[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன்

ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும் பொருட்டு அவர்கள் இம்முறையைக் கையாண்டனர். ஆத்ம ஞானம் பெற விரும்புவன் உயர்ந்த பண்பைப் பெற்றிருக்க வேண்டும். உயர்ந்த பண்பைப் பெற்றுள்ள ஒவ்வொருவனும் உயர்ந்த கோத்திரத்தைச் சார்ந்தவனாகிறான்.

அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வு
செந்தண்மை பூண்டு ஒழுகலான்

என்பது பொய்யாமொழி. குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற கோட்பாட்டின்படி ஒருவனுடைய குணத்தை அறிவதற்கு அவனுடைய கோத்திரத்தை பழைய பெரியோர்கள் கேட்டு வந்தார்கள். குருவை அடைந்து ஆத்ம ஞானம் பெற விரும்பிய ஸத்தியகாமன் குருவினிடம் கோத்திரத்தைச் சொல்வதற்காகத் தன் தாயிடம் தன்னுடைய கோத்திரத்தைக் கேட்டான்.

தாய் எளிய வாழ்வும் தூய உள்ளமும் படைத்தவள். தன் மகனோடு கிராமத்தில் ஒரு புறத்தில் எளிய குடிசையில் வாழ்ந்து வந்தாள். பக்ஷிகளின் இனிய கீதம், நீரோடைகளின் சலசலப்பான ஓசை, சூரியனின் களங்கமற்ற ஒளி, சந்திரனின் தண்மை ஆகிய இவைகள் அவர்களுக்கு இன்பமூட்டும் பொருள்களாக இருந்து வந்தன. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்பவர்கள் இறைவனோடு இயைந்த வாழ்வு வாழ்பவர்களாகிறார்கள். தன் மகன் தன்னைக் கோத்திரத்தைக் கேட்டபொழுது தன்னுடைய பழைய வாழ்க்கையின் ஞாபகம் ஜாபாலாவுக்கு வந்தது.

“நான் ஓர் இளைஞனை மணம் செய்து கொண்டேன். என்னுடைய தலைவனுக்குப் பணிவிடை செய்வதிலேயே என் காலத்தைக் கழித்தேன். உன்னைக் கருத்தரித்தபின் உன் தந்தை காலமாகிவிட்டார். நான் பின் அனாதையாகிவிட்டேன். உன் தந்தை இறக்கும்பொழுது என் சிந்தனை எல்லாம் உன்னைப்பற்றியே இருந்ததால் அவரைக் கோத்திரம் கேட்க மறந்துவிட்டேன். என் பெற்றோர்களும் என்னைச் சிறு வயதிலேயே விட்டுப் பிரிந்துவிட்டதால் அவர்களிடமும் நான் கோத்திரத்தைப் பற்றிக் கேட்க விட்டுவிட்டேன். தூய வாழ்க்கை வாழ்வதற்குக் கோத்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாக நான் அப்பொழுது கருதவில்லை”- இங்ஙனம் தன் வரலாற்றை அவள் கூறி முடித்தாள்.

அவள் தன்னிடத்திலிருந்த தூய்மையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தாள். தன் மகன் யாண்டும் உண்மையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வுண்மையே அவனுக்கு வாழ்க்கையில் வெற்றிதரும் என்றும் அவள் உறுதிகொண்டிருந்தாள். ஆகையால் அவள், “மகனே, நீ உன் குருவிடம் உண்மையை உள்ளபடி சொல். எனக்குக் கோத்திரம் தெரியாது. என் பெயர் ஸத்தியகாமன். என் தாயின் பெயர் ஜாபாலா. ஆகையால் நான் ஸத்தியகாமன் என்ற ஜாபாலன் ஆவேன் என்று கூறி உன்னை அறிமுகப்படுத்திக்கொள்!” என்று ஸத்தியகாமனிடம் கூறி அவனை குருவிடம் அனுப்பி வைத்தாள்.

ஸத்தியகாமன் தாயினிடமிருந்து அறிந்த விபரத்தை வைத்துக்கொண்டு தாயினுடைய கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு குருவினிடம் புறப்பட்டுப் போனான். தாயும் அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவனை அவள் அருள்நோக்கோடு பார்த்தவண்ணம் இருந்தாள். கண்பார்வையினின்று அவன் மறைந்ததும் அவனுக்கு ஏற்படும் தடைகளெல்லாம் நிவர்த்தியாக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டாள்.

கெளதமர் என்னும் புகழ்பெற்ற ரிஷியின் ஆசிரமத்தை ஸத்தியகாமன் சென்றடைந்தான். அவ்வாசிரமம் தவம் புரிவதற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. ஸத்தியகாமன் அவ்வாசிரமத்தை அடைவதற்கு சற்று தூரத்திலேயே அங்கு நிகழ்ந்த யாகத்தினின்று உண்டாகிய நெருப்பின் புகையைக் கண்டான். பிரம்மசாரிகள் ஓதிய வேதத்தின் ஓசை காற்றில் மிதந்து வந்து அவன் காதில் விழுந்தது. அப்பொழுது சூரியன் மேல்திசையில் மறைந்து கொண்டிருந்தான். சூரியனுடைய மறைவானது ஆகாயத்தில் தெய்வ சாந்நித்தியத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஸத்தியகாமன் ஆசிரமத்தை அணுகியபொழுது பசுக்கூட்டம் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். சில பிரம்மசாரிகள் அடுத்தநாள் ஹோமாக்கினிக்கு சமித்துத் தயார் செய்து கொண்டிருந்தனர். இவனும் சில சமித்துகளைத் தயார் செய்துகொண்டு அவர்களோடு சேர்ந்து ஆசிரமத்துக்குச் சென்றான். வழிநடையால் ஸத்தியாகாமன் களைப்புற்றிருந்ததால் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டான். இரவு பிரார்த்தனைக்குப் பின்பு கெளதம முனிவரிடம் அழைத்துச் செல்லப்பட்டான். குருவுக்கு  மரியாதையோடு கூடிய வணக்கம் செய்து அவருடைய திருவடிகளில் தான் கொண்டுசென்றிருந்த சமித்தை காணிக்கையாக சமர்ப்பித்தபின், “இதை காணிக்கçயாக ஏற்றுக்கொண்டு பிரம்ம ஞானம் பெறுவதற்கு முதல்படியாக உள்ள பிரம்மசரிய தீட்சையை எனக்குத் தந்தருளுங்கள்!” என்று குருவைக் கேட்டுக்கொண்டாள்.

குரு அவனுடைய ஆத்மஞான வேட்கையை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். உள்ளூற அவர் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய கோத்திரத்தை வினவினார். அவனுக்குக் கோத்திரம் தெரியாதாகையால், அவனுடைய தாய்சொன்னதை அப்படியே குருவிடம் ஒப்புவித்தான். அதைக்கேட்டு, ரிஷிபரம்பரையிலும், தேவர்கள் பரம்பரையிலும் வழித்தோன்றலாக வந்த மற்ற ஆசிரமவாசிகள், பரிகாசத்தோடு அவனைப் பார்த்தார்கள். கெளதம ரிஷி அவனுடைய நிலையை அறிந்து அவன்மீது தன் அருள் பார்வையைத் திருப்பினார். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தின் மீது அவன் வைத்திருந்த விசுவாசத்தை விளக்கியது. ஸத்தியகாமனிடத்திலிருந்த தூய்மையையும் சாந்தியையும் நேர்மையையும் கண்டு அம்முனிவர் மகிழ்ச்சி அடைந்தவராக அவனை அழைத்துக் கூறியதாவது– “உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று. சத்தியமே பிரம்மம். சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள் பிரம்மத்தை அறியத் தகுதி உடையவர்களாகிறார்கள். பிரம்மத்தை அறிபவன் பிராம்மணன் ஆகிறான். சத்தியவந்தனாகிய நீ பிராம்மணன் ஆவாய். நாளை உனக்குப் பிரம்ம நாட்டத்துக்கு முதல்படியாக இருக்கும் பிரம்மசரிய தீட்சை செய்து வைப்பேன்.”

மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மசரிய தீட்சை செய்து வைக்கப்பட்டான். அதற்குப் புறச் சின்னமாக முப்புரிநூலும் அணிவிக்கப்பட்டான். அவனுடைய தாயின் ஆசீர்வாதம் அவனுக்கு நன்கு பயனளிக்க ஆரம்பித்தது. வேதத்தைக் கற்று பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்ற நீண்டகால அவனுடைய அவா பூர்த்தியாயிற்று. இந்த மேலான வாழ்வில் என்னை வழுவாது அழைத்துச்செல்வாயாக என்று அக்கினிதேவதையைப் பிரார்த்தித்துக் கொண்டான்.

உபநயனத்துக்குப் பின்பு குரு, ஸத்தியகாமனிடம் நானூறு பசுக்களை ஒப்படைத்தார். அந்நானூறு பசுக்களும் ஆயிரம் பசுக்களாகப் பெருகியபின்தான் திரும்ப வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஸத்தியகாமனும் மகிழ்ச்சியோடு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஏராளமான புல்லும் நல்ல தண்ணீரும் அகப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க காட்டுக்குள் வெகுதூரம் அவற்றை ஓட்டிச் சென்றான். நல்லதொரு இடத்தையும் கண்டான். பசுக்களுக்கு நல்ல உணவும் நீரும் அவ்விடத்தில் அகப்பட்டதோடு, தியானத்திற்கு மிகப் பொருத்தமான இடமாகவும் அது அமைந்திருந்தது. அமைதியும் தனிமையும் நிறைந்த அந்த இயற்கைச் சூழ்நிலையில் இறைவனோடு உள்ளத்தை ஈடுபடுத்த ஸத்தியகாமனுக்குச் சுலபமாக இருந்தது. குரு உபதேசித்தபடி ஸத்தியாகாமன் தவவாழ்வு வாழ ஆரம்பித்தான். நாள்தோறும் அக்கினி வழிபாடு தவறாது செய்துவந்தான். பசுக்கூட்டத்தைப் பராமரிப்பதில் அவன் சிறிதும் சளைக்காதவனாக இருந்தான். அவனுடைய நேர் பராமரிப்பில் பசுக்கூட்டம் பெருக ஆரம்பித்தது.

நாள்கள் மாதங்களாகவும், மாதங்கள் ஆண்டுகளாகவும் விரிந்து கொண்டே போயின. ஸத்தியகாமன் காலத்தைக் கருத்தில் வாங்காது கடும் தவவாழ்வில் ஈடுபட்டு இருந்தான். ஆரம்பத்தில் அடிக்கடி தாயினுடைய ஞாபகமும், வீட்டு ஞாபகமும் அவன் தவத்துக்கு இடையூறாக இருந்தன. நாளடைவில் அவ்வெண்ணங்கள் அவன் மனதை விட்டு முற்றும் அகன்றன. இவ்வுலக விஷயங்களிலிருந்து அவன் மனது விலக விலக புதிய தவவாழ்க்கையில் அவன் மனது முற்றும் ஈடுபட ஆரம்பித்தது. பிரார்த்தனை, தியானம் அவன் புதுவாழ்வில் முக்கிய அம்சங்களாக இருந்தன. மலையினின்று வீசிய மந்தமாருதமும், யக்ஞத்துத் தோற்றுவித்த நெருப்பும் அவனுக்கு நண்பர்களாக இருந்து அவனோடு உரையாடி வந்தன. ஒருநாள் வாயுபகவான் அவனிடமிருந்த பெரிய பசுவின் வாயிலாக அவனுக்குச் சொன்னதாவது– “ஸத்தியகாம, பசுக்கள் ஆயிரமாகப் பெருகிவிட்டன. அவைகளை அவைகளுடைய தலைவரிருக்கும் ஆச்ரமத்திற்கு ஓட்டிச் செல்லலாம்.”

பசுக்கள் ஆயிரமாகப் பெருகியது உண்மைதானா என்று கணக்கிட்டுப் பார்த்ததில் அது முற்றிலும் உண்மை என்று அவனுக்குப் புலப்பட்டது. அவனுடைய ஸத்தியத்தையும், கடும் தவத்தையும், குரு பக்தியையும் கண்ட வாயுபகவான் அவனுக்கு மேலும் பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை உபதேசிக்க முன்வந்தது. ஸத்தியகாமன் வாயுபகவான் உபதேசத்தை ஏற்கச் சம்மதித்தான். “நான்கு திசைகளிலும் பிரம்மம் ஒன்றே பரந்து இருக்கிறது. எத்திக்கும் உள்ள பிரம்மத்தை தியானிக்க வேண்டும். பிரம்மத்தைப் பேரொளி வடிவமாகத் தியானிக்கும்போது தியானிப்பவனுடைய அறிவு பிரகாசமுடையதாகிறது. பிரம்மத்தினுடைய பேரியல்பில் பிரகாசம் ஒருபகுதி என்றும் இப்பகுதிக்குப் ‘பிரகாசவான்’ என்ற பெயரும் உண்டு” என்று வாயுபகவான் உபதேசித்தது. பிரம்மத்தைப் பற்றிய விளக்கத்தில் இது கால்பங்கு என்றும் மேலும் அக்கினியிடமிருந்து ஸத்திய காமனுக்கு உபதேசம் கிடைக்கும் என்றும் வாயுபகவான் கூறிற்று.

மறுநாள் காலையில் ஸத்தியகாமன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கெளதமருடைய ஆசிரமத்திற்குப் புறப்படான். அவன் உள்ளத்தில் ஆனந்தம் ததும்பிக்கொண்டிருந்தது. முந்திய நாள் வாயுபகவானிடம் இருந்து கிடைத்த உபதேசம் அவனுடைய வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியிருந்தது. சூரியன், அடர்ந்த காடு, மலர்களும், பழங்களும் நிறைந்த கொடிகள், சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு ஓடும் தெளிந்த நீரோடை– இயற்கையிலுள்ள இக்காட்சிகள் தெய்வத்தன்மையை ஸத்தியகாமனுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அவன் உள்ளத்தில் சொல்லொணாத ஆனந்த ஊற்று கிளம்புவதை உணர்ந்தான். இதற்கு முன்பு இத்தகைய ஆனந்தத்தை அவன் அனுபவித்து கிடையாது. அவன் ஆசிரமத்தை அடைவதற்குமுன் இரவு நேரம் வந்துவிட்டது. பசுக்களை ஒழுங்குபடுத்தி ஓர் இடத்தில் இருத்திவிட்டு யாகத்துக்கு நெருப்பை மூட்டினான். ஹோமாக்னிக்குமுன் தியானத்தில் அமர்ந்தான். ஹோமாக்னி பேசுவது போன்ற குரல் அவன் காதில் விழுந்தது. அப்பொழுது அப்பேச்சிலிருந்து அவனுக்குக் கிடைத்த உபதேசமாவது: “இப்பூவுலகிலும் இதற்கு மேலுள்ள சொர்க்க லோகத்திலும் இவ்விரண்டிற்குமிடையிலுள்ள இடைவெளியெங்கும், இப்பூவுலகத்திற்குக் கீழும் ஆகிய எல்லாஇடங்களிலும் பிரம்மமே நிறைந்திருக்கிறது. எல்லையிலடங்காத அனந்த சொரூபமாக இருக்கும் பிரம்மத்தைத் தியானம் செய்தல் வேண்டும். பிரம்மத்தின் தன்மைகளுள் இவ்வானந்தம் ஒருபகுதி. பிரம்மத்தின் இப்பகுதி “அனந்தவான்” என்று அழைக்கப்படுகிறது”. இங்ஙனம் பிரம்மத்தின் பிரகாசமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும் அதன் மகிமைக்கு ஓர் எல்லையில்லை என்றும் ஸத்தியகாமனுக்கு உபதேசிக்கப்பட்டதும் அவன் முகத்தில் பிரம்ம தேஜஸ் திகழ்ந்தது. அவன் எங்கும் பிரம்மத்தின் மஹிமையையே உணரலானான்.

அடுத்தநாள் தன்குருவின் ஆசிரமத்தை நோக்கி ஸத்தியகாமன் தன் பிரயாணத்தைத் தொடங்கினான். ஆனால் அன்றும் அவன் ஆசிரமத்தை அடைவதற்குமுன் இருள் சூழ்ந்துவிட்டது. முன்னாள் இரவு போன்று பசுக்கூட்டம் தங்க இடம் அமைத்துவிட்டு நெருப்பை மூட்டி தியானத்தில் அமர்ந்தான். அப்பொழுது ஓர் அன்னப்பறவை அவன் இருந்த இடத்திற்கு மேலே பறந்து செல்வதைப் பார்த்தான். ஆதித்யன் அவ்வன்னப்பறையின் வேடம் பூண்டு ஓர் அரிய விஷயத்தை உபதேசிக்க அங்கு வந்திருப்பதாக அவன் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. அப்பறவை அவனுக்கு உபதேசித்ததாவது– “பிரம்மத்தின் ஒளியே அக்னிவடிவமாகப் பூமியிலும், சூரிய சந்திர வடிவங்களாகச் சொர்க்கத்திலும், மின்னலின் வடிவமாகச் சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வெளியிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பிரம்மத்தின் ஜோதி வடிவை இங்ஙனம் தியானித்துப் பழக வேண்டும். பிரம்மத்தின் ஜோதிமயமான இப்பகுதி ‘ஜோதிஷ்மான்’ என அழைக்கப்படுகிறது.”

மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறதென்றும், எல்லாவற்றையும் கடந்திருக்கிறதென்றும், அதனுடைய மஹிமையை இவ்வுலகப் பொருள்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் முந்திய நாள்களில் கேட்ட மூன்று உபதேசங்களின் சாராம்சத்தை ஆழ்ந்து எண்ணிக் கொண்டிருந்தான். அவ்வமயம் நீர்ப்பறவையொன்று அங்கு பறந்துவந்தது. முக்கியப் பிராணன் அந்நீர்ப்பறவையின் வடிவெடுத்து அவனுக்குப் பிரம்மத்தின் நான்காவது தன்மையை உபதேசிக்கலாயிற்று– “பிராணன், நேத்திரம், செவி, மனம் இந்நான்கையும் பிரம்மமே இயக்குகிறது. அத்தியாத்மத்தில் பிரம்மத்தினுடைய தன்மை இந்நான்கின் மூலம் விளக்கப்படுகிறது. பிரம்மத்தின் இத்தன்மை ‘ஆயதனவான்’ என அழைக்கப்படுகிறது”. புறத்திலும் அகத்திலும் பிரம்மத்தின் தன்மை இங்ஙனம் இருப்பதாக ஸத்தியகாமன் உபதேசிக்கப்பட்டவுடன் அவனுக்கு ஓர் உண்மை விளங்கிற்று. பிரம்மமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும் இதை அறிவதே பிரம்மத்தை அறிவதற்கு நிகராகுமென்றும் இந்த ஞானம் தன்னை அறிவதிலிருந்தே எளிதில் கிடைக்கிறதென்றும் தெளிவாக அவன் உணர்ந்தான். மேலும் ஆத்ம சொரூபத்துக்குத் தான் புறம்பாக இருக்கும்வரையில் பிரம்மத்தை அறிந்தவன் ஆகமுடியாது என்பதையும் அவன் நன்கு உணர்ந்தான்.

பிரம்மத்தைப் பற்றிய ஞானம் அவனிடத்தில் தெளிவானதும் அவன் உள்ளம் சாந்தியடைந்தது. அருள்தாகம் தணிந்து பிரம்மஞானம் உள்ளவனாக குருவிடம் தனது வணக்கத்தைத் தெரிவிக்க அவரது ஆசிரமத்துக்கு அவன் சென்றான். ஆசிரமத்தை அடைந்து குருவை வீழ்ந்து நமஸ்கரித்தான். அவனுடைய முகத்தில் பிரம்மதேஜஸ் ஜொலித்துக்கொண்டிருப்பதைக் கண்ட குரு ஆனந்தமடைந்தவராய், “ஸத்தியகாமா!” என்று அன்புடன் கூவி, “நீ பிரம்மஞானம் அடைந்தவன் போல் காட்சியளிக்கிறாய். உன் முகத்தில் தவழ்கின்ற புன்சிரிப்பு உன்னிடத்திலுள்ள பரமசாந்தியை வெளிப்படுத்துகிறது. உனக்குப் பிரம்ம ஞானத்தைப் புகட்டியவர் யார்?” என்று கேட்டார்.

வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் அவனுக்குக் கிடைத்த ஞானத்தை குருவினிடம் எடுத்துப் பகர்ந்தான். தேவதைகளின் மூலம் மறைமுகமாக அவனுக்குக் கிடைத்த ஞானத்தை அவன் பெரிதாகக் கருதவில்லை. குருவினிடம் நேரே உபதேசம் பெறுவதுதான் சிறந்தது எனக்கருதி, தன் கருத்தைக் குருவிடம் தெரிவித்தான். குருவும் சிஷ்யனுடைய விசுவாசத்தை மெச்சி மீண்டும் அவனுக்கு பிரம்மஞானத்தைப் புகட்டினார். ஏற்கனவே அவன் அறிந்த ஞானத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் குருவின் உபதேசம் அவனுக்குப் பயன்பட்டது. இங்ஙனம் மாதா, தெய்வம், குரு ஆகியோரின ஆசீர்வாதத்தால் ஸத்தியகாமன் ஞானத்தைப் பெற்றான். சாதனையில் நாட்டங்கொண்டு முறையாகச் சாதனம் செய்பவர்களுக்குத் தாயிடம் இருந்தும், குருவினிடம் இருந்தும், தெய்வத்தினிடம் இருந்தும் உதவியும் ஆசியும் கிட்டுகின்றன என்பதை ஸத்தியகாமன் கதை தெளிவாக்குகிறது.

மாடு மேய்த்தல் மூலம் ஸத்தியகாமனுக்கு ஞானம் ஏற்படுகிறது. ஆகையால் மனபரிபாகத்துக்குத் தொழில் எத்தகையது என்பது முக்கியமன்று; அது என்ன நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்பதே முக்கியமானது. நமக்கு அமைந்த தொழிலைக் கடவுளுக்காக என்று நாம் செய்து வந்தால் அது நம் மனதைப் பரிசுத்தமாக்குகிறது. மனம் பரிசுத்தம் அடையும்பொழுது அது ஞானத்தைப் பெறத் தகுதியுடையதாகிறது. பரிசுத்த உள்ளத்தில் ஞானோதயம் உண்டாகிறது. அந்நிலையில் வானும் மண்ணும், ஒளியும், வெளியும், மலையும், நதியும் ஒவ்வொன்றும் உபகுருவாய் இருந்து பேசாமல் பேசி நமக்கு ஞானத்தைப் புகட்டுகின்றன. இவ்வுண்மையை ஸத்தியகாமனுடைய கதை நமக்குப் புகட்டுகிறது.

உபகோஸலர்

கெளதம முனிவரிடமிருந்து ஞானோபதேசம் பெற்றபின் ஸத்தியகாம ஜாபாலன் குரு ஸ்தானம் பெற்றார். அவருடைய பெருமை எங்கும் பரவியது. பலர் வேதங்களைப் பயிலுவதற்கும், பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும், பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிப்பதற்கும் அவரிடம் வந்தனர்.

பண்டைக்காலத்தில் குருவிடமிருந்து பிரம்மச்சரியம் அனுஷ்டித்து பிரம்மவித்தையைக் கற்றார்கள். கல்விபெறும் பயிற்சி முடிந்தவுடன் சிலர் சிறந்த இல்லற வாழக்கையில் ஈடுபட்டார்கள். இன்னும் சிலர் வாழ்க்கையில் மேலாம் நிலையில் இருக்கும் சந்நியாச வாழ்க்கையில் இறங்கினர். சந்நியாச வாழ்க்கை உயர்ந்தது எனினும் இல்லற வாழ்க்கையில் இருப்பது இன்னும் பலருக்கு உதவிபுரிவதற்கு அனுகூலமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவ்வாழ்க்கையில் சிலர் ஈடுபட்டார்கள். இல்லற வாழ்க்கையில் இறங்கியவர்களுள் ஸத்தியகாமனும் ஒருவர். கெளதம முனிவரிடமிருந்து பிரம்ம வித்தையைக் கற்றான பிறகு அழகான ஸ்திரீயை மணந்து கொண்டார். அம்மாது சமயக் கொள்கையிடத்தும் கணவரிடத்தும் பக்தி நிரம்பப் பெற்றவராக இருந்தார். ஸத்தியகாமருடைய ஆச்ரமத்துக்கு வந்த பிரம்மசாரிகள் அம்மாதுவிடமிருந்து தாய் அன்பைப் பெற்று வந்தார்கள். தங்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்ட காலத்து அம்மாதுவிடமிருந்து அவர்களுக்கு மனச்சாந்தி கிடைத்து வந்தது. அம்மாது ஆச்ரமத்தில் இருந்ததால் கட்டுப்பாடான ஆச்ரம வாழ்க்கையும் உள்ளத்துக்கு உவந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.

அவ்வாச்ரமத்தில் ‘உபகோஸலர்’ என்னும் வாலிப பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளாக அவ்வாச்ரமத்தில் வசித்திருந்து தமக்கு அமைந்த கடமையை முறையாகக் கவனித்து வந்தார். கல்விக்குரிய காலம் முடிந்ததும் மற்ற பிரம்மசாரிகள் அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உபகோஸலருக்கோ பிரம்மஞானமும் உபதேசிக்கப்படவில்லை; வீடு செல்லுவதற்கு அனுமதியும் தரப்படவில்லை. உபகோஸலரிடம் ஸத்தியகாமர் இங்ஙனம் பாராமுகமாக இருந்ததற்குத் தகுந்த காரணம் உண்டு. அக்காரணம் ஸத்தியகாமர் ஒருவருக்குத்தான் தெரியும். ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்து கொண்டே போயின. ஆனால் உபகோஸலர் நிலைமட்டும் அதேமாதிரி தான் இருந்தது. உபகோஸலர் ஏமாற்றமும் துன்பமும் அடைந்தார். இவருடைய நிலைமையை ஸத்தியகாமருடைய மனைவி அறிந்து, இவர்மீது அனுதாபம் கொண்டாள். ஸத்தியகாமரிடம் உபகோஸலர் என்னும் பிரம்மச்சாரி நீண்டகாலம் சிறந்த தபசு செய்து வந்திருக்றார். அவருக்கு நீங்கள் உபதேசம் செய்தாக வேண்டும் என்று விநயமாகக் கேட்டுக் கொண்டாள். மனைவியின் வேண்டுதலைக் கேட்டும் உபகோஸலருக்கு உபதேசம் செய்யாமலேயே ஸத்தியகாமர் நீண்டதொரு க்ஷேத்திர யாத்திரை புறப்பட்டு விட்டார்.

காரியமாகிய இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாக இருப்பவர் கடவுளே என்பதை ஞானிகள் நன்கு அறிவர். ஆகையால் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் கடவுளின் தோற்றம் என்பது வெளிப்படையாகிறது. இப்பிரபஞ்சத்தில் மனிதன் எதைக் கடவுள் சொரூபமாகக் கருதி உபாசித்து வருகின்றானோ அதன் மூலம் கடவுள் உரிய காலத்தில் அவனுக்கு ஞானத்தைப் புகட்டுகின்றார். அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்.

உபகோஸலருக்கு வாழ்க்கையில் அது இருள்சூழ்ந்த காலமாகத் தென்பட்டது. இருளைப் பின்தொடர்ந்து வெளிச்சம் வருகிறது என்பதை விடியற்காலைநேரம் விளக்கிக் காட்டுவது போன்று அவருடைய வாழ்க்கையிலும் ஞானஒளி ஏற்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. ஹோமாக்கினிக்கு முன் ஆழ்ந்த நிஷ்டையில் உபகோஸலர் அமர்ந்திருந்தபொழுது அந்த அக்கினி மூன்று வடிவங்கள் மூலமாக அவருக்கு உபதேசம் செய்ய முன்வந்தது. இது அவருடைய முழுக்கவனத்தையும் ஈர்த்தது. அக்கினியிடம் இருந்து வந்த ஓசையை உபகோஸலர் கவனமாகக் கேட்டார். பிராணன் பிரம்மம், ‘க’-பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்று அக்கினி உபதேசிப்பதாக உணர்ந்தார். ‘க’– பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்பதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. அவற்றிற்கான விளக்கம் அக்கினி தேவதை உரைப்பதை அவர் மேலும் கேட்டார். ‘க’ என்னும் அக்ஷரமும் ‘க்க’ என்னும் அக்ஷரமும் ஒரே பொருளைக் குறிப்பதாகும் என்று அக்கினி தேவதை மேலும் விளக்கியது. ‘க’ என்னும் அக்ஷரம் சுகத்தையும், ‘க்க’ என்னும் அக்ஷரம் ஆகாசத்தையும் குறிக்கும். சுகத்துக்கு ஆதியும் அந்தமும் உண்டு. பிரம்மத்துக்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆகாசம் அசேதனப் பொருள். பிரம்மமோ சேதனப் பொருள். எனவே அவ்வக்ஷரங்கள் எப்படி பிரம்மம் ஆகும் என்று எண்ணிப் பார்த்தார். ஆழ்ந்த தியானத்திலிருந்து அவற்றிற்கு விளக்கம் காண முயன்றபொழுது அவற்றிற்குரிய விளக்கம் அவருடைய உள்ளத்தில் உதித்தது. புலன்களின் மூலம் எட்டும் விஷய சுகம் சாசுவதமானதன்று. ஹிருதய குகையில் விளங்கும் ஆசுகம் அழியாதது. அதுவே பிரம்ம சுகம் ஆகிறது. அக்கினி உபதேசித்த சுகம் ஹிருதயகுகையில் விளங்கும் சுகத்தைக் குறிக்கவேண்டும், வெளியிலுள்ள ஆகாசம் ஜட ஆகாசமாகிறது. எனவே அது பிரம்மத்தைக் குறிக்காது. ‘சிதாகாசம்’ என்னும் ஆனந்தமயமான ஆகாசம் நம்முள் இருக்கிறது. ஆகாசம் என்ற சொல் அதையே குறிக்கவேண்டும். இங்ஙனம் அக்கினியின் உபதேசத்துக்கு உபகோஸலர் பொருள் கண்டார். மேலும் அவர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அப்பொழுது இன்னும் சில அரிய கருத்துக்கள் அவருக்குத் தெளிவாயின. வெட்டவெளியைப் பிளவுபடுத்த முடியாது. ஓர் அறைக்கு உள்ளிருக்கும் வெட்டவெளியும் அறைக்கு வெளியில் இருக்கும் வெட்டவெளியும் அறையின் சுவரினுள் இருக்கும் வெட்டவெளியும் ஒன்றேயாம். இங்ஙனம் ஹிருதய குகையில் இருக்கும் பிரம்மமும் பிரபஞ்சத்திலிருக்கும் பிரம்மமும் ஒன்றேயாகும். பிரம்மசுகத்தைப் புறஉலகப் பொருள்கள் எதனிடத்திருந்தும் பெறமுடியாது. பிரம்மம் ஒன்றினிடத்து இருந்தே பிரம்ம சுகத்தைப் பெறமுடியும். அப்பிரம்ம சுகம் பிரம்மத்தை அறிகின்றவர்களுக்கே உரியதாகும்.

ஸத்தியாகாமர் தன்னுடைய யாத்திரையை முடித்துக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும்பினார். அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த பிரம்ம தேஜஸ் விளங்குவதைக் கண்டார். அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த உபதேசத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். ஸத்தியகாமர் மேலும் அதை அவருக்குத் தெளிவுபடுத்தினார். இங்ஙனம் உபகோஸலருக்கு ஸத்தியகாமர் ஞானவாழ்வை நல்கினார். உபகோஸலரும் ஸத்தியகாமரை குருவாகக் கொண்டு ஞானத்தை அடையப்பெற்றவரானார்.

[இந்த ஞானியரின் வரலாறும் உபதேசங்களும் சாந்தோக்கிய உபநிஷதத்தில் உள்ளவை]

(தொடரும்…)

 

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

3 Replies to “[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்”

  1. அற்புதமான பதிவு! அந்த சத்யகாமரும் கெளதமரும் உபகொசளரும் மீண்டும் வந்தார்களோ என்னும்படி இருக்கும் அத்புத பதிவு!
    வாழ்க நீவீர்! வளர்க குருதேவரின் புகழ்!

  2. மிக அற்புதமான பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் கட்டுரை.
    நன்றிகள் பல.

    சோமசுந்தரம்

  3. In the same site previously I read Japala his mother worked as servant in many house and she does not know for whom SathyaKaman was born. Here the story is different. Can you tell me what is that I am missing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *