கூகுள் கொண்ட கோபம்

கூகுள் சில நாட்களுக்கு முன் ஜி-மெய்ல் அக்கவுண்டுகள் சில மனித உரிமை ஆர்வலர்களை வேவு பார்க்க ஊடுருவப்பட்டதாகச்சொல்லி சீனாவில் இருந்து விலகிக்கொள்ளத் தயங்காது என அறிவித்தது. இது மிகுந்த பரபரப்பை உலகெங்கும் ஊட்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் கூகுளின் ”துணிவையும்” ”தார்மீக நிலைப்பாட்டையும்” ஆதரித்துக் கொண்டாடினார்கள். இத்தனை வருடம் சீன அரசிற்குப்பணிந்து காலுக்கிடையில் வாலை சுருட்டிக்கொண்டு வலையுலக வடிகட்டிகளை உபயோகப்படுத்தியதிலோ அல்லது சீனத்திற்குத் தகுந்தாற்போல எல்லை வரைபடங்களைக் காட்டுவதிலோ கூகுளிற்கு தார்மீக சங்கடம் ஏதும் எழவில்லை. கூகுளின் இந்த திடீர் அவதாரத்தை (நல்லதுதான் என்றாலும்) திடீரென மடைதிறந்த பேச்சு சுதந்திர வேட்கையாலோ மனிதகுல உய்வுக்கென்றோ அது எடுத்த முடிவு என்று பார்க்காமல் இருந்தால் கூகுளின் வியாபார வாழ்வைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட மிகவும் ப்ராக்டிகலான ஒரு முடிவு என்று புரிந்து கொள்ளலாம். சில விவரங்களைக் கவனிப்போம்.

apps_ringகூகுளின் பிஸினஸ் மாடல், அதுவரை இருந்த வலையுலக பிஸினஸ் மாடல்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்ட ஒன்று. (இதற்கு இணையாகச் சொல்ல வேண்டுமென்றால் வால்மார்ட் பிஸினஸ்தான் எனக்குத் தோன்றுகிறது.) தேடல் எந்திரம் அல்ல அதன் பிஸினஸ். ஆனால் தேடல் எந்திரம் என்ற சாமர்த்திய உளியை வைத்துத்தான் ஒரு மாபெரும் விர்ச்சுவல் சந்தையைக் கட்டியெழுப்பியிருக்கிறது. இந்தச் சந்தையை அணுகவும் அங்கு புழங்கும் மக்களுக்கு பொருள்களை விற்கவும் வரும் வியாபாரிகளிடம் ”நுழைவுப் பணம்” வசூல் செய்வதில் அதன் லாபகரமான பிஸினஸ் மாடல் அடங்கியுள்ளது. இந்த பிஸினஸ் மாடல் வெற்றிகரமாகத்தொடர நான்கு விஷயங்கள் அவசியம்:

  • 1. மக்கள் கூட்டம்
  • 2. கூட்டத்தை உபயோகப்படுத்தும் விதத்தில் விரிவடையும் சந்தை
  • 3. மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல ”வசதிகளைச்” செய்து தர வேண்டும்
  • 4. சந்தையைக் கட்டும் ஆதார உளி முனைமழுங்காமல் சிதிலமடையாமல் இருக்க வேண்டும்.

google-toolsஇந்தத் திட்டத்தைப் படிப்படியாக கூகுள் செயல்படுத்தியதை அதன் காய்நகர்த்தல்களை வைத்துப் புரிந்து கொள்ளலாம். முதன்முதல் அது வாங்கியது ஒரு Usenet group-ஐ (அதுதான் கூகுள் குரூப்பென்று பின்னாளில் ஆனது). பிறகு Pyra Labs என்ற கம்பெனியை வாங்கி அதனை வைத்து ப்ளாக்கரை உருவாக்கியது. You tube கூகுள் வீடியோவானது. படிப்படியாக ஆனால் தெளிவாக எல்லா தனிக்கருவிச் சேவைகளையும் (”தொலைபேசி”, GPS, ”டிவி”, ”கைபேசி”) வலையுலக அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. சந்தையை விரிவுபடுத்திக்கொண்டே செல்வதில் வியாபாரிகளுக்கு புதுப்புது உள்சந்தைகளை உருவாக்கித் தருகிறது. இதன்மூலம் மேற்சொன்ன முதல் இரு விஷயங்களைப் பாதுகாக்கிறது. செல்போன் துறையிலும் தொலைக்காட்சி விநியோகத் துறைகளிலும் கூட காலடி வைக்கப்போகிறது என்கிறார்கள்.

ஆனால் இதை வெற்றிகரமாகத் தொடர்ந்து நிகழ்த்த 3ம் 4ம் அவசியம். அங்குதான் தொழில்நுட்பம் அவசியப்படுகிறது. கூகுளின் corelation software அதன் கோலா ரகசியங்களில் ஒன்று.

google-chinaஇங்கு சீனா மற்றும் ரஷ்யாவின் சைபர் திருட்டுத்தனங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். இரண்டுமே கம்யூனிஸத்திலிருந்து தாராளமயமாக்கலை நோக்கிப் பயணிக்கும் நாடுகள். ஆனாலும் இரு நாடுகளிலுமே கொடுமையான கரப்ஷன் – மேலிருந்து கீழ்வரை- நிலவுகிறது. ரஷ்யா சோவியத் யூனியன் காலத்திலிருந்தே அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக் கழக கம்ப்யூட்டர்கள் வழியாக லேங்க்லியில் உள்ள சிஐஏ அலுவலகத்து கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து விஷயம் திருடி இருக்கிறது (ஆர்வமுள்ளவர்கள் The Cuckoo’s Egg படிக்கலாம்). இன்றும் ரஷ்யா வலையுலகை உள்நாட்டு/வெளிநாட்டு உளவு வேலைகளுக்கு உபயோகப்படுத்துகிறது. சீனாவும்தான். சொல்லப்போனால் சீனா மின்னணு தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் அது கண்டு வரும் வெற்றிகளை உளவுக்குச் சாதகமாக உபயோகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

2007-இல் பிரிட்டனின் MI-5 சீன சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. ஜெர்மன் சான்ஸ்லரின் அலுவலகத்தில் சீன உளவு மென்பொருட்கள் ட்ரோஜன் குதிரைகள் மூலம் இறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய ராணுவம் சென்சிடிவ் எல்லைப்புற ஏரியாக்களின் தொலைதொடர்புக் கருவிகளுக்கான காண்ட்ராக்டை சீனக் கம்பெனிகளுக்கு கொடுப்பதைக் குறித்து கவலை தெரிவித்தது. கடந்த வருடம் அமெரிக்க பவர் கிரிட் ”சீனாவிலிருந்து புறப்பட்ட” தாக்குதல்களைச் சந்தித்தது.

சீனாவின் ராணுவத்தின் தொலைதொடர்புத்துறையிலிருந்து பிரித்து (சீன அரசின் நிதியுதவியுடன்) உருவாக்கப்பட்ட ஹுவேய் கம்பெனி சிஸ்கோ routerகளை ஈயடிச்சான் காப்பியடித்தது (சிஸ்கோ மென்பொருள் பிழைகள் கூட ஹுவேய் சிஸ்டத்தில் அதேபோல் இருந்ததை கோர்ட்டில் கேஸ் போட்டு சிஸ்கோ சுட்டிக்காட்ட கோர்ட்டுக்கு வெளியே நஷ்ட ஈடு பேசி சமாதானமாய் கேஸை முடித்துக்கொண்டது ஹுவேய், இன்றுவரை ஹுவேய்க்கு அமெரிக்க மண்ணில் இடமில்லை. 3com-ஐ வாங்கி உள்ளே வர முயன்றதையும் அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை).

மறுக்க வசதியாக ரஷ்யாவும் சீனாவும் ஆள்மாறாட்ட (ப்ராக்ஸி) உளவு அமைப்புகளை இவ்வாறு வேவு பார்க்க உபயோகப்படுத்துகின்றன. சீன ராணுவம் வருடா வருடம் நாட்டில் தலைசிறந்த மென்பொருள் ஊடுருவல் ஒற்றர்களுக்கான போட்டி நடத்தி தலைசிறந்த ஆட்களைப் பணியில் அமர்த்துகிறது.

ஆனால் ரஷ்யா சீனா ஆகிய இரண்டிற்கும் இடையே இவ்விஷயத்தில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. ரஷ்யா வேவு பார்ப்பது உள்நாட்டு வெளிநாட்டு மிலிடரி நோக்கங்களை முன்நிறுத்தி (புடினை எதிர்க்கும் சைட்டுகள் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாயின). சீனாவும் உள்நாட்டு வெளிநாட்டு வேவு பார்த்தல்களுக்காக வலையை உபயோகப்படுத்தினாலும், ரஷ்யாவிலிருந்து இவ்விஷயத்தில் விலகும் இழையும் உள்ளது. அதுதான் வியாபார வேவு- Commercial espionage. வியாபாரத் தளங்களிலும் தனியார் வியாபார ரகசியங்களைத் திருடவும் அரசின் ஆசியுடன் வியாபாரத் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன.

அமெரிக்க-சோவியத் நிழல் யுத்தங்களின் நிஜக் களம் மூன்றாம் உலக நாடுகளாக இருந்தன என்றால், அமெரிக்க-சீன நிழல் யுத்தத்தின் நிஜக் களன் சைபர் வெளியாக ஆகி இருக்கிறது. யாஹுவை மிரட்டி உள்நாட்டு மனித உரிமைப் போராளியைக் காட்டிக்கொடுக்க வைத்து 10 ஆண்டுகள் உள்ளே போட்டது சீன அரசாங்கம். கூகுள் காட்டிக்கொடுக்க முரண்டு பிடித்ததால் அதன் சர்வர்களுக்குள் திருட்டுத்தனமாக ஊடுருவியது. இது தெளிவாகவே சீன அரசே செய்தது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

china-censorship-damaged-googleசீன அரசே இவ்வாறு உள்ளே ஊடுருவதில் கூகுளுக்கு உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமல்ல கூகுளின் தொழில் ரகசியங்களையும் இவ்வாறு ஊடுருவ முடியும் என்பதே. இவ்வாறு ஊடுருவ முடியுக்கூடிய அளவுக்கு கூகுளின் ஸாப்ட்வேரோ சர்வர்களோ இருக்கிறது என்பது கூகுளின் இன்வெஸ்டர்களுக்கும் சரி கஸ்டமர்களுக்கும் சரி மகிழ்ச்சி தரும் விஷயம் அல்ல. 1980/90-களில் ஐபிஎம், மைக்ரோஸாப்ட், சிஸ்கோ ஆகியவை நவீன வலையுலகத் தொழில் நுட்ப திசையை நிர்ணயித்தன என்றால், இன்றைய நிலையில் ஆப்பிள், ப்ளாக்பெரி, கூகுள் ஆகிய கம்பெனிகள் வலையுலகின் அடுத்த மாபெரும் தாவலுக்கான களத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத் தொழில்நுட்ப திசையை உருவாக்கும் சக்திகளாக இவை இருக்கின்றன. இவற்றின் பலம் திட்டமிட்ட காய்நகர்த்தலும், அதனைச் செயல்படுத்தவல்ல சக்தி வாய்ந்த மென்பொருளும். இந்த ரகசியங்கள் வெளியே போனால் அது (சீனாவைப்போல் அரசால் பாதுகாக்கப்படாத) கூகுள் போன்ற தனியார் கம்பெனிகளின் உலகளாவிய Competitiveness-ஐப் பெரிதும் பாதிக்கும். உலகத்தில் கூகுள் இரண்டாம் நிலை தேடல் எஞ்சினாக இருப்பது சீனாவில் மட்டும்தான் – Baidu முதல் நிலை. எனவே கூகுள் போன்ற கம்பெனிகளை உண்மையில் பீதியடைய வைப்பது அரசின் ஆசியுடனேயே அல்லது அரசு ஏஜென்ஸிகளாலேயே நடத்தப்படும் இவ்வகை சைபர் உளவு வேலைகள்தான்.

முன்னால் சொன்ன 4 விஷயங்களை மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். மக்கள் கூட்டம், கூட்டத்தை உபயோகப்படுத்தும் விதத்தில் விரிவடையும் சந்தை, மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல செய்து தர வேண்டும், சந்தையைக் கட்டும் ஆதார உளி முனைமழுங்காமல் சிதிலமடையாமல் இருக்க வேண்டும்.

google-china-headquarter-in-beijingஅரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான்

ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை. நிற்க.

google-china1கூகுள் முழுமையாய் சீனாவைவிட்டுப் போகப்போவதும் இல்லை. ஆனால் இது சீனாவில் கடை விரித்திருக்கும் அத்தனை நவீன தொழில்நுட்ப கம்பெனிகளுக்கும் ஒரு அபாய மணி. தெளிவாக வலுவாக இந்த காண்டா மணிச்சத்தம் அவற்றின் காதில் விழுந்திருக்கும்தான் என்று நினைக்கிறேன். இந்தியாவிற்கும் இந்திய கம்பெனிகளுக்கும் இதில் பல பாடங்கள் உள்ளன. இந்தியாவும் புத்தியை முதலீடு செய்து முன்னேறி வரும் நாடு. பல நூற்றாண்டுகளாக, தன் அறிவு வளத்தையும் தொழில்நுட்பத்தையும் பிற நாடுகளுக்கு விளைவறியாமல் விட்டுக்கொடுத்த நாடு. நம் நாட்டின் உணவு வகைகளும் மருந்து வகைகளும் கூட பிறநாட்டு கம்பெனிகளால் பேடண்ட் செய்யப்படும் முயற்சியைக் காலதாமதம்தான் என்றாலும் கண்டுபிடித்து சுதாரித்துக்கொண்டு வரும் நாடு. எதிர்கால உலகம் தொழில்நுட்பப் படைப்பூக்கத்தாலும், நவீன அறிவுத்திறத்தாலும் இயக்கப்படப்போகிறது என்பதை உணர்ந்து தன் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியாவும் இந்திய நிறுவனங்களும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

5 Replies to “கூகுள் கொண்ட கோபம்”

  1. இந்தியாவில் 40% மேலான அரசாங்க கான்டிராக்டுகள் சீன கம்பெனிகள் வசம் உள்ளது என்பது சமீபத்திய செய்தி.

  2. // கூகுள் முழுமையாய் சீனாவைவிட்டுப் போகப்போவதும் இல்லை//

    இன்னும் வெளியேரவிலையா ??

  3. கூகிள் பதிலடி கொடுத்தது சரி, ஆனால் அது இந்தியாவை பொறுத்தவரை நல்லனிலையில் நடந்துகொள்ளவில்லை. இந்தியாவை தவிர வேறு இடங்களில் கூகிள் மேப்பில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் முழுவதையும் பிரச்சனைக்குரிய பாகமாகவும் ,கூகிள் சீன இணையதளத்தில் அருணாச்சலத்தை சீன பாகமாகவும் காட்டிக்கொண்டிருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *