தொடர்ச்சி…
54. यल्लाभान्नापरो लाभो यत्सुखान्नापरं सुखम् |
यज्ज्ञानान्नापरं ज्ञानं तद्ब्रह्मेत्यवधारयेतः ||
யல்லாபான்னாபரோ லாபோ யத்சுகான்னாபரம் சுகம் |
யஜ்ஞானான்னாபரம் ஞானம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||
எவ்வடைவில் பிறிதேதும் அடைதற்கின்றோ
எவ்வன்பினில் பிறிது இன்பு இன்றோ – எவ்வறிவு
தன்னில் பிரிதறிவுதான் இன்றாமோ அது
தன்னைப் பிரமமெனச் சார்
(எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, எந்த இன்பத்தை விட வேறு உயர்ந்த இன்பம் இல்லையோ, எந்த அறிவைக் காட்டிலும் சிறந்தது எனப்படும் வேறு உயர்ந்த அறிவு இல்லையோ, அந்தப் பொருள்தான் பிரம்மம் என்று உறுதியுடன் அடைவாய்.)
இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் ஜீவன் முக்தனின் லக்ஷணங்கள் விவரிக்கப்பட்டன. இனி வரும் ஸ்லோகங்களில் பிரம்ம சொரூபத்தின் லக்ஷணங்களும், அதனால் வரும் ஆனந்த நிலையும் விளக்கப்படும். முன்பு வேறொரு சமயத்தில் நாம் பார்த்தது போல, இங்கும் நேர்மறையாய் இல்லாது எதிர்மறையில் விளக்கங்கள் வருகின்றன. அதற்குக் காரணம் நம் வாழ்க்கையில் சாதாரணமாக நமக்கு வரும் அனுபவங்களே. தினப்படி நடக்கும் நமது செயல்களைக் கூர்ந்து கவனித்தோமானால் அது புரியும். நாம் எப்போதுமே இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருப்பதில்லை. அதற்கும் மேல் ஏதாவது கிடைத்தால், அதனால் மேலும் இன்பம் பெறலாமோ என்றபடிதான் நமது செயல்கள் அமைகின்றன. அதனால் நமக்கு இறுதி நிலை என்ற ஒன்றை விளக்கும் போது, அது ஒன்றுதான் இறுதி; அதற்கு மேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லித்தானே முடிக்க முடியும். அதனாலேயே இங்கு சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே அப்படி எதிர்மறை விளக்கங்கள் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
“பழகிப் போனால் எல்லாம் புளிக்கும்” என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அதன்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதை நாம் மிகவும் பொருட்படுத்துவது இல்லை என்றாகிறது. உலகியல் நியதிப்படி எதை எடுத்துக்கொண்டாலும் நிலைமை அப்படித்தான் ஆகிவிடுகிறது. இன்று ஒன்று கிடைத்து விட்டால், நாளை அதையும் விட சிறப்பானது எது என்றுதான் நாம் தேடுகிறோம், அல்லது உருவாக்க முயற்சிக்கிறோம். அதனால் எதையும் அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் மிகவும் சிறப்பான ஒன்று நம்மிடம் சதா சர்வ காலமும் இருப்பதை அறியாமல் இருப்பதுவும் நமது தலையாய குணங்களில் ஒன்றே. அதனால் எவராவது நம்மிடம் இருக்கும் சிறப்பானதைக் குறிப்பிட்டுச் சொன்னால், அதையும் விட சிறப்பானது ஒன்று இருக்கலாமோ என்ற சந்தேகம் நமக்கு வரத்தான் செய்யும். ஒருவனின் வெளியுலகப் பார்வையில் தென்படும் எல்லாமே இந்த நியதியால்தான் கட்டுப்பட்டு இருக்கிறது.
மனிதர்களில் பலருக்குமே ஒன்று கிடைத்து விட்டதால் வரும் மகிழ்ச்சியை, அது கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே கூட தந்துவிடும். அதாவது தூலத்தை விட அதன் தொடர்பான நுண்ணிய அறிவே நாம் வலைபோட்டுத் தேடும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றுதான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் வாழ்வதற்கு உண்டான பொருட்களையும், அவைகளைப் பெற்றுத் தரும் செல்வத்தையும், பின்பு அவை மேலும் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் தேடுவோம். அவை எல்லாமே கிடைத்ததும் அவைகளைப் பாதுகாக்கும் அறிவையும் தேடுவோம். இப்படியாக தூலத்திலிருந்து நுண்ணிய பொருட்களில் கவனம் சென்று கொண்டிருப்பதே நமது வாழ்க்கைமுறை என்றாகிவிட்டது. இறுதியில் எதுவும் பெறக்கூடிய அறிவினைத் தேடுவோம். அத்தகைய அறிவிலும் சிறந்த அறிவு எது என்பதும் நாம் தேடிக்கொண்டிருக்கும் நமது பழக்கங்களில் ஒன்றுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாது உலகியல் பொருட்களும், இன்பங்களும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பலரும் அத்துடன் நின்று விடுகின்றனர். அப்படி இல்லாத சிலருக்கு அவர்களின் அறிவைப் பற்றிய தேடல் தீவிரமாகும் போதுதான் ஞான வேட்கை தொடங்குகிறது.
அந்த நிலைக்கு வந்துள்ள ஒருவனுக்கு ஆன்மா பற்றிச் சொல்லி, அதை வெளியே தேட முடியாது; உண்முகப் பார்வையால் மட்டுமே அறியமுடியும் என்று சொல்லி அதன் தன்மைகளைப் பற்றி குரு விளக்கும் போது அதன் மகிமையை இவ்வாறு உணர்த்துகிறார். “நீ எப்போதும் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாய். அது உன்னிடமே உள்ளது. அதைத் தேடி நீ அதை அடைந்துவிட்டால், அதனிலும் சிறப்பானது என்று எதுவும் கிடையாது. அத்தகைய உன்னதமான ஒன்று உனக்குக் கிடைத்துவிட்டால், இனி நீ வெளியே தேடி அலையும் வேலையே உனக்கு இல்லை. நீ அப்படி அலைந்ததன் நோக்கமே அதனால் உனக்கு கிடைக்கும் இன்பமே; இதுவரை நீ பெற்றதெல்லாம் சிறிது இன்பத்தைக் கொடுத்து அப்புறம் துன்பத்தைக் கொடுத்தது, அல்லது அந்த இன்பமே காலப்போக்கில் இல்லாது போயிற்று. ஆனால் நீ தேடிக்கொண்டிருக்கும் இது மட்டும் உனக்குக் கிடைத்துவிட்டால் உனக்கு எப்போதும் ஆனந்தமே கிட்டும். அதனால் உனக்கு சலிப்பு ஏற்படாது, அதற்கும் மேலான ஆனந்தம் தரும் பொருள் என்று உலகில் வேறு எதுவுமே கிடையாது” என்றெல்லாம் சொல்லி குரு வழி காட்டுதலைத் தொடங்குவார்.
அந்த வழிகாட்டுதல் படி செல்லும் ஒருவன் “இறுதியில் எதை அடைந்தால் அது ஆனந்தம் மட்டுமன்றி, அதுவே அறிவின் ஊற்றாய்த் திகழ்ந்து, அதற்கும் மேலே பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று காட்டுமோ அதனை அடைவான். அதுவே பிரம்மம், அதை நீ உறுதியாக அடைவாய்” என்று குருவாக சங்கரர் இங்கு சொல்கிறார்.
55. यद् दृष्ट्वा नापरं दृश्यं यद् भूत्वा न पुनर्भवः |
यज्ज्ञात्वा नापरं ज्ञेयं तद्ब्रह्मेत्यवधारयेतः ||
யத்த்ருஷ்ட்வா நாபரம் த்ருஷ்யம் யத்பூத்வா ந புனர்பவஹ |
யஜ்ஞாத்வா நாபரம் ஞேயம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||
எதுகாணக் காண்டற்கு எதுவுமே இன்றோ
எதுவான பின் சன்மமின்றோ – எதுவறிந்த
பின் அறியத்தக்க பிறிதோர் பொருள் இன்றோ
அன்னதுதான் பிரமமாம்.
(எதைத் தனது உண்மையான உருவமாகக் கண்டவனுக்கு அதன் பின் காண்பதற்கு என்று வேறு எதுவுமே இல்லையோ, எந்த உருவமாகவே தான் ஆகிவிட்டால் அதன் பின் பிறவி எனும் சம்சார பந்தம் ஒருவனுக்கு இல்லையோ, எதைத் தெரிந்துகொண்டால் அதற்கும் மேல் தெரிவதற்கு என்று ஒரு பொருளும் இல்லையோ, அதுதான் பிரம்மம் என்பது.)
மலையுச்சில் உள்ள ஊற்றிலிருந்து பெருகி வரும் நீர், அது ஓடி வரும் வழியில் சேரும் மற்ற நீரோடைகளுடன் கலந்து ஓர் ஆறாகப் பெருகி, இறுதியில் கடலோடு கலக்கிறது. அதன் பின் அந்த நீருக்கு எப்படி தனியாக ஓர் அடையாளம் கிடையாதோ, அதே போன்று ஆத்ம சாதகன் இறுதியில் ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தபின் அவனுக்கு இருப்பது எல்லாமே இருக்கும் ஒன்றேயான ஆன்மாதான். அவன் பார்ப்பதெல்லாம் அந்த ஆன்மக் கடலின் அம்சங்கள் தான். சரி, வேறு ஏதேனும் இருக்கிறதா என்று எதையாவது கேட்டு அறியலாம் என்றால், அங்கு வேறு என்ற ஒன்று இருந்தால் தானே கேட்கவோ, அறியவோ முடியும்? அதுவும் முடியாது என்றால் தன் மனம், புத்தி இவைகள் மூலம் கற்பனை செய்து எதையாவது உருவாக்கலாம் என்றால், அங்கு அத்தகைய உபாதிகள் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும்? அந்த நிலை அடைந்தவன் இருக்கும் நிலைதான் பிரம்மம் என்று சொல்லப்படுகிறது.
இதுதான் முடிவில் அடையப்போவது என்றால் அதை ஏன் இப்போதே நாம் அடைந்துவிட்டதாக பாவனை செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில்தான், சாதகனை “ஆன்மா ஒன்றே இருப்பது” என்ற பாவனையில் இருக்கச் சொல்லி, அங்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை, அனுபவித்துப் பார்ப்பதற்குத்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களோ? எதைப் பற்றியும் கேள்வி கேட்கும் மனோ பாவம் உலகியலுக்குத் தேவையாக இருக்கலாம். ஏனென்றால் உலகம் என்று வந்துவிட்டாலே “நான்-நீ”யும், பகுத்தறிதலும் வந்து விடுகிறதே! அதற்குக் கேள்விகள் தேவைப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் உள்ள அந்த உலகிலும் தராதரம் பார்த்துத்தான் கேள்விகளும் கேட்க முடிகிறது. ஏனென்றால் அங்கு பதிலும் கிடைக்கலாம், அடி உதையும் கிடைக்கலாம் அல்லவா?
அது தவிர பாரமார்த்திகமாகவே பார்த்தாலும், முடிவில் அடைவது என்றும் ஒன்றில்லை, அது ஒன்றுதான் எப்போதும் இருப்பது என்றும், அதற்குத் தொடக்கம் என்று எதுவும் கிடையாது என்பதையும் அனுபவிப்பவர்தானே சாதகனுக்கு வழி காட்டும் குரு. அவர் சொல்வதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நம்பும் சாதகனுக்கு கூடிய விரைவில் எல்லாம் தெரியவரும். ஆனால் இந்த நேரான, எளிமையான வழி தவறி பலப்பல தத்துவங்களையும், அவை தரும் புத்தகங்களையும் அறிந்த கற்றோருக்கு அவையனைத்தையும் நீக்குவது என்பதுவும் இன்னுமொரு தடையை விலக்குவதாக அமைகிறது. அதனாலேயே ரமணர் சொல்வார்: “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்”. அதன்படி கேள்விகள் கேட்கும்போதும் ஒரு தன்னடக்கம் வேண்டும் என்றாகிறது. இல்லையேல் கேள்விகள் கேட்பவர் தனக்குத் தெரிந்ததை வெளியே காட்டிக்கொள்ளும் வகையில் அமைந்துவிடும்.
நாம் காணும்போது பல வகையான பொருட்களும், அவைகளின் குணங்களும் தெரிவதால் நமது நிலைக்கு ஏற்ப அத்தகைய பொருட்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக்கொண்டு அதனால் இன்பமோ, துன்பமோ அடைவதுதான் உலகில் உள்ள எவரும் வாழும் முறை. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பதுதான் எவருக்கும் விருப்பமானது என்பதை நன்கு உணர்ந்த சாதகன், குரு காட்டிய வழியில் சென்று எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதைத் தன்னுள் உணர்ந்தபின் அதற்கு மேல் தெரிவதற்கு ஒன்றுமில்லை என்பதில் தெளிவு பெறுகிறான். அது மட்டும் அல்லாது, அறியாதிருந்தேன் என்று இருந்த தனது முந்தைய நிலையிலும் இப்போது இருப்பது போல தான் எப்போதும் அப்படியே இருந்ததையும் உணர்கிறான். அதற்கும் மேல் தான் அடைவதற்கு வேறு என்று ஒன்றுமில்லை என்று தெளிந்து, அந்த நிலையிலிருந்து சிறிதும் வழுவாது நிற்பவனை பிரம்மத்தை உணர்ந்த ஞானி என்பார்கள். அதற்கும் மேல் ஒன்றுமில்லை என்பதால் அவன் மீண்டும் பிறந்து உழல மேலும் பிறவிகள் கிடையாது என்பதும் உறுதி.
56. तिर्यगूर्ध्वंधः पूर्ण सच्चिदानदमद्वयं |
अनन्तं नित्यमेकं यत्तद्ब्रह्मेत्यवधारयेत् ||
திர்யகூர்த்வம்தஹ பூர்ண சச்சிதானந்தமத்வயம் |
அனந்தம் நித்யமேகம் யத்தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||
எதுகுறுக்கு மேல்கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித்து இன்பு இரண்டல்ல – எது அனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் மதி.
(எந்தப் பொருளை குறுக்காகவோ, மேலோ, கீழோ எப்படிப் பார்த்தாலும் எங்கும் நிறைந்திருக்கிறதோ, எது சத்சிதானந்த சொரூபமாயும், இரண்டற்றதாகவும், எது முடிவில்லாததாயும், அழிவற்று எப்போதும் உள்ளதாயும், எது தானே ஒன்றாய் இருந்து விளங்குமோ, அந்தப் பொருளையே பிரம்மம் என்று உணர்வாய்.)
உலகில் உள்ள பலவிதமான பொருட்களை விளக்குவதற்கு, நமக்கு நன்கு அறிமுகமான பொருட்களில் அதைப் போல உள்ள வேறு எதையாவது சொல்லியோ, காட்டியோ அது அப்படிப்பட்டது என்பார்கள். நாம் அதிகம் பார்த்திராத வரிக்குதிரையை விளக்கிச் சொல்வதற்கு ஒரு குதிரையைக் காட்டி அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்து அதன் மேல் வெள்ளை வரிகள் இருந்தால் எப்படியிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் பிரம்மம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று விளக்கிச் சொல்வதற்கு காட்டக்கூடிய பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் காண்பது அதுவே என்பதால் காணும் அதையே எப்படிக் காட்டுவது? “அதுவாக இரு அப்போது தெரியும்” என்றுதானே சொல்ல முடியும்? அப்படியாக அனைத்துப் பொருளின் ஆதாரமாக இருக்கும் அதை முதலில் ஊகத்தினால் மட்டுமே அறிய முடியும்; அல்லது பாவத்தினால் மட்டுமே இருக்க முடியும். பின்பு அதை உணர்ந்தே அறிய முடியும். தான் உடல் என்ற அறியாமையில் உழல்வதால், தன் கண்ணுக்கு முன் உள்ளது மட்டுமே இருப்பதாக மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் எவருமே தான் ஒருவனாயும், முதலாவதாகவும் இருப்பதை விட்டுவிட்டு தான் பார்க்கும் உலகத்தை மட்டும் எப்போதும் இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களது பார்வையை சரி செய்தால் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க இயலும்.
ஆக பிரம்மத்தைக் காட்டி விளக்குவதற்கு வேறு பொருள் இல்லையாதலால், எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதனுடைய தனித் தன்மையைக் கொடுக்கும் ஐந்து அம்சங்களான சத்து, சித்து, ஆனந்தம், நாமம், ரூபம் இவைகளைக் கொண்டு பிரம்மம் விளக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஐந்து அம்சங்களில் பிரம்மத்திற்கு முதல் மூன்றான சத்-சித்-ஆனந்தம் அம்சங்கள் மட்டுமே உண்டு. அதற்கு மற்ற இரண்டு அம்சங்களான நாமமும், ரூபமும் கிடையாது. உலகில் காணப்படும் எல்லா பொருட்களுக்கும் நாமமும், ரூபமும் உண்டு. அவைகள் எவற்றிற்குமே பிரத்தியேகமாக முதல் மூன்று அம்சங்கள் கிடையாது. அந்தப் பொருட்கள் இருப்பது (சத்) போலவும், அவைகளை அறியமுடியும் அல்லது அவைகளுக்கு அறிவு (சித்) உண்டு என்பது போலவும், அவை ஆனந்தம் தருகிறது என்பது போலவும் காணப்படுவது அவைகளுடன் பிரம்மம் சேர்வதால் தான். அப்படி பிரம்மத்தின் சேர்க்கை இருப்பதால் மட்டுமே அவை உணரப்படுகின்றன. அப்படி இல்லாது போனால் அவை மாயை எனப்படும். அதனால் உலகம் இருக்கிறதா என்றால், பிரம்மத்தின் சேர்க்கையால் இருக்கிறது என்றும் பிரம்மம் இல்லாத உலகம் மாயை என்றும் சொல்லப்படும்.
அதனால்தான் உலகம் தெரியாத நமது ஆழ்ந்த உறக்கத்திலும் அந்தப் பிரம்மமாக நாம் இருக்கிறோம். ஆனால் நமது அவித்தையாகிய அஞ்ஞானத்தால் நாம் அதைஉணர்வதில்லை. அப்படி நாம் உணராவிட்டாலும் அதன் தன்மைகளால் அது தான் இருப்பதையும், அறிவாகவும் ஆனந்தமாகவும் உள்ளதை நம்மை “ஆனந்தமாகத் தூங்கினோம்” என்று அப்போது உணர்ந்ததைப் பின்பும் சொல்லவைக்கிறது. உறக்கத்தால் நாம் பெறும் அந்த ஆனந்த நிலை கூட அவ்வப்போது நமக்கு கிடைக்காது போனால் நம் கதி அதோகதி தான். ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது, நனவு உலகம் ஒன்றையே பெரிதாக மதித்து, மேலும் மேலும் அதைப் பிடித்துக்கொண்டு அதில் ஆழ்ந்து மூழ்கிப் போகிறோம்.
அந்தப் பிரம்மமாகிய ஒன்று இல்லாது போனால் எதுவும் இல்லை என்பதால் நாமும் இல்லை என்றுதானே ஆகிறது. உடல் என்பது உலகத்தில் உலவுவதால் அதற்கும் மற்றப் பொருட்களைப் போலவே பிந்தைய இரண்டு அம்சங்கள்தான் உண்டு. அத்துடன் பிரம்மம் சேர்வதால்தான் நாம் நாமாக இருக்கிறோம். அந்த பிரம்மம் ஒன்று மட்டும்தான் தானே தானாக இருக்க முடியும். அதை விடுத்து இரண்டாவது என்பது கிடையாது. அது எப்போதும் இருந்தாக வேண்டும் என்பதால் அது அழிவற்றது. அது ஒன்றே அனைத்துக்கும் அறிவையும், ஆனந்தத்தையும் கொடுப்பதால் அதுவே அறிவாயும், ஆனந்தமாயும் இருக்கிறது. அதனால் அதுவே சத்சிதானந்தம் எனப்படுகிறது.
(தொடரும்)
உலகில் மனித வாழ்வு உணவு, உடை, இருப்பிடம், இனப்பெருக்கம் இவற்றிலே 95% கழிகிறது .எஞ்சிய 5% காலமாவது , ஆன்மீக பொக்கிஷத்தில் செலவிட திரு எஸ் ராமன் அவர்களின் தொடர் உதவுகிறது. குறுகிய எல்லை கொண்ட மதங்கள் அழிந்து, உண்மையான ஆன்மிகம் மலர , தேவையான தேடலை இதுபோன்ற தொடர்கள் தருகின்றன. வையகம் வளமுடன் வாழிய ! திரு எஸ் ராமன் அவர்களுக்கும் , தமிழ் இந்துவுக்கும் நம் நன்றிகள் பல.
Really Excellent
Respected Sir,
I am regularly reading Mr. S. Mohan’s this noble / excellent article. I would like to meet him personaly and interact with him to know more about this article.
Kindly help me to provide his contact details and telephone number.
Namaskaram
K M Ramalingam M.A., B.L., H-1-C, TNHB Colony, Thiruvalluvar Nagar, Tondiarpet, Chennai-81
E mail : kmram@hotmail.com, Cell No : 9710663461