ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
தொடர்ச்சி..
19.1 எண்ணங்களே மனம்
அரக்கியின் பிடியிலிருந்து விடுபட்ட அனுமான், சிங்கத்தின் குகைக்குள் போவதுபோல, ராவணனின் அரண்மனைக்குள்ளே சென்றான். சீதை எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே அனுமனின் முக்கிய எண்ணம். ஆனால் அங்கு அவன் கண்டதோ பல விதமான மது பானங்களைக் குடித்துக்கொண்டும், பழ ஆகாரங்களைச் சாப்பிட்டுக்கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த விதவிதமான அழகிய பெண்களைத்தான். எங்கு பார்த்தாலும் அங்கங்கே பாதி சாப்பிட்டும், சாப்பிடாததுமாக இறைந்து கிடந்த தட்டுக்களும், காலியாகிக் கொண்டிருந்த மதுக் குடங்களும், நிரம்பி வழிந்த மதுக் கோப்பைகளும் அந்தப் பெண்களைச் சுற்றிக் கிடந்தன.
ராவணனின் படுக்கை அறைக்குள் நுழைந்த அனுமானுக்கு சீதையும் அவன் மெத்தையில் படுத்துகொண்டிருந்த அழகிய பெண்களில் ஒருவளாக இருப்பாளோ என்ற சந்தேகம் ஒரு நொடி நேரம் வந்து மறைந்தது. அப்படி ஒரு வேளை வாய்த்திருந்தால், சீதை உயிர் விடுவதை விரும்புவாரே தவிர அங்கேயா இருப்பார் என்று அவனுக்கு அந்த நொடியிலேயே அவன் மனது சொன்னது. இராமரைத் தவிர வேறெவரையும் ஏறெடுத்தும் பார்க்காத சீதையைப் பற்றிய எண்ணம் தனக்கு இப்படி வரலாமா என்று உடனே தன்னையே அவன் நொந்துகொண்டான்.
மூலை முடுக்கு என்று எங்கு தேடினாலும், சீதை அங்கிருப்பது போல அவனுக்குத் தெரியவில்லை. அனுமான் ஒரு தீவிர பிரம்மசாரியாதலால், அவன் இதுவரை பெண்கள் தங்கியிருக்கும் பக்கமே போனதில்லை. ஆனால் இப்போதோ சீதையைத் தேடும் முயற்சியில் அவன் ராவணனின் அந்தப்புரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் அறைகளுக்கு உள்ளேயே கூடப் போய்வர நேர்ந்திருக்கிறது. அவர்களில் பலரும் மது மயக்கத்தில் இருந்ததால் அவர்கள் அரையும் குறையுமாக, கலைந்த ஆடைகளில் நல்ல தூக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் அருகே அவன் போய் ஒவ்வொருவரையும் அவர் சீதையாக இருக்குமோ என்று பார்க்க நேர்ந்ததால், அவனது பிரம்மச்சரிய நிலைக்கு பங்கம் வந்திருக்குமோ என்று எவருக்கும் சந்தேகம் வரலாம் அல்லவா?
மனோ ஹி ஹேது: ஸர்வேஷாமிந்த்³ரியாணாம்ʼ ப்ரவர்தனே || 5.11.41||
ஸர்வேஷாம் for all, எல்லா
இந்த்³ரியாணாம் of senses, இந்திரியங்களும்
ப்ரவர்தனே in reaction, ஈடுபடுவதற்கு
மன: mind, மனம்
ஹி really, உண்மையில்
ஹேது: is the cause, காரணம்.
எல்லா இந்திரியங்களும் ஈடுபடுவதற்கு மனமே காரணம்.
வால்மீகியைப் போலவே மகாகவி காளிதாஸும் தனது படைப்பான குமார சம்பவத்தில் இப்படியாகக் கூறுகிறார்: “விகாரஹேதௌ சதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாஸ்மி த ஏவ தீரா”. பல வாய்ப்புகள் தானே வந்தாலும் தன் மனதை அவைகளில் லயிக்க விடாது, அதனால் அவைகளால் ஏற்பட்டிருக்கக் கூடிய கெட்ட எண்ணங்களையும் வளர்க்கவிடாது தடுப்பவனே வலிமை வாய்ந்தவன் என்பது அதன் பொருள்.
ரமண மகரிஷியும் கீழ்க்கண்டவாறு சொல்வார். மனம் என்பது நமது எண்ணங்களின் ஒரு குவியலே. நம் எண்ணங்கள் தூயதாக இருந்தால் தூய மனம் என்றும், கெட்டதாக இருந்தால் கெட்ட மனம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது நம் எண்ணங்களைப் பொறுத்துத்தான் நமது இந்திரியங்கள் செயல்படுவதால், கடைசியில் அவைகள் நம் எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துகின்றன. இங்கு பிரம்மச்சரியம் பூண்டிருக்கும் அனுமனின் எண்ணம் சீதையைத் தேடுவது என்ற தூய குறிக்கோள் ஒன்றிலேயே இருப்பதால், அவனுக்கு வேறு எதுவும் பொருட்டாகவே இருந்திருக்காது. இதே போன்று செய்யும் தொழிலே தெய்வம் என்றிருப்போருக்கு தூய எண்ணங்கள் மட்டுமே வளரும்; அதனால் தூய மனம் ஒன்றே வாய்க்கும்.
19.2 உயர்ந்த உள்ளத்தால் உயர்வாய்
இப்படியாகப் பல இடங்களில் தேடியும் பல பெண்களைப் பார்த்தும், எங்கும் எவரும் சீதையாகக் காணப்படாததால் அனுமனுக்குப் பல விதமான சந்தேகங்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு வேளை ராவணன் சீதையைக் கொன்றுவிட்டானோ? அல்லது அரக்கிகள் அவர்கள் வழக்கப்படியே அவளைக் கொன்று தின்று விட்டார்களோ? அப்படியானால், தான் அவ்வளவு சிரமப்பட்டு கடலைத் தாண்டி வந்தது, அரண்மனையில் தேடிக் கொண்டிருப்பது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போய்விட்டதா?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அவனுக்குள் முளைக்கவே, தன் மேல் மிக்க நம்பிக்கை வைத்துத் தன்னை அங்கு அனுப்பிய வானரர்களுக்குத் தான் என்ன பதில் சொல்வது; ஜாம்பவான், சுக்ரீவன், இராமர் அவர்களிடம் போய் சீதையைக் காணவில்லை என்று சொல்வதற்கு எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது என்ற கேள்விக் கணைகளும் அவனைத் துளைக்க ஆரம்பித்து விட்டன. அதனால் அவன் மனத்தளவில் சோர்ந்துபோய், மேற்கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் விழித்தான். ஆனால் அனுமன் என்ன சாதாரண மனிதனா? இப்படி அவனுக்குள் போராட்டம் நடந்தாலும், ஒரே நொடியில் தனது உள்ளத்து வலிமையால் அவன் தன்னையே தேற்றிக்கொண்டு, விடாமுயற்சியே விடை தரும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, திரும்பவும் அவன் சீதையைத் தேடும் படலத்தைஅதிக ஊக்கத்தோடு தொடர்ந்தான்.
அனிர்வேத³: ஸ்²ரியோ மூலமனிர்வேத³: பரம்ʼ ஸுக²ம் |
அனிர்வேதோ³ ஹி ஸததம்ʼ ஸர்வார்தே²ஷு ப்ரவர்தக: || 5.12.10||
அனிர்வேத³: being free from despair, நம்பிக்கை இழக்காதிருப்பது
ஸ்²ரிய: prosperity, வளமை
மூலம் cause, காரணம்
அனிர்வேத³: being free from despondency, மனத் தளர்ச்சி இல்லாதிருப்பது
பரம் supreme, உயர்ந்த
ஸுக²ம் happiness, இன்பநிலை
அனிர்வேத³: being free from despair, நம்பிக்கை இழக்காதிருப்பது
ஸததம் always, எப்போதும்
ஸர்வார்தே²ஷு in all objectives, எல்லாக் குறிக்கோள்களிலும்
ப்ரவர்தக: ஹி will lead the way, வழிகாட்டும்.
நம்பிக்கை இழக்காதிருப்பதே ஒருவனின் வளமைக்குக் காரணம். மனத் தளர்ச்சி இல்லாதிருப்பதே ஒருவனின் உயரிய இன்ப நிலை. ஒருவனது நம்பிக்கை இழக்காதிருக்கும் நிலையே அவனது எல்லாக் குறிக்கோள்களிலும் எப்போதும் அவனை வழிகாட்டி முன்னேற வைக்கும்.
எவருக்குமே வாழ்க்கையில் சறுக்கல்கள் வரலாம். ஆனாலும் எவன் ஒருவன் அதனால் நம்பிக்கை இழக்காமல், அந்தச் சூழலிலிருந்து உடனே மீண்டு வந்து அதைச் சரிசெய்வதற்கான செயல்களில் ஈடுபடுகிறானோ அவனே மன வலிமை மிக்க வீரன் ஆகிறான். இங்கு அனுமனும் அவனது முதல் முயற்சிகளில் தோல்வி என்று தெரிந்ததால் மனத் தளர்ச்சி அடைந்தாலும், அவன் அதிலிருந்து நொடிப்போதில் மீண்டு தனக்குத் தானே அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டும், தனது செயல்களை இரட்டிப்பு ஆக்கி சீதையைத் தேடும் பணியையும் தொடர்வதால் அவன் மகா வீரன் ஆகிறான்.
இங்கு பகவத் கீதையில் வரும் இந்த ஸ்லோகத்தையும் நினைவில் கொள்வது நல்லது:
“உத்தறேத் ஆத்மனாத்மானம் ந ஆத்மானம் அவசாதயேத்…” (VI : 5)
தன் மனதால் ஒருவன் தன் உணர்வை உயர்த்திக் கொள்ளவேண்டும், ஆத்மாவாகிய உணர்வை ஒருபோதும் தாழ்த்திக்கொள்வது ஆகாது என்பதே அதன் பொருள்.
19.3 “ஆர்ய” மகிமை
தன் பணியை விடாது தொடர்ந்து கொண்டிருக்கும் அனுமனுக்கு சீதையைக் கண்டுபிடிக்க மேலும் அதிக நேரம் பிடிக்கவில்லை. அரண்மனைக்கு வெளியே உள்ள நந்தவனத்தில் ஒரு சிம்ப்சுபா மரத்தின் அடியில் சீதை உட்கார்ந்திருப்பதை அனுமன் பார்த்தான். அங்கு பார்ப்பதற்கு அருவருப்பு தருவதாயும், கொடூரமாகவும் காணப்பட்ட அரக்கிகள் கூர்மையான ஆயுதம் தாங்கி சீதையைச் சுற்றிக் காவல் காத்து நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது ராவணன் அங்கு வந்து சீதையைத் தன் மனைவியாக வாழ்வதற்கு வற்புறுத்துகிறான். அவனது கோரிக்கை அருவருப்பாக இருந்ததுமல்லாமல், அவன் பேசிய பேச்சே கொடூரமானதாகவும், கடுமையாகவும் இருந்தது. சீதை மிகவும் வெறுத்துப் போய், அவனை துச்சமாக மதித்து, அவனது கோரிக்கையையும் அடியோடு நிராகரித்தாள். தீய எண்ணங்களோடு ஒருவன் ஒரு பெண்ணை நெருங்கினால், அவள் அவனை “உன் கண் அவிஞ்சு போக” என்று சொல்லி அவனை சபிப்பது நம் நாட்டுப் பெண்களின் வழக்கம். அதே போல சீதையும் மாற்றான் மனைவியைப் பார்க்கும் அவனது கண் கருகிப்போய்விடும் என்று ராவணனைச் சபிக்கிறாள்.
இமே தே நயனே க்ரூரே விரூபே க்ருʼஷ்ணபிங்க³லே |
க்ஷிதௌ ந பதிதே கஸ்மான்மாமனார்ய நிரீக்ஷித: || 5.22.18||
அனார்ய ignoble wretch, கீழ்த்தரமான பாவியே!
மாம் me, என்னை
நிரீக்ஷத: while looking at, பார்த்துக்கொண்டிருக்கும்
தே your, உன்னுடைய
க்ரூரே cruel, கொடூர
விரூபே uncouth, அழகற்ற
க்ருʼஷ்ணபிங்க³லே dark and yellow colour, கருத்த மஞ்சள் நிற
இமே these, இந்த
நயனே two eyes, இரு கண்கள்
க்ஷிதௌ on the ground, தரை மேல்
கஸ்மாத் why, ஏன்
ந பதிதே not dropping down? விழவில்லை?
கீழ்த்தரமான பாவியே! என்னை முழுங்குவது போலப் பார்த்துக்கொண்டிருக்கும் உன்னுடைய கொடூர, அழகற்ற, கருத்த மஞ்சள் நிறக் கண்கள் ஏன் கருகிப்போய் இன்னும் கீழே விழவில்லை?
சீதை ராவணனை “அனார்ய” என்று ஏசுகிறாள். அதன் எதிர்மறையான “ஆர்ய” என்ற சொல்லுக்கு நல்ல, மதிப்பும், மரியாதைக்கும் உரிய பெரியவர் என்று அர்த்தம். ஆங்கில ஆட்சியாளர்கள் “ஆர்ய” என்ற சொல்லை ஒரு வம்சாவளியினரைக் குறிப்பதாகத் தவறாகப் பயன்படுத்தி, அவர்கள் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்து வந்த வெளிநாட்டவர் என்றும் குறிப்பிட்டார்கள். நம் பாரதத்தின் கலாச்சாரத் திலகமாக விளங்கும் வேதம் அப்படி வந்தேறியவர்கள் இயற்றியதுதான் என்ற புரளியையும் கிளப்பிவிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து ஜெர்மானிய தேசியவாதிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட நாஜிகள் (Nazis) ஊதா நிறக் கண்களும், தங்க நிறக் கூந்தலும் கொண்ட ஆரியர்கள்தான் உலகிலேயே சிறந்த இனம், அது ஒன்றே உலகை ஆளப் பிறந்த இனம் என்று சொல்லிக்கொண்டு உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகளைப் புரிந்துகொண்டு கூத்தடித்தார்கள். அதனால் லக்ஷக்கணக்கான யூதர்கள் போர்த் தளவாடத் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக பட்டினியால் வாடியும், கொலை செய்யப்பட்டும் இறந்து போனார்கள். அப்படியாக சரித்திரப் புரளியினாலும், மனித நேயமற்ற கொலைகளுக்கு ஒரு மாய்மாலச் சாக்காகவும் ஆகி, இந்தப் புனிதமான சொல்லான “ஆர்யா” மிகவும் பழுதுபட்டுப் போயிற்று. ஆனால் மற்ற ஆதிகாலத்துப் புலவர்கள் போல வால்மீகியும் மிகவும் கண்ணியமான எண்ணங்களும், செயல்களும் கொண்ட பண்பட்ட பெரியோர்களைக் குறிப்பிடவே “ஆர்யா” என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.
இரண்டு சொற்களுக்கும் உருவாக்கம் வேறு என்றாலும், ஆங்கிலத்தில் வரும் “Sir” என்ற சொல் எப்படி பெருமதிப்பிற்குரியவர்களைக் குறிப்பிடுகிறதோ, அதே போன்றுதான் “ஆர்யா”வும் நமது வழக்கத்தில் இருந்தது. ஆனால் இதுவரை நடந்திருக்கிற சரித்திரக் கோளாறுகளினால் இன்று எவரையாவது “ஆர்யா” என்று விளித்துக் கூப்பிட்டால் அவர் அதைப் புரிந்து கொள்வாரா, விரும்புவாரா அல்லது ஒரு நடிகர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்களே என்று முழிப்பாரா?
19.4 காலம் வெல்லும்
சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கிகளிடம், ராவணன் தன்னை சீதை மணம் செய்துகொள்ள அவளைத் தூண்டுமாறும், முரண்டு பிடித்தால் அதற்கு அவளை வற்புறுத்த ஏதாவது செய்யுமாறும் சொல்லிவிட்டுச் சென்றான். இயற்கையிலேயே கொடூரமான அரக்கிகளுக்கு அவதூறு பேசுவதற்கும், வன்முறையில் இறங்குவதற்கும் சொல்லித்தரவா வேண்டும்? ராவணன் அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றது அவர்களுக்கு லட்டு சாப்பிட்ட மாதிரி இருந்தது.
அவர்களின் சொல்லத் தகாத அவதூறுச் சொற்களுக்கும், தாங்கவும் முடியாத திட்டல்களுக்கும் சீதை அசைந்து கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கவே, அரக்கிகள் அவளைக் கொன்று போட்டு விடுவதாகவும் பயமுறுத்தினர். ஒருவள் சீதையைக் கொன்று அவளது வெவ்வேறு அங்கங்களை சமைத்து, அன்று இரவுச் சாப்பாட்டிற்காக விதவிதமான சுவையான பணியாரங்கள் செய்யப்போவதாகவும் சொன்னாள். வேறொருவள் சீதையின் ஈரலையும், இதயத்தையும் சாப்பிடுவதற்கு முன்பாக நல்ல போதை தரும் மது பானங்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
இப்படியாக அவர்கள் சீதையைக் கொன்றபின் என்ன செய்யலாம் என்று கர்ண கொடூரமாக விவரங்களைப் பேசிக்கொண்டிருந்தது அவர்களில் பலருக்கும் ஓர் அற்ப மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், சீதைக்கு அதைக் கேட்டாகவேண்டிய நிலையில் மிகுந்த அருவருப்பு தட்டியது. ஆனாலும் அவள் சுதாரித்துக்கொண்டு அவர்கள் என்ன சொல்லி மிரட்டினாலும், அவள் எதற்கும் பணியமுடியாது என்றும், ராவணனின் அநாகரிகமான இச்சைக்கு ஒத்துகொள்வது என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தாள். அப்படியும் அந்த அரக்கிகள் தங்களது வெறுப்பை உமிழ்ந்து கொட்டி, வாய்க்கு வந்தபடி அருவருப்பாகப் பேசிக்கொண்டிருந்தது, இந்த மாதிரி அரக்கிகளின் சூழலில் இருப்பதற்குப் பதில் இறப்பதே மேலானது என்று சீதையை நினைக்க வைத்தது. ஆனாலும் மரணம் என்பது நாம் நினைத்தவுடனே வரக்கூடிய முடிவா? வா என்றால் வருவதற்கு, அது அவ்வளவு சாதாரணமானதா அல்லது எளிதானதுதானா?
அகாலே து³ர்லபோ⁴ ம்ருʼத்யு: ஸ்த்ரியா வா புருஷஸ்ய வா || 5.25.12||
ஸ்த்ரியா வா by a woman or, பெண்ணுக்கோ
புருஷஸ்ய வா or for a man, ஆணுக்கோ
அகாலே untimely, அகாலத்தில்
ம்ருʼத்யு: death, மரணம்
து³ர்லப⁴: is difficult, எளிதல்ல.
ஆணுக்கோ பெண்ணுக்கோ அகாலத்தில் மரணம் வாய்ப்பது எளிதல்ல.
வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்திப்பவனுமே பிறந்த பிறப்பின் பயனை இறப்பதற்கு முன் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அறிந்து கொள்கிறான்.
19.5 தோற்பன தொடரேல்
இராவணன் சீதையிடம் கெஞ்சியது, சீதை அவனை உதாசீனம் செய்தது, அரக்கிகள் சீதையைப் பாடாய்ப் படுத்துவது ஆகிய எல்லாவற்றையும் அனுமன் யாருக்கும் தெரியாமல் சிம்ப்சுபா மரத்தின் மேல் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அரக்கிகள் நடுவில் சீதை இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் நிலையைப் பார்த்து அவன் மிகவும் வருந்தினான். சீதை தானே தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோவது பற்றி பேசியதைக் கேட்ட அவன் திடுக்கிட்டு தான் அதைத் தடுக்க என்ன செய்வது என்று திணறினான். இராமரை அங்கு அழைத்துக்கொண்டு வருவதற்கு நேரம் போதாததால், தானே சீதையிடம் நேரே பேசிப் புரியவைக்கலாமா என்றும் யோசித்தான்.
சீதையிடம் தூய சம்ஸ்க்ருதத்தில் பேசினால், நிச்சயமாக ராவணன்தான் மாறு வேடத்தில் வந்து தன்னை ஏமாற்றுகிறான் என்று அவள் நினைக்கலாம்; மாறாக மரத்திலிருந்து குதித்து தானே நேரில் போய் அவள் முன் நின்றால், அவள் தன் உருவத்தைப் பார்த்து பயந்து கூக்குரலிட்டு அரக்கிகளையும் எழுப்பிவிட்டு, அதனால் மற்ற காவலாளிகளும் அங்கு வந்து சேரலாம் என்றிவ்வாறாக நினைத்தான். தன்னால் அங்குள்ளவர்கள் அனைவரையும் கொன்றுபோட முடியும், ஆனால் அதனால் சீதையை யார் இப்படிச் செய்தது என்று துன்புறுத்துவார்களே என்று தயங்கினான்.
மேலும் சண்டை என்று வந்துவிட்டால் யார் ஜெயிப்பார்கள் என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அப்படி அவன் யோசிக்கும்போது அவனுக்குப் பல வழிகள் இருக்கின்றன என்றும், அவைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றதெல்லாம் பகடைக்காய் உருட்டி யார் ஜெயிப்பார்கள் என்று சொல்வதுபோலத்தான் இருக்கும் என்று தெளிந்து, என்ன செய்தாலும் அதனால் சீதைக்கோ, தனக்கோ அல்லது மேற்கொண்டு நடப்பவைகளுக்கோ எந்தவித பாதிப்பும் வராமல் செய்வதுதான் சரி, மற்றதெல்லாம் சந்தேகத்தோடு கூடிய முடிவுகளைத் தரும் கண்மூடித்தனமான செயல்கள் என்று தீர்மானித்தான். அப்போதிருந்த சூழ்நிலையில் இராமரின் கதையை சீதைக்கு மட்டும் கேட்கும்படி சன்னமான குரலில் சொல்லிக்கொண்டிருப்பதுதான் அவளுக்குத் தைரியமும் ஊட்டி, தன்மேல் நம்பிக்கையையும் வளரச் செய்யும் என்று நம்பி, இராமரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை கதைபோல சொல்ல ஆரம்பித்தான்.
கஸ்²ச நிஸ்ஸம்ʼஸ²யம்ʼ கார்யம்ʼ குர்யாத்ப்ராஜ்ஞ: ஸஸம்ʼஸ²யம் | ….. || 5.30.36||
க: who, எந்த
ப்ராஜ்ஞ: wise man, அறிவாளி
நி:ஸம்ʼஸ²யம் without any doubt, சந்தேகம் எதுவுமின்றி
கார்யம் task, வேலை
ஸஸம்ʼஸ²யம் without any doubt, சந்தேகம் எதுவுமின்றி
குர்யாத் will take up, எடுத்துக்கொள்வான்.
எந்த அறிவாளியும் சந்தேகம் இல்லாத முடிவைத் தரும் வேலையை தயக்கம் எதுவுமின்றி எடுத்துக்கொள்வான்.
பல சமயம் மாற்று வழிகளை யோசிக்காது பரபரவென்று முடிவெடுத்துவிட்டு சிலர் அப்புறமாகத் தடுமாறுவார்கள். உடனடித் தேவை என்று இருந்தால் ஒழிய, ஆபத்தில்லாத முடிவைக் கொடுக்கும் வழிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் எப்போதும் அறிவாளி செய்யும் செயல்.
(தொடரும்)