முருகன் அருள் பெற்ற ஆன ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் வைதிக சைவ ஆசாரியர், பல்வேறு சாஸ்திர நூல்களை ஆக்கிய அறிஞர். சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்று தனது எல்லா நூல்களிலும் சம்ஸ்கிருத சொல் வழக்குகளை சகஜமாக கையாண்ட அவரைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. அவர் வேதங்களை ஏற்றுக் கொள்ளாதவர், சைவ சித்தாந்தத்தை மட்டுமே ஏற்றவர் என்ற பொய்யும் இதனுடன் சேர்த்தே பரப்பப் படுகிறது. இதைக் குறித்து பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை என்ற சுருக்கமான பதிவில் அரவிந்தன் நீலகண்டன் ஏற்கனவே விடையளித்திருக்கிறார்.
அப்பதிவின் மறுமொழிகளில் “பாம்பன் சுவாமிகள் அருளிய வேதத்தைக் குறித்த வியாசம் எனும் புத்தகத்தைக் குறித்தும் உங்கள் வலைதளத்தில் பதிவிட வேண்டுகிறேன்” என்று ஒரு வாசகர் கோரியிருந்தார். அதை முன்னிட்டு இந்தப் பதிவு.
பாம்பன் சுவாமிகள் எழுதி 1903ம் ஆண்டு வெளிவந்த இந்த 90-பக்க நூல் கேள்வி-பதில் வடிவில் அமைந்துள்ளது. நூலாசிரியரே கேள்விகளை எழுப்பி விடைகளும் தருகிறார். அந்தக் காலகட்டத்தில் வேதங்கள் குறித்து தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்ற மக்களிடையே புழங்கிய கேள்விகள் மற்றும் இந்து தர்மத்திற்கு எதிரான கிறிஸ்தவ பிரசாரங்களில் கூறப்படும் விஷயங்கள் ஆகியவற்றிலிருந்தே சுவாமிகள் இந்தக் கேள்விகளைத் தொகுத்திருக்கிருக்கின்றார் என்பது இந்த நூலை இன்று வாசிக்கும்போது புலப்படும்.
இந்த நூலை முழுமையாக pdf வடிவில் இங்கே தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
உதாரணத்திற்காக, “சூத்திரரும் பெண்களுஞ் சமமாவார்கள். அவர்கள் வேதம் ஓதவும் கேட்கவும் அருகர் அல்லர் எனச் சின்னூல்கள் கூறுமாறென்கொல்லோ” எனும் வினாவுக்கு அளித்த மறுமொழியிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றது (கருத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், இன்றைய வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சுவாமிகளின் மொழி சற்று எளிமைப்படுத்தப் பட்டுள்ளது).
“சூத்திரர்களில் பெரும்பாலார் மாமிச உணவு உண்ணுதலினாலும் இழிதொழில் செய்தலினாலும் பெண்களுக்கு மாதவிலக்கு முதலிய சூதகங்களாலும் அசுத்தம் உண்டு என்ற காரணத்தால் அந்த நூல்கள் அவ்வாறு கூறும். பார்ப்பார் குலத்திற் பிறந்து கள்ளும் ஊனும் உண்டு அந்தண ஒழுக்கம் கெட்டவனும் இழிதொழில்கள் செய்பவனும் வேதம் ஓதவோ கேட்கவோ தகுதியில்லாதவனாவான். அவ்வாறே ஆசாரமில்லாத மற்றை எவரும் வேதம் ஓதத் தகுதி இல்லாதவர் என்பது நீதியே ஆகும்.
வேதத்தின் கரும காண்டம் விசேடக் கிரியைகள் அடங்கியது. அது எல்லாருக்கும் பொதுவாகாது. ஞானகாண்டம் வருணாச்சிரமங்கள் கடந்த ஞானத்தை இனிது கூறுதலினால், அது எல்லாருக்கும் பொதுவாகும்..
.. இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஐதரேயப் பிராமணம் இரண்டாவது பஞ்சகத்தில், அடிமைத் தொழில் செய்பவர் ஒருவரது மகனாகிய கவச ஐலுசன் (Kavasha Ailusha) என்னும் பெயர் உடைய சூத்திரன் இருக்குவேத சங்கிதையை ஆக்கிய நூலாசிரியன் எனப்படுவதினாலும், அங்கதேசத்து அரசனுடைய அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது (Kakshivat) என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை (Lopamudra) முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது.
வடநாட்டில் நால்வருணத்தாரும் வேதம் ஓதுதலை இக்காலத்தும் காணலாம்.
யஜுர்வேத சதபதப் பிராமணத்தில், ‘யாககர்த்தா விப்பிரனாயின் (வேதம் கற்ற பிராமணன்) ”ஏஹி” =வருக; சத்திரியனாயின் வைசியனாயின் ”ஆதி” (இவ்விடம் வருக) யாக கர்த்தா சூத்திரனாயின் ”அதாவாதூ” (இவ்விடம் ஓடி வருக) என்று அழைக்கின்றது. இதில் விதித்துள்ளபடி சூத்திரன் வேத கர்ம யாக கர்த்தாவுமாக இருக்கலாம் என அறியலாம். அதனால்தான் மேலே கூறிய கவச ஐலுசன் யாக காரியத்தில் சேர்க்கப்பட்டான் என மேலே குறித்த ஐதரேயப் பிராமணம் இரண்டாவது பஞ்சமுகம் கூறிற்று. முதல் மூவருணத்தார்க்கும் உள்ளவாறு சூத்திரருக்கு உபநயனம் எனப்படும் இருபிறப்பு (துவிஜத்துவம்) இல்லை எனஸ்மிருதிகள் மட்டுமே கூறும். அப்படி வேதம் கூறுவதில்லை..”