[பாகம் 2] குதி. நீந்தி வா !

 “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் 2ம் பாகம்.

பாகம் 1

மாணவர்கள் பார்வையில் சுவாமி சித்பவானந்தர்

திருச்சி  திரு. வி. லெட்சுமணசுவாமி
விடுதி எண் : 173

நான் விவேகானந்த வித்யாவனத்தில் 1977-78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பை முடித்தேன். கோவை மாவட்டத்தில் உள்ள சித்திரைச் சாவடி ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸிரமத்திற்கு சுவாமி அந்தர்யோகம் நிகழ்த்த  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்வது வழக்கம். அப்போது இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச்செல்வார்.  MDA 6837  என்ற எண்ணுள்ள பச்சைநிற அம்பாசிடர் காரில் செல்வார். அந்த வண்டிக்கு டிரைவர் திரு. ஆறுமுகம் அவர்கள்.

ஒவ்வொரு முறை சித்திரைச் சாவடி செல்லும்போதும் இரண்டு மாணவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படிச் சென்ற மாணவர்களில் நானும் ஒருவன். சுவாமி போகும் போது இராமாயணம் கூறி முடித்துவிடுவார். திரும்பும் போது மகாபாரதம் கூறி முடித்துவிடுவார். நாங்கள் சிறுவர்கள் தானே! கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் படுத்து உறங்கி விடுவோம். என் தாயின் மடியில் கூட நான் அந்த நிம்மதியை கண்டதில்லை.

திரும்ப அந்த நாட்கள் வரப்போகிறதா! நினைத்தால் இன்றும் கண்ணீர் வழிகிறது.

1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை. மதியம் நானும் என் நண்பர்களும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று காவல்துறை  “சைரன் ” ஒலி காதைப் பிளந்தது. மத்திய அமைச்சரும், சுவாமிஜியின் அண்ணன் மகனும், அப்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் பந்தோபஸ்து படை, கூட்டணி கட்சித் தலைவர்கள் படை, பல கார்கள், வேன்கள், அடியாட்கள் புடைசூழ விடுதிக்குள் நுழைந்தார்.

சுவாமிஜி மாடியிலிருந்து இந்த ஆடம்பர நுழைவை பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தமாக திரு. சி.எஸ். சுவாமிஜியை பார்க்க மாடிக்குச் சென்றார். சுவாமிஜி கோபத்துடன்,  “முதலில் உன் படைகள், பரிவாரங்கள், பந்தோபஸ்துகளை வெளியே அனுப்பிவிட்டு தனி ஆளாக வந்தால் இங்கு வரலாம்.”  என்றார். உடனே திரு. சி.எஸ். கீழே வந்து அவருடன் வந்த ஜீப்கள், கார்கள், வேன்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி மனிதராக சாலையிலிருந்து நடந்து வந்து மாடிக்கு சென்று சுவாமியிடம் ஆசி பெற்றார்.

அந்தத் தேர்தலிலும் வென்றார். முற்றும் துறந்த சுவாமிக்கு அரசனும் ஆண்டியும் ஒன்று என்ற கருத்தை புரிந்து கொண்டேன்.

திண்டுக்கல்  தெய்வத்திரு. மெளனகுரு சாமி
தபோவன பழைய மாணவர்

(பொன்விழா நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சுமார் 80 வயது பெரியவரான திரு. மெளனகுரு சாமி என்பவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திருப்பராய்துறையில் 1945-46ஆம் ஆண்டு படித்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் கூறியவை இங்கே.)

“அந்தக் காலத்தில்  பள்ளியில் நீச்சல் குளம் கிடையாது. பெரிய சாமிதான் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச்செல்வார். ஆபத்தில் தப்பிப்பது எப்படி? என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எங்களை அவரே தேய்த்துக் குளிப்பாட்டுவார். எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியிருக்க மாட்டார்கள். குளிப்பாட்டுவதன் மூலமாக தினந்தோறும் அவர் ஸ்பரிச தீட்சை எங்களுக்கு கொடுத்தார். சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடைய செய்ய  என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது. அது மட்டுமல்ல மதுரைக்கு வந்த அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் மில்லுக்கு என்னால் அழைத்து வரமுடிந்தது, சுவாமியிடம் பெற்ற வைராக்கியத்தினால் தான். எங்களைக் கவனித்த அளவுக்குப் பின்னால் வந்த மாணவர்களை சுவாமி கவனித்திருக்க முடியாது.”

சேலம் டாக்டர். திரு. பி. சண்முகம்
(இவர் தபோவன பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.)

நான் சுமார் 35 வருடங்களாக மருத்துவத்துறையில் உள்ளேன். தீய பழக்கங்கள் உள்ள நோயாளிகள் நிறைய பேர் அந்த பழக்கங்களை  விடமுடியாமல் அந்த பழக்கத்துடனேயே இறப்பதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால், என்னால் மட்டும் அந்த பழக்கங்களை எவ்வாறு விடமுடிந்தது?

இது பற்றி நீண்ட நாள் யோசித்த பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தபோவனத்தை விட்டு வெளியேறும் போது பெரிய சுவாமிகள் முன்பு மண்டியிட்டு, வாய்பொத்தி வணங்குவோம். அப்போது பெரியசுவாமிகள் நம் தலையில் மீது அவர் கையை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள்.சுவாமியின் இந்த ஆசீர்வாதத்தின் பலன் என்னவாக இருக்கும்?இதனால் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் என்ன விளைவுகள் நிகழும்? என நான் எண்ணியது உண்டு. அந்த ஆசீர்வாதத்தின் விளைவு தான் தீய பழக்கங்கள் மறைந்தது என்று இப்போது புரிகிறது. நாம் அழியாமல் நம்மை தடுத்தாட்கொள்வது, நம்மைச்சுற்றி அரண் போன்று அமைந்துள்ள நம்முடைய பெரியசுவாமியின் ஆசீர்வாதம் தான்.

சரியான சமயத்தில் நமது முடியைப் பிடித்து இழுத்துவந்து சரியான பாதையைக் காட்டுவதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும்போது நமக்கு கிடைக்கும் அவருடைய ஆசீர்வாதம்.

பெரிய சுவாமிஜி சமாதி அடைவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் உள்ள அத்வைத ஆஸிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது சுவாமியின் தோழர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் சுவாமியைப் பார்க்க சேலம் வந்திருந்தார். அப்போது அன்பர்கள் சுவாமிஜியின் பாதங்களை தொட்டு வணங்கினர். ஒவ்வொருவரிடமும் சுவாமி நலம் விசாரித்தார். இதைக் கவனித்த அவினாசிலிங்கம் அவர்கள் “வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் தங்களுக்குப் பாத நமஸ்காரம் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒருவரைக்கூட வாழ்த்தவில்லையே ஏன்?”  என்று கேட்டார்.

அதற்கு சுவாமி, ” நான் அப்படிச்செய்தால் அது அர்த்தமற்றதாகும் அவரவர்கள் செய்த வினைப்பயனை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கிறிஸ்துவ மதத்தைத்தவிர வேறு எந்த மதமும் பாவம் செய்தவர்களை மன்னிப்பதில்லை.” என்று சுவாமி பதிலளித்தார்.

ஆனால், அதே சுவாமி நாம் படித்து முடித்து ஊருக்கு புறப்படும்போது நம் தலையில் தன் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள். அன்பர்களுக்கு ஆசி கூறாத சுவாமி நம்மை மட்டும் ஆசீர்வதித்தார். நாம் எல்லாரும் எவ்வளவு பாக்கியவான்கள்!

திருப்பூர்  டாக்டர்.திரு. ஆர். கே. கந்தசாமி,
விடுதி எண் : 43  (1950-51)
(தபோவன பொதுக்குழு உறுப்பினர்)

1948-ல் நான் 9-ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை முடிந்து நானும் என் நண்பன் குமாரசாமியும் விடுதிக்கு வராமல் திருச்சி சென்று சினிமா பார்த்து விட்டு இரவு தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை சுவாமியிடம் ஆஜர் கொடுக்கச்  சென்றபோது எப்போது வந்தீர்கள்? என்று கேட்டார். நாங்களும் நேற்று இரவு வந்தோம் என்று கூறினோம். நான் பார்க்கவில்லையே என்றார்.  “நாங்கள் திருச்சியில் சினிமா பார்த்துவிட்டு காலதாமதமாக வந்தோம் சுவாமி” என்று உண்மையை கூறினோம். சுவாமிக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

எங்கள் இருவருக்கும் 5 ரூபாய் அபராதம் விதித்தார். உடனே எனது நண்பன் குமாரசாமி துடுக்காக “உண்மையை சொன்னதற்கு தண்டனையா சுவாமி?” என்று கேட்டான். அதற்கு சுவாமி, “உண்மையைச் சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்றால், நாட்டில் கொலையும் கொள்ளையும் திருட்டும் வன்முறையும் அதிகம் பெருகி விடும். நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால்,

1. நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள்.

2. இரண்டாவதாக இனி அந்தத் தவறை செய்யமாட்டாய் என்று இரண்டாம் பொருள்.

3. மூன்றாவதாக இந்தத் தவறுக்கு தண்டனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பொருள்.

உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன”

என்று கூறி எங்கள் சிந்தனையை தெளிவடையச் செய்தார்கள்.

இது இன்று நடந்தது போல் உள்ளது ஆனால், 62 ஆண்டுகள் கடந்து விட்டன.1943-ல் ஆரம்பிக்கப்பட்ட வித்யாவன குருகுலப்பள்ளி முதன்முதலில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய மண்டபங்களில் தான் நடைபெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறமாக உள்ள சத்திரத்தில் தான் விடுதி இருந்தது.

ஆரம்பத்தில் 50 மாணவர்களே விடுதியில் இருந்தனர். வரிசையாகப் பெட்டியும் அதன்மேல் படுக்கையையும் வைத்திருப்போம். பெட்டியின் முன்னால் அமர்ந்து படிப்போம். உறங்கும் பொழுது பெட்டியின் முன்னால் விரித்துப் படுத்துக் கொள்வோம். Tooth brush மற்றும் soapக்கு  அனுமதி கிடையாது. பெட்டியைப் பூட்டக்கூடாது, விலை உயர்ந்த பொருட்களான, வாட்ச், கேமரா முதலியன கூடாது.பிறகு ஹாஸ்டல் தற்போது உள்ள இடத்தில் கட்டப்பட்டது. அதற்குப் பின் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள க்ளாஸ் ரூம் கட்டிடங்கள் எல்லாம் ஹாஸ்டலில் உள்ள மாணவர்களின் உழைப்பால் உருவானவை. செங்கல், girder முதலியன எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து கட்டிடம் கட்டும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு கைமாறி மாறிப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். மாணவர்களின் உழைப்புக்காக அன்று இரவே வடை, பாயசத்துடன் விருந்து சமைக்கப்படும். அதனால் மாணவர்களும் உற்சாகத்துடன் ஒத்துழைத்துனர். இவ்வாறாக diginity of labourம் கற்றுத் தரப்படும்.

பள்ளி, விடுதிக் கட்டிடங்கள் வளர வளர மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. அவ்பொழுதெல்லாம் ஆற்றில் குளிப்பது என்றாலே ஒரு தனி ஆர்வம். தினமும் இரண்டு முறை குளிப்போம். தினமும் ஒரே பாதையில் ஆற்றுக்குள் தண்ணீர் வரை மணலில் சுவாமிஜி நடந்து நடந்து ஒரு தனித் தடமே உருவாகியிருக்கும். எங்களில் சிலர் தினமும் அவருடன் செல்வோம். குளிக்கும் பொழுது நாங்கள் 5, 6 பேர் சேர்ந்து அவரைத் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்துக் கொள்வோம். சிறிது நேரம் விட்டுத் திடீரென்று எங்களையெல்லாம் தள்ளி விட்டு மேலே வந்து விடுவார்கள்.

1964-ல் என் திருமணத்திற்கு பின் சுவாமிஜியிடம் ஆசி பெற திருப்பாராய்துறைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட அனுபவம். பஸ்ஸில் காலை 9.30 மணிக்குத் திருப்பூரிலிருந்து விடுதியை அடைந்து அன்றைய சிற்றுண்டியாகிய இட்லி, மால்ட் முடித்து விட்டு, ஸ்வாமிஜியின் அறைக்குச் சென்றோம். எங்களைப் பார்த்து ஸ்வாமிஜி மிகவும் சந்தோப்பட்டார்கள். ஆசியும் வழங்கினார்கள். நலம் விசாரித்துப் பின்பு என்னிடம் உன் சக தர்மணியைக் கூட்டிச் சென்று நீ விளையாடித் திரிந்த இடத்தையயல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு ஆற்றில் குளித்து விட்டு  மதியம் உணவு அருந்த வந்து விடு என்று கூறி அனுப்பிவிட்டார்கள். நாங்களும் பள்ளியைச் சுற்றிப்பார்த்து விட்டு ஆற்றிலும் குளித்து விட்டு, கோவிலுக்கும் சென்று தரிசித்து விட்டு திரும்பினோம். மதியம் உணவு முடித்து 2 மணிக்கு சுவாமிஜியிடம் விடை பெறச் சென்றோம். சுவாமிஜி, “அதற்குள் என்ன அவசரம், உனக்குப் பொங்கல் பிடிக்கும் என்று நாளைக் காலை பொங்கல் செய்யச் சொல்லி இருக்கிறேன். இரவு தங்குவதற்கு ஆசிரியர் குடியிருப்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை போகலாம்” என்று கண்டிப்பாகவும், பாசத்துடனும் கூற இரவு தங்கி, காலை உணவு முடித்து விட்டே ஊருக்குத் திரும்பினோம்.

தாய்வீடு சென்று திரும்பிய உணர்வுடன்  திரும்பினோம். தாயன்பிற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்றே தோன்றிற்று.

திருப்பூர்  திரு. ஆர்.பி. பாலகிருஷ்ணன்,
விடுதி எண் : 79 (1980-81)

கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளே குலபதி துறவியர்களுடன் திருவண்ணாமலைக்குச் செல்வார். அங்கு திருக்கோயிலிலும், கிரிவலப்பாதையிலும் அன்பர்களுக்கு அருள் பாலிப்பார். மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றியபின் “அண்ணாமலைக்கு அரோகரா!” என்று கூறிவிட்டுத் திருப்பராய்த்துறைக்கத் திரும்புவார். கார்த்திகை மாத பெளர்ணமி வழிபாடும், விருந்தும் மறுநாள் தான் நடைபெறும். நாங்கள் தபோவனம் முழுவதும் அகல்விளக்கு வைத்து மைசூர் பேலஸ் போல ஜொலிக்கச் செய்வோம்.

அண்ணாமலையிலிருந்து திரும்பும் சுவாமி நாங்கள் விளக்குகள் வைத்த சுவற்றில்  எங்காவது எண்ணெய் வடிந்திருக்கிறதா? என்று உற்றுநோக்கியதை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

நாங்களும் எங்கள் வீடுகளில் தீபம் வைக்கும்போது சுவர் அசிங்கமாகாதபடி  தீபம் வைக்கிறோம். திருவண்ணாமலையை அக்னி ஸ்தலம் என்பர். நாங்கள் எங்கள் இளமைக் காலத்தில் திருவண்ணாமலையோடு தான் வாழ்ந்தோம்!

புரியவில்லையா?

சுவாமி தபோஅக்னி அல்லவா? அவரோடுதானே நாங்கள் வாழ்ந்தோம்!

திரு. கே. ராமசாமி,
விடுதி எண் : 123 (1955-56)

ஒரு முறை சுவாமிகளுடன் நாங்கள் கோவை சென்றிருந்த சமயம் ஜி.டி. நாயுடு அவர்கள், “குழந்தைகளுடன் சுவாமிகளும் வந்து என் விஞ்ஞான கூடத்தை பார்க்க வேண்டும்.”  என்று அழைத்தார்.

எங்களை அழைத்துக்கொண்டு சுவாமி அங்கு சென்றார். அங்கு நாங்கள் பல அதிசயங்களை பார்த்தோம். பிறகு ஜி.டி.நாயுடு அவர்கள் எல்லாரிடமும் ஒரு பேப்பர், பென்சில் கொடுத்து எங்கள் கருத்துக்களை எழுதித் தரச்சொன்னார். சுவாமியிடமும் கொடுத்தார்.

நாங்கள் அவரைப் புகழ்ந்து தள்ளிவிட்டோம். ஆனால், சுவாமி எழுதியிருந்ததைப் படித்து நாயுடு தலைகுனிந்து நின்றார். சுவாமி அப்படி என்ன எழுதியிருந்தார்? சுவாமி எழுதியதாவது:

 “தாங்கள் ஒரு சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும் இருப்பதை பற்றி மகிழ்ச்சி. ஆனால், உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகளைத் தெரிவிக்காமல், சமுதாயத்திற்கு உதவாமல் இருக்கிறீர்கள்.”

என்று எழுதியிருந்தார். அது உண்மைதான். ஏனெனில், இன்றளவும் இந்தியாவுக்கு திரு. நாயுடுவால் எந்தப் பலனும் இல்லை. இதை சுவாமிகள் அன்றே கூறினார்.

ஒருமுறை மத்திய அமைச்சர். திரு. சி. சுப்பிரமணியம் சுவாமியை பார்க்க வந்திருந்தார். வந்தவுடன் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமியை பார்க்கச் சென்றார். சுவாமி,

“வாரும் சுப்பிரமணியரே! உம் நெற்றியில் இருப்பது காலையில் வைத்த திலகமா? தற்சமயம் வைத்த திலகமா? அல்லது எனக்காக வைத்த திலகமா?”

என்று ஒரு பிடிபிடித்தார். சி.எஸ் உட்பட அனைவரும் சிரித்தனர்.

1954ஆம் ஆண்டு சுவாமியின் தோழர் கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் தபோவனத்திற்கு வருகை புரிந்தார். அவர் ஹிந்தி மொழியைத் தமிழகத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்கு சுவாமி இப்போதைய சூழ்நிலையில் இந்த திட்டம் தோல்வியடையும் என்றார். அதுபோலவே ஆயிற்று.

இளமையில் ஆக்ஸ்போர்டு தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஒரு தங்க பட்டன் சாமிக்கு கொடுத்திருந்தார்கள். அதை அவினாசிலிங்கம் பார்த்தார். “சுவாமிக்குத் தங்க பட்டன் தேவையில்லை. எனக்குத் தேவை” என்று சொல்லி வாங்கிச் சென்றுவிட்டார்.

பாண்டிச்சேரி திரு. எஸ். ஸ்ரீராம்,
விடுதி எண் : 425 (1979-80)

மாணவப் பருவத்தில் மறக்க முடியாத விழா சரஸ்வதி பூஜை ஆகும். பலகுழுக்களாக பிரிந்து இப்பூஜையை செய்வோம். சுவாமி அதற்கு மதிப்பெண் போடுவார். பரிசு பெறுவதற்காகப் பல ஜிகினா வேலைகளைச் செய்வோம். ஆனால், சுவாமி பகட்டுக்கோ, ஆடம்பரத்துக்கோ மதிப்பெண் போட மாட்டார். நேர்மையான வழிபாட்டுக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

பணம் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுபாட்டையும் இரகசியமாக மீறி பல பொருட்களை வாங்குவோம். ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்கள் தருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்வோம். விழா நடைபெறும் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகின்ற வழியெல்லாம் கொடிகளும், தோரணங்களும் கட்டி அலங்கார வளைவுகள் வைத்துத் தடபுடலாகக் கொண்டாடுவோம்.

இதே நேரத்தில் தபோவனத்தில் இந்த மூன்று நாளும் சக்தி பூஜை நிகழும். அன்று குருகுலத்தில் பெற்ற பயிற்சி தான் இன்று வீட்டிலும், தொழில் புரியும் இடத்திலும் எல்லா விழாக்களையும் சிறப்பாகக்  கொண்டாட முடிகிறது. குலபதியிடம் பெற்ற பயிற்சி வாழ்க்கை முழுவதும் எங்கள் கூடவே வருகிறது.

மதுரை திரு. எம்.எஸ். சுப்பிரமணியன்,
விடுதி எண் : 366 (1971-72)

அப்பொழுது வருடம் 1970. நான் 10ஆம் வகுப்பு மாணவன். அந்த ஆண்டுக்குரிய சரஸ்வதி பூஜை அலங்காரங்கள், பூஜை பஜனை போன்றவற்றில் எங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக சுவாமிஜி வாழ்ந்த முதல் மாடியிலிருந்த பல அறைகள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு பூஜை நடக்கும். ஒரு வகுப்பு மாணவர்கள் மற்றொரு மாணவர்களை மிஞ்சும் வண்ணம் திறமையை வெளிப்படுத்துவார்கள். சுவாமி பூஜையில் கலந்து கொண்டு மதிப்பெண் போடுவார். பிறகுப் பரிசு தருவார்.

அந்த வருடம் 9, 10-ஆம் வகுப்புக்கிடையே ஒரே போட்டி. இதைப் புரிந்துகொண்ட அவர் இருவரையும் கண்டித்துப் பரிசைப் பகிர்ந்து கொடுத்தார். அன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி கூறியது,

“நிர்மாலியமான  சிலா ரூபத்தை அலங்கரிக்கப் பருத்தித் துணி மற்றும் மலர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.தங்க, வைர நகைகளால் அலங்கரிப்பது அணிகலன்கள் மீது நமக்குள்ள ஆசையின் வெளிப்பாடு. ஆலயத்தின் நகைகளின் இருப்புப் பொருள் வேண்டிய பிரார்த்தனைகளை அதிகரிக்குமேயன்றி ஆழ்மனதின் இருப்பை அறிய உதவாது. பொருள் மீது மனிதன் தன்னுடைய பற்றுதலை குறைக்க குறைக்க அவனிடம் உள்ள பிரம்மானந்தம் வெளிப்பட்டு அவனுக்கு பேரானந்தம் கிடைக்கும். இன்றும் திருப்பராய்த்துறை கோவிலையும், அதிலுள்ள சிவபெருமானையும் பார்த்தால் அத்திருமேனி பருத்தி வஸ்திரம் மற்றும் மலர்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த எளிமை நமக்கு மனநிறைவைத்தரும். ஆகவே எளிமையை கடைப்பிடிப்போமாக!”

சென்னை. திரு. கே. கோபி கிருஷ்ணன்,
விடுதி எண் : 285(1980-81)

மார்கழி பஜனை “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்”  என்று கண்ணன் சொன்னான். மார்கழி பிறந்து விட்டால் தினமும் காலை 4.00 மணிக்கு பஜனை கோஷ்டியாக மாறிவிடுவோம். சுவாமி வழிநடத்த அவர் பின்னால் ஒரு நாளுக்கு ஒரு வகுப்பாக திருப்பாவை, திருவெம்பாவை, பஜனைப் பாடல்கள், நாமாவளிகள் பாடிக்கொண்டு தபோவனத்தைச் சுற்றி வலம் வருவோம்.

ஒருபக்கம் தூக்கம் வரும். சுவாமியின் பார்வை பட்டால் தூக்கம் பறந்துவிடும்.

மாட்டுப் பொங்கல். குருகுலத்திற்கு தினமும் பால் வழங்கும் எங்கள் இனிய பசு மாடுகளை சுத்தமாக குளிப்பாட்டி, அலங்காரம் செய்து மாலையில் வழிபாடு நடத்துவோம். கோபால கிருஷ்ணனின் படம் வைத்து மாட்டுப்பட்டியில் சுவாமி தலைமையில் வழிபாடு நடந்த பின் படுக்கை, மாட்டுப்பட்டி இவற்றில் உழைக்கும் அனைத்து தொழிலாளர் குடும்பத்தினருக்கும் எங்கள் விடுதியில் பொங்கலிட்டு மகிழ்வோம்.

காணும் பொங்கல். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும், வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுவாமிஜியை கண்டு ஆசி பெற நிறைய பேர் வருவார்கள். அப்போது தான் எங்களுக்கு  சுவாமியின் அருமை தெரியும். அவ்வளவு பெரிய மகானுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து பெருமைபடுவோம்.

பெயர் கூற விரும்பாத மாணவர்.

ஒரு பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பழைய மாணவர் ஒருவர் லஞ்சம் பற்றி கருத்து கேட்டபோது சுவாமி சொன்னது, “இந்தியாவில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது மற்றுமொரு சுதந்திர போராட்டமாகும். ஆங்கிலேயராகிய அன்னியர்களை விரட்டுவதற்காக விடுதலை போராட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், லஞ்சத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்தில் நாம் எதிர்க்கப்போவது வெள்ளைக்காரனை அல்ல. நம் கூடவே இருந்து பாரதத்தைப் பாழ்படுத்தும் நம் அண்டை வீட்டுக்காரனை, கடமை துரோகியை. எதிரிகளுடன் சண்டையிடுவதை விடத் துரோகிகளுடன் சண்டையிடுவது மிகச் சிரமமான காரியமாகும்.

உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இலஞ்சம் என்பது தற்காலத்தில் பெரியவர்களால்கூட நியாயப்படுத்தப்படுகிறது. பழைய மாணவர் கூட்டம் ஒருங்கிணைந்தால் லஞ்சத்தை தம் தம் பகுதிகளில் ஒழிக்கமுடியும். முதலில் நாம் அதை வாங்காதிருந்து பழகுவோமாக.

 லஞ்சம் கொடுத்துப் பழகியவர்கள் மிக அவசியமான, நல்ல காரியங்கள் நடைபெறுவதாக இருந்தால் கொடுத்து சாதித்துக்கொள்ளுங்கள் தவறேதுமில்லை.

சின்ன சேலம்  திரு. ஆர்.எம். அருணாச்சலம்,
விடுதி எண் : 68 (1975-76)

ஒவ்வொரு மாதமும் தபோவனத்தில் பெளர்ணமி வழிபாடு நிகழ்வது வழக்கம். மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை விட சித்திரை மாத பெளர்ணமிக்கு  தனிச்சிறப்புண்டு.
 
நிலவின் முழு அழகைக் கண்டுக்களிக்க வேண்டுமானால் சித்திரா பெளர்ணமிதான் சிறந்த நாள். இந்திர விழாக்கூட சித்திரா பெளர்ணமி அன்று தான் நடந்ததாக கூறுவர். தபோவனத்தில் அன்று மாலை வேளை நெருங்க நெருங்க மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சி.

காவிரி ஆற்றங்கரையில்  நிலவொளியில் “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே ” என்று ஆரம்பித்து ஐக்கிய வணக்கம் (கூட்டு வழிபாடு) நிகழும்.

இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள காவிரி ஆற்றங்கரைக்கு திருச்சி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து உயர் அதிகாரிகளும், பிரமுகர்களும் வருகை புரிவர். வழிபாடு முடிந்தவுடன் அறுசுவை விருந்து உண்டபிறகு சுவாமிஜி தலைமையில் செவிக்கு விருந்து படைப்பது தான் சத்சம்பாவணை நிகழ்ச்சியாகும். மாணவப்பருவத்தில் மறக்கமுடியாத நிகழ்ச்சி காவிரி ஆற்று விருந்து.

மதுரை  பேராசிரியர். திரு. கே. ராமமூர்த்தி,
விடுதி எண் : 37

(தபோவன பொதுக்குழு உறுப்பினர், பழைய மாணவ சங்க செயலர், திருவேடகம் விவேகானந்த கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் செயலர்)

எங்கள் குருகுலத்தில் எங்கள் குருநாதர் சுவாமி சித்பவானந்தருடன் மாணவர்கள் இரவு சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் விருப்பம்போல் விளையாடுவார்கள். லீவு நாட்களில் மாணவர்களோடு சுவாமி செஸ் விளையாடுவார். எதிரணியில் விளையாடும் பையனை பார்த்து, “டேய்! அழுவுணி ஆட்டம் ஆடறாண்டா” என்று கிண்டலடிப்பார். அந்தப் பையன், “இல்ல. நல்லாதான் ஆடேறன்” என்று சாமியுடன் சண்டை போடுவான்.

நீச்சல் குளத்தில் சின்ன பையனைத் தன் தோளில் தூக்கி கொண்டுபோய் ஆழமான இடத்தில் போட்டு விடுவார்கள். அவன் திண்டாடும் போது உதவி செய்வார்கள்.

பிரார்த்தனைக் கூடத்தில் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தாகவேண்டும். இப்படி விளையாட்டும் கட்டுப்பாடும்  சேர்ந்த ஒரு வாழ்க்கை. மாணவர்கள் சுவாமியை மிகவும் நேசித்தார்கள். அந்த சிறிய வயதில் எப்படிப்பட்ட பெரியவருடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது அந்தப் பையன்களுக்குத் தெரியாது.

அதே நேரத்தில் சமுதாயத்தில் பெரிய பதவியில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் அந்தஸ்த்தில் உள்ளவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் சுவாமியிடம் வரும்போது கைகட்டி, வாய்பொத்தி வருவதை இந்தப் பையன்கள் பார்க்கிறார்கள். பல மேல்நாட்டுக்காரர்கள் வந்து தங்கள் ஐயங்களை போக்கிக்கொண்டு திருப்தியாகத் திரும்புகிறார்கள். இதையயல்லாம்  அறியாப் பருவத்தில் இந்த மாணவர்கள் பார்க்கிறார்கள். ஓரளவு புரிகிறது; புரியாமலும் இருக்கிறது.

படித்து முடித்து வயதான பிறகு சுவாமியுடன் பழகியதே, விளையாடியதே, அவர் அன்புக்கு பாத்திரமானதே பெருமையுடன் நினைத்து பார்க்கப் போதுமானதாக இருக்கின்றன.

இவர்கள் அனைவருமே கடவுளுடன் தான் வாழ்ந்தார்கள். கடவுள் இவர்களுடன் வாழ்ந்தார்.சிலர் இவரை கீதா சாமியார் என்று சொல்வார்கள். சிலர் தென்னாட்டு விவேகானந்தர் என்று சொல்வார்கள்.

சுவாமிஜி அவர்களுடைய காலத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் ஏனென்றால் அவர்கள் கடவுளுடன் வாழ்ந்தார்கள். கடவுள்அவர்களுடன் வாழ்ந்தார். நாங்கள் அனைவரும் அவரை கடவுளாகவே பூஜித்து வருகிறோம்.

ஸ்ரீலங்கா  திரு. ஏ. அரன்மகன், 
விடுதி எண் : 46 (1961-62)

சுவாமியின் பாடசாலைக் கல்வியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவனைத் தண்டிக்கமாட்டார். ஆனால் ஒழுக்கம் தவறுகின்ற மாணவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். கடமை நேரங்களில் கண்டிப்பாக இருக்கும் சுவாமி ஓய்வு நேரங்களில் எங்களுடைய சேஷ்டைகளைப் பொறுத்துக் கொள்வார்.

ஈரோடு  திரு. கே. மகாலிங்கம்,
விடுதி எண் : 391 (1984-85)

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது அந்தர்யோகத்திற்கு வருபவர்கள் தங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள இரவில் தபோவனப் புல்தரையில் கூடுவார்கள். பெரியசுவாமி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். ஒருநாள் இரவு பக்தர் ஒருவர் பெருச்சாளியை  விஷம் வைத்து கொன்று விட்டதாகவும், அது பாவமா என்றும் சுவாமியிடம் கேட்டார். சுவாமி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார் சுவாமிகள். கரப்பான்பூச்சிகள் நூற்றுக்கணக்கில் ஸ்ரீ ரெங்கநாதருடைய விக்கிரகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

தீபாராதனை காட்டும்போது திருமால் மீது இவைகளையும் பக்தர்கள் பார்த்தார்கள்.

பக்தர்களுக்குத் தீர்த்தம் வைத்திருக்கும் பாத்திரத்திலும் அவை இருந்தன. ஆராதனை செய்யும் பட்டர்கள் அதை லட்சுமி பூச்சி என்றார்கள். “ஏன் அந்தப் பெயர் வைத்தீர்கள்?” என்று கேட்டால் “திருமால் மீது தங்கியிருக்க திருமகளுக்கு தானே உரிமை உண்டு? அதனால் தான் லட்சுமி பூச்சி” என்கிறோம் என்று பதில் வந்தது.

அப்பூச்சிகளைக் கொல்ல வேண்டுமென்று சொன்ன போது ஆட்சேபணை வந்தது.

நிர்வாகத்திலிருந்த நல்லவர் ஒருவர் அதை பூச்சிமருந்து தெளித்து ஒழித்தார். சமயம் என்ற பெயரால் ஆரோக்கியத்திற்கு இடைஞ்சல் செய்யும் உயிரிகள் விருத்தியடைய இடம் தரக்கூடாது. நோயுண்டு பண்ணும் கிருமிகளைக் கொல்லுவது நம் கடமையாகும். விவசாயம் செய்பவர்கள் பூச்சி மருந்து அடிப்பதில்லையா?

மனிதனுடைய உணவை பங்குபோடும் எலி, பெருச்சாளி இவைகளை கொன்றால் தான்  நாம் பட்டினி கிடக்காமல் இருக்கமுடியும். ஆகவே இவைகளைக் கொன்றே ஆக வேண்டும். கிருஷ்ணன் அர்ஜூனனிடம் பொதுநலனுக்காக உன் ஆசிரியரையும், தாத்தாவையும் கொன்று விடு என்று உபதேசித்தது நினைவில்லையா? மனித வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்கும் சிற்றுயிர் இனங்களை கொல்வீர்களா? என்று சுவாமி சொன்னார்.

நானும் எங்கள் தோட்டத்திலிருந்த எலிகளை எல்லாம் அழித்தேன்.

ஸ்மரண சுகம்
நெல்லை அரசன் நடேசன்
தபோவன முன்னாள் மாணவர்

48 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிஜி அவர்களின் பள்ளியில் படித்த மாணவன் என்பது மட்டுமல்ல, அவர்களின் ஸ்பரிஸம் பட்டது இந்தத் தேகம் என்ற ஒரே ஒரு தகுதியுடன் நிற்கிறேன்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.

என்று குரு உருவிற்கு ஏற்றம் சொன்னார் திருமூலர்.

1950 என்று நினைக்கிறேன். காவேரி கரைபுரண்டு ஓடுகின்ற மாமரங்களும், தென்னை மரங்களும், பச்சை வயல்களும் செழித்துச் சூழ்ந்த அந்தத் திருப்பராய்த் துறையில் நான் பெரிய ஸ்வாமிகளைக் கண்டேன். இன்னும் ஸ்வாமிஜி அவர்களின் அந்தக் கம்பீர உருவமும், கண்டிப்பும், கருணையோடு குழந்தைகளான எங்களோடு மற்றொரு குழந்தையாய் ஆடி மகிழ்ந்ததையும், நாங்கள் சேட்டை பண்ணிவிட்டு அவரிடம் வாங்கிய அடியையும் நினைத்துக்கொண்டு அந்த ஸ்மரண சுகத்திலே உங்கள்முன் நிற்கிறேன்.

நாங்கள் இருக்கும்போது நீச்சல் குளம் கிடையாது. அதிகாலையில் ஸ்வாமிகள் எல்லாரையும் குளிக்கக் காவேரி ஆற்றிற்குக் கூட்டிச் செல்வார்கள். சில நேரம் நீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் அங்கும் இங்கும் அவரைத் தேடுவோம். திடீரென்று வெளியே வருவார்கள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் காதை அடைத்துக் கொண்டு எங்கள் நடுவிலே கோபியர்களுக்கு நடுவில் நிற்கும் கண்ணன் போல நிற்பார்கள்.

சிறுவர்களான நாங்கள் 30, 40 பேர் இருப்போம். அவர் மேல் தண்ணீரை வாரிவாரி இறைப்போம். பொறுமையாகப் பலநேரம் அப்படியே இருப்பார்கள்; எங்கள் கை வலிக்கும்வரை.

நாங்கள் சிறுவர்கள்தானே. 10, 12 வயதுதானே. சோர்ந்து விடுவோம். அப்போது ஸ்வாமி சிறுவர்களான எங்கள் முகத்தில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் இங்குமங்கும் ஓடுவோம். சில நேரம் எங்களைத் தூக்கித் தனது திரண்ட முதுகின் மீது வைத்துக் கொண்டு தண்ணீரில் தூக்கிப் போட்டு விடுவார்.

“குதி. நீந்தி வா” என்று சொல்வார்கள்.

இப்படி நீச்சல் சொல்லித் தருவார். இப்படிப் பிரியமாக எங்களோடு இருந்தாலும், மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார்கள். காலையிலே சரியான நேரத்தில் எழுதல், காலம் தவறாது பூஜையில் கலந்துகொள்ளுதல், படித்தல், சிறுசிறு கைங்கர்யங்கள் செய்தல் இவைகளில் ஒழுங்காக இல்லாமல் கவனம் இல்லாது விளையாட்டாக இருந்துவிட்டால் ஸ்வாமிகளுக்கு மிகவும் கோபம் வந்துவிடும். நமக்கு அடி கிடைக்கும்.

அன்னாரின் கோபமும், அவர் கொடுத்த தண்டனையும் இன்று பரிபூர்ண ஆசிர்ம்வாதமாக இருப்பதை உண்மையிலேயே நான் உணர்கிறேன். அந்தச் சின்ன வயதில் படிப்போடு ஒழுக்கத்தையும் பக்தியையும் ஊட்டினார்கள். ஸம்ஸ்கிருதம் தெரியாவிடினும் எத்தனையோ ஸ்லோகங்களை அந்தப் பள்ளியில் கற்றுக்கொள்ள முடிந்தது.

இரவு உணவுக்குப் பின் ஹாஸ்டலின் நடுவிலே உள்ள இடத்தில் நாங்கள் ஓடிவிளையாடிக் கொண்டிருப்போம். ஸ்கேட்டிங் விளையாடுவோம். திடீரென்று மாடியில் இருந்து மிட்டாய், சாக்லேட் மழை பொழியும்.

மேலே ஸ்வாமிஜி இருந்துகொண்டு ஒவ்வொருவருக்காக மிட்டாயை எறிந்து கொண்டிருப்பார்கள். நாங்கள் ஓடி ஓடி அதைப் பொறுக்கி மகிழ்வோம்.

சில இரவுகள் எங்கள் முன் உட்கார்ந்து பல நல்ல கதைகள் சொல்வார்கள். கேள்விகள் கேட்கச் சொல்வார்கள். ஹாஸ்டலைப்  பெருக்கிச் சுத்தம் செய்வது எல்லாம் நாங்கள்தான் செய்ய வேண்டும். இங்கும் இப்போதுள்ள குழந்தைகள்தான் செய்கிறார்கள். குளியலறை மட்டுமல்ல. கக்கூஸையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்வாமிகளும் தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு எங்களுடன் சேர்ந்து சுத்தம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக இது நடைபெறும். இப்படி எல்லாக் கைங்கர்யங்களிலும் அவர் தானும் சேர்ந்து கொள்வார்.

சிறுவர்கள் நாங்கள்தான் தயார் செய்த உணவைப் பரிமாற வேண்டும். ஹாஸ்டலில் இரவில் சில நேரம் விழித்திருந்து காவல் புரிய வேண்டும். இப்படி குருவின் கைங்கர்யம் என்று எப்போதுமே நாங்கள் ஆனந்தமான ஒரு அனுபவமாகச் செய்து கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் ஒரு உண்மை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. ஏகநாதர் என்பவர் ஜனார்த்தன ஸ்வாமி என்ற குருவிடம் வாசம் செய்தாராம். பல ஆண்டுகளாக ஆசிரமத்தில் சமையல்வேலை, ஆசிரம வரவு செலவு கணக்குகள் பார்த்தல், குரு பத்தினிக்குத் தேவையான சாமான்கள் சேகரித்துக் கொடுத்தல், உடன் படிக்கின்ற மாணவர்களைக் கவனித்துக் கொள்ளுதல், குருவிற்குத் தேவையான எல்லாப் பணிகளையும், கைங்கர்யங்களையும் செய்வது இப்படிப் பல ஆண்டுகள் அவர் செய்து வந்தார். படித்தவர்கள் எல்லாம் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

ஒருநாள் ஆசிரமக் கணக்கில் 10 பைசா குறைந்துவிட்டது. அதற்காக இரவில் வெகுநேரம் விழித்துக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். குருநாதரும் ஏதோ விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறதே என்று கேட்டுக்கொண்டே வந்தார். இவர் அந்தக் கணக்கில் லயித்து இருந்ததால் குருநாதர் வந்ததைக் கவனிக்கவில்லை. ஏகநாதர் ஏதோ சத் விஷயமாகச் சிந்திக்கிறார் என்று குருநாதர் போய்விட்டார். கொஞ்ச நேரம் கழித்து,  “கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன்” என்று ஏகநாதர் கூப்பாடு போட்டார்.

உடனே குருநாதர் ஓடிவந்து ‘என்னப்பா? என்ன கண்டு பிடித்தாய்?’ என்று கேடார். ‘10 பைசாவைக் கண்டு பிடித்து விட்டேன்.’ என்று பதில் சொன்னார் ஏகநாதர்.

குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமி மிகவும் வருத்தப்பட்டார். “நம்மிடம் இந்த சிஷ்யன் பல வருடங்களாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ஸாட்சாத்காரம் வரவில்லையே. இப்படிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறானே” என்று மனதில் நினைத்துக்கொண்டு போய்விட்டார்.

மறுநாள் காலையில் ஏகநாதர் ஆற்றில் குளித்து விட்டு சமையலுக்காகக் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அரச மரத்தடியிலே தத்தாத்ரேயரின் தரிசனத்தை குருவின் அருளால் கண்டார். தத்தாத்ரேயருக்கு வணக்கம் செலுத்தினார். மறுபடியும் குடத்தை எடுத்துக்கொண்டு ஆசிரமம் சென்று விட்டார். குடத்தை இறக்கி வைத்துவிட்டு சமையல் காரியங்களைச் செய்யத் துவங்கினார். அப்போது குரு வந்து கேட்டார்.

‘ஏகநாதா, உனக்கு ஏதாவது ஸாட்சாத்காரம் கிடைத்ததா ? ஏதாவது, தெய்வக்காட்சி கண்டாயா?’

‘ஆமாம். குருவின் அருளால் தத்தாத்ரேயரைத் தரிசனம் பண்ணும் பாக்யம் கிடைத்தது.’

குருவிற்கு மிகவும் வருத்தம். ‘வெகு சாதாரணமாக, சுலபமாகக் கிடைத்ததால் அல்லவோ இந்தத் தெய்வீகக்காட்சியின் அருமை இவனுக்குத் தெரியவில்லை. தெய்வீகக் காட்சி கிடைத்த பின்பு உன்மத்தனகப் பித்தனாக அல்லவோ ஆகிவிடுவார்கள். இவன் மறுபடியும் சென்று அடுப்புப் பற்ற வைக்கின்றானே’ என்று கூறினார்.

அதற்கு ஏகநாதர் சொன்னார்: ‘குருநாதா ! நான் இவ்வாசிரமத்தில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். என்றைக்காவது உம்மிடம் ஸாட்சாத்காரம் வேண்டும் என்றோ தெய்வீகக் காட்சியைக் காட்டுங்கள் என்றோ கேட்டதில்லையே. எனக்குத் தெய்வம் என்றோ குரு என்றோ வித்யாசம் கிடையாது. தெய்வம் என்றால் எனக்குத் தாங்கள் தானே. அப்படியே தெய்வக் காட்சியை எனக்குக் காட்டினீர்கள். அத்தெய்வம் காட்சி கொடுக்கும்; அப்புறம் போய்விடும். ஆனால், இந்தத் தெய்வமான குருநாதரோ எப்போதும் இங்கேயே இருக்கிறீர்கள். நான் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். பேசிக்கொள்ளலாம். ஆனால், அப்படி அந்தத் தெய்வத்தோடு பேசமுடியாதே. நான் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தங்கள் பாதங்களைப் பிடித்து விடலாம். உங்களுக்கு என்ன கைங்கர்யம் வேணுமானாலும் செய்யலாம். அந்தத் தெய்வத்திற்கு அப்படிச் செய்ய முடியாதே. அப்படி இருக்கும்போது எனக்குக் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் குருநாதர் ஆகிய தாங்கள் அல்லவோ ?

இதைவிட்டு வேறு எந்தத் தெய்வக்காட்சி வேண்டும்?

கேட்டவுடன், குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமிகள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அப்படி ஒரு குரு பக்தியும், குரு கைங்கர்யமும் எங்கட்குக் கிடைத்தது.

50 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஏகநாதர் பின்னால் ஒரு பெரிய மகானாக வந்தார். ஸாட்சாத் கண்ணபிரானே அவருக்குச் சிலகாலம் தொண்டனாக வந்து கைங்கர்யம் செய்ததாகச் சொல்வார்கள்.

ஆக, குருவுக்கு நாம் கைங்கர்யம் செய்தால், தெய்வம் கண்டிப்பாக நமக்குச் செய்யும். விபரம் தெரியாத அந்தப் பிஞ்சு வயதிலே எனது தாய் தந்தையர் என்னைச் சித்பவானந்த மகானிடம் ஒப்படைத்தார்கள். ஆதலால், இன்று எனக்குப் பல மகான்களைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டி உள்ளது. இன்பமும், துன்பமும் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்தாலும் அறிந்தும் அறியாத ஒரு பேரானந்த நிலையை உணர முடிகிறது.

இதெற்கெல்லாம் காரணம் அறியாத வயதிலே, இவர்தான் குரு என்று தெரிவிக்காமல், எனக்கு குருவாக வந்தார் சித்பவானந்த ஸ்வமிகள்.

நமது பெரிய ஸ்வாமிஜி அவர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை தான். ஸ்வாமிஜையைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியாது.

ஸ்வாமிஜியைத் தெரிந்து அவரைப் போற்றுவதற்கு அல்லது அவர் விட்டுச்சென்ற பல அரிய பொக்கிஷங்களை சிறுவர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அவைகளை எல்லாம் அவர்கள் செய்து கொண்டிருந்தாலும், வருகின்ற சந்ததியர்க்கு இன்னும் அதிகமாக, எந்த முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

அவர் செய்த பல கல்வித் தொண்டுகள், ஆன்மீகத் தொண்டுகள், அவற்றை எந்த அளவிலே செய்தார் என்பதை மக்களுக்குச் சொன்னால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

(தொடரும்…)

 

13 Replies to “[பாகம் 2] குதி. நீந்தி வா !”

  1. நன்றி.
    வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
    நன்றியை மீறிய அந்த உணர்வைச் சொல்ல என்னிடம் வார்த்தையோ யோக்யதையோ இல்லை.
    வணங்கி நிற்கிறேன்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  2. அருமையான தொகுப்பு. அந்தக் காலம் ஞாபகம் வருகிறது. 80களில் தபோவனத்திற்குப் போவதும், மஹாசிவராத்திரி காலங்களில் தோப்பில் நள்ளிரவு வரை நடக்கும் ஜப ஹோமமும் மறக்க முடியாதவை. அப்பொழுதெல்லாம் சுவாமிஜியின் பிரஸன்னம் இன்றும் நினைவில் நிற்பது. பிரம்மச்சாரி தோழர்களுடன் அங்கு இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஆன்ம சாதனைகள் செய்தது மறக்க முடியாதது. சித்பவாநந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் இன்னும் விரிவாக வரவேண்டும். நன்றி.

  3. //..கரப்பான்பூச்சிகள் நூற்றுக்கணக்கில் ஸ்ரீ ரெங்கநாதருடைய விக்கிரகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன…//

    அம்பாளின் மேல் என்று படித்த ஞாபகம். பெருமாளின் மேலா ?

    பிறந்தால் ஜார்ஜ் புஷ் வீட்டு நாய்க்குட்டியாகப் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கத்துக் கரப்பான் பூச்சியாக. 🙂

    .

  4. // நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால்,

    1. நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள்.

    2. இரண்டாவதாக இனி அந்தத் தவறை செய்யமாட்டாய் என்று இரண்டாம் பொருள்.

    3. மூன்றாவதாக இந்தத் தவறுக்கு தண்டனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பொருள்.

    உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன”

    என்று கூறி எங்கள் சிந்தனையை தெளிவடையச் செய்தார்கள். //

    அருமையான விளக்கம்.

  5. சுவாமிக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்பதிலிருந்து.. நீச்சல் பழகுவது.. விழாக் கொண்டாடுவது.. கற்றதைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பது.. என்று அழகழகாக பற்பல விஷயங்களை காட்டிக் கொடுத்த சுவாமிகளின் பெருமையைச் சிந்திக்கும் போதே நெஞ்சில் இன்பம் பொங்குகிறது.. உள்ளம் உருகுகிறது..

    கட்டுரையாசிரியரின் எழுத்துக்களை மேன் மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  6. சார் மிஸ்டர் சோமு சார்

    படிக்கும் வயதில் பெற்றோரை பிரிந்து இருக்கிறோம் என்பதை உணர்தேன். உங்கள் நகைச்சுவை பேச்சில் தனிமையை மறந்தேன். இன்று இந்த தளம் முலம் உங்கள் மீது உள்ள நினைவுகள் மிண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

    உங்களை காணவிரும்பும் மாணவர்களில் நானும் ஒருவன்.

    உங்கள் ஆசியுடன் இன்று நன்றாக உள்ளேன்.

    சுவாமி சித்பாவானந்தா பற்றி தெரியுதோ இல்லை தெரியாதோ. உங்கள் மாணவனாக நான் இருந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.

    உங்கள் நலம் விரும்பும்
    சிவசங்கரன் – விடுதி என்: 91.
    2000 – 2006…….

  7. அன்புள்ள திரு சோமு சாரின் இந்த கட்டுரை தொகுப்பு மிகவும் நேர்த்தியாக
    பள்ளி நாட்களின் இனிய அனுபவங்களை நினைக்க வைக்கிறது…..

    என்றென்றும் இந்த அறிவியல் ஆசிரியர்ருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

    அன்புடன்
    ஜெயராஜ் ரெங்கராஜன்
    178 (1980 -81)

  8. Pingback: Indli.com
  9. “MDA 6837 என்ற எண்ணுள்ள பச்சைநிற அம்பாசிடர் காரில் செல்வார். ”

    அந்தக் காலத்திலேயே அம்பாசிடர் கார் வைத்திருக்கிறார் இந்த சாமியார். பெரும் பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருப்பார்கள் அந்தக் காலத்தில்.

    இந்தக் காலத்தில் இவர் இருந்தால் சின்ன ஜெட் விமானம்கூட வைத்துக் கொண்டிருப்பார். LOL 🙂

    ஒரு சாமியாருக்குக் கார் போன்ற ஆடம்பரங்கள் அவசியமா ? ஆடம்பரங்களை வைத்துக் கொண்டவர்களை தூய்மையானவர் என்று எப்படி எப்படி நம்புகிறீர்களோ ?

  10. Anbum, panbum mikka Vasim Ayya Avargalin Porpaathangalukku en thaalmaiyana vanakkam.18 Madangal, 60 Schools, 7Colleges anaithum investment illamal vandhu serndha properties aagum. To administrate these institutions spread in 15 Revenue Districts in Tamilnadu he went by bus & III class Train.The devotees stressed &compelled him to have a car.Swami didnot accept.Some 100 devotees went on fasting too.He said ,DONT THREATEN ME.One day he had 2 programmes at different places which had no bus &Train routes.He went by Bullock cart BUT late.Punctuality is his BREATH.He doesnt want to sacrifice punctuality.He sacrificed his Negligence to by a car.This is the history of bying MDA 6837.He lived a very simple life,I assure you Vasim Ayya. He was a man of simple living &high thinking.HIS THOUGHT– WORD– ACTION WERE IN a Straight line.Though born in a royal family he took sanyasa like Buddha.I know His PersonalLife. It is a OPEN BooK.—–ARTICLE WRITER VA.SOMU.9750955515 &9262413456.teachersomusir@gmail.com

  11. @டி. ஜே. வாசிம்:

    கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை அதுபோல் மனிதனாக பிறந்த ஒருவன் ஒருவரை நம்புவான் ஒருவரை வெறுபான்.

    நீங்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக பார்க்கசெய்கிறேர்கள்!!! அதுபோல் கடவுளை நம்பும் ஒருவரை நாங்கள் நம்புகிறோம்.

    சுவாமி ராமகிருஷ்ணர் இந்து மதத்தை மட்டும் நம்பியவர் இல்லை அவர் அனைத்து மதகளிலும் சென்று அதன் வழியை உணர்ந்து பிறகு தான் சொல்கிறார் மதம் என்பது ஒரு வழி நாம் ஒரு வழியில் சென்று கடவுளை அடைகிறோம் மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்த வழியில் கடவுளை பார்க்க செல்கிறார்கள்.

    இன்றும் ராமகிருஷ்ண மடம் போன்ற புனிதமான இடங்களில், ரம்ஜான், கிருஷ்ணஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற அனைத்து விழாக்களும் கொண்டாபடுகிறது.

    நீங்கள் ராமகிருஷ்ணரின் சீடர்களை பற்றி படித்துவிட்டு திருப்பரைதுரை பற்றி படித்துவிட்டு, சொல்லுகள் உங்கள் விமர்சனத்தை.

    என்னை மண்ணிக்கவும் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால்.

    ஆடம்பரம் என்பது அம்பாசிடர் கார் வைத்து இருப்பது அல்ல. தனிடம் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு செல்வம் இருந்து அதை தானே அனுபவிக்கணும் என்று எனுகிறானே அவன் தான் ஆடம்பரத்தை தேடுகிறான்!!!.

  12. வாசிம்முக்கு நாம் ஏன் பதில் எழுதுகிறோம் என்று தெரியவில்லை. பதில் சொல்லி விட்டால் அவர் மனம் மாறி விடுவாரா – அந்த காலாத்திலேயே நபிகள் குதிரை வைத்திருந்தார் (- ராமானுஜரும் சங்கரரும் நடந்து தான் இந்தியா முழுவதும் சென்றார்கள் )

    ஒரு இறை தூதருக்கு எதற்கு குதிரைகள், பணியாட்கள். இந்த காலத்தில் நபிகள் இருந்திருந்தால் airforce one ரேஞ்சுக்கு விமானம் வைத்திருப்பார் அந்த விமானத்தில் ஏற ஒரு சின்ன ஜெட் வைத்திருப்பார் (நாய் குலைப்பு – அதாங்க LOL) – அந்த காலத்திலேயே ஆடம்பரமாக வாழ்ந்த அவரை எப்படி நம்புவது – இப்படி கேள்வி கேட்டு நிறுத்திவிடுங்கள் போதும் – அவர் மண்டையை பியித்துக் கொண்டு நபிகளின் வாழ்க்கை சரித்திரத்தை மீண்டும் ஒரு முறை பல இரவு கண் விழித்து படித்து பாய்ண்ட்ஸ் சேகரித்து இங்கு வந்து எழுதுவார் – அவருக்கு வேலை கொடுப்போம் – நாம் வீணே நிறைய எழுதி வேலை செய்ய வேண்டாம்.

  13. Dear Readers ! Please don’t agitate with Mr.Vasim.He is my Guru.Because he is the person who kindled me to write the explanation. Thanks Vasim.—-va.somu–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *