கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)

கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,

உறுப்புறு படையின் தாக்கி, உறுபகை இன்றிச் சீறி,

வெறுப்புஇல, களிப்பின் வெம்போர் மதுகைய, வீரவாழ்க்கை

மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16

சொற்பொருள்: கறுப்பு சினம் (கறுப்பு-சினம்; பகைமை; இன்னபிற குணங்கள். கருப்பு வண்ணம்). சூட்டு சேவலுடைய கொண்டை. உறுப்புஉறு படை காலில் கட்டப்பட்ட ஆயுதம், கத்தி. மதுகைய வலிமையை உடையவை. வாரணம் கோழி. இந்த இடத்தில் சேவல். (யானை என்றும் பொருள் உண்டு)

சேவல் சண்டை

தம்முள் எந்தவிதமான பகையும் இல்லாமலேயே ஒன்றன் மீது ஒன்று சீற்றத்தை வெளிப்படுத்தியவாறு, கோபம் கொண்ட மனமும், கோபத்தால் சிவந்த கண்ணும், கண்ணைவிடச் சிவப்பாக மின்னும் கொண்டையுமாக நிற்கும் சேவல்கள், தம் கால்களிலே கட்டப்பட்டுள்ள கத்தியைக் கொண்டு ஒன்றை ஒன்று தாக்கி, போர் செய்வதில் வெறுப்போ சலிப்போ அடையாமல், எவ்வளவு காயம் பட்டாலும் தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடிப் போகாமல் நின்று போரிடும்படியாகச் சேவல்களை மோதும்படியாக ஏவுபவர்களும்;

Translation: (One of the favourite pastimes for the people to set cockerels—domestic fowls—to fight in pairs, against each, with a small but sharp knife tied on to their legs.) The cocks, though they had no personal enmity, were seething with rage in their minds, eyes turned red with anger, their crest with their natural reddishness vied with that of the anger-soaked redness of their eyes. And undaunted they fought, attacking the rival with their beaks and legs, and also with the knife tied to their legs. Neither would back out, however injured and bleeding they were; holding their life immaterial, on they fought with valour and unbounded energy, to the last. Some enjoyed watching cock-fights.

Elucidation:–

எருமைநாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை, ‘சீற்றத்து

உரும்இவைஎன்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்

விரிஇருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,

அரிஇனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17

சொற்பொருள்: எருமை நாகு எருமை. உரும் இடி. அரிஇனம் வண்டுகள். ஊழ்உற நெருக்கி – குஞ்சி குடுமி, சிகை.

‘கோபம் கொண்ட இடிகளே இந்த உருவத்தில் வந்திருக்கின்றன‘ என்று நினைக்கும்படியாகவும்; விரிந்து திரண்டிருக்கும் இருட்டு, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கூறுகளாக மாறி ஒன்றை ஒன்று முறைமுறையாக (மாறிமாறி) நெருக்கி முட்டித் தள்ளி எருமைக் கடாக்கள் பொருதுநிற்க, அதைக் கண்டு தலையை ஆட்டித் துள்ளுவதால், குடுமியில் சூடியுள்ள மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலித்துக் கொண்டு எழும்வண்ணமாக உற்சாகமாக எருமைக் கடாச் சண்டையைக் காண்பவரும்;

கரிய எருமைகள் என்பதனால், இரண்டுமே இருள் வண்ணமாக இருப்பதனால், விரிந்து கிடக்கும் இருட்டே இரண்டு கூறாகப் பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்ப்பதுபோல் என்றார்.

Translation: (There were others who were setting the buffalo bulls in fight.) The bull buffalos struck each other with the force of angry bolts of thunder. The inkiness of their massive frames appeared as though Darkness cleaved itself into two halves and locked their horns in anger. Valiantly pushing each other with their foreheads and horns locked they battled on. The onlookers shook their heads in unbridled joy. When they did so, the bees that had collected on the flowers that adorned their tufts (were disturbed by that act) flipped into the air, buzzed about and settled back on the flowers.

Elucidation:–

முள்அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்

தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்

துள்ளிமீன் துடிப்ப, ஆமை தலைபுடை கரிப்ப, தூம்பின்

உள்வரால் ஒளிப்ப, மள்ளர் உழுபகடு உரப்புவாரும்; 18

சொற்பொருள்: முளரி தாமரை, சலஞ்சலம் ஒருவகைச் சங்கு (நத்தை) இனம். சால் ஏர்க்கால். தூம்பு மதகு. மள்ளர் உழவர். பகடு எருதுகள். உரப்புதல் அதட்டுதல் (ஓட்டுவதற்காக ஒலி எழுப்புதல்)

மென்மையான வெள்ளியைப்போன்ற முள்முனைகள் அடர்ந்த தாமரைகளின் தண்டுகள் ஒடிந்து போகவும்; வயல் சகதிகளில் இறைந்து கிடக்கும் முத்துகளும் பொன் துகள்களும் புரளும்படியும்; ஏர்க்காலின் அடியில் மீன்கள் துள்ளித் துடிக்குமாறும்; அங்கே கிடக்கும் ஆமைகள் தங்களுடைய ஓட்டுக்குள் தலையையும் கால்களையும் இழுத்துக் கொள்ளுமாறும்; வரால் மீன்கள் மதகுகளில் துள்ளும்போது ஒளிபட்டு அவற்றின் உடல் மின்னவும், உழவர்கள் வயல்களில் எருதுகளை அதட்டிச் செலுத்தினார்கள்.

Translation: The stems of lotuses, shorouded by soft, silvery thorns broke; pearls and specks of gold that lay scattered on the land turned and moved; shells of molluscs sounded; fish that had entered the fields through waters that filled them got under the blades of plough, jumped up and fell, trembling and throbbing; tortoises drew their heads and limbs into their shells; fish swimming in the head of channels glimmered in sunlight, as the farmers goaded the oxen to plough through the fields.

Elucidation:–

கடல் வாணிகம்

முறைஅறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்

இறைஅறிந்து, உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்

பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்

நிறைபரம் சொரிந்து, வங்கம், நெடுமுதுகு ஆற்றும், நெய்தல். 19

சொற்பொருள்: வெஃகும் விரும்பும் இறை கடன், கடப்பாடு, கடமை. பொறை பாரம், சுமை. “கண்ணோட்டத்(து) உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை கண்ணோட்டம் இல்லாதவர்கள் பூமிக்கு பாரம். (குறள் 572) வங்கம் கப்பல்.

ஆட்சி செலுத்தவேண்டிய முறைமையை நன்கு அறிந்து, அறமல்லாத வழியில் ஈட்டும் பொருள் மீதான ஆசையை நீக்கி, எந்தச் சமயங்களில் கோபப்பட வேண்டுமோ அந்தச் சமயங்களில் மட்டுமே தன் கோபத்தை வெளிக்காட்டி, தன் ஆட்சியின்கீழ் வாழும் உயரிகளிடத்தில் அருள் உணர்வுடன் நடந்துகொள்ளும் அரசன் பரிபாலிக்கும் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எவ்வாறு தம் பாரங்களை எல்லாம் இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக ஓய்ந்திருப்பார்களோ அவ்வாறு,

கடல்கடந்த நாடுகளிலிருந்து (இங்கிருந்து ஏற்றுமதியான பண்டங்களுக்கு ஈடான விலையாகப் பெற்ற) பெருஞ்சுமைகளாகப் பொன்னைச் சுமந்து வந்த கப்பல்கள் கரையில் இறக்கிவைத்துவிட்டு, தம் பாரம் எல்லாம் நீங்கப்பெற்றனவாகி நெய்தல் நிலத்தில் (கடற்கரையில்) ஓய்வாக நிற்கும்.

Translation: People, living under the protection of a ruler, just and wise, who knows all the righteous ways of kingship; who has overcome the desire for earnings by unjust means; who shows anger only when he has to show it; and is sympathetic towards his subjects, live and lead a completely secure life, unburdened and at peace. So did the ships that had returned with loads of gold (in return for the exports) unloaded all the ‘burden’ of gold on the coast and rested at ease on the shores.

Elucidation: Not only did the King of Kosala rule over his land justly; but his people flourished in trade overseas.

வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

எறிதரும் அரியின் சும்மை எடுத்துவான் இட்ட போர்கள்

குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்றநெல் குவைகள் செய்வார்;

வறியவர்க்கு உதவி,மிக்க விருந்துஉண மனையின் உய்ப்பார்,

நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20

சொற்பொருள்: எறிதரும் வாளால் எறிந்து (அரியப்பட்ட). அரியின் சும்மை அறுக்கப்பட்ட நெற்போர்களின் சுமை. போத்து கடா. கொல்வார் நெற்போர்களைத் துவைத்தல்; நெல்மணிகளைப் பிரித்து எடுத்தல். பண்டி வண்டி.

உழவர்கள், தம்முடைய அரிவாள்களால் அரிந்து எடுத்த நெற்பயிரின் சுமைகளைக் குவித்து, அவற்றின்மீது சொன்னபடிச் செய்வதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட கடாக்களை விட்டு மிதித்துத் துகைக்கச் செய்து, நெல்மணிகளைப் பிரித்து அவற்றைக் குவியல் குவியலாகக் கொட்டி வைப்பார்கள். ஏழைகளுக்கு அளிப்பார்கள். பிறகு, தம்முடைய மனைகளில் விருந்தினரோடு கலந்து உண்பதற்காகப் பெரிய பெரிய பாரவண்டிகளில் நிறைத்து, அவை செல்லும் வழியெல்லாம் பூமியில் பள்ளம் விழும்படியான அந்த பாரவண்டிகளில் தம் இல்லம் நோக்கிப் பயணிப்பார்கள்.

Translation: Farmers reaped huge stacks of paddy, collected them in large heaps, made trained oxen to trod over them in order to separte the grain from hay; collect the grains in bagfuls, give away a large portion to the poor and needy and take the rest of the load home, the carts laden so full that the wheels would leave deep indentations on earth, all their way.

Elucidation:–

முந்தைய பகுதி…

அடுத்த பகுதி…

One Reply to “கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)”

  1. அன்புள்ள ஐயா,
    வணக்கம்.
    எனக்கு கம்ப ராமாயணத்தின் சுந்தர காண்டத்தின் தமிழ்ப் பாடல்களை முழுமையாக பதிவிறக்கம் செய்ய விரும்புகிறேன் உதவிடுக.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *