதத்துக்கு வாங்கன்னுதான சொல்லிக் கூப்பிட்டாங்க. குல தெய்வத்தைக் கும்பிடாத… கோவில், திருவிழான்னு போகாத. இங்க உனக்கு எல்லாம் கிடைக்கும். மகாராசாவா ஆக்கமுடியாட்டாலும் மனுஷனா உன்னை நடத்துவோம்னுன்னு சொல்லித்தான வரச்சொன்னாங்க.

இங்க வந்ததுக்கு அப்பறம்தான உங்க புள்ளிங்களுக்கு ஸ்கூலுக்குப் போக முடிஞ்சிருக்கு.

அம்பேத்கர் எழுதின சாசனப்படி நடக்கற அரசாங்கப் பணத்தை எடுத்து பள்ளிக்கூடம் நடத்திட்டு ஆண்டவன்தான் கொடுத்ததுன்னு கதை விடறாங்க.

அந்தப் பணத்தை வாங்கி இந்துக்கள் ஸ்கூல் நடத்தியிருக்கலாம்ல.

அவங்க நடத்தினா ஆயிரம் கேள்வி… ஆயிரம் வரி. ஆயிரம் லஞ்சம். அதையும் மீறி நடத்தத்தான் செய்யறாங்க. பிரிட்டிஷ் காலத்துல எப்படி வ.உ.சியை கப்பல் கம்பெனி நடத்தவிடாம முடக்கினாங்களோ அதுமாதிரிதான் இந்துக்களுக்கு இந்த மதச் சார்பற்ற அரசு அத்தனை கெடுபிடிகளை வெச்சிருக்கு. சிறூபான்மைங்கற பேர்ல கிறிஸ்தவர்களுக்கு அத்தனை சலுகைகளைத் தந்துவெச்சிருக்கு.

அதெல்லாம் இல்லை. இந்துக்களுக்கு குறிப்பா பிராமணர்களுக்கு கல்வியை அடுத்தவங்களுக்குத் தரக்கூடாதுன்னு எண்ணம்.

எந்தக் கல்வியைத் தரலை? எந்தக் கல்வி அவங்க கிட்ட இருந்தது? கோவில் கட்டினது ஒரு ஜாதி. குளம் வெட்டினது ஒரு ஜாதி. வாணிபம் செஞ்சது ஒரு ஜாதி. வைத்தியம் செஞ்சது ஒரு ஜாதி. கப்பல் கட்டினது ஒரு ஜாதி. கலங்கரை விளக்கு கட்டினது ஒரு ஜாதி. அரசாண்டது ஒரு ஜாதி. ஆன்மிகம் வளர்த்தது ஒரு ஜாதி. பாதை வேறா இருந்தாலும் அத்தனை ஜாதிக்கும் இலக்கு ஒண்ணுதான். யாருக்கும் எதுவும் கிடைக்காமப் போகலை.

வேதக் கல்வியை அவங்க யாருக்கும் தரலை. கிறிஸ்தவத்துல வேதாகமத்தை யார் வேணும்னாலும் படிக்கலாம். ஓதலாம்.

ஏன்னா அங்க ஒரே ஒரு வேதாகமம் தான் உண்டு. அதனால அதை எல்லாருக்கும் தந்தாகவேண்டியிருந்தது. இந்து மதத்துல ஆளாளுக்கு ஒரு வேதம் இருந்தது. அய்யா வைகுண்டசாமி தனியா ஒரு வேதம் எழுதினாரு. வள்ளலாரு வேறொரு வேதம் எழுதினாரு. இன்னிக்கு மருவத்தூர் அம்மா வேறொன்னு எழுதறாங்க. இதேமாதிரியே அன்னிக்கும் ஆளாளுக்கு ஒரு கோவில் இருந்தது. குல தெய்வம் இருந்தது. ஒருத்தரோட குல சாமி இன்னொருத்தருக்கு குலசாமி இல்லை. அதனால அந்த மந்திரங்கள் அவங்களுக்குத் தேவையில்லை. எனக்குத் தேவையில்லாத ஒண்ணை எனக்கு தரலைன்னு எப்படிச் சொல்லமுடியும். தந்திருந்தாலும் வேண்டாம்னுதான் சொல்லியிருப்பேன்.

கிறிஸ்தவத்துல யார் வேணும்னாலும் பாதிரியாகமுடியும்.

இந்துக்கள்ளயும் ஒவ்வொரு ஜாதிக் கோவிலுக்கும் அந்தந்த ஜாதிக்காரங்க அர்ச்சகராகமுடியும்.

கிறிஸ்தவத்துக்கு இந்து ஜாதியைச் சேர்ந்த யார் வேணும்னாலும் எந்தக் கோவிலுக்கு வேணும்னாலும் பாதிரியாகமுடியும்.

ரோமன் கத்தோலிக்கரோட சர்சுக்கு பெந்தேகோஸ்தேக்காரரு பாதிரியாக முடியுமா?

அது முடியாதுதான். ஆனா எந்த சர்ச்சுக்கு பாதிரியாகணுமோ அந்த டினாமினேஷனுக்கு மாறிக்கிட்டா முடியும்.

எல்லாரும் ஒரே இயேசுவைத்தான கும்பிடறாங்க. எதுக்கு மாத்தணும். மாத்திக்கலைன்னா வேற ஆளுங்கன்னு ஏன் சொல்லணும்? இது ஜாதிப்புத்தியோட மோசமான அம்சம்தான.

அப்படின்னா நீங்க மதம் மாற மாட்டீங்களா?

அது என்ன சட்டையா நினைச்சப்ப கழற்றி மாட்ட. என் உடம்புய்யா… என் உயிருய்யா. கொன்னாலும் மாத்த மாட்டேன். கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மாத்தமாட்டேன்.

நேத்துவரை உங்களை அக்ரஹாரத்துக்குள்ள நுழைய விடலை.

அக்ரஹாரத்துல எனக்கு என்ன வேலை?

உங்க கூட சமமா உட்கார்ந்து சாப்பிடலை. பொண்ணு கொடுக்கலை எடுக்கலை.

எங்க ஜாதிக்குள்ள 100 கிளைங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் எதையும் கொடுத்து எடுக்கறதில்லை. அவங்களுக்குள்ளயும் அத்தனை ஜாதி. அங்கயும் அப்படித்தான் இருந்தாங்க.

அங்கயும் அப்படித்தான் இருந்தது…. இங்கயும் இப்படித்தான் இருந்ததுன்னு சொன்னா எல்லாம் சரின்னு ஆகிடுமா? ரெண்டு இடத்துலயும் இருந்தது தப்பு. அதுல உங்களுக்கு கூடுதல் கஷ்டம்னு உங்களுக்கு ஏன் புரியலை?

பழங்குடிகளைப் பார்த்து ஐய்யோ பாவம் குடிசைலயா வாழறீங்க… உங்க ஊர்ல கரண்ட் இல்லையே. ரோடு இல்லையே. பஸ் இல்லையேன்னு காலனிய மனுஷங்க முதலைக் கண்ணீர் வடிச்ச கதையாத்தான் இருக்கு. அது இல்லாமலே இன்னும் சொல்லப்போனா அது இல்லாத்துனால பூர்வகுடிங்க அங்க ராஜ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தானுங்க. ரோடு போடறேன் பள்ளிக்கூடம் கட்டறேன்னு போயி அவனுங்களை நடுத்தெருல நிறுத்தின கதைதான் இந்து ஜாதிகளை ஒழிக்கறேன்னு மதத்தைக் கொண்டுவந்து திணிக்கறது. உனக்கு உன் மதம் பெரிசுன்னா எனக்கு என் ஜாதி பெருசு. அதைக் காப்பாத்தற இந்து தர்மம் பெரிசு. மத நல்லிணக்கம்னு நீ சொல்ற… ஜாதி நல்லிணக்கம்னு நான் சொல்றேன். கிறிஸ்தவரும் முஸ்லிமும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்காமலேயே நட்பா சகோதரரா இருக்க முடியும்னா ஜாதிக்குள்ளயும் அப்படி சகோதரர்களா இருந்துட்டுப் போறோம். தாலி கட்டித்தான் சமத்துவம் வரணுமா. ராக்கி கட்டினா வராதா?

*

அனைத்து சேனல் குழுவினரும் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்கிறார்கள். பேட்டி தருபவர்கள் இப்படி மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவதென்பது புதிராக இருக்கிறது. அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. புதிதாக ஒருவரை பேட்டிக்கு அழைக்கிறார்கள். அந்த நபர் அமர்ந்திருக்கும் அறையை சி.சி.டி.வி. கேமரா வைத்து கண்காணிக்கிறார்கள். அந்த புதிய நபர் தேநீர் அருந்தும்போது அவருடைய உடம்புக்குள் ஏதோ ஒரு ஆவி இறங்குவதுபோல் மாற்றங்கள் நடப்பது தெரிகிறது. அவர்கள் சந்தேகப்பட்டதுபோல் இந்தப் பேட்டிகளைக் கொடுத்தது எல்லாம் மரியம் மற்றும் ஜானின் தாத்தாவும் பாட்டியும்தான் என்பது தெரியவருகிறது.

அந்தப் பேட்டிகளையெல்லாம் அழித்துவிட்டு தாங்கள் விரும்புபடியாக எழுதிக் கொடுத்து ரொஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கை அகதிகள் போன்ற தங்களுடைய ஆட்களை வைத்து பதிவு செய்கிறார்கள். ஆனால், அவற்றை இயக்கிப் பார்த்தால் முன்பு எடுக்கப்பட்ட பேட்டிகளே அழியாமல் ஒளிபரப்பாவது கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்கள்.

இதனிடையில் சிறப்பு விருந்தினராக சூர்யா ஜோதிகா தம்பதி விவாத அரங்குக்கு பெரும் ஆரவார வரவேற்புடன் வந்துசேருகிறார்கள்.

Series Navigation<<  ம(மா)ரியம்மா – 10ம(மா)ரியம்மா – 14 >>ம(மா)ரியம்மா – 13 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *