தொடர்ச்சி…
37. एवं निरन्तराभ्यस्ता ब्रह्मैवास्मीति वासना |
हरत्यविध्याविक्षेपान् रोगानिव रसायनम् ||
ஏவம் நிரந்தராப்யஸ்தா ப்ரஹ்மைவாஸ்மீதி |
ஹரத்யவித்யாவிக்ஷேபான் ரோகாநிவ ரசாயனம் ||
நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்
பிரமமே யான் ஆவன் என்னும் – உறுதி
அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்
ஒழிக்கும் இரசாயனம் ஒத்து
(அந்தப் பிரம்மமே நான் என்ற பாவத்துடன் சதா சர்வ காலமும் தியானிக்க, அதன் பயனாகப் பிறக்கும் உறுதியானது, தீர்க்க முடியாது என நினைக்கப்படும் நோய்களையும் தீர்க்கும் மகா மருந்தாகிய ரசாயனக் கலவை போல, அஞ்ஞானத்தினால் ஏற்படும் மனக் குழப்பங்களையும் அழித்துவிடும்.)
பெறுவதிலேயே பெறற்கரிய பேறு ஆத்மாவை உணர்வதே. அந்தப் பேற்றை அடையும் நேரடியான வழி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை ஆத்மாவின் இலக்கணங்களைப் பற்றி விலாவாரியாகப் பார்த்தோம். இங்கு அதனை உணரும் நேர் வழி விளக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் ஒன்றை அடைய முடியாதபடி தடுத்துக்கொண்டிருப்பது ‘அது முடியுமா, முடியாதா’ போன்றதில் தொடங்கி அடுக்கடுக்காக வரும் பலவிதமான மனக் குழப்பங்கள்தான். இங்கும் அதே பிரச்சினை என்றால் ஆன்மாவைத் தேடி அலைவதும் மற்ற உலகியல் பிரச்சினைகள் போன்றதுதானா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம் அல்லவா? தொடக்கத்தில் அதுதான் உண்மை என்றால் எங்கோ கொஞ்சம் இடிக்கிறது போல் இருக்கிறதோ?
தியானம் என்றால் சொன்னவற்றை மனத்தில் இருத்தி, அதில் உள்ள உண்மைகளை மனத்தில் ஏற்றி, அதைப் பற்றி சதா சர்வ காலமும் சிந்தித்து, சிறிது சிறிதாக அறிவினால் அலசி ஆராயப்பட்ட அந்த உண்மைகளை தன் சொந்த அனுபவத்தில் காண முயற்சிப்பதுதான். இந்தப் பயிற்சியில் ஆரம்பம் முதல் இதுவரை சொல்லப்பட்டது எல்லாமே மனம், புத்தி இவைகளின் துணை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. அந்த இடைவிடா முயற்சியின் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவம் என்று வந்த பின்தான் அனைத்தும் ஒருவனுக்கு முழுவதுமாக உள்மயம் ஆகிறது. அதனால் வெளி உலகைக் காணும் கருவிகளான மனமும், புத்தியும் இயங்கும் வரை ஆன்மாவைத் தேடும் முயற்சியும், மற்ற எந்தவிதமான உலகியல் பிரச்சினைகள் போலவே, குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். இப்படி வருவதெல்லாம் எனக்கு என்றால், “நான் யார்?” என்று கேட்கப்படும் கேள்வியும் தொடக்கத்தில் அறிவார்த்தமாகக் கேட்கப்படுவதுதான். அதற்குப் பதிலை அறிவார்த்தமாக புத்தியின் துணையுடன் தேட முயற்சித்தால் ஆன்மாவை உணரமுடியாது.
ஆனாலும் இடைவிடாது கேள்வி கேட்டு பயிற்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்க, போகப்போக அறிவுபூர்வமாகக் கேட்பவனும் மறைந்து, கேள்வியும் மறைந்து, கேட்கும் ஒருவன் தனது இருப்பை உணரும்போது, உறுதியாக உணரப்படும் தன்னைத் தானே அறிய, அதுவரை “தான் அறியவில்லை” என்ற அந்த அஞ்ஞானமும், தீராது என நினைக்கப்படும் நோய்களைப் போல, அழியும். அப்படி இருக்கும் ஒன்றான சத்தை மறைத்து நின்ற அனைத்தும் அழிய, இறுதியில் இருப்பதானது அறிவுமயமாய் நின்று ஆனந்தமாய் இருப்பது அனுபவத்திலே உணரப்படும்.
38. विविक्तदेश आसीनो विरागो विजितेन्द्रियः
भावयेदेकमात्मानं तमनन्तमनन्यधीः ||
விவிக்ததேஷா ஆஸினோ விராகோ விஜிதேந்த்ரியஹ |
பாவயேதேகமாத்மானம் தமனந்தமன்யதீஹீ ||
ஏகாந்த தேசத்து இருந்து ஆசையின்றி வெளி
போகாது வென்று பொறிகளை – ஏகமாய்
அந்தமில் ஆன்மாவை அன்னியமில் புந்தியனாய்ச்
சிந்திக்க வேண்டும் தெரி
(தனிமையான இடத்தில் இருந்துகொண்டு ஆசைகள் அற்றவனாய், வெளி விஷயங்களை நோக்கிப் போகும் ஐம்புலன்களை வென்று, தன்னைத் தவிர வேறெந்த விஷயத்திலும் மனத்தை விடாத ஒரே சிந்தனை உடையவனாகி, அனைத்து சீவன்களையும் உள்ளடக்கும் ஆன்மாவை மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று தெரிந்து கொள்வாய்.)
மனமும் புத்தியும் இயங்கும் போதுதான் நான் யார், நம்மால் ஆவது என்னென்ன, நம் வாழ்வின் பொருள் என்ன என்றெல்லாம் நம்மைப் பற்றி யோசிக்க வரும். அப்படி யோசிக்கும்போது எவருக்கும் தன் கண் முன்னே தெரியும் உலகமும், அதில் தான் ஒரு அங்கம் என்றும், அந்த உலகத்தில் தான் செய்யவேண்டியது என்ன என்றபடிதான் எண்ணங்கள் தோன்றும். வெகு சிலருக்கே அப்படி யோசிப்பவன் யார் என்ற எண்ணம் வரும். அப்படி தன்னைப் பற்றி யோசிக்காது, தனக்கு அயலானவற்றைப் பற்றியே யோசிப்பவனுக்கும் தன்னைப் பற்றிய யோசனை ஒரு காலத்தில் வரும். அப்படி வரும்போது, அவனை அதுவரை இயக்கிக்கொண்டிருந்த அவனது மனத்தையும், புத்தியையும் உள்முகமாக்கி தன்னைப் பற்றி அறிய, அவன் முழு முயற்சி எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
அப்போது அவன் அதுவரை தன்னை ஆட்கொண்டிருந்த உலக வாசனைகள் அனைத்திலுமிருந்து விலகுவது என்பது முதல் படி. அதற்கு அவன் தனிமையை நாட வேண்டும். இல்லையென்றால் பழையபடி அவனால் உலகத்தைத்தான் கவனிக்க முடியும்; கவனிக்கும் தன்னை அறிய முடியாது. தனிமையில் இருக்கும் அவன் அதுவரை தன்னை வெளியே இழுத்து அலைபாயக் காரணமாகத் தன்னுள் இயங்கிக்கொண்டிருந்த தனது ஐம்புலன்களையும் அடக்கி, அவைகளால் முன்பு வெவ்வேறு விஷயங்களில் கொண்டிருந்த ஆசை முதலான குணங்களையும் தவிர்த்து, அவை எப்போதெல்லாம் மறுபடி எழுகின்றதோ அப்போது அவன் தனது உள்முக நாட்டத்தை உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். இப்படி உறுதி வரும்வரை பழகப் பழக, அவன் தன்னைப் பற்றிய ஒரே சிந்தனையுடன் இருக்க முடியும். அந்த உறுதி வரவில்லையென்றால் தனித்திருந்தும் பயன் இல்லாமல் போய், மனத்தின் கண் இருக்கும் வாசனைகளால், உடலால் இல்லாது போனாலும் உள்ளத்தால் உலக விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.
ஒரே சிந்தனையுடன் இருக்கும் அவன் “தானன்றி யாருண்டு?” என்றும், தன்னுணர்வுக்குப் பின்பே மற்றெவரையும் உள்ளடக்கும் உலகம் வருகிறது என்பதையும் உணரும்போது, அவனுக்கு மற்ற சீவராசிகளும் தன்னைப் போலவே இருப்பதையும் உணர வாய்ப்பு வருகிறது. அதனால் தான் மட்டுமன்றி எவரும் இருப்பது அனைவரையும் உள்ளடக்கும் ஆன்மா என்பதை இடைவிடாது சிந்திக்க வேண்டும். மனம், புத்தி இவற்றால் உந்தப்பட்டு இப்படி முயற்சி எடுக்கும் ஒருவனுக்கு, அவைகளையும் கடந்து இருக்கும் ஒன்றான ஆன்மா விரைவில் சித்திக்கும்.
39. आत्मन्येवाखिलं दृश्यं प्रविलाप्य धिया सुधीः |
भावयेदेकमात्मानं निर्मलाकाशवत्सदा ||
ஆத்மன்யேவாகிலம் த்ருஷ்யம் பிரவிலாப்ய தியா சுதிஹி |
பாவயேதேகமாத்மானம் நிர்மலாகாஷவத்சதா ||
புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவில்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே – சுத்தமாம்
விண்ணென ஒன்றாய் விளங்கிடும் ஆன்மாவை
எண்ணுக எப்போதுமே
(கேட்டல், சிந்தித்தல் முதலான வழிகள் மூலம் கற்றுணர்ந்து தேர்ந்த புத்தியை உடையவன், தான் ஆன்மாவாய் இருப்பதால், தான் காணும் வெளியுலகப் பொருட்கள் அனைத்தையுமே அந்த ஆன்மாவின் பிரதிபலிப்பாக தனது புத்தி மூலம் அறிகிறான். எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக.)
நம்மை யாராவது அவதூறு பேசினால் அதைப் பொருட்படுத்தினால் மட்டுமே அது நம்மை பாதிக்கும். அந்தப் பழிச்சொல்லை நாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அது பேசியவரோடு நின்றுபோய்விடும் அல்லவா? அதே போல ஒரு பொருளை நாம் பார்க்கிறோம் என்றால் அந்தப் பொருள் இருப்பது என்பது தவிர, நம்மைப் பொருத்தவரை அது இருப்பது என்பது நாம் பார்ப்பதால்தான் என்கிற உலகியல் தத்துவம் இங்கு நமக்குக் கை கொடுக்கிறது.
நான் உடல் மட்டுமில்லை, அதனிலும் நுண்ணியதான மனம், அதைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் புத்தி என்று இவ்வாறாக இருந்தாலும், நம்மை நாமே அறியாதவாறு உள்ள நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதைப் பார்த்தோம். அதனாலும் அது தவிர நமக்குத் தெரிந்த மற்ற எல்லா சீவராசிகளுக்கும் இதுபோன்ற நிலைகள் உள்ளதாலும், எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஆன்மாவே நாம் என்றும் பார்த்தோம். அப்படி நாமே ஆன்மா என்றால் நாம் பார்ப்பது, கேட்பது எதுவும் ஆன்மாவைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் என்று கேட்பதுதானே அடுத்த நிலை. நாம் நம்மைப் பற்றி நன்கு அறிய இப்படியாகக் கேட்டு, சிந்தித்து அதனால் தெளிவு பெற்ற புத்தியுடன் இருக்கும்போது, நம் ஒவ்வொருவரையும் முதலாகக் கொண்டே மற்றது எதுவும் அமைகிறது என்பது விளங்கும். இந்த வாதம் எவருக்குமே பொருந்தும்.
ஆன்மாவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று இவ்வாறாக உணர்வதை பரந்து, விரிந்த ஆகாயத்திற்கு ஒப்பாக இங்கு சங்கரர் விவரிக்கிறார். மாசுகள் எதுவும் இல்லாதது ஆகாயம். அப்படி மாசுகள் எதுவும் இருந்தால், அவை ஆகாயத்தைப் பாதிக்காது. அதேபோல ஆன்மாவும் அகன்று விரிந்து இருப்பது மட்டுமன்றி, ஆசைகள், எண்ணங்கள் எதனாலும் பாதிக்கப்படாது. எங்குதான் ஆகாயம் இல்லை, அதேபோல எங்குதான் ஆன்மா இல்லை என்பதை இவ்வாறாக புத்தியளவில் அறிவது போதாது. அது உள்ளத்தளவில் உறைந்து நிற்பதற்கு ஆன்மாவைப் பற்றி எப்போதும் தியானம் செய்யவேண்டும். எப்போதெல்லாம் சாதனை தளர்ந்து மனமும், புத்தியும் வெளியுலகை நோக்கிச் செல்ல முனைகிறதோ அப்போதைக்கு அப்போதே அதனைத் தடுத்து உண்முகமாக ஆன்மாவைத் தியானித்தல் அவசியம் ஆகிறது.
40. रूपवर्णादिकं सर्व विहाय परमार्थवित् |
परिपूर्णचिदानन्दस्वरूपेणावतिष्ठते ||
ரூபவர்ணாதிகம் சர்வ விஹாய பரமார்தவித் |
பரிபூர்ணசிதானந்தஸ்வரூபேணாவதிஷ்டதே ||
உள்ளது உணர்ந்தோன் உருவம் வருணம் முதல்
உள்ள மயல்கள் ஒருங்கு ஒழித்து – உள்ளம்
திகழ் பரிபூன்ற சிதானந்தம் தானாத்
திகழ்ந்திடுவன் நாளும் தெளி
(உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்.)
ஒரு பொருளைப் பார்க்கும்போது நமக்கு அதன் உருவம், நிறம் போன்ற தன்மைகள்தான் முதலில் தெரியும். அதேபோல ஓர் ஆளைச் சந்திக்கும்போது நமக்கு அவரது நிறம், உருவம் தவிர நம் மனதளவில் அவருடைய வேறு பல குணங்கள், செய்கைகள் என்று ஞாபகத்திற்கு வரும். இதுதான் உலகியல் நியதி. எப்படி ஒரு பொருளைக் காண்பதைவிட ஓர் ஆளை சந்திக்கும்போது, வெறும் ஜட சம்பந்தமானவைகள் தவிர பல நுண்ணியத் தன்மைகள் புலனாகிறதோ, அதுபோல மேலும் நுண்ணியதான பார்க்கப்பட்டதின் உண்மைத் தன்மை என்று ஒன்று இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும் என்று பலருக்கும் தோன்றுவதில்லை. அதன் காரணம் என்னவென்றால் எவரும் தனது உண்மைத் தன்மையை அறியாமல் இருப்பதே. நம்மை எப்படிப் பார்க்கிறோமோ அதேபோல மற்றவரையும் பார்க்கும் வழக்கம்தான் நம்மில் ஓங்கியிருக்கிறது.
உருவம், நிறம் போன்ற தன்மைகள் எல்லாம் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குணங்கள். பார்த்தவுடன் முதலில் அப்படித் தெரியும் வேற்றுமைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பவனுக்கு அவை மட்டும்தான் தெரியும். எப்படி ஒருவனைப் பார்க்கும்போது அவனுக்கும் நமக்கும் இருக்கும் வேற்றுமைகளைப் பாராட்டாது, நாம் அவனையும் நம்மைப்போல மனிதன் என்ற ஒற்றுமையைப் பார்ப்பது உலகியல் வழக்கப்படி முன்னதைவிட உயர்ந்ததோ, அதேபோல ஆன்மீகத்திலும் நாம் பார்க்கும் பொருளின் வேற்றுமைகளை நீக்கிவிட்டு அவைகளின் உண்மைத் தன்மையை அறிய முயற்சிக்கவேண்டும்.
நாம் காண்பதெல்லாம் எப்போதும் நமக்குச் சரிவரத் தெரிவதில்லை. அவையெல்லாமே நம் நம்பிக்கைக்குத் தகுந்தபடியும், சில சமயம் நம் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றவாறும் இருப்பதைத்தான் பார்க்கிறோம். ஆனாலும் ஒன்றின் தன்மைகளைப் பற்றி அறியும் முன்பாக, நாம் காண்பது முதலில் அங்கு இருக்கிறது என்பது உண்மைதானே? அதைக் காண்பதற்கும் முன்னால் நாம் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே? ஆக காணப்படும் ஒன்று எப்படி இருக்கிறதோ, அதேபோல காணும் ஒன்றாகிய நாமும் இருக்கிறோம் என்பதை யார் மறுக்க முடியும்? அப்படிக் காண்பவன் தன்னை அறிவதுபோல, காணப்படும் அதுவும் தன்னை அறிந்திருக்கலாம் என்று சொல்வதும் சரிதானே?
இப்படி இருப்பதும், அறிவதுமாய் உள்ள அந்த நிலை எவர்க்கும் பொதுவானதே. அந்த நிலையிலேயே நிற்பவனுக்கு எந்தவிதமான வேற்றுமைகளும் தெரியாது. அப்போது அவன் சதாசர்வ காலமும் ஆனந்தமாகவே இருப்பான். அந்த நிலையிலிருந்து வழுவியிருப்பவனுக்கு மட்டுமே வேற்றுமைகளும், அதனால் வரும் இன்ப-துன்பங்களும் வரும்.
41. ज्ञातृज्ञानज्ञेयभेदः परे नात्मनि विद्यते |
चिदानन्दैकरूपत्वाद्दीप्यते स्वयमेव तत् ||
ஞாத்ருஞானஞேயபேதஹ பரே நாத்மனி வித்யதே |
சிதானந்தைகரூபத்வாத்திப்யதே ஸ்வயமேவ தத் ||
அறிவான் அறிவோடு அறிபடுவ பேதம்
உறு பரமான்மாவில் உறாதே – அறிவின்
புருவாய் ஒன்றாய் அஹ்து உறுவதனால் தன்
உருவாலே தான் ஒளிரும் ஓர்
(அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற முப்புடிகளான வேற்றுமைகள், இருக்கும் ஒன்றேயான ஆத்மாவிற்குப் பொருந்தாது. ஆன்மா அறிவுமயமாய், ஆனந்த வடிவாய், ஒரே பொருளாக இருக்கும் தன்மையதால் தானே தானே ஒளிரும் என்று உணர்ந்துகொள்.)
நாம் ஒன்றைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்றால் தெரிந்துகொண்டுள்ள அந்தப் பொருளையும், நம்மையும் தவிர, நமக்கு அதைப் பற்றியுள்ள அறிவு என்று உலகியலில் மூன்றையும் பிரித்துச் சொல்வது வழக்கம். அதாவது அறிவு என்பது நம்மையும் அந்தப் பொருளையும் இணைக்கும் ஓர் உறவு என்று வைத்துக்கொள்ளலாம். ஆத்மாவைப் பற்றிச் சொல்லும்போதும் அத்தகைய பிரிவுகள் உண்டா என்ற சந்தேகத்திற்குப் பதில் சொல்வதுபோல அமைந்திருக்கிறது இந்த ஸ்லோகம். இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது என்பன போன்ற குணங்கள் என்று வந்தால் இருமைகள் வந்துவிடும் என்று முன்பே பார்த்தோம். அதைப் போல அறிவு என்ற ஒன்று வந்துவிட்டால் முப்புடிகள் உண்டு என்று இங்கே பார்க்கிறோம். அதனால் ஆன்மாவைப் பற்றிய அறிவு வரும்போதும் இத்தகைய வர்ணனை உண்டா என்ற சந்தேகம் வருவது ஒப்புக்கொள்ளக்கூடியதே.
முப்புடிகளாகிய வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றானதாகவே இருக்கும். அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது. ஆனால் ஒருவன் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது, அப்படிப் பேசுபவன் “நான்” என்று எண்ணுபவன் ஆதலால் ஆன்மா ஒரு பேசப்படும் பொருளாகி வேற்றுமைகள் தெரியும். அந்த வேற்றுமைகள் “தான்” என்று உணரப்படும் ஆன்மாவிற்குப் பொருந்தாது.
அந்த ஆன்மா ஒன்றாய் மட்டும் அல்லாது தன்னையே உணர்ந்து கொள்ளும் அறிவுமயமாயும் இருப்பதால்தான், “நான்” என்று சாதாரணமாக நம்மை நினைத்துக்கொண்டு செயலாற்றும் போது நமக்கு உள்ள புத்தியும் அந்த அறிவின் பிரதிபலிப்பாய் விருத்தியாகிறது. ஆன்மாவோ அறிவுமயமாய் மட்டும் இல்லாமல், எப்போதும் ஆனந்தமாயும் உள்ளது. அப்படி அது இருப்பதற்குக் காரணம் அது தானே தானே ஒளிர்வதால் மட்டுமே. அதனால் ஒருவன் தான் காணும் வேற்றுமைகள் அனைத்தையும் களைந்து அந்த ஆன்மாவின் இருப்பிலே தனியனாய் இருந்தால் அறிவதற்கு என்று வேறு எதுவும் இருக்காது; ஆனந்தம் என்பதும் அவனுக்கு வெளியில் இருந்து வரவேண்டும் என்ற அவசியமும் இருக்காது.
(தொடரும்)
” 37. एवं निरन्तराभ्यस्ता ब्रह्मैवास्मीति वासना | “- இந்த ஸ்லோகத்தின் தமிழ் ட்ரான்ஸ்லிடெரெஷனில் வாசனா என்ற கடைசி சொல் விடுபட்டுள்ளது. திருத்திக்கொள்ள வேண்டுகிறேன். திரு ராமன் அவர்களுக்கு சிறந்த தொடரை வழங்கி வருவதற்காக நமது நன்றிகள்.
நன்றி, அத்விகா அவர்களே. அந்தச் சொல்லை தவறவிட்டது எனது பிசகே. வாழ்த்துக்களுக்கும் நன்றி.