பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

பாரதியின் சாக்தம் பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

தொடர்ச்சி…

shakthi

 

வெறுமனே ஒரு தேசிய உற்சாகத்தை ஊட்டுவதற்காகப் பாடவில்லை பாரதி என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியாதோர் இனி வரும் அவரது ஆங்கிலக் கட்டுரையின் பகுதியைக் கண்டு தெளியலாம்.

bharat_mata_by_abanindranathஇந்த ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பே மிக வெளிப்படையானது. ‘Bharathi Mata or The Awakened National Consciousness of India’. திரு.கோபிநாத் ராவ் என்பவர் எழுதிய கலை நுணுக்கம் மிக்க பாரத தேவியின் ஆவிர்பாவம் பற்றிய சித்திரத்தைக் குறித்து பாரதி எழுதிய கருத்துகள் இவை. இந்தச் சித்திரமும், அதை ஒட்டிய விளக்கக் குறிப்புகளும் விவேக சிந்தாமணி பப்ளிஷிங் கமிட்டி பிரசுரித்தவை. அதில் யோகி ஒருவர் (நாட்டின் சுதேசியத் தவத்தினரைக் குறிப்பது) மூட்டிய செந்தீயினின்றும் என்ன எழுகிறது என்பதையும் அந்தத் தீ யாது என்பதையும் பாரதியின் சொற்களிலேயே காணலாம்: (– காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் 3, பக்-16, Bala Bharata January 1908.)

Out of that Fire of Truth or Consciousness — Chit–agni- kindled and worshipped by the Yogin (the spiritual Man of indomitable energy and irrepressible mental powers), rises up first the Primary form, and then the secondary or Vimarsa form, of Devi the Mother the Goddess of Speech, who as the Ancient Mother of this Vedic Land, and again as the daughter of the mountain King Himavan, made this land of Bharatavarsha identical with herself, the Kshetra of Her Lord and Husband, the Kshetrajna. She is represented in Her human form divine in the turiya or awakened state of consciousness.

பாரதியார் பாரத மாதாவை லலிதா ஸஹஸ்ர நாமாவளியின் பெயரை இட்டே அழைக்கிறார்.

‘The Queen of Ind, “Sri Maharajni”, who conscious of her own inner strength, calmly surveys, the situations making herself ready as “Turiyambal” to teach the word of God, “Tattvamasi” to the nations of the World.”

தாமும் இந்தப் படத்தைப் பார்த்த பின்பே பொங்கிய ஊக்கத்தில் பாரத மாதாவை அம்பாளாகவே சித்திரித்தும், பாரத நாட்டின் அரும்புதல்வர்கள் ஆற்றிய பண்டைய சாகசங்கள் அனைத்தும் அந்தச் சக்தியின் அருள் வெளிப்படாகவே அமைத்துப் பல பாடல்கள் பாடியிருப்பதாகவும் பாரதி தாமே இந்தக் கட்டுரையின் இறுதியில் கூறுகிறார்:

‘The Worship of Bharati Mata as Turiyambal: We have also perused with pleasure a true interpretation of the Picture in Ballad form in Tamil. It answers to the description elsewhere given of the National ideal being “sung in story linked with old traditions, and personified in national heroes of the past and lived in the present before the eyes of the common people by enthusiasts of the ascetic type”‘

painting-from-bandemataram-album-by-shiva-narayan-mishra-1லலிதா ஸஹஸ்ர நாமத்தின் ‘சித் அக்னி குண்ட ஸம்பூதா’ என்ற கருத்து பாரத தேவியின் ஆவிர்பாவம், சுதேசிய சைதன்யம் ஆகிய அக்னியினின்றும் எழுவதாகக் காணும் காட்சியில் ஊடு கலந்திருக்கக் காணலாம். உபாதிகள் அற்ற ஸம்வித் (பேருணர்வு) ஆக இருக்கும் பிரகாச நிலையையும், விமரிச ரூபமான சக்தி நிலையையும் பாரத தேவிக்குப் பொருத்திப் பார்க்கும் கருத்தாடல் எவ்வளவு வேரூன்றியிருந்தது பாரதியின் மனத்தில் என்பதும் இங்கு புலனாகிறது.

விவேகானந்தரின் மதமே அவருடைய தேச பக்திதானோ என்று நமக்கு எழும் ஐயம், அவருடைய முதல் சொற்பொழிவைச் சிகாகோ சர்வ மதப்பேரவையில் கேட்ட ஒருவர் யார் என்ன என்று தாம் அறிந்திராத அந்த விநோத மனிதரின் பேச்சில் தம்மை ஆகர்ஷித்த விஷயம் யாது என்று எழுதி வைத்த டைரிக்குறிப்பைப் பற்றி நிவேதிதா குறிப்பிடும்போது உறுதிப்படுகிறது.

“In one of the diaries written by one who was present there, we find what struck the writer most in that “orgie of religious dissipation was the strange man’s passion for his own people” His speech was one about Hindu belief and whatever he said and taught was Hindu, essentially Hindu.” (– The Complete Works, Nivedita, Vol 1,April 2006, pp388)

We are the servants of that God, who by the ignorant is called man — இவ்வாறு சொன்னவர்தாம் விவேகானந்தர். அதுவும் இந்தியாவே தம் அனைத்தும் என்றும் இந்தியாவின் புழுதி தமக்குப் புனிதத்திலும் புனிதமானது என்றும் இறுமாந்திருந்தவர் ஹிந்துவின் காலக் குரலாக ஒலித்ததில் ஆச்சரியமில்லை. ஆனாலும் சாக்தத்தையே இன்னும் ஒரு நிலை மேலே கொண்டு போய், பாரத மாதா என்பதையே சக்தியின் அவதாரமாகக் காணவும் காட்டவும் செய்தார் விவேகானந்தர் என்றால், அந்த மூலக் குறிப்பை நிவேதிதா வழி பெற்ற பாரதி தமது மனித குலத்திற்கான புதிய தர்சனத்தின் ஆதார பீடம் ஆக்குகின்ற விஸ்தாரம் நாம் இன்னும் பாரதியிடமிருந்து பயன்கொள்ளாமலேயே விட்டுவைத்திருக்கும் கருத்துக் கொடையாக இருக்கிறது.

பேயவள் காண் எங்கள் அன்னை — பெரும்
பித்துடையள் எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை

என்று பாரதி பாடியது பாரத நாட்டைத்தான், இல்லை பராசக்தியைத்தான்; இல்லை பாரத தேவியைத்தான்.

painting-from-bandemataram-album-by-shiva-narayan-mishra-2கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம். சக்தி வழிபாடு முவ்விதமானது — மந்திரம், யந்திரம், தந்திரம் என. யந்திரத்தில் ஆரூடமாக வழிபடும் சக்தியின் வழிபாடு மரபு ஒப்பிய வழிபாடுதான் என்றால் பாரத பூமி என்னும் உயிர் ததும்பும் பிரத்யட்சமான மஹா யந்திரத்தில் அந்த மூல மஹா சக்தியை ஆவாஹனம் செய்து, சுதேசிய உணர்வின் கனத்தில் கனன்றெழும் அந்த சித் அக்னி குண்ட ஸம்பூதாவை பாரதாம்பிகையாக வணங்குவது எவ்வளவு பொருத்தமுடையது!. இந்தக் காட்சியை ஒரு ஹிந்துதான் காணமுடியும்; ஒரு சாக்தன்தான் துணிந்து சொல்ல முடியும். ஏனெனில் ஆரம்ப முதற்கொண்டே சாக்தம் பிரதான மத ஊக்கங்களை ஒருங்கிணைப்பதில் முனைப்பு கொண்ட இயக்கமாக அறியப்பட்டு வந்திருக்கின்றது. நிவேதிதா ஓரிடத்தில் சாக்தத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, “The impulse of Devi-worship seems to have been synthetizing” (– A Pilgrim’s Diary, pp447) என்று கூறுகிறார்.

பாரத மாதா, பாரதாம்பிகை என்ற நவசக்தி மார்க்கத்தின் விரிவான பாரதியின் புதிய பார்வை சுதேசிய உணர்வை ஆன்மிகமாக உணர்ச்சிகளும் வழிபடு மனத் தோய்வும் மிக்க தர்சனமாகக் காட்டுகிறது. இதில் முதன்முன்னம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது பாரதி கருதிய ஆன்மிகம் யாது என்பதே. இந்த அடிப்படை நன்கு புரிந்தால்தான் பாரதியின் பல பாடல்களுக்கும் கருத்துகளுக்கும் பாரதி கருதிய பொருள் யாது என்பதை நாம் உணர முடியும்.

 
Nationalism and Spirituality என்ற கட்டுரையில் பாரதியார் தாம் கருதும் ஆன்மிகமாவது யாது எனக் கூறுகிறார்:

“By spirituality, it is needless to explain, we do not mean any mystic superstition or anything connected with the spiritistic faddisms of the drawing rooms of modern Europe and America. By spirituality, we mean, the attitude of the human mind which believes in the intrinsic sacredness of every virtuous act and thought in the Divine meaning of every human event, in the ultimate unity of all, and in the wisdom of rightly performing every duty without caring for the material results. By spirituality we mean the recognition of One spiritual basis for all the varied phenomena in the physical, mental and moral worlds.”
 
(– Bala Bharata November 1907, காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் 2, பக் 1143)

 

இந்த விளக்கத்தை நினைவில் கொண்டால்தான் பாரதி, ‘சக்தி தர்மம்’ என்ற கட்டுரையில் சக்தி வழிபாடு என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கும் பகுதி புரியும்.

“சுத்த அறிவே சிவம்; வாஸ்தவந்தான். ஆனால் இந்த உலகம் என்னது? இதுவும் சிவமே. …..

painting-from-bandemataram-album-by-shiva-narayan-mishra-4தெய்வம் உண்டு என்பதை எப்படி அறிந்தோம்? உலகமிருப்பதாலே அறிந்தோம். தெய்வம் உயிர்; உலகம் அதன் வடிவம். உலகமும் தெய்வம்தான். உலகத்து செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே. உலகத்தின் நடைகளிலும் விதிகளிலும் தெய்வத்தை உணரவேண்டும். இந்த வழியறியாதோர் உலகத்துக்குப் பயப்படுகிறார்கள்….

இந்த உலகம் நாராயணனுடைய லீலை. அவன் தனது சக்தியுடன் விளையாடும் விளையாட்டு. சக்தி மார்க்கத்தில் இவ்வுலகத்து ஞானம் அதிகப்பட வேண்டும். பராசக்தி தெய்வம். ஆத்மஞானத்தைக் காட்டும் நூல்கள் அவளுடைய வேதம். லௌகிக சாஸ்திரமும் அவளுடைய வேதந்தான். பௌதிக சாஸ்திரம் (ஸயன்ஸ்) சக்தி தர்மத்துக்கு முதலாவது வேதம்; வேதாரம்பம். ….

பராசக்தியை முதலாவது இவ் வுலகத்திலே கண்டு வணங்குதல் வேண்டும். நக்ஷத்திரங்கள் எல்லாம் அவளுடைய விழிகள். தீயும் காற்றும் அவளுடைய வேகம். மண் அவளுடைய திருமேனி. இருப்பதெல்லாம் அவளுடைய கலைதான்.”

(– காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் 8, பக்-503)

இத்தகைய பிரபஞ்சம் தழுவிய பார்வையில் சுதேசியம் என்பதற்கோ, ஒரு நாடு என்பதற்கோ என்ன தேவை? அல்லது என்ன பொருத்தம்?

இந்த இடத்தில்தான் நாம் பாரதி நிவேதிதா என்னும் பள்ளியில் பயின்றவர் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விவேகானந்தர்–நிவேதிதா ஆகியோரின் பார்வையே என்றும் தனித்த குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையோ அல்லது எல்லைகள் அனைத்தையும் இறந்ததுவாய் விளங்கும் மீப்பெரு பொதுமையையோ ஒன்றிற்காக ஒன்றைக் காவு கொடுக்காமல், முழுமையான, துல்லியம் நிறைந்த, பொருள் பொதிந்த அணுகுமுறையின் பாற்பட்டதாகும். ‘மனிதன்’ என்று மக்களால் அழைக்கப்படும் அந்தத் தெய்வத்தின் தொண்டர் யாம் — என்று சொன்னவர்தாம் ‘நான் ஹிந்து என்பதில் மட்டில்லா பெருமிதம் கொள்கிறேன்’ என்று கூறியதும்.

மனிதன் என்பவனே மண்ணையும் விண்ணையும் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு விநோத திருவிக்கிரம அவதாரம். அவன் மண்ணிலிருந்து காலை எடுத்துவிட்டால் நடைமுறையில் பொருள் இல்லாத வெற்று ஆகாய சஞ்சாரியாக ஆகிவிடுகிறான். விண்ணை மறுத்து மண்ணூடு புதைந்துவிட்டால் வந்த நோக்கத்தைப் பாழ்படுத்திய வெறும் ஜந்துவாகப் போய்விடுகிறான். உங்கள் எண்ணமும், பேச்சும் அண்ட பகிரண்டம் தழீஇப் பரந்ததுவாய் இருப்பினும், அந்தப் பேச்சு நிகழும் இடம் அனைத்துவித எல்லைகள், தடுப்புகள், வேலிகள் நிறைந்த இடத்தில்தான் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பதாக பாவனை காட்டிச் சுய முரணில் சிக்கிக்கொள்வதைவிட உள்ளபடி ஒப்பி உயர்விற்கு முனைவது மேல்.

நிவேதிதாவின் சில கருத்துகள் ஈண்டு பொருத்தமுடையன:

“The essential condition for the development of a strong civic spirit lies in the maintenance of the communal life and consciousness..” (Complete Works Nivedita, pp 230)

“What is required for the manifestation of a strong conscious national life? Is love of place, pride of birth, or confidence in past culture all sufficient? Neither any, nor yet all of these can ever be enough. In addition there must be the irresistible mind of co-ordination, the instinct of cooperation, the tight-knit discipline of a great brotherhood.” (Complete Works Nivedita, pp 257)

மனிதன் என்ற முழுமைக்குள் எத்தனை நுணுக்கமான புரிகள். ஒவ்வொரு நுண்புரியும் தனக்கென ஒரு பிரத்யேகமான மேதைத் தன்மையை செறிவுபடக் கொள்வதற்குள் எத்தனை நூற்றாண்டுகள், இயக்கங்கள், பிரதி இயக்கங்கள் கடந்து, எழுந்து, முயங்கி இந்த நுண்புரியை அமைய விட்டிருக்கிறது! எகிப்தியம், கிரேக்கம், ஃபொனீஷியம், க்ரேத்தெம்… எனப் பலவாறாய்.

“These miracles of human unification are the work of Place. Man only begins by making his home. His home ends by remaking him. Amongst all the circumstances that go to create that heritage which is to be the oppurtunity of a people, there is none so determining, so welding, so shaping in its influence, as the factor of the land to which their children shall be native. Spiritually, man is the son of God, but materially, he is the nursling of Earth. Not without reason do we call ourselves children of the soil.” (Complete Works Nivedita pp 263)

“The duty of all who understand the Indian situation today, then, is to realise those eternal verities on which the cry for nationality is based. If we are strong and clear ourselves, in the essential idea, none will be able to resist the love of the Motherland in us. We shall ourselves stand as its embodiment and appeal.” (Complete Works Nivedita, pp288)

பாரதியின் ‘ஸ்வராஜ்யம்‘ என்பதில் ‘ஸ்வ’ என்பதற்குத் தரும் விளக்கம் கவனத்திற்குரியது.

painting-from-bandemataram-album-by-shiva-narayan-mishra-5“ஸ்வராஜ்யம் வேண்டுமென்று நாம் கேட்கிறோம். இதிலே ‘ஸ்வ’ என்பது யாரைக் குறிக்கிறது?….

‘ஸ்வ’ என்றால் ‘தனது’ என்று அர்த்தமாகிறது. யாருடையது? இந்தக் கேள்விக்கு நாம் மறுமொழி சொல்வதென்ன வென்றால், பாரத தேவியுடையது. பாரத தேவி தன்னைத் தானே பரிபாலனம் செய்து கொள்வது ஸ்வராஜ்யம் ஆகும்.” (– காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் 2, பக் 692)

ஓர் இடம் என்பதை மையம் கொண்டு நிலவி வரும் நீண்ட நெடுங்கால சமுதாய அனுபவங்களும், வாழ்ச்சியும், தாழ்ச்சியும் வரலாற்றுணர்வில் வந்து செறியும் போது அங்கு பண்பாட்டு ரீதியான சுய போதத்தில் தேசியம் பிறக்கிறது. தாம் வாழ்ந்துவரும் மண், நதிக்கரை, தம் நிலத்து மக்கள், மரம், பறவை, விலங்கு, மலை, என அனைத்தும் மனித குலத்தால் தன் காவிய வாழ்வின் முகாந்தரங்களாகப் பேணப்படுகின்றன.

காவியம் அரசனைப் பாடும் பொழுதும் நிருபனுக்குரிய பத்து அங்கங்களைப் பாடுதலை இலக்கணமாகக் கொண்டிருக்கிறது.

“நேரிசை வெண்பாவால் நிருபன் பெறும்
தசாங்கத்தினைச் சொலல் தசாங்கப் பத்தாம்”
(– இலக்கண விளக்கம் 840)

என்று தசாங்கம் என்ற பிரபந்த வகையைச் சொல்கிறது இலக்கண விளக்கம்.

பாரதியார் பாரத மாதேவிக்கு உரியதான பத்து அங்கங்களை ‘பாரத தேவியின் திருத்தசாங்கம்’ என்று பாடுகிறார் நேரிசை வெண்பாவில். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்னும் பத்து அங்கங்களைப் பாடுகிறார். அதில் நாடு என்று பாடுங்கால், ‘வானாடு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி ஈறாகும் ஆரிய நாடென்றே அறி’ என்று கூறுகிறார்.

‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’ என்பது காரிக்கிழார் பாடும் புறம்.

தேச பக்தியை மதமாகவே பாடுகின்ற பாரதியார் பாரத தேசத்தைக் காளியின் உருவமாகவே கண்டு போற்றிப் பாடியது நிவேதிதாவின் எழுத்துகளினால் ஏற்பட்ட விளக்கம் காரணமாக என்பது உண்மையானாலும் அது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அரசியல், முடியாட்சியோ, குடியாட்சியோ மனிதன், அவன் இக உலக நன்மைகளை அறிவைக்கொண்டும், நெடிய அனுபவத்தைக் கொண்டும், மனித குல வழிவழியான முன்னோர்களின் நூல்களைக் கொண்டும் நடத்தக் கூடியதுதானே. அதை ஏன் ஒரு மதமாக ஆக்கி, சாக்தத்தின் புதிய உருவமைப்பாகச் செய்ய வேண்டும்?

விவேகானந்தரும், நிவேதிதாவும் செய்தால் அதற்குக் காரணம் அவர்களின் வழி ஆன்மிகம். இலட்சியம் ஜீவனின் முக்தி. அந்த ஜீவனை வாழ்வில் சூழல்களாகச் சூழக்கூடிய அனைத்தையும் மோக்ஷ சாஸ்திரத்தின் மூலப் படிவத்தில் ஆக்கிப் புதிய தர்சனங்கள் படைத்தல் அவர்களுடைய இயல்பான பணி. ஆனால் பாரதி என்னும் கவிஞர், தமிழ் இலக்கிய யுகச் சிற்பி, உரைநடை செழிக்கச் செய்த பத்திரிகை ஆசிரியர், ஏன் தம் பாடல்கள், எழுத்து, இதழ்ப்பணி ஆகியவற்றில் எல்லாம் செம்பாதியை இந்தப் புதிய தர்சனத்தை விளக்க ஈடுபடுத்தினார் என்பது கேள்வி. பாரதியை bharathyஓர் இலக்கிய கர்த்தராக மட்டுமே வைத்து நோக்கும் பொழுது இந்தக் கேள்வி தவிர்க்க இயலாதது. ஆனால் பாரதியின் அடிப்படை ஊக்கம் ஆன்மிகத் தேட்டம் என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டால்தான் அவருடைய எழுத்து அனைத்தும் தம்முள் ஒன்றிற்கொன்று ஒத்திசைவனவாய், ஒன்றை ஒன்று விளக்கி நிற்பனவாய் பிரிகதிர்ப் படாமல் அர்த்தப்படுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் பாரதியின் எழுத்தில் இனி எக்காலத்திலுமே இடைச் செருகல் ஏற்படுவது கடினம் என்றபடிதான் அவருடைய மன இயக்கத்தின் ஒருங்கிணைப்பு திகழ்கிறது. அவருடைய பாடல்களை உரைநடை விளக்குகிறது; உரைநடையைப் பாடல்கள் அடிக்கோடிடுகின்றன. இரண்டின் உட்கருத்துகளாய்த் திகழும் சிலவற்றைப் பெருக விளக்கிய படைப்புகளாய் அவருடைய சாத்திர, வேத விசாரங்கள் திகழ்கின்றன. அவருடைய எழுத்துகளில் தேசபக்தி, தெய்வபக்தி, சமுதாயம், பல்சுவை என்பதெல்லாம் மேலெழுந்தவாரியாகப் பார்க்குமிடத்து வசதிகளாக இருப்பினும், அவருடைய அகத்தின் இயக்கத்தை அவர்தம் நூற்தொகுதி முழுமையும் கொண்டு ஆய்ந்துணர்ந்தால் மிகவும் உயிர்த்திகழ்ச்சி உடைய ஒரு மனத்தின் இடையீடற்ற இயங்கு வடிவங்களாகவே நமக்குப் புலனாகின்றன.

“காலமாம் வனத்தில் அண்டக் கோலமா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரம் இட்டுலவும் ஒரு வண்டு” என்று அவர் பாடும் போது அவர் மனத்தில் இருக்கும் காளி சக்தி என்ற புரிதல் யாது என்பதற்கு அவருடைய உரைநடை மிகத் துல்லியமாக விளக்கம் தருகிறது.

“வந்தே மாதரம் என்போம்; எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்; ஜாதி மதங்களைப் பாரோம்; உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியர் ஆயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே” என்று அவர் பாடுவதை நெடுக அவருடைய உரைநடையில் விளக்கி விவாதித்திருப்பதைக் காணலாம். அவருடைய விளக்கங்களின் மூல சூத்திரங்கள் நிவேதிதாவின் கருத்துக்கொடைகளில் திகழ்வன.

கிட்டத்தட்ட நிவேதிதாவின் சம காலத்தவராகவே வாழ்கிறார் பாரதி. நிவேதிதா மட்டுமன்று; அரவிந்தர், காந்தி என்று பல்லோர் பாலும் திகழும் சிறப்பு அம்சங்களைச் சிறிதும் கால இழுபறியின்றி உடனுக்குடன் உள்வாங்கிச் செரித்து, அவற்றைச் செவ்வனே தமிழில் தமிழனுக்குத் தரமுடிகிறது பாரதியால் என்னும் போது, அதுவும் 39 அகவை நிரம்பாதவர் என்னும் பொழுது வியப்புதான் மேலிடுகிறது. அதோடும் நில்லாது தம்முடைய கொடையாக அவற்றின் மேல் சிறப்பான ஆக்கத்தையும் தருகிறார் ஆன்மிகத் தேட்டம் செறிந்த அணுகுமுறையைத் தம் பார்வையாகக் கொண்ட பாரதி.

தமது ஆன்மிகத்தை உலகத்தைத் துறந்த யோக சாதனையாகக் கொள்ளாமல், வையத்தில் வாழ்வாங்கு வாழ்தலையும், குடும்பம், தெரு, ஊர், நாடு எனத் தான் வாழும் வையப் பரப்பை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் காணுதலையும், அந்த அடிப்படையில் அனைத்துச் சூழ்நிலைகளிலும் இயங்குவதையும் தாம் கருதும் வேத வாழ்வாகவும், ஆன்மிக நெறியாகவும், நவசக்தி மார்க்கமாகவும் பல இடங்களில் சொல்லிச் செல்கிறார் பாரதி. தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது. அவ்வாறான விசாரம், படிப்பு, ஆய்வு என்ற வாழ்க்கைதான் தமக்குப் பிடித்தது என்றும் கூறுகிற பாரதி தம்முடைய ஏக்கத்தை

“சாத்திர நாட்டமும், தருக்கமும், கவிதையில்
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு”

என்ற கண்ணன் பாட்டின் வரிகளில் வெளிப்படுத்துகிறார். ஆயினும் அவருடைய நூற்தொகுதிகளில் பாடல்கள், உரைநடை, இதழ்களில் கட்டுரைகள், சிறு விளக்கங்கள் என்றபடி பரவிக்கிடக்கும் அவரது எழுத்துகளில் நாம் திரட்டக் கூடிய அவரது புதிய சாக்த தர்சனம் மிக்க கருத்துகளை நாம் ஒரு கோவைபட பார்த்தால் அவரது நெறி தெளிவுபடுகிறது. அந்த நெறி தனி மனிதரின் உள்ளிருந்து தொடங்கி, நண்பர், குடும்பம், என்று நாடு தழுவிய நெறியாக துலங்குகிறது. ஆனால் குறியீடுகள் அனைத்தையும் அவற்றின் புறத்தோற்றமாகக் காணாமல் அவற்றின் உட்பொருளிலேயே கொள்ளுதல் அவரது நெறிக்கான அடிப்படையாகும். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதி என்றும் தம்மை சிந்தனையாளராகப் பதிவு செய்துகொள்கிறார். பாடல், கற்பனை, புராணக் குறியீடுகள், பக்திக்கான மன வடிவங்கள், இலக்கிய ரசங்கள் என்று பல சொற்பொருள் தொகைகள் பயிலும் கலவையான மொழி அவரது சிந்தனை மொழி. அந்த மொழியின் இலக்கணம் பரிச்சயமாகிவிட்டதென்றால் பாரதியின் மன இயக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

பாரதியின் பராசக்தி பற்றிய வார்த்தைகள் ஒன்றிரண்டு சொல்லி இந்தத் தொடரை இப்பொழுதைக்கு நிறைவு செய்வோம்.

“ஆத்மா உணர்வு; சக்தி செய்கை. உலகம் முழுதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ் வுலகத்தை ஆளுகின்றது. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி என்று சொல்லும்.
……………..
சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங் கொடுப்பதில்லை.

பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால் சாக்த மதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி ‘லோக மாதா’ என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “எனது தாய் காளி” என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் “லோக மாதா” இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம்.
……………
இந்த மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இஹலோகத்திலிருந்து தேவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்க முடையது.”

“பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலை யில்லை; உண்மை யொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை; அகத்திலும் இருக்கிறது.
…………………
இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையிலே இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வ மதியாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது.”

painting-from-bandemataram-album-by-shiva-narayan-mishra-3“இமய மலையிலே பார்வதியாகவும், தெற்கு முனையிலே கன்யாகுமாரியாகவும் திருக்கோயில் கொண்டவளை – மஹாலக்ஷ்மி தேவியை, அறிவை, சக்தியை ப்ரதிஷ்டை செய்து பூஜிப்போம். ஓம்.”

“உமாதேவியானவள் எல்லா அண்டகோடிகளையும் ஈன்று வளர்த்த போதிலும், அநாதி காலம் தொட்டுத் தான் வாழ்பவளான போதிலும், அவள் இதுவரை நரை, திரை, மூப்பு, பிணி என்பன யாவுமில்லாது நித்ய கன்னிகையாக விளங்குகிறாளென்று சைவர்கள் கூறுவதுண்டு. சைவர்கள் உமாதேவியிடம் எத்தனை பக்தி வைத்திருக்கிறார்களோ, அத்தனை பக்தியையும், அன்பையும் எமது தாய்ப்பெருந் தேசமாகிய பாரத கண்டத் திருமாதின்மீது செலுத்துகின்ற நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.”

(–காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் — 10 தொகுதிகள், திரு சீனிவிச்வநாதன்.)

 
“வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாமெங்கள் தாய் — அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தம்
சீருறு வாளெங்கள் தாய்”

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்;
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே,
வியப்பிது காண்! பள்ளி எழுந்தரு ளாயே!

(– பாரதியார் கவிதைகள்)

[நிறைவு]

5 Replies to “பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]”

  1. Pingback: Indli.com
  2. அன்புள்ள மோகனரங்கன்,

    மிகத்தரமான தொகுப்பை வழங்கியுள்ளீர்கள்.பாரதி காளியை உபாசித்து பாடிய பாடல்கள் மிக பிரபலமானவை. எங்கெங்கும் சக்தியை தரிசித்தவர் அவர். பாரதியின் சக்தி தரிசனம் ஐந்து பகுதிகளும் மிக நன்றாக உள்ளன. நன்றிகள் பல உரித்தாகுக.

  3. பாரதி ஒரு சக்தி உபாசகன் தான் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவன் காளியையும், பராசக்தியையும் வழிபட்டவன்தான். அவன் ஒரு உணர்ச்சிப் பிழம்பான ஆத்திகன். ஆனால் ஷண்மத வழிபாடு முடிந்து ‘ஆத்திகம்’ என்பதை மட்டும் காப்பாற்றினால் போதும் என்ற நிலை ஏற்பட்டு பல காலம் ஆயிற்று. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வழிபாட்டாளர்கள் தங்களை சைவன், வைணவன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கூட ஆத்திகம், நாத்திகம் இவைதான் இன்றைய சமுதாய நிலை. அதற்குள் ஆழ்ந்து நோக்கி பல மத ஸ்தாபனங்கள், வழிபாட்டு முறைகள், விளக்கங்கள் இவையெல்லாம் விவாதங்களுக்கு பயன்படலாம். அதைப் பற்றி கருத்துக் கூற வரவில்லை. ஆனால் “பாரத மாதா” என்ற உருவகம் ஏன் ஏற்பட்டது என்பதில் எனக்கு ஒரு கருத்து உண்டு. பாரத நாட்டு சுதந்திரத்துக்காக முதலில் படித்த மக்கள் மத்தியில்தான் விழிப்புணர்வு எற்பட்ட து, அதிலும் குறிப்பாக வங்கத்தில் தொடங்கியது. பின்னர் படித்த அனைவரும் அதில் ஈடுபட்டார்கள். சுதந்திரப் போர் வெகுகாலம் வரையில், ஏன் 1942 வரை கூட வெகு ஜன இயக்கமாக ஆகமுடியவில்லை. ஏன்? படிக்காத பாமர மக்கள் மத்தியில் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன எனும் நிலை இருந்தது. இந்த பாரத புண்ணிய பூமி நமக்குச் சொந்தமானது என்பது கூட தெரியாமல் வெள்ளைக்காரன் தயவில் நாம் இந்த பூமியில் வாழ்கிறோம் என பாமரர் நினைத்த காரணத்தால்தான் பாரதி “நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்” என்கிறான். வங்கத்தின் இலக்கியத்தில் எழுந்த “சந்நியாசிகள் கலவரம்” நூலில் வந்த வந்தே மாதரம் எனும் மந்திரச் சொல் சரியான மார்க்கமாகப் பட்டது. கிராமங்களில், காடனை, மாடனை, காளியை, மாரியை, வேடனை வழிபட பலிகளைக் கொடுத்துத் தியாகம் செய்ய விரும்பிய மக்கள், நாட்டு விடுதலையில் அக்கறை காட்டாத சூழ்நிலையில், அவர்களுக்கு ஓர் புதிய கடவுளை படைத்தார்கள். அதுதான் “பாரத மாதா”. அவள் சர்வாலங்கார பூஷிதை. அத்தனை ஆபரணங்களைப் போட்டுக் கொண்டு, கை கால்களில் விலங்குகளால் பூட்டப்பட்டிருந்தாள். இப்படி ஒரு படம். புதுச்சேரியில் பாரதியும் வ.வே.சு.ஐயரும் பாரத மாதாவுக்கு ஒரு சிலை செய்ய விரும்பிய பொது, ஐயர் அவளுக்கு ஆபரணங்கள் எதையும் அணிவிக்கவில்லை. பாரதி சொன்னார் அவளுக்கு என்ன குறை, எல்லா ஆபரணங்களையும் போட்டு திவ்யமாக அலங்கரியுங்கள் என்றார். அப்படி பாரத நாட்டை ஓர் தெய்வமாக உருவகப் படுத்தி அவள் சிறைப்பட்டுக் கிடக்கிறாள், அவளை விடுவிக்க எழுக என்று பாரதி குரல் கொடுத்தார். விளைவு, பாமரனும், படிக்காதவனும் இந்த தேசத்தைக் கடவுளாகக் கருதி விடுதலைப் போரில் ஈடுபடத் தொடங்கினான். இதைத் தவிர பாரத மாதா உருவகத்துக்கு ஆன்மிகக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி சாக்தன் தான். ஆனால் அவன் படைத்த பாரத மாதா பாமரனைத் தட்டி எழுப்ப உதவிய ஆயுதம் மட்டுமே என்பது எனது கருத்து.

  4. // இதைத் தவிர பாரத மாதா உருவகத்துக்கு ஆன்மிகக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி சாக்தன் தான். ஆனால் அவன் படைத்த பாரத மாதா பாமரனைத் தட்டி எழுப்ப உதவிய ஆயுதம் மட்டுமே என்பது எனது கருத்து. //

    அன்புள்ள கோபாலன் அவர்களுக்கு,

    சிந்தனைக்குரியதொரு மாற்றுக் கருத்து.

    ஆனால், பாரதமாதா என்ற கருத்தாக்கம் ஆழ்ந்த கலாசார, வரலாற்றுப் பின்னணி கொண்டது. வேதத்திலேயே பூமியையும், நதிகளையும் பெண்ணாக, தாயாக உருவகித்து விட்டார்கள். இந்த கவி தரிசனம் ஆழ்ந்த ஆன்மிக அனுபூதியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.. வேறு சில இயற்கை வழிபாட்டு பாகன் மரபுகளிலும் இதே போன்ற உருவகம் உள்ளது. இந்திய வரலாற்றில் குப்தர்கள், பல்லவர்கள், சேர சோழ பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டியர் என்று இந்து வீரர்கள் அனைவரும் சக்தியை வீரத்தெய்வமாக, வெற்றித் தெய்வமாக போற்றியுள்ளார்கள் – அந்தப் பின்னணியும் உள்ளது.

    பாரதம் என்பது ஒரு பூகோள, அரசியல்ரீதியான உண்மை மட்டுமன்று, அது ஒரு ஆன்மிக சத்தியம் (India not just a political or geographical entity but a spiritual reality) என்பது ஸ்ரீஅரவிந்தர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த அன்னையின் பிரசித்தி பெற்ற வாசகம். என்றும் அழியாத ஆத்மாவைப் போன்றது அமர இந்தியா என்றார் விவேகானந்தர். ‘சத்தியமே உனக்கு என்றும் அழிவில்லை’ என்று பாரதத்தை விளித்து எழுதிய ஒரு கவிதையில் சொல்வார்.

    வந்தே மாதரம் பாடலிலேயே இந்த ஆன்மிக வெளிப்பாடு இருக்கிறது. இயற்கை எழிலைப் போற்றித் தொடங்குகிறது பாடல்.. பின்னர் கோடிக் கோடிக் கரங்கள் உனக்காக வாளேந்தும் என்று சொல்கிறது.. பின்னர் வரும் வரிகள் –

    நீயே வித்தை நீயே தருமம்
    நீயே இதயம் நீயே என் அகம்
    உடலில் உயிர் நீயே

    அம்மா,தோள்களில் சக்தி நீயே
    இதயத்தில் பக்தி நீயே
    உன் பிரதிமையே ஒவ்வொரு கோயிலிலும் நின்று கொண்டிருக்கிறது.

    இந்த வரிகளில் பாரதமாதாவை பரம்பொருளின் சொரூபத்திற்கிணையாகவே கண்டு பங்கிம் சந்திரர் போற்றுகிறார். இந்தப் பாடல் அவரது இதயத்தில் தோன்றிய தருணமே நவராத்திரி விழாவின் போது தனது சொந்த ஊரில் இயற்கை எழில் சூழ்ந்த ஓரிடத்தில் அவர் மனம் தேவியின் தியானத்தில் மூழ்கியிருந்த சமயம் தான். எனவே பாரதமாதா என்ற உருவகம் ஆன்மிக ரீதியாகவும் சிறப்புடையது என்றே எனக்குத் தோன்றுகிறது.

    இந்தக் கட்டுரை விரிவாக முன்வைக்கும் கருத்தாக்கம் பாரதி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும், ஆதாரபூர்வமான தரவுகளின் அடிப்படையிலும் இருக்கிறது.

  5. முதற்கண் தமிழ்ஹிந்து தளத்தார்க்கு என் நன்றிகள், அவர்களுடைய ஈடுபாட்டிற்கும், அக்கறைக்கும். திரு ஜடாயுவிற்கு என் விசேஷ நன்றிகள் என்பது சொல்லாமலே போதரும்.

    இந்தத் தொடரை ஆரம்பமுதற்கொண்டே மிகுந்த உற்சாகத்துடன் படித்த அனைவருக்கும் வந்தனம். விமரிசனங்கள் இருந்தாலும் ஒரு நல்ல தொடரில் நாம் ஏன் கொத்தையாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று இருப்பவர்க்கு அத்தகைய தயக்கங்களைக் கைவிடுமாறு என் ப்ரார்த்தனை.

    திரு தஞ்சை கோபாலன் கூறியுள்ள இரண்டு கருத்துகளுக்கு என் கருத்தை இங்கே இடுகிறேன்.

    1)இப்பொழுது ஆத்திகம் >< நாத்திகம் என்ற நிலைதான் உள்ளது. தனித்தனி ஆகம ப்ரதானங்களான சம்ப்ரதாயங்களின் உள்வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியமில்லை — இந்தப் பொருள்படும்படி கூறியவற்றுக்கு உள்ளபடியே என் பதில் ஒரு நீண்ட நூல். அது எப்பொழுது சாத்தியமோ யானறியேன். ஆனால் ஒரு கருத்து. Details don’t necessarily mean differential estrangements, provided the motivation is love and admiration. மொத்தமாக உருட்டிவைத்த வகையறாவில் பக்தி வேர் கொள்ளாது. பக்தியற்ற மத அக்கறைகள் தாற்காலிக அரசியல் நிர்பந்தங்களைத் தம் ஊக்க காரணிகளாகக் கொண்டு, பழகி, நீர்த்துப் போகும். பொதுமையின் விரிவில் லாகவமாகவும், உள்நுணுக்கங்களின் சாரங்களில் ஆழம் தொட்டும் இருப்பதுதான் ஹிந்துமதம். அப்படி இருக்கும்வரைதான் அஃது ஹிந்துமதம். அணோர் அணீயான், மஹதோ மஹீயான் — என்று என்றைக்கு அந்த ப்ரம்ம லக்ஷணத்தைக் கண்டு உரைத்ததோ அன்றிலிருந்தே ஹிந்துமதம் இந்த உபயாம்சத்தைத்(இரட்டைப் பண்பை) தன் நிகழ்விதமாகவும் வரித்துவிட்டது. இந்த அலாதியான பண்பு ஹிந்துமதத்தில் மங்கும் போதெல்லாம் மகான்களின் வருகை இதைத் துலக்கிச் சுடர வைத்திருக்கிறது. சமீப காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த வருகை அவ்விதமே. சகோதரி நிவேதிதாவின் தர்சன ரீதியாக விவேகாநந்த போதத்தை உள்வாங்கிப் பார்த்தால் இது புரியும். எனினும் திரு தஞ்சை கோபாலனின் மாற்று அபிப்ராயம் மிக்க பயனுள்ளது.

    2)பாரதி சாக்தன். ஆனால் அவன் பாரத தேவி என்று பாடியது சுதேசிய தீவிரத்தை ஊட்டக் கையாண்ட ஒரு உத்தி அவ்வளவே — இந்தக் கருத்து ஒரு பாதி உண்மை. எதுவெனில் சுதேசிய தீவிரத்தை ஊட்ட பலவழிகளில் பல மாகாணங்களில் உத்திகள் கையாளப்பட்டன. திலகர் ஒரு வித உத்தியைக் கையாண்டார். அனைத்தின் உள்நோக்கம் ‘நாம் இருக்கும் நாடு நமது என்பதை அறிதலே; அறிவித்தலே’. இந்தச் சுதேசியம் விவேகாநந்த போதத்தினால் நாடு பெற்ற பயன். எனவேதான் நான் விவேகாநந்தரை ‘Father of Indian Nationality’ என்று கருதுகிறேன். ஆனால் விவேகாநந்தரின் பார்வையில் பாரத மாதா வெறும் உத்தியன்று. சாக்ஷாத் மகாகாளி. பவானி கோவிலில் அவருடைய சக்தி தர்சனம் பற்றிய விவரணத்தை சகோதரி நிவேதிதா நூலில் காண்க. விவேகாநந்தரின் இந்த ஆம்நாயம் சகோதரி நிவேதிதா வழியாக பாரதி பெற்ற மூலமந்திரம். எனவே பாரதியின் பாரத தேவி வழிபாடு குரு சிஷ்ய ஆம்நாயத்தில் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட நவசக்தி மார்க்கம். இதைச் சற்றேனும் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது ‘பாரதியின் சாக்தம்’ கட்டுரை என்பது என் எண்ணம்.

    ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
    *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *