எழுமின் விழிமின் – 4

சுவாமி  விவேகானந்தரின் எழுச்சியூட்டும்  சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<— முந்தைய பகுதி

தொடர்ச்சி..

முற்காலம் முதல் இக்காலம் வரை

பாரதத்தின் சமூகச் சட்டங்கள் எப்பொழுதுமே குறிப்பிட்ட சில காலத்துக்கு ஒரு தடவை மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளன. இந்தச் சட்டங்கள் ஆரம்ப காலத்தில் பிரம்மாண்டமான ஒரு திட்டத்தின் சேர்க்கையாக இருந்தன. காலப்போக்கில் இத்திட்டம் தானாகவே மெல்ல மலர்ந்து விரிவதாக இருந்தது. பண்டைய பாரதத்தின் மகான்களான தீர்க்கதரிசிகள் நெடுங்காலத்துக்குப் பிறகு நிகழப் போவதை முன்னோக்கிப் பார்த்தார்கள். அவர்களது ஞானத்தைப் புரிந்து கொண்டு பாராட்ட உலகம் இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.  அந்தத் தீர்க்கதரிசிகளின் வழித்தோன்றல்களே இந்த ஆச்சரியகரமான திட்டத்தின் முழு நோக்கத்தையும் புரிந்து பாராட்டத் திறனற்று இருக்கிறார்கள்! பாரதத்தின் சீர்கேட்டுக்கு இந்தத் திறமையின்மை ஒன்றேதான் காரணமாகும். முந்தையர்களின் சட்டதிட்டங்களும் பழக்க வழக்கங்களும் நல்லவையல்ல என்பதனால் தாழ்வு வரவில்லை. அவற்றை உரிய முறையில் கடைசி வரையில் கடைப்பிடிக்காததுதான் சீரழிவுக்குக் காரணம்.

இன்றைய பாரதத்தின் சித்திரம்: (*)

பூரித்து எழுந்து ஆக்கிரோஷத்துடன் பாய்ந்தோடும் ஆழமான பெரிய நதிகளின் கரையோரங்களிலே, தேவலோகத்து நந்தவனங்களையும் பழிக்கும் எழில்மிகு உய்யான மலர்ச்சோலைகளும், வானளாவ ஓங்கி நிற்கும் அற்புதமான கலையழகு மிக்கப் பளிங்கு மாளிகைகளும் விளங்க, அவற்றின் முன்னும் பின்னும் அருகிலும் கூரைகள் சிதைந்து, மண் சுவர்கள் இடிந்து, எலும்புக் கூடு போல் தெரியும் மூங்கில்கள் நீட்டிக்கொண்டிருக்கும் குடிசைகள் கும்பல் கும்பல்களாகக் காணப்பெறுகின்றன. சிறுவரும் முதியோரும் கந்தையணிந்து இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் மனச்சோர்வும் ஏழ்மையும் அவர்கள் முகத்தில் ஆழமான கோடுகளைப் பதியவைத்துள்ளன. எங்கு நோக்கிலும் பசுக்கள், எருதுகள், எருமைகள்- ஐயோ! அவற்றின் கண்களிலும் அதே சோகப் பார்வை!  அதே பஞ்சடைந்த உடல் அமைப்பு, பாதை ஓரங்களில் குப்பை, அழுக்கு- இதுதான் நமது இன்றைய பாரதம். அரண்மனைகளுக்கு அருகிலேயே சிதைந்த குடிசைகள்; கோயில்களுக்கு அருகிலேயே குப்பை மேடுகள்; பகட்டான ஆடை அணிந்தோர்களினிடையே ஒற்றைச் சிறு கோவணமணிந்த சந்நியாசிகள்; உண்டு களித்திருப்போருக்கும் இடையே பரிதாபகரமான, பஞ்சடைந்த கண்களுடைய பட்டினிகள்- இதுதான் இன்று நாம் வாழும் நாடு. இது தான் நமது சொந்தப் பூமியின் நிலை.

அந்நியனுக்குத் தெரிகிற  சித்திரம்:

பயங்கரமான பிளேக் நோயும், காலராவும் நாட்டை நாசமாக்குகின்றன. நாட்டின் மூல நாடியை மலேரியா நோய் அரித்துத் தின்கிறது. முழுப் பட்டினியும் அரைப் பட்டினியும் சகஜமாகவே ஆகிவிட்டன. சாக்காடு விளைக்கும் பஞ்சம் கொடூரத்தாண்டவமாடுகிறது. நோயும் துன்பப் பேயும் போரிடும் குருக்ஷேத்திரப் போர்க்களம் போன்ற இந்தப் பெரும் மயான பூமியில் செத்துப் போன நம்பிக்கைகள், சுறுசுறுப்பு, மகிழ்ச்சி, தைரியம் இவற்றின் எலும்புகள் எங்கும் சிதறிக் கிடக்க, அவற்றுக்கிடையே கம்பீரமான மௌன நிலையில், ஆத்மாவுடன் ஆழ்ந்த உறவுத் தொடர்பு கொண்டு வாழ்கையில் மோட்சத்தைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளுமில்லாமல், அமந்திருக்கிறான் யோகி- பாரதத்துக்கு யாத்திரையாக வரும் ஐரோப்பியரது கண்ணில் படுகிற காட்சி இதுதான். முப்பது கோடி மக்களின் தொகுதி, பார்வைக்குத்தான் மனிதர்களைப் போல் தோற்றமளிக்கிறார்கள்; உண்மையில்அவர்களது சொந்த மக்களாலும் அந்நிய நாட்டினராலும்  நசுக்கி மிதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் அவர்களது சொந்த சமயத்தைச் சார்ந்தவர்களாலும் மாற்று மதத்தினராலும் ஒடுக்கப்பட்டவர்கள்; உழைப்பிலும் துன்பத்திலும் பொறுமையோடிருப்பவர்கள்; அடிமைகளைப் போல் சுயமுயற்சியற்றவர்கள்; அவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. கடந்த காலமுமில்லை; வருங்காலமுமில்லை; எப்பொழுதுள்ள வாழ்க்கையை அதில் எவ்வித உறுதியும் இல்லாதிருப்பினும் கூட அப்படியே நீடிப்பது ஒன்றிலேயே விருப்பமும், தம்முடன் வசிப்பவர்கள் வளமாக வாழ்வது கண்டு சகியாத அடிமையைப் போல் பொறாமைக் குணமும் வாய்ந்தவர்கள்; நம்பிக்கைகள் எல்லாம் குலைந்து பக்தி சிரத்தையில்லாத மனிதனைப் போல் வாழ்கிறவர்கள். நரியைப் போல நயவஞ்சகமும், துரோகமும், மட்டரகமான தந்திரப் போக்கும்தான் அவர்களது தற்காப்பின் அடித்தளம்; சுயநலத்தின் உருவம். தம்மைவிட பலசாலிகளானவர்களின் கால் தூசியை நக்குகின்ற அவர்கள் அதே நேரத்தில் தம்மைவிடப் பலங்குறைந்தவர்கள் மீது மரண அடி வீசுபவர்கள்; பலமற்றவர்கள்; வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்ற மக்களுக்கு இயற்கையாக ஏற்படுகிற ஆபாசமான மிருகத்தனமான மூட நம்பிக்கை நிறைந்தவர்கள்; முதுகெலும்பாக எத்தகைய தார்மிக ஒழுக்கத்தையும் அமைத்துக் கொள்ளாதவர்கள்; இத்தகைய முப்பது கோடி ஆன்மாக்கள். அழுகி நாற்றமெடுத்த உடலில் புழுக்கள் நெளிவதுபோல பாரதத்தின் உடலில் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கில அதிகாரியின் கண்முன் நம்மைப் பற்றி இயல்பாகத் தெரிகிற சித்திரமே இது.

 (*) – பாரதத்தின் நிலை குறித்த மேற்கண்ட சித்திரமும்,  மேலைநாட்டினர் குறித்து கீழ்வரும்  பத்திகளும் 1880 – 1902 காலகட்டத்தைச் சார்ந்தவை  என்பதை  மனதில் கொண்டு  இவற்றைப் படிக்க வேண்டும்.  இன்றைக்கு  பாரதம்  காலனிய   அடிமைத் தனத்திலிருந்தும்  மேற்சொன்னது  போன்ற  கொடும்பஞ்சங்களிலிருந்தும் விடுபட்டு விட்டது.  அன்னியர்  குறித்த  நமது பார்வையும், பாரதம்  குறித்த  வெளிநாட்டினர் பார்வையும்  பல மாற்றங்களுக்கு   உட்பட்டு  விட்டன. ஆயினும்   தேசிய வாழ்க்கை  குறித்த  சுவாமிஜியின்  திரண்ட கருத்துக்களும் சிந்தனைளும்  காலாவதியாகி விடவில்லை.  அவற்றிலுருந்து   இன்றும் நாம் வழிகாட்டுதல் பெற முடியும்.

பாரதீயன் நோக்கில் மேலைநாட்டவர்:

புதிதாகப் பெற்ற சக்திகளால், குடிபோதை ஏறிப்போனவர்கள்; நல்லது எது, தீயது எது என்ற விவேகமற்றவர்கள்; காட்டு மிருகங்களைப் போலக் கொடியவர்கள்; மனைவிக்கு அடிமைகள்; காமவெறியர்கள்; மதுவில் ஊறிப்போனவர்கள்; கற்பு, தூய்மை பற்றி ஒன்றுமே அறியாதவர்கள்; சுத்தமான வழிமுறைகளோ,  பழக்கங்களோ கொள்ளாதவர்கள்; ஜடப்பொருள்களை மட்டுமே நம்பி, அவற்றையே அஸ்திவாரமாக்கிப் பல்வேறு முறைகளில் பயன்படுத்துகிற நாகரிகத்துடன் வாழ்கிறவர்கள்;  தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரது நாடுகளையும், பிறர் செல்வங்களையும் பலாத்காரத்தால் – தந்திரத்தால் – நயவஞ்சகத்தால் சுரண்டுகிறவர்கள்; இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு வேறு வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையற்றவர்கள்; அவர்களுக்கு உடல்தான் ஆன்மா ; அவர்களது வாழ்க்கை முழுவதும் அவர்களது புலன்களிலும் உடலைச் சார்ந்த சுகபோகங்களிலும் அமைந்துள்ளது. இங்கனம் பாரதீயன் நோக்கிலே மேலை நாட்டவன் சாட்சாத் அசுரனாகத்தான் காட்சி தருகிறான்.

வெளித் தோற்றத்திலிருந்து பெற்ற கருத்துக்கள்:

இரு தரப்பினரையும் பாரபட்சமாகவும் அறியாமையினாலும் மேலெழுந்தவாரியாகவும் நோக்குகிறவர்களுடைய கருத்துக்கள் இவை. அந்நியர்கள், ஐரோப்பியர்கள், பாரதத்துக்கு வருகிறார்கள். நமது நகரங்களில் வளப்பமான சுத்தமான பகுதிகளில் அமைந்த அரண்மனை போன்ற மாளிகைகளில் தங்கியிருந்து விட்டுத், தங்கள் தாய்நாட்டிலுள்ள நகரங்களில் அழகாகவும் ஒழுங்காகவும் அமைந்த பகுதிகளோடு நமது சுதேசிகள் வாழும் பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தமக்குக் கீழ் வேலை செய்கிற பாரதீயர்களுடன் தான் அவர்களுக்குத் தொடர்பு ஏற்படுகிறது.  கொடுந்துன்பத்தையும் ஏழ்மையையும் பாரதத்தில் காண்பது போல வேறு எங்கும் காண முடியாது என்பது உண்மையே. அத்துடன் அழுக்கும் நாற்றமும் எங்குந்தான் உள்ளது என்பதையும் மறக்க முடியாது. இத்தகைய அழுக்கு, அடிமைத்தனம், வீழ்ச்சி, ஆகியவற்றுக்கிடையே நல்லதும்கூட இருக்க முடியும் என்று ஐரோப்பிய மனம் கற்பனை செய்வதில்லை.

மறுபுறம்  ஐரோப்பியர்கள் பாகுபாடின்றிக் கிடைப்பதையெல்லாம் உண்பதைப் பார்க்கிறோம். நம்மைப்போல் தூய்மை பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. ஜாதிப் பாகுபாடுகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. மாதருடன் தாராளமாகப் பழகுகிறார்கள். மது அருந்துகிறார்கள்; நாட்டியக் கச்சேரியில் ஆணும் பெண்ணும் வெட்கமின்றித் தழுவி நடனமாடுகிறார்கள். இப்படிப்பட்ட நாட்டில் நல்லது எதுவும் இருக்க முடியுமா என்று வியப்புடன் நம்மையே நாம் கேட்கிறோம்.

இந்த இரு கருத்துக்களும் மேம்போக்கான பார்வையிலிருந்து உதித்தவை; உள்ளுக்குள்ளே, வெளித்தோற்றத்தின் அடித்தளத்தில் உள்ளதை நாம் பார்ப்பதில்லை. அந்நியர்களை நமது  சமூகத்துடன் கலந்து பழக நாம் அனுமதிப்பதில்லை. அவர்களை மிலேச்சர்கள் என்று அழைக்கிறோம். அவர்களோ நம்மை அடிமைகளாகக் கருதி வெறுத்துக் கறுப்பன் என்று அழைக்கிறார்கள். இங்கு இரு தரப்பினரில் எவரும் மறு தரப்பினரின் பின்னால் உள்ள உண்மைப் பொருளைக் கண்டிராவிடினும் இந்த இரு கருத்துக்களிலும் ஏதாவது ஓர் அம்சம் உண்மையாகவே இருக்க வேண்டும்.

வாழும் ஒவ்வொரு தேசமும் ஒரு கருத்தின் உறைவிடமாகும்:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கருத்து உள்ளது. அவனுக்குள்ளே உறைந்து வாழும் கருத்துக்கு  அந்த மனிதன் ஒரு புற வடிவம் தான். உள் கருத்தை வெளியிடும் மொழியாகவே அவனுடைய புறச்செயல்கள் உள்ளன. அதுபோலவே, ஒவ்வொரு தேசத்துக்கும் பொருத்தமான ஒரு தேசீயக் கருத்து இருக்கிறது.   இந்தக் கருத்து உலகத்துக்காக வேலை செய்கிறது.  உலகத்தைப் பாதுகாக்க அந்தக் கருத்தும் தேவையான ஓர் அம்சம் என்ற நிலை மாறிப்போனால் அதே நாளில்  அந்தக் கருத்தின் கருவூலம். அது தனிமனிதனாயினும் தேசமாயினும் சரி, அழிவை எய்துகிறது . பாரதீயர்களான நாம் இன்னமும் தான் வாழ்ந்து வருகிறோம். ஏராளமான இடர்கள், துன்பங்கள், ஏழ்மை இருப்பினும், உள்ளேயிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்பட்ட அடக்குமுறைகள் இருப்பினும் நாம் வாழ்கிறோம். அதற்குக் காரணம் நமக்கு ஒரு தேசீயக் கருத்து இருப்பதுதான். உலகத்தைப் பாதுகாக்க அக்கருத்து இப்பொழுதும் தேவைதான்.

பாரதம் இப்பொழுதும் உயிர் வாழ்கிறது. ஏனெனில் உலக நாகரிகமாகிற பொதுநிதிக்குப் பாரதம் தனது சொந்தப் பங்கினைத் தர வேண்டியிருக்கிறது. ஒரு நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையாக எந்த நல்ல குணங்களும் கிடையாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தனி மனிதர்களில் போல் மற்ற நாடுகளை விடச் சில நல்ல குணங்கள் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ ஏதேனும் ஒரு நாட்டில் இருப்பதும் காணப்படும்.

தர்மமும் மோட்சமும்:

நமக்கு முக்கியமான கருத்து மோட்சம்; மேல் நாட்டினருக்கு முக்கியமானது தர்மம். நாம் விரும்புவது முக்தி. அவர்கள் வேண்டுவது தர்மம். இங்கே தர்மம் என்ற சொல் மீமாம்சகர்களின் கருத்துப்படி உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் என்ன? மனிதனை இந்த உலகிலாவது மறு உலகிலாவது இன்பத்தைத் தேட வைப்பது தர்மம் எனப்படும். தர்மம், செயல் புரிவதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்பத்தை நோக்கி இரவு பகலாக மனிதனை ஓடவைத்து, இன்பத்துக்காக வேலை செய்ய வைப்பது தர்மமாகும்.

முக்தி என்றால் என்ன? இந்த வாழ்க்கையில் காணப்படும் இன்பம் கூட அடிமைத்தனமாகும். வரப்போகிற வாழ்க்கையின் இன்பமும் அப்படியேதான். ஏனெனில் இந்த உலகமோ மறு உலகமோ இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு வித்தியாசம்:  இந்த உலக இன்பம் இரும்புச் சங்கிலியாலான விலங்கு ஆகும். அன்றியும் இன்பம் எங்கே இருந்தாலும் சரி,  இயற்கையின் சட்டத்துக்கு உட்பட்டதால் அது சாவுக்கும் உட்பட்டதாகும். முடிவின்றி அது நீடிக்காது. ஆகவே மனிதன் முக்தன் என ஆக, வீடுபெற விழைய வேண்டும். உடலாகிய பந்தத்தை மீறிக் கடந்து அவன் அப்பால் செல்ல வேண்டும். அடிமைத்தனம் கூடாது. இந்த மோட்சப் பாதை பாரதத்தில் மட்டுமேதான் உள்ளது. வேறெங்குமில்லை.

தர்மம் முக்தியுடன் சேர்ந்து பொருந்தி வாழ்ந்த ஒரு காலம் பாரத நாட்டில் இருந்தது. யுதிஷ்டிரன், அர்ஜுனன். துரியோதனன், பீஷ்மன் போன்று தர்மத்தை வழிபட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் கூடவே முக்திக்காக விழைந்த வியாசர், சுகர், ஜனகர் போன்றோரும் இருந்தனர். புத்த மதம் தோன்றியபோது தர்மமானது அடியோடு புறக்கணிக்கப்பட்டு, மோட்சப் பாதை மட்டுமே செல்வாக்குப் பெறுவதாயிற்று.

ஹிந்து சாஸ்திரங்களும் பௌத்தர்களும்:

“வாழ்க்கையில் மோட்சத்தைத் தவிர மேலானதாக விரும்பத்தக்கது வேறு எதுவுமில்லை. நீங்கள் யாராயினும் சரி, அனைவரும் வந்து அதனைப் பெறுங்கள்” என்று பௌத்தர்கள் அறிவித்தனர். அது எப்பொழுதாவது நடக்கக்கூடிய காரியமா என்று நான் கேட்கிறேன். “நீ குடும்பஸ்தன். மோட்சம் போன்ற விஷயங்களைப் பற்றி நீ கவலைப்படக் கூடாது. நீ உனது ஸ்வதர்மத்தைச் செய்” என்று ஹிந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆம்; அப்படித்தான் கூறுகின்றன. ஒரு அடிகூட எடுத்து வைத்து நடக்க முடியாதவன் ஒரே தாவாகக் கடலையே தாண்டிக் குதிக்கப் போகிறான் போலும்! இது பகுத்தறிவுக்கு உகந்ததா? உன்னால் உன் குடும்பத்திற்கே உணவளிக்க முடியவில்லை. அல்லது உனது இனத்தாரில் இரண்டு பேர்களுக்கு உதவ முடியவில்லை; மற்றவர்களுடன் சேர்ந்து இணைந்து பொது நன்மைக்காக ஒரு சிறு வேலையைக் கூட உன்னால் செய்ய முடியவில்லை. நீ முக்தியை நோக்கி  ஓடுகிறாய். “தர்மத்தை விடப் பலமடங்கு உயர்ந்தது மோட்சம் என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் முதன் முதலில் தர்மத்தை முழுவதும் முடித்துவிட வேண்டும்” என்று ஹிந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த  இடத்தில் தான் பௌத்தர்கள் குழப்பமடைந்து எல்லாவிதமான விஷமங்களையும் செய்தார்கள். அஹிம்சை சரியானதுதான். “தீமையை எதிர்க்காதே” என்பது பெரிய விஷயம்தான். உண்மையாகவே இவை மகத்தான தத்துவங்கள் தான். ஆனால் சாஸ்திரங்கள் சொல்கின்றன:  “நீ ஒரு குடும்பஸ்தன். யாராவது ஒருவர் உன்னைக் கன்னத்தில் அறைந்தால், நீ அவனைக் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனத் திருப்பித்தாக்காது போனால் உண்மையில் பாவியாகி விடுவாய்”

குரும் வா பாலவ்ருத்தௌ  வா பிராம்மணம்  வா பஹுச்ருதம்
ஆததாயின  மாயாந்தம்  ஹன்யாதேவாவிசாரயன். (மனு. 8.350)

“உன்னை ஒருவன் கொல்ல வந்தால், அவன்  (குருவானாயினும்  சரி,   பாலகனாயினும்  சரி,  கிழவனாயினும் சரி,  நன்கு கற்ற) எந்த விதப் பிராமணனாயினும் சரி, நீ அவனைக் கொல்வதில் எந்தவிதப் பாவமும் இல்லை” என்று மனு கூறுகிறார். இது மிக மிக உண்மையானது. இந்த விஷயத்தை மறப்பதற்கில்லை.

(தொடரும்)

அடுத்த பகுதி –>

2 Replies to “எழுமின் விழிமின் – 4”

  1. அஹிம்சை பற்றி போதித்த பௌத்தம்இலங்கையில் இனவாதத்தாலும் மத வெறியாலும் உலகநாடுகள் முன் தலைகுனிந்து நிற்கிறது. மற்றைய பௌத்த நாடுகளான சீனா,வியட்நாம் போன்றனாடுகளில் அடிப்படை மனித உரிமைகள் படு கேவலமாக இருக்கின்றன இந்தியாவிலோ தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.இலங்கையிலோ தமிழர்களின் ஒரு வம்சமே அழிக்கப்பட்டு விட்டது. இன்றைய நிலையில் சீனா நாடு பிடிக்கும் ஆசையில் அருனாச்சலபிரதேசத்தை தன்னுடையது என்று கூறுகிறது. இதில் இந்தியாவினுடைய நிலை என்ன இந்தியா ஈழதமிழர்களை காப்பாற்றி தன்னுடைய இந்து தர்மத்தை நிலைநாட்டுமா அல்லது கொடிய பௌத்த தர்மத்துக்கு துணை போகுமா பௌத்தத்தை நாயன்மார்களும் ஆழ்வார்களும் எவ்வாறு கண்டித்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.எனவே இந்தியா பௌத்த பேரினவாதத்துக்கு துணை போகாது சிவபூமியாகிய ஈழத்தை காக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அத்துடன் ஆபிரகாமிய நாஸ்திக வாதிகளின் பிடிகளில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டிய கடமை எமது இந்துதலைவர்களுக்கு உண்டு. எனவே பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு துணைபோகாது இந்து தலைவர்கள் விழித்தெழுந்து ஈழத்து தமிழர்க்கு குரல் கொடுக்க முன்வரல்வேண்டும். நன்றி.நமஸ்காரம்.

  2. //தீர்க்க தரிசிகளின் வழித்தோன்றல்களுக்கே பண்டைய இந்திய சமூகச் சட்ட ஞானத்தைப் புரிந்து பாராட்ட முடியவில்லை. சட்டங்களினால் தாழ்வில்லை. அவற்றைப் பின்பற்றாமல் போனதில்தான் தாழ்வு நேர்ந்தது//

    என்பன போன்ற தங்கத்தினும் மேலான சொற்களை ஸ்வாமிஜியால் மட்டுமே பயன்படுத்த முடியும். இனி ஒரு ஸ்வாமிஜி வடிவெடுப்பார் என்று நம்பியிருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *