சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்

sabarimala-stampedeகரஜோதி நாள் அன்று சபரிமலை அருகில் புல்மேடு வனப்பகுதியில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. புனித யாத்திரைக்காக இருமுடி கட்டிப் போய் தரிசனம் செய்யும் பக்தர்கள் 102 பேர் கொடூரமாக மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். விபத்து முடிந்த ஒரு வாரத்திற்கு செய்தி ஊடகங்கள் இது பற்றிய சோகக் கதைகளால் நிரம்பியிருந்தன. மைசூர்க் காரர் ஒருவர் தனது நண்பரை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டு மலைக்கு தன்னுடன் வரச் சொல்லியிருக்கிறார். விபத்தில் நண்பர் இறந்து விட்டார், வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் தான் நான் வாழவேண்டும் என்று இந்த மனிதர் புலம்புகிறார். மாளிகைப்புரம் என்று பக்தியுடன் அழைக்கப் பட்டு மாலைபோட்டு வந்த 11 வயது சிறுமி ஒருத்தியும் விபத்தில் இறந்திருக்கிறாள். அடிபட்டு குற்றியிரும் குலையுயிருமாய்க் கிடந்த 6-7 பக்தர்களை தனது லாரியில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்க் காப்பாற்றலாம் என்று கிளம்பியிருக்கிறார் அங்கிருந்த ஒரு ஓட்டுனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவர் ஆஸ்பத்திரியை அடைய 6 மணி நேரம் எடுத்தது, வண்டியை ஓட்டிக் கொண்டு வருகையில் வலியில் துடித்து அரற்றி ஒவ்வொரு குரலாக அடங்கியதைக் கேட்க நேர்ந்த தன் துர்ப்பாக்கியத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று புலம்புகிறார் அவர். இந்த விபத்தினால் அநாதையான குடும்பங்கள், திக்கற்றுப் போய்விட்ட உறவுகள், சிதைந்து போன கனவுகள் பற்றிய விவரணைகளே நெஞ்சத்தைப் பிழிவதாக உள்ளது. கோயிலுக்குப் பயணம் போன மனித ஜீவன்கள் நடுக்காட்டில் கும்மிருட்டில் கால்களில் மிதிபட்டு எலும்புகள் முறிந்து மூச்சுத் திணறி சேற்றில் புரண்டு செத்துப் போவது என்பது எவ்வளவு குரூரமானது!

இந்த குரூர சாவுகளுக்கான முழுப் பொறுப்பும் கேரள அரசாங்கத்தையும், ஊழலில் திளைத்துள்ள திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் அமைப்பையுமே சாரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 5 லட்சம் பக்தர்கள் அந்த வனப் பகுதி முழுவதும் நிரம்பியிருக்க, வெறும் 9 காவலர்கள் மட்டுமே அங்கு நிறுத்தப் பட்டிருந்த அவலமும், இரவு 8 மணிக்கு விபத்து நடந்தும் நள்ளிரவு 2 மணி வரை எந்த மருத்துவ உதவியும் அங்கு சென்றடையவில்லை என்பதும் நிர்வாக அமைப்பு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டிருந்ததையே சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் இந்தச் சீர்குலைவு ஏதோ திடீரென்று ஏற்பட்டதல்ல. சொல்லப் போனால் இப்படிப் பட்ட விபத்துகள் சபரிமலையில் வருடந்தோறும் நடக்காமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியம். தெய்வாதீனமாகத் தான் ஒவ்வொரு முறையும் மகரஜோதி சீசன் எந்த துயர சம்பவமும் இன்றி நடந்து கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

வருடாவருடம் கார்த்திகை, மார்கழி ஆகிய இரு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் சபரிமலைக்கு சராசரி 8 முதல் 10 லட்சம் பேர் வருகிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த இருமாதங்களில் மொத்தமாக சபரிமலைக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கு மேல் இருக்கும். கேரள மாநிலத்தின் மக்கள் தொகையைப் போல இது இரண்டு மடங்கு! சபரிமலைக் கோவில் மூலம் வருடத்திற்கு 2500 கோடி ரூபாய் கேரள பொருளாதாரத்திற்கு வருமானமாக வருகிறது. வருடாந்திர மாநில பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு தொகை இது. எனவே சபரிமலை என்பது புனிதத் தலம், கலாசார மையம் என்பதையும் தாண்டி, கேரள மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பு நல்கும் ஒரு “துறை”யாகவே பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்பது நிதர்சனம்.

சபரிமலையின் இந்த பிரம்மாண்டமும், முக்கியத்துவமும் உண்மையிலேயே கேரள மாநிலத்தின், அரசின், மக்களின் பெருமிதத்திற்கும், நேர்த்தியான நிர்வாக செயல்திறனுக்கும் அடையாளமாக ஆகியிருந்திருக்க வேண்டும். மலைகள் புடைசூழும் கானகத்தின் இயற்கை எழில் பின்னணியில் பாரம்பரிய கோயில் திருவிழாவின் வசீகரமும், பக்தி வெள்ளப் பெருக்கில் மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்றுகூடும் தெய்வீக சங்கமுமாக உலகம் போற்றும் உன்னதம் இது. ஆனால் இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் உயிருக்குக் கூடப் பாதுகாப்பு அளிக்கத் திராணியில்லாத கேரள நிர்வாக சீரழிவின் முகமாக, வெட்கக் கேடான விஷயமாக ஆகியிருக்கிறது.

sabarimala_templeகடந்த 20-30 வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20% சதவீதம் அதிகரித்து வருகிறது என்று கேரள அரசே புள்ளிவிபரங்கள் தருகிறது. ஆனால் மேல்பூச்சான சில விஷயங்க்ள் தவிர்த்து, சபரிமலை பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் 30 வருடம் முன்பு இருந்தது போலவே இன்றும் உள்ளன என்று கூறப் படுகிறது. இதற்கு முன்பு இருமுறை இதே போன்ற பெரும் விபத்துக்கள் நடந்து அதன் பின்னர் அமைந்த விசாரணை கமிஷன்கள் அளித்த பரிந்துரைகள் ஒன்று கூட செயல்படுத்தப் படாமல் விடப் பட்டிருக்கின்றன. 1950கள் முதல் கேரளத்தில் கோலோச்சி வரும் இடது சாரி அரசுகளும் சரி, காங்கிரஸ் அரசுகளும் சரி, மேடைகளில் உச்சக்குரலில் நாத்திகவாதம் பேசி நள்ளிரவில் ரகசியமாக கணபதி ஹோமம் செய்யும், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருடன் போல கோயில்களுக்குப் போய்வரும் அரசியல்வாதிகளும் சரி, எல்லோருமே இந்த சீர்கேட்டுக்குக் காரணமாகிறார்கள்.

பாரம்பரியமாக சபரிமலைப் பயணம் மேற்கொள்ளும் எரிமேலி-பம்பா பாதை பெரும்கூட்டத்தைத் தாங்க முடியாமல் தத்தளிக்கிறது. மகரவிளக்கு சமயத்தில் 7-8 மணி நேரம் வாகனங்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. பிறகு பம்பையிலிருந்து சன்னிதானம் வரை பல மணி நேரங்கள், சன்னிதானத்தில் தரிசனம் கிடைப்பதற்கும் அது போல நீண்ட காத்திருப்புக்கள். எனவே வெளிமாநிலங்களில் இருந்து வரும் பல பக்தர்கள் குமுளி-புல்மேடு வழியாக குறுக்கு வழியில் 7 கிமீ. மட்டுமே பயணம் செய்து சபரிமலையை அடைய மாற்றுப் பாதையை முறையான அனுமதியின்றி பல ஆண்டுகளாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த புல்மேடு பாதை அடர் காட்டின் வழியாகச் செல்கிறது.காட்டு யானைகளும், புலிகளும், கரடிகளும் நடமாடும் இந்த பிராந்தியம் வனத்துறையால் பாதுகாக்கப் பட்ட பகுதி என்றும் புலிகள் சரணாலயத்துக்குள் அடங்கியது என்றும் அறிவிக்கப் பட்ட பகுதியாகும். வனத்துறை அதிகாரிகள், வாகன ஆபரேட்டர்கள், இந்த வழிநெடுக கடைபோடும் வியாபாரிகள் மூவரும் இணைந்து ஒரு மாஃபியாவாக புல்மேடு பாதையில் செயல்பட்டு வருகிறார்கள். இதை நன்கு அறிந்திருந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐயப்பனின் தரிசனத்திற்காக வரும் கோடிக் கணக்கான பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காதது மட்டுமல்ல, பக்தர்களை முடிந்த அளவு சுரண்ட வேண்டும் என்பதே அரசு மற்றும் உள்ளூர் ஆட்களின் எண்ணமாக இருந்து வருகிறது. மகரவிளக்கு சீசனில் பணியமர்த்தப் படும் காவலர்களுக்கான செலவை சபரிமலையை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு தன் கையிலிருந்து தான் ஏற்றுக் கொள்கிறது. வழக்கத்தை விடக் கூடுதலான மின்சாரக் கட்டணத்தை செலுத்துகிறது. மாநில அரசு பஸ்களே வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதலாக பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது, தனியார் வாகனங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சபரிமலை யாத்திரீகர்களில் மத்தியதர, கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், மிக ஏழைப் பட்டவர்களும் விளிம்பு நிலை மாந்தருமே பெரும்பாலர். ஆனால் இந்தியாவில் பல புனிதத் தலங்களில் பக்தர்களுக்கு உணவு இலவசமாகவோ, அல்லது மிகக் குறைந்த விலையிலோ கிடைக்கும் நிலையில், சபரிமலையில் மட்டும் உணவுப் பொருட்களைக் கொள்ளை விலையில் உள்ளூர் ஆட்கள் விற்றுக் காசு பார்க்கிறார்கள். சமீபகாலமாக கோயில் பிரசாதத்தின் தரமும் மிகக் குறைந்து போய்விட்டதாக பக்தர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களை போலீசார், வியாபாரிகள் ஆகியோர் சிறிதும் மரியாதையில்லாமல் நடத்துகிறார்கள். சாதாரண நேரங்களில் கூட கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டுமென்றே அடிதடி பிரயோகம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா எழுதுகிறார் – “இந்த விபத்தின் பின்னுள்ள மனச்சாட்சியில்லாத, தலைக்குனிவுக்குரிய விஷயம் என்னவென்றால், கேரளாவின் நிரந்தர பற்றாக்குறை பட்ஜெட்டை ஒவ்வொரு வருடமும் இட்டு நிரப்புவது, தமிழக, ஆந்திர, கன்னட யாத்திரீகர்கள் தாங்கள் கஷ்டப் பட்டு உழைத்த பணத்தின் மூலம் சபரிமலைக்கு அளிக்கும் காணிக்கையினால் வரும் வருமானம் என்பது தான். ஆனால், இந்த யாத்திரீகர்கள் புழுவைப் போல நடத்தப் படுகிறார்கள். அவர்களது நலனுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசுத் துறைகள் தொடங்கி உணவகங்கள், வாகன ஆபரேட்டர் வரையிலான பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள் (For Kerala’s shylocks, they are like sheep for slaughter)”

– இந்தியன் எக்ஸ்பிரஸ், 23-1-2011, “Innocent Pilgrims who were killed by greed”, Paul Zacharia.

முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும் இதே ரீதியிலான கருத்தைக் கூறியிருக்கிறார். கேரள அரசு நிர்வாகத்திற்கு சிறிதாவது மானம் இருந்தால் உடனடியாக அடுத்த மகரவிளக்கு சீசனுக்கு முன் சபரிமலை விஷயத்தில் செயல்படவேண்டும். இது குறித்து பல தரப்பிலிருந்தும் பல நல்ல யோசனைகள் ஏற்கனவே வந்துள்ளன.

sabarimala-reach1. சபரிமலை சன்னிதானத்தைச் சுற்றியுள்ள 40-50 கிமீ பிரதேசம் மகரவிளக்கு சீசனில் ஒரு பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப் படவேண்டும். கூட்டத்தை நெறிப்படுத்த நவீன அறிவியல்-தொழில்நுட்ப முறைகள் (scientific crowd management) எத்தனையோ இருக்கின்றன. அவறைப் பயன்படுத்த வேண்டும்.சன்னிதானம், பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் கோவில் என்று பல இடங்களில் இருந்து மகரவிளக்கு தரிசனம் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர் கூட்டம் தன்னிச்சைப் படி சிதறவிடாமல் முன்பே திட்டமிட்டு இந்த எல்லா இடங்களிலும் கூட்டத்தை சம அளவில் distribute செய்யவேண்டும். ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கூட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கேரள, கர்நாடக, தமிழக, ஆந்திர காவல்துறையினருடன், மத்திய காவல்துறையினரும் இதில் பங்களிக்கலாம்.

2. உடனடி விபத்து முதலுதவிக்கான ஆயத்தக் குழுக்கள் சபரிமலை பிராந்தியத்தில் பல இடங்களில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மத்திய ரிசர்வ் போலிசாரை இதில் ஈடுபடுத்த வேண்டும்.

3. சுத்தமான கழிப்பறைகள், நியாய விலையில் தங்குமிடங்கள், உணவகங்கள் ஆகியவற்றை சபரிமலைப் பிராந்தியம் முழுவதும் அமைக்க வேண்டும். தேவஸ்வம் போர்ட், அரசுசாரா அமைப்புகள், தன்னார்வ சேவை அமைப்புகள் ஆகியோர் இணைந்து இதைச் செய்யலாம்.

4. மகரவிளக்கு சீசனில் மட்டும் இல்லாமல், ஆண்டு முழுவதும் சபரிமலை பிராந்தியத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஒரு நீண்டகால செயல்திட்டம் வேண்டும். அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் மற்ற இந்து இயக்கங்களையும் ஈடுபடுத்தலாம். முன்பு அமைக்கப் பட்ட சந்திரசேகர மேனன் கமிஷனும் இந்து அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

5. யாத்ரீகர்களுக்கான வசதிகள், வனப் பிராந்தியத்தின் சுற்றுச் சூழல் இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப நிரந்தர உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படவேண்டும். தற்காலிக ஏற்பாடுகள் வசதிக் குறைவானவை, அபாயகரமானவை, மீண்டும் மீண்டும் செலவு ஏற்படுத்துபவை. புல்மேடு பகுதியில் சாலை/மின்சார வசதி, பம்பா நதி மாஸ்டர் பிளான் ஆகிய திட்டங்கள் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளன. இவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

6. முதல்கட்டமாக சபரிமலை பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கென்று 500 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கி, நீண்டகாலமாக செய்யப் படாமல் இருக்கும் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் முற்றிலும் அரசியல் சார்பற்றதாக ஆக வேண்டும். நிர்வாக செயல்பாடுகளில் யோசனை கூறவும், கண்காணிக்கவும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்த சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு நியமிக்கப் படவேண்டும்.

7. சபரிமலை ஒரு தேசிய புனித யாத்திரை தலமாக அறிவிக்கப் படவேண்டும். கும்பமேளா போன்ற நிகழ்வுகளை தேசிய அளவிலான பல அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்துவதால் அந்த நிகழ்வுகள் சிறப்பாகவும், எந்த விபத்துகளும் இல்லாமலும் நடந்தேறுகின்றன. அதே போன்ற கவனிப்பு சபரிமலைக்கும் அளிக்கப் படவேண்டும்.

இவை உருப்படியான யோசனைகள்.

விபத்து பற்றிய வழக்கை விசாரிக்கும் கேரள உயர்நீதிமன்றம் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை, குறைகளைக் கண்டறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் எல்லாரிடமும் இருக்கிறது.

இதனூடாக, விசாரணையின் தொடக்கத்திலேயே “மகர ஜோதி என்பது தெய்வீக நிகழ்வா அல்லது மனித உருவாக்கமா என்று கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அது நம்பிக்கை சார்ந்தது என்று சொல்லிவிட்டு அரசு ஒதுங்கி விட முடியாது. உண்மை என்ன என்று பொதுமக்களுக்கு கண்டிப்பாக சொல்லப் பட வேண்டும்” என்று நீதிமன்றம் கேட்டுள்ளது.கேரள முதல்வர் உடனடியாக இது பற்றி எந்த புதிய விசாரணையும் நடத்தப் படாது, இது நம்பிக்கை தொடர்பான விஷயம் என்று அறிவித்து விட்டார். முன்னாள் அமைச்சர் சுதாகரன் பொன்னம்பலமேடு மலைப்பகுதியில் மலைமுகட்டில் சுடர் ஏற்றப் படுகிறது; இது பழங்குடி வழிபாட்டு மரபின் தொடர்ச்சி என்று வரலாற்று ரீதியாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

ஒருவேளை அது தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா? புரியவில்லை.

makarajyothiநீதிமன்றம் இந்த விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், 2007ம் ஆண்டு இதுபற்றிக் கேட்டபோது சபரிமலைக் கோயிலின் தலைமை தந்திரி (அர்ச்சகர்) கண்டரூரு மஹேஸ்வரரு திட்டவட்டமாக இதற்கு விளக்கம் அளித்திருந்தார். “மகர ஜோதி வேறு, மகர விளக்கு வேறு. ஜோதிட ரீதியாக சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாள் மகர சங்கிராந்தி; அப்போது வானில் தோன்றும் மகர நட்சத்த்திரமே மகர ஜோதி எனப்படுகிறது. பொன்னம்பலமேடு மலை முகட்டில் தோன்றும் சுடருக்குப் பெயர் மகரவிளக்கு. கற்பூரத்தைக் கொட்டி மூன்று முறை இந்தச் சுடர் ஏற்றப் படுகிறது. கோயிலில் தீபாராதனை ஆகும் அதே நேரத்தில் மலைமுகட்டிலிருந்து ஐயப்பனுக்கு பெரிய தீபச் சுடர் காட்டி செய்யும் வழிபாடு இது” என்று அவர் கூறியிருந்தார். எல்லா செய்தி ஊடகங்களிலும் அது பெரிய செய்தியாக வந்திருந்தது. சமீபத்தில் கூட தாழமன் நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் ஈஸ்வர் (யுவ ஹிந்த் என்ற இளைஞர் இயக்கத்தை நடத்தி வருபவர் இவர்) இதே விளக்கத்தை மீண்டும் ஒரு முறை தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அளித்திருந்தார் .

இதற்கெல்லாம் பின்னர் சபரிமலையில் மகரவிளக்கு சீசனில் கூட்டம் குறைந்ததா? இல்லவே இல்லை. வழக்கம் போல வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று கேள்வி கேட்கும் நீதிமன்றம் யோசித்துப் பார்த்ததா தெரியவில்லை. சபரிமலைக்கு மாலைபோடும் ஐயப்பன்மார்களில் பலர் எளிய மனிதர்கள், ஏன் கல்வியறிவு குறைந்தவர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் முழு முட்டாள்களோ, கருத்துக் குருடர்களோ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சபரிமலை யாத்திரை என்பது ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு ஒரு பக்தி அனுபவத்தை, ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது. அதனால் தான் இவ்வளவு இடர்ப்பாடுகளையும், வசதிக் குறைவுகளையும் கூட பொறுத்துக் கொண்டு வருகிறார்கள்.

“சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்று திருவாசகம் கூறுகிறது.தத்துவார்த்தமாக எல்லா ஒளிப் பொருள்களும் பரஞ்சுடரின் கீற்றுகளே.

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்

என்று சேக்கிழார் கூறுவது போல, இறையன்பில் தோய்ந்த மனத்திற்கு கணந்தோறும் நிகழும் பிரபஞ்சத்தின் தோற்றமனைத்துமே அற்புதக் கோலம் தான்! அது தவிர்த்த “அற்புதச் செயல்கள்” ஊடகங்களிலும் வெகுஜன அளவிலும் பரபரப்பாகப் பேசப் படலாம், ஆன்மீக மனம் அவற்றையும் ஒரு கோலாகலமாக எடுத்துக் கொள்ளும். அவ்வளவே.

சபரிமலை மகரவிளக்கு பற்றி உருவாக்கப் பட்டுள்ள சில பாமர நம்பிக்கைகள் (உதாரணமாக, அது பக்தியுடன் விரதம் இருப்பவர் கண்களுக்கே தெரியும்; விரதக் குறைபாடு உள்ளவர் கண்களுக்குத் தெரியாது) அதீதமான மிகைப் படுத்தப் பட்ட ஊடகப் பிரசாரங்கள் அன்றி வேறில்லை. தொலைக் காட்சிக் காமிராக்களின் கண்களுக்கும், அதன் வழியாக உலகெங்கும் உள்ள் கோடிக்கணக்கான மக்களுக்கும் அது தெரியத் தானே செய்கிறது! ஐயப்பனைப் பற்றிய சம்ஸ்கிருத புராண நூல்களில் இத்தகைய “நம்பிக்கைகள்” பற்றியெல்லாம் எதுவும் சொல்லப் படவே இல்லை. தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய சாஸ்தா வரவுப் பாடல்களிலும், ஸ்துதி பஞ்சகங்களிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவற்றில் சபரிமலை பற்றிக் குறிப்புகள் உள்ளன; ஆனால் நானறிந்த வரை மகரஜோதி பற்றி எதுவும் இல்லை. ஒருவேளை மலையாள நாட்டார் வழிபாட்டு சாஸ்தா பாட்டுகளில் மகரவிளக்குத் திருவிழா பற்றிய செய்திகள் இருக்கலாம்.

கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஐயப்பன்மார்கள் விரதமேற்கும் புனித காலம். அப்போது பெரிய பாதை என்று சொல்லப் படும் வன யாத்திரை வழி திறக்கப் படுகிறது. ஐயப்பன் இருமுடி கட்டிச் சென்றதாக ஐதிகமாகக் கூறப்படும் காட்டு வழி நடந்து செல்கையில் காளைகட்டி, அழுதா நதி, அழுதை ஏற்றம்/இறக்கம், கரிமலை போன்ற புனிதத்துவம் வாய்ந்த க்ஷேத்திரங்கள் வழிநெடுக வருகின்றன. எனவே இந்தப் பருவத்தில் இந்தப் பாதையில் நடந்து செல்வதே புனிதத்துவம் மிக்கதாகக் கருதப் படுகிறது. மற்ற நேரங்களில் இந்தப் பாதை மூடப் பட்டிருக்கும். இந்தப் பாதையில் பயணம் செய்யவேண்டியே பக்தர்கள் பலர் இந்த சீசனில் சபரிமலை செல்கிறார்கள். பலர் மகரவிளக்குத் திருநாளுக்கு முன்பே திரும்பி விடுவதும் உண்டு.

sabarimala-temple-entranceஎதற்கு இதையெல்லாம் சொல்லவேண்டியுள்ளது என்றால், கேரள நீதிமன்றத்தின் கேள்வியைத் தொடர்ந்து மகரஜோதி என்பது கேரள அரசாங்கமும், சபரிமலைக் கோயில் நிர்வாகமும் உருவாக்கி உலவ விட்டிருக்கும் ஒரு மோசடி என்ற ரீதியில் கருத்துக்கள் ஊடகங்களில் பரப்பப் படுகின்றன. Makara jyoti hoax, fraud போன்ற பிரயோகங்களை செய்தித் தாள்கள் பயன்படுத்துகின்றன.

சபரிமலை சாஸ்தா வழிபாடு பல நூற்றாண்டுகள் பழமையானது. பொய்யான ஒரு அற்புதத்தையோ, மோசடியையோ உருவாக்கி அதில் வாழவேண்டும் என்ற அவசியம் அதற்கில்லை. சைவ, வைஷ்ணவ, சாக்த மதங்களும், அத்வைத தத்துவமும், நாட்டார் தெய்வ வழிபாடுகளும் எல்லாம் ஒன்று கலக்கும் அற்புத ஆன்மிக சங்கமம் ஐயப்பன் வழிபாடு.

சரணம் ஐயப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
சகல சௌபாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம
ஸ்தான மெய்ஞான குருவே

என்று தான் பக்தர்கள் ஐயனை வேண்டுகின்றனர். காடுமலை கடந்து, படியேறி வரும் பக்தனுக்கு ஐயப்பனின் சன்னிதி முகப்பில் கிடைப்பது “தத்வமஸி” (நீயே அது) என்ற தத்துவ உபதேசம் தான். இது தான் சபரிமலை யாத்திரையின் ஆன்மிக சாரம்.

மகரவிளக்கைப் பற்றி கேள்வி கேட்கும் நீதிமன்றமும், அவதூறு செய்யும் ஊடகங்களும் இதனை உணரவேண்டும்.

மகர ஜோதி இயற்கையோ செயற்கையோ அந்த விவாதம் எதுவும் இந்த கோர விபத்து பற்றிய விசாரணைக்கு சிறிதும் அவசியமில்லாதது. அரசு தன் கடமை தவறி செயலிழந்து நின்றது என்பது தான் பிரசினை. நீதிமன்றம் வேண்டுமென்றே இதில் மத நம்பிக்கை தொடர்பான சர்ச்சையை உள்நுழைத்து பிரசினையைத் திசைதிருப்ப முயல்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்திற்குரியது.

31 Replies to “சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்”

  1. சபரிமலையில் மட்டுமல்ல, பழனி, திருச்செந்தூர் மாதிரி பல கோவில்களிலும் அரசு பக்தர்கள் ரொம்ப நல்லவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க என்ற attitude-உடன்தான் நடந்து கொள்கிறது. கும்பகோணம் மாமாங்கத்தில் இறந்தவர்களைப் பற்றி அவர்கள் குடும்பத்துக்கு மட்டும்தான் இப்போது நினைவிருக்கும். கோவில்களின் பணம் மட்டும் வேண்டும், பக்தர்களை ஏறி மிதித்தாலும் கேட்க ஆளில்லை என்ற நிலை எப்போதுதான் மாறுமோ?

    அதெப்படி திருப்பதி கோவிலில் மட்டும் பக்தர்களை ஓரளவாவது மனதில் வைத்து காரியம் செய்கிறார்கள்?

  2. அரசு தன் கடமை தவறியது என்பது சரியான குற்றசாடுதான் …
    அதே நேரத்தில் கடவுளும் தன் பக்தர்களை காப்பாற்ற தவரிவிடதே?

  3. ஜடாயு,

    மிகவும் நடுநிலையான ஆய்வுக்கட்டுரை. வாழ்த்துக்கள். ஹிந்துத் தலங்கள் பரிபாலனமும் crowd management-உம அத்தியாவசியமானவை.

    எனக்குத் தோன்றியதைக் கூறுகிறேன்.

    எந்த ஸ்தலமானாலும் சரி. இயற்கை பராமரிப்புக்கு முக்கியத்துவமும் அளிக்க வேண்டும். பக்தர்கள் “நாம் கும்பிடும் தெய்வம் உறையும் இடத்திலேயே குடிகொண்டிருக்கும் அரியதான நிலையைப் பெற்றமையால், செடி கோடி, விலங்கு, புள், பூச்சி இனங்களுக்கு முடிந்தவரை தீங்கு செய்யாமல் அவற்றைப் பராமரிக்க வேண்டும்” என்று உறுதி எடுக்க வேண்டும்.

    எத்தனை ஸ்தலங்களுடைய இயற்கை வளம் பற்றி ஆழ்வார்கள் முதலானோர் பாடியுள்ளனர்! அவற்றைப் பராமரிக்க வேண்டாமா?

    ஆகையால், திருவிழாக்கள் பண்டிகைநாள் முதலானவை நடக்கும் பொழுது தேவையான சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அரசாங்கத்துக்கும் நம்மவர்க்கும் வர வேண்டும்.

  4. Pingback: Indli.com
  5. தங்களைக் காத்துக்கொள்ளத் தெரியாத இந்துக்கள் சாகிறார்கள்.

  6. Fault is on both sides.

    The so called “bhakthas” who go to sabaraimala – For many of them, it is a pleasure trip. They engage in all sorts of immoral activities.

    Very few undertake the yatra with utmost sincerity & devotion.

    As for the arrangements, the lesser said the better. The govt knows that however poor the arrangements, the crowds will continue to come.

    Just wait & watch – the crowds next year will be more but there will no facilities.

  7. ஜடாயு அவர்களின் கட்டுரை நன்று.

    ஆனால் எனக்கு இன்னும் புரியாத விஷயம்.

    நம்ம கோயில்களில் எல்லாம் சுவாமி/பெருமாள் தரிசனம் பண்ண காசு வாங்குவானேன்? கோயில்கள் கொடியவனின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்று வசனம் எழுதியவரின் ஆட்சியில் இன்று கோயில்களே ஒரு வியாபரத்தலம் ஆகி விட்டது. ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் பண்ண ரூபாய் ௨௫௦/-(250/-). மதுரை, சங்கரன்கோயில், பாபநாசம் எல்லா கோயில்களிலும் சிறப்பு தரிசனம் கட்டணம். விசேஷ நாட்களில் பஸ்சில் பயணம் செய்ய கூடுதல் கட்டணம். ஆனால் எந்த வசதியும் செய்து தருவதில்லை. இது சபரிமலை ஆனாலும் திருப்பதி ஆனாலும் உண்மை. கோயில்களெல்லாம் நமது அரசுகளுக்கு வருமானம் ஈட்டி தரும் ஒரு தொழில். இந்த மாதிரி எதாவது விபத்து நடந்தால் மட்டுமே நாம் பேசுகிறோம். மற்றபடி நாம் எதையும் எளிதில் மறப்பவர்கள். ஏமாளிகள்.

  8. கேரளத்தில் ஓரளவுக்கேனும் வலிமை மிக்கவர்களாக விளங்கும் இந்து அமைப்புகள், இவ்விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இப்போதிலிருந்தே தீவிரமாகப் போராட வேண்டும். அப்போதுதான், அடுத்த மகர ஜோதிக்குள் ஏதேனும் உருப்படியாக நடக்கும்.

    இந்துக்களுக்கு ஆதரவான கர்நாடக மாநில அரசாங்கம், சபரி மலை பக்தர்களின் வசதிக்காக மானிய (குறைந்த) கட்டணத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். மாதம் மூன்று தடவை தமிழகக் கோயில்களில் யாகம் நடத்தும் எடியூரப்பா போன்றவர்கள், வருடா வருடம் சபரி மலை சீசனில் அங்கு சென்று வந்தால், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வழி ஏற்படும்.

    இந்து விரோதிகளான கம்யூனிஸ்டுகளோ, இத்தாலியக் கிறிஸ்தவ ஆதரவுக் கட்சியான காங்கிரஸோ தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தால்தான் கொஞ்சமேனும் வளைந்து கொடுப்பார்கள்.

  9. மகர ஜோதி இயற்கையோ செயற்கையோ அந்த விவாதம் எதுவும் இந்த கோர விபத்து பற்றிய விசாரணைக்கு சிறிதும் அவசியமில்லாதது. அரசு தன் கடமை தவறி செயலிழந்து நின்றது என்பது தான் பிரசினை. நீதிமன்றம் வேண்டுமென்றே இதில் மத நம்பிக்கை தொடர்பான சர்ச்சையை உள்நுழைத்து பிரசினையைத் திசைதிருப்ப முயல்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்திற்குரியது.//

    கோயில்கள் அனைத்துமே அரசுகளின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலே இதற்கு விமோசனம் பிறக்கும். மதுரை மீனாக்ஷி கோயிலில் சாதாரண நாளிலேயே 2007-ம் வருஷம் நாங்க போனப்போ, சிறப்பு தரிசனச் சீட்டு வாங்கிப்போயும், ஒரு சில காவல்காரர்களும், கோயில் ஊழியர்களும் சேர்ந்து செய்த குளறுபடியால் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு மூச்சுத் திணற ஆரம்பித்தது எனக்கு. ரொம்பக் கஷ்டப் பட்டு என் மகனும், என் கணவரும் என்னை வெளியே கொண்டு வந்தனர். இதே மதுரையில் நான் சின்னவளாக இருந்தபோது திருக்கல்யாண உற்சவத்தின் போது போயிட்டுப் போயிட்டுத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். அப்போவும் கூட்டம்னு சொன்னாலும், ஒரு ஒழுங்கும், கட்டுப்பாடும் இருந்தது.

    எப்போ கோயில்கள் அனைத்தும் வணிக வளாகங்களாகச் செயல்பட ஆரம்பித்தனவோ, அவற்றிற்குத் தரக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப் பட்டனவோ அப்போதே கோயில்களின் புனிதம் குறைந்துவிட்டது. இதற்காகவா ராஜ ராஜ சோழனும், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லப பாண்டியனும், விஜயநகர அரசர்களும், கோப்பெருஞ்சோழனும், நாயக்கர்களும், மராட்டிய அரசர்களும் பாடுபட்டுக் கோயில்களுக்கென நிலங்களும் திருப்பணிகளும் செய்து கோயில்களை மேம்படுத்தினார்கள்???? அந்தக் கோயில்களை நாம் அழிக்காமல் வருங்கால சந்ததிக்கு அதன் புனிதம் கெடாமல் கொடுக்கப் போகிறோமா?? :((((( சந்தேகமே! 🙁

  10. pl go back to the old memory about sabharimala. During 1950, christian missionaries were covertly involved as per police report that they burnt the head room where the gelatine sticks and grenades to blast bombs to scare away the elephants menance in the terrain sabarimala hills. some fundamentalists christians put the fire to the head room resulting the gutting of temple itself and hence the present idol of iyyappan was installed by sri sankarachariyar.
    police closed this case due to political pressure of congress to support christians.

    Recent incident might be also also the handiwork of missionaries in covert operations. The illfated jeep was driven by one Nelson a christian and S P who failed to control the crowd by just posting only two police men was also a christian george vergheese. so everyone suspect this might be the handiwork of missionaries to sabatage to downgrade the temple since sabarimala is pulling crowd from all over the world.

    so Hindus must be very carefull to watch closely about the move of christians foxes who are trying to put the false god belief in the heart of hindus.

  11. “ramanathan
    28 January 2011 at 3:04 pm
    pl go back to the old memory about sabharimala. During 1950, christian missionaries were covertly”

    ramanathan what a story, how man, how you can you think like this? vah reh vah come on we expect more from you.

  12. நடுநிலையுடன் அமைந்துள்ள கட்டுரை. ஜடாயுவுக்கு நன்றி.

    பொதுவாகவே ஹிந்து மத நம்பிக்கைகளை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற அவல நிலை இருப்பது தான், கேரள உயர்நீதிமன்றத்தின் ‘மகரவிளக்கு’ தொடர்பான சந்தேகத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஹிந்து துறவியர் பேரவை முயற்சி செய்ய வேண்டும்.

    சபரிமலை மேம்பாடு தொடர்பாக கேரள ஹிந்து இயக்கங்கள் பல அறிய பணிகளை சத்தமின்றி செய்து வருகின்றன. சங்கத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான அகில பாரத அய்யப்ப பக்த சேவா சங்கம் (இதன் தலைவர் ஜன்மபூமி பத்திரிகை வெளியீட்டாளரான திரு. கும்மனம் ராஜசேகரன்; தொடர்பு எண்: 0484- 2539819, 94479 70315) சபரிமலை மேம்பாடு குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது. பா.ஜ.க. கூறுவதுபோல, சபரிமலையை அகில பாரத புனிதத் தலமாக அறிவித்தால் பல முன்னேற்றங்கள் சாத்தியம்.

    அடுத்ததாக, அய்யப்ப பக்தர்களிடையே கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. அதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    புல்மேடு பகுதியில் சக அய்யப்பமார்களால் மிதிபட்டு பலியான அய்யப்ப சாமிகள் நமக்கு இப்போது தங்கள் மரணம் வாயிலாக கண்களைத் திறக்க உதவியுள்ளனர். இதை மறந்துவிட்டு, அடுத்த அசம்பாவிதத்திற்கு நாம் காத்துக் கொண்டிருக்கக் கூடாது.

    -சேக்கிழான்

  13. அருமையான கட்டுரை.

    அதிக அளவில் பக்தர்கள் வருகின்ற கோயில்கள் நிர்வாகத்தில் திருப்பதி தேவஸ்தானத்தை முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கும்பமேளா மஹாமகம் பொன்றவற்றின் போது அரசு எடுக்கும் விஸ்தாரமான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போன்று கேரள அரசு செய்வதில்லை. இச்சம்பவத்தின் பாதிப்பு நீர்த்துப் போய்விடாமல் அடுத்த ஆண்டுக்காக செப்டம்பர் அக்டோபர் மாதத்திலிருந்து அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தத் தொடங்கவேண்டும்.

  14. //…அதிக அளவில் பக்தர்கள் வருகின்ற கோயில்கள் நிர்வாகத்தில் திருப்பதி தேவஸ்தானத்தை முன்னுதாரணமாகத் திகழ்கிறது….//

    திருப்பதியில் கூட்ட நெரிசலின்காரணமாக ஒருமுறை உயிர்ப்பலி ஏற்பட்டதாகவும், அதனால் அப்போதைய முதல்வரான திரு. ராமாராவ் கூட்ட நெரிசலை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பை உருவாக்கினார் என்றும் பாலகுமாரன் கதை/கட்டுரை/கேள்வி-பதில் (?) ஒன்றில் படித்த ஞாபகம் இருக்கிறது.

    ராமாராவ் அவர்கள் ஒரு பக்திமான். கோயில் சம்பந்தமான அதிகாரத்தை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டிருந்தால்தான் ஏதேனும் நல்லது செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

    ஆனால், தமிழகத்தில் ராமரை செருப்பால் அடித்த திராவிட பாரம்பரிய நாத்திகர்களும் அறநிலையத் துறை அமைச்சராக இருக்கலாம் என்று கோர்ட் உத்தரவை அரசு வாங்கிவிட்டது.

    கேரள தேவஸ்வம் போர்டில் சர்ச்சுகளை நிர்வகித்த கிறுத்துவர்களையும் சேர்க்கிறார்களாம். செக்யூலரிசம்.

  15. MANAMADU SEMMAYANAL MANDIRANGAL ZEBIKKA VENDAM- THIRUMOOLAR VAAKKU.

    NOT SABARIMALAI ; THIS IS THE STATE OF AFFAIRS IN EACH AND EVERY HINDU SHRINE IN INDIA AND THE SITUATION IS WORST IN SOUTHERN STATES;. AL THOUGH PEOPLE ARE SQUEEZED FOR MONEY IN NORTH STILL PEOPLE BEHAVE IN A BETTER WAY NORTH INDIAN STATES AND ARE LARGELY CONSCIOUS AND THERE IS A SENSE OF RESPONSIBILTY PREVAILS.

    PL GO TO MATHURA OR SAY GOLDEN TEMPLE THE CROWDS ARE GREAT AND WELL MANAGED AND GUIDED .
    ALTHOUGH IT MAY SOUND HARD IT IS BETTER TO AVOID GOING TO THESE PLACES AS IT IS LURKING TO HAPPEN ELSEWHERE.

    I THINK THE RIPE TIME HAS COME TO PROMOTE SIDHAR VAGAI BHAKTI AMONST ALL AT LEAST TO SVE INNOCENT LIVES FROM BEING KILLED LIKE THIS.

  16. மகர ஜோதி மகர விளக்கு பற்றிய புரிதல்கள் படித்தவர்கள் மத்தியிலேயே இல்லை. ஒரு சில ஊடகங்களில் வந்த செய்தி பெரும்பான்மையை சேரவில்லை என்றே சொல்லலாம். மேலும் மகர ஜோதி live telecast என்ற பெயரில் இந்த நம்பிக்கைகளை பல உணர்வுபூர்வமான வர்ணனைகளோடு தான் நம் ஊடகங்கள் சில வருடங்களாக நமக்கு காட்டி வந்திருக்கிறது . இப்போது அதே ஊடகங்கள் எதோ புதிய கண்டுபிடிப்பு மாதிரி கேர அரசையும் தேவஸ்தானதையும்fraud என்ற ரீதியில் கை காட்ட முயன்று தன் TRP rattingai ஏற்றிக் கொள்கிறது.
    பரவ விடப்படும் நம்பிக்கைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கேரளா அரசு அடிப்படை வசதிகளை செய்வதில்லை என்பதை ஊடகங்கள் பெருமளவில் வெளிப்படுத்தியதா என்று தெரியவில்லை. இப்போ பல உயிர்கள் போன பின் கை காட்டும் படலங்கள் நடக்கின்றன.

  17. மனமது செம்மையானால்தான் மந்திரங்கள் செபிக்க வேண்டாம். மனமது செம்மையாவதற்கு மந்திரங்கள் செபித்துத்தான் மனதை வழிக்குக்கொண்டு வரமுடியும். மனமது செம்மையாகிவிட்டால் அதன் பிறகு கோவில் குளம் என்றெல்லாம் அலையாமல் தானாகவே நிறைவு பெற்று அடங்கிவிடும். ஆனால் அதுவரை அவை அவசியப்படவே செய்யும். மனமது செம்மையாகிவிட்ட சிலர்கூட மற்றவர்களின் பொருட்டே கோவில், குளம் என்று செல்வர். நித்திய பூஜையும் செய்வர். புண்ணியத் தலங்களில் பக்தர்களுக்கான வசதிகள் சரிவரச் செய்யபட வேண்டும் என்று வலியுறுத்துவதுதான் முறையே அன்றி அங்கு போக வேண்டாம் என்று சொல்வதல்ல. கோயில்களின் வருமானத்திற்காகக் கடந்த காலங்களில் ஏராளமான மானியங்கள்விடப்பட்ட போதிலும் அவை எப்படியெல்லாமோ கை மாறிப்போய்விட்டதால் அவற்றை மீட்கப் போதிய ஆவணங்கள் இல்லாத நிலையில் நாம்தான் கோவில் பணிகள் ஒழுங்காக நடைபெற்றுவரவும் பராமரிப்பிற்காகவும் நன்கொடைகள் வழங்கி வர வேண்டும். வசதியுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் ஏற்பாட்டில் தாவ்றில்ல்லை. இது பராமரிப்புச் செலவுகளுக்கும் கூட்டத்தை நெறிப்படுத்தவும் உதவும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வாறு பக்தர்கள் வழங்குவதும், உண்டியலில் இடுவதும் நமது கோவில்களுக்கும் நமது சமயம் தொடர்பான நற்பணிகளுக்கும் மட்டுமே செலவிடப்பட வலியுறுத்த வேண்டும் எனபதே.
    கோவில்கள் நிர்வாகத்தில் ஒழுங்குமுறையோ ஊழலற்ற நிலவரமோ இல்லாததால்தான் அரசு அவற்றை மேற்கொள்ள நேர்ந்தது. காலப் போக்கில் அரசு நிர்வாகத்தில் மேலும் முறைகேடுகள் மலிந்துவிட்டதால் அவற்றை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து சமயத் தலைவர்கள், அறிஞர்கள், பல்துறை வல்லுனர்கள் கொண்ட நிர்வாகக் குழுக்கள் அமைத்து அவற்றின் பொறுப்பில் கோவில்களை ஒப்ப்டைக்க வேண்டும் என்கிறோம். இவ்வாறு ஏற்பாடு செய்தால் பக்தர்களின் வசதிகளைப் பெருக்குவதில் உண்மையான அக்கறை ஏற்படும்.

    ஹிந்துக்களிடம் கோவிலுக்குப் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து கும்பிடுங்கள் என்று சொல்வது தவறான முன்மாதிரியாகிவிடும்.
    -மலர்மன்னன்

  18. திரு. ஜடாயு,
    இந்த கட்டுரை எல்லா பொறுப்பையும் / பழியையும் அரசின் மீதும்,
    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீதும் சுமத்துகிறது. பொது ஜனத்தின்
    பொறுப்பினைமையை நீங்கள் கவனிக்க வில்லையா?

    (1)இந்த சம்பவம் நிகழ்ந்தது ஒரு காட்டில்; அங்கு எந்த செல் தொலைபேசி
    டவர்களும் இல்லை. தொலை தொடர்பு வசதிகளும் இல்லை. நீங்களே
    குறிப்பிடுவது போல இங்கு செல்லும் ஜனத்திற்கு இது சரியான வழியல்ல
    என்பது மிக தெளிவாக தெரியும். மேலும் வசதிகள் இல்லாததால்தான்
    மீட்பு நடவடிக்கை காலதாமத்துடன் நிகழ்ந்தது என்றே நான் நம்புகிறேன்.

    50 கிலோமீட்டர் சுற்றளவில் பல இடங்களில் மக்கள் பெரும் திரளாக
    கூடினால், அதுவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கூடினால் காவல்
    துறையை நாம் எப்படி குற்றம் காண முடியும்?

    (2)”மற்ற மாநிலத்தவர்களை சபரிமலையில் இருப்பவர்கள் கேவலமாக
    நடத்துகிறார்கள்”

    நாம் மட்டும் ஒழுங்கா? மலையாளத்தான், கொல்டி, ஸேட்டு என்று நம் சினிமாக்களிலும், ஊடகங்களிலும் கேவலப்படுத்த வில்லையா?
    பொது புத்தியிலேயே இது இருக்கிறதே!

    (3)சாதாரணமாகவே நம் மக்களில் பெரும்பாலானோர்க்கு Civic Sense
    துளியும் கிடையாது. குறிப்பாக பெண்களுக்கு. எங்கு சென்றாலும்
    மருத்துவமனையோ அல்லது பஸ்ஸோ, தாமும் தம் சொந்தமும் மட்டும்
    விசேஷமாக முதலில் இடம் பிடிப்பது வழக்கம். First Come First Served
    என்பதை நம் பெண்களில் பலர் அனுசரிப்பதே இல்லை. வயதான
    பெண்கள் அங்கு இருந்திருந்தாலும் இந்த சம்பவத்தின் வீர்யம் அதிகமாக
    ஆகியிருக்கும்.

    (4) அடுத்து Crowd Management- வடக்கில் நடக்கும் கும்பமேளா
    போன்றவற்றிற்கு பொறுப்பேற்கும் ஒரு அமைப்பு கிடையாது. பல
    அமைப்புகள், பல இடங்களில் நிகழ்வுகள். ஆகவே வட மாநிலங்களின்
    அரசுகள் நேரடியாக அதில் ஈடு படுகின்றன. ஆனால் நம் பக்கத்தில்
    சபரிமலை, திருப்பதி போன்றவற்றில் நேரடி பொறுப்பேற்கும் ஒரு
    அமைப்பு உள்ளது. அவற்றிற்கு கோடிக்கணக்கான காணிக்கைகளும்
    வருகின்றன. மேலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் இது போன்ற
    நிகழ்வுகளுக்கு எவ்வளவுதான் செலவிடுவது? மற்ற காலங்களில் அந்த
    கட்டமைப்புகளினால் எந்த இலாபமும் இல்லை. அரசு வரிப்பணம்
    இல்லாமல் கோயில் அமைப்புகள் செலவிட்டால் என்னை
    போன்றவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    Crowd Management என்றாலே சில வழிமுறைகளில் மாற்றங்கள் வரும்.
    நாமே அப்பொழுது ஹிந்து வழிபாட்டு நிகழ்வுகளில் அரசு தலையிடுகிறது
    என்று கூறுவோம்.

  19. நன்றி பாலாஜி
    ஆலய வழிபாட்டின் போது எந்த பொறுப்புணர்வும் இன்றி செயல்படுவதே பெரும்பான்மையான பக்தர்களின் வாடிக்கை. அதிலும் சற்று நுணுகிய மேற்குத் தொடர்ச்சித் தொடரிற்கு இத்தனை எண்ணிக்கை ஊறு. ஏற்கனவே இரயில்வேத் துறை பம்பை வரை விரிவு செய்யும் திட்டத்துடன் உள்ளது. இந்து இயக்கங்கள் இதற்கு மாற்று தேடலாம். ஐயப்பனுக்கு வேறு ஆலயம் எழுப்பலாம்.
    ஐயனையும் புலியையும் தனித்துவிடலாம்.

    TTD தன்னுடைய கையேட்டிலேயே அடிக்கடி வராதீர்களென பக்தர்களுக்கு வேண்டுகோள் வைப்பது குறிப்பிடத்தக்கது.

  20. நல்ல கட்டுரை, நன்றி ஜடாயு.

    சபரி மலை பிற இந்துக் கோவில்களில் இருந்து முற்றிலும் வேறு பட்ட ஒரு புனிதத் தலம். ஐம்பதுகளுக்கு முன்பு வரையிலும் கூட அங்கு செல்லும் யாத்தீரீகர்கள் பய பக்தியுடன் விரதம் இருந்து நாப்பது மைல்கள் அடர்ந்த வனத்தினுள் நடந்து சென்று நியமங்களைப் பின்பற்றியே சென்று வந்தனர். பின்னர் ஐயப்ப வழிபாடு பிரபலமானவுடன் ஒவ்வொரு ஆண்டிலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. கேரள அரசுக்கு இது ஒரு பெரும் செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் தென்பட்டது. முதலீடு செய்யாமல் இலவசமாக வரும் வருமானமாக ஐயப்ப பக்தர்களின் காணிக்கைகளையும் இதர வரிகளையும் கருத ஆரம்பித்தனர் கிறிஸ்துவர்களினாலும் நாஸ்திகர்களினாலும் தேச விரோத கம்னியூஸ்டுகளாலும் ஆளப் படும் கேரள மாநில அரசினர். தமிழ் நாட்டு பக்தர்களில் பலருக்கும் இது அவர்களது அலுப்பான வாழ்வில் இருந்து இந்தப் பயணம் ஒரு விடுதலையாக அமைந்தது. காய்ந்து வறண்டு கிடந்த தமிழ்நாட்டுக்காரர்களுக்கு அடர்ந்த சபரிமலை வனத்திற்குள்ளும் கேரளாவுக்குள்ளும் சென்று வருவதும் அவர்கள் தமிழ் நாட்டில் காண முடியாத பசுமையை அனுபவிப்பதும், விரதங்கள் மூலமாக கட்டாய மாமிச விலக்கு, மது விலக்கு போன்றவை அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிபப்தினாலும் சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் பெருகியே வந்தனர். பல வருடங்களாகவே கூட்ட நிலைமை கட்டுக்கடங்காமலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது. இது புலி, யானை வனவிலங்கு காப்பகமான அந்த வனத்திற்கும் இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் நல்லதல்ல. இத்தனை லட்சம் பேர்கள் அந்தப் பாதுகாக்கப் பட்ட வனத்திற்குள் ஒரே நேரத்தில் செல்ல முயல்வதே தவறான காரியமாகும். விரதம் இருந்து பக்தி பூர்வமாகச் செல்லும் உண்மையான பக்தர்களை விட இதை ஒரு கேளிக்கை டூராக நினைத்துச் செல்லும் பக்தர்களே இந்தக் கூட்டத்திற்குக் காரணம். இத்தனை பேர்களுக்கும் உண்மையான பக்தி உணர்வும் இந்து உணர்வும் இருந்தால் தமிழ் நாட்டில் எப்படி தி மு க போன்ற நாசகார இந்து எதிர்ப்பு சக்திகள் ஜெயிக்கின்றன. ஆக இந்தக் கட்டுக்கடங்காத வரைமுறையற்ற கூட்டம் கட்டுப் படுத்தப் பட வேண்டும். ஒரு நாளைக்கு மலையிலும் சுற்று வட்டார வனப் பகுதிகளிலும் இத்தனை பக்தர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர்களை எரிமேலியில் இருந்து சந்நிதானம் வரை அனுமதிக்கலாம். அது போல பெரிய பாதையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதிக்கப் பட வேண்டும். மலையில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் வெளியேறிய பிறகே அடுத்த பாட்ச் பக்தர்கள் அனுமதிக்கப் பட வேண்டும். இதை திருப்பதியில் இருப்பது போல கம்ப்யூட்டர் முன்பதிவுகள் மூலமாகக் கட்டுப் படுத்தலாம். தமிழகப் பகுதியில் கம்பத்திலேயே முகாம்கள் அமைத்து அங்கு காத்திருக்க வைத்து பக்தர்களை அனுப்பி வைக்கலாம். இது போலவே பிற கேரள நுழைவு எல்லைகளிலும் பக்தர்களை நிறுத்தி வைத்து தினம் இத்தனை பேர்கள் மட்டுமே செல்லலாம் என்று அனுமதிக்கலாம். அப்படிச் செய்வது கூட அந்த வனச்சரணாலயத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றாலும் கூட இந்துக்களின் பக்தியினையும் பக்தர்களின் விருப்பத்தினையும் தடை செய்வதும் இயலாது கூடாது. ஆக வனத்தின் சுற்று சூழலுக்கும் பாதிப்பு இன்றி, பக்தர்கள் நெரிசலில் சாவது போன்ற ஆபத்தும் இன்றி, வழிபாடும் செய்ய வேண்டுமானால் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி தினம் இத்தனை பேர்கள்தான் செல்லலாம் என்று அனுமதிப்பது ஒன்றே வழி.

    மகர ஜோதி போன்ற சிறப்பு நாட்களில் அங்கு செல்ல விரும்புவர்களுக்கு ஒரு வித லாட்டரி கொண்டு வரலாம். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட 1 லட்சம் பேர்கள் மட்டுமே அன்றைய தினம் அங்கு செல்ல அனுமதிக்கப் படலாம்.

    ஐயப்பன் என்பது அந்த அற்புதமான வனாந்திரத்தையும் அங்கு வாழும் வன விலங்குகளையும் சேர்த்ததுதான் அந்த ஒட்டு மொத்த மலைகளும் அங்கு வாழும் விலங்குகளும் மரம் செடி புல் பூண்டு அனைத்துமே ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் தான் என்பதையும் அனைத்தையுமே பக்தியுடனும் மரியாதையுடனும் அணுக வேண்டும் என்ற உணர்வு பக்தர்களுக்கு பக்தியுடன் சேர்ந்து உருவாக்கப் பட வேண்டும். அந்த வேலையை குருசாமிகள் செய்ய வேண்டும். முக்கியமாக சுற்றுச் சூழல் உணர்வும் அறிவும். மலையில் யாத்திரையின் பொழுது ப்ளாஸ்டிக் பைகள் பொருட்களைப் பயன் படுத்தாமல் இருத்தல், சுகாதாரத்தினைப் பேணுதல், நதிகளை அசுத்தப் படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை ஐயப்ப சுவாமிகள் அனுசரிக்க வேண்டுவது அவசியம். ஒரு கோடி பேர்கள் அந்த வனத்திற்குள் நுழைந்தால் அந்த வனம் நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாது. பக்தி இருக்கலாம் ஆனால் அது வனச் சூழல் என்னும் கடவுளை அழிக்கும் விதத்தில் இருத்தல் கூடாது. இதற்கு பக்தர்களிடம் பொறுப்புணர்வு வர வேண்டும். சபரிமலை மட்டும் இன்றி இந்த கார்த்திகை தொடங்கி தை மாதம் வரையிலுமே சபரி மலை யாத்ரீகர்கள் தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் சென்று ஏராளமான பக்தி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அதே லட்சக்கணக்கான பக்தர்களிடம் இந்து உணர்வு கிஞ்சித்தும் இருப்பதில்லை. கோவிலுக்குச் சென்றால் மட்டும் போதாது அந்தக் கோவில்களை நாசம் செய்யும் தீய சக்திகளை ஆதரித்தல் ஓட்டுப் போடுதல் கூடாது என்ற அடிப்படை அறிவும் இந்த பக்தர்களுக்கு ஏற்பட வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் ஓட்டுப் போடும் அதே பஞ்சமா பாதகர்களின் சதியில் இந்துக்கள் கொத்துக் கொத்தாக சாவதைத் தடுக்கவே முடியாது. பக்தியுடன் பொது அறிவையும் சூழல் அறிவையும் இந்துக்கள் வளர்ப்பது மிக அவசியம்

    ச.திருமலை

  21. Balaji’s comment is partially right. However, it is intimated that The Pulmedu path is selected by People mostly from Tamil Nadu because Neelimali pathai is being blocked by Police and kept the people on the road without any facility to the people. (Pl note
    Toilets drinking water facilities have been available on the route of Vaikundam Complex to Temple) Jadayu and others asked why the same facilities have not be provided to the People coming from Bamba to sabari malai on the Donations paid by People to Devaswam Board?

  22. // திரு. ஜடாயு,
    இந்த கட்டுரை எல்லா பொறுப்பையும் / பழியையும் அரசின் மீதும்,
    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீதும் சுமத்துகிறது. பொது ஜனத்தின்
    பொறுப்பினைமையை நீங்கள் கவனிக்க வில்லையா? //

    பாலாஜி,

    கட்டுப் படுத்தப் படாத பொதுஜனம் என்பது மந்தை, கும்பல், mob. உலகெங்கும் பெருந்திரளாக மக்கள் கூடும்போது, அங்கு ஒவ்வொரு தனிமனிதரின் தார்மீக உணர்வுகள், நெறிகள் எல்லாம் செயல்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த விபத்தையே எடுத்துக் கொள்ள்ளுங்கள் – சக பக்தர்களை மிதித்துக் கொண்டு ஓடுகிறோம், அவர்களைக் கொல்கிறோம் என்ற உணர்வு கூட ஓடியவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் கூட்டம் கூடும்போது இந்த நிலை தான் ஏற்படும். அதனால் தான் அங்கங்கு உள்ள நிர்வாக அமைப்புகள் அதீத கவனத்துடன் முன்னெச்சரிக்கை எடுத்துக் கொண்டு கூட்டத்தை நெறிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

    புல்மேடு காட்டு வழி அபாயங்கள் தெரிந்தும் மக்கள் போகிறார்கள்.. ஏன்? வேறு வழியே இல்லாமல் தான்.. சபரிமலை போக வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற உணர்வு தான் அங்கு பிரதானமாகிறது.. நிறைய யோசித்தால், போவதைத் தவிர்க்கவே செய்வார்கள், அதுவும் குறிப்பாக மகரவிளக்கு சமயத்தில்..

    யாத்திரை போக விரும்பும், ஆனால் பொதுப்புத்தியுடன், பாதுகாப்பு உணர்வுடன் யோசிக்கும் பக்தர்கள் அபாயங்களைக் கருதி யாத்திரையையே தவிர்க்கும் நிலை உருவாவது நல்லதல்ல… துரதிர்ஷ்டவசமாக சபரிமலை விஷயத்தில் அது தான் நடந்து கொண்டுமிருக்கிறது.

    எந்தக் கோணத்தில் பார்த்தாலும் குற்றவாளி நிர்வாகமும், அரசும் தான்.

  23. // முக்கியமாக சுற்றுச் சூழல் உணர்வும் அறிவும். மலையில் யாத்திரையின் பொழுது ப்ளாஸ்டிக் பைகள் பொருட்களைப் பயன் படுத்தாமல் இருத்தல், சுகாதாரத்தினைப் பேணுதல், நதிகளை அசுத்தப் படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை ஐயப்ப சுவாமிகள் அனுசரிக்க வேண்டுவது அவசியம்.//

    திருமலை, மிகச் சரியாக சொன்னீர்கள். அந்தக் காடும் மலையும் அதிலுள்ள விலங்குகளும் இயற்கையும் எல்லாமும் சேர்த்துத் தான் ஐயப்பன். அந்த உணர்வு ஐயப்ப பக்தர்களுக்கு வரவேண்டும்.

    இது தொடர்பாக ஐயப்ப சேவா சங்கம் Clean Subarimala என்றொரு இயக்கத்தை சில வருஷமாக நடத்தி வருகிறார்கள்.. அந்த அமைப்பின் இணையதளம் https://cleansabarimala.com/

    ஒவ்வொரு வருடமும் சீசன் முடிந்தவுடன் இவர்கள் ஒரு பெரும் குழுவாகக் கிளம்பிச் சென்று தஙக்ளால் முடிந்த அளவு காட்டு வழி முழுவதும் இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் non-bio-degradable பொருட்களை அகற்றி சுத்தம் செய்கிறார்கள். குப்பைகளை எரிக்கிறார்கள்.. எவ்வளவு பெரிய வனப்பிராந்தியம்! எத்தனை யாத்திரீகள் வந்து சென்றிருப்பார்கள்! கற்பனை செய்து பாருங்கள். இதை செய்வது மனித சக்திக்கு உட்பட்ட காரியமே அல்ல..

    இந்த பொருட்களை அகற்றாவிட்டால் இவற்றை வனவிலங்குகள் உண்டு மடிய நேரிடும் சாத்தியமும் இருக்கிறது., யானை லத்தி முழுக்க பிளாஸ்டிக்காக இருக்கும் காட்சியை புகைப்படமாக போட்டிருக்கிறார்கள்.. வனப்பகுதியில் மேய்ந்த ஒரு மாடு இறந்தபோது போஸ்ட்மார்டம் செய்ததில் 17 கிலோ பிளாஸ்டிக் இருந்ததாம்.. அந்த கோரத்தைக் கண்டு மனம் வெதும்பி இத்தகைய பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்..

    மனித உயிர்களைப் பாதுகாக்கக் கூட தோன்றாத அரசு நிர்வாகம் வனச் சூழலையும் விலங்குகளையும் பாதுகாக்கும் என்று எண்ணுவதே ஒரு குரூர நகைச்சுவை…

    இந்த விபத்து இதற்கெல்லாம் ஒரு கண் திறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

  24. //…இந்த விபத்து இதற்கெல்லாம் ஒரு கண் திறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்…//

    அரசை எதிர்பாராமல், இந்துக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிப்பதுதான் தற்போதைக்கும், எப்போதைக்கும் ஒரே தீர்வு.

    அரசை எதிர்பார்க்காமல், பக்த சம்மேளனங்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு கூட்ட-மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி, அங்கீகரிக்க வேண்டும். இதுதான் சாத்தியமாகக் கூடிய வழி. இதை இந்துத்துவ அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதைக்கூட செய்யாவிட்டால், இனி அவை தங்களை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லிக்கொள்ளக் கூடாது.

    முன்னேற்றம் என்பது இப்படித்தான் நடக்க முடியும். கீழ்மட்டத்தில் இருந்தே மாற்றங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பது இந்துத்துவ இயல்பும்கூட.

    நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால், அனைத்து இந்து ஆலயங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு, பக்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.

  25. ஜடாயு,
    உலகெங்கும் இருக்கிறது ஊழல் என்று இந்திரா செய்வதைப் போன்றிருக்கிறது உங்கள் வாதம். மெக்காவில் இதே போன்று நடந்துள்ளது. அதனால் நம் பங்கிற்குச் சிலரைக் கொல்லலாமா?

    புல்மேடு ஒரு குறுக்கு வழி என்றே அறிகிறேன். கோயிலுக்குப் போக குறுக்கு வழி ஏன்? அரசிற்குப் பங்கிருப்பதைப் போன்றே பக்தர்களுக்கும் பங்கிருக்கிறது.

    //தஙக்ளால் முடிந்த அளவு காட்டு வழி முழுவதும் இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் non-bio-degradable பொருட்களை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்//
    ஐயப்ப சேவா சங்கமோ மற்ற இயக்கங்களோ இந்த எண்ணிக்கை கையாள இயலுமா? (அவர்கள் தொண்டை நான் மதிக்கிறேன்.)

    பக்தர்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும்; போகாமலிருப்பது பாதுகாப்புணர்வு!

  26. திரு ஜடாயு,

    // மனித உயிர்களைப் பாதுகாக்கக் கூட தோன்றாத அரசு நிர்வாகம் வனச் சூழலையும் விலங்குகளையும் பாதுகாக்கும் என்று எண்ணுவதே ஒரு குரூர நகைச்சுவை… //

    நீங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் அரசாங்கமும் நிர்வாகமும் மட்டுமே என்று கூறி மக்களுக்கு ஒரு behavioral wildcard கொடுக்கிறீர்கள். எதற்கென்று தெரியவில்லை. மக்களும் விழிப்புணர்வுடன் நடந்துக் கொள்ளணும்.

    // அங்கு ஒவ்வொரு தனிமனிதரின் தார்மீக உணர்வுகள், நெறிகள் எல்லாம் செயல்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? //

    Pragmatically, again it makes sense to ignore the peoples’ behavior and instead try to push the government/organization to act. But,

    அவர்களை அப்படியே விட்டு விடலாமா? யார் அவர்களுக்கு புத்தி சொல்வது? (ஒரு விதத்தில் இது excuseable behavior என்று கூறுகிறீர்களா என்று தெரியவில்லை.) எவ்வளவுக்கு எவ்வளவு அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் சொல்ல வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களுக்கும் “செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை” என்று பட்டியலிட்டிருந்தால் இக்கட்டுரை இன்னும் சிறப்பாக, நன்றாக இருந்திருக்கும்.

    // புல்மேடு காட்டு வழி அபாயங்கள் தெரிந்தும் மக்கள் போகிறார்கள்.. ஏன்? வேறு வழியே இல்லாமல் தான்.. சபரிமலை போக வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற உணர்வு தான் அங்கு பிரதானமாகிறது. //

    “நான் தெய்வத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயற்கையும் சுற்றுச் சூழலும் எப்படி வேண்டுமானாலும் மாசுபடலாம். அதையெல்லாம் ஏதோ ஒரு NGO அல்லது அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும்.” என்பது முற்றிலும் தவறு என்று நினைக்கிறேன். மேலும், எப்படி வந்தாலும் வழியில் என்ன செய்தாலும் தெய்வத்தைப் பார்த்தவுடன் அவர் சந்தோஷப்படுவார் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.

    அப்படி சுற்றுச் சூழலுக்கும், மற்றவர்களுக்கும் சிரமம் செய்துக்கொண்டு, நம்முடைய உயிருக்கே பெரும் ஆபத்து வரலாம் என்று தெரிந்தும் அபாயமான பாதையில் ( சட்ட விரோதமாகக் கூட இருக்கலாம், எனக்குத் தெரியாது) செல்வதில் உடன்பாடில்லை.

    “சேவிக்க முடிந்திருந்தால் நன்றாகத் தான் இருக்கும். முடியவில்லை என்றால் நமக்கு இந்த முறை பாக்கியமில்லை” என்று சொல்லிக் கொண்டு மானசீகமாக அல்லது வீட்டில் சேவித்துக் கொள்ளலாமே? போகவேண்டும் என்பதில் ஒரு அளவுக்கு மீறிய தீவிரமும் பிடிவாதமும் எதற்கு?

    அரசாங்கம் பல விதத்தில் குற்றவாளி தான்; இல்லை செய்யவில்லை. மக்களும் அதற்குத் துணைபுரிகிரார்கள் என்பது தான் எனது கருத்து. அடுத்த முறை செல்பவர்களுக்குத் தக்க அறிவுரை கட்டாயம் தேவை. மீறுபவர்களைக் கண்டிப்பதும் அப்படியே அவசியம்.

    பாமரர் முன்னேறுவதற்கும் நாம் “வழிபாட்டுத் தலங்களுக்குப் போகும் பொழுது என்ன என்ன dos and donts” என்று ஒரு benchmark set பண்ண வேண்டும். “எல்லாம் அரசாங்கம் தான் பார்த்துக்கும், பாமர ஜனங்கள் இப்படி நடந்து கொள்வது சகஜம் தான்” என்ற உணர்வை உண்டுபண்ணி விட்டால் மக்கள் மோசமாகிக் கொண்டு தான் போவார்கள் என்பது என் கருத்து.

    பாத யாத்திரையாகச் சென்று பல அல்லல்களை ஏற்றுச் செல்பவர்களுடைய பக்தி மேச்சுக் கொள்ள வேண்டிய ஒன்றே. அது வேறு விதம். போகும் இடமெல்லாம் புகை கக்கும் வண்டியில் சென்று பிளாஸ்டிக் குப்பை போட்டுச் சென்று, (பஜனை கீர்த்தனம் தவிர தேவையில்லாத) சப்தம் எழுப்பிக் கொண்டு வன விலங்குகள் முதலானவைகளுக்குப் பெரும் அல்லல் பண்ணுவது வேறு விதம்.

    தோன்றியதைச் சொன்னேன். மறுமொழியில் பிழையோ தவறுதலோ இருந்தால் மன்னிக்கவும்.

  27. Sabarimala temple is not only worship hindus many other religion and many peoples from abroad also come and worship the god ayyappa. but unfortunately the kerala government is against for hindus, so they will always criticize our people I strongly ask one question why want you take our money. Those who go and worship gods in government temples please not put the money.

  28. Hindu scriptures do not say that you have to go on pouring money in temples. Temples must survive puja must be done properly and all those temple activities should go on smoothly. NEVER PAY ANY AMOUNT MORE THAN REQUIRED to any temple Hundiyals which are run by Governments. Please educate people visiting Sabarimala that they should not spend more than just required. Do not buy anything from vendors. Do not put money in hundy. But they should make pilgrimage compulsorily. Othervise anti hindu religions will be happy on reduction in pilgrims and try to spread their net.

  29. sabarimalai is different from other holiplaces because persons who go on pilgrimage are supposed to take vrath for 41days, wear only black clothes, observe strict discipline in their day to day activities. They take bath twice a day, visit a temple in the evening or morning, call each other “aiyappa”.
    During the vrath period they dont quarrel with others, nor talk bad language. On reaching the temple, they have to climb 18 steps and when they reach the sannidaanam, a neon board “tat twam asi’ meaning that thou art. This reminds the devotees that the god whom they came in search of actually resides in them. After darshan they go back home with a sense of fulfillment. This kind of satisfaction you will get nowhere. They come every year once, twice or many times as their desire is never satiated. Many christian organizations want to spread rumor that the makara jyothi is not real etc. But there are many such beliefs in christianity which we dont question and why should they interfere in the tradition of hinduism is not understood. But the public discussion which followed in the media after the above stampede in Sabarimala this year, has settled down. But the govt. has not paid any compensation to the families of victims nor it has conducted any investigation into the incident.

  30. There is a bad precedent in the elections in the recent past. Every community ask for representation in the candidates of the congress led UDF and CPM led LDF that hindu candidates in proportion to the population is less. When panchayat election was over the Latin Christians demanded that the post of the Mayor of Cochin should be given to the representative of that community. Because no hindu organization asked for mayor ship for a hindu candidate they decided to elect a latin christian candidate as Mayor. The same is the case of other so called minority organisations like muslims, and christians their religious leaders fight for positions for their candidates. But no hindu organisation comes forward asking for due representation while selecting candidates for election to the panchayat, or assembly or to the parliament. This is because we think we have the responsibility of maintaining the non secular nature of the society. Besides the atrocities committed by Muslim organizations in the field of terrorism, it is learn t that Christians are behind the large scale conversions in the North eastern India and militancy in name of Nagaland, Bodoland, maoists etc. These agitations were all funded by the church. They even say that the force and fund behind the force of LTTE was from the church. Church has an ulterior motive in creating disturbance in peaceful areas so that when called for negotiations they may ask for autonomy. It is high time that hindus have to realize the situation and take appropriate steps.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *