பாரதியின் சாக்தம் – 3

பாரதியின் சாக்தம்பகுதி 1 | பகுதி 2

(தொடர்ச்சி…)

durga-mahisha-vatham

 

சகோதரி நிவேதிதாவின் எழுத்தை பாரதியார் வாசித்திருப்பாரா என்ற சந்தேகம் எழலாம். அதைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வரிகள்:

sister-nivedita1“ஸர்வ ஸந்நியாசியாகிய விவேகானந்தர் தமது நாட்டிலே மட்டும் ஒருவிதமான அதிகப்பற்று வைத்திருந்தமை அவரது பெருந்துறவுக்குப் பொருந்துமாவென்று சிலர் ஐயுறலாம். இதே விஷயந்தான் அவருடைய சிஷ்ய சிகாமணிகளில் ஒருவராகிய ஸ்ரீ நிவேதிதா தேவியின் மனதிலும் பலவித ஆலோசனைகளுக்கிட முண்டாக்கியிருக்கிறது. ஸ்ரீ நிவேதிதா தேவி, சென்ற சில மாதங்களாக ‘பிரபுத்த பாரதம்’ என்ற பத்திரிக்கையிலே விவேகானந்தரைப் பற்றி வரிசையாக எழுதிக்கொண்டு வருகிறார். இம் மாதத்துப் பத்திரிக்கையிலே நிவேதிதா தேவி ஸ்வாமியின் தேச பக்திக்கும் ஸந்யாஸத்திற்குமுள்ள விரோத வியற்கையைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுகிறார். இதையெல்லாம் இங்கே விவரமாக எழுத முடியாத போதிலும் அதன் கருத்தைக் கீழே தருகிறோம்.”

(– காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1, பக் 492)


சகோதரி நிவேதிதாவின் The Master ஆரம்பித்தது பிரபுத்த பாரதாவில் ஏப்ரல் 1906. இதே காலகட்டத்தில்தான் வாணி விலாஸினி என்ற ஸ்ரீரங்கத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதப் பத்திரிகை ஸ்வாமிஜியின் ‘கிழக்கும் மேற்கும்’ என்ற பெங்காலிக் கட்டுரையின் தமிழாக்கத்தை ஒரு பகுதி வெளியிட்டிருந்தது. அதைப் பற்றியும் பாரதியார் குறிப்பிடுகிறார்.

swami-vivekanandar

சக்ரவர்த்தினி மார்ச் 1906 இதழில் எழுதுகின்ற பாரதியார், பாரதமே எப்படி விவேகானந்த போதத்திற்குக் கடன்பட்டிருக்கின்றது என்பதை விளக்கும் வகையில் இந்த வரிகளை இட்டிருப்பது ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

(ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்) “பிரமத் தேனை நரேந்திரருக்கு முற்றிலும் அருத்தி வெறி கொள்ளும் படி செய்துவிட்டார். அந்த மஹா ஞான வெறி நரேந்திரரை விட்டு ஒரு போதும் நீங்கவில்லை.”

“பிரமக் கள்ளுண்டு, இந்த நரேந்திரப் பரதேசி பிதற்றிய வசனங்களே, இனி எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்களாக, பெருஞ் ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன.”

(– காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்-1, பக் 183)


பாரதியின் சாக்த தரிசனம் விவேகானந்த போதத்தில் விளைந்த பெரும் பயனாகும். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களை விவேகானந்தரின் விளக்கத்தில் புரிந்து கொண்டவர் சகோதரி நிவேதிதா என்றால், விவேகானந்தரின் போதத்தை நிவேதிதா தேவியின் பார்வையில் உள்வாங்கியவர் பாரதி என்பது விவேகானந்தரின் நூற்தொகுதி, நிவேதிதாவின் நூற்தொகுதி, பாரதியின் காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் ஆகியவற்றை ஒருசேரக் காணுங்கால் நாம் நன்கு உணர முடியும்.

விவேகானந்தர், ‘அருள்நிலைப் பேச்சுகள்’ என்ற பகுதியில் சாக்தத்தைப் பற்றியும், உலக அன்னையைப் பற்றியும் உரைத்தனவாக பதிந்து வைத்திருக்கும் இந்தப் பகுதி முக்கியமானது:

 

“Shakthas worship the Universal Energy as Mother, the sweetest name they know; for the mother is the highest ideal of womanhood in India. When God is worshipped as “Mother”, as Love, the Hindus call it the “right-handed” way, and it leads to spirituality but never to material prosperity. When God is worshipped on His terrible side, that is, in the “left-handed” way, it leads usually to great material prosperity, but rarely to spirituality; and eventually it leads to degeneration and the obliteration of the race that practises it.

“Mother is the first manifestation of power and is considered a higher idea than father. With the name of Mother comes the idea of Shakti, Divine Energy and Omnipotence, just as the baby believes its mother to be all-powerful, able to do anything. The Divine Mother is the Kundalini (“coiled up” power) sleeping in us; without worshipping Her we can never know ourselves. All-merciful, all-powerful, omnipresent are attributes of Divine Mother. She is the sum total of the energy in the universe. Every manifestation of power in the universe is “Mother”. She is life , She is intelligence, She is Love. She is the universe yet separate from it. She is a person and can be seen and known (as Shri Ramakrishna saw and knew Her). Established in the idea of Mother, we can do anything. She quickly answers prayer.”

(– Inspired Talks, pp26 –27, The Complete Works of Swami Vivekananda, Vol 7, March 1986)

 

காசியில் கண்ட காளி பூஜையைப் பற்றி எழுதிய பாரதி, பின்னர் ‘ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை’ என்று ஆன பின்னர் எழுதும் பாடல் வரிகள் மேற்கண்ட பகுதியோடு அணுக்கமாக ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது.

kali2யாதுமாகி நின்றாய்– காளீ,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் — காளீ
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் — காளீ
பொறிக ளைந்து மானாய்
போத மாகி நின்றாய் — காளீ
பொறிகளைக் கடந்தாய்.

(– பக் 213, பாரதியார் கவிதைகள்)

 

“விவேகானந்தர் காளியின் வழிபாடுதான் எதிர்கால இந்தியாவின் உயர்வுக்கு வழி என்கிறார்,” என்று சகோதரி நிவேதிதை கூறுகிறார். மாயை என்பது உள்ளதை உள்ளதுபடி எடுத்து இயம்புதலே என்கிறார் விவேகானந்தர். காளி என்பது வாழ்வனுபவங்களாலாகிய நூல் என்கிறார். நிச்சயம் நாம் ஏற்கனவே மனத்தில் இருக்கும் தேவ தேவியரின் சித்திரங்களைச் சிறிது அப்புறம் வைத்துவிட்டு, இவர்கள்தம் கருத்துகளிடையே உன்னித்துணர்ந்தால்தான் நரேந்திரர் உணர்ந்த காளி என்பது யார்? நிவேதிதை அவரிடமிருந்து புரிந்து கொண்ட காளி யார்? இவர்கள் வழியில் பாரதி பெற்ற சாக்த தரிசனம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாக்தத்தைப் பற்றிச் சொல்லும் விவேகானந்தர் அதில் உள்ள வாமசாரப் பிரிவுகளைப் பற்றி என்ன கருத்து தெரிவித்தார்?

ஸ்ரீ சரத் சந்த்ர சக்ரவர்த்தி என்ற சிஷ்யருடன் விவேகானந்தர் நடத்திய உரையாடல்களின் பதிவில் ஓரிடம் இதை விளக்குகிறது. சக்தியின் வாழும் பிரதிமைகளான பெண்களை மதிக்கத் தவறியதால் ஹிந்துக்களின் வம்சம் பெரிதும் க்ஷீண நிலை அடைந்து விட்டது என்ற சுவாமிஜியின் கருத்தைக் கேட்டு சீடர் புரியாமல், ‘ஸ்டார் தியேட்டரில் பேசும் போது தந்திரங்களைப் பற்றி வெகுவாகச் சாடினீர்கள். இப்பொழுது என்னவென்றால் தந்திரங்கள் போதித்த நெறிப்படிப் பெண்களை சக்தியின் உருவங்களாக வழிபட வேண்டும் என்கிறீர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்களே!’ என்று கேட்டதற்கு விவேகானந்தரின் பதில் :

I denounced only the present corrupted form of Vamachara of the Tantras. I did not denounce the Mother-worship of the Tantras, or even the real Vamachara. The purport of the Tantras is to worship women in a spirit of Divinity. During the downfall of Buddhism, the Vamachara became very much corrupted, and that corrupted form obtains to the present day. Even now the Tantra literature of India is influenced by those ideas. I denounced only these corrupt and horrible practices — which I do even now. I never objected to the worship of women who are the living embodiment of Divine Mother, whose external manifestations, appealing to the senses have maddened men, but whose internal manifestations, such as knowledge, devotion, discrimination and dispassion make man omniscient, of unfailing purpose, and a knower of Brahman. “She, when pleased, becomes propitious and the cause of the freedom of man” (Chandi, I .57)”

(– The Complete Works of Swami Vivekananda, 7, pp 215, March 1986)


மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல் ஆகியனவேயாகும்.

சக்ரவர்த்தினி ஜனவரி 1906 இதழில் பாரதியார் ‘பாரத குமாரிகள்’ என்ற கட்டுரையில் எழுதுவது:

dravidian-woman-painting-by-silayaraja

“தேசத்தின் ‘சக்தி ரூபங்’களாகிய மாதர்களை அறிவின்மை யென்னும் பேரிருளில் ஆழ்த்தி வைத்துவிட்டுத் “தேசாபிவிருத்தி”, “தேசாபிவிருத்தி” என்று கூக்குரலிடுவோரின் பேதைமையை என்னென் றுரைப்போம்?”

“நமது தேசத்தின் “ஆதார சக்தி”களாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞான கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது”

(– காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1, பக் 145)

வாமாசாரம் உண்மையில் நல்ல நிலையில் இருந்த காலத்து அது சொல்ல வந்த கருத்தே என்னவெனில், பெண்ணை முக்திக்குத் தடை, ஆன்மிக உயர்விற்குக் கேடு என்றெல்லாம் வெறுக்காமல், உள்ளபடி சக்தி உருவங்களாக மதித்து முக்திக்கான சரிநிகர் சமானமான துணை என்று கருதி நடக்க வேண்டும் என்பதே.

எனவேதான் வாமாசார நெறியின் படி ஒருவன் சாக்த சாதனை மேற்கொள்ளுமுன் அந்தச் சாதகன் முழுக்கவும் தன் பொறி புலன்களை அடக்கி, பூரணமான புலனடக்கம் வாய்க்கப் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று மூல நூல்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

ஜிதேந்திரியத்வம் இல்லாமல் கௌல மார்க்கத்தில் புகுவது பெருங் கேட்டிற்கான வழி என்று எச்சரிக்கின்றன பரமானந்த தந்த்ரம், த்ரிபுரார்ணவம், பாவ சூடாமணி முதலிய தாந்திரிக நூல்கள். ஆனால் கால கதியில், விவேகானந்தர் கூறியபடி பௌத்த மதம் பெரிதும் வீழ்ச்சியுற்ற நிலையில் விளைந்த பல கேடுகளில் ஒன்றாக புலனின்ப நாட்டமாக, பல தாந்திரிக வழிகள் சீர்கெட்டுப் போயின.

ஆனால் உண்மையான உயிர்க்காதலைச் சக்தி வழிபாடாகப் பாடுகின்ற பாரதி பழம் கருத்துகளின் வீழ்ச்சி நிலையினின்றும் சாரமான கருத்துகளைக் காப்பாற்றித் தருவது விவேகானந்தரின் சீரிய வழியில் நின்றேயாகும். சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு தனியானது.

dravidian-woman-by-s-ilayarajaஅன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

போற்றி தாயென்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணிடைப் பெண் ணொருத்தி பணியிலே

“போற்றி தாயென்று தாளங்கள் கொட்டடா!
போற்றி தாயென்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

(–‘பெண்மை’, பக்-539, பாரதியார் கவிதைகள், சீனி.விசுவநாதன் பதிப்பு)

 

பாரதியின் சக்தி தரிசனத்திற்கான மூலபாடம் விவேகானந்தப் பெருமானிடமிருந்தும், சகோதரி நிவேதிதாவிடமிருந்தும் என்பது மட்டுமன்று, பாரதி தம்முடைய பங்களிப்பாகத் தந்த புது அணுமுறைக்கும் விவேகானந்த-நிவேதிதா ஆதர்சத்தின் மூல ஆவேசம் நடுக்கோடாக நிற்கிறது.
 
எதையும் சொல்லின் மேட்டில் நின்றே திருப்தியடையாது, மதம், கடவுள், சடங்கு, சாத்திரம் என்றபடி அனைத்தின் ஆழங்களுக்குச் சென்று பொருள் காண வேண்டும் என்ற வேகம் உடைய பாரதி, சக்தி, சாக்தம், மந்திரம் ஆகியவற்றிற்கெல்லாம் உட்குடைந்து காணும் பொருள்கள் பல. இத்தகைய பலநிலைத் தாவும் நுண் ஆர்வம் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், நிவேதிதா என்ற வழியில் இளைஞர்களிடையே அன்று எழுந்த உத்வேகம் எனலாம். பாரதி தம் காலத்து உயிர்ச்சக்திகளை முழுக்கவும் இனங்கண்டு தம்மை முற்றிலும் அதற்கு ஆட்படுத்தத் தயங்கியதில்லை என்பதை அவரது வாழ்வும், எழுத்தும் நமக்கு உணர்த்துகின்றன. தாம் உள்வாங்கியதோடு நில்லாமல், அந்தப் பெரும் யுகமாற்றமான சேதிகளைத் தம் எழுத்தாலும், செயலாலும் தம்மைச் சூழ்ந்தோருக்கும், தம் எதிர்காலச் சந்ததியருக்கும் திறம்படத் தந்திருப்பது பெரிதும் போற்றப்பட வேண்டிய ஒன்றாம்.
 
bharathi31சாக்தம் என்பதே ஹிந்துமத இயக்கம் என்பதன் பூர்வாங்கமாகத்தான் செயல்பாடு துவங்கியிருக்கிறது என்பதை ஆகம வரலாற்றை ஊன்றிக் கற்பதன் மூலம் அறிய முடிகிறது. ஜாதிகளின் அமைப்பு சமுதாய இயக்கத்தை விரிவுக்கு உகவாததாய் ஆக்கிக்கொண்டிருந்த காலத்தில் ஆகமங்கள், ஜாதிகளின் பிடியைப் பல படியாலும் பக்தி என்னும் பெருவழி கண்டு மாற்றிக் கொண்டிருந்ததை நாம் ஆகம தந்திரங்கள், பிரதேச மொழியில் பக்தர்கள் பாடிய அருட்பாடல்கள், அவற்றின் வழி உணர்வு எழப்பெற்ற அடியார் குழாங்களின் சம்பிரதாயங்கள் இவற்றில் காண முடிகிறது. சாக்த தந்திரங்களுக்கு ஜாதிப் பிரச்சனை என்பதனோடு சேர்ந்து பெண் என்னும் பெருந்தகைமையை வென்றெடுக்கும் பெரும் பணியும் கூடிவிடுகிறது. அன்று நடக்கும் எந்தச் சமுதாய அரசியல் மாற்றமும் பாரத மண்ணில் சமய உத்வேகத்தின் மொழியிலேயே பதியப் படுகிறது. சமுதாய மாற்றக் காரணியாகவும் சமய உத்வேகமே செயல் பட்டிருக்கிறது. இது பாரதத்திற்கு என்று பிரத்யேகமான இயல்பு வழியாக இருந்ததை விவேகானந்தர் மிகச் சரியாக இனங்கண்டு உரைத்திருக்கிறார். பாரதி அந்தப் பள்ளியில் பயின்றவர் ஆகையாலே இந்த நுட்பங்கள் ஒன்று விடாமல் தமது எழுத்தில் பதிவு செய்கிறார்.
 

நம்நாட்டிலுள்ள ஜனங்கள் தங்களுடைய உயிர் நிலையைத் தாங்கள் கொண்ட மதத்திலே வைத்திருக்கின்றனர். மற்ற நாட்டாருக்குப் பற்று ராஜ்யத்திலேயாவது அல்லது தொழிற்களிலேயாவது ஏற்படும்.
 
ரோமர்கள் ராஜ்ய விவகாரத்திலே மட்டற்ற பற்றுடையவர்களாய் இருந்தார்கள். அவர்கள் இராஜ்யம் அழிந்தவுடன் அவர்களும் மறைந்தார்கள்
 
கிரேக்கர்கள் கலைகளில் பற்றுடையவர்களாய் இருந்தார்கள். கலைகளோடு அவர்களும் போய்விட்டார்கள். கார்த்தஜீனியர்கள் (ஆப்பிரிக்காவில் இருந்த தேசம்) வர்த்தகத்தில் பெயர்போனவர்களாய், அதிலேயே தங்கள் உயிர் நிலையை வைத்திருந்தார்கள். அவர்களும் அவர்களுடைய வர்த்தகமும் போனவிடந் தெரியவில்லை. பாபிலோனியர்கள் இக போகங்களிற் கருத்தை நாட்டிவந்தார்கள். அவர்களும் காலஞ் சென்றனர்.
 
ஆரியர்களுக்கு எப்போதும் ஆத்ம ஞானத்திலேயே நாட்டம். ஆத்மா அழிவற்ற நித்ய வஸ்துவாகையால் ஆரியர்கள் நித்ய ஜீவிகளாயிருக்கிறார்கள்.”
 
(– இந்தியா 2-10-1909; — காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 6, பக் 22-23)

 


 
 
விவேகானந்தர் My Plan of Campaign என்று 1897-இல் விக்டோரியா ஹால், சென்னையில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் கூறுவது:-
 
“I see that each nation, like each individual, has one theme in this life, which is its centre, the principal note round which every other note comes to form the harmony. In one nation political power is its vitality, as in England, artistic life in another, and so on. In India the religious life forms the centre, the keynote of the whole music of national life; ..”
 
இவ்வாறு மதம், ஆன்மிகம் என்பது உயிர்நிலையாய் இருக்கும் காரணம் பற்றியே பாரதத்தில் எந்த மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றாலும் அஃது மதத்தின் மூலமாகவே முடியும் என்பது விவேகானந்தரின் கருத்துகளில் ஒன்று. இந்தக் கருத்து விவேகானந்தர் பாரத சமுதாயத்தின் இயல்பையும், வரலாற்றையும் நன்கு புரிந்துகொண்டு சொன்னதுதானே தவிர அவராகவே ஏற்படுத்திய கருத்து அன்று. இதே இயல்பைத்தான் ஆகமங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்துகின்றன.
 
இல்லாவிட்டால் சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?
 
அந்தஸ் சாக்தா:| பஹி: சைவ:| லோகே வைஷ்ணவ:| (கௌலோபநிஷத்)
[உள்ளே சாக்தன், புறம்பே சைவன், உலகில் வைஷ்ணவன்.]
 
அந்த: சாக்தா: பஹி; சைவ: ஸபாயாம் வைஷ்ணவா மதா:|
நாநாமூர்த்திதரா: கௌலா: விசரந்தி மஹீதலே
(காளீவிலாஸ தந்த்ரம்)

[உள்ளே சாக்தன்; வெளியில் சைவன்; சபையில் வைஷ்ணவன். இவ்வாறு பலபல தெய்வ உருவங்களைக் கைக்கொண்டவர்களாய் உலகில் கௌலர்களான சாக்தர்கள் பரவுகின்றனர்.]
 
ஹிந்து மதம் என்ற பலவித வழிபாடுகளை ஒருங்கிணைக்கும் மீப்பெரு சமய விதானத்தைப் புறத்தில் நிகழ்த்தும் சமுதாய மாற்றமாகச் செய்யாமல் மூல வழியான ஆன்மிகம் என்ற மொழியிலேயே அந்த மாற்றத்தை இயற்றும் போக்கைத்தான் சாக்தம் கைக்கொள்கிறது. இவ்வாறு ஒருவனின் வழிபாட்டு உணர்விலேயே சாக்த, சைவ, வைஷ்ணவ பண்பாட்டு அம்சங்கள் கலந்து திகழப் பெறுவதுதான் ஹிந்து மதத்தின் இயல்பான அம்சம் என்பதை சாக்தம் சொல்லும் கருத்திலிருந்தும் விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய வழிகளிலிருந்தும் நன்கு பயின்ற பாரதி தாம் அதை ஒரு நடைச் சித்திரமும், உண்மைச் சம்பவங்களும் கலந்த உரைச் சித்திரத்தில் அமைத்திருப்பது கவனிக்க வேண்டிய அம்சம்.

 
“வேதபுரத்தில் ஒரு வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.
 
அவன் நெற்றியிலே ஒரு நாமம்; அதன் மேலே விபூதிக் குறுக்கு; நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.
 
“உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டேன்.
 
“நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.
 
“நீ எந்த மதம்?” என்று கேட்டேன்.
 
“வைசாக்தம்” என்றான்.
 
சிரிப்புடன் “அதற்கர்த்த மென்ன?” என்று கேட்டேன்.
 
“வைஷ்ணவ-சைவ–சாக்தம்” என்றும் விளக்கினான்.
 
“இந்த மதத்தின் கொள்கை யென்ன?” என்று கேட்டேன்.
 
அப்போது பண்டாரம் சொல்கிறான்:
 
“விஷ்ணு தங்கை பார்வதி; பார்வதி புருஷன் சிவன்; எல்லாத் தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்ப வேண்டும். செல்வத்தைச் சேர்க்க வேண்டும். இவ்வளவுதான் எங்கள் மதத்தினுடைய கொள்கை” என்றான்.
 
“இந்த மதம் யார் உண்டாக்கினது?” என்று கேட்டேன்.
 
“முன்னோர்கள் உண்டாக்கினது. தனித்தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்றுசேர்த்தால் மிகவும் நன்மை யுண்டாகுமென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும் தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன்” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.”
 
(– காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 8, பக் 711-712)

 
இது பாரதியின் ஹாஸ்ய எழுத்து என்றாலும் வெறும் எழுத்து அன்று. பாரதி பல இடங்களிலும் தம் கருத்தைப் பயின்று உரைத்திருப்பதற்கு ஏற்றாற்போல்தான் இங்கும் இந்தப் பகுதியை அமைத்திருக்கிறார். ‘சக்தி’ என்னும் வசனக் கவிதைப் பகுதியில்,
 
பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி
கண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்
சக்தி முதற்பொருள்.
 
என்ற பாரதியின் வரிகளோடு வைத்து நோக்குங்கால் வைசாக்தன் என்ற விகடம் ஆழப்படுகிறது. உள்ளே சாக்தனாகவும், வெளியே சைவனாகவும், பொதுவில் வைஷ்ணவனாகவும் இருக்கும் கருத்து சாக்த தந்திரம் உரைத்தது எனில், பாரதியின் விகடச் சித்திரமும் வசனக் கவிதைப் பகுதியும் அந்தத் தந்திரத்தின் விளக்கமாய்த் திகழ்கின்றன.
 
parasasakthiஇதில் வரும் வைசாக்தனை பாரதி தனிமனிதனாகக் காட்டாமல் ஹிந்து சமுதாயப் பொதுமையைச் சித்திரம் தீட்டுகிறார் என்று கொண்டால் கோடு நேர்பட அமைகிறது. சாக்தம், சைவம், வைஷ்ணவம் என்ற முப்புரியூட்டிய முனைப்பின் திகழ்ச்சி ஹிந்துமதம் என்றால் அதைத் தாந்திரிகமாகவே கண்டு, பல நூற்றாண்டுகள் முன்பே சாக்தம் ஹிந்து மதத்திற்கான விதானம் வேயத் தொடங்கிவிட்டது எனலாம். ஸ்ரீதேவீ மாஹாத்மியம் என்று கூறப்படும் வங்காளத்து துர்கா ஸப்த ஸதீ, ‘மஹாமாயையாகிய சக்தி ஹரியின் யோக நித்திரையே வடிவானவள்’ என்று கூறுகிறது.
 
“அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை, இன்பு வடிவாகி நிற்பள், துன்பமெல்லாம் அவளிழைப்பள், இஃதெல்லாம் அவள் புரியும் மாயை; அவள் ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை” என்று ‘மஹா காளியின் புகழ்’ பாடுகிறார் பாரதி.
 
வேறுநாட்டில் என்றால் சமுதாயப் புரட்சி, அரசியல் சித்தாந்தம், ஆண்பெண் சமதர்மம் முதலிய பிரச்சனைகள் தனியாகவும் மதம் என்பது தனியாகவும் தெரியும். காரணம் அங்கெல்லாம் மதம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட மனித யத்தனத்தைக் குறிப்பது. ஆனால் பாரதத்தில் சமுதாயம் மிகவும் எல்லைக்குட்படுத்தப்பட்ட விஷயமாய் இருந்தது என்றால், மதம் எத்தகைய சிந்தனைகளையும், மாற்றுச் சிந்தனைகளையும் தன்னுள் இடம் தரவல்லதாய், வேண்டிய கருத்துச் சுதந்திரத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. செய்ய வேண்டியது எல்லாம் அதற்கான ஆன்மிக புராண ஆகம மொழியில் அந்தந்தப் பிரச்சினைகளைத் தீர்வு காண்பதுதான்.

(தொடரும்…)

4 Replies to “பாரதியின் சாக்தம் – 3”

  1. நாரண னென்று பழவேதம் – சொல்லும்
    நாயகன் சக்தி திருப் பாதம்
    சேரத் தவம்புரிந்து பெறுவார் – இங்கு
    செல்வம் அறிவு சிவபோதம்!
    – சக்தி விளக்கம் – பாரதி

  2. நன்றாகப் போகிறது. தொடருங்கள்.

    “ஆரியனுக்கு ஆன்ம நாட்டம் மட்டுமே . அவன் அழிய மாட்டான்.” பாரதி இதைக் கூறிய போது அவனால் தேச விரோதிகள் என்று குறிப்பிடப்பட்ட இன்றைய கழகங்களின் முன்னோடிகள் தீவிரமாகவே இருந்தனர்.

    ஆரியன் என்பவன் வெறும் வாடா நாட்டான் அல்ல. அவன் கொள்கையால் தான் ஆரியன் என்று முழங்கும் திறம் பாரதிக்கு இருந்தது. இன்று ஆரியன் என்ற சொல்லைக் கண்டு அனைவரும் பயந்து ஒதுங்குகின்றனர். வட நாட்டிலோ, அவன் ஏதோ ரஷிய காட்டில் இருந்து வந்தவன் என்றும், தென்னாட்டிலோ அவன் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்றும் வர்ணனை போகிறது.

    ஆரியன், ஆரியம் இரண்டையும் பற்றி பாரதத்திற்கு மீண்டும் பாடம் எடுக்கப்பட வேண்டும்.

  3. காலத்திக்கேற்பக் கேள்விகள் எழுந்தபோதெல்லாம், ரிஷிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் மூலமாக விரிவாக்கப்பட்டஒன்றில் அடக்கம் ‘சாக்தம்’. அவ்வாறே, வேதத்தில், இகலோக சுகங்களுக்காகவும், யாகங்களும் நடத்தப்பட்ட முறைகளைக் கண்டனம் செய்த பௌத மற்றும் ஜைன மதங்களின் தோற்றங்களின் இயலாமையை வெளிப்படுத்தி, வேதங்களை நிலைநிறுத்த, அவர் காலத்தில் ,பகவத் பாத ஆதி சங்கரர், அப்போதிருந்த ஸ்ரௌத ஸ்மார்த்த வைதிக நெறியை, ஷன் மதங்களாகப் பாவித்து, அவற்றில் ஒன்றாக “சாக்ததை” நிலை நிறுத்தினார். அதன் மூலமாக வைதிக மதம் முழுதுமே, காம்யார்த்த மதம் என்று கற்பித்த பௌதர்கள் மற்றும் ஜைனர்களை வென்றார். சிவபிரான் தன இடது பாகத்தை பார்வதிக்கும், மகாவிஷ்ணு வக்ஷச்தலத்தை மகாலட்சுமிக்கும் கொடுத்ததன் மூலம், பெண்மையை வணங்க வேண்டும் என்றும், பெண்ணை
    வணங் கவேன்டாத அவசியத்தையும் உணர்த்தினர். வங்காளம் ‘சாக்தத்தின்’ இருப்பிடமாக இருந்ததற்கு, அப் ப்ரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் முக்யமானதாக இருந்ததாலும், அஸ்ஸாம் உட்பட்ட சக்தி ஸ்தலங்களின் தலைமையிடமாக நேர்ந்ததும், ராமகிரிஷ்ணபரமஹம்சர், விவேகானந்தர் காலங்களில், சதி போன்ற பழக்கங்களால், பெண்களுக்கு எதிரான மதம் என்பதை மாற்றி,வெள்ளையரிடையே, இந்து மதத்தை பற்றிய உயர்வான எண்ணத்தை, அவர்களிடை ஏற்படுத்த வேண்டிய கட்டாயங்களும் தான். இவ்வாறாக பல்வேறு ப ழிபாவங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்ட போதெல்லாம், இந்து மதம், குறைகூறுபவர் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு, தன நிலையை, நெகிழக் கூடியதாக மாற்றிககொள்ளும் நிலை ஒன்றுதான், சாக்தம். தெய்வம் மானுஷ ரூபேண என்னும் நிலைக்கேற்பப பல வேளைகளில் பலர் அதற்க்கு அடித்தளமிடுகிறார்கள்.

  4. தங்களின் கருத்துக்கள் மிகவும் அற்புதமானவை நான் பாரதியைப் பற்றி ஆராய்ய்ச்சி செய்து வருகிறேன் தற்போது பாரதியின் பக்தி பாடல்களில் ஒரு கட்டுரை எழுதுவற்காக இப்பக்கத்தை படிக்க நேர்ந்தது,இந்த செய்திகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அதற்கு மிக்க நன்றி. என்னுடைய கேள்வி என்னவெனில் சக்தி ,காளி. துர்கை ,கொற்றவை என்ற தெய்வங்கள் ஒன்றா அல்லது வேறா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *