நவராத்திரி பற்றி பாரதியார்

சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை –

ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

மஹாளய அமாவாசை கழிந்தது.

இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப் படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

(நன்றி: பாரதியார் சிந்தனைச் செல்வம் (தொகுப்பு: கங்கா ராமமூர்த்தி, பாரதி காவலர் கே ராமமூர்த்தி), ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு, 1988.

ஒருமுறை நவராத்திரியின்போது, தன் மகள் தங்கம்மாவும், அவள் தோழிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னை பராசக்தியின் பேரில் “நவராத்திரிப் பாட்டு” என்ற அழகிய பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் –

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)

“உஜ்ஜயினீ” என்ற தேவியின் திருப்பெயரின் பொருள் “மேன்மேலும் வெற்றி பெறுபவள்” என்பது. வெற்றி தருபவள் என்றும் கொள்ளலாம். அன்னை காளீயின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் (குப்த வம்சத்து அரசன்), தான் புதிதாக அமைத்த தலைநகரத்திற்கு அன்னையின் இப்பெயரைச் சூட்டினான். மத்தியப் பிரதேசத்தில் க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த “”உஜ்ஜைன்” என்ற இந்த நகரம் 52 சக்தி பீடங்களிலும், 12 ஜ்யோதிர்லிங்கத் தலங்களிலும் ஒன்றாக வைத்து எண்ணப் படும் பெருமை வாய்ந்தது.

இரண்டாம் அடியில் வரும் “உஜ்ஜய” என்ற சொல்லுக்கு உத்பத்தி, சிருஷ்டி என்றும் பொருள் கொள்ளலாம். எல்லா சிருஷ்டிக்கும் காரணனான சங்கரனின் தேவி என்று தேவியைப் புகழ்கிறார்.

“ஸா” என்பதன் பொருள் “அவள்” (சம்ஸ்க்ருதத்தில்). இப்படி எழுவாய்ச் சொல்லிலேயே சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு, தமிழ் மணிப்ரவாள நடையில் அபூர்வம். அது மட்டுமல்ல “ஸா” என்பது பரதேவதையின் பெயர்களில் ஒன்றான மந்த்ர அக்ஷரமும் கூட.

“மஹேசுர தேவன் தோழி” என்பதும் அழகிய சொல்லாட்சி. சத்ய யுகத்தை நிலைநிறுத்தும் திறன் வேண்டி பாடல் முடிகிறது.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

7 Replies to “நவராத்திரி பற்றி பாரதியார்”

  1. உள்ளம் தெளிவிப்பாய்! ஊக்கம் பெருகுவிப்பாய்!
    கள்ளப் புலனைந்தின் கட்டறுப்பாய்! – பள்ளந்
    தனைநாடும் தண்ணீர், தரணிக் கொருமுதல்வீ!
    உனைநாடும் எங்கள் உளம்!

  2. அருமையான் கட்டுரை ஜடாயு அய்யா. பாரதியாரின் இந்துப் பண்டிகைகள் பற்றிய குறிப்புகளும் மற்றும் பகவத் கீதை விளக்கங்களும் தமிழ் இந்துவில் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்களுடன்,

    ஸ்ரீதர்

  3. சாமான்ய ஜனங்களுக்கும் உரியது என்பதை அழகாக குறிப்பிட்டு உள்ளார்! எத்தனை போற்றினாலும் தகும், எனவே தான் பாரதி என்று அவளின் பெயராலேயே அவரை அழைக்கிறோம்!

  4. ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடிய பாரதியின் , மற்றும் சீதை,சாவித்திரி,தமயந்தி போன்ற உன்னதப் பெண்மணிகளின் உயர்வைப் போற்றிய சுவாமி விவேகனந்தர் இவர்களின் பாதையில் சென்று பாரத அன்னையின் மாண்பை நிலை நாட்ட இந்தப் புனித நவராத்ரியில் சபதம் ஏற்போம்.

  5. // ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடிய பாரதியின் //

    சார், அந்த வரி பாரதியுடையதல்ல.. பாரதிதாசன் எழுதியது.. என் நினைவு சரியென்றால் பாரதிதாசன் எழுதிய முதன் முதல் கவிதை அது தான் –

    எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி
    ஏழுகடல் அவள் வண்ணமடா-அவள்
    தங்கும் வெளியெங்கும் கோடி அண்டம்-அந்த
    தாயின் கைப் பந்தென ஓடுதடா

    என்று ஆரம்பிக்கும்..

    பாரதியின் சீடராக இருந்த போது தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், இந்திய தேசிய உணர்வுள்ளவராகவும், நல்லொழுக்கத்தைப் பேணுபவராகவும் இருந்த பாரதிதாசன் பின்னாளில் இனதுவேஷம், பண்பாடு வெறுப்பு ததும்பும் அரசியல் கோஷங்களையே கவிதை என்ற பெயரில் எழுதிக் குவிப்பவராகி விட்டார்.

  6. நன்றி
    அந்த வரிகள் பாரதி தாசன் பாடியவை தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *