அறியும் அறிவே அறிவு – 7

அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6

(தொடர்ச்சி…)

நமது விழிப்பு நிலையில் உலகைக் காண்கிறோம். அப்போதுதான் நமக்கு வாழ்க்கையில் நடப்பன எல்லாம் பற்றிய அறிவு தீர்க்கமாக இருக்கிறது. மேலும் அப்போதுதான் நம்மைப் பற்றி சிந்தித்து, நம்மைப் பற்றி அறிய முடியும் என்றெல்லாம் புத்தி பூர்வமாக உணர்ந்து, அப்படி சகலமான அனைத்தையும் பார்க்கும் “நான் யார்” எனவும் நாம் கேட்டுக் கொள்ள முடியும். அப்படி நம்மைப் பற்றி நாமே கேட்டுக்கொள்வது அந்த புத்தி இயங்கும் நிலையில் தான். அதற்கு அந்த நிலையிலேயே பதில் கிடைத்தால் என்ன பொருள்?

அந்த பதிலும் நம் புத்தி அளவிலேதான் இருக்கும். அந்த புத்தியும் எப்போதும் சாசுவதமாய் நிலைத்திருந்தால் பதிலும் அந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆனால் நமது புத்தியோ நமது உடல், மனம் இவை தோன்றும்போது தானே இயங்குகிறது? புத்திக்கு இத்தகைய சார்பு இருப்பதால் அது காட்டுவதை எப்படி சரி என்று கொள்ள முடியும் என்றிவ்வாறாக சீடன் நினைக்கலாம் அல்லவா? “நான் யார்” என்று கேள்வி கேட்பது வரை சரி, அதற்கு மேல் வரும் பதில் எத்தகையதாக இருக்கும் என அவனுக்கு வரும் சந்தேகத்தைப் போக்கும் முகமாக ரமணர் இப்படிக் கூறுகிறார்.

நானார் என மனம் உள்நாடி உளம் நண்ணவே
நானாம் அவன் தலை நாணமுற – நான் நானாய்த்
தோன்றும் ஒன்று தானாகத் தோன்றினும் நானன்று பொருள்
பூன்றம் அது தானாம் பொருள்

பொருள்: “நான் யார்?” என்னும் ஆன்ம நாட்டத்தினால் மனம் உள்முகமாக நாடி விசாரித்து, இதயத்தைச் சார்வதால் நான் என்று தேகாத்ம வடிவில் தோன்றும் அகங்காரத்தின் தலை சாய்ந்து இதயத்தில் ஒடுங்கிவிடும். அகங்காரம் ஒடுங்கியதும், “நான்-நான்” என்று இடைவிடாமல் ஒன்று தானாகவே தோன்றும். அவ்வாறு தோன்றினாலும், அது தேகத்தை நானென்று நினைக்கும் அகங்காரமல்ல. அது குறைவற்ற பரிபூரண பரம்பொருளான ஆத்மாவாகிய உண்மைப் பொருளாகும்.

நமது முதல் உணர்வே நான் எனும் தன்மை உணர்வு. இதையே அகந்தை, அகங்காரம், மனம் என்று விதவிதமாகச் சொல்லப்படுகிறது. இந்த “நான் யார்?” என உள்முகமாக தன்னை விசாரிக்க, நான் எனும் பொய்த்தோற்றம், கயிற்றில் காணப்பட்ட பாம்பு போல், மறைந்து விடுகிறது. அப்படி ஞான விசாரம் செய்து மனம் அழிந்தோர்க்கு, அகங்காரம் தலை தூக்க வாய்ப்பேயில்லை. அந்த “நான்” என்பது மறைந்து “நான்-நான்” என்ற மெய்ப்போதம் தானே பிரகாசிக்கிறது. இது எப்படியென்றால் திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒளி விளக்கு திரையை விலக்கியதும் பிரகாசிப்பது போல என்பார்கள். இதில் நாம் காண வேண்டிய முக்கிய அம்சமானது ஒளி என்றுமே இருந்தது, புதிதாக வந்ததில்லை என்பதே. அதே போல் நாம் என்றும் உள்ள நிலை நமது எண்ணங்களால் மறைந்திருந்தது. அவை நீங்கியதும் நமது உள்ள நிலையை உணர்கிறோமே அன்றி, அது முன்பு இல்லாமல் புதிதாக வந்த ஒன்று அல்ல.

maharishi

நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்படிக் கொள்ளலாம். “நான்” என்ற எண்ணம் போய், “தான்” என்ற நிலையில் இருப்பதை உணர்கிறோம். அது முன்பும், பின்பும், எப்போதும் இருப்பதே. அதுவே பரிபூரண நிலை. அந்த நிலைதான் நம் எல்லோரது உண்மை நிலையும் ஆகும். அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தே அறிய முடியும்.

இதை விளக்கும் முகமாக, எடுத்த எடுப்பிலேயே ரமணர் “உள்ளது நாற்பது” முதல் மங்கலச் செய்யுளில் இப்படிக் கூறுவார்:

“உள்ளது அலது உள்ள உணர்வு உள்ளதோ உள்ளபொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும்
உள்ளபொருள் உள்ளலெவன் உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்”

ஆம், அதை உணர்ந்தே தெரிந்து கொள்ள முடியும். அதனாலேயே “கண்டவர் விண்டிலை” என்றார்கள். ஒரு வேளை விண்டு சொல்ல முடிந்தாலும், சொல்வது ஒரு புத்தி அளவிலும் கேட்பது இன்னொரு புத்தி அளவிலுமே இருக்கும். வெறும் புத்தி பூர்வமாக இல்லாது, அது அனுபவத்தில் ஒருவனுக்கு உணர்வு பூர்வமாக வர வேண்டும்.

ரமணர் அருணாச்சல மலையை முதன் முதலில் தரிசனம் செய்யும் போது அவர் மலையைப் பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் இப்படிச் சொல்வார்:

“…..விண்டிது விளக்கிடு விறல் உறுவோன் ஆர்?
விண்டிலை பண்டுநீ விளக்கினை என்றால்
விண்டிடாது உன்னிலை விளக்கிட என்றே
விண் தலம் அசலமாய் விளங்கிட நின்றாய்”

அதாவது, “வாயால் சொல்லி இந்த அநுபூதி நிலையை விளங்க வைக்கும் திறமை படைத்தவன் எவன் இருக்கிறான்? சொற்களால் சொல்லாமல் உனது உண்மை நிலையான ஆன்மானுபூதியை உணர்த்துவதற்கு என்றே ஆகாயத்திற்கும் பூமிக்கும் ஒன்றாக உயர்ந்து ஓங்கியுள்ள அருணாச்சலமாக பிரகாசித்துக் கொண்டு நிற்கின்றாய்” என்று மலையையே குருவாகச் சொல்கிறார். அன்று அவர் அங்கு சென்றதுதான். அவர் விதேக முக்தி ஆன பின்பும், அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. இறுதியில் ஒளி மயமாக அதனுடனேயே ஐக்கியமாகிறார்.

தக்ஷிணாமூர்த்தியும் மௌன குருவாக முதலும் முடிவுமில்லா ஆலமரத்தடியில் அமர்ந்து, தனது கை முத்திரையால்தானே “அது நீ” என்று காட்டி அருள் பாலிக்கிறார். எண்ணமும், பேச்சும், எழுத்தும், செயலும் ஒருவனை ஓரளவே கொண்டு செல்லும் என்பதையே இவை அனைத்தும் நமக்கு உணர்த்துகின்றன.

“அது நீ” என்று அம்மறைகள் ஆர்த்திடவும் தன்னை
எது என்று தான் தேர்ந்து இராது – அது நான்
இது அன்று என்று எண்ணல் உறனின்மையால் என்றும்
அதவே தானாய் அமர்வதால்

பொருள்: “அந்தப் பிரம்மம் நீயே” என்று சிறந்த வேத உபநிடதங்கள் கோஷிக்கின்றன. அந்தப் பரம் பொருளே ஆத்மாவாக எல்லாக் காலங்களிலும் தானாக அமர்ந்திருப்பதினால், ஒருவன் தனது உண்மை சொரூபத்தை எதுவென்று உள்ளத்தில் விசாரித்து அறிந்து தான் அந்த பிரம்மமாகவே நிலைத்து நிற்காமல், அந்த பிரம்மமே நான், இந்த தேகம் இல்லை என்ற பாவனையோடு தியானிப்பது மனதின் வலிமையும், சக்தியும் உரமாக இல்லாததனால்தான்.

தனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே “அது நீ” போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். அதைக் கேட்டதும் சீடன் தனக்குள்ளே ஆழ்ந்து “இந்த நான் யார்?”, “இதன் தன்மை என்ன?” என்று விவேகத்துடன் தன்னுள் மூழ்கி ஆத்ம முத்தை அடைய வேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யாது, “அது நான்”, “இது அல்ல” என்ற முறையிலான தியானங்களில் ஈடுபடுவது அவனுக்கு மன உறுதி இல்லாததால் தான். அந்த முறையிலான வழிகளில் செல்வது அவனுக்கு ஏதோ ஒரு பற்றுக்கோடாக இருக்கலாம்; அப்போதைக்கு மனச் சாந்தியைக் கொடுக்கலாமே அன்றி மனத்தின் உண்மை நிலையைத் தெரியப்படுத்தாது. ஏனென்றால் மனத்தின் துணை கொண்டு எதைச் செய்தாலும், மனமோ அகங்காரமோ அழியமுடியாது. அவை அழியவில்லை என்றால் தனது ஆன்ம சொரூபமும் தெரியாது. நாம் எப்போதும் உள்ள நிலையாகிய ஆன்ம சொரூபத்தை உணர்ந்தால், நாம் எதுவாக இல்லையோ அது தானாகவே கழன்று விடும்.

அதற்கு வேண்டிய விவேகமோ, வைராக்கியமோ இல்லாதவர்கள் இந்த விசார வழியில் செல்ல இயலாத கோழைகள்தான். எப்படி என்னதான் மூட்டினாலும் ஒரு வாழைத்தண்டு காய்ந்த விறகைப் போல் பற்றிக் கொள்ள முடியாதோ, அதே போல வைராக்கியம் இல்லாத கோழைகளும் ஞான அக்னியால் பற்றிக் கொள்ள முடியாதவர்களே. ஞான தீபத்தை மூடியுள்ள திரை மற்றவர்களுக்கு மெலிதாக இருக்கின்றதென்றால், இவர்களுக்கோ மிகத் தடிமனாக இருக்கிறது என்றே பொருள். அவர்களால் அத்திரையை விலக்கிவிட்டு வர இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தனது இயலாமையைப் பற்றி சிந்தித்து மேலும் மேலும் அவர்கள் முயற்சி செய்வார்களேயானால் அவர்களுக்கும் இந்த ஞான வழி சித்திக்கலாம். அப்படி சித்தித்தால், தனது தாயின் உயிர் பிரிந்ததும் பட்டினத்தார் எல்லோரும் போலே அழுது புலம்பினாலும் விறகுக்குப் பதிலாக வாழை மட்டைகளை வைத்தே அன்னைக்குத் தீ மூட்டுவது போன்ற வரமும் கைவரப் பெறலாம்.

எவரும் இயல்பாய் உள்ள நிலையை அறிய இவ்வளவு பாடுபட வேண்டுமா எனக் கேட்டால், அதை அவர்களே வரவழைத்துக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். வேறு எவரும் திரையைப் போடவில்லை. நாமேதான் திரையைப் போட்டுக் கொண்டு, இப்போது அதை விலக்குவதற்கும் முயற்சி செய்கிறோம்.

வேண்டிய எல்லாம் செய்து, நமது உண்மைத் தன்மையை உணர்ந்துவிட்டாலும், நான் என்னை அறிந்தேன் என்று சொல்ல முடியுமா என்று யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் என்ன?

என்னை அறியேன் நான் என்னை அறிந்தேன் நான்
என்னல் நகைப்புக்கு இடமாகும் – என்னை?
தனை விடயமாக்க இரு தான் உண்டோ? ஒன்றாய்
அனைவர் அநுபூதி உண்மையால்

பொருள்: என்னை நான் அறியவில்லை, என்னை நான் அறிந்து கொண்டேன் என்று ஒருவன் கூறிக்கொள்வது பரிகாசத்திற்கு உரிய செயலாகும். ஏனெனில் தன்னையே தனக்கு அறியப்படும் பொருளாக ஆக்குவதற்கு தான் என்ற உணர்வுகள் இரண்டா இருக்கின்றன? இருப்பது ஆன்மா ஒன்றே என்று தனையறிந்த ஞானிகள் அனைவரின் அனுபவ உண்மையாக இருப்பதால் ஆன்மா ஒன்றே.

என்னடா இது? தன்னை அறிந்து கொள்ளவில்லை என்றால், அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார். இப்போது என்னை அறிந்த கொண்ட பின் இப்படிச் சொல்கிறாரே; முன்னுக்குப் பின் முரணாக அல்லவோ இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். சிறிது யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது புரியும். என்னை நான் அறிந்து கொண்டேன் என்று ஒருவன் சொல்வான் என்றால், அப்படி அவன் சொல்வது அவனது புத்தி அளவிலேதான். ஏனென்றால், ரமணர் ஏற்கனவே சொல்லியபடி “தான்” என்று உணர்ந்தபின் தான் தானாக இருக்க வேண்டுமே அல்லாது, “இது நான்” அது அல்ல” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது சரியில்லை. அதுபோல், “நானே ஆத்மா” என்று தியானிப்பதும் சரியில்லை. இதெல்லாம் ஆரம்ப காலப் பயிற்சியாளர்களுக்கு பொருந்தலாம், தனது என்றும் உள்ள நிலையை உணர்ந்தவனுக்கல்ல. அது போலவே, தான் யார் என்று கருதவோ, தியானிப்பதோ சரியில்லை என்றால் தன்னை உணர்ந்துவிட்டோம் என்ற கருத்து மட்டும் எப்படி சரியாக இருக்கும்?

ramana_arunachala

மேலும் தான் தன்னை உணர்ந்துவிட்டோம் என்றால், தான் என்பது ஒரு அறியப்படு பொருளாகி இன்னுமொரு தான் அறியும் பொருளாகிறது. ஆனால், அங்கு இரண்டு “தான்”களா இருக்கின்றன? இருப்பது ஒன்றே என்று அறிந்தோர் எல்லோரும் கூறுவதால், ஒருவன் தன்னை அறிந்தேன் என்று சொல்ல இயலாது. அறிந்தவர் எவரும் தன்னிலேயே மூழ்கி இருப்பரே அன்றி, வேறு எதுவும் சொல்ல முடியாது. உண்மையில் தனக்கு அன்னியமாக வேறு எதுவும் தெரியவும் தெரியாது.

“அப்போது என்னை நான் அறியவில்லை, இப்போது அறிந்துகொண்டேன் என்று சொல்லலாமா” என்ற கேள்வி போலவே ஒருவர் ரமணரிடம் கேட்ட நிகழ்ச்சி ஒன்றை இங்கு நினைவு கொள்ளல், பலருக்கும் உதவியாக இருக்கும். இது நம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் முன் நடந்த நிகழ்ச்சி.

ஒரு முறை வார்தா ஆஸ்ரமத்தில் சற்று அமைதியின்று இருந்த (பின்னாள் ஜனாதிபதி ஆகப்போகும்) திரு. ராஜேந்திர பிரசாத் அவர்களை மகாத்மா காந்தி அமைதி தேட வேண்டி ரமணாஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்தாராம். அவருடன் திரு. ஜமன்லால் பஜாஜ் அவர்களும் (பின்னாள் பஜாஜ் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவிய குடும்பத்தவர்தான்) சென்றிருக்கிறார். மூன்று நாட்களாக ரமணர் அருகில் ஏதும் பேசாது மௌனமாய் ராஜேந்திர பிரசாத் உட்கார்ந்திருந்தாராம். அவர்கள் ஆஸ்ரமத்திலிருந்து புறப்படும் முன் ரமணரிடம் ஏதும் கேட்க வேண்டுமா என்று ஆச்ரமத்தினர் கேட்க, பஜாஜ் அவர்கள் “சுதந்திரம் கிடைத்தபின் இந்தியர்களாகிய நாம் அதைக் கொண்டாடலாம் அல்லவா?” என்று கேட்டாராம். அதற்கு ரமணரோ “அது எப்படி சாத்தியம்? சுதந்திரம் கிடைக்க பாடுபட்டோர் எல்லோரும், ஒரு பொது நன்மைக்காக நான்-எனது என்றவைகளை உண்மையாகவே தியாகம் செய்திருந்தால், சுதந்திரம் கிடைக்கும் போது கொண்டாட யார் இருப்பார்கள்? கொண்டாடுபவன் எவன்? தன்னையே தியாகத்தில் இழந்து விடும் போது கொண்டாடுவதற்கு எது மிஞ்சி இருக்கும்?” என்று கேட்டாராம்.

இதே நிலைதான் அகந்தையை இழந்து தன்னை அடைபவன் நிலையும். “என்னை அறிந்தேன்” என்று சொல்வதற்கு அங்கு இன்னொன்று ஏதேனும் இருக்கிறதா? ஆகவே, ஆன்மாவை அறிய வேண்டும் எனச் சொல்வது ஒரு உபதேசக் கிரமமே அன்றி பரமார்த்த உண்மையைப் பற்றியதல்ல.

(தொடரும்…)

2 Replies to “அறியும் அறிவே அறிவு – 7”

  1. திரு ராமன் அவர்களே,

    மிக அற்புதமான விளக்கங்கள்.

    ///தனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே “அது நீ” போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். ///

    இதனை உணராததால்தானே அத்தனை வாதப் பிரதிவாதங்களும் வருகின்றன! உள்முகமாக நோக்குவதுதானே ஆன்ம சொரூபத்தை உணர இருக்கும் ஒரே வழி!! உள்ளிருக்கும் உட்பொருளை உணரத்தானே எல்லா பகீரதத்ப் பிரயத்தனமும் செய்கிறோம்.

    ///மேலும் தான் தன்னை உணர்ந்துவிட்டோம் என்றால், தான் என்பது ஒரு அறியப்படு பொருளாகி இன்னுமொரு தான் அறியும் பொருளாகிறது. ஆனால், அங்கு இரண்டு “தான்”களா இருக்கின்றன? இருப்பது ஒன்றே என்று அறிந்தோர் எல்லோரும் கூறுவதால், ஒருவன் தன்னை அறிந்தேன் என்று சொல்ல இயலாது. அறிந்தவர் எவரும் தன்னிலேயே மூழ்கி இருப்பரே அன்றி, வேறு எதுவும் சொல்ல முடியாது. ///

    பகவானை மக்கள் பாதாள லிங்கத்தின் அருகில் கண்டுபிடிக்கும் முன்னர் பல ஆண்டுகள் இப்படித்தான் தன்னை முற்றிலும் உணர்ந்த நிலையில் தன்னிலேயே மூழ்கி இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

  2. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *