ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8
பொதுவாக நமது இந்திரியங்கள் வாயிலாகவே நாம் உலகில் உள்ள அனைத்தையும் உணர்கிறோம். அதனால் உடலில் உள்ள நமது இந்திரியங்களைப் பற்றி நமக்கு என்றுமே ஒரு பெரும் மதிப்பு உண்டு. பார்ப்பது, கேட்பது போன்ற இயக்கங்களுக்கும் மேலாக இன்னும் என்னென்னவோ இருக்க வாய்ப்பு உண்டு என்பதை நமது இந்திரியங்களின் மூலமாகப் பெறப்பட்டதை ஒட்டிய நம் எண்ணங்கள் மூலமாவும், உணர்வுகள் வாயிலாகவும் நாம் கணிக்கிறோம். இந்த நிலையில் ஆன்மா என்பதென்ன என்பதை நமக்கு மேலும் விளக்குகிறார் கிருஷ்ண பரமாத்மா.
इन्द्रियाणि परन्याहुरिन्द्रियेभ्य: परं मन: |
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धे: परतस्तु स: ||
மேன்மையுறப் பொறிகண் மேவும் பொறிகட்கு
மேன்மனம் அம்மனத்தின் மேன்மதி -தான்மதியின்
மேன்மையா யாவன் மிளிர்வான் அவன் தன்னை
ஆன்மாவாம் என்ன அறி
பொருள்: தேகத்தை விட இந்திரியங்கள் சிறப்பு மிகுந்தவையாக விரும்பப்படுகின்றன. அந்த இந்திரியங்களைவிட மேன்மையானது மனம். அந்த மனதைவிட சிறப்பு வாய்ந்தது புத்தியாகும். புத்தியைக் காட்டிலும் மிகுந்த உயர்வானதாக எவனொருவன் தனக்குத் தானே பிரகாசிக்கிறானோ அந்த சொரூபமான அவனே பர சொரூபமான ஆத்மாவாகும் என்று அறிவாயாக.
பொதுவாக எவருக்குமே உணவு, உடை, உறைவிடம் என்பது அடிப்படைத் தேவைகள். அந்தத் தேவைகள் ஓரளவு பூர்த்தியான பின் அதோடு எவராவது நம் தேவைகளை நிறுத்தி விடுகிறோமா? அதற்கும் மேலே என்ன கிடைக்கும் என்றுதானே பார்க்கிறோம். அதுதான் மனிதச் சமுதாயத்தை முடுக்கி விட்டு மேலும் சாதனையைத் தூண்டும் ஊக்க எண்ணங்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறோம். அதை ஒப்புக்கொள்ளும் நாம் நமது இந்திரியங்களுக்கும் மேலாக, அவைகளின் மூலம் நாம் பெரும் அனுபவங்கள் என்னென்ன இருக்கலாம் என்று தீர யோசிப்பதில்லை.
அப்படி யோசித்தால் இந்திரியங்களுக்கும் மேலாக முதலில் வருவது எண்ணங்கள். ஏனென்றால் நாம் பார்த்தது, கேட்டது, முகர்ந்தது என்றிவ்வாறான இந்திரியாதி இயக்கங்களைத் தொடர்ந்தே நமது எண்ணங்கள் வளர்கின்றன. எண்ணங்களைப் பற்றி சிறிது எண்ணிப் பாருங்கள்.
எண்ணங்கள் தானே வருகின்றனவா, அல்லது நமது கட்டுப்பாட்டில் வருகின்றனவா? நான் இந்தக் கேள்வியைக் கேட்டதால் இப்போது நீங்கள் யோசிக்கும் எண்ணங்கள் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இப்படியும் உண்டு. ஆனால் பொதுவாக எப்படி வருகின்றன என்பதைப் பற்றித்தான் நான் இப்போது கேட்டது. பொதுவாக அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தபோது எண்ணவும், அல்லது எண்ணங்கள் இல்லாது இருக்கவும் முடியும். அது முடிந்தால் நீங்கள் ஒரு ஞானியே.
நாம் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப எண்ணங்கள் தன்னிச்சையாக வருகின்றன. அப்படி வந்தபின் நாம் அதனைத் தொடர்ந்து மேலும் அதை வளர்க்கிறோம். அப்போது அந்த எண்ணம் தொடர்பான நமது முன் அனுபவங்களையும் சேர்த்து மேலும் தொடருவோம். அப்போது அவை நம் கட்டுப்பாட்டில் வருகின்றன என்று சொல்லலாம். அப்படி காலம் காலமாக வரும் எண்ணங்களின் தொகுப்புதான் மனம் எனப்படுகிறது. இப்படித்தான் தூல வடிவில் உள்ள இந்திரியங்கள் மூலம் சூக்ஷ்ம வடிவான மனம் உருவாகிறது. மனமற்ற நித்திரையில் இந்திரியங்கள் இருந்தும் எந்த செயலிலும் ஈடுபடாது அடங்கி விடுகிறது. ஆக தூலமான இந்திரியங்களை விட சூக்ஷ்மமான மனம் மேலானதே.
மனத்தில் நல்ல மனம், கெட்ட மனம் என்று ஏதும் கிடையாது. ஒருவனின் விஷய வாசனைகளைப் பொறுத்து அவனது எண்ணங்கள் அமையும். அதற்குத் தகுந்தாற்போல் மனமும் அமைகிறது. ஆக மனத்தின் போக்கைக் கட்டுப்படுத்தி அதன் குணத்தை மாற்றமுடியும் என்றால் அதுதானே மனத்தை விட மேன்மையானதாக இருக்க முடியும்? அதுதான் புத்தி எனப்படுகிறது. நாம் ஒன்றைப் பார்க்கிறோம் என்றால், அது நம்மிடம் உருவாக்கும் அல்லது உசுப்பிவிடும் எண்ணங்களை வேறு விதமாகத் திருப்பி அமைக்கும் சக்திதான் புத்தி எனப்படுகிறது. அதற்கு எண்ணங்களின் பரிமாணங்களை எடைபோடும் சக்தி இருக்கிறது. அதனால்தான் ஒன்றை இப்படிச் செய்யலாம், அல்லது செய்யவே கூடாது என்றெல்லாம் தோன்றுகிறது. அதன் தன்மையும் எண்ணங்களைப் போலவே இருந்தாலும், புத்திக்குக் கட்டுப்படுத்தும் தன்மையும் இருப்பதால் புத்தி எண்ணங்களைவிட மேலும் சூக்ஷ்மமானதாகிறது.
மனம் என்பது எப்போதுமே சீராக இருக்காது. அதுதான் அதன் குணம். அருச்சுனனுக்கு இப்போது உள்ளது போல, எப்போது ஒருவனுக்கு மனம் கலங்கி அதனால் புத்தியும் தடுமாறுகிறதோ அப்போது அவனது புத்திகொண்டும் அவனால் தன்னை சீர் செய்து கொள்ள முடியாது. அப்போது அவன் அருச்சுனனைப் போல கிருஷ்ணரைப் போன்ற அறிவாளியிடம் தஞ்சம் புகுந்து அவர் சொல்படி கேட்க வேண்டும்.
எண்ணங்களோ, புத்தியோ நமது எல்லா நிலைகளிலும் நம் அறிவுக்கு இலங்கி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதைத்தான் முற்றிலுமாக ஆழ்ந்த உறக்கத்திலும், ஓரளவுக்கு கனவுத் துயிலிலும் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். இருந்தும் விழிப்பு நிலை அடைந்ததும் அவைகள் எல்லாம் நம் அறிவுக்கு எட்டுகிறது என்பதும் நமது அனுபவமே. இதிலிருந்து நாம் அறிய வேண்டியது ஒன்று இருக்கிறது. அது மனம், புத்தி, அறிவு எல்லாமே ஒரு பேரறிவுக்குள் இயங்குகிறது என்னும் உண்மையே ஆகும். ஆக நமது எந்த நிலையிலும் விளங்கும் மனம், புத்தி, அவைகளைப் பற்றிய அறிவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய பேரறிவு கொண்டு எவன் பிரகாசிக்கிறானோ அவனே அந்த ஆன்மா வடிவோடு எப்போதும் விளங்குபவன் என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு சொல்கிறார்.
एवं बुद्धे: परं बुद्ध्वा संसभ्यात्मानमात्मना |
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदं ||
மதிக்குயர்வு இவ்வாறு மதித்தே மனத்தை
மதியால் நிறுவி ஆன்மாவின் – மதி சேர்
விசயா செயிப்பாய் வெலற்கு அறிய காம
நிச சத்துரு உருவை நீ
பொருள்: இந்த விதமாக புத்திக்கும் மேலான உயரிய ஆத்மாவை அறிந்துகொண்டு, மனதை புத்தியால் திடப்படுத்தி, ஆன்மாவில் மனதை ஒன்றுபடுத்தி, வெல்வதற்கு அரிதான காமம் என்னும் உண்மை விரோதியின் உருவத்தை வெற்றி வீரனாகிய விஜயா! நீ ஜெயித்திடுவாய்.
சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு அது. அதன் காரணமோ அப்போது அவனுக்கு அவர்களின் மேல் கிளைத்த வாஞ்சை ஆகும். அதாவது அருச்சுனனுக்கு அப்போது அவனது மனம் ஒன்றிலிருந்து வேறொன்றுக்குத் தாவிவிட்டது. மனம் ஒரு குரங்கு, அதன் நிலை அப்படித்தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்தி அங்கு வந்துள்ளதின் உண்மையான நோக்கம் அவன் நினைவுக்கு வருவதற்கு அவனது புத்தி அவனுக்குக் கை கொடுக்கவில்லை. மனத்தை அடக்கும் வல்லமை உடைய புத்தியும் வேலை செய்யாத அளவு அவனது உறவினர்கள் எனும் பாசம் அவனை ஒடுக்கிவிட்டது. இனி அந்த புத்திக்கும் மேலான ஆன்மா ஒன்றுதான் அவனுக்கு சரியான வழியைக் காட்ட முடியும்.
ஆக “எல்லாம் அந்த ஆன்மாதான்” என்னும் அறிவால்தான் அவன் தனது புத்தியை அடக்கி, அதன் மூலம் மனதை ஒழுங்குபடுத்தி, அதை ஆன்மாவில் ஒன்றுபடுத்தல் ஒன்றே அவனது பாசம் எனும் ஆசையைக் களைய உதவும். இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. அதாவது ஆன்ம அறிவு இல்லாமல் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடலாம். ஆனால் ஆன்மாவின் தன்மையை அறிந்தாலன்றி ஆசாபாசத்தை வெல்வது கடினம். ஆக ஆசை என்பது வெல்வதற்கரிய விரோதி என்றாகிறது. அத்தகைய ஆசை என்பது நம் உள்ளே நுழையும் வாயில்களாக இருப்பதே நமது ஐம்புலன்கள்தான். அதனால் பஞ்ச இந்திரியங்களை அடக்குவதே நாம் உடனே செய்ய வேண்டிய செயல். அவைகளை நம் மனத்தால் அடக்க வேண்டும். அது இயலவில்லை என்றால் மனத்தை புத்தியால் கட்டுப்படுத்த வேண்டும். அதுவும் முடியாது போனால், மீதம் இருப்பது ஆன்மாவைப் பற்றிய அறிவு ஒன்றே. அதனைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு, அதன் வழியே புத்தியையும், புத்தியால் மனதையும் கட்டுப்படுத்தி, மனத்தால் இந்திரியங்களின் செயல்களையும் ஒருமுகப்படுத்தினால் உண்மையான விரோதியான ஆசையை அறிந்துகொண்டு, அதனால் விளையும் எத்தகைய விரோதியையும் வெல்லுவாய் அருச்சுனா என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
यथैधांसि समिद्धोsग्निर्भस्मसात्कुरुतेsर्जुन |
ज्ञानाग्नि: सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ||
எரியும் எரியும் எரிகரும்பை எல்லாம்
எரித்து நீறாக்கல் எனவே – எரியாம்
அறிவும் கருமம் அனைத்தும் எரித்தே
உறுவிக்கும் நீறா உணர்
பொருள்: கொழுந்து விட்டு எரியும் அக்கினியின் சுடரானது தனக்குள் இட்ட எரிபொருட்களை எல்லாம் எரித்து சாம்பலாக்கும் என்பதைப்போல, ஞானமாகிய அக்கினிப் பிழம்பும் கர்மம் யாவற்றையும், மிச்சமில்லாமல் எரித்து சாம்பலாகச் செய்திடுமென்று உணர்வாய்.
இந்திரியங்களுக்கும் மேல் மனம், மனத்திற்கும் மேல் புத்தி, புத்திக்கும் மேல் ஆன்மா என்னும்போது, ஆத்ம ஞானம் எனப்படுவது அறிவதில் எல்லாம் முதன்மையான அறிவு என்றாகிறது. அந்த அறிவு பெற்றவனுக்கு எல்லாம் தெரிந்தது என்றும் ஆகிறது, வேறெதுவும் தெரியவேண்டிய தேவை இல்லை என்றும் ஆகிறது. அவனுக்கு வேறு என்று எதுவும் தெரியாது. அதுவே அறிவின் உச்ச நிலை. பௌதிக உலகில் எந்த திடப்பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை எரியும் நெருப்பில் இட்டால், அந்த அக்கினிச் சுடர் அதை முழுதும் எரித்துச் சாம்பலாக்கிவிடும். அந்தச் சாம்பல்தான் அப்பொருளின் இறுதி நிலை. அதை மேலும் எரிக்க முடியாது.
ஆன்ம ஞானமும் ஒருவனை உண்மையான இறுதி நிலைக்கு அழைத்துச் செல்வதால், அதை ஞானக்கினி என்றே சொல்வார்கள். அதன் அறிவுப் பிழம்பில் எல்லாமே உள்ளது உள்ளபடி விளங்கும். தற்போது அந்த அறிவு இல்லாத சமயத்தில் தெரியும் பேதங்கள் எல்லாம் நமது கர்மவினைப்படி நாம் பார்க்கும் பார்வையால் வந்திருக்கின்றன. ஆன்ம அறிவு பெற்றவனுக்கோ அந்த கர்மங்கள் எதுவும் அவனை ஒட்டாததால், அனைத்தையுமே உள்ளபடி உள்ளதாய் உணர்வான்.
நாம் பிறக்கும் சமயத்தில், இப்பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய நமது கர்ம வினைகளை “பிராரப்தம்” அல்லது ஊழ் என்று சொல்வார்கள். இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களால் விளைவதை “ஆகாமியம்” என்றும், மேலும் பல பிறவிகளில் அனுபவித்துத் தீர்க்க நாம் சேர்த்து வைத்திருக்கும் பாவ-புண்ணிய மூட்டையை “சஞ்சிதம்” என்றும் சொல்வார்கள். ஞான நிலை அடைந்து ஜீவன் முக்தராய் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு இருப்போர்க்கு அவர்கள் மேலும் சேர்ப்பதற்கோ, அனுபவிக்கவோ ஏதுமில்லை என்றாலும், அவர்கள் உடலுடன் இருப்பதால் அவர்களுக்கு ஊழ் மிஞ்சி உள்ளது என்று சொல்வோர் உண்டு. ஆனால் ஜீவன்முக்தர்கள் தன்னிருப்பை உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளாததால், உடல் என்பதும் ஊழ் என்பதும் ஆன்ம அறிவில்லாத பார்வையாளர்களுக்கே அன்றி ஜீவன் முக்தர்களுக்கு இல்லை என்பதால், ஞானாக்கினி பிழம்பும் ஞானியின் கர்மம் யாவற்றையும் மிச்சம் ஏதுமில்லாது எரித்து விடும். அப்பேர்பட்ட ஜீவன்முக்தர்கள் செய்யும் ஏதும் அவர்களைச் சாராததால், கர்மத்திற்குப் பயனுண்டு என்பதால் எவர் பொருட்டு ஞானி கர்மம் செய்தாரோ அவர்களைச் சென்றடையும்.
அதையொட்டியே ரமணரும், “தீர்த்த நீராடலும், மூர்த்தி தரிசனமும் காலம் பல கடந்தபின்தான் பயன் தரும். ஆனால் மகத்துவம் நிறைந்த மகான்களின் தரிசனமோ, அந்த சாதுக்கள் கண்ணால் கண்டிடவே மனம் தூய்மையாகி விடும்” என்று “உள்ளது நாற்பது அனுபந்தத்தில்” சொல்வார். ஆக ஞானத்தினால் கர்மம் முற்றிலும் கழிந்த ஞானிகளின் நிலை அத்தகையது.
ரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
(தொடரும் …)