கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை மற்றும் வழிகாட்டலில் தரப்படும் தமிழ்விக்கி பெ.தூரன் விருது இந்த வருடம் யோ. ஞான சந்திர ஜாண்சன் என்கிற ஆய்வாளருக்கு அளிக்கப் படுகிறது என்ற அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது. விருது விழா ஆகஸ்டு 15-16 தேதிகளில் ஈரோட்டில் நடக்கிறது. இந்த விருதுத் தேர்வு குறித்த கண்டனத்தையும், அதற்கான காரணங்களையும் இந்தக் கட்டுரையின் மூலமாக பதிவு செய்கிறேன்.  

“முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவப் பண்பாட்டை ஆய்வு செய்து வரும் யோ ஞான சந்திர ஜான்சன் தமிழக முழுக்க இலங்கையிலும் ஆய்வு செய்து பல்வேறு தேவாலயங்களிலும் குடும்பங்களிலும் கைப்பிரதிகளாக முடங்கிப் போயிருந்த கிறிஸ்தவக் கீர்த்தனைகளை தேடி தொகுத்தவர். கிறிஸ்தவ காப்பியங்களை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியவர். கிறிஸ்தவ இலக்கிய மரபை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கியவர்.தமிழகக் கிறிஸ்தவ இலக்கிய கிறிஸ்தவ பண்பாட்டு ஆய்வில் முதன்மைப் பெரும் பணியை ஆற்றியவர்” என்று விருது பெறுபவர் பற்றிய குறிப்பு கூறுகிறது.

தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் “கிறிஸ்தவ இலக்கியம்” “கிறிஸ்தவ கீர்த்தனைகள்” என்ற பெயரில் முன்வைக்கப் படும் சமாசாரங்கள், பொ.யு 18ம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை தொடரும் வெறித்தனமான கிறிஸ்தவ மதப்பிரசாரங்கள் மற்றும் கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படவேண்டும்.  அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து இந்த மண்ணின் இயல்பான இந்துப் பண்பாட்டுக் கூறுகளை வெட்கமில்லாமல் பிரதி செய்தும், உருமாற்றியும் வரும் கலாசார திருட்டுக்கள், ஏமாற்றுக்கள், மோசடிகள் என்பதைத் தாண்டி, இந்த சமாசாரங்களுக்கு எந்த விதமான கலை, இலக்கிய மதிப்பும் கிடையாது என்பதே உண்மை (“கீர்த்தனைகளில்” இருந்து சில கீற்றுகள் கட்டுரையின் இறுதியில்).

2021ல் பெங்களூரில் நடைபெற்ற Swadeshi Indology Conference 2021 மாநாட்டில் Christian Attempts to Appropriate Karnatic Music: A Historical Overview என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்திருக்கிறேன். இந்தக் கலாசாரத் திருட்டைக் குறித்த ஒட்டுமொத்தமான வரலாற்றுச் சித்திரத்தையும், கூடவே வேதநாயக சாஸ்திரி, ஆபிரகாம் பண்டிதர் என்ற இரண்டு முக்கிய ஆளுமைகளின் படைப்புகள் குறித்த கூர்மையான, காத்திரமான விமர்சனத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.

மாநாட்டில் எனது ஆய்வுரையின் வீடியோ (25 நிமி.): 


ஆய்வுக் கட்டுரை முழுமையாக (pdf) இங்கே.

மாநாட்டின் அனைத்து ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக இங்கே வாங்கலாம்.

முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தைக் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவர்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வோ வெறுப்போ எதுவும் எனக்கு இல்லை. மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுக் கட்டுரையிலேயே அவரது நூல்களையும், பதிவுகளையும் சான்றாகக் கொடுத்திருக்கிறேன்.

அந்த ஆய்வுகளுக்காக தமிழ்நாட்டின் கிறிஸ்தவ திருச்சபைகளும், கிறிஸ்தவ மத அதிகார பீடங்களும், கிறிஸ்தவ கல்வி அமைப்புகளும் அவருக்கு விருதுகள் வழங்கினால், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பொதுவான கலை, இலக்கிய, கலாசார செயல்பாடுகளுக்கான தளம் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இத்தகைய விருதை அறிவிப்பது என்பது கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளையும், அதன் பகுதியாக உள்ள கலாசாரத் திருட்டையும் அங்கீகரிப்பதன்றி வேறில்லை.  

அதுவும், தமிழறிஞராக மட்டுமின்றி, தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய “வாக்கேயக்காரர்” என்ற வகையிலும் அறியப்படுபவர் பெரியசாமி தூரன்.  இசைமணி மஞ்சரி, இசைமணி மாலை, முருகன் அருள்மாலை, கீர்த்தனை அமுதம், முதலான தொகுப்புகளில் வந்துள்ள அவரது கீர்த்தனைகள் அனைத்தும் விநாயகர், முருகன், சிவபெருமான், தேவி, திருமால், கண்ணன் முதலான இந்து தெய்வங்களைக் குறித்து மட்டுமே அமைந்தவை. அத்தகைய ஆளுமையின் பெயரால் அமைந்த விருதை “கிறிஸ்தவ கீர்த்தனைகள்” குறித்த ஆய்வுகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்குவது என்பது பெ.தூரனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு அன்றி வேறில்லை.  

மேலும், பொதுச் சூழலில் இருந்து இத்தகைய அங்கீகாரங்களைப் பெறுவதற்காக கிறிஸ்தவ அமைப்புகளும், கிறிஸ்தவ தனிநபர்களும்  அரசியல், கல்வி, கலை, கலாசரம், ஊடகத் துறைகளில் உள்ள தங்களது செல்வாக்கின் மூலமாக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் என்பதும், சிலசமயம் அதில் வெற்றியும் அடைந்துள்ளனர் என்பதும் தெளிவாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. இந்த விருது விஷயத்திலும் அந்தப் பின்னணி உள்ளதா என்பதைக் குறித்த சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதைவிட சீரியசான, அபாயகரமான ஒரு அம்சமும் இதில் உள்ளது.  தமிழ்விக்கி என்ற அமைப்பும், இத்தகைய விழாக்களும் முழுக்க முழுக்க, ஜெயமோகன் என்கிற இலக்கிய ஆளுமையின் வாசகர்கள், அபிமானிகள், அவரது இலக்கிய வட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர்கள் ஆகியோரின் ஆர்வத்தாலும் உழைப்பாலுமே நடந்து வருகிறது என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார்.

அந்த வட்டத்தில் உள்ளவர்களில் 90%க்கு மேல் இந்துக்கள். கணிசமானவர்கள் தெய்வ பக்தியும், ஆன்மீக நோக்கும், பண்பாட்டு உணர்வும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆயினும், கண்மூடித்தனமான இலக்கிய மோகம், நட்புகள், சினிமா வாய்ப்புகள், பிராபல்யம், தங்களது படைப்புகளுக்கும், மொழிபெயர்ப்புகளுக்கும், வாசக பதிவுகளுக்கும், வலைப்பதிவு கடிதங்களுக்குமான கவனத்தைப் பெறுவதற்கான சாத்தியங்கள் இத்யாதி பல காரணங்களால் அவர்கள் அந்த வட்டத்தில் இணைந்திருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.

அத்தகையவர்கள் கிறிஸ்தவ மதப்பிரசார வலைப்பின்னலின் ஒரு செயல்திட்டத்தை ஆதரிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் தங்களை அறியாமல் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றிய கேள்விகளோ, விமர்சனங்களோ எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இது எந்தவகையான இலக்கிய “நுண்ணுணர்வு” என்பதை அவர்கள் தான் பரிசீலிக்க வேண்டும்.


கிறிஸ்தவ “கீர்த்தனைகளில்” இருந்து சில கீற்றுகள்:

நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள், சமகால நாவல்கள், சிறுகதைகளின் இலக்கியத் தரம், உண்மைத் தன்மை, தேடல், “தரிசனம்” குறித்தெல்லாம் வாய்கிழியப் பேசுபவர்கள்  இந்த விஷயத்திலும் அத்தகைய கறாரான மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்கிறார்களா? கீழ்க்காணும் பாடல் வரிகளின் இதே பாணியில் எழுதப் பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈயடிச்சான் காப்பி பாடல்களை “இலக்கிய வடிவம்” என்றும் இந்த மோசடியை “கிறிஸ்தவ பண்பாடு” என்றும் கொண்டாடி விருது கொடுக்கும் இலக்கிய கனவான்கள் தான் விளக்க வேண்டும்.  

ஏன் இந்த “கீர்த்தனைகள்” இப்போது வழக்கிழந்து போய்,  திரு. ஜாண்சன் அவற்றைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டி வந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.  பாடல்கள் நிரம்பிய மேடை நாடகங்கள், பிறகு எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற பாடக நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இவற்றின் வாயிலாக தமிழ்நாட்டில் 1950-60கள் வரை கர்நாடக இசை வெகுஜன அளவில் ரசிக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் சர்ச்சுகளிலும் வீடுகளிலும் கிறிஸ்தவர்கள் இந்த கீர்த்தனைகளைப் பாடி வந்தார்கள்.  பிறகு, அந்தப் போக்கு மாறியவுடன், அவர்களும் தங்களது பாட்டுக்களையும் மெட்டுகளையும் மாற்றிக் கொண்டார்கள். இந்துக்கள் “ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று செவ்வியல் இசையைத் தன்னளவில் தெய்வீகமானதாகக் கருதி, தேவார, திருமுறை, திவ்யப் பிரபந்த பண்களையும், திருப்புகழ் தாளங்களையும், தியாகராஜ கீர்த்தனங்களையும் பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் பாதுகாத்து வருவது போல செய்வதற்கான எந்தத் தேவையும் கிறிஸ்தவத்திற்கு இல்லை. இதன் கலை, இலக்கிய மதிப்பை நிர்ணயிப்பதற்கு
இந்த ஒரு விஷயம் மட்டுமே போதும்.

ஜகன்னாதா குருபர நாதா – திரு
அருள் நாதா ஏசு பிரசாத நாதா
திகழரும் தாதா புகழரும் பாதா

தீதறும் வேதபோதா.

(வீரமாமுனிவர்)

சத்தாய் நிஷ்களமாய் – ஒரு சாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே
எத்தாய் நாயடியேன் கடைத்தேறுவன் பவம் தீர்ந்து
அத்தா உன்னை அல்லால் – எனக்கு ஆர் துணை ஆர் உறவே.


(ஹெச்.ஏ. கிருஷ்ண பிள்ளை)

தேவா இரக்கம் இல்லையோயா – ஏசு
தேவா இரக்கம் இல்லையோ
ஜீவ பரப்ரஹ்ம யேஹாவா திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ஒரே  (தேவா)


ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்,
அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
ஆல்பா ஒமேகாவே சரணம்,

அடியேன் நடுவே முடிவே சரணம்

(வேதநாயக சாஸ்திரியார்)

“மாட்டு மூத்திரத்தைக் குடித்தே – அந்த
மாட்டு சாணியை பூசிக்கொண்டு
மாட்டைத்தானே கும்பிட்டு நின்ற – உன்
மாட்டு புத்தியோஞானப்பெண்ணே”

என்று  இந்துப் பண்பாட்டு வெறுப்பில் திளைக்கும் வரிகளை மதம் மாறிய இரண்டாம் தலைமுறை கிறிஸ்துவரான வேதநாயக சாஸ்திரி எழுதுவார். 

அதற்குச் சற்றுப் பின்னர், இதே “மாட்டுப் புத்தியில்” விளைந்த இந்துப் பாரம்பரிய ஆயுர்வேத, சித்த மருத்துவங்களை தனது குடும்பப் பின்னணியின் காரணமாகவும், கருணானந்தர் போன்ற தன்னலமற்ற இந்துத் துறவிகளிடத்தும் கற்றுத் தேர்ந்து, அதில் ஏராளமாகச் செல்வமும் சேர்த்து, பிறகு அதையெல்லாம் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் அந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் மக்களை மதம் மாற்றி அதை வேரோடு அழிப்பதற்காக செலவிடுவார் ஆபிரகாம் பண்டிதர்.

பிறகு 21ம் நூற்றாண்டில் இத்தகைய “மாட்டுப்புத்தியில்” விளைந்த “பனை பொருளாதாரம்” பற்றியும் “பாரம்பரிய சூழலியல்” பற்றியும் கிறிஸ்தவ பாதிரியார்கள் வகுப்பெடுப்பார்கள். புத்தகங்கள் எழுதுவார்கள்.  

கிறிஸ்தவம் என்ற ஆக்கிரமிப்பு மதத்தின் பச்சையான இரட்டைவேடமும் நயவஞ்சகமும் தான் இதில் வெளிப்படுகிறது. 

இதைத் தான் நாம் அங்கீகரிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்று ஜெயமோகன் இந்த விருதின் மூலமாக உணர்த்த விரும்புகிறார் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *