இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

<---- முந்தைய  பகுதி

தொடர்ச்சி..

2.1 காலம் கனிந்தது

நூறு செய்யுட்களில் நாரதர் சுருக்கமாகச் சொல்லிவிட்டுச் சென்ற இராமாயண நிகழ்ச்சியை, படிப்போர் மனத்தைக் கவர்ந்து அவர்களை நல்வழிக்கு இட்டுச் செல்லும் வண்ணம் ஒரு காவியமாக அளிப்பதற்கான காலம் கனிவதற்கு வால்மீகி முனிவருக்கு வேறு ஒரு நிகழ்ச்சி அமைய வேண்டியிருந்தது. ஓரளவு விவரங்கள் தெரிந்த உடனேயே கவிநயத்தோடும், மக்களை ஆர்வத்தோடு ஈடுபட வைக்கும் எழுச்சி மிக்க உணர்வைத் தூண்டுமாறும் ஒரு காவியம் அமைப்பது என்பது பொழுதுபோக்குடன் கூடிய வெறும் அறிவு மட்டும் சார்ந்த முயற்சி அல்ல. அது தானாகவே உள்ளத்தில் உணர்வு வெள்ளமாகப் பொங்கி, சொல் அலங்காரங்களோடு வெளிவர வேண்டும். வால்மீகி முனிவரின் ஆர்வத்தினாலும், ஆதங்கத்தினாலும் உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குண நலன்கள் தொடர்பாக இராமபிரானின் வாழும் முறை பற்றி தெரிய வந்தது. ஆனாலும் அது மட்டுமே அவருக்கு இராமயணத்தை இயற்றும் அளவுக்கு ஒரு தூண்டுதலாக அமையவில்லை. அவர் உள்ளத்தைத் தொட்டு அது சம்பந்தமான உணர்வுகளை வெளிப்படுத்த வேறொரு நிகழ்ச்சி தேவைப்பட்டது. ஏனென்றால் அந்த சமயத்தில் அவர் உலக விவகாரங்களில் ஈடுபடாத ஒரு துறவியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒரு படைப்பு என்பது உள்ளம்-உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு பௌதிக மற்றும் உயிரியல் கூடிய உருவாக்கம் ஆகும். படைத்த பின்னர் படைத்தவனும், அவனது படைப்பும் வெவ்வேறாகத் தனித்தனியே காணப்பட்டாலும், அந்தப் படைப்பே அதைப் படைத்தவன் பெயரை அவ்விருவரின் வாழ்நாள் மட்டுமன்றி பின்னரும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். அப்படி அமரத்துவம் பெறுவதனாலேயே, இன்றும் நாம் வால்மீகி முனிவரையே அவரது மற்ற பெருமைகளைவிடவும் அவர் படைப்பான இராமயணத்தினால்தானே நன்கு நினைவில் வைத்திருக்கிறோம்? சிவ-சக்தி என்பது ஒன்றே ஆனாலும், உள்ளார்ந்து இருப்பது சிவ கோணம்; அதுவே வெளியே வந்து பலப்பலவாகத் தோன்றுவது சக்திக் கோணம். ஞானிகள் கண்டுணர்ந்த உண்மை இதுவே. ஆதலால் ஒரு மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது.

அவர் நாள்தோறும் குளிக்கச் செல்லும் கவின் மிக்க சரயு நதிக் கரையில் அது நேர்ந்தது. காதலாகிக் கசிந்து உருகி ஒரு மரக் கிளையில் குலவிக் கொஞ்சிக் கொண்டிருந்த  இரு கிரௌஞ்சப் பறவைகளைக் குறி பார்த்து ஒரு வேடுவன் அம்பெய்தி ஒன்றைக் கொன்றான். வேடனை எந்தவிதத்திலும் பாதிக்காது, தங்கள் இருப்பிலேயே மெய்மறந்து, தனது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டு மரத்தின் மீது களித்து இருந்த பறவைகளைத் தனது விருப்பத்திற்காக கொல்ல முயன்ற வேடன் மேல் அவருக்குக் கட்டுக்கடங்காத கோபமும், வெறுப்பும் உண்டாயிற்று. அதனால் அவருக்கு ஏற்பட்ட துயரமே அவரை, அதுவரை வெளிவராத சந்தம் ஒன்றில் கவி நயத்துடன் ஒரு ஸ்லோகம் வழியே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அந்த வேடனைச் சபிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. அந்தச் செய்யுள்தான் இது:

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³மஸ்²ஸா²ஸ்²வதீஸ்ஸமா​: |
யத்க்ரௌஞ்சமிது²னாதே³கமவதீ⁴​: காமமோஹிதம் || 1.2.15 ||

நிஷாத³ – O! Fowler, ஏ! வேடனே!
த்வம் – you, நீ
யத் for which reason, எதற்காக
க்ரௌஞ்சமிது²னாத் – from the pair of krauncha birds, ஜோடி கிரௌஞ்சப் பறவைகளில்
காமமோஹிதம் – when they were infatuated by love, காதல் களியாட்டத்தின்போது
ஏகம் = one, ஒன்றை
அவதீ⁴: – have killed, கொன்றாய்
(தத் for that reason), அதனால்
ஸா²ஸ்²வதீ: permanently, எப்போதும்
ஸமா: for long years, பல காலமாக
ப்ரதிஷ்டா²ம்ʼ glorious, பெருமையுடன்
மா க³ம: you will never get, உனக்குக் கிட்டாது.

“ஏ! வேடனே! காதலுடன் களித்திருந்த ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகளைப் பிரித்து, ஒன்றைக் கொன்றப் பாதகச் செயலால் நீ வெகுநாட்கள் வாழமுடியாது போவாய்!”

என்று சபித்தார்.

இது ஏதோ ஒரு தற்செயலாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும், வனத்தில் இராமனுடன் நிம்மதியாக வசித்துக் கொண்டிருந்தபோது,  இராமனைப் பிரிய நேர்ந்த சீதாப் பிராட்டியாரின் கதையைச் சொல்லப்போகும் இராமாயணத்திற்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பது எவருக்கும் கண்கூடு.

வேடனை அப்படிச் சபித்தாரே தவிர, தனக்கு எப்படி கவித்தன்மையுடன் அதைச் சொல்ல வந்தது என்பதை யோசித்த வால்மீகி முனிவருக்கே நடந்தது மிக ஆச்சரியமாக இருந்தது. ஆசிரமத்திற்குத் திரும்பிய அவர், நடந்த நிகழ்ச்சியைப் பற்றித் தீவிரமாக யோசிக்கும் வேளையில், படைப்பின் பிறப்பிடமான பிரமன் அவர் முன்னே தோன்றி அவர் முன்பு நாரதரிடம் கேட்டறிந்த இராமாயண நிகழ்வைக் காவியமாகத் தீட்ட வேண்டிய காலம் கனிந்து விட்டதை உணர்த்தினார். அன்று வேடன் முன் தோன்றிய அந்தச் சந்தத்திலேயே வால்மீகியும் இராமாயணத்தை இயற்றினார். இப்படியாக நம் பாரத தேசத்திலேயே முதன் முறையாக கவிநயத்துடன் தோன்றிய முதல் காவியமாக இராமாயணம் உருவாயிற்று. மக்கள் அனைவரிடமும் இரக்கம், தயாளம் மற்றும் நல்லது நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன், கவித்துவமும் அவரிடம் புகுந்த போதுதான் வால்மீகிக்கு இராமாயணம் இயற்றுவது சாத்தியமாயிற்று. எதுவும் முறைப்படி நடப்பதற்கு, ஒருவனது உத்வேகம் மட்டுமல்லாது நிகழ்வு நடப்பதற்கான காரண சூழ்நிலை உருவாகும் காலமும் கனிந்து வரவேண்டும்.

2.2 தசரதர் ஆட்சியில்

அயோத்யாவில் தசரதர் ஆட்சி புரியும்போது அவரிடம் ஆலோசனை சொல்லும் அமைச்சர்களும், மற்ற அதிகாரிகளும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விதிமுறை வகுத்ததைப் பற்றி வால்மீகி சொல்கிறார். அவையெல்லாம் அன்று மட்டுமல்லாது இன்றும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. எந்த அமைச்சரோ, அதிகாரியோ எவரிடமும் பேசும் போது இன்முகத்துடன் இருக்கவேண்டும்; எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்கள் தயக்கத்துடனோ, உண்மைக்குப் புறம்பாகவோ பேசக் கூடாது. அதிகாரிகள் அரசு விவகாரத்தில் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். தங்கள் நண்பர்களின் கருவிகளாக அவர்கள் செயல்படக் கூடாது. அப்படி நண்பர்கள் ஏதேனும் செய்யச் சொல்லியோ, அல்லது ஆலோசனையோ கொடுத்தால் அதன் விவரங்களைத் தீர ஆராய்ந்து பலாபலன்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களிடமோ வேறு எவரிடமோ கோபத்திலோ, அல்லது தனது ஆதாயத்துக்காகவோ எதையும் செய்யக்கூடாது.  குற்றவாளி என எவரேனும் கருதப்பட்டால் அது பற்றித் தீர விசாரணை செய்ய அதற்கான சட்ட திட்டங்களுக்கு அவர்களை உட்படுத்தி, தக்க தண்டனை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிகாரத்தில் உள்ள எவரும் குற்றவாளி ஒருவேளை தனது மகன்களே ஆனாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்கு உதவக்கூடாது. இவ்வாறாக அவர் கூறுவதுதான் கீழ் வரும் செய்யுட்களில் தெரிகின்றது.

கீர்த்திமந்த: ப்ரணிஹிதா: யதா²வசனகாரிண: |
தேஜ: க்ஷமாயஸ²:ப்ராப்தா ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: || 1.7.6||

கீர்த்திமந்த: renowned, கீர்த்தியுடன்
ப்ரணிஹிதா: fixing their attention on their thoughts, எண்ணங்களில் கவனம் செலுத்துவோராக யதா²வசனகாரிண: doing in accordance with word, சொல்வதைச் செய்வோராக
தேஜ:க்ஷமாயஸ²:ப்ராப்தா: possessing splendour forgiveness and fame, அழகும், புகழும், மன்னிக்கும் ஆற்றலும் கூடியோராக
ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: speaking with a smile, இன்முகத்துடன் பேசுவோராக.

க்ரோதா⁴த்காமார்த²ஹேதோர்வா ந ப்³ரூயுரன்ருʼதம்ʼ வச: … || 1.7.7||

க்ரோதா⁴த் either in anger, கோவத்தினாலோ
காமார்த²ஹேதோர்வா or for the reason of pecuniary gains or for desire, பேராசையினாலோ, பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ
அன்ருʼதம் untruth or unjust, நேர்மைக்கும், நீதிக்கும் புறம்பாகவோ
வச: word, வார்த்தைகளை
ந ப்³ரூயு: do not utter, சொல்லாதவர்கள்.

குஸ²லா வ்யவஹாரேஷு ஸௌஹ்ருʼதே³ஷு பரீக்ஷிதா: |
ப்ராப்தகாலம்ʼ து தே த³ண்ட³ம்ʼ தா⁴ரயேயுஸ்ஸுதேஷ்வபி || 1.7.8||

தே those ministers, அந்த அமைச்சர்கள்
வ்யவஹாரேஷு in their dealings, தங்கள் பொறுப்புகளில்
குஸ²லா: competent, தலை சிறந்தோர்
ஸௌஹ்ருʼதே³ஷு in friendship, நட்பு வட்டாரத்தில்
பரீக்ஷிதா: tested, சரி பார்த்து
ஸுதேஷ்வபி even in the matter of sons, தங்கள் மகன்கள் விஷயத்திலும்
ப்ராப்தகாலம் appropriately, தக்கதொரு
த³ண்ட³ம் punishment, தண்டனை
தா⁴ரயேயு: used to impose, வழங்க வேண்டி.

அவர்களும் அப்படி கண்ணியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் இருந்தார்கள் என நம்ப இடமிருக்கிறது. அதையெல்லாம் கேட்கும்போது தற்காலத்திய அவல நிலையையும் நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இன்று அரசில் உள்ள பெரும்பான்மையோர் மக்களிடம் முரட்டுத்தனமாகவும், வாக்குவாதம் செய்பவர்களாகவும், பொய் பேசத் தயங்காதவர்களாகவும், கையூட்டுப் பெறுபவர்களாகவும், உலக மகா லஞ்ச ஊழல் பேர்வழிகளாகவும், தன் சுற்றத்திற்கே நன்மை செய்பவர்களாகவும், குற்றவாளியைத் தப்புவிக்கவிட்டு நிரபராதிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பவர்களாகவும் இருப்பது, அன்றைய மேன்மையான நிலையிலிருந்து ஒரு மோசமான நிலைக்கு எப்படி மாறி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நம் அனைவருக்கும் ராம ராஜ்ஜியம் வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும். அப்படிப்பட்ட உன்னத நிலை இல்லாவிட்டாலும், நமக்கு மேலே சொல்லப்பட்ட தசரதரது போன்ற ஒரு ஆட்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கம்தான் மிஞ்சுகிறது.

2.3 தானம் தருவோனின் மனோநிலை

தசரதருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தபோது, அதற்கேற்ப யாகங்களை அவர் செய்தால் அவருக்கு வாரிசாக சந்ததி உருவாகும் என ஆலோசனை சொல்லப்பட்டது. யாகம் என்றாலே, தனது என்று எதையும் தக்க வைத்துக் கொள்ளாமல், தான, தருமங்கள் பல செய்வதன் மூலமும் அனைத்தையும்  தியாகம் செய்வது என்று பொருள். அதற்கேற்ப அவரும் தன் செல்வங்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்ததும் அல்லாமல், தனது ராஜ்ஜியத்தையும் தானமாகக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பெற்றவர்களோ, எப்படி ராஜ்ஜியத்தை ஆளுவது என்று அறியாது, நன்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அவருக்கே அதைத் திருப்பிக் கொடுத்து, அவரையே அரசுக் கட்டிலில் அமர்த்துகின்றனர்.

வாழ்க்கை என்றாலே மற்றோருக்கு அளித்து, தானும் மற்றவரிடம் இருந்து பெறல் என்றுதான் ஆகிறது. அதுவே எல்லோரும் எல்லோரையும் சார்ந்து இருப்பது என்றும் சொல்லலாம். சில சமயம் நாம் நமது ஆசைக்காகக் கொடுக்காவிட்டாலும், நமது முன்னோர் செய்துகாட்டிய வழக்கத்தை விடாது காக்கும் போதும் தான தர்மங்கள் செய்கிறோம். அப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு கொடுப்பதற்கு ஆசை இல்லாது போகலாம். அது மாதிரியான தருணங்களில், அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, தசரதரின் ஆஸ்தான குருவாகிய வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று இப்படிக் கூறுகிறார்.

தத:ப்ரீதோ த்³விஜஸ்²ரேஷ்ட²ஸ்தான் ஸர்வானித³மப்³ரவீத் |
அவஜ்ஞயா ந தா³தவ்யம்ʼ கஸ்யசில்லீலயா(அ)பி வா|| 1.13.30||
அவஜ்ஞயா க்ருʼதம்ʼ ஹன்யாத்³தா³தாரம்ʼ நாத்ர ஸம்ʼஸ²ய:|

தத: then, அப்போது
ப்ரீத: pleased, திருப்திப்பட்டு
த்³விஜஸ்²ரேஷ்ட²​: best among brahmins, அந்தண சீலரான (வசிஷ்டர்)
தான் ஸர்வான் addressing all of them, அவர்களைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னார்
கஸ்ய சித் to any one, எவருக்கும்
அவஜ்ஞயா with insult, அவமரியாதையுடன்
லீலயாபி வா or casually, ஏனோ தானோ என்று
ந தா³தவ்யம் should not be gifted, அளிக்கப்படக் கூடாது
அவஜ்ஞயா with contempt, வெறுப்புடன்
க்ருʼதம் done, செய்தல்
தா³தாரம் donor, கொடுப்பவனுக்கு
ஹன்யாத் destroys, அழிவு தரும்
அத்ர in this aspect, இது பற்றி
ஸம்ʼஸ²ய: ந no doubt, ஐயம் வேண்டாம்.

தானம் அளிக்கும்போது தானம் பெறுபவரை அவமதிக்கும்படியோ, அல்லது அதை ஒரு தமாஷாகவோ செய்யக்கூடாது. அப்படி வேண்டா வெறுப்பாகச்  செய்யும் எவனுக்கும் தானத்தினால் வரும் நன்மை கிடைக்காது; மாறாக அவனுக்கு நிச்சயமாக அது அழிவு தரும்.

தானம் அளிப்போரும், தானம் பெறுவோரும் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒன்றைக் கொடுக்கும்போது ஆத்மார்த்தமான மனநிறைவுடன் ஒருவன் வழங்குதல் அவசியம். தானம் பெறுபவனை எவ்விதத்திலும் அவமதிக்கக்கூடாது. தைத்திரீய உபநிடதமும் இவ்வாறு கூறுகிறது: “ஸ்ரத்தயா தேயம், அஸ்ரத்தயா அதேயம்”. அதாவது கொடுக்கும்போது, அதைப்  பெறுபவனுக்கு மரியாதை தரும் வண்ணம் சிரத்தையுடன் கொடு, அசிரத்தையுடன் ஏனோ தானோ என்றெண்ணிக் கொண்டு கொடுக்காதே.

(தொடரும்)


அடுத்த பகுதி —->

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2”

  1. ‘வால்மீகி’யில் தொடங்கி ‘தைத்ரீய’த்தில் நிலை பெற்றுள்ள இந்த ஆக்கம் அருமை. தொடர்ந்து வால்மீகியின் படைப்பை அவர் நடையிலேயே எழுதுங்கள். ராம பிரானை நினைப்பதும் படிப்பதும் கேட்பதும் இன்பம். ராம பிரானை நினைப்பிப்பதும் படிப்பிப்பதும் கேட்பிப்பதும் அதனினும் இன்பம். ஆக, எங்களினும் உங்களுக்குப் பன்மடங்கு இன்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *