இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

17.1 எவர்க்கும் தடுமாற்றம் வரும்

தாரா கோட்டை வாசலுக்கு வந்து லக்ஷ்மணனைப் பார்த்து முகமன் கூறி, அவன் ஏன் கோபமாக இருக்கிறான் என்று கேட்கிறாள். சீதையைத் தேடும் பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், தானும் இராமரும் கோபமாய் இருப்பதாக லக்ஷ்மணன் சொன்னான். மேலும் மழைக் காலத்திற்குப் பின் சீதையைத் தேடித் தருவதாக வாக்குக் கொடுத்த சுக்ரீவன், மழைக் காலம் முடிந்து போயும் இன்னும் எந்த முயற்சியும் எடுக்காது, அரண்மனையில் குடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் சொன்னான். அதற்கு தாரா அப்படி சுக்ரீவன் அரண்மனையில் இருப்பது உண்மையானாலும், அவன் கொடுத்த வாக்கையும், அதற்குண்டான தனது கடமைகளையும் மறக்கவில்லை என்று அவனுக்கு சமாதானமாகச் சொன்னாள். தேடுவதற்கு முக்கியமாக ஒரு பெரிய சேனையை உருவாக்கக் கட்டளையும் இட்டிருக்கிறான்; இன்னும் சில நாட்களில் பல லக்ஷக்கணக்கான வானரர்கள் திரண்டதும் நாம் தேடும் பணியினைத் தொடங்கி விடலாம். ஆனானப்பட்ட முனிவர்களிலேயே பலரும் தான் கொடுத்த வாக்கை மறந்துவிட்டு, கேளிக்கைகளிலும் ஈடுபட்டு, தன் துறவு நிலைக்கேற்ற பழக்க வழக்கங்களிலிருந்தும் தவறிப் போயிருக்கின்றனர்; சுக்ரீவன் ஒன்றும் பெரிய ஞானிகூட இல்லையே என்று சுக்ரீவனை விட்டுக்கொடுக்காதபடியும், அவள் பேசினாள்.

மஹர்ஷயோ த⁴ர்மதபோ(அ)பி⁴காமா: காமானுகாமா: ப்ரதிப³த்³த⁴மோஹா:| …..4.33.57||

த⁴ர்மதபோ(அ)பி⁴காமா: righteous and austere, நேர்மையும் புனிதமும்
மஹர்ஷய: sages, முனிவர்கள்
காமானுகாமா: those who develop desires, ஆசைகளை வளர்ப்பவர்கள்
ப்ரதிப³த்³த⁴மோஹா: one who is deluded by passion, ஆசையால் மோசம் போனவர்கள்.

நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு.

நாம் எவரையேனும் மதிப்பிட வேண்டுமானால், நமது அளவுகோல் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். ஆட்களைப் பொறுத்து அது மாறக்கூடாது. ஒரே மாதிரியான செயலுக்கு விஸ்வாமித்திரர் என்றால் ஒரு வழிமுறை என்றும் சுக்ரீவன் என்றால் வேறு என்றும் இருக்கக்கூடாது. தாரா சொல்வதற்கு அப்பாலும் போனால், ஒருவரின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்பதும் உண்மையே.

17.2 நன்றி மறப்பது நன்றன்று

தாரா சொல்வதைக்கேட்டு லக்ஷ்மணன் சமாதானம் ஆகவில்லை. தங்களுடைய உதவி பெற்றுக்கொண்ட சுக்ரீவன் அதை மறந்துவிட்டு, இராமருக்கு உதவி தேவை என்கிறபோது அலட்சியமாய் இருப்பது ஒரு நன்றி மறந்த செயல் என்றும், அதைத் தான் அவனிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் சுக்ரீவனிடமே சொன்னான். நன்றி மறக்கும் பாவச் செயலைப் போக்குவதற்கு பரிகாரம் ஏதும் கிடையாது என்றும் சொன்னான்.

…. க்ருʼதக்⁴னே நாஸ்தி நிஷ்க்ருʼதி:|| 4.34.12||

க்ருʼதக்⁴னே for an ungrateful one, நன்றி மறப்பவனுக்கு
நிஷ்க்ருʼதி: such an atonement, ஒரு பரிகாரம்
நாஸ்தி not there, கிடையாது.

நன்றி மறக்கும் பாவச் செயலைப் போக்குவதற்கு பரிகாரம் ஏதும் கிடையாது.

வால்மீகி முனிவர் இராமாயணத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டதுபோல் நன்றி மறவாது இருப்பது என்பது ஒருவனின் முக்கியமான குணங்களில் ஒன்று. ஒருவரிடம் உதவி பெற்றுக்கொண்டு அவருக்கு தேவை என்கிறபோது உதவாமல் இருப்பது நன்றி மறப்பதே. அதனால் வரும் பாவத்தைத் துடைக்க முடியாது.

17.3 எண்ணித் துணிக கருமம்

சுக்ரீவன் லக்ஷ்மணனை தானே சமாதானப்படுத்தி, தனது கடமையை மறக்கவில்லை என்றும், ஒரு பெரிய போர்ப் படைக்குத் தான் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி, சேர்ந்துள்ள வானர வீரர்களின் பிரமிப்பூட்டும் எண்ணிக்கையைக் கொடுக்கிறான். அவ்வளவு வீரர்களும் அவர்களது வெவ்வேறு பிரிவுச் சேனாதிபதிகளும் கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனிடம் வந்து சேர்ந்தபின், அவர்களை இராமருக்கும் அறிமுகம் செய்தான். உணவும், நீரும் கிடைக்கும் வெவ்வேறு இடங்களில் அவர்கள் தங்கவும் வசதி செய்தாயிற்று.

அர்பு³தை³ரர்பு³த³ஸ²தைர்மத்⁴யைஸ்²சாந்த்யைஸ்²ச வானரா:|
ஸமுத்³ரைஸ்²ச பரார்தை⁴ஸ்²ச ஹரயோ ஹரியூத²பா:|| 4.38.31||

அர்பு³தை³: one hundred millions, பத்து கோடி
அர்பு³த³ஸ²தை: hundreds of arbudas, நூற்றுக்கணக்கான பத்து கோடிகள்
ஸமுத்³ரைஸ்²ச in samudras, ஒரு கோடி கோடிகளும்
அந்த்யேஸ்²ச in anuyas, பத்து கோடி கோடிகளும்
மத்⁴யைஸ்²ச inmadhyas, நூறு கோடி கோடிகளும்
பரார்தை⁴ஸ்²ச in paradhyas, ஆயிரம் கோடி கோடிகளும்
ஹரய: = வானரா: vanaras, வானரர்கள்.

தமிழில் ‘எண்’ என்ற சொல்லிற்கு எட்டு, யோசி, எத்தனை என்று எண்ணுவது (அதிலிருந்து வருவது எண்ணிக்கை) என்ற அர்த்தங்களும் வரும். இங்கு நாம் காண வேண்டியது, எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது என்பதே. நமக்கு இன்று கோடிதான் பெரிய எண். சில கொடுத்து வைத்த அரசியல்வாதிகள் மூலம்தான் லக்ஷம் கோடிகளைப் பற்றியே அறிய வந்திருக்கிறோம். சாதாரணமாக ஒருவன் நான்கைந்து மைல் தொலைவில் உள்ள அடுத்த ஊருக்குப் போய்வருவதே பெரிய தூரம் என்று இருந்திருக்கும் வால்மீகி காலத்திலேயே இவ்வளவு பெரிய எண்கள் பற்றிய அறிவு இருந்திருக்கிறது என்பது மிக ஆச்சர்யம்தான். இதில் “பரார்த்யா” என்னும் மிகப் பெரிய எண்ணிற்கு ஒன்று எழுதி அதைத் தொடர்ந்து பதினேழு பூஜ்யங்களை எழுதவேண்டும். இதேபோல பெரிய எண்களையும் தவிர, மிகச் சிறிய பின்னத்தையும் குறிக்கும் எண்களுக்கும் பெயர்கள் வடமொழியில் மட்டும் அல்லாது, தமிழிலும் அன்றே இருந்திருக்கின்றன. எண்களுக்கும், மற்ற அளவைகளுக்கும் உள்ள தமிழ்ப் பெயர்களை இந்தத் தளக் குறியீட்டில் விவரமாகக் காணலாம்.

17.4 இதை இவன் முடிக்கும்

அந்த பிரம்மாண்டமான சேனையை சுக்ரீவன் இராமரின் உதவிக்கு என்று அர்ப்பணித்தான். இராவணன் அபகரித்துக் கொண்டு போன சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதே அவர்களது முதல் கடமையாக இருந்தது. தேடுவதற்கும், அதற்குப் பின் தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளுக்குமான விவரங்களை முன்கூட்டியே திட்டமிடவும், அவை ஒவ்வொன்றையும் செவ்வனே செய்து முடிக்கவும் வேண்டிய திறமையும், அனுபவமும் சுக்ரீவனுக்கு நிறையவே இருந்தன. அண்ணன் வாலி அவனை முன்பு துரத்தும் காலத்தில் அவன் வெவ்வேறு இடங்களில் மறைந்து வாழ்வதற்கு அவ்வப்போது ஓடிக்கொண்டே இருந்ததால், அந்த வட்டாரத்தில் உள்ள மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், குளங்கள், ஆறுகள், கடல் இவை எல்லாவற்றின் விவரங்களையும் அவன் விரல்நுனியில் வைத்திருந்தான். ஓர் இடத்தின் விவரங்களையும், தன்மைகளையும் நன்றாக அறியவேண்டும் என்றால் அங்கு நடந்தோ, ஓடியோ நேரிலே பார்ப்பதுதான் சரியான முறை என்பதாலும், அதை சுக்ரீவன் அனுபவித்திருப்பதால் அதன் வழியே செல்லவேண்டிய சேனைக்கு அவனே அதிபதியாக இருப்பது நல்லது என்று அவனை இராமர் சேனாதிபதியாக பொறுப்பில் இருக்கச் சொன்னார்.

நாஹமஸ்மின் ப்ரபு⁴: கார்யே வானரேஸ²! ந லக்ஷ்மண:|
த்வமஸ்ய ஹேது: கார்யஸ்ய ப்ரபு⁴ஸ்²ச ப்லவகே³ஸ்²வர! || 4.40.13||

ப்லவகே³ஸ்²வர! O lord of monkeys, குரங்குக் கூட்டத்தின் அதிபதியே!
வானரேஸ² king of vanaras, வானரர்களின் தலைவனே!
அஹம் I, நான்
அஸ்மின் in this, இதில்
கார்யே in the task, இந்த வேலைக்கு
ப்ரபு⁴: a competent one, பொருத்தமானவன்
ந not, இல்லை
லக்ஷ்மண: Lakshmana, லக்ஷ்மணன்
ந not, இல்லை
அஸ்ய of this, இதை
கார்யஸ்ய of the task, வேலையை
ஹேது: cause, காரணம்
த்வம் ப்ரபு⁴ஸ்²ச you are competent, நீயே பொருத்தமானவன்.

வானரர்களின் தலைவனே! நானோ, லக்ஷ்மணனோ இந்த வேலைக்குப் பொருத்தமானவன் இல்லை, நீயே பொருத்தமானவன் என்பதால் குரங்குக் கூட்டத்திற்கு நீயே அதிபதி.

“இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கும் இதுவும் ஒன்றுதானே. வள்ளுவம் எழுதிப் பயனில்லை; வள்ளுவம் தனக்கில்லை, மற்றவர்க்கே என்பதை நாம் தள்ளுவம் என்றே கொள்ளுவோம். ஒரு வேலையில் அனுபவமும், தேர்வும் உள்ளவர்களே அதில் சிறந்தவர்கள் ஆக முடியும். அப்பேர்ப்பட்ட ஒருவரை அந்த இடத்திற்கு நியமிப்பதே எவரும் விரும்பக்கூடிய செயல். ஆனால் நாம் இன்று காண்பதென்ன? சொல்லவும் முடியாத வேறு பல காரணங்களுக்காக, திறமையற்றவர்களும் பதவி வகிப்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். இதை மக்களின் அறியாமை என்பதா? அல்லது தெரிந்தும் தெளியாமை என்பதா? அல்லது அமர்த்துபவரின் சுயநலம் என்பதா? வாய்ப்பு கொடுத்தும் எதற்கு ஒருவர் சரிவர அமையவில்லையோ, அதற்கு வெவ்வேறு ஆட்களை அமர்த்திப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் தனது இடம் பறிபோய் விடக்கூடாதே என்ற தன்னலத்தினால், பொருந்தாதவரை ஓரிடத்தில் அமர்த்தி, அவரால் தமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் கருத்தில் கொண்டு, அதுதான் ராஜ தந்திரம் என்றும் சொல்லி அவர் என்ன செய்தாலும் சரியே என்று கட்டியம் கூறிக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே.

17.5 பட்டறிவு

எந்த எந்த இடத்தில் போய் சீதையைத் தேட வேண்டுமோ, அந்தந்த இடங்களின் விவரங்களைக் கொடுத்து, எவர் எதை எப்படிச் செய்யவேண்டும் என்ற விவரங்களோடு ஆணைகளைக் கொடுப்பதில் சுக்ரீவன் ஒரு மிகச் சிறந்த தலைவனாக விளங்கினான். அந்த இடத்தில் எந்தெந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ராவணன் சீதையை ஒளித்து வைத்திருக்கலாம் என்று அனுமானித்து அவன் ஆட்களை அனுப்பினான். மலைகள், குன்றுகள், குகைகள், ஏரிக்கரை மற்றும் ஆற்றங்கரை அருகேயுள்ள சோலைகள், வனங்கள், பாலைவனப் பிரதேசங்கள், மற்றும் நீர் சூழ்ந்த தீவுப் பகுதிகள் எல்லாவற்றையும் வானரர்களுக்கு விவரமாகச் சொல்லிவிட்டு, எந்த இடத்திலும் ஒரு அங்குலம் கூட இடைவிடாது பார்க்கச் சொன்னான். அவை எல்லாம் ஒரேயொரு மாத கால அவகாசத்திற்குள் முடிக்கப்பட்டு, தனக்கு எல்லா விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்று காலக்கெடுவும் விதித்தான். கொடுக்கப்பட்ட வேலையை எவர் சரிவர செய்யாமல் இருந்தாலோ, சோம்பித் திரிந்துகொண்டிருந்தாலோ, அல்லது காலம் தாழ்த்தினாலோ அவர்களுக்குப் பெரிய தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்து அனுப்பினான்.

சரியான விவரங்களைச் சரியான நபர்களுக்குச் சரியான அளவு சொல்லி, வேலையைச் செய்ய சரியான கால அளவும் நிர்ணயித்து, அதைச் செய்யாமலோ அல்லது சரிவரச் செய்யாதிருந்தாலோ என்ன தண்டனை உண்டு என்பதையும் முன்கூட்டியே சொல்லிக்கொண்டிருக்கும் சுக்ரீவனின் திறமையைப் பார்த்து இராமர் ஆச்சரியப்பட்டுப் போனார். இவனா ஒன்றும் செய்யவில்லை என்று நாங்கள் முன்பு நினைத்தோம் என்றும் குறுகினார். இந்தப் பிரதேசத்தைப் பற்றி இவ்வளவு விவரங்கள் எப்படித் தெரியும் என்று சுக்ரீவனைக் கேட்க, அவனும் வாலி தன்னைக் கொல்வதற்குத் துரத்தும்போது ஓடி ஒளிந்த கதையைச் சொல்லி, அந்த இடங்களைப் பற்றியெல்லாம் நூல்களைப் படித்தோ அல்லது பிறர் சொல்லிக் கேட்டதாலோ அறிந்தவை அல்ல; தன் நாடோடி வாழ்வில் அலைந்து திரிந்ததால் தன் கால்கள் பதிந்த இடங்கள் என்றும் சொல்கிறான்.

.. ஏவம்ʼ மயா ததா³ ராஜன்ப்ரத்யக்ஷமுபலக்ஷிதம்|| 4.46.24||

ராஜன் King, அரசரே!
ஏவம் in that manner, அப்படியாக
ததா³ then, அப்போது
ப்ரத்யக்ஷம் saw directly, நேரே பார்த்தது
மயா by me, என்னால்
உபலக்ஷிதம் is surveyed, அளக்கப்பட்டது

அரசரே! அப்படியாக அப்போது (நிலங்கள் முழுவதும்) நேரே பார்த்தது, என்னால் அளக்கப்பட்டது.

வால்மீகி இங்கு சொல்வதுபோல, என்றுமே வெறும் நூல்களை மட்டும் படித்து அறிவதைவிட பார்த்தும், இருந்தும் அனுபவித்து அறியும் அறிவே சிறந்தது.

17.6 சிறப்பு, சிறப்பு இல்லையேல் இறப்பு

இளவரசன் அங்கதன் தலைமையிலான வானரர்கள் தெற்கு நோக்கிச் சென்றனர். அவர்கள் கடந்து சென்ற வறண்ட பகுதி ஒன்றில் அவர்கள் பல நாட்கள் உண்ண உணவு கிடைக்காது பட்டினியாலும், குடிக்க நீர் கிடைக்காமல் தாகத்தாலும் தவித்தனர். அந்தச் சமயம் ஒரு நாள் ஒரு குகையிலிருந்து நீர்ப் பறவைகள் பறந்து வருவதைப் பார்த்தார்கள். அவைகளைப் பார்த்ததும் அவர்களுக்கு அங்கு நீர் இருக்கும் என்று தோன்றவே அந்த மலைக்குகைக்கு விரைந்து சென்றார்கள். அது ஸ்வயம்பிரபா என்ற பெண்ணரசி ஒருவரின் ஆளுமையில் இருந்த இடம். அங்கு தெள்ளிய நீர்ச் சுனைகளும், நல்ல பழங்கள் தரும் செடி, கொடி, மரங்களும் அடர்ந்து இருந்த ஒரு அழகிய தோட்டமே இருந்தது. ஸ்வயம்பிரபா கொடுத்த இன்முக வரவேற்பிலும், தேவைக்கு ஏற்ப எவருக்கு எது வேண்டுமோ அதைப் பறித்துச் சாப்பிட்டு நீரும் குடிக்கலாம் என்ற அவளது தாராள வார்த்தைகளாலும், அவர்கள் வயிறு புடைக்க உண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்தக் குதூகலத்தில் அவர்களது காலக் கெடுவான ஒரு மாதம் கிட்டத்தட்ட ஓடிவிட்டது. சீதையோ அவர்கள் அதுவரை தேடி அலைந்த எந்த இடத்திலும் காணப்படவில்லை. எந்த நல்ல முடிவையும் தாங்கள் அதற்குள் சுக்ரீவனுக்குத் தெரிவிக்கவில்லை என்றால் அதற்குத் தண்டனை உண்டு என்பதும் அவர்கள் கவலையாய் இருந்தது. அவர்களது பிரச்சினையைக் கேட்ட ஸ்வயம்பிரபா அவர்களிடம் இரக்கம் கொண்டு, அனைவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் மந்திர சக்தியால், அவர்கள் இறுதியாய்த் தேடவேண்டிய கடலோரப் பகுதிக்குக் குண்டுக்கட்டாய் இடம்பெயரச் செய்கிறாள். அங்கும் சீதையைப் பற்றி ஏதும் தெரியாமல் போய், நாட்களும் ஆனதுமே அவர்களுடன் இருந்த அனுமனிடம் குழுத் தலைவனான அங்கதன், மேற்கொண்டு செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை கேட்கிறான். தங்கள் தோல்வியை சுக்ரீவனிடம் ஒப்புக்கொண்டு அதற்குத் தண்டனையாக சிறைவாசம் அனுபவிப்பதை விட தான் உயிர் விடுவதே மேல் என்கிறான்.

ப³ந்த⁴னாத்³வா(அ)வஸாதா³ன்மே ஸ்²ரேய: ப்ராயோபவேஸ²னம்| … 4.55.11||

ப³ந்த⁴னாத்³வா with imprisonment or, சிறைத் தண்டனையா அல்லது
அவஸாதா³த் with inflicting pain, வலியுடன் கூடிய தண்டனையா
மே me, எனக்கு
ப்ராயோபவேஸ²னம் by fasting unto death, பட்டினி இருந்து சாவது
ஸ்²ரேய: is better, மேலானது.

சிறைத் தண்டனையா அல்லது கொடும் தண்டனையா, நான் பட்டினி கிடந்தது சாவதே மேலானது.

பிரயோபவேசனம் என்பது உணவு எதுவும் அருந்தாமல் இறந்து போகும் செயல். தற்கொலை ஒரு தவிர்க்கப்பட வேண்டிய அருவருக்கத்தக்கச் செயல். ஆனால் இறப்பதுதான் தனக்கு இருக்கும் ஒரே வழி என்ற நிலை வருமானால், ஒருவன் உணவை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து இறப்பை எதிர்நோக்குதல் என்பது கருணைக் கொலை சட்ட பூர்வமாக இருந்த அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்று. சமண முனிவர்களும் பிரயோபவேசனம் மூலம் இறப்பைத் தழுவினர். அண்மைக் காலத்தில் அண்ணல் மகாத்மா காந்தியும் இறக்கும் வரை உண்ணாநோன்பு இருந்து ஆங்கில ஆட்சியாளர்களை விழிக்க வைத்து தன் வழிக்குக் கொண்டுவந்திருக்கிறார். அதையெல்லாம் கேள்விப்பட்ட நமக்கு இப்போதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் உண்ணாவிரதம் என்பது கேலிக்கூத்தே.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17”

  1. Please publish the atrocitoes of HR &CE on temple land encroachment – 6 Lakh acres agri land is not giving any income to temples. Politicians are protecting tenants and buying up the tenancy rights inch by inch… S Rangarajan 9840015710

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *