இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1

arun_shourieருண் ஷோரி (1941-) இந்தியாவின் தலைசிறந்த அரசியல், சமூக சிந்தனையாளர்களில் ஒருவர். உலக வங்கி மற்றும் இந்திய அரசின் திட்டக் குழுக்களில் பொருளாதார நிபுணராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும், இந்திய அரசில் மத்திய அமைச்சராகவும் (1998-2004) ,  ”டைம்ஸ் ஆப் இந்தியா” மற்றும் ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். நேர்மையும், துணிச்சலும் கொண்ட உறுதியான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளுக்காகவும்,  கூர்மையான, சமரசமற்ற ஆய்வு நோக்கிற்காகவும் பெரிதும் மதிக்கப் படுபவர்.  சமகால இந்திய அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.  கிறிஸ்தவ மிஷநரிகள், மதமாற்றங்கள், அவற்றின் சமூக விளைவுகள் பற்றி அவர் எழுதியிருக்கும்  இரண்டு முக்கியமான நூல்கள் பற்றியும், அவை உருவானதன் பின்னணி பற்றியும் எடுத்துரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது 1994ஆம் ஆண்டின்  ஜனவரி மாதம்.  இந்தியாவின் தலையாய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு  (CBCI – Catholic Bishop’s Conference of India)  தனது 50வது ஆண்டு விழாவை விமரிசையாக்க் கொண்டாடிக் கொண்டிருந்தது.  கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல்பாடுகள் குறித்து “இந்துத் தரப்பின் மதிப்பீடு” என்ற வகையில் பேசுவதற்காக அருண் ஷோரி அழைக்கப் பட்டார். ஜனவரி-5ம் தேதி புணேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.  மிஷநரிகள் பற்றிய பொதுவான விஷயங்களைத் தொட்டுச் சென்ற ஷோரியின் உரைக்குப் பின், கலந்து கொண்டவர்கள் ஷோரியை நோக்கி பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப, அவை அனைத்திற்கும்  அவர் பதிலளித்தார். பின்னர், இந்த உரையை கத்தோலிக்க சபை தனது நினைவு மலரிலும் வெளியிட்டது.

இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் பணியைப் பற்றி ஒட்டுமொத்தமாக சுயமதிப்பீடு செய்து கொள்வதும் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இருந்தது. அதன்படி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் என்ற வகையில் இது தொடர்பான இரண்டு மையமான ஆவணங்கள் அருண் ஷோரியின் பார்வைக்கு வந்தன. ”இந்தியாவில் மதப்பிரசாரப் போக்குகளும், பிரசினைகளும்: CBCI  கள ஆய்வுகளின் அடிப்படையில்”  என்ற ஆவணம் அவருக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப் பட்டது. ”இந்தியாவில் நமக்காகத் திறந்திருக்கும் வழிகள்: நமது பொதுவான தேடல்கள்”  என்ற ஆவணம் கூட்டத்தின் போது அவருக்கு வழங்கப் பட்ட்து. இந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாகப் படித்தார் அருண் ஷோரி. கிறிஸ்தவ மிஷநரிகள் பற்றிய தனது புரிதல்  முழுமையானதாக இல்லையோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்ட்து.

உடனே இது தொடர்பான பல தரவுகளையும் தேடிப் பிடித்துத் தனது ஆய்வுகளைத் தொடங்கினார். அடிப்படையான கிறிஸ்தவ இறையியல், இந்தியாவில் கிறிஸ்தவம் பரவியதன் வரலாறு,  மெக்காலே, ட்ரெவிலியன் (Trevelyan),  ரிச்சர்ட் டெம்பிள் ஆகிய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகிகளின் எழுத்துக்கள் மற்றும் உரைகள்,  வரலாற்று/மொழி அறிஞர்கள் என்ற போர்வையில் உலவிய மாக்ஸ் முல்லர், மோனியர் வில்லியம்ஸ் போன்ற் திரைமறைவு மிஷநரிகளின் படைப்புகள், 1853ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ மத்த்தைப் பரப்புவது அரசின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்தி மிஷனரிகள் கொண்டு வந்த தீர்மானம், 1930 சைமன் கமிஷன் அறிக்கை, 1956ல் இந்திய அரசு நியமித்த நியோகி கமிட்டி மிஷநரிகளின் மோசடியான மதப்பரப்பல் செயல்பாடுகள் குறித்து அளித்த அறிக்கை.. இது போன்று இந்த விஷயம் தொடர்பான முதன்மை ஆதாரங்கள் (Primary sources) அனைத்தையும் அவர் அலசி ஆராய்ந்தார்.  இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் முதலியோர் இந்துத் தரப்பிலிருந்து வைத்த உறுதியான, ஆணித்தரமான எதிர்வினைகளையும் அவர் படிக்க நேர்ந்தது.  ஆனால் இந்தத் தொடக்க கால இந்து எதிர்வினைகள் பின்னாளில் தேய்ந்து மறைந்ததோடல்லாமல், சுதந்திர இந்தியாவில்,  முற்றிலும் மாறான நிலைப்பாடுகள் ஏற்பட்டு,  கற்றறிந்த இந்துக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மிஷநரிகளின் பாஷையையே தாங்களும் உரத்துப் பேசத் தொடங்கி விட்டனர் என்பதையும் அவர் தெளிவாகக் கண்டறிந்தார்.

இந்தத் தீவிர ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு புத்தகமாக எழுதினார். “இந்தியாவில் மிஷநரிகள் – தொடரல்களும், மாறுதல்களும், குழப்பங்களும்” (Missionaries in India:  Continuities, changes, dilemmas)  என்ற அந்த நூல் 1994ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.

அவரது மகன் விக்ரமாதித்யா குறைப் பிரவசமாக, பிறப்பின் போதே cerebral palsy என்ற  மூளை பாதிப்புடன் மன வளர்ச்சி குன்றிப் பிறந்த  போது ஏற்பட்ட பேரதிர்ச்சியும்,  பதினெட்டு வருடங்களாகத் தன் அன்பு மகனுடன் வாழ்வதும், வாழ்க்கையையும், உலகத்தையும் பற்றிய ஆழமான ஆன்மீகக் கேள்விகளையும், புரிதல்களையும் தன்னுள் ஏற்படுத்தியிருப்பதாக இந்த நூலின் முன்னுரையில் ஷோரி கூறுகிறார்.  பின்னாட்களில் அமைச்சராக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில் தன் மகனைப் பற்றி ஒரு தந்தைக்கே உரிய பெருமையுடனும், ஆழ்ந்த புரிந்துணர்வுடனும், ”My son is a dominant  influence on me” என்று ஷோரி குறிப்பிடிருந்தார். ஒரு அறிவுஜீவியாக மட்டுமே பெரும்பாலும் அறியப் பட்டிருக்கும் அருண் ஷோரியின் பாச உணர்வும், மனித நேயமும் அதே அளவு ஆழம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று வரை ஒரு நம்பிக்கையாளராக அல்லாமல், ஞானவாதியாகவே (agnostic) தொடரும் அருண் ஷோரி தனது ஆன்மிகத் தேடல்களின் ஊடாக கீதை,  உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட இந்து ஞான நூல்களையும், பிற மதங்களையும், காந்தியையும் ஆழ்ந்து பயின்றார்.    இருளில் மூழ்கியதாகவும், அழிக்கப் படவேண்டியதாகவும் கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து சித்தரித்து வந்த இந்து மரபுகளின் விசாலத் தன்மையையும், அழகையும், உன்னதத்தையும் கண்டறியும் புள்ளியில் இருந்தே இந்த நூலில் அவரது ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. Premises and Consequences  என்ற நூலின் முதல் பகுதியில் ஷோரி எழுதுகிறார் –

”இந்து மரபுகள் ..  எந்த அளவிற்கு பூரணமான பிரபஞ்ச தரிசனம் சாத்தியமோ, அதைத் தொட முயன்றன. (மதம் என்கிற) இந்த மகாசமுத்திரத்தை முதன் முதலில் ருசி கண்டவை இந்து தரிசனங்களே.  மரத்தை வழிபடும் பழங்குடியினரும்,  காளையை, யானையை, சிங்கத்தை, நாகங்களை வழிபட்டு வந்தவர்களும் இங்கே  “மிருக இயல்பாளர்கள்” என்று இழித்துரைக்கப் படவில்லை.   அவர்களது வழிபாட்டுக் கூறுகளும் மரியாதையுடன்  தெய்வீகக் கணங்களில் சேர்த்துக் கொள்ளப் பட்டன… இது ஒரு யுக்தியாகவோ, தந்திரமாகவோ செய்யப் படவில்லை,  மாறாக  இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை ஆழ்ந்து  அனுபவித்தறிந்த ஆன்மிக மெய்யுணர்வின் அடிப்படையில் முழுமையான புரிதலுடன் கூடியதாகவே இருந்தது… ஒவ்வொன்றும் மாறுதலுக்கும், சீரமைப்புக்கும் உட்பட்டது தான் என்பதை இயல்பான ஒரு விஷயமாகவே  இந்து மரபு கருதியது..  இதனால் விளையும் மோதல்களை  சமன்வயப் படுத்த மிக அழகிய சொல்லாடல்களையும் அது உருவாக்கியது” – Missionaries in India,  பக்கம் 41-42

”ஆனால் இது எல்லாவற்றையுமே மிஷநரிகள் திரிபுகளுக்கு உட்படுத்தி இழித்துரைத்தனர்.  இணைப்புத் தன்மையை  பிற  மதங்களை முழுங்குவதற்கான  குயுக்தி என்று கண்டித்தனர்;   முரணியக்கமாக விரிவடைந்து செல்லும் தத்துவ விவாதங்களை  வெற்றுக் கூச்சல் என்றனர்; கட்டற்ற சுதந்திரத் தன்மையை  ”கருத்து ரீதியான பலவீனம்” என்று கூறினர். உள்முகப் பட்ட ஞானத் தேடலை ”நோயுற்ற சுய வெறுப்பு” என்று ஏளனம் செய்தனர். சத்தியத்தை நோக்கிச் செல்லப் பல வழிகள் உண்டு என்று காட்டுவதை  வழவழாத் தன்மை என்று கேலி செய்தனர். எல்லையற்ற பரம்பொருளுக்கு எல்லையற்ற பல வடிவங்கள் உண்டு என்பதை “குழப்படி” என்று முத்திரை குத்தினர்.  கருத்துச் சுதந்திரம் என்பதற்கு  “கிறிஸ்தவ மதத்தை மேன்மையானதாகச் சித்தரிப்பதும், இந்து மதத்தை இழித்துரைப்பதும்” என்று பொருள் கண்டனர்.  …. மதமாற்றம் என்பது ஒரு செயல்பாடு மட்டுமல்ல, அது தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியே என்னும் வகையில் மதப் பரவலை நிகழ்த்தினர்.   ஆனால் ஒரு சுவாமி சிரத்தானந்தர் (ஆரிய சமாஜத் துறவி) கிள்ம்பி இந்துமதம் திரும்ப விழைபவர்களுக்காக  வழிமுறைகளை உருவாக்குவதைக் கண்டு “இதற்கு இந்து மத சம்பிரதாயங்களின் படி இடமே கிடையாது”  என்று தீவிர பிரசாரம் செய்தனர்! ” – Missionaries in India,  பக்கம் 43.

God is Truth

இந்த மிஷநரிகள் ஏன் இப்படிக் கருதுகிறார்கள், பேசுகிறார்கள்? இந்து தர்மத்தின் வளமையை அவர்களால் ஏன் உணர முடிவதில்லை?  அதன் பல்வேறு அழகிய பரிமாணங்களை அவர்களுக்கு ஏன் ரசிக்கத் தோன்றுவதில்லை? மகாத்மா காந்திக்கும், போலந்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பேராசிரியரான க்ரெசன்ஸ்கி (Krzenski) என்பவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் வழியாக இதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அருண் ஷோரி. அந்த சுவாரஸ்யமான உரையாடலில் காந்தி பல முறை தனது தார்மீக, சத்திய வாதங்களை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்கிறார். ஆனால் க்ரெசன்ஸ்கி “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்” என்பதையே பலவிதமாக மறுபடி மறுபடி கூறிக் கொண்டிருக்கிறார்.  ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்ற காந்திஜியின் பிரபல மேற்கோள் இந்த உரையாடலின் போது பேராசிரியரை நோக்கி அவர் கூறியதே ஆகும். (இந்த உரையாடல் முழுமையாக Missionaries நூலில் தரப்பட்டுள்ளது).   ஷோரி எழுதுகிறார் –

“அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை..  ஏனென்றால், கிறிஸ்தவத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான கருத்தும் அதுவே தான். ”வெளிப்படுத்தப் பட்ட”,  இறுதிநாள், இறுதித் தீர்ப்பை நம்புகிற எந்த ஒரு சித்தாந்தமும் – கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி,  மார்க்சிய-லெனினிய- மாவோயிசங்களும் சரி இந்த நிலைப்பாடு கொண்டவை தான்:  ஒரே சத்தியம்,  அது அந்த ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்ட்து..  அவனால், அவன் சார்பாக அந்த ஒரே புத்தகத்தில் அது பதிவு செய்யப் பட்டு விட்டது.  அந்த ஒரே நூலின் சொற்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளக் கடினமானவை (!!!) என்பதால்,  உலகம் அனைத்தும் அவற்றை நடைமுறைப் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடைத்தரகருக்கு, ஒரு “ஏஜென்ஸி”க்கு அடிணிய வேண்டும்.. அனைத்துலகமும்  இதை ஏற்றுக் கொள்ளும்  “இறுதி நாளில்”  தான் உலகனைத்தும் ஒளி உண்டாகும்; எனவே அந்த நாளை வரச் செய்ய வேண்டியது  ஏஜென்ஸியின் இன்றியமையாத கடமையாகிறது..  அந்த “ஒளி”  “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,  தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல,  தேவனின்  ஆணைக்கும்,  அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும்  (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”)  குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது.. ஆக,  இதிலிருந்து தெளிவாகப் புலனாவது என்னவென்றால், சர்ச் மதம் மாற்றியே ஆக வேண்டும்,  மாவோ புரட்சியை ஏற்றுமதி செய்தே ஆக வேண்டும்;  கொமெய்னி இறைத்தூதரை பலவந்தமாக அறிவித்தே ஆகவேண்டும்..  அவர்கள் யாரும் செய்யாமல் தப்பிக்கவே முடியாத கடமைகள் இவை”.   (Missionaries, பக்கம் 12).

இதைத்  தொடர்ந்து, ஏஜென்ஸியின் பரவலையும், வீச்சையும் நிரூபிக்கும்  பல ஆதாரபூர்வமான விவரங்களை ஷோரி அளிக்கிறார். ”உலகளாவிய கிறிஸ்தவத்தை நடத்திச் செல்ல வருடந்தோறும் 145 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகின்றன”  (1990களில்) என்று கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றே கணக்கிடுகிறது.  1989ம் வருட விவரங்களின் படி,  உலகெங்கும் 40 லட்சம் முழுநேரப் பணியாளர்கள், 1800 கிறிஸ்தவ டிவி மற்றும் ரேடியோ சேனல்கள், சுமார் 3 லட்சம் வெளிநாட்டு மிஷநரிகள், அவர்களைப் பயிற்றுவிக்க 1000க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள்…”  என்று போகிறது இந்தப் பழைய கணக்கு.

போர்ச்சுகீசிய காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு முக்கிய இலக்காக கிறிஸ்தவ வரைபடத்தில் இருந்து வருகிறது. 1986ல் வெளிவந்த  Mission Handbook: North American Overseas  என்ற ஆவணத்தின்படி, மொத்தம் ஒரு லட்சம்  மிஷநரிகள் (பாதிரியார்கள் போதகர்கள், மதப்பிரசாரகர்கள்) அந்த ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்தனர். 1971 முதல் 1983க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் முழுநேர மிஷநரி நிறுவன அமைப்புகளின் எண்ணிக்கை 420லிருந்து 2941 ஆக உயர்ந்தது. பின்வரும் வருடங்களில் மேன்மேலும் உயர்த்தத் திட்டம் தீட்டப் பட்டிருந்தது. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவர்களே இல்லாத இடங்களில் எல்லாம் கூட ஆயிரக்கணக்கில் சர்ச்களை நடுவதற்கான  திட்டமும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.  இத்தகைய பல விவரங்களை அருண் ஷோரி அளித்துச் செல்கிறார். தற்போதைய நிலவரங்களின் படி இந்தப் புள்ளி விவரங்கள் எவ்வளவு பூதாகரமாக வளர்ந்திருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கிறிஸ்தவ பிரசாரகர்களே ‘எண்ணிக்கை விளையாட்டு’ (game of numbers)  என்று எரிச்சலுடனும், சலிப்புடனும் குறிப்பிடும் இந்த வைரஸ்தனமான பரவல் எங்கெங்கெங்கு, எப்படியெல்லாம் விரியும் என்பதற்கு மிஷநரிகள் எந்தக் கட்டுப் பாடும் வைத்துக் கொள்ளவில்லை..  கிடைக்கக் கிடைக்க லாபம் என்ற கண்ணோட்டம் தான். வட அமெரிக்காவிலும்,  தென் அமெரிக்காலும், ஆசியாவிலும் மதப் பரவலுக்காக எந்த விதமான வன்முறையையும், பலவந்தத்தையும் பிரயோகிக்க மிஷநரிகள் தயங்கவில்லை என்பதை நிரூபிக்க மலை மலையாக ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன.  பஞ்சம் மற்றும் தட்டுப் பாடுகளின் போது,  மனந்திரும்புவர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கிறது என்றும் இவை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றன.

பார்க்க: ஆசியாவின்  காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷநரிகளும்

1823ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட “இந்தியாவின் மிஷன்கள்” (India and its Missions)  என்ற நூலில் உள்ள “பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்” (Spiritual Advantages of Famine and Cholera)  என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை ஷோரி எடுத்துக் காட்டுகிறார்.  இதில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்,

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது.  போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது.  நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை “வற்புறுத்தி அழைத்து வர”  (புனித லூக்காவின் சுவிசேஷம், 14.23) வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”  (Missionaries, பக்கம் 15).

நிறுவன கிறிஸ்தவத்தின் ஊடுருவல் யுக்திகள் சாதாரணமானவை அல்ல. எதிரெதிர் சக்திகள் என்று எண்ணப் பட்டவை கூட அதன் பரவலுக்கான மறைமுக உதவிகளாகவே இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை  ”வேலைப் பங்கீடு” (Division of Labour)  என்ற நூலின் இரண்டாம் பகுதியில் ஷோரி விவரிக்கிறார்.

(தொடரும்)

6 Replies to “இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1”

 1. famine or cholera or tsunami or suviseshams or lukas are not required now in TN & UP. On behalf of these disasters and everchanging verses, the present CM of TN & the Central Govt. ruling the Delhi and many parts of UP are doing the works of these. Who is Dinakaran?. What is the need&purpose to name a road after him? What is the great thing or valuable achievement he did for social reforms in TN or India? Why is the billboard of Antonio Maino (ada athaanga namma sonia)… is erected in the Golden Quadritille roads of UP?. Like Urudu, soon Latin will have much status and scholarship,merits in TN so as to encourage Missionary activities and to establish Vatican Church and Pope’s pedestal in TN, as Vatican is slowly swalloed by Mosques and Imams.

  aduthavangala paavigale paavigalenu koovi koovi, kadasila ivanungale paavam parithapamaaga nirka pogiraargal vatican il. ivargal kaatum baarathathil kaatum visuvasathai Italy,Rome,Vatican il kaatinaal Pope um, europe il nilavum konja nanja christuvamavathu minjume?

 2. Dear TAMIL HINDU Team,
  Thanks for this article.
  Our salutes to Jatayu.
  Such insightful & indepth articles are the eye-openers for the present time.
  Keep sharing such opinion on the Facts around us.
  The generations ahead of us will benefit.
  God Bless & Regards,
  Srinivasan. V.

 3. இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 4. JOHNSON

  //நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள்//

  சரி ஒத்துக்கறேன்!!! அப்போது மூளை உள்ளவர்கள், சிந்திக்கு திறன் படைத்தவர்கள் யார்
  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *