போகப் போகத் தெரியும் – 3

தலித்துகளுக்கு ஜீரோ இடஒதுக்கீடு

அந்த ஜோதிடரிடம் ஒரு கோளாறு உண்டு. கண் விழித்துச் சொப்பனம் காண்பவர் அவர். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரது வயதை ஊகித்து விடுவார். கிரகங்களை ஜாதகத்தில் நிறுத்தி உடனே பலன் சொல்லிவிடுவார். யாழ்ப்பாணத்து வீதிகளில் அவரது மிதியடிச் சத்தத்தைக் கேட்டாலே தெரு காலியாகி விடும். ‘கண்டால் எதையாவது சொல்லி வைப்பார். பெரும்பாலும் அது கெட்டதாகத்தான் இருக்கும்’ என்பது வெகுஜன அபிப்ராயம்.

Sadhu Appaduraiசாது அப்பாத்துரை என்ற மகான் மீது ஜோதிடருக்குக் கடுப்பு. ‘கிரகங்கள் ஞானியரை நெருங்க முடியாது’ என்று அப்பாத்துரை சொல்லியிருந்தார். இது ஜோதிடருக்குப் பொறுக்கவில்லை. அவர் அப்பாத்துரைக்கு நாள் குறித்துவிட்டார். அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டி ‘நீங்கள் மரணம் அடையும் வேளை நெருங்கிவிட்டது. உம்முடைய ஞானம் அப்போது வேலை செய்யாது’ என்று சொல்லிவிட்டார். அப்பாத்துரையிடம் ரியாக்ஷன் இல்லை.

அன்றிரவு ஜோதிடருக்குத் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்தவர் பொழுது விடிவதற்காகக் காத்திருந்தார். காலையில் அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டினார். அப்பாத்துரை ஜோதிடரை வரவேற்றார். மீண்டும் நாள் குறிப்பு. அப்பாத்துரை எதுவும் பேசவில்லை. இது மறுநாளும் நடந்தது. அதற்கு அப்புறமும் தொடர்ந்தது….

ரகசியமாகத் தகவல் பரிமாறப்பட்டு விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. எல்லோரும் ஒருவிதக் கவலையுடன் இருந்தனர். அந்த நாளும் வந்தது. அன்றும் அப்பாத்துரையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது ஆனால் தட்டியவர் ஜோதிடர் அல்ல. ‘ஜோதிடர் அகால மரணம் அடைந்துவிட்டார்’ என்ற சேதியைக் கொண்டுவந்தவர் கதவைத் தட்டினார்.

மக்கள் அப்பாத்துரையிடம் இதுபற்றிக் கேட்டார்கள். “ஜோதிடத்தின் பலனுக்கு இலக்காக இங்கே யாரும் இல்லை. இது எவரும் இல்லாத வெளி” என்றார் அப்பாத்துரை.

கோடீஸ்வரக் கம்யூனிஸ்ட் நடத்தும் ஆங்கில நாளிதழ் முதல் பெரும்பாலான ஊடகங்களில் ஜோதிடர் பாணிதான் நிலவுகிறது. வடமாநிலத் தேர்தல்களின் முடிவு வந்தவுடன் இவர்கள் பா.ஜ.க.வுக்கு நாள் குறித்துவிட்டார்கள். இவர்கள் கட்டுரை எழுதும் காகிதங்களை எடைக்குப் போட்டால் கூட எடுப்பார் இல்லை.

மீடியாக்களின் கிறுக்குத்தனத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நம் கவனத்திற்கு உரியவர்கள் மைனாரிட்டிகள்.

இந்து மதத்தில் உள்ள சாதிவேறுபாடுகளைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ அமைப்புகளின் லட்சணம் என்ன என்று இப்போது பார்க்கலாம்.

இடஒதுக்கீடு விஷயத்தில் இவர்களின் நடைமுறை எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். அது நமக்கும் தெரியும். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி.

கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா?

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை அரசிடமிருந்து 100 சதவீதம் மானியமாகப் பெறும் கல்லூரிகளில் தலித் விரிவுரையாளர்கள் இருக்கிறார்களா?

தயவு செய்து நம்புங்கள். இல்லை என்பதுதான் பதில். அரசிடமிருந்து நிதிஉதவி பெறும் இந்த மைனாரிடி கல்லூரிகளில் ஒரு தலித்கூட வேலைக்குச் சேர்க்கப்படவில்லை.

பார்வைக்காகப் பட்டியலைக் கொடுதிருக்கிறேன். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, விரிவுரையாளர் பணியிடங்களும், அதில் தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையும் கொடுத்திருக்கிறேன். ஜூன் 2000 முதல் ஜூலை 2008 வரையிலான மானியமும் தரப்பட்டுள்ளது.

எண் கல்லூரி மானியம் (ரூ. கோடி) விரிவுரையாளர் பணியிடங்கள் தலித் பழங்குடியினர்
1. லயோலா கல்லூரி, சென்னை-34 34.12 140 0 0
2. நியு காலேஜ், சென்னை-14. 26.43 145 0 0
3. சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை-96 39.93 124 0 0
4. காயிதே மில்லத் கல்லூரி, சென்னை 11.67 35 0 0
5. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை 26.01 75 0 0
6. ஜஸ்டிஸ் பக்ஷீர் கல்லூரி சென்னை-18 (SIET) 32.56 76 0 0
7. பெண்கள் கிறித்துவக் கல்லூரி, சென்னை 19.99 56 0 0
8. மெஸ்டன் கல்லூரி, சென்னை-14 3.32 9 0 0
9. ஸ்டெல்லா மதுதுனா கல்லூரி, சென்னை 3.24 7 0 0
10. ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, சென்னை-35 3.38 5 0 0
11. புனித கிறிஸ்டோபர் கல்லூரி, சென்னை 3.89 13 0 0
12. இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி 19.22 83 0 0
13. அப்துல் அக்கீம் கல்லூரி, மேல்விசாரம் 22.28 81 0 0
14. ஆக்ஸிலியம் பெண்கள் கல்லூரி, வேலூர் 12.23 46 0 0
15. பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி 25.76 106 0 0
16. ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி 36.38 116 0 0
17. சதகதுல்லா கல்லூரி, பாளையங்கோட்டை 15.3 65 0 0
18. புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை 2.71 12 0 0
19. ஸ்காட் கிறித்துவக் கல்லூரி, நாகர்கோவில் 24.59 115 0 0
20. நாசரத் மார்கோசிஸ் கல்லூரி, நாசரத் 11.71 48 0 0
21. போப்ஸ் கல்லூரி, சாயர்புரம் 12.43 48 0 0
22. நேசமணி மெமோரியல் கல்லூரி, மார்த்தாண்டம் 23.86 74 0 0
23. ஹோலி கிராஸ் கல்லூரி, நாகர்கோவில் 25.56 78 0 0
24. ஜாமியா தருஸ்ஸலாம் கல்லூரி, உமராபாத் 0.72 7 0 0
25 பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி, குன்னூர் 6.98 33 0 0

இராக் போருக்குக் கூட இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சொல்லும் சன் டி.வி. வீரபாண்டியன் என்ன சொல்லப் போகிறார்? இங்கிலாந்து டெஸ்டில் இந்தியா அடைந்த வெற்றிக்கும் இடஒதுக்கீடுதான் வழி வகுத்தது என்று சொல்லத் துடிக்கும் சோலையின் கருத்து என்ன? சுயமரியாதைச் சுடரொளி வீரமணியின் நிலைப்பாடு என்ன? இடஒதுக்கீட்டுக்காக அல்லும் பகலும் பாடுபடும் பிற தமிழகத் தலைவர்களின் நிலை என்ன? எஸ்ரா சர்க்குணமும் அப்துல் ரகுமானும் என்ன சொல்கிறார்கள்?

‘இத்தனை பேரை இழுத்தீர்களே? திருமாவளவன் பேரைச் சொல்லவில்லையே’ என்ற நியாயமான சந்தேகம் ஏற்படலாம். காரணமிருக்கிறது. அவர் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்.

thirumavalavanசிதம்பரம் கோவிலுக்கு வந்தவர் சட்டையைக் கழற்றி விபூதி அணிந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். ‘மசூதிக்குச் செல்லும்போது தொப்பி அணிகிறோம். தேவாலயங்களில் ஜெபத்தை ஏற்கிறோம். இவை மட்டும் சிலரால் முற்போக்கானவை என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராசர் கோவில் சந்நிதிக்குச் சென்றது பகுத்தறிவுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படுகிறது’ என்பது அவருடைய பதில்.

ரோமன் கத்தோலிக்க சபையில் இருக்கும் சாதிக் கொடுமைகளைக் கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 21 கிறிஸ்தவ ஆலயங்களை விடுதலைச் சிறுத்தைகள் இழுத்து மூடினர்.

புதுவை மாதாகோவில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் (19.03.2008) ‘மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவரே ஏசு என்பதால் திருமாவளவன்தான் ஏசு’ என்று அறிவிக்கப்பட்டது.

ஆகையால், திருமாளவன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். நம்மைப் பொறுத்தவரை சமூக ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்வதற்காக இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதுகிறோம். அதில் ஐயமில்லை.

மேற்கோள் மேடை

crossகடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி நடுத்தெருவில் திண்டாடச் செய்தார்கள்.
– பாரதியார் (பாரதி நினைவுகள் / யதுகிரி அம்மாள் / பக்கம் 60)

போகப் போகத் தெரியும் – 2

22 Replies to “போகப் போகத் தெரியும் – 3”

 1. அற்புதமான கட்டுரை. புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தலித் மற்றும் பழங்குடியினர்கள்தாம் உண்மையில் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள். ஆனால், அவர்கள் பெயரைச்சொல்லி இன்று ஒரு ஆதிக்க வர்க்கம் தமிழகத்தில் பல தலைமுறைகளாக எல்லா பலன்களையும் உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தலித்களின் நிலை மற்ற இந்தியாவின் பிற இடங்களை விட மிக மட்டமாக இருக்கிறது. நான் திராவிட, தலித், சிறுபான்மையின் காவலன் என்று கரடி விடும் ஊழல்மன்னன் கருணாநிதி 1996லேயே பஞ்சமி நிலங்களை மீட்க ஆணையம் வைப்பதாக தேர்தல் அறிக்கையில் சொன்னார். ஆனால், இன்றுவரை ஆதிக்க சாதிகளிடம் இருக்கும் இந்த நிலங்களை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் தலித்களின் பரம்பரை விரோதிகள். இவர்களை தலித்கள் என்று உண்மையாக அடையாளம் கண்டு கொள்கிறார்களோ அன்றே அவர்களுக்கு உய்வு.

  மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் தலித், பழங்குடியினர் மட்டும் அல்ல பெருபான்மையினருக்கும் இடம் கிடையாது! இது குழந்தைக்கும் தெரிந்த உண்மை. அவர்கள் பெரும் மானியம் அவர்களின் பணம் கொழிக்கும் தொழிலை இன்னும் மேம்படுத்துகிறது. மதமாற்றம், தீவிரவாதங்களுக்கு அவர்களால் இன்னும் தாராளமாக செலவு செய்ய முடிகிறது. இதைக்கேட்க எந்த ஒரு கட்சிக்கும் முதுகெலும்பு இல்லை – காவி வேடம் போடும் பாஜபா உட்பட.

  நன்றி

  ஜயராமன்

 2. ஒருவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார் என்பதையும், நிஜமாகவே அப்பிரச்சினை தீரவேண்டும் என்பதையும் அவர் அப்பிரச்சினையில் “தொடர்ந்து” போராடுவதைப் பொறுத்துத்தான் முடிவு செய்யமுடியும்.

  நல்ல காரணத்திற்காக கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டமும், தவறான காரணங்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்புக்களை அழிக்கத் தேவையான செயல்முறைகளையும் கொண்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்ற ஒரு நல்ல திட்டம் உண்மையில் ஆதிக்க சாதியாருக்கு மட்டுமே பலன் அளிக்கிறது. ஒடுக்கப்படுகிற தலித்துகளின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

  தலித்துகள் பொருளாதார நிலையில் முன்னேறும் வாய்ப்புகள் எதுவும் இன்றி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களது நிலை இப்படி இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் அவர்களது நிலை வருந்துவதற்கு உரியதாக இருக்கிறது.

  தலித்துகள் நிலம் அற்றவர்கள். நிலம் உடையவர் ஆதிக்க சாதியாராக மாறுவது, மற்றவர்கள் அவர்களிடம் கூலி வேலை செய்தே பிழைப்பது என்ற பொருளாதார சட்டகத்தில் இருந்து வெளியேற வழிகள் எதுவும் இல்லை. நிலம் உடையவர்கள் ஆதிக்க சாதியினராக இருப்பதால் தலித்துகளது உழைப்பை சுரண்ட சாதி பாகுபாடு பயன்படுத்தப்படுகிறது.

  இந்த நிலை மாற வேண்டும். ஒரு அரசியல்வாதி சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றாலும் அதன்பின்னர் ஆதிக்கம் மிகுந்தவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களை மட்டுமே செய்ய முடியும். எனவே சட்டமன்றம் பாராளுமன்றம் செல்ல தேவையான பண அரசியல் பலத்தை திரட்டுவதில்தான் அவரது முழுநேரமும் செலவழியும். அந்த ஒன்றை பெறுவது மட்டும் தலித்துகளுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தாது.

  எனவே, நாடாளுமன்ற பாராளுமன்றங்களில் மட்டும் அல்லாது மற்ற துறைகளிலும் தலித் தலைவர்கள் உண்டாகவேண்டும். வணிகத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் தலைமைப் பொறுப்பு பெற்றவர்களாக அவர்கள் ஆக வேண்டும்.

  சட்டமன்ற பாராளுமன்றங்களில் இருக்கும் தலித் தலைவர்களின் எண்ணிக்கை அவர்களது மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. அப்படியே சட்ட, பாராளுமன்றங்களுக்குப் போனவர்கள் சாதித்தது மிகவும் குறைவாக இருந்துவருவது வேதனைக்குரிய ஒன்று. வெறும் போராட்டங்களும், வன்முறைகளும் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவராது.

  தற்போதைய தலித் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தேவை நாராயண குரு, ஐயன் காளி போன்ற சமூக மாற்றங்களை ஏற்படுத்த உழைக்கும் மனிதர்கள்தான். அரசியல்வாதிகள் அல்ல.

  ஒரு சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பவர் அரசியல்வாதிகளுக்கான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது இல்லை. அவர்களைப் போன்றவர்களால் தலித்துகளும் வனவாசிகளும் பொருளாதார வளம்பெற்று அடிமை தளையில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.

  தேவை பாஸிட்டிவான விளைவுகளை உண்டாக்கும் தலித் தலைவர்கள்.

  தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளுக்குத் தேவை அவர்களுள்ளேயே இருந்து உருவாகும் வியாபார திறன் மிகுந்த மனிதர்கள். தங்களது சமூகம் முன்னேற வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் உதவி அவர்கள் முன்னேறவேண்டும்.

  இதற்கு முதல் தேவை, அச்சமுதாய மக்களை தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக ஆத்ம பலத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக ஆக்கக்கூடிய ஆன்மீகப் பெரியவர்கள். கேரளாவில் இழிவுபடுத்தப்பட்ட ஈழவர்கள் இப்போது தலித்துகளின் கொடூர நிலையில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டார்கள். காரணம்: நாராயண குரு. தமிழ்நாட்டில் பார்த்தாலே பாவம் என்பதுபோன்ற கீழ்த்தர எண்ணங்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாடார்கள் தற்போது உயர்நிலையில் இருக்கிறார்கள். காரணம்: ஐயா வைகுண்டர்.

  அதுபோல தலித் சமுதாயங்களில் இருக்கும் ஆன்மீகப் பெரியோர்கள் தங்களது சமுதாயத்தின் ஆன்ம பலத்திற்கு உழைக்க வேண்டும். அதன் பின்னால் அச்சமுதாயங்களை உயர்த்தத் தேவையான வளம் மிகுந்த வியாபாரிகளும், அறிஞர்களும் தோன்றுவர்.

  இத்தகைய ஆன்மீக வளமை தன்னிடத்தில் காணுவது மட்டும்தான் தலித் சமுதாயங்களின் நிரந்தர வளமைக்கு வழிகோலும்.

  இல்லாவிட்டால், ஆதிக்க சாதியார்களிடம் அடிமையாக இருப்பதுதான் தொடரும்.

 3. தலித்துகளுக்கு சிறுபான்மைக் கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படாதது சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஹிந்துக்கள் என்பது மீண்டும் உறுதிசெய்யப்படுகிறது.

  //இராக் போருக்குக் கூட இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சொல்லும் சன் டி.வி. வீரபாண்டியன் என்ன சொல்லப் போகிறார்? //

  🙂

 4. பெரும்பாலான கல்வி நிலையங்களை சிறுபான்மையினரே நடத்திவருகின்றனர். இந்து கல்வி நிலையங்களுக்கு அரசிடம் இருந்து உதவி என்று பெரிதாக எதுவும் இல்லை. அரசியல்வாதிகளின் தலையீடும் அதிகம்.

  ஆனால், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்துவருகிறது. வெளிநாட்டு முதலீடுகளும் தணிக்கைக்குள் இதுவரை வந்தது இல்லை. அரசியல்வாதிகளோ அரசாங்கமோ சட்டப்படியான மேற்பார்வையை கூட சிறுபான்மை கல்விநிலையங்களில் செய்துவிட முடியாது.

  இதில் சுவையான விஷயம் என்னவென்றால், இங்குள்ள தலித்துகளுக்கு உதவுவதாக சொல்லி அவர்கள் தனியாகவே வசூல் பார்ப்பதுதான்.

  பெந்தகோஸ்ட் கல்வி நிறுவனங்கள் கத்தோலிக்கர்களுக்கு இடம் அளிப்பது இல்லை. கத்தோலிக்கர்கள் ப்ராட்டஸ்டண்ட் பிரிவினருக்கு இடம் கொடுப்பது இல்லை.

  மேலும், பள்ளிகளில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் இடங்களில் யாருக்கு இடம் கிடைக்கிறது? எனக்குத் தெரிந்த ஒருவரின் உறவினர் அவருடைய மகளை மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்க சென்றார். மிக அமைதியான சூழலில் நிர்மலமாய் பரந்து விரிந்திருந்த அந்தப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால், ரேஷன் கார்டில் குடும்பத்தவர்களுடைய பெயரை கிருத்துவ பெயர்களாக மாற்றிக்கொண்டால், தலித்துகளுக்கான ஒதுக்கீட்டில் இருந்து சீட் தருவதாகச் சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார். இதில் முக்கியமான விஷயம் அவர் தலித் அல்ல என்பது.

  தலித் அல்லாத ஒருவர் மதம் மாறினால் தலித்துகளுக்கான வாய்ப்பை அளிக்கிறோம் என்று எந்த தைரியத்தில் அவர்கள் சொல்கிறார்கள்?

  இவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒருவகை நகரத்தில் உள்ள வசதி படைத்தவர்களுக்கு, மற்றொன்று கிராமங்களில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு.

  நகரத்தில் பணக்காரர்களிடம் இருந்து டொனேஷன் என்ற பெயரில் தணிக்கைக்கு உட்படாத கேள்வி கேட்கப்படாத முறையில் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பார்கள்.

  கிராமங்களில் உள்ள அவர்களுடைய பள்ளிகளை ஏழைகள் மற்றும் நடுத்தர பொருளாதாரத்தில் இருப்பவர்களை மதம் மாற்ற பயன்படுத்துகிறார்கள்.

  டொனேஷன் வாங்கி அட்மிஷன் கொடுப்பது என்பதை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே சிறுபான்மை கல்வி நிலையங்கள்தான். கல்வியை வியாபாரமாக்கலாம் என்பதை ஆரம்பித்தவர்களும் இந்தப் புண்ணியவான்கள்தான்.

  நகரங்களில் பணத்தை பிடுங்குவார்கள். கிராமங்களில் தாய் மதத்தை பிடுங்குவார்கள். இது பள்ளியில் சேரும் முன்பு.

  பள்ளிகளில் சேர்ந்த இந்துக்களுக்கும் பிரச்சினைதான். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு வரும் மாணவர்களை/மாணவிகளை வகுப்பில் இருந்து வெளியேற்றி விடுகிறார்கள். இந்துக்கள் எல்லாம் மடையர்கள் அறிவிலிகள் என்று போதிக்கிறார்கள். உன்னுடைய பெற்றோர்கள் சாத்தானை கும்பிடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.

  அவர்களது கல்வி நிலையங்களில் மதம் தாண்டிய இந்தியர்களின் உருவப்படங்களை எங்காவது நீங்கள் பார்த்தது உண்டா? ஒரு அப்துல் கலாம் படம், ஒரு நேரு, ஒரு காந்தி படம்? அட, அவர்களை விடுங்கள். சிறுபான்மையினருக்கு பல வசதிகளையும் செய்துதருகிற கருநாநிதி படம்? ம்ஹூம்.

  புனிதப் போர் தொடுத்து பல இஸ்லாமியர்களை கொன்றதற்காக புனிதர் பட்டம் வழங்கப்பெற்றவர்களின் படங்களைப் பார்க்கலாம். ஜெர்மன், இங்கிலாந்து, போலந்து, இத்தலி நாட்டைச் சேர்ந்த புனிதர்களின் படங்களைப் பார்க்கலாம். நமது நாட்டில் உயர்ந்தவர்கள் யாருமே இதுவரை தோன்றவில்லையா? இந்த பள்ளிகளில் படிப்பவர்கள் மனதில் அவர்களுடைய முன்னோர்கள் யாரும், அந்தப் பள்ளியில் உருவப்படங்களாக இருக்கத் தேவையான நல்ல குணங்கள் இல்லாதவர்கள் என்பது மிக எளிதாகப் பதிந்துபோய்விடுகிறது.

  ஆனால், தெரேசா, ஏசு, அன்னை மரியாள் போன்ற மதிப்பிற்குரியவர்களின் படங்களை இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் பார்க்கலாம்.

  மற்றவர்களை ஏசு ஏசு என்று ஏசுவதைத்தான் ஏசுவிடமிருந்து இந்த சிறுபான்மையினர் கற்றுள்ளார்கள் போலும்.

  ஆனால், திருமாவளவனிடம் உள்ள நல்ல குணங்களை பாராட்டும் சுப்பு அவர்கள் இந்துக்களின் இயல்பான மனப்பான்மையை பிரதிபலிக்கிறார். அவருடைய இந்த கட்டுரையும் மிக சுவையாகவும், அருமையாகவும் இருக்கிறது. தரவுகளோடு அவர் வெளிப்படுத்தும் சூழ்நிலை வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

  வாழ்க சுப்பு அவர்கள் ! வளர்க திருமாவளவனின் நற்குணங்கள் !

 5. திரு சுப்பு , அருமையான புள்ளி விவரம் மற்றும் கட்டுரை.
  திருமாவளவன் பற்றிய குறிப்பு சற்று ஆச்சரியம்.இவர் இன்னும்
  முழுப்பகுத்தறிவுக்கு மாறவில்லை போலும்.:-)

  திரு வேல்முருகன் ஆத்ம பலம் பற்றி சொல்வது மிக சரி.
  ஆத்ம சக்தியினால் தான் ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் .
  [ உண்மை] அறிவு ஜீவிகளும், வீரர்களும் ,வியாபாரிகளும் ஆத்ம சக்தியினாலேயே உருவாக முடியும்.இதற்கு எந்த சமூகத்தை சேர்ந்தோரும் உதவலாம்.
  சிறுபான்மை கல்லூரிகளில் பொதுவாகவே மற்றவர்க்கு வாய்ப்பு குறைவு தான்.
  அப்படியே வேலை கிடைத்தாலும் , இலவச “வேத” புத்தகங்களை கட்டாயமாகப் பெற்று கொள்ள வேண்டிய கட்டாயம் சில கல்லூரிகளில் உண்டு.
  சில தனியார் கல்லூரிகளில் இன்னும் மோசம். ஜெப கூட்டங்களில் கட்டாயப் பங்கெடுப்பு வேறு.இவர்கள் பிழைப்பு நடப்பதோ பெரும்பான்மை பணத்தில்.

 6. ///திருமாவளவன் ……சில நேரங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்.

  சிதம்பரம் கோவிலுக்கு வந்தவர் சட்டையைக் கழற்றி விபூதி அணிந்தார்.//

  அது மட்டும் அல்ல. சிதம்பரம் கோவிலுக்கு வந்தவரை அங்குள்ள தீக்ஷிதர்கள் வரவேற்று, பரிவட்டம் கட்டி, மாலையணிவித்து மரியாதை செய்தார்கள். இறைவனின் சன்னிதிக்கே அழைத்துச் சென்று அவருக்கு தரிசனம் செய்வித்தனர். இத்தகைய மரியாதையை எதிர்பார்க்காத திருமாவளவன் நெகிழ்ந்துவிட்டாராம்.

  தமிழ்நாட்டில் உள்ள மாபெரும் தலைவர்களுக்கு இத்தகைய மரியாதையை செய்வது சிதம்பரம் கோவில் மரபு என்பதையும், சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் திருமாவளவனை தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களுக்கு இணையாகவே கருதுகின்றனர் என்பதையும் திருமாவளவனின் நண்பர்கள் பின்னர் விசாரித்துத் தெரிந்துகொண்டார்களாம்.

 7. தலித் மக்களுக்கு சிறுபான்மை அமைப்புகள் செய்திருக்கும் கொடுமையை தெளிவாக வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். உண்மையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் எதுவும் சலுகை கொடுப்பதற்கு முன்னால் தலித் கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவி பெறும் கிறிஸ்தவ நிறுவனங்களில் (அரசு தலித் இந்துக்களுக்கு அளிக்கும் இட ஒதுக்கீட்டை அளிக்க) முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இத்தகைய துரோக நாடகத்துக்கு உடந்தையாக இருப்பதைவிட இந்து மதத்துக்கே திரும்புவதுதான் சரி. ஏசுவின் பெயரை சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள வைத்திருக்கிறார்கள் பாதிரியார்கள். கர்த்தர் இவர்களை மன்னிக்கட்டும். உங்கள் கட்டுரையின் சில பகுதிகளை பிரிண்ட் அவுட் எடுத்து எங்கள் சபை கூட்டத்தில் இந்த ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அனுமதி உண்டா? (உங்கள் வெப்சைட் பெயரை போட முடியாது புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்)

 8. //Velmurugan: தமிழ்நாட்டில் பார்த்தாலே பாவம் என்பதுபோன்ற கீழ்த்தர எண்ணங்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாடார்கள் தற்போது உயர்நிலையில் இருக்கிறார்கள். காரணம்: ஐயா வைகுண்டர்//

  இக்கருத்தினைக் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். கிறிஸ்தவ மிஷநரிகளும், பெரியாரிஸ்டுகளும், இடதுசாரிகளுள் ஒரு பிரிவினரும் சேர்ந்து நடத்தும் சான்றோர் சமூகத்தவர் பற்றிய இத்தகைய பச்சையான பொய்ப்பிரச்சாரம் தமிழ்ஹிந்துவிலும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தென்னிந்தியச் சமூக வரலாற்று நிறுவனம் சார்பில் இக்கருத்தை மறுத்துப் பல முறை எழுதியுள்ளோம். விரைவில் நூல் ஒன்றையும் பதிப்பிக்க உள்ளோம்.

 9. திருமா பற்றி மாலன்..

  https://jannal.blogspot.com/

  “தனது மாநாட்டைக் கருத்துரிமை மீட்பு மாநாடு என்று அழைத்துக் கொள்கிறார் திருமாவளவன். அதாவது முன்பு கருத்துரிமை இருந்தது இப்போது அது இல்லை என அந்தத் தலைப்பு குறிப்பால் உணர்த்துகிறது. கருத்துரிமை இல்லை என்றால் அவரால் இது போன்ற ஒரு மாநாட்டை நடத்தவே முடியாது என்கிற உண்மையே அவரது வாதத்தில் சாரம் இல்லை என்பதைக் காட்டுகிறது. அவரால் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கருத்துரிமை
  மீட்பு மாநாடு நடத்த முடியுமா? முடியாது.ஏனென்றால் அங்கு அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை வெளியிட முடியாது. வெளியிட்டால் அமிர்தலிங்கத்தின் கதிதான் ஏற்படும். ”

  ******
  “அவர் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்.” என்கிற சுப்பு மேற்படி விஷயத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்..?

  மகேஷ்.

 10. அருமையான கட்டுரை. இப்போதைய தேவை தலித்துகளை அவர்களது தற்ப்போதைய நிலையிலிருந்து குறைந்த பட்சம் ஓரடியாவது முன்னேற்ற உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ள ஒரு தலைவர். எத்தனையோ வழிகளில் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள், அனால் அவர்களது நிலையை உயர்த்த ஒருவரும் தயாராயில்லை. அவர்களது நிலையைச் சொல்லி அவர்களை மதம் மாற்றத்துடிக்கும் மிஷனரி கும்பல்கள், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் மீண்டும் விழுங்கும் வசதியான தலித்துகள் மற்றும் அதன் தலைவர்கள். என்று தீருமோ இந்த சுரண்டல்கள்.

  ஸ்ரீதர்

 11. //SISHRI: இத்தகைய பச்சையான பொய்ப்பிரச்சாரம் தமிழ்ஹிந்துவிலும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. //

  மதிப்பிற்குரிய South Indian Social History Research Institute,

  உங்களைப் போன்ற மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர்கள் நாளை தமிழ் இந்து தளத்திற்கு ஒரு கட்டுரை எழுதினால் அதை அவர்கள் வெளியிடக்கூடும். ஆனால், அந்த கட்டுரையின் கருத்துக்கள் உங்களுடையதுதான். கட்டுரைகளுக்கே இதுதான் நிலமை எனும்போது ஒரு சாதரணனின் வாசகர் கருத்தை, தளத்தின் கருத்தாக முடியாது.

  தமிழ் இந்து இணைய தளத்தைப் படிக்கின்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். நான் வெளியிட்டிருந்தது ஒரு வாசகர் கருத்து. இணையதளத்தின் கருத்து அல்ல. எனவே, தயை செய்து என்னுடைய கருத்தை இணையதளத்தின் கருத்தாகக் கருதவேண்டாம்.

  ஒரு இணைய தளத்தில் யார்வேண்டுமானாலும் தங்களது கமெண்டுகளை வெளியிடலாம். அவற்றிற்கும் அந்த அந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை.

  ஆனால், தங்களுடைய வாசகர் கருத்தின் மூலம் ஒரு தகவல் ஆதாரமற்றது என்பதை அறிய தமிழ் இந்து தளத்தின் வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

  தங்களுடைய இணையதளத்தையும் (sishri.org) நான் படித்துவருகிறேன். உங்களது கருத்தை திண்ணை இணைய இதழிலிலும் கண்டுள்ளேன். இருப்பினும் நாடார்களின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆன்மபலம் ஐயா வைகுண்டரிடம் இருந்து கிட்டியதாக நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொல்லியிருந்த கருத்தைத்தான் நான் இங்கு எழுதினேன்.

  அது உண்மையல்ல என்று நிறுவ நீங்கள் ஒரு புத்தகம் கொண்டு வரவுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி. தங்களுடைய உண்மையான ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்த கருத்துக்கள் மேலும் பரவவேண்டும். நிறை குறைகள் அனைத்து மனிதர்களிடமும் உள்ளவையே என்பதை அவை நிறுவி, மனித சமுதாயம் அனைவருக்கும் மரியாதை தர உங்களது புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.

 12. //
  உங்களைப் போன்ற மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர்கள் நாளை தமிழ் இந்து தளத்திற்கு ஒரு கட்டுரை எழுதினால் அதை அவர்கள் வெளியிடக்கூடும். ஆனால், அந்த கட்டுரையின் கருத்துக்கள் உங்களுடையதுதான். கட்டுரைகளுக்கே இதுதான் நிலமை எனும்போது ஒரு சாதரணனின் வாசகர் கருத்தை, தளத்தின் கருத்தாக முடியாது.

  தமிழ் இந்து இணைய தளத்தைப் படிக்கின்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். நான் வெளியிட்டிருந்தது ஒரு வாசகர் கருத்து. இணையதளத்தின் கருத்து அல்ல. எனவே, தயை செய்து என்னுடைய கருத்தை இணையதளத்தின் கருத்தாகக் கருதவேண்டாம்.

  ஒரு இணைய தளத்தில் யார்வேண்டுமானாலும் தங்களது கமெண்டுகளை வெளியிடலாம். அவற்றிற்கும் அந்த அந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை.

  //

  இப்படி ஒரேயடியாகத் தளத்திற்கும், கட்டுரைக்கும், கமெண்ட்டுக்கும் தொடர்பேயில்லை என்று கை கழுவி விடமுடியாது. ஒரு தளம், அதில் வரும் கட்டுரைகளுக்கு **ஓரளவிலாவது** பொறுப்பேற்க வேண்டும். கமெண்ட்டுகளுக்கும் அப்படியே. முழுப்பொறுப்பு இலையென்றாலும், கமெண்ட்டுகளை மட்டுறுத்தி வெளியிடும்போது, கமெண்ட்டுகளைப் பரிசீலித்து வெளியிடும்போது அதற்கான பொறுப்பும் இருக்க வேண்டும்.

  தமிழ்ஹிந்து குழுவினர் சற்று கவனமாக இருப்பது அவசியம். தனிமனிதர்களையோ, ஒரு மதத்தினர், இனத்தினரைப் பற்றியோ முழுமையாகக் கீழொதுக்கும் அவதூறுக் கருத்துகளைச் சொல்லும் கமெண்ட்டுகளை வெளியிடுவதைத் தவிருங்கள். கட்டுரையிலிருக்கும் வார்த்தைகளையும் சற்று கவனியுங்கள்.

  இதை மிரட்டும் தொணியில் சொல்லவில்லை. உங்கள் மேலிருக்கும் அக்கறையால் எச்சரிக்கும் விதமாகவே சொல்கிறேன்.

 13. அன்புள்ள திரு. சுப்பு,

  சிந்தனைக்குப் பொறி கொடுக்கும் தகவல்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களுக்கு ஆதாரமான Sourceஐ அறியத் தரமுடியுமானால் விவாதத்தைப் பொது அரங்குகளுக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். என் மின்னஞல் maalan@gmail.com

  உங்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இதைக் கோரவில்லை.ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் இந்தத் தகவ்ல்களை நீங்கள் சரிபார்த்திருக்கக் கூடும், அல்லது அந்த தகவல் மூலம் (source)நம்பிகைக்குரியது என்று உறுதி செய்து கொண்டிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையினாலேயே கேட்கிறேன்.

  மற்றெந்த ஊடகங்களைவிடவும் இணையத்தில் பெரும்பாலான இடங்களில் பிரசார நோக்கம் காரணமாக, அபிப்பிராயங்களே ‘உண்மை’களாக முன்வைக்கப்படுகிறன. அதனால் அவற்றை சொன்ன மாத்திரத்தில் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏற்படுகிறது.

  அன்புடன்
  மாலன்

 14. // சிதம்பரம் கோவிலுக்கு வந்தவர் சட்டையைக் கழற்றி விபூதி அணிந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். ‘மசூதிக்குச் செல்லும்போது தொப்பி அணிகிறோம். தேவாலயங்களில் ஜெபத்தை ஏற்கிறோம். இவை மட்டும் சிலரால் முற்போக்கானவை என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராசர் கோவில் சந்நிதிக்குச் சென்றது பகுத்தறிவுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படுகிறது’ என்பது அவருடைய பதில்.//

  இதெல்லாம் சும்மா வேஷம். இதே நபர் தான் சமீபத்தில் சிதம்பரம் ஆலயத்தில் எழுந்த சர்ச்சையின் போது தான் அப்போது மேற்கொண்ட அதே வழிபாட்டிற்கு எதிராகப் பேசினார்.மரியாதை செய்த தீக்ஷிதர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். அப்போது எங்கே போயிற்று இவரது பகுத்தறிவும் மரியாதையும். தனக்கு வேண்டும் போது ஒன்று, வேண்டாத போது ஒன்று என்று பேசும் இவரைப் போன்ற பச்சோந்தி அரசியல்வாதிகளை சுப்பு போன்றவர்கள் எப்படி இன்னமும் நம்பிக்கைக்குரியவராகக் கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. சீக்கிரமே இது போன்ற போலி அரசியல்வாதிகளின் சாயம் வெளுக்கும் போதுதான் உண்மை புரியும்.

 15. //கடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி//

  இதை உண்மையிலேயே பாரதியார் சொன்னாரா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

 16. //இதை உண்மையிலேயே பாரதியார் சொன்னாரா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்//

  செந்தில்: கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுப்பதுபோல, இது பாரதி சொன்னது என்று யதுகிரி அம்மாள் குறிப்பிட்டிருக்கிறார். யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் என்ற இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகம், (அசோக்நகர், சென்னை) வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 60ம் பக்கத்தில் மேற்படி மேற்கோள் இருக்கிறது என்பதற்கான குறிப்பு கட்டுரையிலேயே இருக்கிறதே! இதற்குமேல் விளக்கம் வேண்டுமானால், என்ன விளக்கம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவும்.

 17. ///உங்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இதைக் கோரவில்லை.ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் இந்தத் தகவ்ல்களை நீங்கள் சரிபார்த்திருக்கக் கூடும், அல்லது அந்த தகவல் மூலம் (source)நம்பிகைக்குரியது என்று உறுதி செய்து கொண்டிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையினாலேயே கேட்கிறேன்.///

  ஆம்.
  உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம்.

 18. Dear Maalan,
  Vanakkam. I am pleased to note the confidence you have in me. The source for my column is the tamil monthly DalithMurasu. articles by ilangovan july/nov 2008. I am enclosing the relevent portions as attachment. For details please refer to http://www.dalithmurasu.com
  the details given in the article were checked through other sources also.
  with regards
  subbu

  Dear Senthil,
  After Harikrishnan has spoken there is not much for me to say. but if you want to know more about Bharathiyar’s views on missioneries, you can go through the article available at Thinnai.com
  yours
  subbu

  Dear Bala,
  The wait is over. The issue of reservation for daliths in minority educational institutions has reached the Madras Highcourt/chief justice
  yours
  subbu

 19. வளங்களை வீணடிக்கும் அரசுகளும்-வாழ்வை சரியாக வாழாத மக்களும்

  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடினான் ஒரு கவிஞன்.ஆனால் அதை எந்த அரசுகளும் புரிந்து கொண்டு செயல்படுவதில்லை.மின்சாரத்தை எடுத்து கொண்டால் 50ஆண்டுகளுக்கு மேலாக எந்த புதிய நீர் மின்சார திட்டங்களும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மின்தேவையோ பன்மடங்கு பெருகிவிட்டது. கேட்டால் ஆறுகள் வற்றிவிட்டது என்றும்,போதிய தண்ணீர் வரத்து இல்லை என்றும் பொய் காரணம்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஒவ்வொரு ஆண்டு கோடிக்கணக்கான கன அடி தண்ணீர் மழைக்காலத்தில் சேமிக்க வழியில்லாமல் நிலங்களை பாழ்படுத்தியும், பொது மக்களுக்கு பலத்த சேதங்களை விளைவித்தும்,பயிர்களை நாசம் செய்தும்,கடலில் கலந்து வீணாகிபோய் கொண்டிருக்கிறது.மக்களுக்கு அந்த நேரத்தில் ஏதோ பண உதவி செய்துவிட்டு மத்திய அரசுக்கு வெள்ள சேதம் அறிக்கை அனுப்பிவிட்டு தன் ஜன நாயக கடமை முடிந்துவிட்டதாக ஆளும் அரசியல் கட்சிகள் மகளை ஏமாற்றி நாடகமாடிகொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சியில் உள்ள அரசியல்வாதிகளும் இந்த கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.மக்களுக்கு படிக்கவேண்டும் பணம் சம்பாதிக்கவேண்டும்.தானும் தன் குடும்பமும் சுகமாக இருக்கவேண்டும்.நாடு எக்கேடு கேட்டு போனால் நமக்கென்ன என்று இருப்பதை இந்த அரசியல்வாதிகள் நன்றாக தந்திரமாக பயன்படுத்தி கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.மக்களும்

  ஊதாரிதனமாக செலவு செய்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு போட்டி போட்டுகொண்டு கையில் உள்ள காசை வீணடிக்கின்றனர். வயிற்றுக்கு உணவு இருக்கிறதோ இல்லையோ வாய்க்கும் காதிற்கும் வேலை கொடுக்க செல் போன் வேண்டும்.பிறர் முன்பு கவர்ச்சியாக் தோன்ற அழகு சாதனங்களுக்காக பல நூறு ரூபாய் கண்டிப்பாக செலவு செய்தாக வேண்டும். ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாவிட்டால் கூட மண்டையை போட்டால் செலவு செய்ய ஆயிரக்கணக்கான ருபாய் கண்டிப்பாக வேண்டும். விழாக்களில் சம்பந்தமில்லாதவர்களையும் அழைத்து லட்சக்கணக்கில் செலவழித்து உணவு பொருட்களை குப்பையில் கொட்ட வேண்டும்.அதே நேரத்தில் அரசுகள் இலவசம் என்று ஏதாவது அறிவித்தால் போதும் மாட்டு மந்தைகள் போல் ஒருவர் மீது விழுந்து அதில் பல பேர் சாகவேண்டும். விழாவானாலும் சரி எழவானாலும் சரி கண்டிப்பாக குடித்து பல்லாயிரம் ரூபாய்களை தொலைக்க வேண்டும். யார் எதை சொன்னாலும் செய்தாலும் அதை அப்படியே நம்பி கைகாசை ஏமாறுவதும், கவர்ச்சி பேச்சில் மயங்கி அனைத்தையும் இழப்பதையும் இந்தியா மக்களின் தேசீய பண்பாக போய்விட்டது. ஊழல் செய்வோரைஉயர்த்தி பேசுவதும் உண்மையாய் வாழ நினைப்போரை ஓரம் கட்டுவதும் நம் மக்களுக்கு கை வந்த கலை. இப்படி இருக்கிறது நம் மக்களின் வாழ்க்கை முறை. இதில் கட்சா எண்ணை விலைஏற்றம் ,பணவீக்கம் என்று மக்களை குழப்பி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அதற்க்கு தூபம் போட்டு கொண்டிருக்கிறது ஊடகங்களும் பத்திரிக்கைகளும். முதலில் மக்கள் திருந்தட்டும் நம் வீடு ஒழுங்காக இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.

 20. உண்மையில் இட ஒதுக்கீடு தேவையானவர்களை சென்று அடைய வேண்டும்!

 21. ////கடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி நடுத்தெருவில் திண்டாடச் செய்தார்கள்.
  – பாரதியார் /////

  இந்த உண்மை இன்றைக்கு எத்தனை பேருக்குத் தெரியும், குறிப்பாக மதம் மாறியவர்களுக்கு…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *