அறியும் அறிவே அறிவு – 8

அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7

(தொடர்ச்சி…)

என்றும் எவர்க்கும் இயல்பாயுள பொருளை
ஒன்றும் உளத்துள் உணர்ந்து நிலை – நின்றிடாது
உண்டு, இன்று, உரு, அரு, என்று ஒன்று, இரண்டு, அன்று, என்றே
சண்டையிடல் மாயைச் சழக்கு

பொருள்: எப்போதும் சகல ஜீவர்களுக்கும் இயல்பாக இருக்கும் உண்மைப் பொருளை அந்தர்முகமாக உள்ளே ஒடுங்குகின்ற மனத்தால், இதயத்தினுள் அனுபவத்தால் அறிந்து, தானும் அதன் மயமாக நிலை பெற்று நின்றுவிடாமல், அப்பரம்பொருள் உண்டு என்றோ, இல்லை என்றோ, அது உருவமுடையது என்றோ, இல்லை அருவமானது என்றோ, அது ஒன்றே என்றோ, இல்லை இரண்டே என்றோ, அது ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றிவ்வாறெல்லாம் வாதம் புரிந்து சண்டையிடுவது மாயையாகிய அறியாமையின் மயக்கமே ஆகும்.

இதற்கு விளக்கமாக கனகம்மாள் உரையிலிருந்து ஒரு பகுதியை அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.

Srimathi Kanakammal ..தன்மை உணர்வில் விளங்கும் ஆத்ம சொரூபமானது இப்படி அப்படி என்று எண்ணுவதற்கு எட்டாமல் நின்று ஒளிர்கிறது. வேத உபநிடதங்களே அந்தப் பொருளைப் பற்றிச் சொல்லும்போது மனவாக்குக்கு எட்டாததென்று கூறி நின்று விடுகின்றன. எப்போதும் தனது சொரூபமாகவே இருக்கும் ஆத்மாவை அறியாதவனே அஞ்ஞானி. அவன்தான் ஆத்மாவைப் பற்றி தர்க்கமும் வாதமும் புரிந்து சண்டையிட்டுக் கொள்கிறான்.

மதங்கள் பல விதம். ஆத்மா உண்டென்கிறது ஆஸ்திகம், இல்லை என்கிறது நாஸ்திகம். உருவம் உண்டு என்கிறது சகுண உபாசனா மார்க்கம், நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். இங்கு அத்துவிதமென்றது மதத்தின் அடிப்படையில் அல்ல. அனுபவ உண்மையே சொல்லப்பட்டது. அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே. இத்தனை மதபேதங்களையும் பகவான் ஒரே வரியில் அடக்கி விடுகிறார்.

எந்த மதமானாலும் அதன் கொள்கைகளை முக்கியமாகக் கொண்டு, அதில் கூறப்பட்ட சாதனத்தை முக்கியமாகக் கொண்டு, வாதங்களை விட்டு சாதனையில் ஈடுபட்டு, முடிவான அத்வைத நிலையை அடையலாம் என்பதுதான் பகவானின் உபதேசம். மதத்தின் மீதுள்ள பற்றே முக்திக்குத் தடையாகும். ஏனென்றால் அது ஒரு வாசனை. தேக வாசனை, லோக வாசனை, சாஸ்திர வாசனை என்று மூன்று விதமாகக் கூறப்படுகிறது. மூன்றிற்கும் அடித்தளமாக உள்ளது அகங்காரம் தான்.

இதில் சாஸ்திர வாசனைதான் மிகவும் வலிமையானது. இதுதான் தர்கத்திற்கும், வாதத்திற்கும் தயங்காமல் நிற்கிறது. இதெல்லாம் அறியாமையின் மயக்கமே என்று விளக்குகிறார்.

சாதகத்திலே துவிதம் சாத்தியத்தில் அத்துவிதம்
ஓதுகின்ற வாதம் அது உண்மையல – ஆதரவாய்த்
தான் தேடும் காலும் தனை அடைந்த காலத்தும்
தான் தசமன் அன்றி யார் தான்?

பொருள்: ஞான அப்யாச காலத்தில் ஈசன், ஜீவன் என்று இரண்டு பொருட்கள் உள்ளன, சாதனை முடிந்து ஆன்ம சித்தியைப் பெற்ற அனுபவ காலத்தில் ஒன்றே உள்ளது என்று சொல்லப்படுகின்ற வாதமாகிய அதுவும் சத்தியம் அல்ல. அக்கறையுடன் தான் தன்னைத் தேடிய காலத்திலும், தன்னை அறிந்து அடைந்த காலத்திலும் தான் காணாமற் போனதாக நினைத்துத் தேடிய பத்தாவது ஆள் தான் அன்றி வேறு யார்?

சீடனைப் பொறுத்தவரை அவனது அப்யாச காலத்தில் பார்ப்பது எல்லாம் உண்மையாகத் தோன்றுவதால், சீவன் என்று தன்னையும் தான் அறிய வேண்டிய ஈசன் என்று இறைவனையும் இரண்டாகப் பார்க்கிறான். அது “வியாவகாரிக உண்மை”. அதாவது உலகியல் சம்பந்தப்பட்டது. உலகம் தெரியும்வரை இருப்பதாகத் தோன்றும் உண்மை. இது கயிற்றில் தெரியும் பாம்பு போல உள்ள உண்மை.

அவன் ஆன்ம சித்தி பெற்றதும் இறைவன்தான் தன்னுள் உள்ளான் என்று உணரும்போது எல்லாம் ஒன்றே என்றும் அறிகிறான். இது “பரமார்த்திக உண்மை”. அதாவது எப்போதும் நிலைத்துள்ள உண்மை. இது கயிறுதான் இருக்கிறது என்பதான உண்மை.

ஆக முன்பு இரண்டாக உள்ளது, இப்போது ஒன்றாக உள்ளது என்று சொல்லுகிற வாதம் உண்மை அல்ல. இவை எல்லாம் வெவ்வேறு பார்வைகளைப் பொறுத்துச் சொல்லப்படுகின்றன. இருப்பது எப்போதும் ஒன்றுதான்; முன்பு அந்த உண்மையை அறியவில்லை, இப்போது அறிந்துள்ளான் என்பதுதான் வித்தியாசம்.

இதை விளக்கும் முகமாக ரமணர் பல பேருக்குத் தெரிந்துள்ள கதை ஒன்றைச் சொல்லுகிறார். பத்து நபர்கள் வெள்ளம் நிறைந்த ஆறு ஒன்றைக் கடக்கின்றனர். கடந்தபின் எவரேனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாது எல்லோரும் பத்திரமாகக் கரை சேர்ந்துவிட்டார்களா எனப் பார்க்க ஒவ்வொருவரையும் பார்த்து ஒன்று, இரண்டு,… என்று எண்ணினார்கள். எத்தனை முறை எத்தனை பேர் எண்ணினாலும், மொத்தத் தொகை ஒன்பது என்றே வந்ததால் அவர்கள் துக்கம் தாங்காமல் ஒருவர் ஆற்றோடு போய்விட்டாரே என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.

அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒரு வழிப் போக்கன் அவர்களை என்ன ஆயிற்று என்று விசாரிக்க, அவர்களும் தங்களுக்கு நேர்ந்ததைச் சொல்ல, அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏனென்றால் அங்கு பத்து பேர்கள் இருப்பதை அவன் அறிவான். உடனே அவன் அவர்களை ஒவ்வொரு பேராகச் சொல்லச் சொல்லி வரிசையில் நிறுத்தி வைத்து எண்களையும் கூட்டிக் கொண்டு வர, கடைசியில் அந்த பத்து பேரும் அங்கு இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அது வரை, தன்னை விட்டு விட்டு மற்றவர்களை மட்டும் எண்ணிக் கொண்டிருந்த தங்கள் தவறை அவர்கள் உணர்ந்தனர்.

அது போலவே, நாம் நமது இருப்பை விட்டு விட்டு மற்றதை மட்டுமே கவனிக்கும் நமது போக்கை சரி செய்யவேண்டும் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. மேலும், இந்தப் பத்தாமவன் எங்கிருந்து வந்தான்? புதிதாக எங்கிருந்தும் வரவில்லை. தான்தான் அந்த பத்தாமவன் என்ற அறிவுதான் முன்பு இல்லாமலிருந்தது. இப்போது அந்த அறிவு வந்துள்ளது என்பதே இதன் சாரம்.

தான் தானாக இருத்தலே நலம் என்பது புரிகிறது. புரியாதபோது நான் பந்தப்பட்டவன் தானே, புரிந்து கொண்டபின் தானே முக்தி அடைந்துள்ளேன் என்று சீடன் கூறலாம் அல்லவா? அதற்கு ரமணர் என்ன சொல்லிப் புரிய வைக்கிறார் பார்க்கலாம்.

பத்தன் நான் என்னுமட்டே பந்த முத்தி சிந்தனைகள்
பத்தன் யார் என்று தன்னைப் பார்க்குங்கால் – சித்தமாய்
நித்த முக்தன் தான் நிற்க நிற்காதேல் பந்த சிந்தை
முத்தி சிந்தை முன் நிற்குமோ?

பொருள்: நான் பந்தப்பட்டிருப்பவன் என்ற எண்ணம் உள்ள வரை மட்டுமே பந்தத்தைப் பற்றியும், பந்தத்திலிருந்து விடுபடும் முக்தியைப் பற்றியும் சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருக்கும். பந்தப்பட்டவனாகிய “நான் யார், பந்தம் யாருக்கு?” என்று விசாரித்து உள்முக நோக்கால் தன்னை நாடி அறியும் போது (ஆத்ம சாட்சாத்காரம் அடையும் போது) நித்திய முக்தனாகிய ஆத்மா அபரோட்சமாய் பிரகாசித்துக் கொண்டு நிற்கும்போது நான் பந்தமுடையவன் என்ற எண்ணம் தோன்ற இடமில்லையென்றால், முக்தி அடைந்தேன் என்ற எண்ணம் மட்டும் தன் முன்னால் வந்து நின்றிடுமோ?

ரமணர் போன்ற ஜீவன் முக்தர்கள் பார்வையில் எவருமே பந்தப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள் என்று கிடையாது. எல்லோருமே, எந்த சீவ ராசிகளுமே ஆன்ம சொரூபம் தான். எங்கு பந்தம் என்ற ஒன்று இல்லையோ, அங்கு முக்தி என்ற பேச்சுக்கும் இடமில்லைதானே? அதைத்தான் இங்கு அவர் சொல்கிறார். இது விவேகமும் வைராக்கியமும் கொண்டு தனது உள்ள நிலையான ஆத்ம சொரூபத்தை உணருவதற்கு எவன் தீவிர முயற்சி செய்து, அதில் ஓரளவேனும் வெற்றி காணும் நிலையில் உள்ளானோ அவனுக்கே இந்த உபதேசம் என்று கொள்ளவேண்டும். மற்றவர்கள் தங்களது அப்பியாசத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த நிலையை அடைந்த பின்பே, இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்தின் ஆழத்தை உணர முடியும்.

நீ கட்டுபட்டிருந்தால் தானே, கட்டை விடுவிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என்பது சரிதானே. ராம ராஜ்ஜியத்தில் எவருக்குமே உண்மை என்றால் என்னவென்று தெரியாது என்று சொல்வார்களே, அதற்கு எவருமே உண்மை பேசியதில்லை என்பதா பொருள்? பொய் என்ற எண்ணமே எவருக்கும் இல்லாதபோது, உண்மை என்றால் எப்படித் தெரியும் என்றுதானே கொள்ளவேண்டும். அப்படித்தான் இங்கும், நாம் அனைவருமே ஆன்ம சொரூபம், ஆன்மாவுக்கு பந்தம் என்ற ஒன்று இல்லாததால் அதற்கு விடுதலை என்ற ஒன்றும் கிடையாது என்பதுதான் பொருள். அந்த நிலையை எடுப்பவர்கள், தான் ஆன்ம சொரூபம் என்று சொல்லிக் கொள்பவர்கள் அல்ல, தான் ஆன்ம சொரூபமாகவே இருப்பவர்கள். அவர்களுக்குத்தான் இங்கு சொல்லப்பட்டிருப்பது பொருந்தும்.

நான் எனும் எண்ணமும், அதனைத் தொடர்ந்த “நான் பந்தப்பட்டுள்ளேன்” அல்லது “எனக்கு ஆன்ம உணர்வு வேண்டும்” என்ற எண்ணங்கள் எல்லாமே அகந்தையின் எழுச்சியால்தான் என்று சொல்லப்பட்டுள்ளதால் பந்தம் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுதான் முக்தி என்பதன் உண்மையும். ஒன்று தோன்றும் போது மற்றொன்றும் தோன்றும். ஆகவே அவைகளின் மூலமாம் அகந்தை அழியும் போது இவை எல்லாமே அழியும். இவை யாவும் யாருக்கு என்று பார்ப்பதே சாதகனின் தவம் என்று கொள்ளவும். இறுதியில் தான் எனும் தனது உண்மை நிலையில் நிற்பது அன்றி வேறு எதுவும் தவம் ஆகாது என்றும் தெரிய வரும்.

“உள்ளது நாற்பது” தொகுப்பில் நாற்பதாவது செய்யுளில் அவர் உறுதியாகக் கூறுவது:

உருவம் அருவம் உருவருவம் மூன்றாம்
உறுமுத்தி என்னில் உரைப்பன் – உருவம்
அருவம் உருவருவம் ஆயும் அகந்தை
உருவழிதல் முக்தி உணர்

பொருள்: முக்தியானது உருவமுள்ளதென்றும், உருவமற்றதென்றும், இரண்டு விதமாகவும் உள்ளதால் மூன்று விதமாக முக்தியானது அடையக் கூடியதாகும் என்று ஒருவன் சொல்வானாகில், அதன் உண்மை எதுவென்று நான் கூறுகிறேன். உருவமுள்ளதா, உருவமற்றதா, அல்லது இரண்டு விதமாகவும் உள்ளதா என்று ஆராய்ந்து அறியும் அகந்தையின் உருவம் அழியும் நிலை எதுவோ, அதுவே உண்மையான முக்தி என்று உணர்வாயாக.

“கண்டவர் விண்டதில்லை” என்றார் போல் தன்னுள் ஆழ்ந்து தன் ஆன்ம முத்தை அடைந்தவர்கள் தன்னிலே இன்புற்று தனியனாய் இருந்தாலும், தன்னை நாடி வரும் சீரிய சீடர்களுக்கு போதனை அளிப்பார்கள். ஓரளவுக்கு வழி காட்டிவிட்டு மேலும் “அது நீ” என்ற அந்த ஆன்மானுபவத்தை உணர்ந்தே தெரிந்து கொள்ள முடியும் எனச் சொல்லி சீடரின் முயற்சிக்கு விட்டுவிடுவார்கள். ஏனென்றால் மேலும் என்ன சொன்னாலும் அது சீடனின் புத்திக்குத் தீனி போடுவது போல இருக்குமே தவிர எவ்விதத்திலும் அவனது அனுபவத்துக்கு உதவியாக இருக்காது என்பதால் வழிகாட்டுதல் என்பது ஓரளவுவரை தான் இருக்கும்.

அதேபோல் “விண்டவர் கண்டதில்லை” என்றவாறு, இவை அனைத்தையும் சாத்திரங்கள் மூலம் கற்றவர்கள் அவை சொன்னபடி முக்தி எனப்படுவது முக்தி இச்சை உள்ளவனின் மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு நான்கு வகையாகும் என்பர். அவை முறையே சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், மற்றும் சாயுஜ்யம் எனப்படும். சாலோக்ய முக்தியாவது ஒருவன் தான் எந்த தெய்வத்தைப் பூசிக்கிறானோ அந்த தெய்வலோகத்தின் பிரஜையாகத் தானும் வாசம் செய்வது. அந்த உலகத்தில் இறைவனை விட்டுத் தூர இல்லாமல் அவர் அருகிலேயே இருந்து சேவை செய்வது சாமீப்ய முக்தி ஆகும். இறைவனிடம் கொண்டுள்ள பக்திப் பெருக்கினால் இறைவனது உருவம் போலவே தானும் வடிவத்தைப் பெறுவது சாரூப்ய முக்தியாகும். தான் பெற்ற அந்த இறை வடிவத்தை அந்த நாமரூபத்தில் கலந்து தானும் அந்த நாமரூபமாகவே ஆவது சாயுஜ்ய முக்தி ஆகும். இவை நான்குமே வெவ்வேறு படிகள் எனக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தாலும் இறுதியான சாயுஜ்ய முக்தி ஒன்றே உண்மையாகும், மற்றவையல்ல என்பதே “எவர்க்கும் உள்ள இயல்பு நிலை” என்ற அனுபவத்திற்கும் ஒத்துப் போகும்.

இதே போன்று சிலர் முக்தி எனப்படுவது மூன்று வகையாகும் என்று சொல்வர். அதன்படி முக்தியானது உருவத்துடன் கூடியது, அருவமாயுள்ளது, உருவம்-அருவம் இரண்டும் கலந்ததாயுள்ளது என்பார்கள். இந்த வகையான வாதங்களில் எல்லாம் சீடன் மாட்டிக்கொண்டு “உள்ள நிலை” பற்றி கலக்கம் ஏதும் அடையக்கூடாது என்பதால் ரமணர் இந்தச் செய்யுளில் தீர்மானமாகக் கூறுகிறார். சிலர் கூறுவது போல ஆன்மானுபவம் என்பது உருவத்துடனா, உருவமில்லாததா, அல்லது உரு-அரு இரண்டும் கலந்ததா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் நமது அகங்காரத்தின் அழிவே முக்தி நிலை என்று தெளிவாகக் கூறுகிறார். இதனை ஒரு சீரிய சீடன் மனதினில் பதித்துக் கொள்வது மிக அவசியம்.

எங்கு ஒன்று புதியதாகத் தோன்றுகிறதோ, அங்கேயே அதை விட்டுவிட்டு மேற்கொண்டு செல்வது என்பது ஆன்ம நாட்டத்தில் ஒரு முக்கிய கட்டம். ஏனென்றால் ஒன்று தோன்றுகிறது என்றால், அதற்கு அழிவு என்ற நிலையும் உண்டு. ஆனால் நாம் அனுபவத்தில் காண விழைவதோ “என்றும் உள்ள நிலை”. அதனால் இருவிதத் தன்மை கொண்ட எதுவும் ஆன்மா ஆக முடியாது என்பதில் சீடன் உறுதியாக இருத்தல் அவசியம். இவ்வகையான குழப்பங்களுக்கு ஆதாரமாக உள்ள ஒருவனின் அகந்தை ஏதேனும் புதிது புதிதாக அளித்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் அகந்தை ஓர் பேய், அது தன்னை அழித்துக் கொள்ளாது, வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டே இருக்கும். முதலில் தூல வடிவிலும், பின்பு சூக்ஷும வடிவிலும் வரும். அதி சூக்ஷும வடிவே “ஆஹா, நான் எவ்வளவு பணிந்து போய்க் கொண்டிருக்கிறேன், ஆனாலும் நமக்கு அருள் கிடைக்கவில்லையே” என்னும் தன்னிரக்கமே. ஒவ்வொரு நிலையிலும் நாம் எதிர்ப்படும் இந்த வகையான அகந்தையின் உருவங்களைக் களைந்து கொண்டே போவதில்தான் ஒருவனின் விவேகமும், வைராக்கியமும் இருக்கின்றன.

ramana_40இத்துடன் “உள்ளது நாற்பது” நூலில் உள்ள செய்யுட்களில் சிலவற்றைப் பார்த்தோம். இனி அதன் அனுபந்தத்தில் உள்ள நாற்பத்தொரு செய்யுட்களில் சிலவற்றைப் பார்ப்போம். அனுபந்தத்தில் உள்ள பல செய்யுட்களை ரமணர் வெவ்வேறு மூலத்திலிருந்து எடுத்து மொழி மாற்றம் செய்து நமக்கு அளித்துள்ளார். சில செய்யுட்களை அவரே புனைந்தும் கொடுத்துள்ளார். இத்தொடரின் ஆரம்பத்தில் நாம் தற்செயலாக எடுத்துக் கொண்ட முதல் செய்யுளே அனுபந்தப் பகுதியில் இருந்து வந்தது என்று முன்பே கூறியிருந்தேன். அது ஆதி சங்கரர் சம்ஸ்கிருதத்தில் இயற்றிய “ஏகஸ்லோகி” என்ற ஸ்லோகத்தின் தமிழ் ஆக்கமே. “அது நீ” என்ற மகா வாக்கியத்தின் உண்மையை உணரும் வரை நாம் அதை பற்றிப் படித்தோ, எழுதியோ, சிந்தித்தோ ஏதோ ஒரு வகையில் மனனம் செய்து கொண்டிருந்தால் அதுவே நம்மை மேலே கொண்டு செல்லும் என ஒரு முடிவுடன் நமது பணியைத் தொடர்வோம்.

(தொடரும்…)

9 Replies to “அறியும் அறிவே அறிவு – 8”

  1. திரு ராமன் அவர்களே

    சிறந்த கட்டுரைத் தொடர். எளிய நடையில் நன்கு விளங்கும் வண்ணம் உள்ளது. மிக்க நன்றி.

    அகம்பாவத்தை விடவேண்டியத்தின் அவசியம் எத்தனை மட்டு என்றால், அதை விடாவிட்டால் முக்தி என்பதே இல்லை என்றல்லவா பகவான் கூறுகிறார். வாதத்தின் அடிப்படையே அறியாமை என்பதை எத்தனை தெளிவாகக் கூறுகிறார். கனகம்மாள் அவர்களின் விளக்கமும் வெகு அருமை. நடைமுறையில் நடப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார்.

  2. முருகப்பெருமான் செய்தருளிய சூரசம்ஹாரத்தில் இம்மும்மல அழிவை காட்டுவார்கள். சூரனின் தம்பியரான தாரகனையும் சிங்கமுகனையும் மாயாமமலத்திற்கும் கன்மம் என்ற வினைக்கும் ஒப்பிட்டு இறுதியாக அழிந்தவனான சூரனை ஆணவத்திற்கு ஒப்பிடுவர்.

    மதிப்பிற்குரிய உமாசங்கர் அவர்கள் குறிப்பிடுவது போல ஆவணத்தின் அழிவிலேயே முக்தி என்பதை சைவ சித்தாந்தமும் இதன் மூலம் விள்க்குகிறது. ஆனால் அறியாமை அகன்று கன்ம வினைகளும் ஓரளவு தீர்ந்த பின்னரே ஆணவம் என்பது அழியும் என்பர். ஆணவம் மூல மலம். என்றும் மகாமலம் என்றும் பேசப்படுகிறது.

    சூரசம்ஹாரத்தில் ஞானமாகிய இறைவனின் வெற்றி வேல் எழுந்து இரண்டாக ஆணவத்தை அறுத்த போதும் அது மீள பறவைகளாக மாறி போராடியது. பெருமான் வாகனமாக கொண்டு சரணாகதி கொடுத்த பின்னரே முக்தி என்ற பேரானந்த பெருவாழ்வு கிடைத்தது.

    ஆக, இறைவனின் திருவருள் நோக்கின்றி ஆணவத்தை அறுக்க இயலா என்பதே சைவசித்தாந்திகளின் கருத்து. ஸ்ரீ ரமண பகவான் கருத்தும் அவ்வாறே இருக்கும் என்றே நம்புகிறன்.

  3. திரு ராமன் அவர்களே

    ஆசாகிய ஆழமான கருத்துக்கள் அதை ரமணர் வெளிப்படுத்தி உள்ள விதம் அதை விட அழகு அதை நீங்கள் விளக்கி உள்ள விதமும் அற்புதம்

    //
    அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே. இத்தனை மதபேதங்களையும் பகவான் ஒரே வரியில் அடக்கி விடுகிறார்
    //

    அத்வைத நிலையில் அனுபவம் என்று ஒன்று உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது –
    ப்ரிஹதாரண்யா உபநிஷத்தில் ஸ்வயம் ஜ்யோதி ப்ராஹ்மனத்தில் “ந தம் பச்யதி கஸ்சன” – none sees him
    “ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் – எவமேவ வாயம் புருஷ:” – in that state does not know anything at all

    அத்ர பிதா அபிதா பவதி … வேத ஆவேத தேவ அதேவ – in that state a father is no father, gods no gods, veda is no veda

    தன் ந பச்யதி .. – it does not see anything in that state for only it exists

    இப்படி அடுக்ககாக வருகிறது

    எனக்கு அடைதம் முழுதும் புரிந்துவிடவில்லை என்பது உண்மையே – எனினும் இந்த வாக்யங்களுக்கு நான் அறிந்து கொண்ட அர்த்தம் அத்வைத நிலையில் வேறு ஒன்றும் இல்லாமையால் அனுபவிப்பதற்கு ஏதும் இல்லை அதலால் அனுபவமும் இல்லை என்பதே

  4. // நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். //

    மன்னிக்கவும், த்வைதம் விஷிஷ்டாத்வைதம் குறித்து இது மிகத் தவறான புரிதல். தேவையில்லாத சர்ச்சைக்குரிய விமர்சனம். இதை நூலாசிரியர் திருமதி கனகம்மாள் தவிர்த்திருக்கலாம்.

  5. திரு கந்தர்வன் அவர்களே

    திருமதி கனகம்மாள் இறையடி சேர்ந்துவிட்டார். காண்க:
    https://living.oneindia.in/yoga-spirituality/spiritual-experiences/2010/t-r-kanakammal-ramana-maharshi-jayanti-160710.html

    தவிர, அதே பத்தியின் கடைசி வரி கூறுவது “இத்தனை மதபேதங்களையும் பகவான் ஒரே வரியில் அடக்கி விடுகிறார்.” கனகம்மாள் அவர்களும் இந்தக் கருத்து வேற்றுமையைத் தான் சுட்டுகின்றார்.

    தவறான புரிதல்களுக்குக் காரணமாக அவரே “மதத்தின் மீதுள்ள பற்றே முக்திக்குத் தடையாகும். ஏனென்றால் அது ஒரு வாசனை. தேக வாசனை, லோக வாசனை, சாஸ்திர வாசனை என்று மூன்று விதமாகக் கூறப்படுகிறது. மூன்றிற்கும் அடித்தளமாக உள்ளது அகங்காரம் தான். இதில் சாஸ்திர வாசனைதான் மிகவும் வலிமையானது. இதுதான் தர்கத்திற்கும், வாதத்திற்கும் தயங்காமல் நிற்கிறது. இதெல்லாம் அறியாமையின் மயக்கமே என்று விளக்குகிறார்.” … என்று கூறுவதைக் காண்க.

  6. திரு சாரங் அவர்களே

    கட்டுரை ஆசிரியரின் முந்தைய கட்டுரையில் (அறியும் அறிவே அறிவு – 7 ) கீழுள்ள பகுதி வருகிறது.

    ///மேலும் தான் தன்னை உணர்ந்துவிட்டோம் என்றால், தான் என்பது ஒரு அறியப்படு பொருளாகி இன்னுமொரு தான் அறியும் பொருளாகிறது. ஆனால், அங்கு இரண்டு “தான்”களா இருக்கின்றன? இருப்பது ஒன்றே என்று அறிந்தோர் எல்லோரும் கூறுவதால், ஒருவன் தன்னை அறிந்தேன் என்று சொல்ல இயலாது. அறிந்தவர் எவரும் தன்னிலேயே மூழ்கி இருப்பரே அன்றி, வேறு எதுவும் சொல்ல முடியாது. உண்மையில் தனக்கு அன்னியமாக வேறு எதுவும் தெரியவும் தெரியாது.///

    தாங்கள் கூறும் கருத்தும் அதுவே.

    கனகம்மாள் அவர்கள் தாங்கள் சுட்டும் வரிக்கு அடுத்த வரியில் “இத்தனை மதபேதங்களையும் பகவான் ஒரே வரியில் அடக்கி விடுகிறார்.” என்று கூறுவதால் அவர் எல்லாவிதப் புரிதல்களையும் அடுக்கவே அவ்வாறு கூறுகிறார் என்றே கொள்ளவேண்டும்.

  7. திரு. சாரங், திரு. கந்தர்வன் அவர்களே,
    திரு. உமாசங்கர் அவர்களின் புரிதல் சரியாக உள்ளது.

    தன்னிலே தானாய் நின்று ஆனந்தமயமாய் இருப்பதுதான் அனுபவம். “அனுபவம்” என்று சொல்லி விட்டாலே அதற்கப்புறம் அதைப் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அதை அனுபவித்துப் பார்த்தபின் பேசுவதற்கு ஏதேனும் இருந்தால் பேசலாம். ஆன்றோர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறேனே தவிர எனக்கும் அனுபவம் வர வேண்டியே நிற்கின்றேன். இப்போதைக்கு இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை.

    அதே பதில்தான் வெவ்வேறு மதங்கள் பற்றிய வாதத்திற்கும் சொல்ல முடியும். எவருக்கு எது உகந்ததோ அதை முறையாகப் பயின்று அனுபவ நிலைக்கு வர வேண்டும்.

  8. மாறுபட்ட கருத்துக்களும், மாறுபட்ட சிந்தனைகளும் வரவேற்கப்படவேண்டும். யூனிட்டி இன் டைவர்சிட்டி அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் படைப்பின் ரஹசியம். ஒரு மனிதனின் உணவு வேறொரு மனிதனுக்கு விஷமாக அமைகிறது. சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்த நோயாளி இவர்களுக்கு சாதாரணமாக நாம் உட்கொள்ளும் சர்க்கரையும், உப்புமே உடல் பாதிப்புகளை உருவாக்குகிறது.

    அறிவியல் என்று சிலரால் சொல்லப்படுகிற விஞ்ஞானம் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை. விஞ்ஞானிகளின் பழைய பல தியரிகள் தற்போது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு தக்க மாறுதல்கள் செய்யப்படுகின்றன. அணு ஆராய்ச்சிகள் செய்து எலக்ட்ரான் ,புரோட்டான், நியூட்ரான், பாசிட்றான் என்று கதை போகிறது. ஆனால் வெற்றிடம் என்று சொல்லப்படும் ஆகாசத்தில் தான் இவ்வளவு நட்சத்திரங்களும், கிரகங்களும், வாயு மண்டலம்களும் உள்ளன. ஆனால் இந்த வெற்றிடம் என்ன என்று விஞ்ஞானிகள் சொல்லும் வரையறை, எவ்வித காரனமுமில்லாத தெளிவில்லாத வரையறை ஆகும். மனிதன் தன் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் எல்லா அளவு கருவிகளும் பல எல்லைகளுக்கு உட்பட்டவையே. எனவே அறிவியல் என்றுமே நூறு சதவீத வெற்றி பெறமுடியாது.

    ஆன்மிகத்திலும் மிக ஜாக்கிரதையாக கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லி முடித்து விட்டனர். ஏதோ ஒரு இடத்தை ஏதோ ஒரு பெயரால் சொல்லி அங்கு கடவுள் இருக்கிறார் என்று சொல்வது தவறல்ல. கடவுள் அங்கு மட்டும் தான் இருக்கிறார் என்று சொல்வது அயோக்கியத்தனம். அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத்வைதம் என்ற பெயர்களில் உலவிவரும் தத்துவங்கள் எல்லாமே , அறிவியலை போலவே, இவைகளும் எந்தக்காலத்திலும் நூறு சதவீத வெற்றி பெறாது. ஏனெனில் மனிதன் சொல்லும் இந்த தத்துவங்கள் எதுவுமே குருடனுக்கும், செவிடனுக்கும், ஊமைக்கும் புரியாது. எனவே அவர்களுக்கு இறைஅருள் கிடைக்காதா?

    எனவே இறைச்சக்திக்கு இது ஒன்றே பெயர், இது ஒன்றே உருவம், இது ஒன்றே புனித நூல், இது ஒன்றே மொழி, இது ஒன்றே வழிபாட்டுமுறை, இவ்வாறெல்லாம் சொல்லி , வேலி கட்டுபவர்கள் ,தங்களுக்கு தாங்களே தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்பவர்கள் ஆவார்கள். நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில் பிற வழிபாட்டு முறைகளில் குரோதம் காட்டுபவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பதே.

    இந்த தத்துவ வாதிகள் கண்டிருந்தால் விண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் விண்டிருப்பதால், காணவில்லை என்பதே சரி. கடவுளை விவரிக்க வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. யானை நாமத்துக்காக கோர்ட்டு படியேறி அசிங்கம் செய்த அழுக்குகள் நம் நாட்டில் தான் இருந்தனர். தீவிர வைணவம், தீவிர சைவம் என்ற அழுக்குகளை நாம் ஒதுக்கி தள்ளுவோம். பொன்னியின் செல்வன் கதையில் அமரர் கல்கி எழுதிய ஆழ்வார்க்கடியான் மற்றும் அவனுக்கு எதிராக ஒரு தீவிர சைவர் கதாபாத்திரங்கள் இப்போது நினைத்தாலும் நமக்கு சிரிப்பூட்டுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசிங்கங்களுக்கு இடமில்லை.

  9. திரு பிரதாப் அவர்களே

    ///ஏதோ ஒரு இடத்தை ஏதோ ஒரு பெயரால் சொல்லி அங்கு கடவுள் இருக்கிறார் என்று சொல்வது தவறல்ல. கடவுள் அங்கு மட்டும் தான் இருக்கிறார் என்று சொல்வது அயோக்கியத்தனம். அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத்வைதம் என்ற பெயர்களில் உலவிவரும் தத்துவங்கள் எல்லாமே , அறிவியலை போலவே, இவைகளும் எந்தக்காலத்திலும் நூறு சதவீத வெற்றி பெறாது. ஏனெனில் மனிதன் சொல்லும் இந்த தத்துவங்கள் எதுவுமே குருடனுக்கும், செவிடனுக்கும், ஊமைக்கும் புரியாது. எனவே அவர்களுக்கு இறைஅருள் கிடைக்காதா?///

    முழுக்க முழுக்க சரி. காலம் என்பது மிகச்சிறந்த சமன்படுத்தி. எத்தனை விதமான அனுமானங்களையும் காலச்சக்கரம் சுழன்று அடித்துப் போடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இதன் பலனாகத்தான் இன்று பண்டைய நூல்கள் பலவற்றுக்கும் வேறுபட்ட சித்தாந்தங்களைப் பலர் விளக்கமாகக் கூறுகின்றனர். இவையும் காலப் போக்கில் மாற்றி எழுதப்படும். அவரவர் விருப்பப் படித்தான் இறை மூர்த்தியை உருவகப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதே சரியாக இருக்கும்.

    குருடன், முடவன் என்று இல்லை, எல்லா உயிர்க்கும், உயிரிலிக்கும் இறை அருள் உண்டு என்பதே உண்மை. இறைச்சக்தியைப் பொருத்தமட்டில் எந்தவிதப் பாகுபாடும் வேறுபாடும் இருக்க முடியாதல்லவா?

    ///எனவே இறைச்சக்திக்கு இது ஒன்றே பெயர், இது ஒன்றே உருவம், இது ஒன்றே புனித நூல், இது ஒன்றே மொழி, இது ஒன்றே வழிபாட்டுமுறை, இவ்வாறெல்லாம் சொல்லி , வேலி கட்டுபவர்கள் ,தங்களுக்கு தாங்களே தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்பவர்கள் ஆவார்கள். நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில் பிற வழிபாட்டு முறைகளில் குரோதம் காட்டுபவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பதே.///

    பெயர், உருவம், புனித நூல், மொழி, வழிபாட்டு முறை அனைத்தும் பொதுவாக மக்களை நெறிப்படுத்தப் பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டவையே அல்லாமல் வேறில்லை என்பதை இன்றைக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட காலச்சக்கரம் சுழலும்போது வழிக்கு வந்துதான் ஆவார்கள். காலப் பிரமாணத்தின் அடிப்படையும் இதுவே. காலப் பிரமாணத்தின் பரிமாணத்தை உணராதவர்கள்தாம், வேறு தூண்களைச் சார்ந்து நிற்பார்கள். காலப் பிரமாணம் என்ன, அதன் தாக்கம் என்ன, அதன் சத்திய நிலை என்ன என்பன குறித்து எத்தனையோ உள்ளன.

    ///இந்த தத்துவ வாதிகள் கண்டிருந்தால் விண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் விண்டிருப்பதால், காணவில்லை என்பதே சரி. கடவுளை விவரிக்க வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.///

    மேலெழுந்தவாரியாக இது அவதூறாகப் படலாம். ஆழ யோசித்தால் இதிலுள்ள உண்மை புரியும். இது நாத்திகவாதிகளின் வாதமாகவும் படலாம். இதை எல்லாம் உள்ளடக்கித்தான் பகவான் ரமணர் …….

    “உண்டு, இன்று, உரு, அரு, என்று ஒன்று, இரண்டு, அன்று, என்றே
    சண்டையிடல் மாயைச் சழக்கு” ….

    என்கிறார். இறைவன் உண்டு, இறைவன் இல்லை, அவருக்கு உருவம் இதுதான், உருவம் இல்லை, என்றெல்லாம் வாதிப்பவர்களையும், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் தத்துவ வாதம் செய்வோரையும் ஒரே தட்டில் வைக்கிறார்.

    பகவானின் வழக்கில் அவர் என்றுமே எந்த உயிரையும் பாகுபடுத்தவில்லை. மனிதன், மிருகம், பறவை, சிற்றுயிர் என்றெல்லாம் பாகுபடுத்தவில்லை. உலகில் வேறெங்கும் இல்லாதவண்ணம், அவருடனிருந்த பசு மட்டுமல்ல, மான், மயில், நாய், கிளி, காக்கை என்று எல்லாத் தரப்பட்ட உயிர்களுக்கும் மனிதனுக்குக் காட்டும் அதே அன்பைக் காட்டி அவற்றுள்ளும் இருக்கும் பரமனைக் கண்டவர் அவர். இன்றும் அவற்றுக்கும் கூட சமாதி அமைந்து தினசரி ஆராதனை நடக்கிறது. அவரது அருகாமையை அடைய ஓர் உயிர் மனிதனாகக் கூடப் பிறந்திருக்கவேண்டாம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். குரங்கும், அணிலும் கூட அவரது அணுக்கத்தை அனுபவித்தன. அவர் தனது போதனைகளை, மதம், சாதி, மொழி, நாடு, தேசம் கடந்து வந்த அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கினார்.

    இந்த வலைப்பக்கங்களைப் பாருங்கள். அழகான புகைப்படங்களுடன் உள்ளன.

    https://ramanabiography.blogspot.com/2008/09/145-cow-lakshmi.ஹ்த்ம்ல்
    https://ramanabiography.blogspot.com/2008/09/144-squirrels-and-sparrows.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *