(நிறைவுப் பகுதி)
65. सर्वगं सच्चिदात्मानं ज्ञानचक्षुर्निरीक्षते |
अज्ञानचक्षुर्नेक्षेत भास्वन्तं भानुमन्धवत् ||
சர்வகம் சச்சிதாத்மனம் ஞானசக்ஷுர்நிரீக்ஷதே |
அஞ்ஞானசக்ஷுர்நேக்ஷேத பாஸ்வந்தம் பானுமந்தவத் ||
சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப்
பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான்
ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர்
பானுவை அந்தன் போலப் பார்
(எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக் கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே இயலாது.)
பிரம்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்போர்க்கு இந்த ஸ்லோகம் பதில் அளிக்கிறது. ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகைத் தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் வானொலி மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. அதனாலேயே அவ்வாறு வரும் வானொலி விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோ தேவைப்படுகிறது. அது போல பிரம்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.
நமது ஊனக் கண்ணால் நமக்கு முன் உள்ளதைத்தான் பார்க்க முடியும். அதனால் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது; அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது உள்ளார்ந்த நிலையைப் பற்றிய அறிவு. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான ஞானக்கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லப்பட்டுள்ள சிரவணம், மனனம், நிதித்யாசனம் போன்ற வழிமுறைகள் தேவை. சூரியன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க இயலாது. அதே போல ஞான சூரியனான பிரம்மம் என்னதான் பிரகாசமாக இருந்து, சர்வ வியாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்து, சத்- சித்- ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட பிரம்மத்தை அறிய முடியாது.
இங்கு கண் என்று சொல்லப்பட்டிருந்தாலும், அதைப் புலன்களின் பிரதிநிதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உலகில் உள்ளவைகளை நமக்கு அறிவிக்கும் புலன்கள் எதையும் கொண்டு நம்மால் பிரம்மத்தை உணர முடியாது என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து.
66. श्रवणादिभिरुद्दीप्त ज्ञानाग्निनपरितापितः |
जीवः सर्वमलान्मुक्तः स्वर्णवद् द्योतते स्वयम् ||
ஸ்ரவணாதிபிருத்தீப்த ஞானாக்னிபரிதாபிதஹ |
ஜீவஹ சர்வமலான்முக்தஹ ச்வர்ணவத்யோததே ஸ்வயம் ||
சிரணவம் ஆதிகளால் தேசுறு ஞான
எரியினில் காய்ச்சி எடுக்கச் – சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில் பொன்போல் நிர்
மலனாகித் தான் ஒளிர்வான்
( கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா மாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்.)
சிரவணமாகிய ஒன்றைப் பற்றிக் கேட்டல், மனனம் ஆகிய கேட்டதைப் பற்றி அசை போட்டுப் பார்த்துச் சிந்தித்தல், நிதித்யாசனம் ஆகிய சிந்தித்ததைப் பற்றி நன்கு அறிந்தோரிடம் மேலும் கேட்டுத் தெளிதலும், அதன்படி பயிற்சிகள் மேற்கொள்ளுதலுமான வழிகளைப் பின்பற்றி, கேட்டறிந்த விவரங்களில் நன்கு தெளிந்த மனதை முதலில் சாதகன் அடையவேண்டும். அப்போது மனமும் இருக்கும், மனத்தால் உருவாகும் எண்ணங்களும் இருக்கும். அவை ராஜஸ அல்லது சாத்விக குணங்களோடு இருக்கும். அந்த அளவில் இயக்கங்களும் தொடரும்.
அப்போது தனக்கு நேரும் பல வகை அனுபவங்களையும் எடை போட்டு, அவை அனைத்தையும் தத்துவ ரீதியில் “அவை யாருக்கு நேர்கின்றன? அவை ஏன் தனது விழிப்பு நிலையில் மட்டும் காணப்படுகின்றன? அவை காணப்படாத ஆழ்ந்த உறக்கத்திலும் தான் இல்லையா? அப்படி இருப்பதால்தானே இப்போதும் தான் இருக்கிறோம்?” என்பன போன்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டு தனது ஞான வேள்வியைத் தொடங்க வேண்டும். அவ்வாறு பல காலம் நீண்டு தொடரும் வேள்வியின் ஞான அக்னியில் நம்மை மறைக்கும் திரைகள் ஒவ்வொன்றாக விலக, நமது உண்மை நிலையை மறைத்த மாசுகள் அனைத்தும் நீங்கும். அந்த நிலையை அடைந்தவன் நெருப்பினில் புடம் போட்டு மாசு, மறுக்களாகிய மலங்கள் நீக்கப்பட்டு மாற்று கூட்டப்பட்ட தங்கத்தைப் போல ஒளிர்வான்.
தங்கத்திற்குத் தானாகவே ஒளி வீசும் தன்மை உண்டு. மேலும் அதனுடன் மற்ற மாசுக்கள் சேர்வதால் தங்கம் தனது இயல்பான ஒளியை இழப்பதைத் தவிர வேறு எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை. மாசு, மறுக்கள் நீக்கப்பட்ட தங்கம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் முன் போல் ஒளிரும். அதே போல ஜீவனது எந்த வித ஆசை, கோப தாபங்கள் போன்ற மலங்களால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. ஜீவனது மலங்கள் நீங்க நீங்க ஆன்மாவின் வீச்சு அதிகமாகி அதன் இயல்பான ஒளிரும் நிலைக்குத் திரும்புகிறதே தவிர, எந்தப் பயிற்சிகளாலும் ஆன்மா புதிதாக எந்த நிலையையும் அடைவதில்லை. விசாரம், பயிற்சிகள் அனைத்துமே ஜீவனின் கர்ம வினைப் பயனாய் அடையப்பெற்ற மலங்களை அகற்றுவதற்கு மட்டுமே. மேகங்கள் விலகிய சூரியன் ஒளிர்வது போல, சூழ்ந்திருந்த மலங்கள் விலகிய ஆன்மா பிரகாசமாக ஒளிரும்.
67. ह्र्दाकाशोदितो ह्यात्मा बोधमानुस्तमोsपह्रत् |
सर्वव्यापि सर्वधारी भाति भासयतेsखिलम् ||
ஹ்ருதாகாஷோதிதோ ஹ்யாத்மா போதமானுஸ்தமோபஹ்ருத் |
சர்வவ்யாபி சர்வதாரி பாதி பாஸ்யதேகிலம் ||
இதயவெளி தோன்றி இருளையழி ஞான
உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே
எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)
றெல்லாம் ஒளிர்விக்கும் எண்
(அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்.)
நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் சூரியன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால், தானே தானே இருக்கும் ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி குரு மூலமோ, வேறு வழிகளிலோ அறிந்த ஒருவன் அதை உணர்ந்துகொள்ள, சாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே ஆன்ம போதம் எனப்படுகிறது.
சூரியன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகலுவது போல ஆன்மாவைப் பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் சூரியனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதுமாக இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து நிற்கிறது. எப்படி சூரியனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோமோ, அதே போல ஆன்மா தரும் ஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன. ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே ஆன்ம போதம்.
அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது.
68. दिग्देशकालाद्यनपेक्ष्य सर्वगं
शीतादिह्रुन्नित्यसुखं निरंजनम् |
यः स्वात्मतीर्थ भजते विनिष्कियः
स सर्ववित्सर्वगतोsमृतो भवेत् ||
திக்தேஷகாலாத்யநபேக்ஷ்ய சர்வகம்
ஷீதாதிஹ்ருன்னித்யசுகம் நிரஞ்சனம் |
யஹ ஸ்வாத்மதீர்த்த பஜதே விநிஷ்கியஹ
ஸ சர்வவித்சர்வகதோம்ருதோ பவேத் ||
(பஹ்ரொடை வெண்பா)
திக்கு இடம் காலம் முதல் தேடாமல் என்றும் எத்
திக்கும் ஆர்ந்தே குளிர்முன் தீர்ப்பதாய் – எக் களங்கும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்துள் தோய்
வுற்றவன் யார் செய்கை ஒன்று இன்றி – மற்றவன்
யாவும் அறிந்தோனாய் எங்கும் நிறைந்து ஆர் அமிர்தன்
ஆவன் எனவே அறி.
(திசை, தேசம், காலம் முதலியவற்றைத் தேடி அலையாமல், எப்போதும், எந்தத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து குளிர், வெப்பம் போன்றவைகளை நீக்க வல்லதாய், எந்த விதக் களங்கமும் இல்லாது, எப்போதும் ஆனந்த வடிவமே கொண்ட தனது ஆத்ம சொரூப புனித ஊற்றுக்குள்ளேயே மூழ்கித் தோய்ந்திருப்பவன் எவனோ, அவனே மேலும் செய்வதற்கு ஏதுமின்றி, எல்லாவற்றையும் அறிந்தவனாய், எங்கும் நிறைந்து ஒளிர்பவனாய், மரணமில்லாதவனாய் ஆகிறான் என்பதை அறிந்து கொள்.)
நிறைவாக வரும் இந்த ஸ்லோகம் ஆன்ம போதம் என்ற இந்த நூலின் சாராம்சத்தைக் கொடுக்கிறது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உரியவர்கள் எவர் என்று முதல் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருந்தது போல, இந்த இறுதி ஸ்லோகத்தில் அதை அடைவது எப்படி என்றும், அதைப் பெறுவதினால் என்ன பயன் என்பது பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் நம்மை முதலில் ஸ்தூலமான உடல் அளவில் குறுக்கிக் கொள்வதால் நமது வாழும் காலம், நாமிருக்கும் திசை மற்றும் தேசம் என்ற அளவிலும் கட்டுப்படுவதாக எண்ணுகிறோம். அதனாலேயே காலம் கடந்து எப்போதும், என்றும் இருக்கக் கூடிய, மற்றும் இடத்தால் கட்டுப்படாது எங்கும் இருக்கும் ஒரு பொருளைத் தேடி அலையும் போது அந்தத் தன்மைகளைக் கொண்டவனாக இறைவனை முன்னிறுத்தி அவனைச் சரணடைகிறோம்.
அப்போதும் நமது குறுக்கும் தன்மைகள் நம்மை விட்டகலாததால் இறைவன் இப்படி இருப்பானா அல்லது அப்படி இருப்பானா, இங்கிருப்பவனா இல்லை அங்கிருப்பவனா என்ற ஐயங்கள் நம்மை விடுவதில்லை. அதற்காகச் சில பல உருவங்களை உண்டாக்கி வைத்துவிட்டு, அவைகளை வழிபடுவதற்கு அவைகள் இருக்கும் இடத்தை நாடிச் செல்கிறோம். அதனாலேயே தல யாத்திரை, மூர்த்தி தரிசனம் எல்லாம் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதே போல கால அளவில் இப்போது வழிபட்டால் நல்லது, அப்போது வழிபட்டால் நல்லது என்றும் கருதி நல்ல நேரங்களும் பார்த்துச் செல்கிறோம்.
நமது தினப்படி பழக்க வழக்கத்தில் நீராடிவிட்டு வரும் போது, நமது உடல் அழுக்குகள் களையப்பட்டு அதனால் ஒரு புத்துணர்ச்சி வருவதை நாம் உணர்வதால், அதே போன்று இயற்கையாகவே அமைந்துள்ள ஆறுகளின் தன்மைகளையும், ஓடும் திசைகளையும் பொறுத்து அவைகளில் நீராடினால் நுண்ணியதாக நம்மிடம் வளர்ந்துள்ள நமது மாசுகளும் கழுவப்பட்டு நாமும் புனிதமாகலாம் என்று கருதுவதால் அவைகளை நோக்கிப் பயணிக்கிறோம். அதிலும் சில விசேஷமான இடங்களில் இருக்கும் ஊற்றுகள், குளங்களிலும், அவை போன்ற இடங்களில் இருந்து புறப்பட்டோ அல்லது அவ்விடங்களைத் தொட்டுச் சென்றுகொண்டோ இருக்கும் ஆறுகளிலும் நீராடுவதை புனிதமாகக் கருதுகிறோம். இவைகளை தீர்த்த யாத்திரை என்கிறோம்.
இப்படியாக மூர்த்தி தரிசனம், தீர்த்த யாத்திரை செய்வதெல்லாம் நமது மலங்களை நீக்கி இறைவன் சந்நிதானத்தில் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ளவே என்ற கருத்து நமக்கு இருந்தாலும், அப்படிச் செய்யும் நாம் யார் என்ற எண்ணம் ஒரு சிலருக்கே தோன்றுகிறது. மூர்த்திகளும், தீர்த்தங்களும் உலகில் இருப்பவை போன்று நாமும் உலகில் இருப்பதாக எண்ணும் வரை அவையெல்லாமே சரியான வழிபாட்டு முறைகளே. எல்லாம் இறைவனால் இயக்கப்படுகிறது என்ற எண்ணம் இருக்கும்போதும், ஒரு சிலருக்கே அந்த இறை சக்தி இல்லாது நாமே எப்படி இயங்க முடியும் என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றுபவர்களிலும் வெகு சிலரே “நான் யார்?” என்று தன்னைப் பற்றியே கேள்வி கேட்டுத் தனது பார்வையை உலகில் வெளிமுகமாக விடாது, காணும் தான் யார் என்பதை அறிந்துகொள்ளத் தனது கவனத்தை உண்முகமாகத் திருப்பி, தியானத்தால் தன் உள்ளொளி பெறுவதே ஆன்ம போதம் என்று மேலே பார்த்தோம்.
இவ்வாறாக எந்தத் திசையில், எந்த இடத்தில் என்ன இருக்கிறது, அதை எந்தக் காலத்தில் தரிசிப்பது என்று இங்கும் அங்கும் அலையாமல், அவை அனைத்தையுமே காணும் அல்லது காணப்போகும் தன்னைப் பற்றி விசாரம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தால் குளிரோ, வெப்பமோ எதுவானாலும் அங்கும் இருந்து, எந்த விதக் குற்றம், குறைகளையும் தனது தன்மைகளாய்க் கொள்ளாது, எப்போதும் ஆனந்தம் ஒன்றையே தனது இயல்பாய்க் கொண்டுள்ள ஆன்ம சைதன்யமாகிய தனது சொரூபத்திலேயே திளைத்து, அங்கு ஊறும் ஆனந்தப் புனித நீரில் மூழ்கி எக்காலத்தும் இன்புறும் ஒருவனே உலகில் வாழ்ந்த பயனை அடைந்தவன் ஆவான். அந்த நிலையை அடையும் வரை இருமைகளும் இருக்கும், அதனால் வரும் வறுமைகளும் தொடரும். ஆனால் ஆன்ம சாகரத்தில் மூழ்கி முத்தை அடைந்தவனுக்கு அதற்கும் மேல் செய்வதற்கு என்று ஏதும் இருக்காது, அவன் சத்தே உருவாகியுள்ள ஆன்மாவோடு ஒன்றி இருப்பதால், இருக்கும் அனைத்தும் அவனுக்கு அதுவாகவே தோன்றும்; எந்த வித வேற்றுமைகளும் தெரியாது. அவன் சித்தே வடிவான ஆன்மாவாய் இருப்பதால் அறிவு மயமாகவே இருப்பான்; அவன் மேலும் அறிவதற்கு ஒன்றும் இருக்காது. தனது பேரறிவு எனும் ஒளியால் தானும் பிரகாசித்துக்கொண்டு, அனைத்தையும் ஒளிர்வித்துக்கொண்டும் இருப்பான். அவன் ஆனந்த வடிவேயான ஆன்மாவாக ஒன்றியுள்ளதால், இப்போது உண்டு, அப்புறம் இல்லை என்ற குணங்களைக் கொண்ட இன்ப-துன்பங்களைக் கடந்து, எப்போதும் ஆனந்தமாகவே இருப்பான். என்றும், எங்கும் உள்ள ஆன்மாவாய் ஆனதால் அவன் நித்தியன்; இனி பிறப்பு, இறப்பு எனும் கால அளவைகள் இல்லாத அவன் மரணமில்லா ஆனந்தப் பெருநிலையில் நிலைத்து நிற்பான்.
— ஓம் தத் சத் —
முற்றும்.
அத்வைதம் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று . சிவமும் சக்தியும் ஒன்றே. அணுவிலிருந்து சக்தி Fission) , சகதியிலிருந்து சிவம்( Fusion) என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் கண்ணதாசன் பொழிப்புரையுடன் (மொழி பெயர்ப்பில் சில தவறுகள் இருந்தாலும் ) படித்து பார்த்தேன் . வாழ்கைக்கு உரிய லட்சணங்களையும், சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையையும் என்ன மாக பதித்திருக்கிறார் அந்த மகான்! அத்வைதம் புரிந்தால் ஆசை விட்டுப்போகும் ஆசை விட்டுப்போனால் மோகம் விட்டுப்போகும், மோகம் விட்டுப்போனால் நிச்சல தத்துவம் கிட்டும். அதுவே ஜீவனுக்கு முக்தி அடையும் வழி .இந்த போதனைகளை இன்றைய காலத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்காவது கடைப்பிடித்ததால் பொய் பட்டா தயாரித்து நிலம் பறிக்க வேண்டாம் . சீட்டு நடத்தி மோசம் செய்ய வேண்டாம், கோழிப்பண்ணை வைத்து ஏமாற்ற வேண்டாம் , இன்னும் எத்தனையோ தவறுகள் செய்ய வேண்டாம் . தனக்கு கிட்டாததை எதிர்பார்க்கக்கூடாது என்றும், வந்ததை வேண்டாம் என்றுறு சொல்ல வேண்டாம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். என்னே என் ஹிந்து மதம்!
நன்றி…தெளிவு பெற்றேன்