கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த

கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,

மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்

விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே? 11

சொற்பொருள்: குடைதல் நீராடுதல்; குளித்தல். நாவி கஸ்தூரி. கதுப்பு கூந்தல். வெறி மணம். நாறும் மணக்கும் (வீசும்). தரங்கம் கடல் அலைகள். விதுப்பு விருப்பம்

கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? (நீராடும் பெண்களின் அளவு சொல்லப்பட்டது.)

சரயு நதியில் கலந்த பூ, கஸ்தூரி ஆகியவற்றின் மணம், அந்நதி கடலில்போய்க கலந்தபின்னும் அலைகளில் வீசுகிறது. அப்படியானால், அந்த நதியில் நீராடும் மகளிரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்லலாகுமா?

Translation: Who can count the number of young ladies with honeyed babble and oblique sideglances that are plunging, diving and frolicking in the fresh waters (from the floods) instilling desire (love) in the hearts of men on the bank, if one can smell the fragrance of their flowers and the perfume of musk that have been washed by the river, in the waves of the yonder ocean! (The immensity of number of women is stated.)

Elucidation: The number of young girls bathing in the river, on whom the men on the banks, captivated by the honey-dripping child-talk and their oblique sideglances, cast their glances of desire, is immense indeed. Who is there to count the numbers? Take a guess for yourself. Let me just say the waves of the ocean smell of the flowers and the perfume of musk, washed off from the bathing lassies. So much was the aroma that it was strong enough till the river confluenced with the sea.

வெண்தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,

குண்டலக் கோல மைந்தர் குடைந்த நீர்க்கொள்ளை, சாற்றின்,

தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,

வண்டல் இட்டுஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ. 12

சொற்பொருள்: சாற்றின் சொல்லப் போனால். வெண்தளம் பச்சைக் கற்பூரம், வெண்சந்தனம் போன்றவற்றின் கலவையால் ஆன குழம்பு. விரை மணம். குங்கும் – குங்குமப்பூ, மென் சாந்து செஞ்சந்தனத்தை அரைத்த குழம்பு. சாலிவேலி நெல் விளைந்திருக்கும் வயல் பரப்பு. தழீஇய தழுவிய, சூழ்ந்த. வைப்பு நிலம். மதுகரம் வண்டு.

நீர்க்கொள்ளை அளவில்லாத நீர். அற்புதமான சொற்படைப்பு. ‘கொள்ளை இன்பம் குலவு கவிதை‘ என்று பாரதியும், ‘காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ (நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து) என்று பாரதிதாசனும் சொற்களைப் படைக்க ஏதுவாக இருந்த ஆதார ஊற்று கம்பன் என்பதற்கு ஒருசோறு பதம்.

(அங்கிருந்த ஆடவரின் எண்ணிக்கையும் அளவில்லாததுதான்) சொல்லப் போனால், காதுகளில் குண்டலங்களை அணிந்த இளைஞர்கள் மூழ்கிக் குளித்து ஆடிய காரணத்தால் அவர்கள் பூசியிருந்த (பச்சைக் கற்பூரமும்) குங்குமப்பூவும் கலந்த வெண்சந்தனத்தின் குழம்பும், வெண் சந்தனப் பூச்சும் நதிநீரில் கலந்து (நதிக்கு அருகிலிருந்த) சோலைகளின் பரப்புகளிலும், நெல் வயல்களிலும் அவற்றைச் சூழ்ந்த பெருவெளிகளிலும், ஓடி (அந்தக் கலவைகள்) வண்டலாகத் தங்கியது. அப்படி நறுமணம் கமழும் வண்டல் நிறைந்திருந்த காரணத்தால் மண்ணைக்கூட வண்டுகள் மொய்க்கத் தொடங்கின. (என்றால், எத்தனை ஆடவர் அங்கே நீராடினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)

Translation: Innumerable were the menfolk, wearing prominent earrings, too. The waters were filled with the pastes of white sandal, red sandal and other fine perfumeries they had smeared on their bodies, washed off to the thickets, paddy fields and the lands surrounding them (as the river passed through) and sedimented. The mire of perfumery thus formed was so dense that soon bees started buzzing over, mistaking those spots for flower gardens. (If such was the amount of sedimentation from pastes applied on their bodies, count the number of men yourself! Now, the immensity of menfolk thronging the river is described.)

Elucidation:

சேல்உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்,

மால்உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,

கால்உண்ட சேற்றுமேதி கன்றுஉள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பால்உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை. 13

சொற்பொருள்: சேலுண்ட மீன்களை ஒத்த, மால்உண்ட பெருமை பொருந்திய, நளினப் பள்ளி தாமரை மலராகிய படுக்கை. மேதி எருமை

மீன்போன்ற கண்களை உடைய பெண்களைப்போல் சுற்றித் திரிகின்ற, சிவந்த கால்களை உடைய அன்னப் பறவைகள் தம் குஞ்சுகளை, மலர்ந்திருந்த தாமரைப் பூக்களாகிய படுக்கையி்ல் கிடத்தின. சேறுபடிந்த கால்களை உடைய எருமைகள், வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் தம் கன்றுகளை நினைந்தவாறு சொரியும் பால், அந்த அன்னக் குஞ்சுகளின்மேல் விழ, அதைப் பருகியவாறு உறங்கும் அக்குஞ்சுகளைப் பச்சைத் தவளைகள் தாலாட்டின.

அன்னப் பறவைகள் பூந்தொட்டிலில் தம் குஞ்சுகளைக் கிடத்தின. அவற்றைக் கடந்து செல்லும் எருமைகள் பாலூட்டின. துள்ளிக் குதித்தாடும் பச்சைத் தவளைகள் மோதுவதால் தாமரைப் பூக்கள் அசைந்து, தொட்டில் ஆடுவதுபோல் ஆடின. அன்னக்குஞ்சுகள் இவ்வாறு துயின்றன.

Translation: The red-footed swans, moving about like women of shapely eyes, laid their fledglings on the soft-beds of blossoming lotuses. Milk overflowing from the udders of buffaloes, wading through the mud, fell on the fledglings and fed them. The ‘cradle’ was rocked by the green frogs jumping about all over the puddle. The young ones of swans, thus fed and rested on the flowery bed, rocked by frogs, slept in peace.

Elucidation:–

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,

பயில்சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளிநின்றும்

துயில்எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை. 14

சொற்பொருள்: வதுவை திருமணம். குனிக்கும் ஆடும். மஞ்ஞை மயில். அயில் வேல்.

சோலைகளில் குயில்பேடும் சேவலும் (ஆண்குயிலும் பெண்குயிலும்) மணம்செய்துகொள்ள; மயில்கள் ஆடி, வேற்படையை ஒத்த கண்களை உடைய பெண்கள் நடனம் ஆடும் சாலைகளை விடவும் அழகுடையதாக அந்த இடத்தை ஆக்க, அரச அன்னம் (ராஜஹம்ஸம்) கண்விழித்து எழுமாறு பாடுகின்ற பாணனைப் போல் வண்டுகள் ஆர்த்துக் கொண்டிருந்தன.

அரச அன்னம் துயில் எழுமாறு வண்டுகள் முரல்கின்றன. அப்படிக் கண்விழிக்கும் நேரத்தில் அங்கே குயில்கள் ஒன்றோடொன்று கலந்ததனால் உண்டான நாதம் காற்றை நிறைக்கிறது. அழகிய பெண்கள் நடனமாடும் சாலையைக் காட்டிலும் அழகியதாக மயில்கள் ஆடும் அந்தச் சோலை விளங்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசனாகிய அன்னம் கண்விழிக்கிறது.

Translation: Beez buzzing past the Emperor-swan (Raj Hans) sang the hymns to wake him up, gently. Newly wedded pairs of cuckoos filled the air with their joyous cries. Peacocks dancing all around made the garden all the more elegant than the halls where danced maidens of eyes whose sharpness of looks matched that of lances.

Elucidation: The Raj Hans wakes up to the gentle buzz of bees, singing of cuckoos and dancing of peacocks. A real emperor indeed!

மக்கள் பொழுது போக்கும் வகைHobbies and pastimes

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்; 15

சொற்பொருள்: மருந்து – அமிர்தம். கேள்வி – கற்றவர் நிகழ்த்தும் சொற்பொழிவு, வாதங்கள். விருந்தினர் – வீட்டுக்கு வருகைதரும் புதியவர்கள், அதிதிகள். (முன்னரே அறிமுகமானவர்கள், உறவினர்கள் ஆகியோரின் வருகை அன்று.) இந்தப் பாடல் தொடங்கி, 19ஆம் பாடல்வரையில் குளகம். ஒரேபொருளைப் பற்றி, ஒரு முழுமையான வாக்கியமாகத் தொடர்ந்துகொண்டே போகும் செய்யுள்கள். (வாக்கியம் அல்லது பொருள், கவிதையின் நான்காம் அடியில் முடிவடையாமல், அடுத்த பாடலுக்குத் தொடர்வது குளகம் எனப்படும். இவ்வாறு இங்கே நான்கு பாடல்களுக்குப் பொருள் தொடர்ந்து சென்ற பிறகு பூர்த்தியாகிறது.)

சிலர், மணமுடித்த பெண்களோடு இன்பம் துய்த்தனர். பருந்தும் அதன் நிழலும் போல, சொற்களைத் தழுவிச் செல்லும் ராகங்களால் அமைந்த பாடல்களைச் சிலர் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அறிஞர்களுடைய சொற்பொழிவுகளையும் அவர்கள் மேற்கொள்ளும் தர்க்க வாதங்களையும் ரசித்துக்கொண்டிருந்தனர் சிலர். விருந்தினர் வீட்டுக்கு வந்ததும் ஒரு விழாவைப்போல அவர்களுடைய வருகையைக் கொண்டாடினர் சிலர்.

வானத்தில் செல்லும் பருந்தின் நிழல் நிலத்தில் வீழ்ந்தாலும் பருந்து பறக்கும் இடத்துக்கெல்லாம் அதனைத் தொடர்வதைப் போல, பாடலில் அமைந்திருக்கும் சொற்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ அங்கெல்லாம் பாவங்கள் ததும்புமாறு ராகங்கள் அவற்றைத் தொடர்ந்தன.

Translation: Those who had wedded recently were finding the joys of wedlock; few enjoyed rhapsodies set to music, in which the bubbling raga followed the bava enshrined in the words like the eagle and its shadow; some were filling the large halls where scholars were delivering their lectures or engaged in heated discussions; some were enthused by the arrival of guests (aditi, or guests-unknon) and greeted them with such gusto, that it turned almost a celbration befitting a festival.

Elucidation: That raga should move with the bava enshrined in the words of the lyric as does the shadow of an eagle in flight, is a bright little simile. The shadow on land, moves along with the bird in flight. One in the sky and the other on the land, moving in unison. Point to ponder indeed.

By structure, this verse known as ‘kulagam’ in Tamil. In a kulaga quartet, The sentence, or the sense, moves beyond the fourth (and the last) line of the verse and continues to the next. Here, we have a structure—a sentence—that runs along four quartets and gets completed in verse 19.

முந்தைய பகுதி… அடுத்த பகுதி…

One Reply to “கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)”

  1. Pingback: kamba ramayanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *