சித்ரதுர்காவிலிருந்து மதியத்திற்கு மேல் கிளம்பினோம். அந்தி சாயும் நேரத்தில் ஹம்பிக்கு அருகில் வந்து விட்டோம்.. நெடுஞ்சாலைக்கு இணையாக நதி ஓடிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில் மாபெரும் நீர்ப்பரப்பு தெரிய, சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு குறுகலான பாதை வழியாக நதிக்கரைக்குச் சென்றோம். கடல் போல அகண்டு கிடந்தது துங்கபத்ரா. ஆள் அரவமற்ற அந்த சாயங்கால நிசப்தத்தில் சூரியன் மெதுமெதுவாக நதியில் மூழ்கிக் கொண்டிருந்தான். அஸ்தமன சூரியனின் செந்நிறக் கதிர்களில் குளித்திருந்தது நதி. தென்னக வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தில் இருநூறு ஆண்டுகள் சுடரொளி வீசி அஸ்தமித்து விட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தின் கதையையே சொல்வது போல இருந்தது அந்தக் காட்சி.
ஹம்பிக்கு நான் இப்போது வருவது இரண்டாவது முறை. இதற்கு முன்பு 1999ல் வந்திருக்கிறேன். காலத்தில் உறைந்து விட்ட இது போன்ற ஒரு நகரத்தில் எதுவும் மாற்றங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நகர் மையத்தில் விருபாட்சர் கோயிலுக்கு எதிரே உள்ள ராஜ வீதி முற்றிலும் மாறியிருந்தது. சென்ற முறை வந்திருந்த போது இந்த வீதி நெடுகிலும் கடைகளும் உணவகங்களும் இருந்தன. அந்தக் கடைகளுக்குப் பின்புறம் பழைய ராஜவீதியின் மண்டபங்கள் இருந்ததைப் பார்க்க முடிந்தது. முத்தும் ரத்தினமும் வைரமணிகளும் விற்கப் பட்டதாக வெளிநாட்டு யாத்ரீகர்கள் சிலாகித்திருக்கும் விஜயநகரத்தின் அதே கடைகளில் இப்போது உருளைக் கிழங்கும் வெங்காயமும் தண்ணீர் பாட்டில்களும் விற்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்ததும் நினைவில் எழுந்தது. கடந்த சில ஆண்டுகளில் எல்லாக் கடைகளையும் தொல்லியல் துறை அகற்றி விட்டிருக்கிறது. இப்போது அந்த சாதாரண மண்டபங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள ராஜவீதி முன்பு போல ஜே ஜே என்று இல்லை, வெறிச்சோடிக் கிடக்கிறது. பக்கத்தில் தனியாக ஒரு இடத்தை கடைகளுக்கும் உணவகங்களுக்கும் ஒதுக்கியிருக்கிறார்கள். தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு ஹம்பி ஆர்வலர்களிடையே ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் காணக் கிடைக்கிறது.
இந்த நிலப் பகுதி மிகத் தொன்மையான மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கிறது. இதன் பர்வதங்கள் ராமாயணத்தின் கிஷ்கிந்தையுடனும், இங்குள்ள பம்பா ஸரோவரம் என்ற பொய்கை பம்பா நதியுடனும் ஐதிகங்களால் தொடர்புறுத்தப் படுகிறது. 1336ல் ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் இணைந்து இங்கு தலைநகரை நிறுவியது முதல், 1565ல் தலைக்கோட்டைப் போரில் அழிந்தது வரையில் வெற்றித் திருநகராகவும், கல்விக்கும் கலைகளுக்கும் உறைவிடமான வித்யா நகரமாகவும் இது விளங்கியிருக்கிறது. சங்கமர்கள், சாளுவர்கள், துளுவர்கள் என்று மூன்று வமிசங்களைச் சேர்ந்த மன்னர்கள் அடுத்தடுத்து விஜய நகரப் பேரரசை விரிவாக்கி மிகச் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். உள்ளுக்குள் சகோதர சண்டைகள், அதிகார போட்டிகள், சதிவேலைகள் எல்லாம் தொடர்ந்து நிலவி வந்த போதும் அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்த கவசமாக, கேடயமாக இந்தப் பேரரசு திகழ்ந்திருக்கிறது. பேரரசின் மையம் அழிந்த பின்னரும், அடுத்த முன்னூறு ஆண்டுகள் இதன் சேனாபதிகளாகவும், நிர்வாகிகளாகவும் விளங்கிய நாயக்கர்களும், பாளையக் காரர்களும் தான் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து முஸ்லிம் படைகள் புரிந்த அராஜகங்களும், கொடுமைகளும் கலைச்சின்னங்களின் அழிப்பும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மனதில் ஆறாத வடுவையும் ரணத்தையும் ஏற்படுத்தின. பிறகு நீண்ட காலத்திற்கு அங்கு யாரும் வசிக்க வரவில்லை. போரில் வென்ற பாமினி சுல்தான்களின் கூட்டணியும் இந்த நகரத்தில் நிலைகொள்ளவில்லை. பீதர், பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா என்று தங்கள் தலைநகரங்களுக்கே திரும்பிச் சென்று விட்டார்கள். இரு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் தான் இந்த மகோன்னத நகரத்தின் இடிபாடுகளைப் பார்த்து வியந்து ஆவணப் படுத்தினார்கள். தொல்லியல் துறையினர் சீரமைத்தார்கள். பின்னர் A Forgotten Empire: Vijayanagar (Robert Sewell, 1901) போன்ற நூல்களின் மூலம் தான் உலகின் கவனம் ஹம்பி மீது படிய ஆரம்பித்தது. இப்போது ஹம்பி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
ஹம்பியின் ஆன்மாவுடன் கலப்பதற்கு, அதில் தோய்வதற்கு இங்கு குறைந்தது 2 – 3 நாட்களாவது தங்க வேண்டும். எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்.
ஹம்பியில் மூன்று கோயில்கள் முக்கியமானவை.
நகர் மையத்தில் உள்ள விருபாட்சர் கோயில் விஜயநகர காலத்திற்கும் முற்பட்டது. பிறகு தொடர்ந்து விரிவாக்கப் பட்டு வந்திருக்கிறது. அழிவிற்குப் பின் மீண்டும் சீரமைக்கப் பட்டு, இப்போதும் இங்கு பூஜை நடக்கிறது.
குந்த கௌர கௌரீவர மந்திராய மானமகுட..
ஹேமகூட சிம்ஹாஸன விரூபாக்ஷ கருணாகர..
என்று கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும் பிரபலமான “கீதம்” ஒன்று உண்டு. அந்த கீதத்தில் குறிக்கப் படும் இறைவன் இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தான். இந்த கீதங்கள் புரந்தர தாசர் இயற்றியவை என்று கருதப் படுகின்றன. அவர் ஹம்பியில் வசித்திருக்கிறார். அதன் நினைவாக புரந்தர மண்படம் என்று ஒரு நினைவுச் சின்னமும் இங்குள்ளது.
விருபாட்சர் கோயிலின் நீண்ட கோபுரம் அழகிய சுதை சிற்பங்கள் கொண்டது. ஏஷியன் பெயிண்ட் வண்ணங்களில் பாழாகாமல் பழமையான மஞ்சள் சுண்ணப் பூச்சுடனேயே அதைப் பார்க்க முடிகிறது. கருவறைக்கு முன்புள்ள எழிலார்ந்த மண்படத்தின் தூண் சிற்பங்களும் கூரை ஓவியங்களும் சிறப்பானவை. கருவறை சுற்றில் சிவ பக்தர்களின் வரலாறுகளும் மற்றும் பல தெய்வ வடிவங்களும் உள்ளன. கோயிலில் இருந்து நேரடியாக இறங்கிச் செல்லும் நதிப் படித்துறை ரம்யமாகவும் தூய்மையாகவும் உள்ளது. நன்றாக நீராடலாம்.
கிருஷ்ண தேவராயர் அரசராவதற்கு முன் தலைமறைவு வாழ்க்கை வாழும் போது, நடன மங்கையான சின்னா தேவியை முதன்முதலில் பார்த்து காதல் கொண்டது இந்தக் கோயில் நிருத்ய மண்டபத்தில் தான். பிறகு மன்னரானதும், வாக்குத் தவறாமல் அவளை மணக்கிறார். அவளது குலத்தின் காரணமாக பட்டமகிஷியாகத் தகுதியில்லை என்று அமைச்சர்கள் அறிவித்து விட, திருமலா தேவி என்ற அரசகுலப் பெண் ஒருத்தியையும் திருமணம் செய்து கொள்கிறார். இந்தக் கோயிலைச் சுற்றி வரும்போது, கல்லூரிக் காலத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த ரா.கி.ரங்கராஜனின் “நான், கிருஷ்ண தேவராயன்” (விகடனில் தொடராக வந்தது) நாவலின் நினைவு எழுந்தது.
அடுத்தது ஹசாரி ராமர் ஆலயம். இதன் கோபுர முகப்பிலும் தூண்களிலும் உள்ள சிற்பங்களின் தலைகளும் கைகளும் ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப் பட்டுள்ளன. ஆனால் சுவரிலேயே உள்ள ராமாயண புடைப்புச் சிற்பங்கள் சேதமில்லாமல் உள்ளன. மான்முகம் கொண்ட ரிஷ்யசிருங்க முனிவர் தசரதனுக்காக யாகம் செய்யும் காட்சி முதல் சீதாதேவி இறுதியில் பூமிக்குள் சென்று மறைவது வரையிலான உத்தர காண்டக் காட்சி வரை கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் அழகிய சட்டகங்களில் (panels) அற்புதமாகச் செதுக்கப் பட்டுள்ளன. ராமாயண ஆர்வலர்களும் கலாரசிகர்களும் நின்று நிதானமாகப் பார்க்க வேண்டிய கோயில் இது. இந்த ஆலய வளாகத்திலேயே தனியாக உள்ள சீதா கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
ஹம்பி சிற்பக் கலையின் உச்சம் என்றால் அது விஜய விட்டலர் ஆலயம் தான். நடுநாயகமாக விமானத்துடன் கூடிய கருவறை அடங்கிய மகா மண்டபம், அதைச் சுற்றி பூஜை மண்டபம், கல்யாண மண்டபம், நிருத்ய மண்டபம் என கலையழகு மிளிரும் தனித்தனி மண்டபங்களின் தொகுதியாக இக்கோயில் வளாகம் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் கலைப் பொக்கிஷங்கள். குதிரை வீரர்கள், யாளிகள், தசாவதார காட்சிகள், விஷ்ணு மூர்த்தங்கள், வேடர்கள், நடன மங்கைகள், முனிவர்கள் எனப் பற்பல வர்ண ஜாலங்கள் அவற்றில். கருவறைக்கு எதிரில் கருட மண்டபம் மிக அழகாக, சிற்பங்கள் செறிந்த கல் தேர் வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. பல புகைப்படங்களில் ஹம்பியின் கலை முத்திரையாக இந்தக் கல் தேர் காணக் கிடைக்கும். நாங்கள் போயிருந்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஓவியப் பள்ளி மாணவர்கள் வேறு வேறு கோணங்களில் அமர்ந்து இக்கோயிலின் மண்டபங்களை வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். விட்டலர் ஆலயத்திற்கு வெளியே 14-15ம் நூற்றாண்டுகளில் அங்கு இயங்கிய பழைய சந்தையின் சுவடுகள், நேர்த்தியான கடைகளுக்கான கட்டுமானங்களின் சிதைவுகள் உள்ளன. மலைகளின் பின்னணியில் காணும் இந்தக் கோயிலுக்குரிய பெரிய தெப்பக்குளமும், அதற்கருகில் சோலைகளுக்கு நடுவில் உள்ள ஊஞ்சல் மண்டபமும் மனதிற்கு மிகவும் அமைதியளித்தன.
படிகளில் கீழிறங்கிச் சென்று வழிபடுமாறு அமைந்த பாதாளேஸ்வரர் சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அழகிய சிற்பங்கள் கொண்ட கிருஷ்ணர் ஆலயம் தற்போது தொல்லியல் துறையால் சீரமைக்கப் பட்டு வருகிறது என்பதால் பார்க்க முடியவில்லை.
ஒரே கல்லில் செதுக்கப் பட்ட பெரிய தெய்வ உருவங்கள் ஹம்பியின் மற்றுமொரு சிறப்பு. கடலே காளு (உளுந்து) கணபதி, சசிவே காளு (கடுகு) கணபதி என்று இரு கோயில்கள் உள்ளன. 12 அடி உயரமுள்ள இந்த கம்பீரமான கணபதி திருமேனிகளில் திருவயிறும், கைகளும் சேதப் படுத்தப் பட்டுள்ளன. சூரிய ஒளி நேரே படுமாறு அமைந்த ஒரு கோஷ்டத்தில் 15 அடி உயரமுள்ள படவ லிங்கம் என்ற பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த வகை சிற்பங்களில் உச்சம் என்றால் அது ஹம்பி நரசிம்மர் தான். நான்கு கரங்களுடன், இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி நிற்க, மற்ற இரு கரங்கள் முட்டிமீது நிலைத்திருக்கும் யோக உபவிஷ்ட தோற்றம். சிங்கக் கண்கள் துருத்தி நிற்கின்றன, ஆனால் அவற்றில் கோபம் இல்லை. முகம் வீரமும், சாந்தமும், கம்பீரமும் கலந்த அழகுடன் செதுக்கப் பட்டுள்ளது. நரசிம்மருக்கு மேல் ஏழுதலை நாகம் குடைபிடித்து நிற்கிறது. திறந்த வெளியில் கரங்கள் உடைந்த நிலையில் 20 அடி உயரத்துடன் வியாபித்திருக்கிறார் சிங்கப் பெருமாள். நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருந்த லட்சுமியின் திருவுருவம் பெயர்க்கப் பட்டு முழுதாக சிதைக்கப் பட்டு விட்டது.
கோயில்கள் போக மற்றும் பல வரலாற்றுச் சின்னங்களும் ஹம்பியில் உள்ளன. அரண்மனை வளாகம், ராஜ காரியங்களுக்கான இடங்கள் ஆகியவற்றை Royal Chambers என்ற பகுதியில் காண முடியும். இங்குள்ள கமல மகால் என்றழைக்கப் படும் அழகான வளைவுகளுடன் கூடிய இரண்டடுக்கு காரைக் கட்டிடம் இந்திய பாரசீக கட்டிடக் கலைகளின் கலவையாகக் கட்டப் பட்டது. யானைகள் பராமரிப்புக் கூடம், குதிரை லாயம், போஜன சாலை, தானியக் கிடங்குகள் – இவற்றின் விஸ்தீரணமும் நேர்த்தியும் பிரமிக்க வைப்பவை. நாற்புறங்களிலும் உள்ள நெடிதுயர்ந்த கண்காணிப்பு கோபுரங்கள் சிறப்பானவை.
Royal Quarters என்ற மற்றொரு பகுதியில் அரசாங்க கஜானா செயல்பட்ட இடம், ரகசிய ஆலோசனை அறைகள் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. Queens Bath என்று பெயர் சூட்டப் பட்டுள்ள ஆரம்பரமான இடம் உண்மையில் அரசகுலத்தினருக்கான ஒரு போக மண்டபமாக இருந்திருக்க வேண்டும். நடுவில் ஒரு நீர்த்தடாகமும், சுற்றிலும் தாழ்வாரங்களும் உப்பரிகைகளும் கொண்ட இதன் அடித்தளமும் தூண்களும் இந்து கட்டடக் கலை முறையிலும், அதற்கு மேல் உள்ள அலங்கார வளைவுகளும் கூரையும் இஸ்லாமிய கலைப் பாணியிலும் உள்ளன. ஓரிடத்தில் 22 அடி உயரமும் 80 சதுர அடி பரப்பளவும் கொண்ட கலைநயமிக்க மாபெரும் மேடை உள்ளது. பல அடுக்குகளாக கட்டப் பட்டுள்ள இந்த மேடையின் அடித்தளம் முழுவதும் யானைகள், குதிரைகள், வீரர்கள் மற்றும் போர்க்காட்சிகள் செதுக்கப் பட்டுள்ளன. விஜயநகர அரசர்கள் இங்கு நின்று கொண்டு தான் படைவீரர்களின் மரியாதைகளை ஏற்றிருக்கிறார்கள். நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான மகாநவமி அன்று சிறப்பான படை அணிவகுப்புகள் நடைபெற்ற காரணத்தால் மகாநவமி திப்பா என்று இந்த மேடை அழைக்கப் படுகிறது.
விருபாட்சர் கோயில் தவிர, மற்ற கோயில்கள் எதிலும் வழிபாடு இல்லை. அவை வரலாற்றுச் சின்னங்கள் மட்டுமே. ஏராளமான தெய்வ வடிவங்கள் அணி செய்யும் அந்த சிதைந்த ஆலயங்களுக்குள் மக்கள் செருப்புகளுடனேயே நடமாடுகிறார்கள். நாங்களும் அப்படித் தான் செய்தோம். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. மனது வலித்தது. தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது. Wounded Civilization என்று வி.எஸ்.நய்பால் சொல்வதன் பொருள் இது தான் என்று தோன்றியது. அழிந்து போன பல நகரங்களை, கோயில்களை நாம் சீரமைத்து விட்டோம். கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டோம். ஆனால், ஹம்பி போன்ற ஒரு சில இடங்கள் அந்த அழிவின் காயங்களை, வலிகளை சுமந்து உறைந்து நின்று கொண்டிருக்கின்றன. அந்த வரலாற்றை நாம் மறந்து விடாமல் கற்க வேண்டிய பாடங்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
ஹம்பியிலிருந்து காம்பிலி என்ற ஊருக்குச் செல்லும் வழியில் குன்றின் மேல் உள்ளது மால்யவந்த ரகுநாத ஸ்வாமி கோயில். அந்தி சாயும் பொழுதில் அங்கு வந்தடைகிறோம். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்தக் குன்றின் மீது கூடியிருக்கிறார்கள். அதோ கீழ்வானில் செவ்வொளி பரப்பி ஜோதிப் பிழம்பாக தகதகத்துக் கொண்டிருக்கிறான் சூரியன். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு அசாதாரணமான அமைதி கவிகிறது. வானத்துச் சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது. லேசான கருமை படர்கிறது. நாலா பக்கமும் மலைப்பாறைகளும் இடிபாடுகளும் வயல்களும் மெலிதாக மறைகின்றன. திரைச்சீலையின் ஓவியங்களில் மெதுமெதுவாக புகைபடிவது போல.
குன்றிலிருந்து இறங்குகிறோம். இதமான காற்று உடலையும் கனத்த இதயத்தையும் குளிர்விக்கிறது. வரலாற்றின் பொற்கனவுகள் என்றும் அழிவதில்லை என்று பறைசாற்றுகிறது சாலையோரக் கரும்பு வயல்களில் அலையடிக்கும் பசுமை. பயணம் தொடர்கிறது.
ஹம்பி புகைப்படங்கள்: https://picasaweb.google.com/100629301604501469762/HampiDec2013Trip
(தொடரும்)
அட! “நான், கிருஷ்ணதேவராயனின்” சின்னாதேவி பகுதிகள் ஆசிரியரின் கற்பனை என்று நினைத்திருந்தேன், நிஜம்தானா?
ஜின க்ஷேத்ரங்கள் பற்றியும் (மூட் பிட்ரி, ச்ரவணபெளகொலா) எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
கங்கா ஸ்னான துங்கா பான என்று வசனம். ஸ்படிகம் போன்ற தெளிவான நீரையுடையது துங்கா.
\\ ஏராளமான தெய்வ வடிவங்கள் அணி செய்யும் அந்த சிதைந்த ஆலயங்களுக்குள் மக்கள் செருப்புகளுடனேயே நடமாடுகிறார்கள். நாங்களும் அப்படித் தான் செய்தோம். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. மனது வலித்தது. தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். \\
மறுபடியும் இந்த ஸ்தலத்திற்குச் செல்லுங்கள். நீங்களும் பாதரக்ஷை தவிருங்கள் உங்கள் மித்ரர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் அவ்வாறு தவிர்க்க.
திருக்கடையூரில் நான் பார்த்தது. திருக்கடையூரின் ப்ராகாரத்தைக் கடந்து அப்பால் போக புர்கா அணிந்த இஸ்லாமியப் பெண்மணி பாதரக்ஷைகளுடன் செல்கையில் அங்கு உட்கார்ந்திருந்த ஹிந்து பிச்சைக்காரப்பெண்மணி மனது எரிய,
“அம்மணி உங்க கோவிலில் இப்படிப் போவியா” என்று கேழ்க்க அந்த முஸல்மாணியப்பெண்மணி பிச்சைக்காரியை இழிவாகப் பேசி மேலே சென்ற அருவருப்பு நிகழ்ச்சியை நினைத்துக்கொள்கிறேன்.
தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோவிலிலும். கோவிலுக்குள் முஸல்மாணியர் வருவதில்லை. கோவிலின் முன்னம் — பெரிய கோவில் ப்ராகாரம் சார்ந்த பகுதிகளில் — முஸல்மாணியர் பாதரக்ஷைகளுடன் — செருக்கும் உகப்பும் மிக– உலா வரும் அவலத்தைக் கண்டுள்ளேன். ஹிந்துக்களிலும் சிலர் அப்படியே.
இந்த தளத்தில் இக்கருத்து பகிர்ந்த போது ரமேஷ் என்ற அன்பர் மறுத்து கோவிலினுள் அப்படி இல்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ப்ராகாரமும் கோவிலின் அங்கம் தானே என்பதே என் கவலையும் வருத்தமும்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
“அந்த சிதைந்த ஆலயங்களுக்குள் மக்கள் செருப்புகளுடனேயே நடமாடுகிறார்கள். நாங்களும் அப்படித் தான் செய்தோம். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. மனது வலித்தது. தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல்”.
அங்கோர் வாட் கோவில் சிவலிங்களைப்பார்த்தபோதும், ஜகார்த்தா மியுஸிய வராந்தாக்களில் வைக்கப்பட்டிருந்த நம் தெய்வச்சிலைகளைப்பார்த்தபோதும் இதே எண்ணம்தான் எனக்கும் ஏற்பட்டது.
Jataayu Sir,
Excellent piece and I can understand the different moods that you must have undergone.
Can Tamil Hindu organize a trip to Hampi for the like-minded people? It will be nice to hear a lecture from you, Aravindan Neelakandan and Arunagiri, if he is visiting.
Regards,
–Rangarajan
நம்மை இனி ஒருமுறை அழிக்க அவர்கள் நினைத்தால் , அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஒழிப்பதே மிக சிறந்த தீர்வாக இருக்கும். உயிர் சனாதனத்திற்கு உடல் மண்ணுக்கோ இல்லை நெருப்புக்கோ என்று நாம் செயலில் இறங்கும் நேரம் வெகு விரைவில் வரும் என்றே கருதுகுறேன். இனி ஒரு முறை அவர்கள் அந்நிய கொள்கைகளை இங்கே நடைமுறை படுத்த சண்டை போட்டுகொண்டு வந்தால் அவர்களின் அடிப்படைகளை இருந்த இடம் தெரியாமல், இருக்கும் மணலோடு மணலாக செய்ய சுளுரைபோம். சநாதனம் நாளை டென் மார்க்கில் மறுபடி உயிர் பெறலாம்..ஆனால் அவர்களுடையது அங்கே பிறந்து அங்கேயே அழிவை பார்க்க போவது…இது சத்தியம்…ஜெய் ஹிந்து..