…. தொடர்ச்சி
தூல மற்றும் நுண்ணிய சரீரங்களாகிய உபாதிகளைப் பற்றி முன் இரண்டு ஸ்லோகங்களில் கூறிவிட்டு, இங்கு மூன்றாவதான காரண சரீரத்தையும், இந்த மூன்றாலும் பாதிக்கப்படாமலும் இம்மூன்றையும் கடந்தும் இருக்கும் ஆன்மா பற்றியும் சொல்கிறார். அதாவது ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும், அறிந்தாலும் உணர்வதற்குமான தடைகள் இவைகள்தான் என்றும், தன்னை இவைகளில் எது பாதிக்கிறது என்று சாதகன் அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதே இங்கு சொல்லப்படுவது.
14. अनाध्याविद्याsनिर्वाच्या कारणोपाधिरुच्यते |
उपाधित्रितयादन्यमात्मानमवधा
அனாத்யாவித்யாநிர்வாச்யா காரணோபாதிருச்யதே |
உபாதித்ரிதயாதன்யமாத்மானமவதாரயே
ஆதியற்று இற்றென்று அறையொணா அஞ்ஞானம்
ஓதுவர் ஆதி உபாதியாய் – ஓதும்
உபாதிகளாம் மூன்றுடல்களின் வேறாய்
உபாதியில் ஆன்மாவை ஓர்
ஒரு தொடக்கமும் இல்லாத, வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாததுமான அறியாமையாகிய உபாதியை காரண சரீரம் என்று சொல்வார்கள். மூன்று சரீரங்கள் என்று சொல்லப்படும் தூல, நுண்ணிய, காரண உபாதிகளுக்கும் வேறாக உபாதியற்ற ஆன்மாவை உணர்ந்திடுவாய்.
“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றி மேலே சொல்லப்பட்டிருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப் பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது? நம்மைப் பொருத்தவரை அந்தப் பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் பெற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.
ஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாஸ்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் சொல்கிறார். இதையே ரமணரும் அதை “அஞ்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்லப்பட்டதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக நுண்ணியதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.
இதை இரண்டு கோணங்களில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். முதலாவதாக, தூல தேகம் இல்லாதபோது அது மனம் போன்ற நுண்ணிய தேகமாய் இருக்கிறது என்றும், அந்த நுண்ணிய தேகத்தின் விதை போன்ற மூலமாய் இந்த மிக நுண்ணிய தேகமான காரண சரீரம் இருக்கிறதென்று இதனைப் புரிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, உண்மையில் இருக்கும் ஒன்றேயான ஆன்மாவை தூல உபாதியான “நான் உடலே” என்ற அபிமானமும், சூக்ஷ்ம உபாதியான “நான், எனது” என்பன போன்ற மனத்தளவிலான எண்ணங்களும், காரண உபாதியான “ஆன்மாவைப் பற்றிய அறியாமை” என்பதும் ஆன்மாவை அறியும் தடைகளாக இருக்கும் உபாதிகள் என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். முன்னது பிறப்பு-இறப்புக்கான காரண காரியங்களையும், அவை தொடர்பான நிலைகளையும் அலசுவதாக இருக்கிறது; பின்னது ஆன்மாவை நாடும் சாதகன் ஒருவன் செய்யவேண்டியது என்ன என்பதைக் காட்டுவதாக அமைகிறது. நாம் இந்த இரண்டாம் கோணத்தைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்டு செல்வோம்.
ஆன்மாவைப் பற்றிய அறியாமை என்பது தானும், தான் காணும் உலகமுமே உண்மை என நினைத்து, அதற்கு ஆதாரமாக ஆன்மா ஒன்று உண்டு என்பதைத் தெரியாமல் இருப்பது; அல்லது தெரிந்தாலும் அதை மறுப்பது என்பதே அத்தகையவர்களது நிலை. நாம் இதுவரை பார்த்த மூன்று விதமான உபாதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்றுதான் அதற்கு அர்த்தம். ஆன்மாவைப் பற்றித் தெரியாமல் இருப்பவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அவர்கள் தினமும் அடையும் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அவர்களே அலசும்படிச் சொல்லி அவர்களுக்கு மேலும் புரிய வைக்கலாம். ஆனால் அப்படி விளக்கங்கள் அளித்தும், ஆன்மாவை மறுப்பவர்களுக்கு என்ன சொல்லி விளங்கி வைக்க முடியும்? அவர்கள் மறுப்பது விழிப்பு நிலையில்தான், அந்த விழிப்பு நிலை ஒன்றுதான் அவர்களது நிலையா, அவர்களது மற்ற இரண்டு நிலைகளுக்கும் அவர்கள் பதில் என்ன என்றுதான் கேட்கமுடியும். அவர்களது ஒரே ஒரு நிலையை மட்டும் வைத்துக்கொண்டு, உலகின் உண்மையை எப்படி நிலை நிறுத்த முடியும் என்றுதான் கேட்க முடியும்.
ஆன்மாவைப் பற்றித் தெரியாத பலரும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குக் காலம்தான் கனிந்து வழிகாட்ட வேண்டும். அந்தக் கால இடைவெளியில் அவர்கள் செய்யும் நற்காரியங்கள் அவர்களுக்குக் கைகொடுக்கும். இதுதான் சாதகன் ஆவதற்கு முன் ஒருவனுடைய காரண சரீர நிலை. காரண சரீரத்தை விதை போல என்று முன்பு சொன்னோம் அல்லவா? பிறப்பு-இறப்பு கோணத்திலிருந்தும் இதனை நாம் அலசலாம். ஒரு விதை முளைப்பதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். எல்லா விதைகளுமே துளிர்த்து முளைப்பதில்லை; முளைக்கும் எல்லாமே வளர்வதில்லை; வளரும் எல்லாமே பூப்பது இல்லை; பூக்கும் எல்லாமே காய்ப்பதில்லை; காய்க்கும் எல்லாமே கனி ஆவதில்லை. இதே போன்றுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.
ஆன்மாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் சாதகன் ஒருவனுக்கு, அவனது உடலும், உடல் சார்ந்த உலகமும் அவனுக்குத் தூல சரீரமாகவும், அவனது மனோநிலைகள் அவனுக்கு சூக்ஷ்ம சரீரமாகவும் தடைகளாக நிற்கும். இங்கு முதலில் அவன் தன் மனத்தைக் கொண்டே விசாரம் செய்து, தான் உடலுக்கும் அப்பால் இருப்பதை தன் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அலசுவதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். உடலால் குடும்பத்திற்காக, ஊருக்காக, நாட்டுக்காக உழைப்பது எல்லாம் ஒருவனைத் தன்னையும் கடந்து அனைவரிடமும் உள்ள இறைத்தன்மையை உணரச் செய்து அன்பு காட்டச் செய்யும். இது போன்ற பல வழிகள் உண்டு. அத்தகைய வாழ்க்கைமுறைகள் அவனுக்கு மனக் கட்டுப்பாட்டைக் கொடுத்து, உடலைக் கடந்த ஆன்மாவைப் பற்றி அறிவதை புத்தி அளவில் கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிடும். அங்கு மனமும் முழு அளவில் அப்படியே இருக்கும்.
அதன்பின் ஏதேனும் ஒரு தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து, இவையெல்லாம் நானல்ல என்றால் பின் தான் யார் என்று விசாரத்தைத் தொடர்ந்து நடத்த, தன் உள்ளிருந்து வரும் ஆன்ம சக்தியால் மட்டுமே ஒருவன் தன் உள்ள நிலையை உணர முடியும். அதாவது, இங்கு “நான் யார்?” என்று கேட்கும் வரை விசாரம் புத்தி அளவில் இருக்கும். ஆனால் அதற்கு அந்த அறிவை வைத்துக்கொண்டே விடை தேட முயற்சிக்கக் கூடாது. அப்படி அறிவின் தூண்டுதலால் வரும் விடைகளை மௌனமாகக் கவனித்துக்கொண்டே – ஒவ்வொரு எண்ணமும் வரும்போது அதைத் தொடர முயற்சிக்காமல், அதைக் கவனித்துக்கொண்டே- இருக்கப் பழகப் பழக ஒருவன் தன் மனமும் இன்றி தான் எப்போதும் உள்ள நிலையை அடையலாம் என்று அப்படி அடைந்தோர் கூறியிருக்கின்றனர்.
அந்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஆனந்த நிலையையும், ஆனால் உறக்கத்தில் உணராத அதை அப்போதே உணர்ந்தும் அனுபவிக்கலாம் என்று அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றனர். அதனால் மூன்று சரீரங்களாகிய உபாதிகள் விலக, ஆன்மா தானே ஒளிவிட்டு நிற்பதை ஒருவன் தன் உணர்வினால் மட்டுமே அப்படி இருந்து அறிய முடியும். அந்த நிலையில் அறிவதற்கு என்று வேறாக இன்னொன்று ஏதும் இல்லை; அறிவே அறிவாய் தன்னை அறிந்து நிற்கிறது என்பார்கள் அப்படி ஆன்மாவை உணர்ந்தவர்கள்.
15. पंचकोशादियोगेन तत्तन्मय इव स्थितः |
शुद्धात्मा नीलवस्त्रादियोगेन स्फटिको यथा ||
பஞ்சகோஷாதியோகேன தத்தன்மய இவ ஸ்திதஹ |
ஷுத்தாத்மா நீலவஸ்த்ராதியோகேன ஸ்படிகோ யதா ||
கோசங்கள் ஐந்து முதற் கூட்டுறவால் ஆன்மாவும்
மாசிலதே ஆயினும் அவ்வமயம் – நேரே சருவும்
நீல படாதி கலப்பால் நிர்மலமாம் படிகம்
போலவே ஒட்டாப் பொருள்
தன் எதிரில் நீலம் போன்ற வண்ணங்களுடன் உள்ள துணியால் ஒரு நிர்மலமான ஸ்படிகம் அந்தந்த வண்ணங்களுடன் காட்சி அளிப்பதுபோல, இயற்கையில் மாசு மருவற்று விளங்கி எதிலும் ஒட்டாத ஆன்மாவானது அதை மறைக்கும் ஐந்து கோசங்களின் குணங்களோடு தோன்றுகிறது.
ஆன்மாவுக்கு உபாதியாக தூல, நுண்ணிய காரண உடல்கள் இருப்பதாகப் பார்த்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞாயனமய, ஆனந்தமய என்ற ஐந்து கோசங்களும் அந்த மூன்று உடல்களின் விவரங்கள். கோசம் என்றால் உறை என்றும் அவைகளை ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதாகவும் கொள்ளவேண்டும். இந்த உறைகளை எல்லாம் விலக்கினால் தானாக விளங்குவது ஆன்மா என்று பொருள். நிர்மலமாய் விளங்கும் ஆன்மா இந்தக் கோசங்களால் மறைக்கப்படுவதால் அவைகளின் குணங்களோடு காணப்படுகின்றன. வண்ணம் எதுவுமில்லா ஒரு பளிங்கை வண்ணத்துணி ஒன்று மறைத்து, பளிங்கை அந்த வண்ணத்தோடு உடையதாகக் காட்டுவதை அதற்கு உவமையாகச் சொல்கிறார்.
நாம் சாப்பிடும் உணவால் உடல் உண்டாகி வளர்வதால், உடலாகிய தூல தேகமே அன்னமய கோசம் எனப்படுகிறது. பஞ்ச பிராணன்களும், பஞ்ச கர்மேந்திரியங்களும் சேர்ந்துள்ளது பிராணமய கோசம். பஞ்ச ஞானேந்திரியங்களும், மனமும் சேர்ந்தது மனோமய கோசம். புத்தியாகிய அறிவின் இருப்பிடம் விஞ்ஞானமய கோசம். இந்தக் கடைசி மூன்று கோசங்களும் சேர்ந்ததுதான் சூக்ஷ்ம அல்லது நுண்ணிய சரீரம். காரண சரீரமாகிய மூன்றாவது உடல்தான் ஆனந்தமய கோசம் எனப்படுகிறது.
இந்த கோசங்கள் ஆன்மாவை மறைப்பதும் அல்லாமல், தானே ஆன்மாவாக இருப்பதாகவும் காட்டும் வலிமை பெற்றன. அதனால் ஆன்மாவை உணர்ந்துவிட்டேன் என்று யாராவது சொன்னால், அவன் அனேகமாக இந்த கோசங்கள் எதிலோ மாட்டிக்கொண்டுள்ளான் என்று சொல்லிவிடலாம். ஏனென்றால் கண்டவருக்கு விண்டு உரைக்க முடியாது; ஆன்மாவிலேயே லயித்து இருக்கத்தான் முடியும்.
16. वपुस्तुषादिभिः कोशैर्युक्तं युक्त्यवधाततः |
आत्मानमन्तरं शुद्धं विविञ्च्यात्तण्डुलं यथा ||
வபுஸ்துஷாதிபிஹி கோஷைர்யுக்தம் யுக்த்யவதாதஹ |
ஆத்மானமந்தரம் ஷுத்தம் விவிச்ச்யாத்தண்டுலம் யதா ||
உடல் பஞ்சகோச உமி ஆதியோடு உள்
சுடர் பரிசுத்த ஆன்மாவைத் – திடமான
உத்தியினால் குத்தி ஒழித்து அவற்றை அரிசி
ஒத்தறிய வேண்டும் உணர்
உமியுடன் கூடிய நெல்லை பதமாக உலக்கையால் குத்தி அரிசியியைப் பிரித்து எடுப்பது போல, பரிசுத்த ஆன்மாவை மறைக்கும் உடல் முதலான ஐந்து கோசங்களை திடமான சுருதி யுக்திகளினாலும், சாஸ்திர விசாரங்களினாலும் நீக்கி, உள்ளே சுடர் விட்டு ஒளிரும் ஆன்மாவை உணரவேண்டும்.
முந்தைய செய்யுளின் கருத்து இங்கு தொடர்கிறது. ஐந்து வித்தியாசமான உறைகளால் ஆன்மா மூடப்பட்டிருப்பதால், எந்தெந்த உறைகள் சற்று பலமாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றனவோ அவைகளுக்குத் தகுந்தபடி ஆன்மாவும் அவைகளைப் போலவே தோன்றும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமை வேறுபட்டாலும், அனைவருக்குமே மூடியுள்ள கோசங்களை நீக்குவதற்கு உண்டான வழிகளாக வெவ்வேறு விதமான யோக, தியானப் பயிற்சிகள் தேவை ஆகின்றன. ஆன்மா அவை எதனாலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொருவரது முன் வினைகளின் பயன்களே வெவ்வேறு கோசங்களாக இடையில் நின்று மறைப்பதால் அவைகளை எப்படி நீக்க வேண்டும் என்று ஒரு உவமானத்துடன் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தக் காலத்தில் கிராமப் புறங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், தங்கள் வயலில் அறுவடை செய்த நெல்லில் குடும்பத்திற்கு வேண்டிய அளவு ஒதுக்கி எடுத்து வந்து, அதை வெயிலில் காய வைத்து நெற்குதிரில் சேமித்து வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் அரிசி தேவையோ, அப்போது அந்த அளவு நெல்லை குதிரில் இருந்து எடுத்து வந்து கைகள் கொள்ளும் அளவு உரல் ஒன்றில் இட்டு, நின்றுகொண்டு நீளத்தடி போன்ற உலக்கையை உயர்த்தி, உரல் மேல் உள்ள நெல்லைக் குத்துவார்கள். இது ஓர் பதமாகச் செய்யப்படும். வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உலக்கையை கீழே போட்டால், அப்போது உரலில் உள்ளது பொடியாகி மாவாகிவிடும். அப்படிச் செய்தால் அதற்கு இடிப்பது என்று பெயர். மாறாக உலக்கையை பதமாகக் குத்தினால் நெல்லின் மேல் உறை போல் உள்ள உமி தனியாகவும், அதன் உள்ளே உள்ள அரிசி சேதமாகாமல் முழுதாகவும் பிரியும். பின்பு அந்தக் கலவையை முறம் ஒன்றில் போட்டுப் புடைத்தால் கனமான அரிசி முறத்தில் தங்கி, மெலிதான உமி தனியாகப் பறந்தோ, புடைக்கப்பட்டோ வெளியே விழும். இப்படியாக அரிசி நெல்லிலிருந்து பிரிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகத்தில் உலக்கையில் நெல் குத்துவதை ஆத்ம விசாரத்திற்கு உபமானமாக சங்கரர் காட்டியிருக்கிறார்.
அரிசிக்கோ உமி என்று ஒரேயொரு கவசம்தான் இருக்கிறது. ஆன்மாவுக்கோ நாம் பார்த்தபடி பல கோசங்கள் இருக்கின்றன. அவைகளில் யார்யாருக்கு அது எவ்வளவு தடிமனாக இருக்கலாம் என்பதுவும் தெரியாது. உமியை மட்டுமே உறையாகக் கொண்ட அரிசிக்கே மேலே சொன்னபடி அவ்வளவு பாடுபட வேண்டும் என்றால், ஆன்ம விசாரத்தில் இன்னும் எவ்வளவு சிரமங்கள் இருக்குமோ தெரியாது. நெல்லை எவ்வளவு நேரம் உலக்கையால் குத்தவேண்டும் என்று யாராவது கேட்டால், அரிசி கிடைக்கும்வரை என்றுதான் சொல்லமுடியும். ஆக கோசங்களுக்கு ஏற்ப விசாரத்தில் பதம் வேண்டும் என்றும், ஆன்மாவை உணரும்வரை விசாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் நிச்சயமாகப் புரிகிறது.
ஒருவனுக்கு நல்வழி காட்டும் குரு என்பவர், அவன் எத்தனையோ நற்காரியங்களின் மூலம் பெற்ற ஒரு வரம்தான். அந்தக் குருவின் உபதேசங்களைக் கேட்டு, அதை மனதில் வாங்கி சிந்தித்து, அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியில் சென்று, தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். தேவைக்கும் மேலாக வெளி விஷயங்களில் மனதைச் செலுத்தாது இருப்பதும், ஆன்மாவைத் தவிர வேறொன்றையும் நினையாது இருப்பதும் ஒன்றே. முன்னது பயிற்சியின் போது நாம் கடைப்பிடிக்கும் வழி என்றால், பின்னது நாம் அந்த வழி சென்று உணரவேண்டிய குறிக்கோள் ஆகும். தினசரி வாழ்வில் ஆன்மாவை உணரமுடியாதபடி பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் கைகூடும்.
(தொடரும்)
படித்து சிந்திப்போருக்கும் படித்தோரிடம் கேட்டு சிந்திப்போருக்கும் இத்தொடர் ஒரு அமிர்தம் ஆகும். சமஸ்கிருதம் கற்காத பலரும் இந்த அற்புத தமிழ் தொடரை படித்து மகிழ நல்ல வாய்ப்பு. திரு ராமன் அவர்களுக்கும் தமிழ் இந்துவுக்கும் மீண்டும் நன்றிகள்.
வணக்கம் மிக நல்ல விளக்கம். நான் ரமணரின் ஆத்ம விசாரம் செய்ய தொடங்கினேன். ஒரு இரண்டு வருடத்தில் ஒரு தெளிவு நிலை ஏற்பட்டது. நான் எல்லாவாற்றிக்கும் சாட்சியாக இருப்பதும், நான் உடல் அல்ல மனமும் அல்ல என்பது எல்லாம் தெள்ள தெளிவாக விளங்கியது. ஒரு வாரம் நீடித்த அது பின் பழைய படியே மனதின் வழி ஓடி என்னை குழப்ப தொடங்கிவிட்டது. மீண்டும் அந்த நிலை வரவே இல்லை. வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. எப்படி தொடர்வது?
வாசகர் சுமா அவர்களின் கேள்வியான,
“…பழைய படியே மனதின் வழி ஓடி என்னை குழப்ப தொடங்கிவிட்டது. மீண்டும் அந்த நிலை வரவே இல்லை. வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. எப்படி தொடர்வது?”
என்பதற்குப் பதில் ரமணர் சொல்வதுபோல:
“நான் அடைந்தேன். அடைந்தது போய்விட்டது. இப்போது என்ன செய்வது?” என்பதெல்லாமே மனப் பிரமைகள் தான். அப்படிச் சொல்வதால் மேலும் கவலைப்பட வேண்டாம்.
நமது ஒவ்வொரு நிலையிலும் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்பட வேண்டும். “நான் அடைந்தேன்” என்றால் “அடைந்தது யார்?” என்பதுதான் அது. அதற்கு அப்புறம்தானே அடைந்தது என்ன என்று பார்க்கவேண்டும்? அப்போதுதானே போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? முதலில் இருப்பதை விட்டுவிட்டு மேலும் பார்ப்பதுதான் குழப்பத்தை விளைவிக்கிறது. இப்பொதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.
ராமன்