ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10
“மற்றெதுவும் இத்தனையும் எண்ணிடாதே” என்று முந்தைய பாட்டில் சொன்னார் அல்லவா? அதாவது, எண்ணங்களைக் கட்டுப்படுத்துதல் அல்லது தடுத்தல் என்பதைவிட எண்ணம் எழுந்தால் அதனைத் தொடராது இருத்தல் என்று பொருள் கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். எண்ணங்களைத் தொடரத் தொடர அவை அலைகளைப் போல ஓயாது வந்துகொண்டே இருக்கும். மாறாக ஒவ்வொரு எண்ணம் எழும்போதே, அதனைத் தொடர்ந்து வரும் வேறு எண்ணங்களைப் படரவிடாது, இந்த எண்ணம் யாருக்கு உண்டாயின என்று நம்முள் கேள்வி கேட்டு, அதனால் வரும் எண்ணங்களையே மௌனமாய் கவனித்துக் கொண்டிருத்தல் ஒரு வழி. ஒவ்வொருவர் மனத்தின் தன்மைக்கு ஏற்ப வழிகள் பல உண்டு. அதனால் மனத்தின் தன்மை பற்றியும், ஞானியின் குணாதிசயங்களைப் பற்றியும் மேலும் கீதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.
यतो यतो निश्चरति मनश्चन्चलमस्थिरं |
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत ||
எதுவும் திரமின்றி என்றும் அலை சித்தம்
எது எதனைப்பற்றியே ஏகும் – அதனின்று
ஈர்த்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்துத் திரம் உறவே செய்
பொருள்: எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல், எப்பொழுதும் ஏதாவது விஷயங்களைப் பற்றி அலைபாய்ந்து கொண்டிருக்கும் சித்தத்தை எந்த விஷயத்தைப் பற்றிக்கொண்டு வெளிமுகமாக அலைகின்றதோ, அந்தந்த விஷயத்தினின்றும் மனதை உள்முகமாகத் திருப்பி அதை எப்பொழுதும் ஆன்ம சொரூபத்திலேயே நிலை பெறும்படி செய்வாய்.
அலை பாயும் மனத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை என்பதே சாதகர்கள் பலரும் தம் அனுபவத்தில் காணும் முதல் தடை. அதற்குத்தான் மனதின் உண்மை நிலையை அறியவேண்டும் என்று முன்பு பார்த்தோம்; இப்போது மறுமுறையும் பார்க்கிறோம். மனம் என்பதே எண்ணங்களின் தொகுப்புத்தான். எண்ணங்களும் எப்போதும் நம்மைவிட்டு வெளியே இருக்கும் விஷயங்களைப் பற்றியே இருக்கிறது. நம்மைப் பற்றியே சில சமயம் இருந்தாலும், அது நமது உடலைப் பற்றியோ, உள்ளத்தைப் பற்றியோ, அவைகளின் நிறை குறைகளைப் பற்றியோ இருக்கின்றனவே அல்லாது நமது உண்மை நிலையைப் பற்றி இருப்பது அல்ல. ஆக அவைகளும் வெளி விஷயங்களைப் போலத்தான். அதனால் எண்ணம் என்பது ஒரு விஷயம் இல்லையென்றால் இன்னொரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு செல்கிறது. அதாவது மனமாகிய எண்ணம் என்பதற்கு தனித்தன்மை என்று ஏதும் கிடையாது. தனித்தன்மை என்று இருந்திருந்தால் அது ஏதாவது ஒன்றிலேயே நிலைத்து நிற்க முடியும். அதனாலேயே கடலில் மூழ்கும் ஒருவன் கட்டையைப் பிடித்துக்கொண்டு மிதப்பதுபோல, மனமானது ஏதாவது ஒரு எண்ணத்தைப் பிடித்துக்கொண்டு வளர்கிறது. அதற்கு இடம் கொடுக்கக் கொடுக்க அது மேலும் வளருமே அன்றி ஒடுங்காது.
அதனால் அதை ஒரு காரியமும் இல்லாது கிளை விட்டுக் கிளை தாவும் குரங்குடன் ஒப்பிடுகின்றனர். அப்படியான மனதை முதலில் அடக்கவும், பின்பு ஒடுக்கவும் உண்டான நேர் வழி ஒன்று உண்டு. அதுதான் எந்த எண்ணம் எழும்போதும் அதற்குத் தொடர்ந்து தீனி போட்டு வளர்க்காமல், அந்த எண்ணம் ஏன் வருகிறது, எப்படி வருகிறது, எதனால் வருகிறது என்றும் ஆராயாமல், அது எவருக்கு வருகிறது என்று தன்னுள்ளே விசாரிக்கும் வழி. தனக்குத்தான் அப்படி வருகிறது என்பதை எல்லோருமே உணர்வதால், அப்போது தான் யார் என்று தனது உண்மை நிலையை விசாரிக்க வேண்டும். இவ்வளவுதான் ஒரு சாதகன் செய்ய முடியும்.
அப்படிக் கேட்கும் அவன் தனக்கே ஒரு விளக்கத்தைக் கொடுக்க முனையாமல், தன்னுள் தன்னைப்பற்றி தன்னிடமே கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு என்ன பதில் வருகிறது என்பதை மௌனமாக கவனிக்க வேண்டும். மாறாக அவன் தனக்குத் தானே ஒரு விளக்கம் கொடுக்க முனைந்தால், அதுவும் அவனது புத்திபூர்வமாக அமைந்த ஒரு எண்ணம் என்ற வகையிலே சேர்ந்து மனதை மேலும் விரிவுபடுத்திக் கொண்டே இருக்கும். நாம் இப்போது அப்படிச் செய்துகொண்டு இருப்பதால்தான் நமது மனது நம்மைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த எண்ணம் எழுந்தாலும் அப்படி அவன் தன்னுள் கேட்டுக் கேட்டுப் பழக அவனது மனம் நாளடைவில் உள்முகமாகத் திரும்பி, அவனது உண்மை நிலையை அறிய வைக்கும்.
यतेन्द्रियमनोबुद्दिर्मुनिर्मोक्षपरायण: |
विगतेच्छाभयक्रोधो य: सदा मुक्त एव स: ||
ஒடுக்கிப் பொறியை உளத்தை மதியை
விடுத்து ஆசை அச்சம் வெறுப்பும் – அடுத்து என்றும்
முக்தி தனக்கே முனையும் முனிவன் எவன்
முத்தனே அந்த முனி
பொருள்: சகல இந்திரியங்களையும் மனதையும் புத்தியையும் ஒடுக்கி, ஆசை பயம் வெறுப்பு போன்ற குணங்களை அடியோடு விட்டுவிட்டு, வேறு எதையும் விரும்பாமல், எப்போதும் முக்தி ஒன்றையே மனதில் இருத்தி அது ஒன்றையே நாடும் முனிவன் எவனோ அவனே ஜீவன் முக்த புருஷன் ஆவான்.
புலனடக்கம், மனவடக்கம், புத்தியடக்கம் இம்மூன்றோடு விருப்பு, வெறுப்பு மற்றும் பயம் முதலிய குணங்களையும் விடுபவனையே தவம் செய்வோன் என்று கூறுகிறோம். தவம் மட்டும் செய்துகொண்டிருந்தால் அதற்குண்டான பலன்கள் கிடைக்கலாம். அதுவே அந்தத் தவசியை ஒரு முனிவன் ஆக்கி விடாது. தவத்தால் வரும் பலன்கள் மேல் எந்த வித ஆசையும் கொள்ளாது, அனைத்தின் உண்மையை அறியவைக்கும் முக்தி நிலையை மனத்தில் கொண்டு எவன் ஒருவன் தவத்தை மேற்கொள்ளுகிறானோ அவனே முனிவன் ஆகிறான்.
புலன்களை மனதாலும், மனதை புத்தியாலும், புத்தியை ஆன்ம அறிவாலும் அடக்க வேண்டும் என்று முன்பு பார்த்தோம். அவை மூன்றும் அடங்கினால் ஆசா பாசங்களும், கோப தாபங்களும் அடங்க வழியுண்டு. ஆனாலும் அந்த நிலையே ஒருவனை முனிவனாக்க முடியாது. அப்போது ஆன்மாவைப் பற்றிய அறிவு புத்தி பூர்வமாக இருந்து அதைப் பற்றிய எண்ணங்களினால் அகங்காரம் நுண்ணிய வடிவில் இருக்கும் அபாயம் உண்டு. அந்த ஆன்மாவை அறிவால் அறிய முயலாது, தானே அந்த ஆன்மா என்று அனுபவத்தில் உணர்வதற்கு அந்த ஆன்மா அன்றி வேறு எதுவும் இல்லை என்று வேறெதையும் இச்சிக்காமல் அந்தத் தவத்தின் மூலம் முக்தி நிலை அடைவது ஒன்றையே குறிக்கோளாக்கும் தவசி முனிவன் ஆகிறான். அவனே ஜீவன் முக்தன் என்றும் கூறுகிறார்.
இராவணன், சூரபத்மன் போன்றோரும் தவம் செய்தவர்களே; ஆனால் அவர்கள் தமக்கிருந்த ஆசாபாசத்தினால் முனிவர்கள் ஆக இயலாது போயிற்று. முனி என்பதற்கு “மனனசீலன்” என்று பொருள். ஆன்ம தத்துவத்தின் உண்மைப் பொருளையும், அதை அடையும் வழிகளையும் முறையே ஒரு சிறந்த ஆசிரியனிடம் கற்றுக்கொண்டு, அதை நன்கு மனத்தில் இருத்தி முக்தியைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லாது தவத்தை மேற்கொள்ளுபவனே முனிவன் ஆகிறான். அவனது உடல் உள்ளவரை அவனையே ஜீவன் முக்தன் எனப் போற்றுகிறார்கள்.
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि |
ईक्षते योगयुत्तात्मा सर्वत्र समदर्शन: ||
சகல உயிர்களில் தன்னையும் தன்னில்
சகல உயிர்கள் தமையும் – விகலமறத்
தன்னில் நிலைத்து எங்கும் சமநோக்குள்ளான் காண்பன்
தன்னியன் அந்தத் தவன்
பொருள்: குறை ஏதும் இல்லாத மனத்தினனாய், தன் ஆன்ம சொரூபத்தில் ஸ்திரமாக நிலைபெற்று, எங்கும் எல்லாவற்றிடமும் சம திருஷ்டி உடையவன் சகல உயிர்களிடத்திலும் ஆன்மாவாகிய தன்னையும், தன்னிடத்தில் அவ்வுயிர்கள் அனைத்தையும் காண்பான். இப்படி சமநோக்குடைய அந்த யோகியானவன் எல்லாம் பெற்ற பாக்கியவான் ஆவான்.
“குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா” என்று எவரால் சொல்ல முடியும்? வேண்டிப் பெறுவதற்கும் ஒன்றில்லை, வேண்டாம் என்று தள்ளுவதற்கும் ஒன்றுமில்லை என்பவர்க்கு குறை என்று என்ன இருக்க முடியும்? வேண்டுவது இல்லாததால் ஒன்று கிட்டவில்லையே என்ற வருத்தம் கிடையாது, அதுபோல வேண்டாம் என்றும் ஒன்றில்லை என்றால் ஒன்று வந்துவிட்டதே என்ற கவலையும் இல்லை. அவர்களுக்கு கோபமோ தாபமோ குறையோ என ஒன்றும் கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு காணும் எல்லாம் ஆன்ம சொரூபமே என்றும், தானும் மற்றும் அனைத்தும் எல்லாம் அதுவே என்ற மனோபாவமும் வளர்ந்திருக்கும். அதனால் மற்றவர்களிடத்தில் தனது குணங்களையும், தன்னிடத்தில் மற்றோர் அனைவரது குணங்களையும் அவன் காண்பான். அப்போது அவனால் என்ன குறை காண முடியும்?
மனத்தில் தேவை என்று ஒன்று இருந்தால் ஆசை ஒன்று இருக்கிறது என்று பொருள். ஆசை இருக்கும் வரை மனது ஏதாவது ஒன்றிற்காக சலித்துக்கொண்டே இருக்கும். அது கிடைத்துவிட்டால் வேறு எதற்காவது ஏங்கிக் கொண்டிருக்கும். தேவையே இல்லாத இடத்தில் ஆசையும் இருக்காது. நிராசையுற்ற மனமோ அமைதியாகவே இருக்கும். அமைதி கொண்ட மனத்திற்குத்தான் தன் ஆத்ம சொரூபத்தில் நிலைத்து நிற்க முடியும்.
தொடக்கத்தில் சாதகனுக்கு ஆன்ம நிலை என்பது பாவனை அளவில்தான் இருக்க முடியும். மனத்தை வெளியே விடாது அதில் பழக்கப் பழக்க அதுவே தன் சுபாவம் என்பது தெளிவாகும். அதனால் எப்போதும் எல்லாவற்றையும் அதே ஆன்மாவாகப் பார்ப்பதினால் அவனுக்கு சுயமாக ஒரு சமநோக்கு வருகிறது. அது மட்டுமல்லாமல் தானும் மற்ற சீவ ராசிகளைப் போலவே என்பதனால் அனைத்தையும் தன்னுள் தானாகப் பார்க்கும் அதீத நிலையும் அவனுக்கு வருகிறது. அப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய அத்தகையவன் மிக்க பாக்கியவான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?
ஆஸ்ரமத்தில் இருந்து மலை மேல் உள்ள ஸ்கந்தாஸ்ரமம் செல்லும் மலைப்பாதை கரடு முரடாக இருக்கிறதே என்று தனி மனிதராய் உளி கொண்டு பாறைகளை சமன் செய்தும் அதன் கூர் முனைகளை செதுக்கியும் சேவை செய்த ராமஸ்வாமி என்பவர் சுமார் பதினைந்து வருடங்கள் முன் தான் காலமானார். அவர் உடலைக் கிடத்தி அவருக்கு இறுதி மரியாதைகள் செய்யும் முன் பாராயணம் செய்து கொண்டிருந்த காலத்தில் எங்கிருந்தோ ஒரு குரங்கு தனியாக வந்து சோகத்துடன் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அங்கு உட்கார்ந்திருந்ததாம். பாராயணம் முழுதும் இருந்த அந்தக் குரங்கு பாராயணம் முடிந்தவுடன்தான் அங்கிருந்து தானாகவே புறப்பட்டுச் சென்றதாம். இதுவும் ஒரு சீவ ராசி இன்னொன்றிடம் கொள்ளும் சமநோக்கு தானே?
ரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
(தொடரும் …)
இந்த பகுதிகளை ஒரு பி.டி.எஃப் ஆக ஏன் மொத்தமாக மாற்றி தரவிறக்கம் செய்யும்படியாக்க்லாமே…மிக ஆழமான புரிதலுடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதால் கேட்டேன்.நன்றி