வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் தொடரின் முந்தைய பகுதிகள்.
- பாகம் 1: வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்
- பாகம் 2: குதி. நீந்தி வா !
- பாகம் 3: கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?
- பாகம் 4: வாழ்விக்க வந்த மகாத்மா!
- பாகம் 5: வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி
- பாகம் 6: சித்பவானந்தரின் குணநலன்கள்
- பாகம் 7: அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
- பாகம் 8: வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்
ஒருநாள் சத்சங்கத்தில் சுவாமி திருமண பந்தம் துன்பமானது, சுமையானது. பிறரின் உதவியை திருமணம் செய்தவர்கள் பெற்றே ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஸ்ரீராமர் கூட ஸீதாதேவியை இழந்து அனுமனுடைய உதவியை நாடவேண்டியதாயிற்று. அனுமன் யாரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை. காரணம் அவன் பிரம்மச்சாரி. திருமணம் செய்து கொண்டதால் கடவுளுக்கே அந்த கதியென்றால் நீங்கள் எல்லாம் கல்யாணம் செய்து கொண்டு இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்களே என்று ஆசிரியர்களை பார்த்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்களோ? என்று குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த ஆசிரியர்கள் சளைத்தவர்களா அவர்கள் ஒரே குரலில் அதனால் தான் நிரந்தரமாக உங்கள் காலடியில் நாங்கள் வந்து அமர்ந்துவிட்டோம். எங்களுக்கு எந்த சிரமும் வராது என்றார்கள். சுவாமிஜி அதை மிகவும் ரசித்து ஆமோதித்தார்.
***
ஒரு சமயம் கிறித்துவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் அவரவர் மதங்களைப் பற்றி பெருமையாக பேசினார்கள். இந்து மதத்தை கேவலமாக விமர்சித்து விட்டார்கள். ஒருவர் கேட்டார் ரோமில் உள்ள எங்கள் போப்பாண்டவர் மத சம்மந்தமாக ஒரு கருத்தை வெளியிட்டால் வானத்திற்கு கீழே வாழ்கின்ற அனைத்து கிறிஸ்தவர்களும் மறுபேச்சு பேசாமல் ஆண்டவரே சொன்னதாக கருதி ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல இஸ்லாமிய சமயத்தில் இமாம் சொல்லும் எந்த கருத்தையும் இஸ்லாமியர்கள் பணிவோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்து மதத்தில் ஒரு சமயத்தலைவர் கருத்துக்கு வாதங்கள், பிரதிவாதங்கள், சர்ச்சைகள், விவாத மேடைகள் என வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். இதுதான் சமய ஒழுங்கா இதுதான் இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் லட்சணமா என்று ஏளனம் பேசினர்.
அதற்கு சுவாமி புன்னகையோடு அன்பு சகோதர்களே! நீங்கள் நன்றாக இந்து மதத்தை விமர்சனம் செய்து விட்டீர்கள். நன்றாக சாடியும் உள்ளீர்கள். அதாவது, மதத்தலைவர்களின் கருத்துக்கு எல்லோரும் வாய்பொத்தி, கைகட்டி ஏற்றுகொள்வதாக கூறுகிறீர்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி ஏற்றுகொள்ளப்படுவதில்லை. உண்மைதான். முற்றிலும் உண்மைதான். என்னசெய்வது சகோதரர்களே! பகுத்தறிவும், சுயசிந்தனையும், கொள்கை தெளிவும் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாதம் இருக்கும்; பிரதிவாதம் இருக்கும்; மோதல்கள் இருக்கும் மேற்சொன்ன பண்புகள் இல்லாத இடங்களில் …….. என்று நிறுத்தி விட்டார்கள்.
***
பூமியில் நேராக வாழ்பவர்
எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா?
என்று கண்ணதாசன் பாடியது நம்முடைய சாமிக்கு மிகவும் பொருத்தம்.
தாயுமானவர் பரிபூரணம் அடைந்த இடத்தில் சுவாமி சித்பவானந்தர் தம் மனம், வாக்கு, காயம் மூன்றையும் உருக்கி தவம் செய்து கட்டிய கோவில் தான் இராமநாதபுரம் தாயுமான சுவாமி திருக்கோவில். தாயுமானவருடைய அனைத்து நூல்களுக்கும் சுவாமி சிவானந்தரின் தூண்டுதலால் சித்பாவனந்தர் உரை எழுதியுள்ளார். இராமநாதபுரத்திலுள்ள தாயுமான சுவாமி தபோவனம் அறப்பணிகளுடன் கல்விப்பணியும் ஆற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாயுமானவர் குருபூஜையும் அன்னதானமும் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளாகும்.
இராமேஸ்வரத்தில் ஒரு ஆஸ்ரமம் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று சுவாமிகள் எண்ணிய எண்ணம் தின்னியதாக இருந்ததால் இராமேஸ்வரத்திலும், தேவிப்பட்டினத்திலும் ஆஸ்ரமங்கள் உருவாகின. இராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு தங்குமிடமும், உணவு வசதியும் செய்து தரப்படுகிறது. இவ்வாஸ்ரமம் ஸ்ரீராமநவமி அன்று துவக்கப்பட்டதாலும் இராமருடைய ராமேஸ்வர விஜயம் காரணத்தாலும் இந்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆன்மீக பணி மட்டுமன்றி இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் ஆகிய இடங்களில் கல்விப்பணியும் ஆற்றி வருகின்னறர்.
இராமேஸ்வரம் மடத்தின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள “குந்துக்கால்” என்ற இடத்தில் உள்ள விவேகானந்தர் நினைவாலயம் சிறந்த சுற்றுலா தலமாகும். விவேகானந்தர் இராமேஸ்வரத்தில் தங்கிய இடமான விவேகானந்த பாஸ்கரம் என்ற விடுதி தபோவனத்தால் நன்கு பராமரிக்கப்படுகிறது.
***
சமுதாயத்தில் எவ்வளவு பெரிய அதிகாரம், அந்தஸ்து, செல்வம், பதவி, செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாம் சுவாமிஜி அவர்களை பார்த்து மரியாதை செலுத்துகிறார்கள். வணங்குகிறார்கள். அவரை சந்தித்த திருப்தியுடன் திரும்பிகிறார்கள் என்பதையெல்லாம் அங்கு படிக்கும் மாணவர்கள் பார்க்கிறார்கள். மேல் நாட்டுக்காரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு திருப்தியாக விளக்கம் கிடைக்கிறது. மனத்திருப்தியுடன் திரும்புகிறார்கள். அப்போது எல்லாம் அந்த மாணவர்களுக்கு சுவாமியின் அருமை தெரிவதில்லை. சற்று வளர்ந்த பின்புதான் அதை உணர்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் வாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். இல்லறத்தார்கள் தபோவன நூல்களையும், தர்ம சக்கரத்தையும் படிக்கிறார்கள். தங்கள் முழுச்சொத்தையும் தபோவனத்திற்கு எழுதி வைத்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் கடவுளுடன் வாழ்ந்தவர்கள். அவரை தெய்வமாக கருதி அவர்கள் அவருடன் வாழ்ந்தார்கள். சுவாமிஜி அவர்கள் காலத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் பாக்கியவான்கள். ஏனென்றால் அவர்கள் கடவுளுடன் வாழ்ந்தார்கள்.
கடவுள் அவர்களுடன் வாழ்ந்தார். சிறுவயதில் இங்கு படித்தபோது படிப்பு, தவம்,எழுத்து,பேச்சு ஆகிய எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள் என்ற இந்த வியங்கள் இப்போது அவர்களுக்கு புரிகிறது. பலர் சுவாமியை கடவுளாகவேதான் பூஜித்து வருகிறார்கள்.
இந்தியாவிலுள்ள 7 புண்ணிய நதிகளுள் ஒன்று காவிரி திருப்பராய்த்துறை அகண்ட காவிரி
ஸ்நானம் மிகச்சிறந்ததாகும். விரிவடைந்த இடங்களை பார்க்கும்போது மனதும்
விரிவடைகிறது. துலாஸ்நானத்தன்று தீர்த்தவாரி நிகழும் ஆயிரக்கணக்கானோர் அரகர மகாதேவா என்று ஆற்றில் மூழ்கி அருளை பெறுகின்றனர். இந்த தலத்தில் நீராடியவர்களுடைய பாவங்கள் யாவையும் காவிரி அன்னை போக்குகிறாள். இத்தலத்தில்தான் நம்முடைய முனிவர் தம் தபோவனத்தை அமைத்தார்.தான் துவக்கிய தர்ம சக்கரம் என்ற பத்திரிக்கை பற்றி அவர் கூறும் போது இப்பத்திரிக்கைக்கு தர்ம சக்கரம் என்று பெயர் சூட்டி இருக்கிறோம். ஏனென்றால் நல்லவனை நல்லவன் என்றும் கெட்டவனை கெட்டவன் என்றும் தர்மம் தானே விளக்கி விடுகிறது.
இப்பத்திரிக்கை உயிர் வாழ்ந்து இருக்கும் மக்களை போற்றவோ, தூற்றவோ செய்யாது. அவர்கள் கடைபிடிக்கும் செயல்களில் நலம் தருபவை யாவை கேடு செய்பவை யாவை என்ற தர்ம மார்க்க ஆராய்ச்சியை செய்து எல்லா சமயங்களுக்கும் ஒப்ப முடிந்த கோட்பாடுகளை மக்களிடையில் பரப்புவது இப்பத்திரிக்கையின் நோக்கமாகும். எல்லா சமயங்களிலும் உள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிக்கை பிரச்சாரம் செய்கிறது. இயற்கை, வானநூல், மனோதத்துவம், வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்து புகட்டுதல் இப்பத்திரிக்கையின் நோக்கமாகும் என்கிறார்.
தான் துவக்கிய பள்ளியில் பள்ளி கர்ஜனையாக பின்கண்டவாறு மாணவர்களை கூற வைத்தார்.
இரும்புத் தசையும் எஃகு நரம்பும் – ஆண்மை
அஞ்சா நெஞ்சமும் சலியா உழைப்பும் – திண்மை
ஆழ்ந்த பக்தியும் ஓங்கிய ஞானமும் – இறைமை
பழுத்த பண்பும் நிறைவின் வரம்பும் – முழுமை
எங்கள் குறியும் எங்கள் நெறியும் – விவேகானந்தர்.
– என்பதே இந்த கர்ஜனையாகும்.
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு விழா நிகழ உள்ள இத்தருணத்தில் இந்த
கர்ஜனையை நாமும் கர்ஜிப்போமாக!
(தொடரும்)
இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.
www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.
திரு.வ.சோமு அவர்கள் தேடிக்கொண்ட புண்ணியத்தின் அளவுதான் என்னே? ‘இதுபோலக் கட்டுரைகளை, இந்தியத் தமிழர்கள் எல்லோரும் படித்து, மற்றொரு சித்பவானந்தராக (கடவுளாக) ஆக வேண்டும்’ என்னும் நம் வேண்டுதலை இறைவன் செவி மடுப்பாராக.
சுவாமி சித்பவானந்தஜி அவர்களுடன் ஒருநாள் விவேகானந்த கல்லூரியின் மாடியில் நடக்கும் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள படியேறினோம் நான் கைபிடிச் சட்டத்தை பிடித்தபடி படி ஏறினேன் .அப்போது சுவாமிஜி அவர்கள் தன கையிலிருந்த சிறு தண்டத்தால் என் கையை தட்டி எதையும் பிடிக்காமல் உன் சொந்தப் பலத்தில் மேலேறிவா என்றார் .அப்போது அவர் எதையும் பற்றாமல் தானாக மேலேறி வந்து கொண்டிருந்தார் .அவருக்கு வயது 80 க்கும் மேல்.வாழ்ந்துகாட்டிய மகான் அவர்.
ஈஸ்வரன் ,பழனி .
நம்மைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான பல்வேறு கருத்துக்களை இக்கட்டுரைத் தொடர் செம்மை நடையில் சொல்லி வருகின்றது… இக்கட்டுரை ஆசிரியரை வியந்து பாராட்டி வாழ்த்துகிறோம்.. வணங்குகிறோம்..