எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

palm-leaf-manuscript

விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் இவற்றின் கட்டுக்கடங்காத வளர்ச்சியால் நேர எல்லையும், தேச எல்லைகளும் தற்போது நமக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்றாலும் உலக அளவில் இன்றுவரை இலக்கியமே அப்பணியைச் செய்துவந்ததாக நிறுவ இடமுள்ளது. பிராந்தியம், காலம், மொழி, இனம் முதலான வேறுபாடுகளை அகற்றி, பல்வேறு இனக்குழுக்களிடையே நெருக்கத்தை, புரிதலை வளர்ப்பதில் இலக்கியம் உறுதுணையாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது.

“வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு
*தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,”

என்று இத்தொன்மை வாய்ந்த நிலப்பரப்பின் எல்லைகள் வடநாடு, தென்னாடு என்னும் பாகுபாடுகளுக்கு இடமில்லாமல் முன்பே தமிழரால் அறுதி செய்யப்பட்டு, சான்றோரால் ஏற்கப்பட்டுவிட்டன.

*தொடுகடல்– ஸகர மன்னரின் புதல்வர்களால் கடல் தோண்டப்பட்டது எனும் இதிஹாஸச் செய்தியை உணர்த்துவதே இச்சொல்லை அங்கு இட்டதற்கான நோக்கம்.

புறநானூறு பொற்கோட்டிமையத்தையும் பொதிகையையும் சேர்த்தே பேசுகிறது.
தமிழகம் புராண, இதிஹாஸச் செய்திகளுக்கு இடம்தராத, வடபுலத்தின் தொடர்பற்ற தனித் தீவு என்னும் பெரும்பாலானோரிடம் நிலைகொண்டிருக்கும் தவறான சிந்தனைக்குத் தொல் இலக்கியங்களில் சற்றும் ஆதாரம் இல்லை. இராமாயண, மஹாபாரத நிகழ்வுகள், பல சங்க நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன.

புறநானூறு 201-ஆம் பாடலின்

”நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே!”

வரிகள் வேளிரின் வடபுலத் தொடர்பைப் புலப்படுத்துவன.

 
“பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை”

எனும் அகநானூற்று வரிகள் மோரியர் படையெடுப்பைக் குறிக்கிறது.
தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.

 
முருகப் பெருமான் வேலெறிந்து கிரவுஞ்ச கிரியைப் பிளந்த வரலாற்றைக் கூறும் பரிபாடல் ’க்ரெளஞ்சம்’ என்பது அன்றிற் பறவையினைக் குறிக்குமாதலால் கிரவுஞ்ச மலையைப் பறவையின் பெயர் பெற்ற மலை, ‘புள்ளொடு பெயரிய பொருப்பு’ எனத் தமிழ்ப்படுத்தியுள்ளது.

 
thiruvalluvar3வெகுளாமையை வலியுறுத்தும் வள்ளுவர், சினத்துக்கு இணையான தீமை பயக்கும் நெருப்பை ’சேர்ந்தாரைக் கொல்லி’ என்னும் பதத்தால் சுட்டுவார்; ‘ஆச்ரயாச’ (आश्रयाश:) வடமொழி ஸமாஸம் நெருப்பைக் குறிப்பது. வள்ளுவர் அச்சொல்லை உரிய இடத்தில் மொழிமாற்றம் செய்து உருவகமாக்குவதற்குத் தயங்கவில்லை. அந்த இடத்திற்கு இதைக் காட்டிலும் பொருத்தமான சிறந்ததொரு சொற்பயன்பாடு இருக்க முடியுமா?

பொருட் செறிவும், சுருக்கமான நடையும் கொண்ட திருக்குறளின் மொழிபெயர்ப்பை 37 மொழிகளில் இப்போது இணையத்தில் காண முடிகிறது – [சுட்டி]

சிலம்பு, ஈழம் உள்ளிட்ட தென்னக நாடுகளையும் தமிழகத்தின் பெரு நகரங்களையும் இணைத்துப் பேசுகிறது. பல சமயங்களின் கோட்பாடுகளையும், அந்நாளில் நிலவிய வழிபாட்டு முறைகளையும், திணை மரபுகளையும் இனம் சார்ந்த ஒழுக்கங்களையும் சிலம்பு தெரிவிக்கிறது. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்.

சமண நூலான சீவக சிந்தாமணி சாம வேதம் பற்றிய குறிப்பைத் தருகிறது –

”மாமகத் தெறியலான் மணிமிடற்றிடை கிடந்த
சாமகீதமற்றுமொன்று சாமி நன்கு பாடினான்”

இந்திய நிலப்பரப்பை ‘ஆஸேது ஹிமாசலம்..’ என்று குறிப்பதே இந்திய வழக்கம்; மறைகளில் ‘த்ராவிட’ எனும் பதமே காணப்படவில்லை. வேத இலக்கியங்களில் பயிர் பச்சைகள் செழிக்க வேண்டும் எனும் பிரார்த்தனைகளோடு, மாந்தருக்கும் விலங்குகளுக்குமான பொதுவான பிரார்த்தனைகளையும் காண்கிறோம்– சம் நோ அஸ்து த்³விபதே³| சம் சதுஷ்பதே³|

இளவரசி இந்துமதியின் சுயம்வர மண்டபத்தில் முத்து வடங்களை அணிந்து கம்பீரமாக வீற்றிருந்த பாண்டிய மன்னனின் எடுப்பான தோற்றத்தை காளிதாஸ மஹாகவி ரகுவம்சத்தில் புகழ்ந்துள்ளார். தென்னகத்தின் எழிலையும் அகத்தியர் வாழும் பொதிகையின் வளத்தையும் பாண்டியர்களின் கபாடத்தையும் வால்மீகி ராமாயணம் சிறப்பித்துக் கூறும். சீனத்துப்பட்டின் சிறப்பைக் கூறும் வடமொழி நூல்கள் உள்ளன.

பவுத்தர்களின் போதனா மொழி பாலியாயினும் தொன்மை வாய்ந்த நூலான ’புத்த சரிதம்’ வடமொழியில் அமைந்துள்ளது. இதை இயற்றிய அச்வகோஷர் வடமொழியில் அணிகளை விவரிக்கும் நூல் ஒன்றையும் அளித்துள்ளார். வடமொழி நிகண்டு ‘அமரகோசம்’ ஒரு பவுத்தரால் தொகுக்கப்பட்டது.

 
vedantadesikarபாகத மொழிகளே சமணர்களின் முக்கிய மொழிகள் என்றாலும் சாகடாயநர் போன்ற வடமொழியில் இலக்கணப் புலமை பெற்ற சமண அறிஞர்களும் இருந்துள்ளனர். சாகடாயநர் வடமொழிச் சொற்கள் அனைத்துமே வினை வேர்களிலிருந்து பிறந்தவை என உறுதிபடச் சொன்னவராவார். யாஸ்கரும், பாணிநியும் சாகடாயந நிர்வாகத்தைக் குறிப்பிடுகின்றனர். காலத்தால் இவர்களுக்கு மிகவும் பிற்பட்டவரான ஸ்வாமி தேசிகனும் (14-15 நூற்றாண்டு) சாகடாயநரது ஒரு கருத்தை வைணவ நூல் ஒன்றில் (ரஹஸ்யத்ரய ஸாரம்) சான்றாக எடுத்துள்ளார்.

பாஸனும், காளிதாஸனும் தம் சங்கத மொழிக் காப்பியங்களின் இடையே பாகத உரையாடல்களையும் இணைத்துள்ளனர். பாகத மொழியில் அமைந்த ‘காதா ஸப்தசதி’ விக்ரமாதித்ய மன்னர் காளிதாஸரை ஆதரித்ததைப் பதிவு செய்கிறது.

ஸ்வாமி தேசிகன் திருவாய்மொழிக் கருத்துகளை ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி’ போன்ற நூல்களில் தெரிவித்துள்ளார். கடுமையான மத மரபுகளின் பிடியிலிருந்த 16-ஆம் நூற்றாண்டின் இறுகிய சூழலிலும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் வைணவரான வேதாந்த தேசிகரின் நூல் ஒன்றிற்கு உரை எழுதினார். ‘பாவா: ஸந்தி பதே பதே கவிதார்கிக ஸிம்ஹஸ்ய காவ்யேஷு லலிதேஷு அபி’ என இவர் தேசிகரை மனமாரப் பாராட்டுகிறார்.

காழிப்பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்ற செய்தியை ஸௌந்தர்ய லஹரியும், கண்ணப்ப நாயனாரின் நிகரற்ற பக்தியை சிவாநந்த லஹரியும் போற்றுகின்றன. பெரிய புராணத்தின் வடமொழி வடிவம் “உபமந்யு பக்த விலாஸம்”.

சிறந்த இலக்கண அறிஞரான பட்டோஜீ அப்பைய தீக்ஷிதருக்குச் சீடரானதும் ஒரு வியப்பே. அவர் ஒரு மராட்டியர். பிற்காலத்தில் தோன்றிய மராட்டியரான பாஸ்கரராயர் அப்பைய தீக்ஷிதரின் நூல்களைப் புகழ்ந்துள்ளார்.

வடமொழியிலமைந்த ‘பாண்ட்ய குலோதயம்’ தென்காசிப் பாண்டியர்களின் வரலாற்றைக் கூறுவதாகும்.

மலையாள இலக்கண நூலான ‘லீலா திலகம்’ விக்ரம பாண்டியன் (15-ஆம் நூற்றாண்டு) தென் கேரளத்தில் முகமதியர் செய்த கலகத்தை அடக்கிய செய்தியைத் தெரிவிக்கிறது.
பண்டரீபுரத்தில் ஒரு தையல்காரரின் மகனாக அவதரித்த நாமதேவர் ஹிந்தியிலும் அபங்களைப் படைத்தார்; பஞ்ஜாப் பிராந்தியத்தில் 20 ஆண்டுகளுக்குமேல் வசித்த இவர் செய்த 125 ஹிந்தி அபங்கங்களுள் 61 பாக்கள் சீக்கியரின் க்ரந்த ஸாஹிபில் சேர்க்கப்பட்டுள்ளன; “ஸந்த் நாம்தேவ் கீ முகவாணி” என அவர்கள் இத்தொகுப்பைப் போற்றி வருகின்றனர்.
 

பகவான் வாஸுதேவனுக்கென அமைந்த பாகவத மஹாபுராணத்தின் பெரும்புகழ் கிறித்தவர்களையும் ஒரு புராணம் படைக்க வைத்தது; பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர் 1600 ச்லோகங்களில், 33 ஸர்கம் கொண்டதாக, கிறிஸ்து பாகவதத்தை எழுதினார்.

வில்லிபுத்தூரார் சொத்துரிமை விஷயமாக உடன்பிறந்தவரோடு மனத்தாங்கல் கொண்டிருந்தார்; மகாபாரதம் தமிழ் செய்யும் வாய்ப்பு நேரவே அக்காவியத்தை முடித்தபின் பங்காளிச் சண்டையின் தீமையை உணர்ந்து கொண்டு மன வேற்றுமையை அகற்றினார் என்பது புலவர் புராணம் கூறும் செய்தி. வீர வைணவரான பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நிகரற்ற தமிழ்ப்புலமையை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் புலவர் புராணத்தில் மனக்கரவின்றிப் பாராட்டியுள்ள செய்தி குறிப்பிடத்தக்கது.

uvesa1மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கற்பிப்பதிலும், கவி புனைவதிலும் நிகரற்ற திறமை வாய்ந்தவர். இறுதிக்காலத்தில் மகாவித்துவான் அவர்கள் கிறித்தவரான சவேரிநாதரின் மார்பில் சாய்ந்த வண்ணம், உ.வே.சா பாடிய திருவாசகத்தின் அடைக்கலப் பத்தைச் செவிமடுத்த வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

ஒரு சாராரின் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சமண நூலான சீவக சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் உ.வே.சா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமணக் கோட்பாடுகளை உரியவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்; இரண்டாம் பதிப்பிலும் நுட்பமான குறிப்புகள் சேர்த்தார் (எ.கா)- ’கள்ளரால் புலியை வேறு காணிய’ தொடர்.

உ.வே.சா பவுத்த நூலான மணிமேகலையையும் அரும்பத உரையுடன் பதிப்பித்தார். நூலின் விளக்கமாக உ.வே.சா அவர்கள் எழுதிய குறிப்புரையில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன. பிற உரையாசிரியர்களின் கருத்துகளும் சான்றாகத் தரப்பட்டன. எத்தகைய கடின உழைப்பு!

தமிழ்த் தாத்தாவின் பரந்த உள்ளம் அவருக்குச் சமணரிடமிருந்து ‘பவ்ய ஜீவன்’ எனவும், பவுத்த ஆதரவாளர் ஒருவரிடமிருந்து, ’பவுத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ எனவும் பட்டங்கள் கிடைக்கக் காரணமானது.

மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் முதல் மாணாக்கர் தியாகராசச் செட்டியார்; கடை மாணாக்கர் உ.வே.சா அவர்கள். உ.வே.சா கல்லூரிப்பணியில் நுழையக் காரணமானவர் தியாகராசர் அவர்கள். தணிகைமணி சு.செங்கல்வராய பிள்ளை அவர்களின் கரங்களைத் தமிழ்த்தாத்தா கண்ணில் ஒற்றிக் கொண்டதையும், அவரது கால்களைத் தணிகைமணியார் பற்றிக் கொண்டதையும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய வைணவ ஆசாரியரான மணவாள மாமுனிகள் வடமொழியில் நூல் யாதொன்றையும் செய்யாமல் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு உரை தொகுப்பதிலேயே கவனம் செலுத்தினார் என்பது பக்தி இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான செய்தி. புகழ்பெற்ற ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதத்தை இயற்றியவர் இவர்தம் சீடரான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.

sri_chaitanya_devaஜகன்னாத புரியிலிருந்து தலயாத்திரையாகத் தென்னகம் வந்த ஸ்ரீ சைதந்ய மஹாப்ரபு இங்கிருந்து திரும்புகையில் ப்ரம்ம ஸம்ஹிதை, க்ருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய நூல்களைத் தம்முடன் எடுத்துச் சென்றார். வழிபாட்டுக்கான சடங்குகள் நிறைந்த பாஞ்சராத்ர நூலான ப்ரம்ம ஸம்ஹிதை தூய பக்திக்கும் இடமளித்துப் பேசுகிறது. இறைவனைக் கண்டவர் யார் எனும் கேள்விக்கு விடையாக பக்தி எனும் அகக்கண்ணில் அன்பு எனும் அஞ்சனமிட்டுக்கொண்ட அடியார்கள் கண்ணபிரானை இடையறாமல் தரிசித்து மகிழ்கின்றனர் என்று உறுதிபடக் கூறுகிறது ப்ரம்ம ஸம்ஹிதை–

ப்ரேமாஞ்ஜநச்சு²ரித ப⁴க்தி விலோசநேந
ஸந்த: ஸதை³வ ஹ்ரு’த³யேஷு விலோகயந்தி |

மஹாப்ரபுவுக்கு இந்த அரிய நூலை வழங்கியது மாங்குடி மருதனாரால் ‘வளநீர் வாட்டாறு’ என்று புகழப்பட்ட திருவாட்டாறு திருத்தலமாகும். குலசேகரரின் முகுந்த மாலை மஹாப்ரபுவின் காலத்திற்குப்பின் வடபுலத்தில் பரவிப் புகழ்பெற்றது. கௌடிய வைணவர்கள் இந்நூல்களை இன்றும் பாராயணம் செய்து மகிழ்கின்றனர்.

அச்சுப் பதிப்பு முறையே தோன்றாத ஒருகாலத்தில் ஜயதேவரின் கீதகோவிந்தம் கேரளம் நெடுகிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் பாடப்பெற்று வந்தது ஓர் அதிசய நிகழ்வு. நாலாயிரம் தவிர வேறு எதுவும் நுழைய முடியாத திருவரங்கத்தில் அழகிய மணவாளன் ரதோத்ஸவம் கண்டருளும் வேளையில் தவறாமல் கீதகோவிந்தம் இசைக்கப்படுவதும் வியப்பைத் தரும் செய்தி.
 

எழுத்தச்சனின் இராமாயணம் உருவாவதற்குமுன் முன்பு கேரளத்தில் புழங்கிய ”இராம சரிதம்” (சீராம கவி) ஒரு தூய தமிழ்ச் செவ்விலக்கியப் படைப்பாகும். இராம சரிதம் பன்னிரு சீர், கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்தது.

16-ஆம் நூற்றாண்டு கேரளத்தின் அமைதியற்ற காலம் எனலாம். திருவிதாங்கோடு, கொச்சி, வயநாடு பகுதிகளை ஆண்டவர்களிடையே ஒற்றுமை இல்லை. வணிக நோக்கில் வந்த மேற்கத்தியரை இங்கு நிலவிய சூழல் மிக எளிதாக மேலாண்மை செய்யவும் அனுமதித்தது. அவர்கள் இங்கிருந்த செல்வ வளங்களைச் சுரண்டியதோடு தம் மதத்தையும் பரப்பினர். ஒருபுறம் அச்சுறுத்தும் தாந்திரீக வழிபாடுகளும் பரவி வந்தன. இக்கால கட்டத்தில் துஞ்சத்து எழுத்தச்சன் எழுதிய இராமாயணம் தூய பக்தியைப் பரப்பியது.

ramayanஏறத்தாழ இதே காலகட்டத்தில் வடபுலத்தில் தோன்றிய கோஸ்வாமி துளஸி தாஸர் வடமொழியைத் தவிர்த்துவிட்டு மக்களின் மொழியில் இராமாயணத்தை எழுதினார். மொகலாயரின் கடுமையான அடக்கு முறையையும் மீறி, கோஸ்வாமியின் மாநஸம் பல தரப்பட்ட மக்களிடையே மிகவும் குறுகிய காலத்தில் ராம பக்தியை ஓர் இயக்கமாகவே வளர்த்தது. அதன் வீச்சு நம்மை வியக்க வைக்கிறது.

கிருஷ்ண தேவராயரின் ”ஆமுக்த மால்யத” நாச்சியார் தவிர வேறு சில வைணவ அடியார்களையும் தெலுகு பேசும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

கிறித்தவ மதபோதகர்கள் மதம் பரப்பும் நோக்கில் இந்திய மொழிகளைக் கற்றாலும் அம்மொழிகளின் இலக்கிய வளத்தால் ஈர்க்கப்பட்டதும், மொழிகளின் வளர்ச்சிக்கு உதவியதும் மறுக்க முடியாத உண்மை. ஒரு காலத்தில் சமணர்கள் செய்ததை இவர்கள் செய்தனர் எனலாம்.

மதம் பரப்புவதற்காக பாரதம் வந்த காமில் புல்கே என்ற பெல்ஜியப் பாதிரியார் ஸ்ரீ ராமசரித மாநஸத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதை முழுமையாகக் கற்றார். ‘மாநஸ கௌமுதி’ என்னும் தொகுப்பை அளித்துள்ளார். இவர் கிறித்தவ இலக்கியங்களையும், துளஸிதாஸரின் விநய பத்ரிகாவையும் ஒப்பாய்வு செய்தவர். ”இராம காதை – தோற்றமும், வளர்ச்சியும்” (ஹிந்தி) திறனாய்வால் அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் D.Phil பட்டம் பெற்ற இவரது மொழிப்புலமை ‘பத்மபூஷண்’ விருது பெறக்காரணமானது. இவர் ஹிந்தி அகராதி ஒன்றையும் தொகுத்துள்ளார்.

pechnikov-as-rama

தெற்காசியாவில் இராமகாதையைப் பேசாத மொழிகள் இல்லை எனலாம்; இசை, நாடக, நாட்டிய வடிவங்களில் அது மக்களோடு ஒன்றியதாகி விட்டது. ரஷ்ய மேடைகளில் பாரத, ராமாயணங்கள் அரங்கேறியுள்ளன; பெஷ்னிகோவ் என்ற ரஷ்ய நடிகர் இராமபிரானாக நடித்துள்ளார். இவரது நடிப்பு நேருஜியின் பாராட்டைப் பெற்றது. சென்ற ஆண்டு நடைபெற்ற தங்க விழாவில் இந்த நடிகர் பாராட்டுப் பெற்றார்.

ஜஸ்டிஸ் இஸ்மெயில் ஸாஹபின் கம்பராமாயணப் பித்து உலகறிந்த ஒன்று. இவர் சென்னைக் கம்பன் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் எழுதிய வாலிவதம் குறித்த ‘மூன்று வினாக்கள்’ நூல் காஞ்சிப் பெரியவரின் பாராட்டைப் பெற்றது; ‘அடைக்கலம்’ சரணாகதி நெறியை மையமாகக் கொண்டது.

பேரா.வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது களவியற் காரிகையில் அகப்பொருள் துறைகளை விளக்குகையில் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதில் எட்டுச் செய்யுள்கள் ’பல்சந்த மாலை’ என்னும் இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை.

’இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே’

எனும் செய்யுளின் மூன்றாம் அடியான ‘அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்’ பல்சந்த மாலை இஸ்லாமியச் சார்புள்ளது என்பதை உணர்த்துகிறது. (களவியற் காரிகை பதிப்பில் இல்லை)

செய்யது முகம்மது அண்ணாவியார் ”சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்”, “மகாபாரத அம்மானை” ஆகியவற்றை ஆக்கியுள்ளார்.

எட்டயபுரத்தில் உமறுப்புலவரை அவைப் புலவராகச் செய்து சிறப்பளித்தவர் வைணவரான மன்னர் எட்டப்ப பூபதி. உமறுப்புலவர் ‘கிடந்தொளி பரப்பி…’ என்று தொடங்கி இரு சீர்களுக்குப்பின் மேலே பாடத்தோன்றாமல் சற்று மயங்கியபோது, அவர்தம் மகனார் அடுத்த தொடரைப் பாடினாராம். இந்நிகழ்வைப் பதிவு செய்துள்ளது தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம்.

மாக்ஸ் முல்லர் ஜெர்மானியர்; பாரிஸில் வடமொழி பயின்றார். ரிக் வேதத்தை அச்சேற்றியவர். Sacred Books of the East – ஐம்பது பெரிய தொகுப்புக்கள் இவரது மேற்பார்வையில் உருவானவை.

இந்திய வேதாந்த நூல்கள் Gerald Heard, Aldous Huxley and Christopher Isherwood போன்ற மேற்கத்திய அறிஞர்களையும் கவர்ந்துள்ளன. Jack Hawley எழுதிய The Bhagavad Gita: A walkthrough for westerners சிறந்ததொரு முயற்சி.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமெயின் ரோலண்ட் இந்தியாவின்பால் ஈர்க்கப்படக் காரணமானவை ஸ்வாமி விவேகாநந்தரின் நூல்கள் எனலாம். வெள்ளையரின் அடக்குமுறையை வெறுத்த இவர் மேற்கத்திய உலகில் காந்திஜீயின் விடுதலை இயக்கம் குறித்த ஒரு புரிதல் ஏற்படக் காரணமானார்.

இங்கிலாந்தின் செல்வவளமிக்க குடியில் பிறந்த மாதரசி மடலின் ஸ்லேட் பாரதம் வந்து காந்தியாரின் அன்பைப் பெற்று ’மீரா பென்’ ஆனதும் ரோலண்ட் அவர்களின் எழுத்தாலன்றோ! மீரா பென் விடுதலைப் போரில் சிறை சென்றவர். பின்னர் ரிஷிகேசத்தில் பசுக்களைப் பாராமரித்து வந்தார். இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருதளித்தபோது ஆஸ்த்ரியாவில் இருந்த இவரால் முதுமை காரணமாக நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை.

பெர்ல் எஸ் பக்கின் எழுத்து மூங்கில் திரையில் மறைந்திருந்த சீனத்தை வெளியுலகுக்கு அறிமுகம் செய்தது; பல்வேறு இடர்களையும் எதிர்கொண்டு சீனத்தில் வாழ்ந்தவர் நோபல் பரிசு பெற்ற திருமதி பக்.

rabindranath-tagoreகீதாஞ்சலியின் பொருளாழம் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியரல்லாத ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமானது. ரவீந்திரரின் கீதாஞ்சலியை பக்தி இலக்கியத்தின் எச்சமாகக் கருதலாம், குணம் குறியற்ற ஒரு தத்துவத்தை ஆசிரியர் இதில் மையப்படுத்தியிருந்த போதிலும்.

கவியரசர் ரவீந்திரர் எழுதி இசையமைத்த இரு வங்கமொழிக் கவிதைகளே பாரதம், பங்களாதேஷ் இரண்டுக்கும் தேசிய கீதமாக அமைந்தன. ஆங்கிலேய அரசின் வங்கப் பிரிவினை முயற்சியின்போது கவியரசர் மனம் வெதும்பி எழுதிய, ‘ஆமாரா ஷோநார் பாங்க்ளா ….’ என்று தொடங்கும் பாடலின் முதல் பத்து வரிகள் சுமார் 60 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களா தேஷின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.

மேலைநாட்டுக் கவிஞர்கள் பாரதியாரையும் கவர்ந்துள்ளனர்; இளமையில் அவர் ’ஷெல்லி தாசன்’ என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி அவர்கள், பெல்ஜியக் கவிஞரான ’எமில் வெர் ரேன்’ உள்ளிட்ட ஏழு மேனாட்டுக் கவிஞர்கள் பாரதியை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறுவார். பாரதியார் தமிழை மிகவும் போற்றினாலும் வேத இலக்கியங்களிலும், சமகால அறிஞர்களான ரவீந்திர நாதர், அரவிந்தர் போன்றோரின் படைப்புகளிலும் முழுஆர்வம் காட்டியவர்.

பாரதம் துண்டாடப்படுவதைக் கடுமையாக எதிர்த்த ஸ்ரீநிவாச சாஸ்த்ரி அவர்கள் 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.

ஸ்விஸ் நாடகாசிரியரான Friedrich Dürrenmatt எழுதிய ‘Die Panne’ (Traps) எனும் சிறுகதையின் உட்கரு மராத்திய நாடகாசிரியரான விஜய் தெண்டுல்கரின் திறமையால் மெருகூட்டப்பெற்று சிறந்த நாடகப் படைப்பாக மேடையேறியது; அது பின்னர் பதினாறு மொழிகளில் மொழிபெயர்ப்பானது. ஸத்யதேவ் துபே அதற்கு ஆங்கில வடிவம் தந்தார். BBC ஒளிபரப்பியதால் உலகப்புகழ் பெற்றது.
 

பயண இலக்கியம்

பவுத்த நூலான ‘ஆதிதர்ம கோசம்’ சீனத்திலும் பயிற்றுவிக்கப் பட்டது. பவுத்த நூல்கள் பிற ஆசிய நாடுகளை, பாரதத்தின்பால் ஈர்த்தன.

சீனாவில் வாழ்ந்த பவுத்தத் துறவியான பாகியான் (Faxian) ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புத்தரின் விநய பிடகத்தைத் தேடியவராக பாரதம் வந்தார். இவர் ஈழம் வரை பயணம் செய்ததாகத் தெரிகிறது.

xuan-zangசீனத்தின் புகழ்பெற்ற தொல் இலக்கியமான ‘மேல் திசைப் பயணம்’ உருவாகக் காரணம் யுவான் சுவாங் (Xuan zang) எழுதிய பயண நூல்களே. இவர் சீனாவிலிருக்கும்போதே வடமொழி கற்றுத் தேர்ந்தார். இந்தியாவின் பவுத்தத் தலங்களை தரிசித்த இவர் குஷான, பல்லவ அரசவைகளில் மிகவும் கவுரவிக்கப் பட்டவர்.

இபின் பதூதாவின் அராபிய மொழியில் அமைந்த ‘ரிஹ்லா’ (பயணம்) பல நாடுகளிலும் சுமார் 75,000 மைல்கள் சுற்றி அலைந்த இவரது அனுபவத்தைக் கூறும் நூலாகும்.

கங்காதேவி எழுதிய 14-ஆம் நூற்றாண்டின் ‘மதுரா விஜயம்’– படையெடுப்பை ஒட்டி அமைந்ததாயினும் பயண விவரங்களையும் தென்னக ஆலயங்களின் அவல நிலையையும் உள்ளபடி கூறும் இதை ஒரு பயண இலக்கியமாகவே கருத இடமுள்ளது.

நாமதேவரின் ’தீர்த்தாவளி’, ஞானேசுவரருடன் அவர் செய்த தலயாத்திரை விவரங்களைக் கூறுகிறது.

தாய்மொழி வேறாயினும் பிறமொழிகளில் புலமைபெற்று ஆய்வு செய்வோரும் இலக்கியம் படைப்போரும் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர்.

பன்மொழிப் பெரும் புலவரான ராஹுல ஸாங்க்ருத்யாயன் பாலி மொழியில் அமைந்த மஜ்ஜிம நிகாயத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்தார். மறுபரிசீலனைக்குரிய வகையில் இவர் சில கருத்துகளைக் கூறியுள்ள போதிலும், 150-க்கும் மேற்பட்ட இவர்தம் படைப்புகள் தனித்தன்மை மிக்கவை.

காவடிச்சிந்து பாடிப் புகழடைந்த அண்ணாமலை ரெட்டியாரின் தாய்மொழி தெலுகு; பாண்டிதுரைத் தேவராலும் காவடிச்சிந்து பாடும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை. ரெட்டியார் சிந்து தவிர வேறு சில பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார். தெலுகு, ஸௌராஷ்ட்ர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோரும் சிறந்த தமிழ்ப் படைப்புகளை அளித்துள்ளனர்.

மலையாள இலக்கிய வரலாற்றை எழுதியவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட உள்ளூர் பரமேசுவர ஐயர். இவரது ‘உமா கேரளம்’ மிகச் சிறந்த வரலாற்றிலக்கியம். இவர்தம் புலமை மலையாள உரைநடைக்கும் கவிதைக்கும் வளம் சேர்த்தது. இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது.

பிற மொழிகளைத் தாய் மொழியாகக்கொண்ட பலரும் கன்னட இலக்கிய வளத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

தமிழ்ப்பேசும் வைணவக்குடியில் பிறந்த மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் கன்னட மொழியில் ஞானபீட விருது பெற்ற எழுவருள் ஒருவர்; ‘மாஸ்தி கன்னடத ஆஸ்தி’ (மாஸ்தி கன்னடத்தின் சொத்து) என்று அவரைப் புகழ்வர். இவரைப்போலவே ஞானபீட விருது பெற்ற D.R.பெந்த்ரே ஒரு மராட்டியர். கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் கன்னடத்தில் எழுதி அம்மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றனர்.

டாக்டர் சுநீதிகுமார் சட்டர் ஜீ, ஜகன்னாத ராஜா, ஸ்ரீராம தேசிகன் போன்றோரின் மொழிப்புலமை இங்கு குறிப்பிடத் தக்கது.

 

ஹைகூ

700 ஆண்டு பழமை வாய்ந்த ஜப்பானிய ஹைகூ கவிதை வடிவம் இன்று உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளதில் வியப்பில்லை; இன்றைய அவசர யுகத்தில் மக்களுக்குப் பத்தி பத்தியாகக் கவிதை புனைய நேரம் கிடைக்காததும் இதற்கு ஒரு காரணமாகலாம். பல கவிதைகள் ஹைகூ இலக்கணத்துக்குப் பொருந்தாதவை எனும் கருத்து ஒருபுறமிருக்க, ஆண்டு தோறும் உலக அளவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருப்பது உண்மை. இந்தியாவின் முதல் ஹைகூ கழகம் புனே நகரில் தொடங்கப் பட்டது. இந்த ஆண்டு இத்தாலியின் அஸிஸியில் அக்டோபர் மாதம் உலக ஹைகூ விழா நடைபெற உள்ளது. Haiku journal ஹைகூ ஆர்வலர்களை இணைக்கும் பணியைச் செய்கிறது

இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதை உலக வரலாற்றில் நாம் தொடர்ந்து காண முடிகிறது.

19 Replies to “எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்”

 1. அருமையான தகவல் களஞ்சியம் !

  //மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கற்பிப்பதிலும், கவி புனைவதிலும் நிகரற்ற திறமை வாய்ந்தவர். இறுதிக்காலத்தில் மகாவித்துவான் அவர்கள் கிறித்தவரான சவேரிநாதரின் மார்பில் சாய்ந்த வண்ணம், உ.வே.சா பாடிய திருவாசகத்தின் அடைக்கலப் பத்தைச் செவிமடுத்த வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.// என்னே பக்குவம்…….மனதை நெகிழச் செய்கிறது. அருமை ……

 2. காழிப்பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்ற செய்தியை ஸௌந்தர்ய லஹரியும், கண்ணப்ப நாயனாரின் நிகரற்ற பக்தியை சிவாநந்த லஹரியும் போற்றுகின்றன…

  சங்கரர் காலம் காழிப்பிள்ளையாருக்குப் பின்னரா?? சந்தேகம்!

  பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர் 1600 ச்லோகங்களில், 33 ஸர்கம் கொண்டதாக, கிறிஸ்து பாகவதத்தை எழுதினார்//

  இது புதிய செய்தி.

  வில்லிபுத்தூரார் சொத்துரிமை விஷயமாக உடன்பிறந்தவரோடு மனத்தாங்கல் கொண்டிருந்தார்; மகாபாரதம் தமிழ் செய்யும் வாய்ப்பு நேரவே அக்காவியத்தை முடித்தபின் பங்காளிச் சண்டையின் தீமையை உணர்ந்து கொண்டு மன வேற்றுமையை அகற்றினார் என்பது புலவர் புராணம் கூறும்//

  இதுவும் தெரியாது. கட்டுரையை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். மீண்டும் வருகிறேன். நன்றி.

 3. நமஸ்தே தேவ் ஜி. மிக அருமையாகத் தொகுக்கப்பட்ட இந்தக் கட்டுரையைப் பலமுறை படித்து மகிழ்ந்தேன். நன்றி.

 4. ‘த்ரவிட சிசு’ வேறு யாராக இருக்க முடியும் ?

  ஆதி சங்கரர் பவுத்தரான தர்மகீர்த்தியின் வரிகளை எடுத்தாண்டுள்ளார்.
  தர்மகீர்த்தி – கி.பி. 7ம் நூற்றாண்டு
  நாளந்தாவிலிருந்த இவர் தென்னகம் வந்து பவுத்தம்
  பரப்பியதாக வரலாறு.

  கிறிஸ்து பாகவதம் பற்றி அறிந்துகொள்ள –
  https://en.wikipedia.org/wiki/Kristubhagavatam

  தேவ்

 5. பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை எந்த வலைத் தளத்தில் தேடுவது என்று சொல்லுங்கள்.
  நன்றி,
  வணக்கம்.

 6. பேசு மொழியினாற் நாம் பலராயினும் உணர்வினால் பாரதமெங்கும் நாம் ஒருவரே என்று அழகாக நிர்த்தாரணம் செய்த ஸ்ரீ தேவ் அவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள். ஒருபடி மேலே போய் உலகத்தின் மற்றைய பகுதிகளிலும் பாரதத்தின் கருத்தாக்கங்களின் சுவடுகளை தெரிவித்தமை சனாதன ஹிந்து தர்மத்தின் அடிநாதத்தை பறைசாற்றுகிறது.

  \\\\\\\\\\\\\\\\ தலயாத்திரையாகத் தென்னகம் வந்த ஸ்ரீ சைதந்ய மஹாப்ரபு இங்கிருந்து திரும்புகையில் ப்ரம்ம ஸம்ஹிதை, க்ருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய நூல்களைத் தம்முடன் எடுத்துச் சென்றார்.\\\\\\\\\\

  தென்னகத்திலிருந்து மஹாப்ரபுவிற்கு கிடைத்த இன்னொரு ரத்னம் கோபால ரத்னம். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு ஸ்ரீரங்கக்ஷேத்ரம் வந்திருந்த போது நான்கு மாதங்கள் தங்கி சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்தார்.

  பின்னர் ஸ்ரீ வேங்கடநாதர் என்றொரு ஸ்ரீவைஷ்ணவ மஹநீயரின் க்ருஹத்தில் ஓரிரு தினங்கள் தங்கினார். சொல்லுக்கடங்கா மஹாப்ரபுவின் பாவுக பக்தியில் வேங்கடநாதரின் குடும்பமுழுதும் திளைத்தது. குறிப்பாக வேங்கடநாதரின் புத்ரனான ஸ்ரீ கோபாலன் தன் மனதை ப்ரேமையே வடிவான மஹாப்ரபுவிடம் சமர்ப்பித்து விட்டான். மஹாப்ரபு கோபாலனை தன்மடியிலிருத்தி லாலனை செய்தார். ப்ரபு பூரிக்ஷேத்ரம் திரும்புகையில் கோபாலன் மனம் கலங்கினான். ஆனால் பெற்றோருக்கு பணிவிடை செய்யுமாறு அவனை பணித்து விட்டு ப்ரபு பூரிக்கு ஏகினார்.

  பிற்காலத்தில் கோபாலரும் ப்ருந்தாவனம் சென்றார்.

  ஸ்ரீ ரூப, ஸனாதன, ரகுநாததாஸ, ரகுநாதபட்ட, ஜீவ கோஸ்வாமிகளுடன் ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியும் சேர்ந்து மஹாப்ரபுவின் ஆறு சிஷ்யர்கள். “சிஷ்டாஷ்டகம்” என்ற பக்தலக்ஷணஞ்சொல்லும் ஒரு நூல் மஹாப்ரபுவால் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  மற்றபடி

  “ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”

  என்ற மஹாமந்தரத்தையே மஹாப்ரபு பார்ப்பவர் கேழ்ப்பவர் ஹ்ருதயங்களில் இருத்தினார். அவருடைய சிஷ்ய பரம்பரையிலேயே வந்த ஸ்ரீல பக்தி வேதாந்த ப்ரபு பாதர் இந்த ஆல வ்ருக்ஷத்தின் வித்தை –மஹாமந்த்ரத்தை அகிலமெங்கும் விதைத்து உலகையே பாவனமாக்கியிருக்கிறார்.

  இந்த ஆறு கோஸ்வாமிகளும் ப்ருந்தாவனம், ஸ்ரீ வனம் மற்றும் வ்ரஜம் என்றெல்லாம் சொல்லப்படும் பாவனமான பூமியில் இருந்து ராதாக்ருஷ்ண யுகளம் பற்றியும் பக்தி சம்பந்தமாகவும் மிகப்பல நூல்கள் இயற்றியிருக்கின்றனர்.

  கோபாலபட்ட கோஸ்வாமிகள் ஸ்ரீ க்ருஷ்ணவல்லப என்று ஸ்ரீ க்ருஷ்ணகர்ணாம்ருதத்திற்கு டீகை (வ்யாக்யானம்) எழுதியுள்ளார். அவர் எழுதிய லகு ஹரி பக்தி விலாஸமும் முக்யமானது. அதுவே ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமிகள் எழுதிய மிக விரிவான ஹரி பக்தி விலாஸம் என்ற க்ரந்தத்திற்கு ப்ரோத்ஸாஹமாய் அமைந்தது.ஆயிரக்கணக்கான ச்லோகங்களில் இருபது விலாஸமாக (இருபது பாகங்கள்) அமைந்த இந்த க்ரந்தம் உலகமெங்கும் உள்ள கௌடிய வைஷ்ணவர்களால் மிகவும் போற்றப்படும் க்ரந்தம்.

  கோபால பட்ட கோஸ்வாமிகள் ஆராதித்து வந்த பன்னிரண்டு சாளக்ராமங்களில் ஒன்றான தாமோதர சாளக்ராமத்திலிருந்து தாமாக வெளிப்பட்ட மூர்த்தி “ராதா ரமணன்”. இன்று நிதுவனத்திற்கருகாமையில் விருந்தாவனத்தில் கோவில் கொண்டுள்ளான்.

 7. ஸ்ரீ பாலசுப்ரமண்யம், கீழ்க்கண்ட சுட்டியில் ஸம்ஸ்க்ருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள்

  https://nvkashraf.co.cc/kursan/sancont.htm

 8. >>> ஸ்ரீ ரூப, ஸனாதன, ரகுநாததாஸ, ரகுநாதபட்ட, ஜீவ கோஸ்வாமிகளுடன் ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியும் சேர்ந்து மஹாப்ரபுவின் ஆறு
  சிஷ்யர்கள். <<<

  வாழ்த்துகளுக்கு நன்றி க்ருஷ்ணகுமார் ஜீ,

  ”வந்தே³ ரூப-ஸனாதநௌ ரகு⁴யுகௌ³ ஸ்ரீஜீவ – கோ³பாலகௌ” என அந்த ஆறு கோஸ்வாமிகளையும் கௌடிய வைணவர்கள் துதிப்பார்கள்.

  தெற்கிலிருந்த நூல்கள் ஜகந்நாத புரிக்குச் சென்றதுபோல், லக்ஷ்மீதர கவி எழுதிய ‘பகவந்நாம கௌமுதி’ ஸ்ரீ போதேந்த்ர ஸ்வாமிகளின் முயற்சியால் புரியிலிருந்து தென்னகம் வந்தது. இவர்தம் ஜீவஸமாதி கோவிந்தபுரத்தில் விளங்கி வருகிறது

  தேவ்

 9. ஸ்ரீ தேவ் மிக அழகான இந்த தொகுப்பை பல முறை வாசித்தேன்.

  சில ஸம்சயங்கள்

  \\\\இந்திய நிலப்பரப்பை ‘ஆஸேது ஹிமாசலம்..’ என்று குறிப்பதே இந்திய வழக்கம்; மறைகளில் ‘த்ராவிட’ எனும் பதமே காணப்படவில்லை. \\\\\\

  பஞ்ச த்ராவிட என்று தமிழ், தெலுகு, கன்னட, மலயாள மற்றும் மராட்டா ப்ரதேசங்களைக் குறிப்பிடுவதான பதப் ப்ரயோகம் எப்போதிலிருந்து துவங்கியிருக்கலாம்.? ஸம்ஸ்க்ருத ஸாஹித்யங்களில் இது சம்பந்தமாக குறிப்பேதும் உள்ளதா?

  \\\\\\\வடமொழி நிகண்டு ‘அமரகோசம்’ ஒரு பவுத்தரால் தொகுக்கப்பட்டது.\\\\\\\

  அமரகோசம் தொகுத்த அமரசிம்மன் ஜைனன் என்று சங்கர விஜயத்திலோ அல்லது வேறு எங்கோ வாசித்ததாக ஞாபகம். விகிபீடியாவைப் பார்த்தேன். அதில் பௌத்த அல்லது ஜைன என்று இவரைக் குறிப்பிட்டிருந்தது. ஏன் இப்படி ஒரு வ்யக்தி சார்ந்த சமய குழப்பம்?

  குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர் அவர்களது “ஷோனார் பாங்களா” பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இவரது மிகவும் ப்ரசித்தியான இன்னொரு ரபீந்த்ர ஸங்கீத (ரொபீந்த்ரொ ஷொங்கீத்) கானம் “ஏக் ல சொலோ” ஞாபகம் வந்தது.

  ஹிந்து என்ற பதம் ஸனாதன, பௌத்த, ஜைன, வேதாந்த, ஸீக்கியர்களை உள்ளடக்கிய ஒரு பதம். அதற்கேற்ப இவ்வனைவரைப் பற்றி நீங்கள் ப்ரஸ்தாபித்திருப்பது மிக ச்லாக்யம். ஒரு சமயம் சார்ந்த ஒருவர் மற்றவரிடம் வைத்திருந்த அன்பு பற்றிய தங்கள் பதிவு அருமை.

  இந்த தேசத்தை சூரையாடிய க்றைஸ்தவ இஸ்லாமிய ராஜ்யங்களின் க்ரூரத்தையும் தாண்டி இந்த மண்ணின் இலக்கியங்கள் ஆப்ரஹாமிய மதஸ்தர்களில் சொல்பமானவர்களையேனும் மென்மையாக்கி நம் இலக்கியங்களில் அவர்களின் பங்களிப்பு பற்றிய பதிவு அருமை.

  வஹாபி இஸ்லாமில் “ஸங்கீத்” “ஹராமாக” (பாபமாக) கருதப்படுகிறது. ஆனால் இன்று உத்தர பாரதத்தில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய ஸங்கீத வித்பன்னர்கள் முஸல்மான்களே. வாழ்க இந்த ஹிந்து பூமியின் கலாசார ஆதாரம். இதில் ஸங்கீதத்தின் ஸாம்யதை பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். த்ருவ்பத் மற்றும் விவித கரானாக்களில் பின்னிட்டும் இயற்கையைப் பற்றியும் ஹிந்து தெய்வங்களைப் பற்றியும் பாடல்கள். ஸூஃபியானா கலாம் எனப்படும் முழு இஸ்லாமிய மயமான (இஷ்க் என்று சொல்லப்படும் காதல் ப்ரேமை பற்றியும் பாடல்கள்) பாடல்களில் கூட நமது சங்கீதத்தின் ஆழமான சுவடுகள். பாகிஸ்தானைச் சார்ந்த மறைந்த நுஸ்ரத் ஃபதே அலி கான் ஸாஹேப் அவர்களின் பஞ்சாபி மொழியிலமைந்த “ஜூலேலால் மஸ்த் கலந்தர்” “ஆஃப்ரீன் ஆஃப்ரீன்” போன்ற கானங்களின் துரித கதியானது கண்ணை மூடிக்கொண்டு கேழ்க்கையில் ஏதோ தக்ஷிண பாரதீய ஸம்ப்ரதாய பஜனையில் அதி துரித கதியில் பாடப்பெறும் நாமாவளியையே நினைவுறுத்துகிறது.

  எல்லைகள் தகர்க்கும் இலக்கியம் என்றதும் கருத்துகளில் ஸாம்யதையும் அடங்கும்.

  நேற்று கீழ்க்கண்ட திருப்புகழ் ஓதும் போது சங்கரரின் குர்வஷ்டகம் நினைவுக்கு வந்தது. பதங்களில் கூட நிறைய ஸாம்யதை.

  “குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
  குயில்போற்ப்ர சன்ன …… மொழியார்கள்

  குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
  குருவார்த்தை தன்னை …… யுணராதே ”

  குடிவாழ்க்கை … இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட

  அன்னை மனையாட்டி பிள்ளை … தாயார், மனைவி, பிள்ளைகள்,

  குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் … குயில் போலப் பேசி எதிர்ப்படும் பெண்கள்,

  குலம் வாய்த்த நல்ல தனம் … பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம்,

  வாய்த்த தென்ன … எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம் கொண்டு,

  குருவார்த்தை தன்னை உணராதே … குருவின் உபதேச மொழிகளை அறியாமல்,

  இடுகாட்டில் எறியூட்டுமுன் உன்திருவடிகளை நினையேனோ அடியார்க்கு நல்ல முருகப் பெருமானே என்கிறார் அருணகிரிப் பெருமான்.

  குர்வஷ்டகம் :-

  शरीरम् सुरूपम् तथा वा कलत्रम् यशश्चारु चित्रम् धनम् मॆरु तुल्यम्
  मनश्चॆन्न लग्नम् गुरॊरङ्ग्रि पद्मॆ तत: किम् तत: किम् तत: किम् तत: किम्

  சரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேரு துல்யம்
  மனஸ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம்

  குருவின் திருவடியில் மனம் ஈடுபடாவிடில் நல்ல அழகான சரீரமும் அதற்கீடான மனைவியும் விரிந்து பரந்த புகழும் குறையாது மேரு பர்வதம் போன்று உறுதியாக கொள்ளையான செல்வமும் இருந்தும் என்ன பயன் என்ன பயன்.

  இது வடமொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் நினைவுக்கு வந்த ஸாம்யதை.

  இது போல பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவரின் இலக்கியங்களிலான சாம்யதையும் நினைவுக்கு வருகிறது. பகிர்கிறேன்.

 10. அன்புள்ள கிருஷ்ணகுமார் ,

  தங்கள் பதிவு மிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நன்றி. தங்களுக்கும், இந்த தளத்தில் நல்ல முறையில் கருத்து பரிமாற்றத்தை செய்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் இறைஅருள் பெருகட்டும் என்று பிரார்த்திக்கிறேன் .

 11. @ க்ருஷ்ண குமார்ஜீ

  >> அழகான இந்த தொகுப்பை பல முறை வாசித்தேன் <>> பஞ்ச த்ராவிட என்று தமிழ், தெலுகு, கன்னட, மலயாள மற்றும் மராட்டா ப்ரதேசங்களைக் குறிப்பிடுவதான பதப் ப்ரயோகம் எப்போதிலிருந்து துவங்கியிருக்கலாம் ? ஸம்ஸ்க்ருத ஸாஹித்யங்களில் இது சம்பந்தமாக குறிப்பேதும் உள்ளதா? <<>> ஹிந்து என்ற பதம் ஸனாதன, பௌத்த, ஜைன, வேதாந்த, ஸீக்கியர்களை உள்ளடக்கிய ஒரு பதம். அதற்கேற்ப இவ்வனைவரைப் பற்றி நீங்கள் ப்ரஸ்தாபித்திருப்பது மிக ச்லாக்யம். ஒரு சமயம் சார்ந்த ஒருவர் மற்றவரிடம் வைத்திருந்த அன்பு பற்றிய தங்கள் பதிவு அருமை.<<> எல்லைகள் தகர்க்கும் இலக்கியம் என்றதும் கருத்துகளில் ஸாம்யதையும் அடங்கும்.<>> இடுகாட்டில் எறியூட்டுமுன் உன்திருவடிகளை நினையேனோ அடியார்க்கு நல்ல முருகப் பெருமானே என்கிறார் அருணகிரிப் பெருமான் <<இடுகாட்டில் எறியூட்டுமுன் உன்திருவடிகளை நினையேனோ…>> இந்த தேசத்தை சூரையாடிய க்றைஸ்தவ இஸ்லாமிய ராஜ்யங்களின் க்ரூரத்தையும் தாண்டி இந்த மண்ணின் இலக்கியங்கள் ஆப்ரஹாமிய மதஸ்தர்களில் சொல்பமானவர்களையேனும் மென்மையாக்கி நம் இலக்கியங்களில் அவர்களின் பங்களிப்பு பற்றிய பதிவு அருமை <<>> …. பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவரின் இலக்கியங்களிலான சாம்யதையும் நினைவுக்கு வருகிறது. பகிர்கிறேன்<<<

  ஸாம்யதை (கருத்தொற்றுமை) பற்றிய தங்கள் கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறேன்

  தேவ்

 12. அன்புள்ள கிருஷ்ணகுமார் ,

  தங்கள் மின் அஞ்சலில் தாங்கள் மேற்கோள் காட்டும் திருப்புகழ் வரிகளை படித்து, படித்து , திருப்புகழ் படிக்க ஆசை மற்றும் பெருவிருப்பம் வந்துவிட்டது. நான் ஷண்மத பக்தன். திருவாசகத்திற்கு உள்ள தனிச்சுவை போலவே, திருப்புகழும் ஒரு அற்புதமாக உள்ளது. தாங்கள் ஒரு பாக்யசாலி என்பதும் புரிகிறது.

  முழுவதும் படித்து அருள்பெற, இறைஅருளும், பெரியோர் வாழ்த்தும் சேரட்டும்.

 13. எல்​லைக​ளைத் தகர்க்கும் இலக்கியங்களினால் தான் இன்றும் இந்தியர்அ​னைவரும் காசிக்கும் இரா​மேசுவரத்திற்கும் ​சென்று வழிபட்டு வருகின்றனர். இந்தியா என்ற ஒரு நாடு இன்றளவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த இலக்கியங்க​ளே என்றால் அது மி​கையாகாது.
  தலபுராணங்கள் வட​மொழியில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை ​தென்நாடு​டைய சிவலிங்கங்க​ளை​யே அதிகமாகன அளவில் பாடுகின்றன. இதற்குக் காரணம் இந்தியர்களின் இலக்கியங்கள் இறையாண்மையை வளர்த்து வந்துள்ளன. பல்​வேறு ​மொழி​பேசும் இந்தியர்களை ஒன்றாக இ​ணைத்துள்ளன.
  தங்களது “எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்” – தகுந்த ஆதாரங்களுடன் ஓர் அரு​மையான தகவல் சுரங்கமாக உள்ளது.
  இது​போன்ற கட்டு​ரைகள் நமது ​தேச ஒற்​றை​மை​யை ​மேலும் வளர்க்கும்.
  நல்ல​தொரு கருத்​தை வழங்கிய பண்டிட்ஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள், பாராட்டுகள்.

  அன்பன்
  கி.கா​ளைராசன்

 14. நன்றி, காளைராசன் ஐயா

  >>இன்றும் இந்தியர்அ​னைவரும் காசிக்கும் இரா​மேசுவரத்திற்கும் ​சென்று வழிபட்டு வருகின்றனர்<>> நல்ல​தொரு கருத்​தை வழங்கிய பண்டிட்ஜி அவர்களுக்கு……<<<

  இங்கு மிகப்பெரிய பண்டிதர்கள் அரிய பெரிய கட்டுரைகளை
  வழங்கியுள்ளனரே !!

  தேவ்

 15. அன்புள்ள திரு க்ருஷ்ண குமார் அவர்களுக்கு,

  >> அழகான இந்த தொகுப்பை பல முறை வாசித்தேன் << நீங்கள் இன்புறும்படி எழுத்து அமைந்ததில் மகிழ்ச்சி; உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி. >>> பஞ்ச த்ராவிட என்று தமிழ், தெலுகு, கன்னட, மலயாள மற்றும் மராட்டா ப்ரதேசங்களைக் குறிப்பிடுவதான பதப் ப்ரயோகம் எப்போதிலிருந்து துவங்கியிருக்கலாம் ? ஸம்ஸ்க்ருத ஸாஹித்யங்களில் இது சம்பந்தமாக குறிப்பேதும் உள்ளதா? <<< மறைகளிலும், புராண இதிஹாஸத்திலும் பஞ்ச கௌட, பஞ்ச த்ரவிடப் பாகுபாடு பற்றிய பேச்சு இல்லை. முந்தைய யுகங்களில் மக்கள் தொகை குறைவு. அடர்ந்த வனப்பகுதி மிகவும் அதிகம். மரவுரியும், மான்தோலும் (வல்கல, அஜிநம்) இயற்கையாகவே மிகுதியாகவும், மலிவாகவும் கிடைத்த பொருட்கள். வாநப்ரஸ்த நியமங்களைக்கு வாய்ப்பான சூழல் அதிகம். வனப்பகுதி சுருங்கும் என உணர்ந்த முனிவர்கள் அதைக் கலியில் தடை செய்தனர். மக்கள்தொகை மிகுந்து குடியேற்றம் பரவலானதால் பஞ்ச கௌட, பஞ்ச த்ராவிடப் பாகுபாடுகள் பின்னர் தோன்றின. 11ம் நூற்றாண்டு நூலான கல்ஹணரின் ராஜதரங்கிணி தெரிவிக்கும் செய்தி - கர்ணாடகஸ்²ச தைலங்கா³ த்³ராவிடா³ மஹாராஷ்ட்ரகா: கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ராவிடா³ விந்த்⁴யத³க்ஷிணே | (தைலங்கம் என்றது ஆந்திர தேசத்தை) ஸ்ம்ருதி நிபந்த நூல்களிலும் கௌட, த்ராவிடப் பிராந்திய எல்லைகள் கூறப்பட்டுள்ளதாகச் சொல்வர். ஆதி சங்கரரையும் சேர்த்து ஸ்ரீ ராமாநுஜர், மத்வர், வல்லபர், நிம்பார்க்கர் ஆகிய முக்கிய வைஷ்ணவ ஆசார்ய புருஷர்கள் அனைவரும் பஞ்ச த்ராவிடப் பகுதியைச் சேர்ந்தோர் என்பது ஒரு கொசுறுத் தகவல். வல்லபரும், நிம்பார்க்கரும் ஆந்திரத்தில் தோன்றியவர்கள். வடமொழியின் ஐம்பெருங் காப்பியங்களுக்கும் உரை செய்த ’மல்லிநாத ஸூரி’ தற்போது ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் அமைந்த ’கோல்சாரம்’ எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பல ஸம்ஸ்க்ருத நூல்களைப் பாதுகாத்து வந்த்தில் தென்னகத்தின் பங்களிப்பை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார் ஸ்வாமி விவேகாநந்தர். காஞ்சிப்பெரியவர் பல்லினக் குழுக்களுக்கு இடம் தந்து, அவர்களின் பண்பாடு வளரத் துணை செய்த தமிழகத்தை ஒரு குளிர்பதனப் பெட்டி என்று புகழ்ந்து கூறியுள்ளார். >>>> அமரகோசம் தொகுத்த அமரசிம்மன் ஜைனன் என்று சங்கர விஜயத்திலோ அல்லது வேறு எங்கோ வாசித்ததாக ஞாபகம். விகிபீடியாவைப் பார்த்தேன். அதில் பௌத்த அல்லது ஜைன என்று இவரைக் குறிப்பிட்டிருந்தது. ஏன் இப்படி ஒரு வ்யக்தி சார்ந்த சமய குழப்பம்? <<<< அமரம் புத்த வந்தனத்துடன் தொடங்குகிறது என்கிறது இப்பதிவு - https://tinyurl.com/3mpkehk ******* அமரகோசம் புத்தரையும் ‘ஜிநர்’ என்கிறது - ஸர்வஜ்ஞ: ஸுக³தோ பு³த்³தோ⁴ த⁴ர்மராஜஸ்ததா²க³த:| ஸமஸ்தப⁴த்³ரோ ப⁴க³வாந் மாரஜித் லோகஜித் *ஜிந:*|| ஜிந சப்தத்தையும் புத்தருடையதாக்கி விட்டார் என்று சமணர் இவர் மீது புகார் கூறுவர். அமரஸிம்ஹர் வாக்தேவியை உபாஸித்த பௌத்தர்; சங்கரரிடம் தோற்றதால் கழிவிரக்கம் கொண்டு தம் நூல்களை எரியூட்ட முயல்கையில் ஆதி சங்கரர் அமரகோசத்தைக் காத்தார் எனும் செய்தி உண்டு. >>> ஹிந்து என்ற பதம் ஸனாதன, பௌத்த, ஜைன, வேதாந்த, ஸீக்கியர்களை உள்ளடக்கிய ஒரு பதம். அதற்கேற்ப இவ்வனைவரைப் பற்றி நீங்கள் ப்ரஸ்தாபித்திருப்பது மிக ச்லாக்யம். ஒரு சமயம் சார்ந்த ஒருவர் மற்றவரிடம் வைத்திருந்த அன்பு பற்றிய தங்கள் பதிவு அருமை.<<< மீண்டும் நன்றி. ச்ரமண மதங்கள் மறைகளை மறுத்தாலும் ப்ரணவத்தை ஏற்றன. சீக்கிய தர்மமும் ப்ரணவத்தை ஏற்கிறது. வடமொழியில் பெரும் புலமை மிக்க ராஜா பர்த்ருஹரியின் ஆசிரியர் வஸுராதர் ஒரு பௌத்தர். பர்த்ருஹரியையும் பௌத்தர் என்பர்; அது தவறு. அவர் எழுதிய ‘வாக்யபதீயம்’ மறைக்கருத்தை ஒட்டி அமைகிறது. யாமுனரின் ’ஸித்தித்ரயம்’ அவரை வேதாந்தச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக ஏற்கிறது. மறு பிறவிக்கொள்கை, வடக்கிருத்தல், வடமொழி - பாகதப் பயன்பாடு, உருவ வழிபாடு, மந்திர உச்சாரணம், தாந்திரிகம், கீர்த்தனம், தல யாத்திரை, தென் புலத்தார் - தெய்வ வழிபாடு, உயிர்க்கொலை இல்லாத வேள்வி, அக்ஷயத்ருதீயை போன்ற நோன்புகள் - அனைத்திலும் பாரதீய மத மரபுகளிடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. கட்டுரை மிக விரியும் என்பதால் வீரசைவ நூல்கள் பற்றி எழுதவில்லை. துறைமங்கலம் சிவப்பிரகாசர் காலத்திலேயே வீர சைவ இலக்கியம் வளர்ந்திருந்தது. சாந்தலிங்க அடிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், குமார தேவர் என்ற மூவரும் வீரசைவ இலக்கியத்தைத் தமிழில் வழங்கினர். மகாராஜா துறவு என்ற நூலை இயற்றிய குமாரதேவர் கன்னட நாட்டு அரசர். சாந்தலிங்க அடிகளிடம் உபதேசம் பெற்றவர்.சிவாத்துவிதக் கொள்கையை விளக்கியவர். அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகசநிட்டை, சிவதரிசன அகவல் முதலிய பல நூல்களைப் படைத்துள்ளார். எனினும் மகாராஜா துறவு என்ற நூலே பரவலாகப் புகழப் பட்டது. தெலுகு மொழியின் ’ப்ரபுலிங்க லீலை’ பிற மொழிகளிலும் வடிவம் பெற்றது தமிழில் செய்யப்பட்டுள்ள பிரபுலிங்க லீலை சமய குரவர்களையும், அறுபத்து மூவரையும் அல்லமர், பஸவேசர், சென்ன பஸவர் ஆகியோருடன் சேர்த்தே துதிக்கிறது. வீரசைவர்கள் வேதங்களை மறுத்தனர்; ஆனால் வடமொழியை ஏற்றனர். ‘ஸித்தாந்த ஆகமம்’ ஒரு முக்கியமான நூல். நந்திகேச்வர காரிகையே சைவ சமயத்தின் மூலம் என்பர். >>> எல்லைகள் தகர்க்கும் இலக்கியம் என்றதும் கருத்துகளில் ஸாம்யதையும் அடங்கும்.<<< ஆம், ஐயா. ‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’ எனும் மறைமொழி, கீதையில் ‘வாஸுதேவ: ஸர்வம்’ ஆகிறது. ‘எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லை’ என்று திருமுறையும், ‘நிற்கின்றதெல்லாம் நெடுமால்’ என்று அருளிச் செயலும் அநுவதிப்பது இதையே. ‘ஸர்வே ஜநா: ஸுகிந: பவந்து’ என்னும் கருத்தே நம் சமய நூல்களின் அடிநாதமாக அமைந்துள்ளது. ‘வையம் துயர் தீர்க’ , ‘கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ்க’ , ’விச்வ பீடாபஹத்யை’ , ‘ஸ்வஸ்தி அஸ்து விச்வஸ்ய..’ என்பன போன்ற உலகத்துக்கான பொதுப் பிரார்த்தனைகள் சிலவற்றை எடுத்துக்காட்டலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர், வஸுதைவ குடும்பகம், ஸ்வதேச: புவநத்ரயம் – இவற்றில் இலக்கியங்களின் ஒருமித்த சிந்தனையைக் காண்கிறோம். அன்றாடம் மக்களிடையே புழங்கும் இந்தியப் பழமொழிகளில்கூட நிறைய ஒற்றுமை உள்ளது. >>> இந்த தேசத்தை சூரையாடிய க்றைஸ்தவ இஸ்லாமிய ராஜ்யங்களின் க்ரூரத்தையும் தாண்டி இந்த மண்ணின் இலக்கியங்கள் ஆப்ரஹாமிய மதஸ்தர்களில் சொல்பமானவர்களையேனும் மென்மையாக்கி நம் இலக்கியங்களில் அவர்களின் பங்களிப்பு பற்றிய பதிவு அருமை <<< ஸையத் இப்ரஹிம் என்ற படானிய ஸர்தாரின் மனத்தை மென்மையாக்கியதோடு மட்டுமின்றி அவரைச் சிறந்த கவிஞராக்கியது கோஸ்வாமி விட்டல நாதரின் பாகவத உரைகள் என்பர். இவரே ‘ரஸகான்’ என அழைக்கப்பட்டார். (ரஸ கீ கான் – சுவைகளின் சுரங்கம்) இவர் பாகவதத்தைப் பாரசீக மொழியில் எழுதியதாக நம்பப்படுகிறது. வடமதுரையில் இவரது சமாதி உள்ளது. ஹிந்தி திரைப்பாடல்களை யாராலும் தடை செய்ய முடியவில்லை. ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள்தான் ஹிந்தித் திரை உலகுக்கு முக்கியமான சந்தை. சாந்தோம் சர்ச்சில் தற்போது நிறுவப்பட்டுள்ள அழகிய கணுக்களைக் கொண்ட ஓங்கி உயர்ந்த ஐம்பொன் த்வஜ ஸ்தம்பம் அனைவரது கண்ணையும், கருத்தையும் கவர்வதாக உள்ளது. ஜிநாகமம், பௌத்தாகமம் என்பதுபோல் மதநூலார் க்ரைஸ்தவாகமம் என விவகரிக்கும் காலம் அண்மிக்கிறது. >>> இடுகாட்டில் எறியூட்டுமுன் உன்திருவடிகளை நினையேனோ அடியார்க்கு நல்ல முருகப் பெருமானே என்கிறார் அருணகிரிப் பெருமான் <<< இதை வாசித்ததும் தாளமாலிகையாகவே அமைந்துள்ள அற்புத நூலான திருப்புகழின் மாட்சிமையை எழுதத் தோன்றுகிறது. மணிப்ரவாளம், சங்கதச் சாய்வு, மொழித்திணிப்பு என்று சாக்குச் சொல்லிக்கொண்டு திருப்புகழை ஒதுக்கினால் இலக்கியத்துக்கு எத்தகைய இழப்பு என்பதைத் தனித்தமிழ் ஆர்வலர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மரபிசை வழக்கில் இல்லாத பல அரிய தாளவகைகள் திருப்புகழில் உள்ளன. >இடுகாட்டில் எறியூட்டுமுன் உன்திருவடிகளை நினையேனோ…< இறுதி நினைவை - அந்திம ஸ்ம்ருதியை அடியார்கள் அனைவரும் வேண்டுகின்றனர். உண்மையான ப்ரபந்நருக்கு அது கட்டாயமில்லை என்கிறது, தென்னக வைணவம்; ஆனால் ஸ்வாமி தேசிகனோ ‘ப்ரதிபா: ஸந்து மம அந்திம ப்ரயாணே’ என கோபால விம்சதியில் கண்ணபிரானிடம் வேண்டுகிறார். இறுதி நினைவு இறப்பையும் இனிமையாக்க வல்லது. >>> …. பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவரின் இலக்கியங்களிலான சாம்யதையும் நினைவுக்கு வருகிறது. பகிர்கிறேன்<<< ஸாம்யதை (கருத்தொற்றுமை) பற்றிய தங்கள் கட்டுரையை எதிர்பார்க்கிறேன் தேவ்

 16. நல்ல ஆத்திகமும் நல்ல நாத்திகமும் வளர வேண்டும். இது என்ன நல்ல ஆத்திகம், நல்ல நாத்திகம்?

  கடவுள் உணர்வும், புரிதலும், நம்பிக்கையும் நல்லது என்று உணர்வதும், நம்புவதும் இரண்டுமே நல்ல ஆத்திகம்.

  கடவுள் உணர்வும், புரிதலும், நம்பிக்கையும் இல்லாதவன் நரகத்துக்கு போவான் என்று யாராவது சொன்னால் அது தவறான , கண்டிக்கப்படவேண்டிய ஆத்திகம்.

  இதே போல, நாத்திகத்திலும் , கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று மட்டும் சொல்வது நல்ல நாத்திகம்.

  அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல், கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை நம்புபவன் அயோக்கியன், கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி , என்று சொல்பவன் தவறான நாத்திகன்.

  நல்ல நாத்திகனும் , நல்ல ஆத்திகனும் சொர்க்கத்துக்கு போவார்கள். அவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

  தீய நாத்திகனும், தீய ஆத்திகனும், பிற மதத்தினர் நரகம் போவார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் மத நூல்களை எழுதிய பொய்யர்களும் நரகத்தின் நிரந்தர வாசிகள் ஆகிறார்கள்.

 17. \\\\\\\திருப்புகழ் படிக்க ஆசை மற்றும் பெருவிருப்பம் வந்துவிட்டது.\\\\\

  அன்பார்ந்த ஸ்ரீ கதிரவன், இன்று அன்பர் ஸ்ரீ சிங்கமுத்து அவர்களுக்கு பதிலிறுத்த பின் மனம் திருப்புகழிலேயே அமிழ்ந்திருந்தது. அப்படியே பல நாட்களுக்கு முன் உத்தரமிட்டிருந்த இந்த இழையைப்பார்க்கையில் மீண்டும் திருப்புகழ்.

  இப்படி ஒரு ஆசை பெற்ற நீங்களும் ஒரு பாக்யசாலியே. மனதில் திருப்புகழோதும் ஆசை கந்தன் திருவடிப்பேறு பெற அடிகோலும் என மாத்ருகா (மாக்ருதா) புஷ்பமாலை எனும் இத்திருப்புகழ் பகர்கிறது.

  ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
  மானபூ வைத்து …… நடுவேயன்

  பானநூ லிட்டு நாவிலே சித்ர
  மாகவே கட்டி …… யொருஞான

  வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
  மாசிலோர் புத்தி …… யளிபாட

  மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
  வாளபா தத்தி …… லணிவேனோ

  ஆசைமிகுந்த பக்தியுடைய நான் மனமெனும் தாமரையால் அன்பெனும் நாரைக்கொண்டு நாவால் தொடுக்கும் ஒளிமிகு மாத்ருகா புஷ்ப மாலையில் (அ முதல் க்ஷ வரையிலான 51 அக்ஷரங்களால் ஆன மாலை) ஞானமெனும் நறுமணம் தடவ அதைச்சுற்றி குற்றமிலா அறிவெனும் வண்டு மொய்த்துப்பாட அம்மாலையை நின் சிவந்த திருவடிகளில் சமர்பிப்பேனோ என அருணகிரிப்பெருமான் பாடுகிறார்.

  இப்படி பாடுவோர் மனத்தை எப்படியெலாம் ஆட்கொள்கிறான் கந்தன் பாருங்கள்

  இணையிலா கானகோகிலமாய் வலம்வந்து தன்மனத்தை ஈடிலா இசை பொழிந்த ஸ்ரீ எஸ்.ஜி.கிட்டப்பாவிடமளித்து அவர் வாழ்க்கைதுணையாய் ஆகி அவர் பரகதியடைந்ததும் இளமையிலேயே துறவி போல் வாழத்துவங்கிய கந்தனுக்குகந்த அடியார் கொடுமுடி ஸ்ரீமதி கே.பி.சுந்தராம்பாள் பாடுகிறார் :-

  நெஞ்சம் உருகி நின்று நீயே துணை என்று
  கெஞ்சி அழைத்தால் வருவான் குமரன்
  கேட்பதெல்லாம் தருவான்

  இதை எந்த இடத்தில் கேட்டாலும் மீனுலவு க்ருத்திகை குமாரன் புள்ளிமயிலிலேறி வருவதுபோலேன்றோ தோன்றும். கேழ்க்குமிடம் மறந்து அதுவே பழனியாகவும் திருச்செந்தூராகவும் திருத்தணிகையாகவும் ஆகிவிடுமன்றோ.

  அப்படி அடியார் நெஞ்சுருகப் பாடுகையில் முந்தைவினை தீர்க்க வரும் முத்துக்குமரன் என்னவெல்லாம் செய்தான் என இன்னொரு அருளாளர் (பெயர் மறந்தேனே!) பாடுகிறார் :-

  கன்னத்தை தொட்டான்
  கையைப் பிடித்தான்

  கந்தன் பிஞ்சுத் தளிர் கரங்களால் பிடித்த கையை விடவும் தோன்றுமோ, ஆகவே கேட்கிறார் :-

  கைவிட்டு விடுவாயோ என்றேன் கந்தனிடம்
  கைவிட்டு விடுவாயோ என்றேன்

  அடியார்க்கு நல்ல பெருமாள் சொல்கிறானாம் :-

  கைவிடேன் கைவிடேன் கைவிடேன் என்றான்
  முத்துக்குமாரனடி அம்மா

  பின்னும் சொல்கிறான்

  தீராத வினை தீர திருவருள் துணையுண்டு
  திருப்புகழைப் பாடென்று சொன்னான்
  அருணகிரி திருப்புகழைப் பாடென்று சொன்னான்

  ஆகவே, வள்ளல் அருணகிரிப்பெருமான் உகந்தேத்திய வள்ளிமணாளன் அமுதினும் இனிய திருப்புகழ் ஓதும் பேறை தங்களுக்கருள்வாராக

  திருப்புகழமிழ்தில் திளைத்த அருளாளர்கள் அறிந்தபடி சிவமார் திருப்புகழை வாசிப்பது சாலச்சிறந்தது. கீழ்க்கண்ட சுட்டிகள் தங்களுக்கு உபகாரமாயிருக்கலாம் :-

  https://www.kaumaram.com/thiru_uni/index_a1.html
  https://aaththigam.blogspot.com/search/label/Arunagirinaadhar
  https://iniyathu.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF

  பின்னும் தங்கள் வீட்டிற்கருகே திருப்புகழ் ஓதுபவர்களின் திருப்புகழ்ச்சபை இருக்குமெனில் அவர்கள் மூலம் முறையாய் திருப்புகழ் கற்றோதுவது நன்று.

  \\\\\\இதை வாசித்ததும் தாளமாலிகையாகவே அமைந்துள்ள அற்புத நூலான திருப்புகழின் மாட்சிமையை எழுதத் தோன்றுகிறது. மணிப்ரவாளம், சங்கதச் சாய்வு, மொழித்திணிப்பு என்று சாக்குச் சொல்லிக்கொண்டு திருப்புகழை ஒதுக்கினால் இலக்கியத்துக்கு எத்தகைய இழப்பு என்பதைத் தனித்தமிழ் ஆர்வலர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\\\\\\\

  ஸ்ரீ தேவ், தனித்தமிழ்பால் காதல் கொண்டோர் வாழ்க வளர்க. அவர்கள் பால் ஏன் பிணக்கு. தனித்தமிழ் இலக்கியவாதிகளுக்கு திருப்புகழ் வேண்டுமோ வேண்டாமோ உலகெங்குமேவிய தேவாலயந்தொறு பெருமாளே என்று வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடிவைத்தபடி தமிழ் கூறும் நல்லோர் குடிகொண்ட இடமெலாம் அவர்தம் ஹ்ருதயத்தே குடிகொண்ட முத்துக்குமரனமுல்லவோ கோவில் கொண்டுள்ளான். அவன் கோவில் கொண்ட இடமெலாம் திருப்புகழ்த்தேனமுதம் பாடப்பெறுகிறதே.

  உலகுளோர் அனைவருக்குமன்றோ வள்ளல் பெருமான் திருப்புகழை ஈந்திருக்கிறார். அதனால் தானே,

  பெருத்த பாருளீர் நீங்கள் வாருமே – வந்து
  மயிலையும் அவன்திருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
  இயலையு நினைந்தி ருக்க வாருமே.

  என்று பாடியுள்ளாரன்றோ. அடியார்க்கு நல்ல பெருமாள் அடியார் வாக்கை மெய்ப்பிக்கிறாரே. சீன மொழி, மலாய் மொழி மற்றும் எந்தெந்த மொழிபேசுவோரெலாம் திருப்புகழ் ஓதுகிறார்கள்.

  அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு வேலைச்செலுத்தியவனல்லவோ வெற்றிவடிவேலன். அவன் அடியார் ஹரஹரோஹரா என முழங்கும் கோஷமும்

  வருமடி யவரிடம் வலியச நதம்வர
  வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால்

  வருசிவன் அடியவர் அரகர எனமுறை
  வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்

  விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள்
  விளைந்த ஒலிவான் அலைந்த தொருபால்

  அவ்வாறேயன்றோ?

  எல்லையற்றவனன்றோ கந்தன். மொழி நாடு என்ற எல்லைகளைப்பிளக்கிறது அவன் திருப்புகழ்.

  \\\\\\\\இதை வாசித்ததும் தாளமாலிகையாகவே அமைந்துள்ள அற்புத நூலான திருப்புகழின் மாட்சிமையை எழுதத் தோன்றுகிறது\\\\\\\

  அவசியம் எழுதுங்கள். பேசிற்றே பேசலல்லால் என பேசித்தான் மாளுமோ தமிழ்த்ரய வினோதப்பெருமானின் பெருமை.

  ரஸிகோத்தமன்பால் உள்ள ஈர்ப்பால் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கருத்து ஸாம்யதை பகிர்கிறேன்.

 18. இந்தக் கட்டுரையை புத்தகமாகப் போடலாம்.விரிவான தளத்தில் அருமையான தகவல்கள்,நானும் ஒரு தகவல் கொடுக்கிறேன்.
  சிறையிலிருந்து வெளிவந்த வ உ சிதம்பரம் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினார்.அதை பதிப்பிக்க ஆளில்லை. வாவில்ல ராமசாமி சாஸ்திரி என்ற தெலுங்கர் அதை பதிப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *