கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

சிறந்த இந்து சிந்தனையாளரும் வரலாற்று ஆய்வாளருமான டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை விசார் மஞ்சன் என்கிற இந்து அமைப்பு நவம்பர்-16 அன்று ஸன்னிவேல் ஹிந்து கோவிலில் ஏற்பாடு செய்திருந்தது.  (ஸன்னிவேல் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் Bay Area எனப்படும் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு ஊர்).

முப்பது நாற்பது பேர் வந்திருந்தார்கள். நானும் சில நண்பர்களும் போயிருந்தோம். காலனியத்திலிருந்து இந்து மனநிலையை விடுவித்தல் (Decolonizing the Hindu Mind) என்பதுதான் அவர் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. பல விஷயங்கள் குறித்து சரளமாய்ப் பேசினார். பேசியதிலிருந்து சில குறிப்புகள்:

கிறித்தவ ஆக்கிரமிப்பும் இந்து எதிர்வினைகளும் குறித்து:

– இந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது

– ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான தத்துவார்த்த எதிர்த்தளத்தை இந்து அறிவியக்கங்கள் கட்டியெழுப்பி இருக்க வேண்டும். மாறாக, பிரம்ம சமாஜ், ஆரிய சமாஜ் போன்ற நவீன இந்து மலர்ச்சியின் தொடக்க கால சமூக இயக்கங்கள் ’நாங்களும் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம், நாங்களும் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை’ என்றெல்லாம் சொல்லி இன்னொரு ஆபிரகாமிய மனோபாவமாக அறிவியக்கத்தைத் தள்ளிக்கொண்டு போய் விட்டார்கள் (அந்தக் காலகட்டத்தில் மிக நல்ல நோக்கத்துடன் தான் அவ்வாறு சொல்லப் பட்டது என்றாலும் கூட). கிறித்துவத்திற்கான நியாயத்தை இந்து மத்திலிருந்தே எடுத்துத் தந்தார்கள். இது இந்து அறிவுஜீவி மனோநிலையில் உருவான காலனியத் தாக்கம் ஆகும். இந்த மனோபாவத்திலிருந்து இந்துக்கள் வெளிவர வேண்டும்.

– இந்து அறிவு ஜீவிகள் ஆபிரகாமியத்தை எதிர்க்கும் போக்கில் அதன் ”ஒரே தெய்வம்” போன்ற கருத்துகளை உள்வாங்கியிருந்தாலும், நடைமுறையில் சாதாரண இந்துக்கள் அப்படியில்லை. அவர்கள் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள், அவர்களது தளம் சரியான இந்து தத்துவத் தளத்திலேதான் காலூன்றி இருக்கிறது.

– எல்லா மதமும் சம்மதம் என்று சொல்லும் இந்துக்கள் உண்மையில் ஒரு மதம் குறித்தும் தெரியாதவர்கள். சர்வ தர்ம சமபவம் என்பது இந்து தர்மத்தின் அடிப்படையிலேயே கிடையாது. கடந்த சில நூற்றாண்டுகள் (மிஷனரிகள் புகுத்திய ஆதி வாசி என்கிற செயற்கையான வார்த்தை போன்று) இட்டுக் கட்டப்பட்ட சொலவடை அது. இந்து தர்மம் கடுமையாக வாதப்பிரதிவாதம் செய்யும் மரபுடையது. எல்லாம் ஒன்றுதான் என்றால் வாதமே தேவையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் பரிதாபத்துக்குரிய எள்ளப்பட வேண்டிய எளிய முட்டாள்கள்.

– ஆபிரகாமிய மதங்கள் ”மாறா உண்மை, அதை வெளியிடுபவர்” என்கிற கோட்பாட்டை அடிப்படையாய்க் கொண்டது. இந்து தர்மம் ”தன்னியல்பு” அல்லது ஸ்வதர்மம் என்பதை அடிப்படையாய்க்கொண்டது. இன்ன பலன் கிடைக்கும் என்பதால் தன்னியல்பு முக்கியத்துவம் பெறுவதில்லை. தன்னியல்புடன் இருப்பதே உள்ளமைதியை, ஒழுங்கை, தர்மத்தைக் கட்டியமைக்கிறது என்பதாலேயே அது முக்கியமாகிறது.

– கிறித்துவம் இஸ்லாம் போன்ற கூட்டுவழிபாட்டு மதங்களுக்கு இருக்கும் சாதகங்கள் இந்து தர்மத்திற்கு இல்லை. ஆனால் அந்த கூட்டம் சேர்க்கும் வலிமை என்பது எளிதாகக் கரைந்தும் போகக்கூடியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மறுமலர்ச்சி கால அறிவுப்பரவல் நிகழ்ந்த அரை நூற்றாண்டிலேயே கிறித்துவம் பெரும் சரிவடைந்து விட்டது.  இந்தப்பின்னணியில்தான் கிறித்துவத்திற்கெதிராக அறிவியக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

(கூட்டம் முடிந்து பேசிக் கொண்டிருக்கையில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “கிறித்துவ இறையியல் குறித்த அறிவும் விமர்சனமும் இந்து சமுதாயத்தை கிறித்துவ மதமாற்றத்திலிருந்து தாக்கும் தடுப்பூசி என்றீர்கள். ஆனால் இந்திய அளவில் மதம் மாறுபவர்கள் இறையியல் காரணங்களுக்காவெல்லாம் மாறுவதில்லையே, பிற சமூக, குழும, பொருளாதார காரணங்களுக்காகத்தானே மாறுகிறார்கள்? அவர்களிடம் இறையியல் ரீதியான விமர்சனங்கள் எந்த அளவுக்கு மதமாற்றத்திற்கு எதிராக எடுபடும்?” என்பது கேள்வி. அவர், ”ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படிபட்ட மதமாற்றத்தை எதிர்க்கும் இயக்கமும் ஒருபக்கம் இருக்க வேண்டும். ஆனால் அதை செய்வது எப்போதுமே எதிர்வினை என்கிற அளவில்தான் இருக்க முடியும். கிறித்துவ இறையியலை பலவீனமாக்கி இந்து இறையியலின் உயர்வை நிலைநிறுத்துவது என்பது முனைப்பு சக்தியை உங்கள் கைக்கு மாற்றுகிறது; அது சிறு குழுக்களிடையேதான் தொடங்கி கீழ் நோக்கிப்பாய்ந்து பரவ முடியும், ஆனால் நீண்டகால பலனை அதுவே தரவல்லது” என்று பதில் உரைத்தார். இந்திய ஆன்மீக குருமார்களுக்கு இப்போது மேலை நாடுகளில் சேரும் கூட்டமும் இவ்வகையானது தான் என்றார். அவர்களுக்கு மது அருந்தும் பார்கள், ஸ்டேடியம்கள் தவிர்த்த வேறு வித்யாசமான குழுச்சூழலை இப்படிப்பட்ட குருக்களின் தியான, யோக மையங்கள் தருகின்றன. அவற்றை எல்லாம் பரிசோதனை செய்து பார்க்க மேலை நாட்டார் முயல்கிறார் என்றார். இந்த ஒப்பீட்டை அவர் சொன்னது எனக்கு முழுமையாகப்பிடிபடவில்லை என்றாலும், ”இப்படிப்பட்ட யோகா குழுமங்கள் அளிக்கும் அதே போன்ற குழுச்சூழலைத்தான் கிறித்துவமும் அளிக்கிறது. வேறு சாத்தியங்கள் உருவாகையில் அவற்றிலிருந்து அவர்கள் வெளியேறுவதும் எளிதாக நடக்கும்- அவ்வாறின்றி கிறித்துவ இறையியல் குறித்த ஆழ் விமர்சனம் நீண்டகால பலன் தர வல்லது” என்று அவர் இதன் மூலம் சொல்லக வந்ததாக நான் எடுத்துக்கொண்டேன்).

– இ
ந்துக்கள் அறிவுத்தளத்தில் இயங்கும்போது நுட்பமாகவும் தொலை நோக்குடனுடனும் நிதானமாகவும் இயங்க வேண்டும். கிறித்துவர்கள் இதில் பல மடங்கு முன்னேறிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கோவா இன்க்வெஸிஷன் கொடுமைகள், இனவாதம், அமெரிக்க பழங்குடிகளை அழித்தது என்று எதை எடுத்தாலும், அதற்கு நிதானமாக, உங்கள் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக வைத்து, உங்கள் ஆயுதங்களை வலுவிழக்கச் செய்யும் பதில்களைத் த்யாரித்து வைத்திருக்கிறார்கள். போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும் ‘ஆமாம் அப்போது பிரச்சனையின் பகுதியாக இருந்தோம், இப்போது தீர்வின் பகுதியாக இருக்கிறோம், இருக்க விரும்புகிறோம்’ என்று சொல்லி அறிவுத்தள விவாதத்தில் உங்கள் வாயை அடைத்து விடுவார்கள். பிறப்பு அடிப்படையிலான சாதியை இந்து இனவாதம் என்று உங்கள்மீதே திருப்புவார்கள். இவற்றுக்கெதிராக நிதானமான அறிவுத்தரப்பை இந்துக்கள்தான் கட்டியமைக்க வேண்டும். காலனிய மனோபாவத்திலிருந்து (அதாவது காலனீய கால காரணங்களைப் பேசிக்கொண்டிருக்கும் மனோநிலையிலிருந்து) வெளி வந்து உங்களுக்கான தரப்பை இந்து ”பொது” அறங்களின் (Hindu Commonwealth ethics) அடிப்படையில் நீங்கள் உங்களுக்கான வெளியை உருவாக்குவது அப்போதுதான் சாத்தியமாகும் என்றார்.

– கிறித்துவம் வெள்ளை இனமாக இன்று இல்லை என்பதையும் அது ஆரம்பத்திலிருந்தே பல இனக்கூட்டங்களுக்கு தாவித்தாவி வளர்ந்த மதம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் எதிகொள்ள வேண்டிய கிறித்துவ மேலாண்மைவாதிகள் இன்று வெள்ளைத்தோலில் மட்டும் வருவதில்லை, மஞ்சள் தோல், பழுப்புத்தோல், கறுப்புத்தோல் என்று சகல தோல் நிறத்திலும் அவர்கள் வருகிறார்கள்.

மேற்குலகம் குறித்து:

– மேற்கு ஐரோப்பாவில் கிறித்துவம் வலுவிழந்து விட்டது, இனிமேல் அந்தப் பழைமைவாதம் தலைதூக்க முடியாது. அதற்குக் காரணம் அறிவுப்பரவல்தான். தன் தரப்பை வலுப்படுத்திக்கொண்டு வந்ததன் மூலமாகவே கிறித்துவத்தின் இறையியலை எள்ளத்தகுந்ததாக, கேலிக்கூத்தான தரப்பாக அது மாற்றியமைத்து விட்டது. எல்ஸ்ட் மிக தீர்க்கமாக’எங்கள் குடும்பத்தில் ஒட்டு மொத்தமாக கிறித்துவத்திலிருந்து வெளியே வந்தோம். இனி திரும்ப அதனுள் போவோம் என்று எண்ணிக்கூடப்பார்க்க முடியாது’ என்றார்.

– இ
ந்து மத அறிவுஜீவிகள் இன்னமும் ’மாக்ஸ்முல்லர், ஆரியப்படையெடுப்பு’ என்று கொந்தளிப்பதையும், பிரிட்டிஷார் மீதும் ”மேற்கின் சதி” மீதும் பழிபோட்டுக் கொண்டிருப்பதையும் விட்டு விலக வேண்டும். உண்மையில் இந்தியா மேற்கிற்கு அதனளவில் முக்கியம் கிடையாது. இந்தியாவைக் கவிழ்க்கவும் பிளக்கவும் சதா மேற்குலகம் சதித்திட்டத்தில் ஆழ்ந்திருக்கிறது என்கிற பிரமையிலிருந்து இந்து தேசியவாதிகள் வெளிவர வேண்டும். இதுவும் காலனீய மனோபாவத்தின் பிரதிபலிப்புதான். சுதந்திர இந்தியாவில் இந்துக்களின் எதிரிகள் உள்ளேதான் இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் தன் விதியை இந்துக்கள் தன் செயல் மூலமாக தானேதான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இன்னமும் வளர்ச்சியடையா சிறுபிள்ளைகள் போல் பழைய வரலாற்றையும், பழைய எதிரிகளையும் குற்றம் சொல்லிப்பழிபோட்டுக்கொண்டு இருக்கக்கூடாது.

(இது என்னமோ எனக்கு ப்ரேக்கிங் இந்தியா புத்தகம் மீதான மறைமுக விமர்சனம் மாதிரித் தோன்றியது. ஆனால் பிரேக்கிங் இந்தியா புத்தகத்தின் அடிப்படையில் பார்த்தால் எல்ஸ்ட் சொல்வது பாதி உண்மை மட்டுமே என்ற எண்ணமே ஏற்படுகிறது. பிரேக்கிங் இந்தியா ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனுடன் முன்பு இது குறித்துப் பேசியபோது கீழ்க்கண்ட விஷயங்களைக் கூறினார்.

மேற்கு இந்தியாவை உடைக்க வேண்டுமென்று சதியுடன் சதா சர்வ காலமும் சோவியத் – அமெரிக்க ஒற்றைப் படை மோதல் போல பைத்தியமாக அலைந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் மேற்குலனின் தெற்காசிய நோக்கர்களும் திட்டமிடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சதா சர்வகாலமும் வாழ்க்கைத் தொண்டாக இதை செய்கிறார்கள். வேர்ல்ட் விஷன் இன்றைக்கு அதிகபணம் ஒதுக்குவது இந்தியாவுக்குத்தான். வேர்ல்ட் விஷன் அமெரிக்க சிஐஏயுடன் இணைந்து செயலாற்றியுள்ளது, அது ஒரு அரசியல் சக்தியாக செயல்பட முடியும் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஐரோப்பிய மையப் பார்வையின் படி பார்த்தால் மேற்குக்கு இந்தியா குறித்து பெரிய அக்கறை இல்லை என்று தான் தோன்றும். ஆனால் மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக ”சாதி இனவாதத்தின் ஒரு வெளிப்பாடே” என ஐ.நா. சபையில் ஏற்கப்பட்டு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், பொருளாதார அரசியல் ரீதியாக இந்தியாவை தரையில் போட்டு நசுக்கலாம். நம்மவர்களே கூட அதற்கு துணை போவார்கள். சாதி அபிமானமா தேசப்பற்றா என்று வந்தால் முன்னது நுணுக்கமாகவும் தந்திரமாகவும் முன்னிறுத்தப்படும் என்பதுதான் வருத்தம் தரக்கூடிய, கசப்பான உண்மை)

ஆரிய இனவாதம் குறித்து:

– ”(ஆரியர்கள்) பத்தாயிரம் வருடத்திற்கு முன் வந்தவர்கள், ஐயாயிரம் வருடத்திற்கு முன் வந்தவர்கள் என்பதற்கும் வலுவான *நவீன* தேசியத்தைக் கட்டமைப்பதற்கும் ஒரு ஒரு சுக்கு சம்பந்தமுமில்லை. அதனை சாவர்க்கார் உணர்ந்திருந்தார் – தன் ஹிந்துத்துவா என்ற புத்தகத்தில் ஆரியர் வருகையை அவர் ஏற்றுக்கொண்டே எழுதியிருக்கிறார்” என்றார் எஸ்ட்.  ஆனால் அதை வைத்து பிரிவினை நெருப்பை உருவாக்க முயலும் முனைப்புகளையும், அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தரப்புகளுடனும் போரிடத்தான் வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார். ”ஆனால் அதுவே உங்கள் பிடித்தபிடியாகி விடக்கூடாது, அது ஓரளவுக்குத் தான் முக்கியம், அதைத் தாண்டிய விசாலமான தொலை பார்வை இந்து அறிவியக்கத்துக்கு அவசியம்” என்றார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து:

– மவுலானா ஆசாத் இஸ்லாமிய அடிப்படைவாதி. அவர் பிரிவினையை எதிர்த்ததற்குக் காரணம் மொத்த இந்தியாவையுமே சிறுபான்மை முஸ்லீம்கள் ஆண்டிருக்கிறார்கள், அதுபோல மொத்த இந்தியாவையுமே இஸ்லாமிய பிரதேசமாக உருவாக்க வேண்டும் என்று எண்ணியதே. அதற்கு மாறாக ஜின்னா ஒரு செக்யுலர் அரசியல்வாதி. தமக்கென்று ஒரு உயர்ந்த இடம் கிடைக்க வாய்ப்பிருந்ததாலேயே பிரிவினை பேசத்தொடங்கினார்.

– இந்தியா பாகிஸ்தான் பிளவை பிரிட்டிஷார் விரும்பவில்லை. காலனி என்றாலும் பிரிட்டிஷார் ஒருங்கிணைந்த இந்திய அரசியல் தேசியம் என்பதை பிரிட்டிஷாரின் உருவாக்கமாகவே பார்த்தார்கள். அதை உடைக்க அவர்கள் விரும்பவில்லை. முஸ்லீம்கள் ஜின்னாவின் தலைமையில் தொடர்ந்து மிரட்டியதாலும், சோஷலிச இந்தியாவுக்கு எதிராக தனக்கான கூடாரத்தை அமைக்க பாகிஸ்தானும் ஜின்னாவும் உதவுவார்கள் என்பதற்காகவும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மவுண்ட்பேட்டன் தலைமை எடுத்த முடிவு அது.

அயோத்தி,அமர்நாத் இயக்கங்கள் குறித்து:

– அயோத்தி இயக்கத்தை பாஜக உபயோகப்படுத்தி ஆட்சிக்கு வந்து பின்னர் சூடு தாங்காமல் கீழே போட்டு விட்டது.

– அ
மர்நாத் இயக்கத்தில் ஆர் எஸ் எஸ் உள்ளே நுழைவதை பிற பல இந்து இயக்கங்கள் விரும்பவில்லை.

– அயோத்தி இயக்கத்தை பல காங்கிரஸ் காரர்கள் ஆதரித்தார்கள். பூட்டா சிங் ராஜீவ் காந்தியை அழைத்து ஷிலாநியாஸ் செய்யப் போவதாகக் கூறினார். ஆனால் பாஜக அதை வெறும் அரசியல் துருப்பு சீட்டாக உபயோகப்படுத்தி விட்டு தூக்கிப்போட்டு விட்டது. அத்வானி மசூதி இடிப்பு தவறென்கிறார். பாஜக பெண் தலைவர் அயோத்தி என்பது இன்றைய நிலையில் செல்லாக்க்காசு என்கிறார். அயோத்தி இயக்கத்தையும் இந்துக்கள் நன்மையையும் பேசி ஆட்சிக்கு வந்த கட்சி இப்படிச்சொல்வது பெரும் சரிவு தான். ஆனாலும், இன்றைய நிலையில் காங்கிரஸ் & அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்த யூ.பி.ஏ அரசு தான் இந்துக்களின் ஒட்டு மொத்த எதிர்த் தரப்பாகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் (காண்டே ராவ்) பின்னர் மேடையில் இவை குறித்து பதில் சொன்னார். ஆமாம், அயோத்தி குறித்த ஏமாற்றம் உண்மைதான் ஆனால் அயோத்தி இயக்கம் ஆரம்பத்திலிருந்தே பாஜகவின் இயக்கம் அல்ல. விஷ்வ ஹிந்து பரிஷத்தால் முன்னெடுக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட இயக்கம் அது என்றார். ஆனால் சூடு தாங்காமல் பாஜக அதைக்கீழே போட்டது ஓரளவு உண்மைதான் என்றார். அமர்நாத் குறித்த எல்ஸ்ட் கருத்தையும் காண்டேராவ் மறுத்தார்; அமர்நாத் இயக்கத்தைப் பின்னிருந்து இயக்கியதில் ஆர் எஸ் எஸ் பங்கு மிக முக்கியமானது, பெண்களை முன்னிறுத்தியும், ஊரடங்கு உத்தரவிருந்த நாட்களில் கூட எல்லோருக்கும் தடையின்றி உணவு வரச்செய்ததிலும் ஆர் எஸ் எஸ் மிக முக்கியப் பங்காற்றியது என்றார். தமிழ் நாட்டில் ஹிந்து முன்னணி போல ஒவ்வொரு காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல சில இயக்கங்களை சங்கம் பிறப்பிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். மொத்தையாக ஒரே ஒரு நிறுவனம் என்றிருப்பது பலவீனமானது என்றும் சொன்னார்.

கேள்வி பதில் நேரம்:

கூட்டத்திலிருந்து ஒருவர் “இந்தக்கால இளைஞர்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் என்றிருப்பவர்கள் அவர்களுக்கு அயோத்தி இயக்கத்தில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது, ஐரோப்பாவில் கிறித்துவம் வலுவிழந்தது என்றால், ஏன் ஐரோப்பாவில் வலதுசாரி கட்சிகள் வலுப்பெற்று வருகின்றன” என்றார். தொழில்நுட்பப் பரவல் இஸ்லாமிய நாடுகளைப்புரட்டிப்போடும். அடிப்படைவாதத்திருந்து கிறித்துவ ஐரோப்பாவை மாற்றியதுபோல் இஸ்லாமிய நாடுகளையும் மாற்றியமைக்கும். அது இந்துக்களுக்கு நல்லதுதான். ஐரோப்பாவில் வலதுசாரி வலுப்பெறுவது இஸ்லாமியர்களுக்கு எதிரானது, அதனாலேயே கிறித்துவம் வலுப்பெறுகிறது என்று அர்த்தம் ஆகிவிடாது என்று பதில் சொன்னார்.

வழக்கம்போல ஆர்வக்கோளாறு ஆட்களும் வந்திருந்தனர். ஒரு இளைஞர் “அப்ப ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்பே சங்கரர் கண்டறிந்து சொன்ன அத்வைதம் ’ஒரே கடவுள்’ தத்துவமில்லையா?” என்று கடுகு வாக்கியத்தில் கடல் போல் பிழைகளை நுழைத்துக்கேட்ட போது ஆபிரஹாமிய ‘ஒரு கடவுள்’ வாதத்திற்கும் அத்வைத ஒருமை என்பதற்கும் உள்ள வித்யாசத்தைப் பொறுமையாய் விளக்கினார் எல்ஸ்ட்.

இன்னொரு தாத்தா எழுந்திருந்து கூட்டத்தில் இருந்த என்போன்ற  சின்னப்பயல்களை நோக்கி, எல்ஸ்ட் சொன்னதை நான் உங்களுக்கு விளக்குகிறேன் என்று தொடங்கி “இந்தியர்கள் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை, எல்லோரின் டி என் ஏவும் ஒரே மாதிரிதான் உள்ளது; அப்படி இல்லை என்று சொல்லி பிரிவினை வளர்ப்பவர்கள் சதிகாரர்கள்” என்று அறிவித்து பெருமிதத்துடன் எல்ஸ்டைப் பார்க்க, “அட இன்னொரு சதிகாரத் தரப்பா, வசதிதான்” என்று சிரித்துக்கொண்டே கமெண்டடித்தார் எல்ஸ்ட். தாத்தா தொடர்ந்து விடாமல் “இல்லை நீங்கள் சொன்னதைத் தான் சொல்கிறேன்,  உள்நோக்கம் கொண்ட தீய சக்திகள்தான் காரணம்” என்று விளக்கி எல்ஸ்டை வாயடைக்கச் செய்தார். நண்பர் ஒருவர் ’டி என் ஏ பற்றி நீங்கள் சொன்னது முழுப்பிழை’ என்று சொன்னது கூட்ட சப்தத்தில் அமுங்கிப்போனது.

இன்னொரு தாத்தா எழுந்து வந்து எல்ஸ்டை வழிமறித்து, எல்லாம் தெரிந்த புன்னகையுடன், என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியாத வகைக்கு இடியாப்பமாய்த் தொடர்ந்து பத்து நிமிடம், எல்ஸ்ட் பேசக்கூட வாய்ப்புத்தராமல், பேசித்தள்ளினார். அவர் கேள்வி கேட்டாரா, அவருக்கு பதில் சொல்ல வேண்டுமா என்றெல்லாம் குழம்பித் தவித்து எல்ஸ்ட் என் பக்கம்  பரிதாபமாய்த் திரும்ப்ய தருணத்தில் ”கிறித்துவ இறையியல் குறித்த அறிவானது, இந்து சமூகத்தை மதமாற்றத்திலிருந்து எப்படிக் காத்து விட முடியும்” என்ற என் கேள்வியைக்கேட்டு விட்டேன். அவரும் கொழுகொம்பாய் என்கேள்வியைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாய் பதில் சொன்னார்.

சுள்ளென்ற வெயில்தான் சிறு நிழலுக்குக்கூட பெருமை சேர்க்கிறது என்பதால் அந்த தாத்தாவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

8 Replies to “கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு”

 1. என் புருஷனும் கச்சேரிக்குப் போனார் என்று இருக்காமல் யாம் பெற்ற அறிவின்பம் பெறுக இவ்வையகம் எனப் பகிர்ந்தளித்து அறிவு ஓம்பும் அண்ணன் அருணகிரி வாழ்க !

  கூட்டத்தில் கலந்துகொள்ளும் சகலவித மானுடர்களின் நடத்தை பற்றியும் சொல்லி இருப்பது கட்டுரைக்குச் சுவை கூட்டுகிறது.

  இந்துத்துவ அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் தளமாக இல்லாமல், கொள்கையை மட்டுமே உறுதியாய் பற்றிச் சற்றுத் தள்ளி நின்று யோசிக்கும் இந்துத்துவத் தளமாக தமிழ் இந்து தளம் விளங்குவது இக்கட்டுரை மூலம் மேலும் உறுதியாகிறது.

  இதைப் போல் தண்ணீரில் இருந்து உயரே இருக்கும் தாமரை போன்ற அறிவியக்கமே உண்மையான அறிவியக்கமாக இருக்க முடியும்.

  Koenraad Elstன் பெயர் உச்சரிப்பு கோயன்ராட் எல்ஸ்ட் அல்ல. கஹ்ன்ராட் எல்ஸ் (kahn-rad elsd) என்பதுதான் சரியான உச்சரிப்பு என நினைக்கிறேன். கடைசியில் வரும் d சத்தம் அதிகம் இல்லாமல் முணுமுணுப்பாக, மென்று முழுங்கி வரும். நரேந்திர மோடியின் நற்பணிகளைப் பற்றிப் பேசும் ஊடகங்கள் போல.

  அயோத்தி இயக்கம் மற்றும் பாஜக பற்றிய கஹ்ன்ராட் எல்ஸின் கருத்து எந்த அளவு சரியானது என்பது கேள்விக்குரியது. இந்துத்துவ அறிஞரான திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அயோத்தி இயக்கத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் சொல்லும் கருத்து மிகச் சரியானதாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

  .

 2. “சத்தம் அதிகம் இல்லாமல் முணுமுணுப்பாக, மென்று முழுங்கி வரும். நரேந்திர மோடியின் நற்பணிகளைப் பற்றிப் பேசும் ஊடகங்கள் போல.”
  களி ரொம்பவும் மிகுந்து இருக்கிறது கணபதியிடம் :)))

 3. மிக நல்ல பதிவு.
  //ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான தத்துவார்த்த எதிர்த்தளத்தை இந்து அறிவியக்கங்கள் கட்டியெழுப்பி இருக்க வேண்டும்//
  எவ்வளவு உண்மையான கருது. நன்றி.

 4. அறிவு சார்ந்த ஆராய்ச்சிக்குப்பின் யாரும் கிருஸ்துவத்தில் சேர்வதில்லை.மதம் மாற்றுபவர்களுக்கு கடுமையான எதிர்ப்பும், தாய்மதம் திரும்ப எளிய வழிமுறையும்,பக்தியும் அறிவும் கலந்த அனுகுமுறை மதமாற்றத்தை தடுக்கும்

 5. மிகவும் சிந்தனைக்கு விருந்தாக இந்த சந்திப்புக் கட்டுரை அமைந்திருக்கிறது.. ஆனாலும் கட்டுரை ஆசிரியர் சிலவற்றைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் சொல்வதால், அவற்றை பூரணமாக விளங்கிக் கொள்வதில் சிறிய இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. இது எனது அறிவுப் பற்றாக்குறையோ அறியேன்..

  காலனியத்திலிருந்து இந்து மனநிலையை விடுவித்தல் என்ற கருது கோள் பற்றிப் பேசுவதற்கு குறித்த நேர ஒதுக்கீடு போதுமானதாயிருந்திருக்காது என்பதை யானும் உணர்கிறேன். தவிரவும், இது பற்றிய செய்திகளை தொடராக இன்னும் சில கட்டுரைகளாக மதிப்பிற்குரிய அருணகிரி அவர்கள் வழங்க வேண்டும் என்பதும் இந்த மயூரகிரியின் விண்ணப்பமாக இருக்கிறது.

 6. மதம் மாற்றம் ஏன் நிகழ்கிறது என்று பார்த்தால் சுயநல ஜாதிய அரசியல்வாதிகளாலும் பொதுவாகவே தன் ஜாதிதான் உயர்ந்தது என்ற பரம்பரையான எண்ணத்திலும் உள்ளவர்களாலும் பெருமளவு வெளிநாட்டுப் பணத்தினாலும் உள்நாட்டு சுயநல தேசவிரோத பணப் பேய்களாலும் நிகழ்கிறது.
  ஈஸ்வரன்,பழனி.

 7. ”ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான தத்துவார்த்த எதிர்த்தளத்தை இந்து அறிவியக்கங்கள் கட்டியெழுப்பி இருக்க வேண்டும்” .இந்தப் பணியை ஒரளவு ஆறுமுகநாவலர் இலங்கையிலும் தமிழகத்தின் சிலபகுதிகளிலும் தொடக்கிவைத்தார் .நூற்றைம்பது வருடங்களைக்கடந்து சிதைந்து போன இம்மரபை மீழ்வாசிப்புச் செய்வதூடாக புதுவழிமுறைகளைக் கண்டடைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *