இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

15.1 அக்னி சாட்சி

பம்பா எரிக்கரையோரமாய் இரண்டு மனிதர்கள் வில், அம்பு, வாள் இவைகளுடன் வந்துகொண்டிருப்பதை ரிஷ்யமுக மலை மேலிருந்த ஒரு கண்காணிப்பு மூலையிலிருந்து சுக்ரீவன் பார்த்தான். தன்னைக் கொல்லத்தான் வாலி அவனுடைய ஒற்றர்களை அனுப்பியிருக்கிறானோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அப்போது அவனுடன் கூட இருந்த அவனது அறிவுமிக்க அமைச்சரான அனுமான் அப்படி ஆயுதம் தாங்கி அந்த மலைப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் சந்தேகப்படுவது தவறு என்று ஆலோசனை சொன்னான். மேலும் அவர்கள் யார், எதற்காக அங்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து அறிவது நல்லது என்றும் சொன்னான். அதை ஒத்துக்கொண்ட சுக்ரீவன் அனுமனையே அதற்கு அனுப்பி வைக்க, அவனும் வந்து அவர்களுடன் இதமாகவும், பதமாகவும் பேசி அவர்கள் தசரத மகாராஜாவின் புதல்வர்கள் இராம-லக்ஷ்மணர்கள் என்றும், இராமரின் மனைவி சீதை காணாமல் போனதால் அவளைத் தேடும் பணியில் சுக்ரீவனின் உதவியை அவர்கள் நாடி வந்திருப்பதாகவும் அறிகிறான்.

வந்திருப்பவர்கள் வாலியின் ஒற்றர்கள் அல்ல என்று தெரிந்ததால் மகிழ்ந்து, அனுமன் அவர்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். சுக்ரீவனிடம் அறிமுகம் செய்துகொண்ட இராமர், தான் சீதையை இழந்திருப்பது போலவே சுக்ரீவனுடைய மனைவியும் அண்ணன் வாலியால் அபகரிக்கப்பட்டுள்ளாள் என்றும் மேற்கொண்டு அறிகிறார். ராஜ்ஜியத்தையும் இழந்து, மனைவியையும் அண்ணனிடமே இழந்துள்ள சுக்ரீவனுக்கு, தான் வாலியை அடக்கி அனைத்தையும் மீட்டுத் தருகிறேன் என்று சுக்ரீவனுக்கு வாக்கு கொடுக்கிறார். அதேபோல இராமரும் தவிப்பதைக் கேட்ட சுக்ரீவன்,  தன் பங்கிற்கு சீதையை மீட்கும் பணியில் தான் எல்லாவிதமான உதவிகளும் செய்வதாக வாக்கு கொடுக்கிறான். இப்படியாக தேவைக்கேற்ப ஒரு கூட்டணி அங்கு உருவாகிறது. அங்கேயே அவர்கள் அக்னி வளர்த்து இருவரும் அக்னி சாட்சியாய் ஒருவருக்கொருவர் சொன்ன வாக்கை உறுதிபடுத்திக் கொள்கிறார்கள்.

 

ததோ(அ)க்³னிம்ʼ தீ³ப்யமானம்ʼ தௌ சக்ரதுஸ்²ச ப்ரத³க்ஷிணம்|| 4.5.15||

ஸுக்³ரீவோ ராக⁴வஸ்²சைவ வயஸ்யத்வமுபாக³தௌ|

தத:  = then, அப்போதே
தௌ  = both of them, அவர்கள் இருவரும்
தீ³ப்யமானம்  = blazing, எரியும்
அக்³னிம் = fire, அக்னி
ப்ரத³க்ஷிணம் சக்த: = went round in great reverence, சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்
ஸுக்³ரீவ: = Sugriva, சுக்ரீவன்
ராக⁴வஸ்²சைவ = and Raghava also, இராமரும்
வயஸ்யத்வம் = friendship, நட்பை
உபாக³தௌ = both established, உறுதி செய்துகொண்டார்கள்.

உடனே அவர்கள் இருவரும் அக்னி வளர்த்து, அதனை சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள். இப்படியாக இராமரும், சுக்ரீவனும் தங்கள் நட்பை பண்டைய வழக்கப்படி உறுதி செய்துகொண்டார்கள்.

ஒப்பந்தம் ஒன்று போடும்போது அதற்கு சாட்சிகள் வேண்டும். நீதிபதி, நீதி மன்றம், சாட்சி என்பதெல்லாம் மனிதர்களைப் பொறுத்தவரை தேவை என்றாலும் அவை சற்றே கீழ்த்தரமானது; ஏனென்றால் வற்புறுத்தப்பட்ட பொய் சாட்சி, சாட்சியே பின்னர் மாற்றிச் சொல்வது போன்ற தகிடுதத்தங்களை நாமே அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் கடவுளையே சாட்சியாக வைத்து தெய்வ சந்நிதியிலோ, அக்னி வளர்த்தோ அதன் முன் வாக்கு கொடுப்பது என்பது மிக மேலானது. ஏனென்றால் கடவுளே அங்கு உள்ளதால் அதற்கு மேலே வேறெந்த சாட்சியும் தேவையில்லை. அக்னியே நாம் காணும் கடவுள் வடிவம் என்பதால் மனித சாட்சிகளை விட இது மிக உயர்ந்தது. இதுவே நமது பண்டைய முறைகளில் முதன்மையானது ஆகும்.

15.2 காணும் சாட்சியும் கவலை நீக்கலும்

இராமர் சீதையைப் பற்றிச் சொன்னபோது, சுக்ரீவன் முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தான். ஒரு முறை ஓர் அரக்கன் “ராமா, ராமா” என்று கத்திக்கொண்டு இருந்த பெண்மணி ஒருவரை ஆகாய வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தான். அவர் சீதையாகத்தான் இருக்கும் என்று தனக்கு இப்போது தோன்றுகிறது. கீழே அவர் பார்த்த தானும் மற்ற வானரர்களும் நண்பர்கள் போல் தெரிந்ததால், அந்தப் பெண் தன் மேலாடையைக் கிழித்து அதில் தனது நகைகள் சிலவற்றை வைத்துக் கட்டி, எங்கள் பக்கம் தூக்கி எறிந்தார். ஒரு வேளை இராமர் வந்தால் ராவணன் சீதையை எடுத்துப் போனதற்கு சாட்சியாக அது இருக்கலாம் என்று நினைத்து செய்தாரோ என்று சொல்லிக்கொண்டு, தான் எடுத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த சிறிய மூட்டையை இராமருக்குக் காட்டினான். அவருக்கு அது சீதையினுடையதுதான் என்று தெரிந்ததும் நிம்மதி, துக்கம் இரண்டும் கலந்ததுபோல் கண் கலங்கினார். கண்ணீர் வழிய கலங்கி நின்றிருந்த இராமரை சுக்ரீவன் நடந்ததை நினைத்து, செயலற்று துக்கத்தில் ஆழ்வது நல்லது அல்ல என்று தேற்றினான். மாறாக மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர யோசித்து, அதற்கான வியூகங்களை வகுத்து, செயல்களை துவக்க வேண்டும் என்றும்  சொன்னான்.

வ்யஸனே வா(அ)ர்த²க்ருʼச்ச்²ரே வா ப⁴யே வா ஜீவிதாந்தகே|

விம்ருʼஸ²ன்வை ஸ்வயா பு³த்³த்⁴யா த்⁴ருʼதிமான்னாவஸீத³தி|| 4.7.9|

வ்யஸனே வா = in sorrow or, துக்கத்திலோ
அர்த²க்ருʼச்ச்²ரே வா = or even at loss of wealth, செல்வத்தை இழக்கும் நிலையிலோ
ஜீவிதாந்தகே = at the hour of death, உயிரே போகக்கூடிய சூழ்நிலையிலோ
ப⁴யே வா = when in fear, பயத்திலோ
த்⁴ருʼதிமான் = one who is steadfast, மனம் தளராத ஒருவன்
ஸ்வயா பு³த்³த்⁴யா = by his own intelligence, தன் மதியினால்
விம்ருʼஸ²ன் = while deliberating, யோசித்துக்கொண்டு
நாவஸீத³தி = he will not despair, துவண்டு போகமாட்டான்.

செல்வத்தை இழக்கும் நிலையிலோ, துக்கம் துரத்தும் நிலையிலோ, உயிரே போகக்கூடிய சூழ்நிலையிலோ அல்லது பயத்திலோ, மனம் தளராது இருக்கும் ஒருவன் தன் மதியினால் அவைகளை எதிர்கொள்ளும் முறைகளை யோசிப்பானே தவிர துக்கத்தில் துவண்டு போகமாட்டான்.

துன்பம் என்று வந்துவிட்டால் துக்கமும், அதைத் தொடர்ந்து எதையும் செய்ய இயலாத நிலையும் வருவது இயற்கையே. அப்போது ஒருவன் தன்னை மேலும் வருத்திக் கொள்ளாமல், மனத்தைத் தளர விடாமல் வந்த துன்பத்தைத் துடைத்து இன்பம் மலரச் செய்ய வழிகளை யோசிக்க வேண்டும். ஆக இராமருக்குச் சொல்வதுபோல் வரும் இந்த அறிவுரை எல்லோருக்கும் மிகத் தேவையானதே. தனக்கு வந்திருக்கும் நிலையின் காரணங்கள் மற்றவரை விட தனக்கே நன்கு தெரியும் ஆதலால், மற்றவர் கொடுக்கும் ஆலோசனைகளை விட, தன் சுய புத்தியால் அனைத்தையும் யோசித்து ஆவன செய்ய வேண்டும் என்று வால்மீகி இங்கு வலியுறுத்துகிறார். அப்படிச் சிந்தித்து செயல்படுவதற்கு மனம் ஒரு திட நிலைக்கு வரவேண்டும். அதற்கு கையாலாகாத நிலை ஒத்துவராது; ஆதலால் அது முதலில் மாறவேண்டும்.

15.3 உயிர் காப்பான் தோழன்

வானரர்களைத் தான் பார்த்தும் அவர்களால் ராவணனை ஒன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த சீதை, அவர்களை கூக்குரலிட்டுக் கூப்பிடாமல் தன் நகைகளில் சிலவற்றை ஒரு துணிக் கிழிசலில் கட்டி அவர்கள் பக்கம் கீழே போடுகிறாள். அப்படி அவள் செய்தாலும், அந்தப் பக்கம் இராமர் வருவார் என்பதும், அவர் வானரர்களைப் பார்ப்போர் என்பதும், வானரர் அவரிடம் அதைக் கொடுக்கலாம் என்பதற்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஆனாலும் அப்படி நடக்கலாம் என்று சீதைக்குத் தோன்றியதும் அவளது கெட்ட காலத்தில் ஒரு நல்ல திருப்பமே. அது எல்லாமே அப்படியே நடந்திருப்பது அவளது நல்ல காலத்தின் ஆரம்பமே. நகைகளைப் பார்த்த இராமர் அவை எல்லாம் சீதையுடையதுதான் என்கிறார். சீதையின் கால் சிலம்பைப் பார்த்த லக்ஷ்மணனும் அது அவருடையதுதான் என்று தீர்மானமாகச் சொல்கிறான். இங்கு வால்மீகி சிலம்பைச் சிறப்பாகக் குறிப்பிடுவது லக்ஷ்மணன் மரியாதை நிமித்தம் எப்போதும் தன் அண்ணி சீதையின் கால்களை அன்றி நிமிர்ந்து கூட நன்றாகப் பார்த்ததில்லை என்பதைச் சொல்வதற்காக இருக்கும்.

நகைகளைப் பார்த்த இராமருக்கு சீதையின் ஞாபகம் வந்து, அவள் இலங்கையில் எப்படியெல்லாம் அவதிப்படுகிறாளோ? இலங்கைக்குப் போக இங்கிருந்து எப்படிக் கடலைத் தாண்டுவது? மகா வலிமை பொருந்திய அரக்கனான ராவணனிடம் சண்டை போட்டு சீதையை மீட்க ஒரு பெரிய சேனை எங்கிருக்கிறது? அந்தச் சேனை எப்படி ஆழ்கடலைத் தாண்டி வரும்? என்றிவ்வாரான கேள்விகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவரை வந்து தாக்கி அவரை மேலும் வேதனையில் ஆழ்த்துகிறது. இப்படி இராமர் யோசிக்கக்கூடும் என்பதை எளிதில் உணர்ந்த சுக்ரீவன் இராமரிடம் எந்தக் கவலையும் வேண்டாம், உண்மையான நண்பனாக சீதையை மீட்கும் பணியில் தானும், தன்னைச் சார்ந்த வானரர்களும் வேண்டிய அனைத்தையும் செய்து வெற்றி பெற வழி செய்வோம் என்று கூறுகிறான்.

ஆட்⁴யோ வாபி த³ரித்³ரோ வா து³:கி²தஸ்ஸுகி²தோ(அ)பி வா|

நிர்தோ³ஷோ வா ஸதோ³ஷோ வா வயஸ்ய: பரமா க³தி:|| 4.8.8|

ஆட்⁴யோ வாபி = whether a rich man, பணக்காரனோ
த³ரித்³ரோ வா = or poor, ஏழையோ
து³:கி²த: = or sad one,துன்பத்துடனோ
ஸுகி²தோ(அ)பி வா = or a happy man, இன்பத்துடனோ
நிர்தோ³ஷோ = flawless one, குறையில்லாமலோ
ஸதோ³ஷ: guilty one, குறையுடனோ
வயஸ்ய: = a friend, நண்பன்
பரமா = ultimate, கடைசி
க³தி: = refuge, புகலிடம்.

பணக்காரனோ ஏழையோ, துன்பத்துடனோ இன்பத்துடனோ, குறையுடனோ குறையில்லாமலோ உள்ள நண்பன்தான் ஒருவனுக்குக் கடைசி புகலிடம்.

ஒருவனுக்கு நண்பர்கள் பலர் இருக்கலாம். நமது நல்ல வேளையில் நம் கூட இருந்து எல்லாம் அனுபவித்துவிட்டு, நமக்குத் துன்பம் வந்த வேளையில் நம்மைத் தனியே விட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும் ஒருவன் நண்பனே அல்ல. நல்லதோ, கேட்டதோ நம்முடன் எப்போதும் கூட இருந்து நம்மைக்  காக்கும் ஒருவனே நண்பன். சுக்ரீவன் இராமரிடம் தான் நல்ல விதமான நண்பர்களில் ஒருவன் என்றும், அந்த நட்பு அக்னி சாட்சியாய் செய்த ஒப்பந்தத்திற்கு அப்பாலும் செல்லக் கூடியது என்கிறான்.

நட்பின் இலக்கணத்திற்கு இரண்டு வித உதாரணங்களைப் பார்க்கலாம். ஒன்று துரோணர்-துருபதன் நட்பு, மற்றது கிருஷ்ணர்-குசேலர் நட்பு. இவ்விரு ஜோடி நண்பர்களும் சிறிய வயதில் ஒன்றாய் கல்வி கற்று, கூடிக் குலவி வளர்ந்து வந்தவர்கள்தான்.  பின்னாளில் துருபதன் ஒரு செல்வம் கொழிக்கும் ராஜாவாகவும், துரோணர் கல்வி-வித்தை கற்றுக் கொடுக்கும் ஏழை ஆச்சாரியாராகவும் ஆகின்றனர். அப்போது துரோணர் துருபதனிடம் ஒரு உதவி கேட்கப் போக, அவன் துரோணரை ஓர் அரசனுக்கும் ஆண்டிக்கும் எந்தவிதக் கொடுப்பினையும் கிடையாது என்று துச்சமாக அவரை மதித்து அனுப்பி விடுகின்றான். அப்புறம் துரோணர் அதற்கு பதிலடி கொடுப்பது இருக்கட்டும். இதுவா நட்பு? மாறாக ஏழ்மையைப் போக்க வேண்டி வந்த குசேலன் மறைத்து வைத்திருந்த அவலை  வாங்கி கிருஷ்ணன் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டதும், குசேலன் வெட்கத்தினால் ஏதும் கேட்காமலே போயும் குசேலன் குடும்பத்தில் செல்வம் கொழிக்க வழியும் செய்த கிருஷ்ணரின் நட்பு எங்கே? கேட்டும் கொடுக்காதது ஒன்று, கேட்காமலேயே அள்ளிக் கொடுப்பது இன்னொன்று.

15.4 கூட்டணியால் வரும் குழப்பம்

கிஷ்கிந்தா ராஜ்யத்தை வாலி ஒரு வலிமை மிக்க அரசனாக ஆண்டு வந்தான். துந்துபி என்ற அரக்கன் அவனை வலுச்சண்டைக்கு அழைக்கும் வரை, வாலியும், சுக்ரீவனும் பாசமும், பரிவும் கொண்ட நல்ல சகோதரர்களாகவே இருந்தனர். வாலி அரக்கனைத் துரத்த, அவன் பின்னாலேயே சுக்ரீவனும் வரவே அரக்கன் ஒரு மலைக்குகைக்குள் போய் ஒளிந்துகொண்டான். சுக்ரீவனை குகை வாசலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, வாலி தான் மட்டும் உள்ளே போய் அரக்கனைக் கொல்லப் போனான். சுமார் ஒரு வருடம் கழிந்து குகையின் உள்ளிருந்து ரத்தம் பீறிட்டு வந்தும், வாலி வெளியே வராததால் வாலி இறந்து போயிருக்கலாம் என்று நினைத்து, அரக்கன் வெளியே வராதவாறு தடுக்க ஒரு பாறையால் குகை வாயிலை மூடிவிட்டு சுக்ரீவன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்பிவிட்டான்.

உண்மையில் அரக்கன் கொல்லப்பட்டு, வாலி வெளியே வர முயற்சிக்கும்போது பாறையால் குகை மூடப்பட்டிருப்பதைப் பார்த்தான். பாறையை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, சுக்ரீவனும் இல்லாததைப் பார்த்த வாலிக்குக் கோபம் வந்து நாடு திரும்பினால் அங்கு சுக்ரீவன் ஆள்வதைப் பார்த்தான். தான் அறியாமல் செய்த தவறுக்கு சுக்ரீவன் மன்னிக்கக் கோரியும், தானே ஆளவேண்டும் என்று சதி செய்து சுக்ரீவன் அப்படிச் செய்ததாக நினைத்து மிகவும்  வலிமையான வாலி சுக்ரீவனை கொல்ல முயல, அவன் காட்டிற்கு ஓடிவிட்டான். வாலி  தான் கொன்ற துந்துபியின் உடலைத் தூக்கிப் போடும்போது, அந்தப் பக்கம் தவம் செய்துகொண்டிருந்த மாதங்க முனிவரின் குடிலை ரத்தக் கறையாக்கிவிட்டான். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர் இருந்த ரிஷ்யமுக மலைத்தொடர் பக்கம் வந்தால் வாலியின் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் இட்டதால், அதுதான் தங்கியிருக்கச் சரியான இடம் என்று சுக்ரீவனும் அவனுடன் இருந்த வானரர்களும் அங்கு ஓடிவிட்டனர். வானரர்களின் வழக்கப்படி சுக்ரீவன் மனைவியை வாலி தன்னுடன் வைத்துக்கொண்டான். வாலியை எதிர்த்துப் போராடுவது தற்கொலைக்குச் சமம் என்றுணர்ந்த சுக்ரீவன் ஒன்றும் செய்யமுடியாது காட்டில் இருக்கும்போதுதான் இராம-லக்ஷ்மணர்கள் அங்கு வந்து சேர்கின்றனர்.

இந்தப் பூர்விகக் கதையைக் கேட்ட இராமர், சுக்ரீவனுக்கு நம்பிக்கை தரும் வகையில், தனது வில்லால் ஓர் அம்பை எய்தி வரிசையாக இருக்கும் ஏழு சால  மரங்களைத் துளைத்துக் காட்டுகிறார். அதைப் பார்த்துப் பிரமித்த சுக்ரீவன், வாலியை எதிர்த்துப் போராடுவதில் இராமர்தான் தனக்கு வேண்டிய உதவியைத் தருவார் என்று தெளிந்து, கிஷ்கிந்தா சென்று வாலியை வலிய சண்டைக்கு இழுக்கிறான். அப்படி நடக்கும் சண்டையில் வாலியின் கை ஓங்கி அவன் சுக்ரீவனை ஓட ஓட விரட்டுகிறான். புறமுதுகு காட்டித் திரும்பிய சுக்ரீவன், சொன்னபடி உதவாது இராமர் தன்னைத் தோற்கடிக்க விட்டுவிட்டார் என்று கோபத்தில் கொதிக்கிறான். இரண்டு சகோதரர்களில் யார் எவர் என்று தனக்குத் தெளிய முடியாததால் தவறாக சுக்ரீவனையே பலி கொடுத்து விடக்கூடாது என்பதால் தான் ஒன்றும் செய்யாது இருந்து விட்டதாக இராமர் கூறவே, மறுபடி வாலியை சவால் விட்டு அழைக்கும்போது தான் ஒரு வெள்ளை மலர்களாலான மாலையை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறான். இம்முறை இராமர் தன் அம்பைச் செலுத்தி வாலியை வீழ்த்துகிறார்.

இராமரின் அம்படிபட்டு  வீழ்ந்த வாலிக்கு அது ஒரு விசேஷமானது என்று தெரிகிறது. அவர் அம்பெய்தி தன்னைக் கொன்றதை பொறுக்கமுடியாத வாலி, அவருடைய செய்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், தான் செய்த எந்தத் தவற்றுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டான்.  தற்போது பரதன்தான் அரசன் என்றும், தான் ஒரு அரச பிரதிநிதியாக மட்டும்தான் அங்கு வாலியைக் கொன்று ராஜநீதியை நிலைநாட்டியதாகச் சொல்கிறார். வாலி தனது தம்பியை தன் மகன் போல் கருதி அதற்குண்டான உரிமையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்ததாலும், அவனது மனைவியை அபகரித்துக்கொண்ட பாவத்திற்காகவும் அவனுக்கு ராஜநீதிப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

யவீயானாத்மன: புத்ரஸ²ஸி²ஷ்யஸ்²சாபி கு³ணோதி³த:|

புத்ரவத்தே த்ரயஸ்²சிந்த்யா த⁴ர்மஸ்²சேத³த்ரகாரணம்|| 4.18.14||

யவீயான் = younger brother, தம்பி
புத்ர: = son, மகன்
கு³ணோதி³த: = virtuous, நற்குணங்கள் கொண்ட
ஸி²ஷ்யஸ்²ச = a pupil, மாணவன்
தே த்ரய = these three, இம்மூவரும்
ஆத்மன: = one’s own, சொந்த
புத்ரவத் = like son,மகன்
சிந்த்யா: = should be treated, நடத்தப்பட வேண்டும்
அத்ர = there, (அப்)படி
த⁴ர்ம: = dharma, தர்மம்
காரணம் = judged, நியதி

தர்ம நியதிப்படி தன் தம்பி, தன் மகன், நற்குணங்கள் கொண்ட தன் மாணவன் இம்மூவரும் சொந்த மகன்கள் போலவே நடத்தப்பட வேண்டும்.

வாலி வதம் என்பது காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய ஒரு காட்சிதான். ஆனாலும் தம்பி, மகன், மாணவன் மூவரும் ஒரே இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் என்னும் தர்ம நியதியை எவரும் மறுக்க முடியாதே.

(தொடரும்..)

3 Replies to “இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15”

  1. அருமையான எழுத்து நடை.. தொடர்ந்து படித்து வருகிறேன்.. வாழ்த்துக்கள்.

  2. நட்பின் வகைகளும், அவற்றில் சிறந்ததை நாம் அனுபவ பூர்வமாக உணரும் வழிகளும் , இத்தொடரை படிக்கும்போது தெள்ளென விளங்குகின்றன. ராமாயணம்,மகாபாரதம் இரண்டுமே எம் பி ஏ ( ஹெச் ஆர்- human resources ) படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்த்து அவசியம் கற்பிக்கப்பட வேண்டியவை ஆகும். இது ஒரு திகட்டாத கடல், ஒரு திரவியம், மனநோய் போக்கும் மருந்து. திரு இராமன் அவர்களின் பணி மேலும் செவ்வனே தொடர சக்திக்கடல் செல்வ முத்துக்குமார சாமியை பிரார்த்தித்து , இத்தொடரை அனைவரும் தாங்கள் படிப்பதுடன் , குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் படிக்கச்செய்தால் , அனைத்து நலன்களையும் பெறுவார். இது சத்தியம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  3. ராமாயண இன்பத்தைப் பற்றி தாங்கள் வெளியிடுவது தேனினும் அமுதாக உள்ளது. பல வருடங்களுக்கு முன் Lectures on Ramayana என்ற தலைப்பில் Right Honble ஸ்ரீனிவாஸ சாஸ்திரி அவர்கள் தொடர் உரையாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்பில் மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் உரையாற்றினார். ராமாயண கதாபாத்திரங்களை வேறு கோணத்தில் அணுகியிருப்பார். அதன் தமிழாக்கத்தை திருமதி சாவித்ரி அம்மாள் எழுதியுள்ளார்கள். அப்புத்தகம் கிடைத்தால் அதனை இப்பகுதியில் வெளியிடலாம். கிடைத்தற்கரிய ஒன்று. இல்லாவிடில் தாங்களே ஆங்கில உரையினை தமிழாக்கம் செய்து வெளியிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *