சுய அறிதலும் வரலாற்று அறிதலும்

indian_chaos

ற்ற நாட்டினரிடம் இந்தியா பல்வேறு விதங்களில்  அறிமுகமாகிறது. பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு, மந்திர தந்திரங்கள் நிறைந்த நாடு, கற்காலத்தில் தங்கிவிட்ட நாடு, மென்பொருள் துறையில் உலகை விழுங்கப் போகிற நாடு, நமது வேலைகளை எல்லாம் பறித்துக் கொள்கிற நாடு என்றெல்லாம் பல விதங்களில் இந்நாடு அறிமுகமாகிறது. ஒரே கட்டுரையில் உள்முரண்களுடனும் எழுதுகிறார்கள்.  அதாவது உலகத் தரத்தில் பொறியியல் திறமையுள்ளவர்கள் கட்டும் நிறுவனங்கள் இருக்கும் அதே நகரங்களில், மாட்டு வண்டிகளும், கொத்தடிமை முறைகளும், கைகளால் குப்பைகளை அள்ளுவோரும், நிர்வாண சன்னியாசிகளும், குரங்கு தெய்வங்களும் என்று எந்த ஒழுங்குபடுத்தலும் இல்லாத நாடு என்று ஒரு கருத்து பரப்பப்படுகிறது.

ஒழுங்குபடுத்துதல் என்றால் ஒற்றைத் தொனியில் ஒரு நாடு இயங்கவேண்டுமா என்று கேட்டால் அப்படி இல்லை என்று மேற்படிக் கருத்து பரப்புவோர் ஒத்துக் கொள்வார்கள்.  ஏனெனில் இன்றைய மோஸ்தரான பலபண்பாட்டியத்தை (multiculturalism) தாரை தப்பட்டையோடு, கொம்பு வாத்தியங்களோடு ஊர்வலம் விடுவோரில் முதலணி மேற்படியார்.  பிரச்சினை என்னவென்றால் அவர்களுக்குப் பிடித்தமான வகைப் பலபண்பாட்டியம்தான் சரி, மற்றதெல்லாம் மோசம் என்ற கருத்து ஒவ்வொரு பலபண்பாட்டிய ஆர்வலர் குழுவிடமும் உள்ளது என எனக்குத் தோன்றுகிறது.  உங்களை விட உங்கள் வாழ்வு பற்றி எங்களுக்குத்தான் கூடுதலாகத் தெரியும், உங்கள் வாழ்வு பற்றி நாங்கள் சொல்வதுதான் உண்மை, உங்கள் புரிதல் எல்லாம் பொய் என்று கூடச் சொல்ல மேற்படிக் குழுவினர் சிறிதும் தயங்க மாட்டார்.

இத்தகைய கட்டுரைகள், கதைகள், விடியோக்கள், செய்தி அறிக்கைகள், ஆவணப்படங்கள், உரைகள் எல்லாமே கோணல் நோக்கோடு தயாரிக்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது.  பல நேரம் நல்லது செய்கிறோம் என்று நினைத்துச் செய்வாரும் உண்டு.  எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறோம் என்று சாதிப்போடு செய்வாரும் உண்டு.  கோணல் நோக்கோடும், ஏனோ குரோதத்தோடும் செய்வாரும் உண்டு.

சற்று ஆர்வமுடன் இந்தியாவைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு, இந்த நாடு சாதிக் கொடுமைகள் நிறைந்தது, உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களை விலங்குகளை விடக் கீழாக நடத்துகிறார்கள் என்ற அறிமுகம் மற்ற எல்லா அறிமுகங்களையும் விட சற்று அதிகமாகவே செய்யப்படுகிறது. இந்த அறிமுகம் முற்றிலும் தவறானது எனறு நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கும் இதே அறிமுகம்தான் செய்யப்பட்டுள்ளது. நம்மிடையே இந்த வாதத்துக்கு எப்பாடுபட்டும் ஆதாரங்கள் சேர்ப்பதையே தம் வாழ்வுடைய மையச் செயல்பாடாகக் கொண்டு உலவும் ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும், ஊடகப் பெருந்தகைகளும் நிறையவே உண்டு. நம்மிடையே இத்தகைய ஏற்ற தாழ்வுகளும் உண்டு, அவை என்ன காரணங்களால் எழுந்தன, எப்படி எல்லாம் மாறி வந்திருக்கின்றன, என்ன வகைகளில் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதில்தான் ஏராளமான சிக்கல்கள் உண்டு.  அவற்றை மேற்படிக் கருத்துகளைப் பரப்புவார் கவனிக்க விரும்புவதும் இல்லை, அது அவசியம் என்றும் நினைப்பதில்லை. இந்திய சமூக அமைப்பு குறித்து ஏற்கனவே பரவலாக உள்ள சில கருத்துகளே நிரந்தர உண்மை என்று சாதிக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

இப்படி அனைவருக்கும் அறிமுகமாகிற இந்திய ’சாதி அமைப்பு’ குறித்து மேற்கத்திய மானுடவியலாளர் மற்றும் சமூக ஆய்வாளர் பலர் பல நூற்றாண்டுகளாக விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். இவர்களில் தற்காலத்திய அறிஞர்களின் ஆய்வு முடிவுகள், இதற்கு முந்தையோரின் ஆய்வு முடிவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன. நாம் இதுவரை அறியாத பல புதிய தகவல்களை அவர்கள் தருகிறார்கள்.

Dunkin Jalki
Dunkin Jalki

உதாரணமாக, டங்கின் ஜல்கி (Dunkin Jalki) என்ற சமூகவியல் ஆய்வாளர் பெரும்பாலும் கர்நாடகா மாநிலத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆனால் அகில இந்திய அளவிலும் ஆய்வுகள் செய்வோருடன் தொடர்பு கொண்டு இயங்குபவர் எனத் தெரிய வந்திருப்பவர். இவர் இந்தியக் கிராமங்களில் மக்கள் ‘சாதி’ என்பதை ஒரு தீக்கனவாக, கொடுங்கோல் அமைப்பாக, அல்லது அரக்க உருவாகப் பார்ப்பதில்லை என்கிறார்.  கிராமவாசிகளுக்கு சாதி என்ற அமைப்பை எப்படி வளைப்பது, நல்ல முறையில் பயன்படுத்துவது என்பது தெரிந்திருப்பது இந்த நிலைக்குக்  காரணமாக இருக்கலாம்; அதிகார அமைப்பின் உச்சத்தில் இருந்த ஒரு சிலரால் இந்த அமைப்பு உருவாகவில்லை என்றும், அடித்தள மக்களிடம் இருந்து உருவான இந்த அமைப்பு எப்போதும் நெகிழ்வான அமைப்பாகவே இருந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார். அமைப்பு என்ற சொல்லை நான் இங்கு பயன்படுத்துகிறேன்.  டங்கின் ‘சாதி அமைப்பு’  என்பதற்கும், ’காஸ்ட் சிஸ்டம்’ என்று ஆங்கிலத்தில் புழங்கும் ஒரு சொல்லுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு என்றும் வாதிடுகிறார்.  இதுவும் புது வாதம் இல்லை.  பல பத்தாண்டுகளாகப் புழங்கும் வாதம்தான். ஆனால் டங்கின் ஜால்கி பேச விழைவது முந்தைய வாதங்களில் இருந்து வேறுபட்டது என்பது தெரிகிறது.  ஒரு அகில இந்திய அமைப்பு என்று ஏதும் இல்லை என்பது அவர் வாதம்.  இது இந்து சாஸ்திரங்களால் கட்டப்பட்டது என்பதையும் அவர் மறுக்கிறார்.  மேலிருந்து திணிக்கப்பட்ட அமைப்பு என்ற வழக்கமான ஃபார்முலா வாதத்தையும் அவர் மறுக்கிறார்.

ஆங்காங்கு மக்கள் தம் சமூகக் குழுக்களிடையே ஒரு உறவு முறையைத் தம் வசதிக்கு ஏற்ப அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதைத் தில்லி, பெங்களூரு, சென்னையில் இருந்து ‘திருத்தவோ’, அழிக்கவோ, புது உருக்கொடுத்து நவீனப்படுத்துவதோ- சட்டங்கள், வசைகள், தலைவர்களின் அறைகூவல்களால் எல்லாம் இயலாது என்று அவரும் அவருடைய ஆய்வுக் குழுவும் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எவை எதார்த்தத்துக்குப் பொருந்தும் என்பது நம்மிடையே கவனமாகவும், சார்பின்றியும்  பேசப்பட வேண்டிய ஒரு பொருள். ஆனால், இப்பிரச்சினை பற்றிப் பேசுகிற பிரபலமான எந்த இந்தியத் தரப்பும் இதைச் சார்பின்றியோ, திறந்த மனத்துடனோ அறிய முயல்வதில்லை.  இதைப் பிரச்சினை என்று சொல்பவர்களுக்குமே ‘பிரச்சினையின்’  வேர்கள் பற்றி ஏதும் தெரிவதில்லை என்பது ஒரு பிரச்சினை.  அதை அவர்கள் காண மறுப்பது இன்னொரு விதமான பிரச்சினை.

தமிழகத்தின், இந்தியாவின், சூடாக்கப்பட்ட அரசியல் களங்களில் இந்தக் கருப்பொருள் பேசப்பட்டாலும், அந்தப் பேச்சுக்களில் இருந்து ஏதும் உருப்படியாக வராது. ஏனெனில், பல  நூறாண்டுகளாக பரஸ்பர சந்தேகம் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது. கிருஸ்தவ, மேற்கத்திய பாணியில், உலகெங்கும் இனக்குழுக்கள் தொடர்ந்து நடத்திய ஆக்கிரமிப்பு, வன்முறை, மற்றும் கொடுமைகளால் அமைக்கப்பட்ட சமூக நிறுவனங்கள் போலவே, இந்தியாவிலும் உருவானதே இந்திய சாதி அமைப்பு என்று பெரும்பான்மையான தரப்புகளால் பார்க்கப்படுகிறது. இந்த முன்முடிவு கொண்ட அணுகுமுறையால் எதார்த்தம் குறித்த நம் புரிதல் திரிந்து போயுள்ளது. இந்த வகைப் புரிதலே நம் இளைஞரிடமும், இன்றைய நடுவயதினரிடையும் நிரம்பி இருக்கிறது. முதியோரும் ஒன்றும் அத்தனை தெளிவான அறிதல் கொண்டவரில்லை, ஏனெனில் காலனியாதிக்கம் நம்மிடையே பல நூறாண்டுகளாகவே இந்த சந்தேகத்தை விதைத்துப் பரப்பி வந்திருக்கிறது.

வேறு வகையான இணக்கம் தேடும் அல்லது நல்லுறவு கொள்ளும் குழுக்களே இந்தியாவில் இல்லாதது போலும், அந்த வகை சமன நிலை தேடும் அரசு என்பது இங்கு இருந்ததே இல்லை என்பது போலவும் இரு நூறாண்டுப் பிரச்சாரமும் அறிவுறுத்தலும் கல்வி போதனையும் உலகம் முழுதும் இந்தியா குறித்து நடந்து வருகின்றன.

timesless_indian_civilizationஇதைத் தவிர இந்தியாவை அலசிய எத்தனையோ சமூகவியலாளர், மானுடவியலாளர், வரலாற்றாசிரியர்கள் இந்திய சுய ஞானத்தை, புரிதலை, உருவைக் குறைப்படுத்திப் போயிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மேற்கில் கல்வி கற்று உள்நாட்டு வாழ்வனுபவ அறிவு என்பதைக் குறைவாகக் கொண்டவர்கள். இந்தியா ஒரு 4000 வருட காலத்து நாகரீகம் என்று ஒரு சொற்றொடரைச் சொன்னால், வழித்துக் கொண்டு சிரிப்பவர்களாகத்தான் இன்றைய அறிவு ஜீவிகளில் பெரும்பாலார் உள்ளனர்.

ஏனெனில், இந்தியாவில் மானிட வாழ்வு என்பது என்ன என்ற யோசனையே தாங்கள் தலையெடுத்த பின்னரே தோன்றியது என்பது இந்த அறிவு ஜீவிகளின் ஏகோபித்த கருத்து.  இவர்களும், இவர் மரபில் பின் வந்த பல சூரியன்களும் உதித்த பின்புதான் இந்தியாவில் சிந்தனை மரபே தோன்றியது என்பது ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் ‘புரட்சியாளர்’ குழுக்களின் கருத்து. அதற்கு முன்பு இங்கு இருந்ததெல்லாம் வெறும் வன்முறை, கொடுமை, மிருக வாழ்க்கை என்பது இவர்களுடைய ‘தெளிந்த’ முடிவு.

இவர்களது கருத்துப்படி, முந்தைய தலைமுறைகளில் ஏதோ ஒரு சில எதிர்ப்பாளர் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அமைப்பை அடியோடு புரட்டி எல்லாரையும் சமமாக்காததால் அவர்களுடைய முயற்சிகள் ஏதும் உருப்படியில்லை. இந்தத் தலைமுறை புரட்சியாளர்களே (புரட்டாளர்களே ?) எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிச் சமனாக்கி, எல்லாரையும் ஒரே அளவாக, ஒரே வகையாக, ஒரே குணத்தவராக, ஒரே சிந்தனை உள்ளவராக, ஒரே மாதிரியான இந்தியராக ஆக்கப் போகிறார்கள். டங்கின் இந்த வகைச் சிந்தனை போதிக்கும் பள்ளியைப் பற்றியும் பேசுகிறார், இன்னும் பல கட்டுரைகளில்.

[கர்ட் வானெகட் (Kurt Vonnegut) என்னும் நாவலாசிரியர் இந்த வகை அறிவு ஜீவிப் போக்கை  ஒரு அங்கதக் கதையாகவே எழுதிப் போயிருக்கிறார். ஆனால், அவர் கதையாகச் சொன்னதை இந்தியாவில் உண்மையிலேயே நடக்க வேண்டும் என்று பெரும் முயற்சிகள் அறிவு சீவிகள் நடுவே நடக்கிறது என்று அவருக்குத் தெரியாமல் போய் விட்டது.  பாவம் கர்ட் !]

* * * * * * *

ந்தவகை அறீவு ஜீவிகள் சொல்லுகிற அனைத்தையும் அனைவரையும் தழுவிய ஒரு சமத்துவம் உலகில் எந்த நாட்டிலும், மானுட வரலாற்றில் கிட்டியதும் இல்லை, அது நிலைக்கச் சாத்தியம் ஏதும் இல்லை. சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம். இந்தியாவில் பயிலப்படும் சாதிப் பிரிவினையில் பல கீழான வகை அடுக்கமைப்புகளும் கூட இந்த ஆபிரகாமிய சிந்தனையின் வளர்த்தெடுக்கப்பட்ட மற்றொரு வடிவமாகவே இருக்கின்றன.  சமத்துவம் என்ற மந்திரக் கோலை ஆட்டி நடத்தப்படும் இந்தப் புரட்டு வேலை இன்றைய புற்று நோய்.

prophet-koederஇந்தப் புற்றுநோயின் பல வடிவங்களில், சில வடிவங்களை மட்டுமே எதிர்க்க வேண்டும் என நினைத்தால், உருப்படியான  முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. கம்யூனிச, கிருஸ்தவ, இஸ்லாமிய வெறிகளைப் பற்றி மட்டுமே விமர்சிக்க வேண்டும், ஆனால் இந்தியாவில் வன்கொடுமைகளைச் செய்யும் சாதி வெறியைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்று சொல்லுவதும்கூட  ஆபிரகாமிய மனநிலையே. இந்த மனநிலையினால் ஏசு, முகம்மது, கார்ல் மார்க்ஸ் போன்ற மற்றொரு இறைத்தூதரை இந்துக்களிடையேயும் உருவாக்கி விடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அல்லது இந்து சாதிக் கொடுமைகள் பற்றி மட்டுமே விமர்சிக்க வேண்டும், மற்ற கொடுமைகளை, வன்முறை வடிவுகளைத் தம் ஆதர்ச உலகாகக் கொண்டு ‘புரட்சியாளர்’ என்ற முகமூடியோடு நம்மிடையே உலவுவாரை விமர்சிக்கக் கூடாது என்ற வற்புறுத்தலும் புற்று நோயைக் களைய ஏதும் உதவாது.

சமயோசித அரசியல் என்ற பெயரில் இந்தப் புற்றுநோயின் பல வடிவுகளில் சிலவற்றைத் தற்காலிக நட்பாகக் கொண்டு பிற வடிவுகளை ஒழித்துக் கட்டுவோம் என்று சிலர் செயல்படுகிறார்கள்.  பரிதாபப் படவேண்டிய மனிதர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் கையில் அதிகாரம் சிக்கினால் நாம்தான் பரிதாபப்படும் நிலையில் இருப்போம்.  சாமானிய மனிதரின் நலன் காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தம் வாழ்வை அணுகும் முறைகள் எல்லாம் தவறு, தம் ‘ஆய்ந்தறிந்த’ முறைகளே சரி என்று உறுதியாக அறிவித்து, பின் சாமானிய மனிதர்கள் தாம் வரையறை செய்யும் முறைகளின் வழிதான் வாழ வேண்டும் என்று முடிவு கட்டும் ஆய்வாளர்/ அறிவாளர்களே இன்று கருத்துலகை ஆட்சி செய்கிறார்.  இந்த அணுகல் தம் முதல் அறிவிப்பை முற்றிலும் நிராகரிக்கிறது என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல, ஆனால் அதை ஒத்துக் கொள்ளுமளவு ‘திறந்த’ புத்தி இவர்களிடம் இல்லை.  முந்தைய இறைத் தூதர்களைப் பின்பற்றுவோரும், இறைத்தூதர்கள் என்று யாரும் இல்லை என்று அறிவித்து விட்டுத் தாமே இறைத் தூதராக நடந்து கொண்டவர்களுமாக உலகின் பல வக்கிர வடிவுகளும் இன்று இந்தியாவில் பரவலாக அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்த இறைத்தூதர் சிந்தனைகள்தான் பல வடிவங்களில் இன்று உலகை ஆள்கிறது என்று கூட நாம் காண முடியும்.  இந்தச் சிந்தனையின் கீழ் அதிகாரம் பெறுபவர்கள் எவரும் தம்மை மற்றவர் கண்காணிப்பதையோ, எல்லாருக்குமான விதிகளுக்கு உட்பட்டுத் தாமும் வாழ வேண்டும் என்பதையோ ஏற்பதில்லை. மேலும், இவர்கள் முன்வைக்கும் சமத்துவ உலகின் இயல்பான பலவீனங்கள் இவர்களை எதிர்க்கவோ, மாற்றவோ முடியாதபடி செய்துவிடுகின்றன. இவர்கள் உருவாக்கும், விதிகளை அமல்படுத்தும் ஒரு அதிகார அமைப்பு, சீக்கிரத்திலேயே அனைவருக்கும் மேல்பட்ட ஒரு அதிகார அமைப்பாக மாறுவதைத் தடுக்க சமத்துவ சமுதாயத்திடம் எந்தக் கருவியும் கிடையாது. சமத்துவ சமுதாயங்கள் பெரும்பாலும் வெகு சீக்கிரம் சர்வாதிகார அடுக்கமைப்புக்குள் சிறைப்படுவதும் இதனாலேயே நேர்கிறது.

ஒரு முறை உருவாகிவிட்ட இத்தகைய அமைப்பை அழித்து, அதன் பின் அமைக்கப்படும் மாற்று அமைப்புகளுக்கும் கூட வேறுபட்ட வழிமுறைகள் சாத்தியம் ஆவதில்லை. அவர்கள் உருவாக்கும் புதிய அடுக்கமைப்பு உண்மையில் புதியதல்ல.  மாற்று வடிவங்களில் சுரண்டல் தொடர்கிறது. சமத்துவ சமுதாயங்களின் இருண்ட மூலைகளில் பதுங்கி அமைப்பை வக்கிரமாக்கிய சிலர், அவர்களுடைய அமைப்பு கலகலத்ததும் வெளி வந்து, அதிகார அமைப்பை வசப்படுத்தி பெருநாயகராகி விடுவர்.  புடினும், சீனத் தலைவர்களில் பலரும், நேற்றைய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளின் தற்காலிகச் சர்வாதிகாரிகளும் இத்தகையவரே.  மானுடச் சந்தை இந்த நாயகர்களின் கையில் பராக்கிரமம் நிறைந்த வன்முறைக்கான ஒரு கருவியாகவும், சுரண்டல்+ வன்முறை நாயகர்களைக் காக்கும் நல்ல கவசமாகவும் மாறிவிடுகிறது. இந்தக் கவசங்கள் பல பெயர்களைப் பெற்றுள்ளன: கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமான மனிதர்கள், அமைப்புகள், நம்பிக்கைகள் – என்ற பல பெயர்களில் இந்தக் கவசங்கள் ரோந்துப் பணி செய்கின்றன.

பிறரை அழிக்கும் நோக்கத்தோடே எல்லாரையும் அணுகாமல், நம் பார்வை ஒன்றே சரி என்றும் கருதாமல், உண்மையாகவே பல பண்பாடு, பல பார்வைகள், பல தேர்வுகள் மீது ஒரு குறைந்த பட்ச மரியாதையுடன் துவங்கி, நாம் கலந்து உரையாடி, ஏன் ஒவ்வொரு குழுவும் என் பாட்டையே ராஜபாட்டை என்று சாதிக்கிறது என்பதை அறிய முயன்றால், ஒருவேளை நமக்கு மாற்று சமூகச் சிந்தனைகள் பற்றி யோசிக்க முடியலாம்.

ஆனால், அதில் கூட புனிதம், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மனிதர், குறை சொல்லக்கூடாத அமைப்புகள் என்று வரையறைகள் விதித்தால் அந்த விவாதஙகள் பயனற்றுப் போகும்.  புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது.  புனிதம் என்பதே ஒரு ஆதர்சம்.  இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது.

adaptation_cartoonஉயிர்கள் எல்லாம் அழிவன. அழிவு என்பது அவற்றின் துவக்கத்திலேயே அந்த உடல்களில் விதைக்கப்பட்டு உள்ளது.  அழியும் உடல்களைப் புனிதமாக்கி, தெய்வமாக்கி அந்த நம்பிக்கைக்கு நம் உடல்களை அடிமையாக்குவதைப் போல அபத்தம் ஏதும் இல்லை.  மாறும் சூழல்கள் மாறும் கருத்துகளையே கேட்கின்றன, விதிக்கின்றன, சுமத்துகின்றன.  ஏனெனில் உயிர்கள் தப்பிப் பிழைக்க சூழல்களுக்கு ஏற்ப தம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம் என்பதை அனேகமாக உள்ளுணர்வாலோ, ஊகத்தாலோ, அலசி அறிவதாலோ தெரிந்து கொள்கின்றன.  அந்தத் தெரிவுக்கு ஏற்ப தேர்வுகளை அவை மேற்கொள்ளுமா இல்லையா என்பதுதான் அவை என்ன அளவுக்குக் காலத்தில் தொடர்ந்து பயணம் செய்யும் என்பதையும் தீர்மானிக்கிறது.  Adaptation= Survival  (maybe. )  ஏனெனில் என்ன வளைந்து கொடுத்து தப்பினாலும், கணிப்புகளுக்கு அடங்காத தற்செயல் நிகழ்வுகள் என்ற ஒரு காரணி எதையும் அழிக்கும் வல்லமை உள்ளது.  அதுவும் அண்ட பேரண்டத்தில் உலவுகிறது, அதுவும் ஒரு எதிர்பார்க்கவியலாத சமன்பாடுகளைக் கொணர்கிறது.  முழு அழிப்பும் சில நேரம் அதன் இயக்கத்தின் விளைவாகலாம்.

முன் சொன்ன ஆபிரகாமிய விதிமுறைகள் வேறு வடிவிலும் அறிவீனத்தைப் பாதுகாக்கும் குணம் உள்ளவை. முன்னரே அறிந்த ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் ஆராய்வதால் புதியதாக எதுவும் தெரியப் போவதில்லை என்றும் அவை அறிவுறுத்தலாம். இந்நாள் வரை மனிதருக்குத் தோன்றாத ஒன்று நமக்குத் தோன்றப் போகிறதா என்றால், அது சாத்தியமென்று சொல்லவே நான் விரும்புவேன்.

இக்காலம் வரை எக்குழுவிற்கும் கிட்டாத நடைமுறை நமக்குக் கிட்டுமா என்று வினவினால், தொடர்ந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் நாம் அதை நெருங்கக் கூடும் என்றே நான் கூறுவேன். அத்தகைய சாத்தியம் இன்னும் சில நூறாண்டுகள் வரையில் கூட சாத்தியமாகாது என்பது என் தனிப்பட்ட புரிதல். இருந்தாலும் தொடர்ந்து முயல்வது அவசியம் என்பது என் கருத்து.

அசமத்துவம் படிப்படியாக, தொடர்ந்த பத்தாண்டுகளில் குறைக்கப்பட்டு, வன்முறைக்கான வித்துகள் அதிலிருந்து நீக்கப்பட்டு ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவ வேண்டும். இது நமது கடமை என்றோ, அல்லது குறிக்கோள் என்றோ நாம் எண்ண வேண்டும். ஆனால், இந்த சமத்துவ உலகை நாளைக் காலையிலேயே நிறுவி விடுவோம் என்று சண்டைக்கு நிற்பதோ, முந்தைய அனைத்து மனிதரும் அயோக்கியரே என்று கருதுவதும் எவருடைய ஒத்துழைப்பையும் கொணராது. அப்படி வலியுறுத்துவதாலேயே நாம் புனிதராகி விடமாட்டோம், எதிர்ப்புகளுக்கெல்லாம் பதில் சொல்லி விட்ட சண்டியராகவும் மாட்டோம்.

அதே நேரம், நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பிறருடைய மனிதத்தின் விழைவுகளை நாம் அங்கீகரிப்பதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பிறரும், நாமும் இணைந்து நகர முடியும். இதற்கும், நம்முடைய வரலாற்றுச் சிறையைப் பற்றித் தெளிவு ஏற்படவும், மற்றவரின் விழைவுகளை அங்கீகரிக்கவும் தொடர்ந்து வெளிப்படையாக உரையாடுவது அவசியமாகிறது.

இப்படிப் பொதுப்படையாகப் பேசி, நடைமுறைக்கான படிகளைப் பற்றிப் பேசாமல் இருப்பதால் என்ன லாபம் என்று கேட்கலாம்.  தற்போதைய சூழலில் செயலாற்ற முன்வருபவர்கள் மனம் வருந்தும் கருத்துக்களைப் பேசுவது நடைமுறை புத்திசாலித்தனம் இல்லை என்றும் வரையறுக்கப் படலாம். இத்தகைய வரையறைகள் உருவாக்கும் நடைமுறைப் பகுத்தறிவால் பலன்கள் உண்டுதான். ஆனால், வரையறுக்கப்பட்ட வட்டங்களைத் தாண்டி ஓடும் பகுத்தறிவும் பலன்களைத் தரக் கூடியதே.

இவ்விரண்டும் இணையாமல் தனித்து இயங்குமானால் மலட்டுத்தனம் மிக்கதாகவும், ஏன் மனச்சிதைவு கொண்டதாகக் கூட மனித இனம் மாறிவிடும். ஆனால், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படுமானால், ஓரளவு சமநிலை கொண்ட, அதிக அளவு பலன்களை நெடுங்காலம் தரக்கூடிய ஒரு சூழல் உருவாகும். இந்தச் சூழலில் தனிமனிதர்களின் படைப்பூக்கத்திற்குத் தேவையான முழுச் சுதந்திரம் இருக்கும். அதே சமயம், அவர்களுடைய தனிப்பட்ட திறமைகள் சமூகத்திற்குப் பலன் உள்ளதாகவும் அமையும்படி இந்தச் சூழலே செய்து விடும்.

max_weber_1894இதையே மாக்ஸ் வெபரும் (Max Weber) வேறு வகையில் சொல்லுகிறார் [1]. கட்டுப்பெட்டியான தளத்தில் இருந்தவர்களுக்கும், கட்டுப்பாடற்ற போக்கில் இருந்தவர்களுக்கும் இடையே இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற ஆவலில் அவர் பொதுவாகச் சொல்லுகிறார். இந்த இரண்டு பார்வைகளிலும் உள்ள தீவிரப் போக்குள்ளவர்கள் எப்போதும் உண்டு. இவர்களிடையே சமரசம் உண்டாக்குவது எளிய வேலை இல்லை.

தனது கடைசிக் காலத்த்தில் வெபர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். அது ஏன் என்பது வெபருடைய கருத்துகளை ஊன்றிப் படித்து அவற்றின் செயல்முறைச் சாத்தியப்பாடுகள் பற்றி யோசிப்பவர் எவருக்கும் தெரியும்.  அறிந்ததால் மகிழ்ச்சி கிட்டாது என்பதற்கு  வெபரே ஒரு சாட்சி.  அதனால் அறியாமையே மகிழ்ச்சி என்றும் நாம் முடிவு கட்டி விட முடியாது.

பின் குறிப்புகள்:

[1]  இருபதாம் நூற்றாண்டின் சமூக சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் கோட்பாட்டு ஆய்வுகளில் பெரும் தாக்கம் செலுத்தியவர்  ஜெர்மானிய சிந்தனையாளரும், சமூகவியல் அறிஞருமான மாக்ஸ் வெபர்.  வெபர் சொன்னது:

Normative rationality is not totally infertile.  Nor is Instrumental rationality. Either alone will be sterile and perhaps lead to more perversions of humanity. But interactively they may help us forge a sensible system that meets the challenge of freeing individuals for creative purposes at the same time harnessing their talents for social purposes- with their consent and motivated participation.

3 Replies to “சுய அறிதலும் வரலாற்று அறிதலும்”

  1. அருமையான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரை முக்கண்ணன் அவர்களே.

    // புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது.//

    கவித்துவமான வரிகள், மிகவும் ரசித்தேன்.

    தங்கள் வாழ்நாள் முழுவதும் இறை பக்தியில் திளைத்த அடியார்கள் “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு” என்றும் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்றெல்லாமும் தங்களை நொந்து கொண்டு பாடியிருப்பது இங்கே நினைவுக்கு வருகிறது – பக்தி இலக்கியத்தில் அதன் பரிணாமம் வேறு என்றாலும்.

  2. “இக்காலம் வரை எக்குழுவிற்கும் கிட்டாத நடைமுறை நமக்குக் கிட்டுமா என்று வினவினால், தொடர்ந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் நாம் அதை நெருங்கக் கூடும் என்றே நான் கூறுவேன். அத்தகைய சாத்தியம் இன்னும் சில நூறாண்டுகள் வரையில் கூட சாத்தியமாகாது என்பது என் தனிப்பட்ட புரிதல். இருந்தாலும் தொடர்ந்து முயல்வது அவசியம் என்பது என் கருத்து.”
    அருமை! நன்றி!

  3. அன்புள்ள முக்கண்ணரே

    உமது இத்தொகுப்பு மிகமிக நன்று. மேலும் தொடரட்டும் உமது பணி.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *