தமிழ் புத்தக பதிப்பில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது கிழக்குப் பதிப்பகம் எனலாம். நாம் யாரைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோமோ அவர்களைப் பற்றிய புத்தகம் நிச்சயம் கிழக்கில் இருந்து வெளிவந்திருக்கும்.
உலக அரங்கில் நமக்குத் தெரிந்த கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களைப் பற்றியும் ஒரு புத்தகமாவது கிழக்கு வெளியிட்டிருக்கிறது என நிச்சயமாகச் சொல்லலாம். அதேபோல பல வலைப்பதிவர்களை எழுத்தாளர்களாக்கியதில் கிழக்குக்கு மிக முக்கிய பங்குண்டு.
தலைவர்கள் வரிசையில் இந்தியாவின் இரண்டாம் மஹாத்மா திரு ஜெயப்பிரகாஷ் நாராயண்னின் ஜெயில் வாசத்தின் நேரடி வர்ணனை இப்புத்தகம்.
இந்தியாவில் காந்தி, நேரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்களெல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட வேண்டியவர்களே என்ற உயர்ந்த கொள்கையாலும், இந்திராவை எதிர்த்து அவரது கொடுங்கோலாட்சியிலிருந்து நாட்டை மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திருப்பிவிட்டதாலும் வேண்டுமென்றே மக்களின் நினைவிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டவர் ஜெ.பி என்ற ஜெயப்பிரகாஷ் நாராயண்.
நிகழ்வு -1
அரசியல்வாதி ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு.. விளைவு 3 அப்பாவி மாணவிகள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள்.
நிகழ்வு -2
அரசியல்வாதி கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என ஒரு விஷமத்தனமான வாக்கெடுப்பு.. விளைவு மூவர் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். அதுவும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்வோர்.
ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாலும், ஆட்சியில் இருப்பவர்களது உறவினர்களாலும் செய்யப்பட்டது மேற்சொன்ன முதல் மற்றும் இரண்டாம் வன்முறைகள்.
அதேசமயம்,
இந்தியாவில், குறிப்பாய் வட மாநிலங்களில் மக்கள் இயக்கம் என்ற அவரது இயக்கத்தினால் பயனடைந்த மக்களின் செல்வாக்கு அதிகம் பெற்ற ஒரே தலைவர், திரு.ஜெயப்பிரகாஷ் நாராயண். இந்திராவின் தேர்தல் முறைகேடுகளையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கடுமையாக எதிர்த்த இவரை இந்திரா அவசரச் சட்டம் மூலம் ( மிசா) நாட்டின் முதல் எதிரி என முத்திரை குத்தி சண்டிகரில் சிறையில் அடைத்தார். ஜெ.பி நினைத்திருந்தால் மக்கள் புரட்சி ஏற்படுத்தி இருக்க முடியும். இந்தியாவில் ஆட்சியைக் கூட கைப்பற்ற எல்லா முகாந்திரங்களும், வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அவற்றையெல்லம் பற்றி நினைக்காமல், நாட்டை எப்படி இக்கட்டிலிருந்து வெளிக்கொணர்வது என்பதைப் பற்றியும் அதை அஹிம்சா வழியிலும் செய்து முடித்தவர் ஜெ.பி எனப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
ஜனநாயகமே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி என உண்மையாய் உணர்ந்து அதை அடைய இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை துவக்கி அதில் வெற்றியும் கண்டார்.
திரு. எம்.ஜி.தேவசகாயம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய JP in Jail என்ற புத்தகத்தை ஜெ.ராம்கி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாதாரனமாக மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகள், புத்தகங்களை படிக்க நேரும்போதெல்லாம் ஒரு வித பயத்துடனேயே படிக்க வேண்டியிருக்கும். மூலஆசிரியர் சொல்லவந்ததில் தனது குறிப்பையும் சேர்த்து எழுதுதல் மொழிபெயர்ப்பாளர்களின் வழக்கம். அல்லது அவர்களுக்குத் தெரிந்தது போல மொழிபெயர்த்து மூலத்தை வாசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மூலப் புத்தகத்தையே தவறாக நினைக்கும் அளவு மொழிபெயர்த்து விடுவது.
ஆனால் இந்தப் புத்தகத்தை தேவசகாயம் படித்தால்கூட தான் ஆங்கிலத்தில் சொல்லியிருப்பதை தமிழில் இவ்வளவு அழகாக தடையின்றியும், தெளிவாகவும் மொழிபெயர்த்திருப்பதை நினைத்து பெருமைப் பட்டிருப்பார்.
அவ்வளவு சீரான மொழிபெயர்ப்பு. உண்மையைச் சொன்னால் மொழிபெயர்ப்பு என்பதை புத்தக அட்டையில் பார்த்துதான் நாம் கண்டுகொள்ள முடியும். அவ்வளவு தெளிவான மொழிபெயர்ப்பு, தேவசகாயமே நேரடியாக தமிழில் எழுதியதுபோல.
இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு எமர்ஜென்ஸி என்ற ஒன்றைப் பற்றி தெரிந்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது. சுதந்திரம் குறித்தாவது அவ்வப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெளியாகும் திரைப்படங்கள் உடன் சேர்ந்து இதைப்பற்றி கொஞ்சமாவது அறிந்திருப்பர். ஆனால் எமர்ஜென்ஸி குறித்து ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமது குழந்தைகளுக்கு அவசியம் எமெர்ஜென்ஸி குறித்தும், ஜெ.பி என்ற உன்னத மனிதர் குறித்தும் அவசியம் சொல்லித்தர வேண்டும். நமது நாடு பிரிட்டிஷாரிடமிருந்து முதலிலும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமிருந்து இரண்டாம் முறையும் விடுதலை அடைந்தது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்..
முதல் சுதந்திரம் பெற உழைத்த காங்கிரஸ் கட்சியினரே இரண்டாம் அடக்குமுறைக்கு காரணமாகிவிட்டது காலத்தால் அழியாத கறை. படிப்பறிவற்ற மக்களை ஏமாற்றிதான் இன்றுவரை நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என சொல்லி காங்கிரஸால் வாக்குகள் வாங்க முடிகிறது. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இத்தாலியில் பிறந்து வேண்டா வெறுப்பாக இந்தியக் குடியுரிமை வாங்கிய சோனியா. நேரு பரம்பரையினர் காந்தி என்ற குடும்பப் பெயரை அடைமொழியாக வைத்துக் கொண்டு செய்யும் அநியாயங்களை நாடறியும்.ஆனால் சுதந்திரத்திற்காக உழைத்த காங்கிரஸுக்கும், சுதந்திரத்திற்குப் பின்னர் இருக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டும்.
இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்க விரும்பாத, இப்படிப் பிழைப்பதையே கேவலமாக நினைத்த ஜெயப்பிரகாஷ் நாராயண்னின் சிறை வாழ்க்கையின் தினசரிக் குறிப்பே இப்புத்தகம். ஜெ.பியை கண்கானிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அரசுஅதிகாரியின் நேரடி வர்ணனையாக இப்புத்தகம் இருப்பதால் நம்பகத் தன்மைக்கு குறைவில்லை.
எந்த இடத்திலும் ஜெ.பியைப் பற்றிய வாணளாவிய புகழாரங்களோ, அல்லது அவரை மஹாத்மா என்று சொல்லவைப்பதற்காக சேர்க்கப்பட்ட மசாலாவோ ஏதுமின்றி உள்ளதை உள்ளபடியும், நடந்ததை நடந்தபடியும் சொல்கிறது.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் பெருந்தன்மையும், அக்காலத்திய அரசியல்வாதிகளின் நாகரீகமும் புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
நாட்டிற்காக, நாடு ஜனநாயகத் தன்மைக்கு திரும்புவதற்காக தனது மக்கள் இயக்கத்தையே முடக்க ஒப்புக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிஹார் மாநில மக்களுக்கு உதவ முன்வருகிறார் ஜெ.பி. இயக்கமா, மக்களா என வரும்போது மக்களையே தேர்கிறார் ஜெ.பி.
தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்.
நாடு அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதையும், குனியுங்கள் எனச் சொன்னால் தரையில் புரளக்கூடிய அளவு முதுகெலும்பில்லாத மக்களையும், எதிர்க்கட்சியினரயும் நினைத்து வருந்துகிறார் ஜெ.பி. ஆனால் மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றெல்லாம் சபிக்காமல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பக்குவமும், பொறுமையும் அவருக்கு இருப்பதை நாம் உணர முடிகிறது.
ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மை அதன் மக்களால்தான் காக்கப்பட முடியும். ஆனால் அவர்களோ எமர்ஜென்ஸியை ஊழல் நிறைந்த ஆட்சிக்கு மாற்றாக நினைக்கத் தலைப்பட்டு விட்டனர். இந்திராவின் ரகசிய திட்டங்கள் பற்றியோ, அவரது மோசமான மகனான சஞ்சய் காந்தி மற்றும் அவரது நண்பர்கள்தான் இந்தியாவை மறைமுகமாக ஆள்வது என்பதைப் பற்றியோ அறியாமல் இருப்பதை நினைத்து வருதுகிறார். ஜெ.பியோ அதற்காக மனம் தளராமல் நாட்டு மக்கள் இது ஒரு பொய்த்தோற்றம் என உணர்ந்து இந்திராவுக்கு எதிராக திரள்வார்கள் என நம்புகிறார்.
கைதியாய் இருந்த சூழலில் ஒருமுறைகூட ”நான் யார் தெரியுமா?” என தனக்கு பாதுகாப்பிற்கு இருக்கும் அதிகாரிகளை மிரட்டாமல் பண்புடன் நடந்துகொண்டிருக்கிறார். அவர் சிறையில் கேட்ட அதிகபட்ச வசதி காலார நடக்க இடம் வேண்டும் என்பதுதான். அவருடன் இருந்த ஒரு அதிகாரியால் இவ்வளவுதூரம் வாஞ்சையுடன் ஜெ.பியை நினைவுகூற முடிவதே அவரது பண்பைச் சொல்கிறது. இன்றைய அரசியல் கைதுகளையும், அரசியல் கைதிகளையும் நினைத்தால் நாம் எவ்வளவு கீழிறங்கிவிட்டோம் எனத் தெளிவாய்த் தெரியும்.
கிங்மேக்கர் என எல்லோராலும் அறியப்பெற்றவரும், இன்றுவரை தமிழகத்தில் காங்கிரஸும், இதர கட்சியினரும் கொடுக்க விரும்பும் ஆட்சியாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்திய கர்ம வீரர் காமராஜர், அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்.
அன்று காமராஜர், தகுதி இருந்த எல்லோரையும் நிராகரித்துவிட்டு, நேருவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக இந்திராவை பிரதமர் ஆக்கினார். அதன் மூலம் ஒரு கொடுங்கோலாட்சி ஏற்பட்டு இந்தியாவில் ஒரு இருண்ட காலம் ஏற்பட காரணமாயிருந்தார். தனது இறுதிக்காலத்தில் இத்தவறை நினைத்து முகத்தில் அறைந்துகொண்டு அழுதிருக்கிறார்.. தவறு செய்துவிட்டேனே என்று. அந்தக் குற்ற உணர்சியே அவருக்கு எமனாகிவிட்டது.
அதன் நீட்சிதான் இன்று சோனியாவையும் நேரு பரம்பரை என நம்பி இந்தியாவையே சோனியாவின் காலடியில் அடகுவைத்த பெருமை இன்றைய காங்கிரஸ் அடிமைகளையே சாரும்.
காங்கிரஸால் பொதுஜனத்தின் பிரக்ஞையிலிருந்து அகற்றப்பட்ட ஒரு மாமனிதனின் வாழ்க்கையில் போராட்டமான காலத்திய பகுதியைப் படித்ததிலேயே அவர்மீது மதிப்பும், மரியாதையும் வருகிறது. அவரது மக்கள் இயக்கத்தைப் பற்றியும், ஜெ.பியின் முழுமையான வரலாற்றையும் தமிழில் படிக்கக் கிடைத்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
புத்தகத்தை எழுதிய தேவசகாயம் நிச்சயம் நாட்டிற்காக உழைத்த ஒரு நல்ல மனிதரைப் பற்றிய உண்மையான குறிப்புகளை எழுதிவைத்து விட்டார். நிச்சயம் அடுத்த தலைமுறை வாசிக்கும் என்ற நம்பிக்கையுடனும், வாசிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடனும்.. அவருக்கு ஒரு வாழ்த்து
கொஞ்சம்கூட தொய்வின்றி இதை சிறப்பாக மொழிபெயர்த்த ஜெ.ராம்கி அவர்களுக்கும் ஒரு வாழ்த்து..
கிழக்குப் பதிப்பகத்தின் சேவை தொடரட்டும்.
இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க..
மிக்க நன்றி ஜெயக்குமார்…
ராம்கி
அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் இளைய தலைமுறை அறியவேண்டிய அறுபுதமான இந்த புத்தகத்தை பற்றி எழுதிய இந்த விமர்சனம் மிக நன்றாக உள்ளது.
உழவன் மகன்
நன்றி! நெருக்கடி நேரத்தைப் பற்றி தமிழகத்தில் சொன்னால் அதில் ஊழல்களையும் சொல்ல வேண்டி இருக்கும்! எனவே தான் அதைப் பற்றி எவரும் எழுதி விடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள்!
சர்வதிகார மனப்பான்மையையும் ,பதவி தரும் அகங்காரத்தையும் சுயநலமின்றி எதிர்க்க மக்கள் சக்தியை திரட்டிய அந்த மனிதர் சரியான நேரத்தில் களம் இறங்கினார். இன்று தேவை அதே போல் இன்னொருவர்.
அன்று ஜெயப்ரகாஷ் நாராயணின் வழியில் செல்ல ஆரம்பித்த லாலு பிரசாத், முலாயம் சிங் எல்லோரும் இன்று ….?