“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 27-ஆம் பாகம்
[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]
தன் மதமாற்ற அறிவிப்புக்குப்பின், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்து 1936-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்பேத்கர் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ என்கிற ஒரு புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
தொழிற்சாலைகளை அரசுடைமையாக்குதல், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர் வேலை செய்யும் நேரத்தின் அளவை நிர்ணயித்தல், நியாயமான கூலிபெற வழிகாணல், ஊதியமுடன் கூடிய விடுமுறை அளித்தல், தொழிலாளர்களுக்கு மலிவானதும் தூய்மையானதுமான குடியிருப்புகள் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை வரையறுத்தியது அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சி.
இதைப் பார்க்கும்போது அம்பேத்கர் கம்யூனிச சிந்தனையால் கவரப்பட்டுவிட்டதாகவே தோன்றும். தீண்டப்படாதவர்களுக்காகப் போராடி வந்த அம்பேத்கர் தொழிலாளர் நோக்கித் திரும்பியது கம்யூனிசச் சிந்தனையால்தானா?
புரட்சியாளர் அம்பேத்கர் ஒருபோதும் கம்யூனிசச் சிந்தனையால் கவரப்படவில்லை. அவர் கம்யூனிசத்தை, கம்யூனிஸ்டுகளை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்ததிலிருந்தே நாம் இதைத் தெரிந்துகொள்ளலாம்.
அம்பேத்கருக்கு ஏற்பட்ட இந்தச் சிந்தனை இந்தியச் சிந்தனை. கம்யூனிசம் வர்க்கப்பார்வையை பார்த்தது. அம்பேத்கரோ வர்க்கப்பார்வையுடன் மேலும் ஒன்றைக் கண்டார். அது என்ன? பின்பு பார்க்கலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி தாழ்த்தப்பட்டவர்களை நடத்திக் கொண்டிருந்த அம்பேத்கர், ஏன் கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கவில்லை? அதுவும் ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அன்று தொழிலாளர்களாக இருந்தபோதும் அவர் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.
இரு காரணங்களை முக்கியமாகப் பார்ப்போம்.
கம்யூனிசமோ, ‘மதம் மக்களுக்கு அபின் போன்றது’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது.
மேலும் கம்யூனிசம், ‘இந்தியாவில் எல்லாப் பிரச்சினைகளுக்குக் காரணம் முதலாளித்துவம்; அதை ஒழித்தால் போதும்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது. வர்க்கப்போராட்டமே எல்லாவற்றையும் தீர்க்கும் சர்வ வல்லமை பெற்றது என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.
இந்த இரு காரணங்களில் அம்பேத்கர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதைப் பார்த்தால் அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புரிந்துகொள்ள முடியும்.
புரட்சியாளர் அம்பேத்கரைப் பொருத்தவரையில் மனிதர்களுக்கு மதம் அவசியமானது; ஏனென்றால் மனிதர்களை பண்படுத்துவது, நல்வழிப்படுத்துவது மதம் மட்டுமே என்ற கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்டிருந்தவர்.
1938 பிப்ரவரி 12 அன்று அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற பம்பாய் மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் மாநாட்டில்,
‘‘….மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்குத் தேவை. அதே சமயம், மதம் என்னும் பெயரில் கபடவேடம் போடுவதும் எனக்குப் பிடிக்காது’’
என்று கூறினார். இந்தக் கருத்தை பல மேடைகளில் முழங்கினார்.
புதுடெல்லியில் 1950 மே 2-ஆம் நாள், இந்தியாவின் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர், 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களும் புத்தமதத்தில் சேர்ந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர்,
“சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல் மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை…. மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்மசாஸ்திரங்களைப்போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது”
என்று கூறினார்.
மதம் பற்றி கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்த இந்தக் (மதம் மக்களுக்கு அபின்) கருத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் எள்ளிநகையாடினார்.
கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களுக்கான இயக்கமா என்றால் இல்லை என்பதுதான் அம்பேத்கரின் புரிதல். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்களை சுரண்டுபவர்கள் என்றும் தான் அவர்களுடைய பரம்பரை எதிரி என்றும் கடுமையாக விமர்சித்தவர் அம்பேத்கர்.
1937, செப்டம்பர் தொடக்கத்தில் மசூர்-இல் ஒடுக்கப்பட்ட மக்களின் மாவட்ட மாநாட்டை தலைமை தாங்கிய அம்பேத்கர் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசுகையில் ‘‘நான் அதில் சேரும் சாத்தியக்கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி. கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காகச் சுரண்டுபவர்கள்’’ என்று விமர்சித்தார்.
1938 ஜனவரி 10 அன்று பம்பாய் எஸ்பிளனேட் மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில், ‘‘எல்லாக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றைவிட நான் அதிகம் படித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை’’ என்றும் விமர்சித்தார். இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் என்று அ.மார்க்ஸ் (நூல்: அம்பேத்கர் வாழ்வில்– இந்த நூலில் பல பொய்யான தகவல்களை அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) குறிப்பிடுகிறார். அப்படியே வைத்துக்கொண்டாலும் இந்திய கம்யூனிஸ்டுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மாநாட்டிலேயே அம்பேத்கர் அவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
1938 பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் மன்மத் என்னுமிடத்தில் கிரேட் இந்தியன் பெனின்சுலா (ஜி.ஐ.பி) ரயில்வேயைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளை வெளுத்து வாங்கினார். மாநாட்டின் இரண்டாம் நாளான 13-ஆம் தேதி அம்பேத்கர் பேசினார்.
அப்போது அவர்,
‘‘தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கும்போராட்டத்தை விட கடுமையான போராட்டம் போட்டிச் சங்கங்கள் மத்தியில் நடப்பது விசித்திரத்திலும் விசித்திரம். இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக!
இதில் கம்யூனிஸ்ட்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால் தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டுவந்தவர்கள் வேறு எவரும் இல்லை.
இன்று தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது. பொதுமக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்தி தான் புரட்சியைத் தூண்டும், புரட்சியின்மூலம் தொழிலாளி வர்க்கக் கட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்திப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு, சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாகத் தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலைநிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே?
வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல் சமூக உரிமைக்கான நியாயம், அவசியம், முக்கியத்துவம் ஆகியவைப் பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும். ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் வேலைநிறுத்தம் நடத்தலே வேலை என்று அலையமாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்ட்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது. வேலைநிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சி நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக்கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலைநிறுத்தம் கையாளப்படவேண்டும் என்பதே மார்க்சியம்.
இந்த உண்மைகளை கம்யூனிஸ்ட்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த தெய்வீக சாதனமாக வேலைநிறுத்தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் திணித்தார்கள். இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கே வந்துவிட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடியவேண்டும்?
இன்றைய கம்யூனிஸ்ட் எப்படி இருக்கிறான்? சுற்றுவட்டத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன் தன் சொந்த வீட்டையும் சேர்த்து எரித்துவிட்ட நிலையில் இருக்கிறான்.’’
என்று கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
கம்யூனிசம் வர்க்கப்பார்வையைப் பார்த்தது. அம்பேத்கரோ வர்க்கப்பார்வையுடன் மேலும் ஒன்றைக் கண்டார். அது பார்ப்பனியம். முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்துவத்தையும் அம்பேத்கர் ஒரே நேரத்தில் எதிர்த்தார். கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை எதிர்த்தனரே தவிர பார்ப்பனியத்தை அந்த அளவுக்கு எதிர்க்கவில்லை. முதலாளித்துவத்தை ஒழித்தால் இதுவும் தானாகவே ஒழிந்துவிடும் என்றுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அம்பேத்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதே மாநாட்டில் இதைத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அம்பேத்கர் கூறுகிறார்:
“நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம். பார்ப்பனியம் என்று நான் குறிப்பிடுவது, பார்ப்பன வகுப்பினரிடம் மட்டும் குவிந்துள்ள அதிகாரம், சிறப்புரிமைகள், தன்னலம் முதலானவற்றையன்று. பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிடும் சொல்லாகப் பார்ப்பனீயத்தை நான் பயன்படுத்தவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான தன்மையையே பார்ப்பனியம் என நான் கருதுகிறேன். இதன்படி பார்த்தால் பார்ப்பனியம் எல்லாச் சாதிகளிலும வகுப்புகளிலும் படிந்திருக்கிறது. பார்ப்பனியத்தின் மூலகர்த்தாக்கள் பார்ப்பனர்களே. ஆயினும் பார்ப்பனர்களிடம் மட்டும் அது இருக்கவில்லை. சமபந்தி விருந்து, கலப்புத் திருமணம் போன்ற சமூக உரிமைகளில் தடைபோடுவதுடன் பார்ப்பனியம் நின்றுவிடவில்லை. அது குடியுரிமைகளையும் வெகுமக்களுக்கு வழங்கிட மறுத்தது. வாழ்வில் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது பார்ப்பனியம். அதனால்தான் பொருளாதார வாய்ப்புகளையும் அது பாதித்தது.’’
முக்கியமான இந்த இரு காரணங்களினாலும் இந்திய கம்யூனிஸ்ட்களின் செயல்களாலுமே அம்பேத்கர் கம்யூனிசம் பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நோக்கி அழைத்துச் செல்ல வில்லை.
1938, செம்டம்பர் மாதத்தில் பம்பாய் சட்டசபையில் தொழில் தகராறு மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மசோதா சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலை நிறுத்தம் செய்வதைச் சட்டவிரோதமானதாக்குகிறது. அம்பேத்கர் இதைக் கடுமையாக எதிர்த்தார். கம்யூனிஸ்டுகளும் எதிர்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் அமைச்சரவை அம்மசோதாவை நிறைவேற்றுவது என்று உறுதி பூண்டது. நவம்பர் 7-ஆம் நாள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதெனச் சுதந்திரத் தொழிற்கட்சியும், பி.பி.டி.யூ.சி-(பம்பாய் மாகாணத் தொழிலாளர் யூனியன் காங்கிரசு)யும் அறிவித்தன. இந்தப் போராட்டத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகள், மற்றும் இதர தொழிலாளர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளுமாறு அறுபது தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தன. வேலைநிறுத்தப் போராட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 2500 தொண்டர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் அம்பேத்கரின் சுதந்திரத் தொழிற் கட்சியைத் சேர்ந்தவர்களாவே இருந்தனர். அம்பேத்கருடைய கட்சிதான் வேலைநிறுத்தத்தில் முக்கியமான பெரும் பங்களிப்பைச் செய்தது. தொழிலாளர் நலன் குறித்த இப்பிரச்சினையில் அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் ஒரு ஐக்கிய முன்னணியாக இணைந்து செயல்பட்டனர் என்றபோதிலும் அவருடைய கட்சியையும் அமைப்பையும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து தனித்து, கட்டமைப்போடும் செயல்படும் விதத்தில் மிகத் திறமையாகக் கட்டிக்காத்தார்.
அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து போராடினார் என்பதை வைத்து அவர் கம்யூனிசத்தை அரவணைத்தார் என்பது பொருளல்ல. ஏனென்றால் அம்பேத்கர் தொடர்ந்து கம்யூனிஸத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். தன் கட்சியை ஒருநாளும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதை நேரடியாகவும் அறிக்கயிலேயும் தெளிவுபடுத்தினார்.
1951 அக்டோபர் 6-இல் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழு அம்பேத்கர் இல்லத்தில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஜனசங்கம் ஆகியவைகளுடன் கூட்டுறவு கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சிக் கோட்பாடுகளை விளக்கியபின் கம்யூனிசம், சோஷலிசம், காந்தீயம் அல்லது வேறு எந்த இசத்துக்கும் எந்தக் குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கும் கட்சியின் கோட்பாடு கட்டுப்பட்டதல்ல என்பதையும் ….தனிப்பட்டவர்களின் சுதந்திரம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து அதற்குப் பதிலாக ஏதேச்சாதிகாரத்தை கொண்டுவருவதை இலட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக்கொள்ளாது என்பதையும் மறுபடியும் தெளிவுபடுத்தியது. இந்த செயற்குழு தமது வெளிநாட்டுக் கொள்கை என்ன என்பது பற்றியும் சொல்லியது.
அந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பார்த்தோமானால் அம்பேத்கர் கம்யூனிச சீனாவையும் நம்பவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
(தொடரும்…)
முந்தைய பாகங்களின் சுருக்கம்:
பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.
பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.
பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.
பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.
பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.
பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26
இன்னுமொரு சிறப்பான பதிவேற்றம் ம.வெங்கடேசன் …உருப்படியாக தொழிலாளர் உரிமைகளை பெற்று கொடுக்க முடியாத கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒப்புக்கு சப்பாக இந்து மதத்தை பற்றியும்,மக்களின் நம்பிக்கைகள் பற்றியும் வீண் அவதூறுகளை பரப்பி வருவதையே முழுநேர தொழிலாக கொண்டுள்ளதால் “மாக்சிசவாதிகள்” என்பதை விட வேறு நல்ல பெயர் கொண்டு அழைத்தால் சிறப்பாக இருக்கும்.இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டம் அமைதி ஒழுங்கு சீர்குலைய இம்மாக்சிச போர்வை போர்த்திய நபர்களே காரணம்..
இலங்கையின் புகழ் பூத்த மாக்சிச தலைவர் ரோகன விஜேவீர,இலங்கையின் சேகு வேரா வாக தன்னை அடையாளபடுத்தி 1960களில் இவர் மிக பெரும் புரட்சி ஒன்றை நிறைவேற்ற தலை பட்டார்.சிறிமாவோ ஆட்சியை கைப்பற்ற கிராமத்து சிங்கள இளைன்ஞர்களை ஆயுதம் தாங்க வைத்து இறுதியில் அவர்கள் அனைவரும் அரசிடம் சரணடைந்து அரசால் கொல்லப்பட்டு இறையடி சேர்ந்தது மட்டுமே மிச்சம் ….உண்மையின் படி பார்த்தல் இலங்கையில் ஆயுத கலாசாரம் பரவ அடிகோலியது தமிழர்கள் என்ற கருத்தை விட இந்த மாக்சிய வாதிகள் என்பதே சரியாகும் …மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் இக்கட்சியின் முன்னாள் உறுப்பினரான விமல் வீரவன்ச எனும் பா.உறுப்பினர் சில வருடங்கள் முன்பு ஐ.நா கிளை முன் ஆர்பாட்டம் செய்தார்…காரணம் போர் பிரதேசங்களில் அடி பட்டு கிடந்த தமிழ் மக்களக்கு உதவி செய்தது குற்றமாம்.தமிழ் மக்களை “பாதுகாக்க” எங்களக்கு தெரியும்.வெள்ளையனே வெளியேறு என்று கபட நாடகம் ஆடினார் விமல் எனும் மாக்சிய சிந்தனையாளர்
இவரை பற்றிய மேலதிக விபரங்கள்
https://en.wikipedia.org/wiki/Rohana_Wijeweera
திரு வெங்கடேசன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அற்புதமான தொடர். மேலும் கம்யூனிஸ்டுகளை மிக சரியாக எடை போட்டிருக்கிறார் டாக்டர் அம்பேத்கார் என்பது தெளிவாகிறது.
திரு வெங்கடேசன் அவர்களின் பணி தொடரட்டும். அவருக்கும் , அவருடைய தொடரை அற்புதமாக வெளியிடும் தமிழ் ஹிந்து.காம் தளத்திற்கும் இறைஅருள் என்றும் பெருகட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.