யானை இறைத்த சோறு!

யானை உண்ணுதல்அரிசி இருக்கும் கோணிச் சாக்கை முதுகில் தூக்க ஓர் இரும்புக் கொக்கியைப் பயன்படுத்துவார்கள் மூட்டை தூக்குவோர். பிறகு அதில் இருக்கும் அரிசி தான் சொன்ன தரத்தில் இருக்கிறதா என்று சோதிக்கக் கடைக்காரர் ஒரு இரும்பிலான கூரிய முனையுள்ள குழாயால் ஒருமுறை ‘சதக்’ என்று குத்தி அரிசியை எடுத்துப் பார்ப்பார். இப்படியெல்லாம் பலமுறை குத்துப்பட்ட அந்தப் பரிதாப மூட்டையைத் தூக்கிச் செல்லும்போது போகும் வழியெல்லாம் அரிசி கொட்டியபடியே போகும்.

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. கிராமத்திலிருக்கும் தன் மாமாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம் ஒருமுறை. அப்போது சோறு கொஞ்சம் கீழே இறைந்துவிட்டது. விவசாயியான மாமா சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. “ஒரு பருக்கையைக் கீழே இறைப்பது எளிது. ஆனால் அந்த ஒரு நெல்மணியை விளைவிக்க ஒரு விவசாயி எவ்வளவு பாடுபடுகிறான் தெரியுமா?” என்பதுதான் அவர் சொன்னது. இதை நாம் உணர்வதோடு மட்டுமல்ல, நமது குழந்தைகளுக்கும் சொல்லவேண்டும்.

எப்படிச் சொல்வது? அவர்கள் ஒவ்வொரு சினிமாவிலும் சண்டைக் காட்சியில் எண்ணற்ற நாற்காலி மேசைகள், மாடியேறும் படியின் கைப்பிடிகள், ஆளுயரக் கண்ணாடிகள், காய்கறி மற்றும் பழ வண்டிகள், சட்டிபானைகள், கட்டை வண்டிகள் இன்னும் பட்டியலில் அடங்காதவை நொறுக்கப்படுவதைப் பார்த்து வளருகிறார்கள். நூறுகோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் 36 கோடிக்கு மேல் வறுமைக் கோட்டின் கீழ் வருகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. ‘உணவு வாங்க முடியாததால்’ அவர்கள் சாகிறார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது.

‘உணவில்லாமல்’ அல்லது ‘பட்டினியால்’ என்று சொல்லாமல் ‘உணவு வாங்கமுடியாததால்’ என்று ஏன் சொன்னேன்? அதுதான் உண்மை. இந்தியா இப்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு. தேவையான உணவு இருக்கிறது. ஆனால் ஒரு மாநிலம் மழையாலும் வெள்ளத்தாலும் துன்புறும்போது, இன்னொரு மாநிலத்தில் தொடர்ந்து மூன்று வருடங்கள் மழைபொய்த்ததால் வறட்சி! பயிர்கள் அழிந்துபட்டன. விதைநெல்லையும் சமைத்துச் சாப்பிட்டாயிற்று. இதில் வினோதம் என்னவென்றால் அரசின் FCI கிடங்குகளில் ஏராளமான அரிசி சேமிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்கவும், வறட்சி ஆண்டுகளில் தாக்குப் பிடிக்கவும்தான் அரசு உணவு தானியத்தை வாங்கிச் சேமிக்கிறது. இப்படித் தேவைக்கும் அதிகமாகக் குவிக்கப்பட்டு, எலியும் பெருச்சாளியும் தின்று, கிடங்கியில் இடமில்லாமல் வெளியே தார்ப்பாய் போட்டு மூடிவைத்தது மழையில் நனைந்து, முளைவந்து, பூசணம் பூத்து, சாப்பிடத் தகுதியில்லாமல் போய், மக்கி அழியும் அதே நேரத்தில் அங்கிருந்து வெகுதூரமல்லாத பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நடந்ததை ‘மக்கள் உரிமைக் கழகம்’ (PUCL) கூறியிருக்கிறது.

இப்படி வறட்சி பாதிக்கப்படும்போது நடப்பது பட்டினிச் சாவுமட்டுமல்ல. சாவதற்கு முன்னாலே இன்னும் சொல்லக்கூசுகின்ற காரியங்களைச் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். தமக்கே உணவு இல்லாத நிலையில் ஆடுமாடுகளைப் போஷிப்பது எப்படி? அவற்றை அசட்டை செய்ய, அவை மரிக்கின்றன. தம்முடைய உடமைகளை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள், அநியாய வட்டிக்கு அடமானம் வைக்கிறார்கள். இன்னும் கேவலமாக, தம் மனைவி மக்களைக் கொத்தடிமைகளாக விற்பதும், அடமானம் வைப்பதும் நிகழ்கிறது. பெண்கள் விபசாரத்துக்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இளைஞர்கள் வன்முறைமிக்க, சட்டத்துக்கு வெளியிலான குற்றவாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

1943-இல் வங்காளத்தில் ஒரு பெரிய பஞ்சம் வந்தது. அதில் சுமார் இரண்டாண்டுகளுக்குள் 15 லட்சம் பேர் இறந்துபோயினர். இந்த எண்ணிக்கை அவுஷ்விட்ஸின் (Auschwitz) கொலைக்கூடங்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கைக்குச் சமம். இந்த அப்பாவி இந்தியர்களைக் கொன்ற ஹிட்லர் யார்? சந்தேகமென்ன, பிற இந்தியர்கள் தாம். பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கிய ஆமார்த்ய சென்னின் முடிவு இது: வங்கப் பஞ்சத்தில் இறந்த 15 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறையால் இறக்கவில்லை. பணம் இருப்பவர்கள் வாங்கி உணவைப் பதுக்கிவிட்டதால் இறந்தார்கள். என்ன கொடுமை பாருங்கள். பற்றாக்குறை வரப்போகிறது என்று தெரிந்தவுடன் வசதி உடையவர்கள் தமது தேவைக்குமேல் வாங்கிப் பொருள்களைக் குவித்துவிடுகிறார்கள். அதனால் ஒரு செயற்கையான பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது! ஆங்கிலத்தில் இதை scarcity amidst plenty என்கிறார்கள்.

இது இன்றைக்கும் பொருந்தும். பகட்டான நுகர்வு (conspicuous consumption) இன்றும் நாம் செய்கிறோம். அதிகச் சம்பளம், வசதியான வாழ்க்கை, சம-வர்க்கத்தின் தாக்கம், விளம்பரத்தின் இழுப்பு, நாகரிக ஈர்ப்பு – இவையெல்லாம் சேர்ந்து நம்மை ஆடம்பரத்தை நோக்கித் தள்ளிவிட்டன. “நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன?” நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும். அவை மின்சாரத்தைப் பருகிக் கொண்டிருக்கின்றன. மின்வெட்டு வருகிறது. தொழிற்சாலைக்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் போதுவதில்லை. உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. உடனே “இந்தியாவில்தான் இவ்வளவு மின்வெட்டு. எந்த அரசாங்கம் வந்தாலும் இதெல்லாம் மாறாது” என்று பழிக்கிறோம். ஏன், உங்களுக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லையா?

நான் சிறுவனாக இருந்தபோது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குப் போய் யானை உண்பதைப் பார்ப்பேன். சுமார் அரைப்படி அரிசிச் சோறு கொண்ட பட்டைகளை யானையிடம் பாகன் கொடுப்பார். அதை வாங்கி ஒரே கவளவமாகப் போட்டு விழுங்கிவிடும் யானை. இப்படி ஏராளமான கவளங்கள் உண்ணும் அந்த யானை. நமக்கு மலைப்பாக இருக்கும். ஆனால் வாயில் போடும்போது ஒரே ஒரு கவளம் கீழே விழுந்துவிட்டதென்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த யானைக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. தவறியதை உணரக்கூடச் செய்யாது.

சற்று நேரத்தில் பார்த்தால், எல்லாப் பக்கங்களிலும் இருந்து எறும்புகள் வந்து மொய்த்துவிடும். ஒன்றா, இரண்டா, லட்சலட்சமாய் வரும். குடும்பத்தோடு வரும். வயிறார உண்ணும். திருப்தியடையும். இதைக் குமரகுருபரர் சொல்கிறார் கேளுங்கள்:

வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா – ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.

(நீதிநெறி விளக்கம்: பாடல்-37)

[தூங்கும் – அசையும்; உய்யுமால் – தப்பிப் பிழைக்கும்; அயின்று – சாப்பிட்டு]

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் மத்தியில் ஒரு அரிசிப் பஞ்சம் வந்தது. மிக அதிக விலை கொடுத்தாலும் அரிசி கிடைக்காது. மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட மரவள்ளிக் கிழங்கு, கோதுமை சாதம் என்று இவற்றைச் சாப்பிடும் நிலைமை. முன்னமொருமுறை இவ்வாறு ஆனபோது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி எல்லோரும் திங்கட்கிழமை இரவு விரதம் இருங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். வாரத்தில் ஒரே ஒரு வேளை உணவைப் பலகோடிப் பேர் தவிர்ப்பதால், பெருமளவு உணவு தானியம் மிச்சமாகும். (வயிற்றுத் தசைகளுக்கு ஓய்வுகொடுக்கவேண்டியதன் அவசியத்தை முன்பு எழுதியிருந்தேன். அந்த நன்மையும் உண்டு.) இது தானியச் சந்தையில் வாங்குவோர் அழுத்தத்தைக் குறைக்கும். வாங்குவது குறைந்தால், விற்பனையும், விலையும் குறையும். விலை குறைந்தால் எளியவர்களின் வாங்குதிறனுக்குள் அவை அகப்படும். அப்போது ஆரம்பத்தில் கூறிய செயற்கையான வறட்சியும் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும்.

எத்தனை அருமையான ஆனால் எளிய சிந்தனை! வறட்சி, வேலையின்மை, வறுமை இவற்றாலல்லவா வன்முறைகள் பெருகுகின்றன. இதைத் தவிர்ப்பதில் நமது பங்கு எவ்வளவு என்று யோசித்தோமா? ஆக, நாம் செய்ய வேண்டியவை இவைதாம்: (1) தேவையில்லாததை வாங்கக்கூடாது (2) தேவைக்குமேல் பயன்படுத்தக் கூடாது (3) வாங்கிய எதையும் வீணாக்கக் கூடாது (4) நம்மிடம் இருக்கும் திறமை, செல்வம், உணவு, அறிவு, நேரம், உழைப்பு இவற்றைத் தேவையுள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். பிறகு இந்த உலகே சொர்க்கம். இதைத்தான் இந்து மத அறங்கள் போதிக்கின்றன.

7 Replies to “யானை இறைத்த சோறு!”

 1. அன்பு மதுரபாரதி,

  தங்களின் யானை இறைத்த சோறு கட்டுரை படித்தேன். இந்தியாவின் இன்றைய சூழ்நிலையில் அனைவரும் உணரவேண்டிய கருத்தைக் கொண்டது இக்கட்டுரை. படித்தேன் மகிழ்ந்தேன். உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். அன்பன். ஜெயக்குமார்.

 2. //ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் மத்தியில் ஒரு அரிசிப் பஞ்சம் வந்தது.//

  “ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதிகளின் மத்தியில்“. இந்தப் பஞ்சம்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரையில் எழுந்திருக்க முடியாத அடியைக் கொடுத்தது. கட்டுரையாளர் கவனப் பிசகாக எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அடுத்து அவர் குறிப்பிடும் லால் பகதூர் சாஸ்திரி 1966ல் காலமானார்.

  கட்டுரை தெளிவான பார்வையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. கட்டுரையாளர் பெயரைச் சொன்னோலே போதுமானது.

 3. உணவின் அருமையையும் முக்கியத்துவத்தையும் நம்மின் அலட்சியத்தையும் அழகாக சுட்டிக்காட்டும் நல்ல கட்டுரை. மிகத்தரமான கருத்தாழம் மிக்க சரளமான கட்டுரைகளை வழங்கும் இந்த தள உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  ஜயராமன்

 4. அருமையான கட்டுரை மதுரபாரதி ஐயா. There’s enough in the world for everyone’s need but not for evreyone’s greed என்ற காந்திஜியின் பொன்மொழி ஞாபகம் வருகிறது..

  ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பமும் உணவை வீணாக்காமல் இருப்பதை ஒரு விரதமாகவே கடைப்பிடிக்க வேண்டும்.. “அன்னம் ந பரிசக்ஷீத, தத் வ்ரதம்” என்று உபனிஷதம் கூறுகிறது.

  அளவாக சமைக்க வேண்டும். மீதமானால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து அடுத்த நாள் உண்ணவேண்டும்.

  உணவகங்களில் அதிகம் உணவு வீணாகிறது. காசு தான் கொடுக்கிறோமே என்று அளவுக்கதிமாக உணவு வகைகளைத் தருவித்து பாதி மட்டுமே சாப்பிடுவது தான் பல இடங்களில் நடக்கிறது. அப்படி இல்லாமல், மீதமானதை பேக் செய்யச் சொல்லி எடுத்துக் கொண்டு போய் வீட்டில் சாப்பிடலாம், அல்லது வழியில் வறியவர்களுக்காவது தானம் செய்யலாம்.. அமெரிக்காவில் பல உணவங்களில் மக்கள் மிஞ்சியதை பேக் செய்து கொண்டு போகிறார்கள் – இந்தியாவிலும் அந்தப் பழக்கம் வளரவேண்டும்.

 5. நேற்று டிஸ்கவரி சேனலில் “Ganesha – The elephant God” என்று ஒரு டாக்குமெண்ட்ரி காட்டினார்கள். யானைகள் அழகாக பழக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதில் சோறு கவளமாக கொடுக்கப்படுவதில்லை. கம்பு, சோறு மற்றும் பலதரப்பட்டு கலந்து ஒரு கலவையாக நன்கு மசிக்கப்பட்டு பின் அதற்கான அச்சுக்களில் அளவாக வார்க்கப்படுகின்றன. அந்த உணவு மிதமாகவும், குறையவும் செய்தால் யானைகளுக்கு பிரச்சனையாம். யானைகள் அந்த உணவு வார்க்கப்படும் வரை அமைதியாக காத்திருப்பதே ஒரு அழகு. பின்னர், பாகன் அந்த பெரிய பாளமாக வார்க்கப்பட்ட உணவை கையில் எடுத்து அழகாக யானையின் திறந்த வாய்க்குள் நன்கு நுழைத்து ஊட்டுகிறார். சிந்தாமல் சிதறாமல் அழகாக அங்கே உணவு வழங்கப்பட்டு சாப்பிடப்படுகிறது. ஒன்று இரண்டல்ல, கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது யானைகள். நம் கோயில்களிலும் உணவு படைப்பதை கொஞ்சம் கவனத்துடன் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது

 6. மதுரபாரதி அவர்களே ! மிக நன்றாகச் சொன்னீர்கள். ஒன்றையும் வீணாக்கக் கூடாதுதான்.

  நானும் எனக்கு தெரிந்தவர்களிடம், சிறுவர் பெரியவர்கள் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், முடிந்தவரை என்னுடைய தனிப்பட்ட தேவைகளை குறைத்து, செய்ய முடிந்ததை செய்தும் கொண்டிருக்கிறேன்.

  ஆனால்……

  இதை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தேன். வாதத்திற்காக எழுதவில்லை. கொஞ்சம் “உரக்க சிந்திக்கிறேன்”, அவ்வளவுதான்.

  “இது என்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும்” என்பது போன்ற ஆசைகளை விளம்பரங்களின் மூலம் தேவைகளாக்கி , தேவைகளையே அத்தியாவசிய பொருள்களாகவும், மிக அத்தியாவசிய சேவைகளாகவும் ஆக்கி மென்மேலும் மக்களை நுகர்பவர்களாக மாற்றியே பணம் குவித்து வல்லரசுகளாக ஆகிய நாடுகளின் தாக்கத்தில் வேகமாக மாறிவறும் நம் நாட்டில் இந்த போதனைகள் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை.

  ஏராளமாக கடனைக் கொடுத்து நடுத்தர மக்களையும் நுகரும் மூக்களவு கடனாளியாக ஆக்கிவிடும் பொருதாளார முன்னேற்றம் (?) விரைவில் வந்து நிரந்தரமாக தங்கி கலாச்சாரத்தை கூட திசை திருப்பிவிடும் இந்நாளில், “தேவையில்லாததை வாங்கக்கூடாது, தேவைக்குமேல் பயன்படுத்தக் கூடாது ” என்றால் மக்கள் கேட்பார்களா ? தேவையே ‘மேலும்’ ‘மேலும்’ பெருகும்போது, தேவைக்கு ‘மேல்’ என்பதை எப்படி, எவர் நிர்ணயிப்பது ?

  அதிகம் சொல்லப் போனால் பின்னர் ‘நுகர்வர் இல்லாமல் பொருட்களின் உற்பத்தி எப்படி பெருகும்’, பொருளாதாரம் எப்படி வளரும் ?’ என்று திருப்பி கேட்கிறார்கள்; ‘நாடு எப்படி பொருளாதார ரீதியில் முன்னேறும் ?’ என்று வாதிக்கிறார்கள்.

  முழுமையான ஒரு மாற்றுத் திட்டம் இல்லாமல், வெறும் போதனையாக மட்டும் சொல்வதில் நமக்கு வேண்டுமானால் ஒரு ‘சுய மகிழ்ச்சி உணர்வு’ (feel good factor) இருக்குமே தவிர, நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது கேள்விக்குறிதான்.

  உதாரணத்திற்கு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நம் நாடு அந்த உணவு தானியங்களை நாடெங்கும் வீணாக்காமல், தரத்தோடு, விரைவாக வினியோகிக்கும் வழியிலும் உயரவேண்டாமா ? ஏன் அது முடியவில்லை ?

  ஏன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரையாவது நாடெங்கும் சமமாக சிறார்களுக்கு அளிக்க முடியவில்லை ? பணமிருப்பவன் குழந்தைகள் நல்ல, சிறப்பான, நூதன பள்ளிக்கூடங்களுக்கும், பணமில்லாதவன் குழந்தைகள் அடிப்படை வசதியே இல்லாத மாநகராட்சி பள்ளிகளுக்கும் போகும் இந்த துர்க்கதி எப்படி எப்போது வந்தது ? ஏன் நீடிக்கிறது ?

  நீங்களும் நானும் உணவை வீணாக்கக் கூடாதுதான். ஆனால், வெறும் தனிப்பட்ட சேமிப்பால் மட்டும் ஏழ்மையும் பசியும் அழிந்து போகுமா ?

  எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் என்று சொல்லிக்கொண்டு கயவர்களை வைத்து போஷிக்கும் அரசாங்கங்கள் உள்ளவரை இதுபோன்ற உணர்வு பூர்வமான போதனைகள் பெரிதாக உதவும் என்று தோன்றவில்லை.

  சாஸ்திரியார் சொன்னது நல்லவர்கள் அரசியலில் இருந்து, ஆட்சிக்கும் வந்த காலம். அந்நாளில், மக்களிலும் பலர் நல்லவர்களாக இருந்தார்கள். இப்போது என்ன கதி என்று சொல்லவும் வேண்டுமா ?

  இரும்பு நெஞ்சத்துடன், ஆனால் நியாயமாக, களை பிடுங்கி எறியும் வீரம் உள்ள நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் நம் நாட்டின் பெருகி வரும் வளம் எல்லோருக்கும் போய் சேரும். ஆனால் ஆட்சியாளர் அப்படி வரவேண்டும் என்றால் குடிமக்களில் பலருக்கு நல்ல குணங்கள் இருந்தாக வேண்டும். அரசியலுக்கு வரும் சிலரும் குடிமக்களாகத்தானே இருந்தார்கள்.
  அந்த விதத்தில் உங்களின் அறிவுரைகள், நம் மதத்தின் போதனைகள் உதவுக்கூடும் என்று நம்பிக்கை கொள்ள ஆசையாயிருக்கிறது. ஆனால் சந்தேகம் தான் மிஞ்சுகிறது. சில சமயங்களில், நாமுண்டு நம் வேலையுண்டு என்று பார்த்துக் கொண்டு போகவும் வேண்டியிருக்கிறது….

  கீழே விழும் கவளத்தை பல்லாயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிடும் என்று சொல்வது சரிதான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இரக்கமே இல்லாத, பேராசை பிடித்த நரிகள், நாய்கள் மற்றும் காக்கைகள் அதிகமாக உள்ள இடத்தில் அந்த கவளத்தில் ஒரு பருக்கை கூட எறும்புகளுக்கு மிஞ்சாது.

 7. அருமையான கட்டுரை மதுரபாரதி ஐயா. திரு மனோ சொல்வது 100க்கு 100 உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *