கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 |  பகுதி 6 | பகுதி 7  | பகுதி 8 பகுதி 9

 

தொடர்ச்சி..

எடுக்கப்படும் முடிவுகள்; அதனால் ஏற்படும் விளைவுகள்

பொதுவுடைமையை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள், தனிப்பட்ட மனிதர்களின் முடிவுகளுக்கு, அவர்களை பொறுப்பேற்கச் செய்யும் நடைமுறையையும் ஆதரித்தாக வேண்டும். நான் கண்டிப்பாக ஆதரிக்கிறேன். திரு. இராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில், பஞ்சாயத்து ராஜ் என்னும் திட்டத்தை உருவாக்கியது நினைவுக்கு வரலாம். இன்றும் கூட, அந்தத் திட்டத்தை முழுமூச்சுடன் ஆதரித்து, நடைமுறைபடுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர் திரு. மணிசங்கர் அய்யர். அந்தத் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நான் பார்க்கவில்லை. ஆனால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். ஒரே ஒரு ஷரத்துடன்.கிராம பொருளாதாரத்தின் பல கூறுகளை, அந்தந்த கிராமப் பஞ்சாயத்து கவுன்சிலிடம் விட்டுவிட வேண்டும் என்பது சரியான கருத்துதான். கிராமப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிப்பது, மருத்துவரை நியமிப்பது, குறிப்பிட்ட அளவில் வரி வசூல் செய்து கொள்வது போன்றவை சரியான அணுகுமுறைதான்.

இந்த முடிவுகள் தங்களுக்கு பயன்தரும் போது காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் அதே மக்கள், முடிவுகளினால் ஏதேனும் சிரமங்கள் ஏற்படும்போதும் அவர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டும் மானியத்திற்காக க்யூவில் நிற்கக் கூடாது.இது கிராம அளவில் மட்டுமல்ல. அதை விட அதிகமாக தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் நாம் கடைபிடித்தே ஆக வேண்டிய ஒரு வழிமுறை. நாம் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். சில பிரச்சினைகளுக்காக எடுக்கப்படும் முடிவுகளைப் பற்றியும், அதற்கும் அந்த தனிநபரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றியும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

 • எங்களின் குடும்ப நண்பர் ஒருவர். குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. சொந்த வீட்டை விற்று விட்டு, வேறு ஒரு புதிய இடத்தில் வீடு வாங்கிக் கொண்டு குடியேறியுள்ளனர். புதிய வீடு கட்டிய பிறகு எஞ்சியுள்ள 15 இலட்சம் ருபாய்களை எப்படி முதலீடு செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களில் பெரும்பாலான பணத்தை முதலீடு செய்து கொள்ளுங்கள். உங்கள் வயதிற்கு அதுதான் பாதுகாப்பானது என்று கூறினேன்.ஆனாலும், ஒரு தனிப்பட்ட மனிதரை நம்பி, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு (பேராசைப்பட்டு) வட்டிக்கு அளித்துள்ளனர்.அந்த நபர் பணத்துடன் ஓடிவிட்டால் கூட என் குடும்ப நண்பரின் மேல் நான் கருணை காட்ட மாட்டேன்.
 • எங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு சாலை விபத்து நடந்தது. 8 பேர் பயணிக்க வேண்டிய டாடா சூமோவில் 15 பேர் பயணித்ததால் விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்கிறது தமிழக அரசு. என்னைப் பொருத்தவரை, விதிகளை மீறுவோர் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இதற்கு இழப்பீடு அளிக்காவிட்டால்தான், பார்க்கிற பொதுமக்களுக்கும் ஒரு பாடம் கிடைக்கும்.
 • நாம் இது போன்ற நிகழ்ச்சிகளை பல முறை கண்டிருப்போம். பல காலம் குடிக்கும் நம் பார்ட்டிகள், வயிறு கெட்டுப்போய் அரசு மருத்துவமனையில் சேருவார்கள். என்னைப் பொருத்தவரை குடிகாரர்களுக்கு இலவச சிகிச்சையே அளிக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் கெடும் என்று நன்றாகத் தெரிந்துதானே குடிக்கிறார்கள். குடிப்பது அவர்கள் உரிமை. பிறகு நிவாரணம் பெற மட்டும் ஏன் நம் வரிப்பணத்தைக் கேட்க வேண்டும்?
 • தற்காலத்தில் அமீர்கான்தானே ஹிட். அவரின் நிகழ்ச்சி ஒன்றில், வெளிநாட்டு வாழ் மணமகன் கிடைப்பதற்காக,மகளின் பெற்றோர் கடன் வாங்கிக் கஷ்டப்படுவதைப் பற்றி உருக்கமாக பஞ்சாபில் இருந்து ஒருவர் பேட்டி அளித்தார். என்னைப் பொருத்தவரை இது முற்றிலுமாக பேராசை பிடித்த பெற்றோர்களின் பிரச்சினை. இது வரிப்பணத்தை பங்கு கேட்பது அல்ல. ஆனால் நம் கருணையைக் கூட அவர்களுக்கு அளிக்கக்கூடாது. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் விளைவுகளை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
 • 90-களில் இளைஞர்களாக இருந்தவர்கள் பலர் “மௌன ராகம்” என்ற திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள். நானும்தான்.அதில் எனக்கு பிடித்தது, சந்திரகுமார் (கதாநாயகன்) டில்லியில் வசிக்கும் வீடுதான். அது போன்ற வீட்டை நானும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்க வேண்டும் என்ற கனவு பலரைப் போல் எனக்கும் இருந்தது. அடையார் போட் கிளப் ரோட்டில் வாங்குவது நடக்க முடியாத அட்டூழியப் பேராசை. ஆனால், கொஞ்சம் வசதியாக வீடு வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால் அதற்கு நான் அதிகப்படியாக திறமையை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால், சாதாரண 2 படுக்கை அறை கொண்ட வீட்டை, அதுவும் ஒரு கிராமத்தில்தான் வாங்க முடிந்தது. ஆனால், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் அமேரிக்காவில், சந்திரகுமார் வசிக்கும் வீட்டைப்போல் வாங்கிக் கொண்டார்கள். அதற்குக் குப்பையான விளக்கங்களை அளித்து, தூபம் காட்டியது அமேரிக்க அரசுகள். பின் Foreclosure வராமல் என்ன வரும்? என்னைப் பொர்ருத்தவரை, அமேரிக்காவில் வீட்டு வசதித் துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது,பேராசை காட்டிய அரசும், பேராசை கொண்ட கீழ்நடுத்தர மக்களும்தான்.

அடுத்ததாக, தவறான முடிவுகள் எடுக்கையில் விளைவுகளை சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு சமூகத்தில் பலர் வந்துவிட்டால், அங்கு எந்த ஒழுங்கும் இருக்க முடியாது. இது பல்துறைகளில் இயங்கும் வியாபாரத்திற்கு மட்டும் பொருந்தும் விளக்கம் அல்ல. அதைத் தாண்டி, குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்.

ஆசை மற்றும் சுயநலம் என்ற இயற்கையான குணாதிசயங்களால்தான், மனித சமூகமே இயங்குகிறது. அவற்றை இயற்கை நியதிகளாக ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, அவை நேர்மையற்ற குணங்கள் என்றும் பரப்புவது மனித சக்தியையே அமுக்கி விடும். நாம் இங்கு, சங்கரனையோ, தாயுமானவரையோ பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. அவர்கள் கௌபீனத்தையே தேவைக்கு அதிகமான சொத்தாக நினைத்தவர்கள். அது ஆன்மிகத் தளத்திற்கான வெளி. நாம் சாதாரண மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கருணை என்னும் குணாதிசயம், இயற்கை நியதிகளுக்குப் பொருந்தாத அளவில் செல்லும்போதும், ஆசை மற்றும் சுயநலனை முன்னிருத்துவதையே கேவலமாக சித்தரிக்கும்போதும், சமூகத்திற்கு சிரமங்கள்தான் ஏற்படும்.தனிமனிதர்களின் சாதாரணமான தினசரி வாழ்வில் எடுக்கும் முடிவுகளைப் போல், தனிமனிதர்களின் குற்றங்களுக்கான விளைவுகளையும் கருணை அடிப்படையில் அவதானிக்க ஆரம்பித்துள்ளோம்.

சமூக ஒழுங்கு என்பது நிலைநிறுத்தப்பட, குற்றங்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகையில், அதற்கான தண்டனைகளும் அளிக்கப்பட்டாக வேண்டும். பழங்காலத்தில் சாதாரண சிறைகளும், பாதாளச் சிறைகளும் இருந்தன. பாதாளச் சிறைக்குச் சென்ற ஒருவன் மறுபடி எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டான்;. பாதாள சிறையில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்தாலே, அவனால் கனவிலும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட முடியாது. ஆனால் இன்றோ நிலை முற்றிலும் தலைகீழ்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சில வசதிகள் அளிக்கப்படுவது நியாயம்தான் என்றாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கும் இது நீட்டிக்கப்படுவது சுத்த பைத்தியக்காரத்தனம். இது உலகமெங்கும் ஜனநாயக நாடுகளில் உள்ள குறைபாடுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கும், சிறையில் பிரியாணி அளித்தால், தண்டனை முடிந்து வெளிவே வரும் ஒரு குற்றவாளி,. மீண்டும் அதே தவறை செய்ய அஞ்சவே மாட்டான். இரு வேளைதான் உணவு, வெயிலில் தினமும் குறைந்த அளவே இருக்க முடியும், எந்த ஆடம்பர வசதியும் இருக்காது, வாழ்வது கிட்டத்தட்ட நரகமாக இருக்கும் என்ற நிலையை நாம் சிறைச்சாலைகளில் கொண்டு வர வேண்டும்.

பீர்பாலிடம் கொதிக்கும் பாலைக் குடித்த பூனையைப் போல், குற்றவாளிகள் சிறைகளில் இருக்கும் சூழலை நினைத்தவுடனேயே அஞ்ச வேண்டும். சமூக ஒழுங்கை நிலைநிறுத்த இது ஒன்றே ஒரே வழி.அமேரிக்காவில் இதற்கான உதாரணங்கள் அதிகம் உள்ளன. நாம் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை.குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவர்கள், மோசமான பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்குக் கூட சில கால சிறைவாசத்திற்குப் பிறகு அமேரிக்காவில் விடுதலை கிடைத்து விடுகிறது.

இந்தியாவிலும், அரசியல் தலைவர்களின் பிறந்தநாளின் போதெல்லாம், குற்றங்கள் நிருபிக்கப்பட்டவர்களுக்கான தண்டனைகள் கூட குறைக்கப்பட்டு விடுதலை அடைந்து விடுகின்றனர். அரசியல் ரீதியாக இது பயனுள்ளது என்று சில அரசியல்வாதிகள் நினைப்பது ஆச்சரியமாக உள்ளது.மேலும், நவீன அறிவியலாளர்கள் சிலர், இந்தக் கருணை என்ற குணாம்சத்தை பைத்தியக்காரத்தனத்தின் உச்சிக்கு  எடுத்துச் செல்ல முயல்கின்றனர். அதாவது, சாதாரண மனிதனின் மூளையையும், குற்றவாளியின் மூளையையும் சோதனைகள் செய்து பார்த்ததாகவும், அதில் குற்றவாளிகளின் மூளையின் சில பகுதிகள் அளவுக்கதிகமாக வேகமாக செயல்படுகின்றன என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆகவே, குற்றம் செய்யும் மனிதன், தானாகக் குற்றம் இழைக்கவில்லை. அவனின் மூளைதான் காரணம் என்றும் பிதற்றுகின்றனர்.

இப்படியே போனால், குற்றம் செய்பவர்களின் மூளைதான் குற்றங்களுக்கு காரணம். ஆகவே தண்டனைகளே தேவையில்லை என்றும் கூறப்படலாம். Altruism என்பதை எந்தவித எல்லைகளும் இல்லாமல் குற்றவாளிகளுக்கும் நடைமுறைபடுத்துவதால் சமூகம் அழியவே செய்யும். என்னைப் பொருத்தவரை, எந்த மனிதனும் அவன் எடுக்கும் முடிவுகளுக்கு, அம்மனிதனே விளைவுகளை அனுபவித்தாக வேண்டும். வியாபாரம் என்றால் இலாபத்தையும் நஷ்டத்தையும் அவனே சந்திக்க வேண்டும். குற்றங்கள் என்றால் தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

 

இந்திய Ponzi திட்டங்கள் தாக்குப் பிடிக்குமா?

நான் இந்திய அரசு செயல்படுத்தும் பல திட்டங்கள் வெறும் சீட்டு கம்பெனி திட்டங்கள் என்ற என் கருத்தை எழுதினேன்.இதை கணக்குகளைக் கொண்டு எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்.நம் நாட்டின் 2012-13ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுக் கணக்கின்படி, மத்திய அரசின் வருவாய் 10 இலட்சம் கோடி. செலவு 15 இலட்சம் கோடி. 5 இலட்சம் கோடி பற்றாக்குறை. பற்றாக்குறை அதிகமானால் என்ன என்று கேட்கலாம். பற்றாக்குறை அதிகமாக அதிகமாக, நம் கடன் தொகை அதிகரிக்கும்; கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுப்பார்கள். வாங்கும் கடனின் பெரும் பகுதி வட்டி கட்டவே சரியாகி விடும். ஒரு நிலையில் திவாலாகி விடும். இதைச் சரிய்ய, ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவுகளைக் குறைக்க வேண்டும். நான் இரண்டையுமே செய்ய வேண்டும் என்றே இக்கட்டுரையில் எழுதி வந்துள்ளேன். தொழில்துறை பெருகுவதனால் மட்டுமே வரி வருமானமும், அதனாலேயே மற்ற வருமானங்களும் அதிகரிக்கும். ஒன்றுக்கும் உதவாத மானியத் திட்டங்களை நிறுத்த முடியாவிட்டாலும், செலவுகளைக் குறைக்கவாவது ஆரம்பித்தாக வேண்டும்.

இல்லையேல், 5 இலட்சம் கோடி பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். விலைவாசி அதிகரிக்கும். 100 நாள் வேலை திட்டத்தின் தினப்படி சம்பளமும் அதிகரிக்கப்படவேண்டும். ஏனெனில் 100 ரூபாய்க்கு மதிப்பு இருக்காது. இது ஒரு தொடர் கதை. ஒரு நிலையில் நாட்டின் நிதித்துறை திவாலாகி விடும். இது போன்று நடந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் கிரேக்கம். இந்திய அரசின் நிதிநிலை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்பது உண்மைதான். திவாலாகும் ஆபத்து உடனடியாக இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இந்தப் பற்றாக்குறையை சற்றேறக்குறைய இதே நிலையில் வைத்திருப்பதால் யாருக்குமே உபயோகம் இல்லை. மானியங்களை குறைக்கும் நடவடிக்கைகளை செய்யாதது மட்டுமல்ல, அவற்றை நம் அரசு அதிகப்படுத்திக் கொண்டும் செல்கிறது. என்னைப் போன்றவர்கள், சரிதான், பொருளாதார சீர்திருத்தங்கள் இனி நடக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது, தடாலடியாக பெட்ரோலின் விலை ஏற்றப்படுகிறது. டீஸலும், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்ற சமிக்ஞைகள் வருகின்றன. பாராளுமன்றத்தில் தேங்கி உள்ள பொருளாதாரச் சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று என்னைப் போன்றவர்கள் கனவு காண ஆரம்பித்து விடுகிறோம்.

தற்பொழுதைய நிலையில், சீர்திருத்தங்கள் முழுமனதுடன் நடைபெறுவதில்லை. ஆனாலும் தொழில்துறை முன்னேற சில நடவடிக்கைகள் எடுக்கத்தான் படுகின்றன. ஆகவே வருவாய் அதிகரிக்கிறது. மானியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றன. கூட்டிக் கழித்து பார்த்தால், நாம் பிரச்சினையிலிருந்து விடுபட நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஆனால் பிரச்சினையும் அதிகமாவதில்லை. பற்றாக்குறையை அதே இடத்திலேயே வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறோம்.

 

அமேரிக்காவில் வலதுசாரிகளின் வளர்ச்சி

சமீப காலங்களில் “Occupy Wall Street” என்ற இடதுசாரி கம்யூனிஸ்ட் கொரில்லாக்களின் குழு அமேரிக்கா முழுவதிலும் பல்வேறு நகரங்களில் ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது. ஊடகங்களால் வெகுவாகப் புகழப்பட்ட இந்தப்க் குழுக்கள், நகரங்களில் உள்ள பார்க்குகளை நாறடித்தது மட்டும்தான் மிச்சம். பணக்காரர்களை எதிர்ப்பதும், மேன்மேலும் மானியங்களை ஓசியில் பெறுவதுமே இந்தக் கும்பலின் நோக்கம். சில மாதங்களிலேயே ஊடகங்களின் அதீத ஆதரவு இருந்தும், இந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து விட்டது. ஆனால் மற்றொரு குழு அமேரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயல்படுத்திக் காட்டி விட்டது. 2008இல் திரு.ஒபாமா பதவியேற்றவுடன் செயல்படுத்திய சுகாதாரத்துறை சீர்திருத்தங்களால் வெறுப்புற்ற வலதுசாரிகள், அமேரிக்கா முழுவதிலும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர். Tea Party Movement என்றும் அந்த இயக்கத்தை அழைத்தனர். அமேரிக்காவின் அரசியல் சூழலில் இரு கட்சி ஆட்சிமுறை இருப்பதாலும், இரண்டு கட்சிகளுமே மானியத் திட்டங்களை மேற்கொள்வதாலும், ஒரு தனி இயக்கமாக உருவெடுத்தது இந்தக் குழு. அரசியல் ரீதியில் தங்கள் பிரதிநிதிகளை அமேரிக்கப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் மட்டுமே, அமேரிக்காவின் எதிர்காலத்தைக் காக்க முடியும் என்று தீர்மானமாக நம்பினர்.

குடியரசுக் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டாலும், அதன் தலைவர்களையும் விமர்சனமும் செய்து வந்தனர். 2010இல் நடந்த இடைத்தேர்தல்களில் 62 காங்கிரஸ் உறுப்பினர்களை அனுப்பி திரு.ஒபாமா எடுக்கும் ஒவ்வொரு மானியத் திட்டங்களுக்கும் வெற்றிகரமாக முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகின்றனர். அமேரிக்க அரசு புதியதாகச் செய்யும் எந்த செலவுகளுக்கும், அதே அளவில் வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே புதிய செலவுகளுக்கான மசோதாக்கள் நிறைவேறுகின்றன.

இந்தக் குழுவின் சமய, சமூக நிலைப்பாடுகள் மிகவும் பழமைவாதத்தைச் சேர்ந்தவை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்- குறிப்பாக ஊடகத்தினர்- இந்த நிலைப்பாடுகளையே முன்னிறுத்தி எதிர்த்தனர். ஆனால் இந்த வலதுசாரிக்குழு தன் நிலைகளை பொருளாதார நிலைப்பாட்டை முன்னிருத்தியே மக்களிடம் பரப்பி குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது. இந்தக் கதையை நான் எழுதியதற்குக் காரணம். வலதுசாரித்துவத்தை, ஊடகங்கள் சமய, சமூக நிலைப்பாடுகளை வைத்துத் தகர்க்கவே முயலும். அமேரிக்காவில் மிகப்பெரிய அளவில் நடுத்தர, உயர்நடுத்தர மக்கள் உள்ளதாலும், அரசின் தலையீடு இல்லாமல் வாழ்க்கை அமைய வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதாலும் இக்குழு வெற்றி பெற்றது. மேலும் குறிப்பாக எந்த நிலையிலும் தங்களின் பொருளாதார நிலைப்பாட்டில் சமரசங்களைப் பெரிய அளவில் செய்து கொள்ளாதது முக்கியமான அம்சம். வெற்றி பெறுகிறோமோ, தோற்றுப் போகிறோமோ, நம் கொள்கையில் தெளிவாக இருந்தால் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியையே நான் இந்த நிகழ்வுகளிலிருந்து பெறுகிறேன்.

 

இந்தியாவின் எதிர்காலம்

எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனக்கு என்றுமே உண்டு. நம்பிக்கைதானே வாழ்க்கை. 1991இல் லைசென்ஸ் ராஜ் ஒழிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வந்தன. கூட்டணி ஆட்சிகளினாலும், கம்யூனிஸ்ட் கொரில்லாக்களினாலும் இந்த சீர்திருத்தங்களின் வேகம் அவ்வப்போது தொய்ந்து போகவே செய்தது. 2009இல் இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்த காங்கிரஸ், அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களைச் செய்யும் என்று என்னைப் போன்ற பலர் எதிர்பார்த்து காத்திருந்தோம். இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்.இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் இன்னும் துவங்கியபாடே இல்லை. தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், விவசாய மானியங்களைக் குறைத்தல், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொது விநியோக நிறுவனங்கள் போன்றவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல், இன்னும் எஞ்சியிருக்கும் லைசென்ஸ் முறைகளை அழித்தொழித்தல், குறிப்பாக சிறுதொழில்களில் அரசின் தலையீடுகளை நிறுத்துதல் போன்றவை ஆரம்பிக்கப்படவேயில்லை. நான் ஏற்கெனவே எழுதியதைப் போல, இதற்கெல்லாம் எதிர்ப்பு என்பது எக்காலத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்யும். மேற்கூறிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகையில், பாதிக்கப்படுவோர் இருக்கவே செய்வார்கள். “இந்தியாவின் எதிர்காலத்திற்காக” இதையெல்லாம் செய்துதான் தீர வேண்டும்.

மேலும், பாதிக்கப்படுவோர் என்பவர் யார் என்று நமக்கு நன்றாகவே தெரியும். கம்யூனிஸ்ட் யூனியன் மாஃபியா கும்பலால் பாதுகாக்கப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். “டம்மி பீஸ்” என்று வடிவேலு குறிப்பிடுவதைப் போன்றவர்கள்தான் இவர்கள். இவர்களைக் காப்பாற்றத்தான் யூனியன்கள் போராடுகின்றன. இந்த டம்மி பீஸ்களால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மோசமாக நஷ்டப்படுகின்றன. ஒரு டம்மி பீஸை களையெடுப்பதால், பல இந்தியர்களுக்கு இலாபமே ஏற்படும். எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும்? தனியார்மயம் ஆனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை போகாது. வேலை செய்யாமல், செய்யத்தெரியாமல்  இருக்கும் டம்மி பீஸ்களுக்கு வேலை போகத்தான் செய்யும். அவர்களுக்குக் கருணை காட்ட நான் தயாராக இல்லை.

‘அங்காடித்தெரு’ திரைப்படம் நினைவுக்கு வருகிறதா? ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்கள்தானே அவர்களின் பாஷையில் வர்க்கப்போராட்டக்காரர்கள். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள் போராடுவதுதானே இயற்கை. ஆனால் அவர்கள் என் தந்தையைப் போன்றவர்களுக்கு ஆதரவாகவே போராடுவார்கள். எல்லாம் வர்த்தகம்தான். ஒவ்வொரு முறையும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஓய்வூதியத்தில் செயல்படுத்தும்போதும், என் தந்தை 1000 ரூபாய்களை யூனியனுக்கு அளிக்கிறார். 12000 பேருக்கு ஓய்வூதியம் சென்னை துறைமுகத்தில் வழங்கப்படுகிறது என்று எழுதினேன். கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் டெல்கோ, மாருதி போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் 30000 சம்பளம், 10000 ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டு உயர்நடுத்தர நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களை தொழிலாள வர்க்கத்தினர் என்று அழைப்பது எவ்வளவு நேர்மைத் துணிவற்ற வாதம்?

சம்பள கமிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 10 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பு செய்யும் கமிஷன் அது. 6-வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தியாகிவிட்டது. ஆனால், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 5வது சம்பள கமிஷன் 1990-களில் அளித்த பரிந்துரைகளை இன்னும் நடைமுறைப்படுத்தவே இல்லை. சம்பளம் மட்டும்தான் அதிகரிக்கப்படுகிறது.

அதைத் தாண்டி, வேறு பல பரிந்துரைகளும் அந்த சம்பள கமிஷனில் அளிக்கப்பட்டது. உதாரணமாக–

 • மத்திய அரசு நிர்வாகத்தில் 30 சதவிகித ஊழியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
 • 1994ம் ஆண்டு கணக்கின்படி, 3 இலட்சம் பதவிகள் காலியாக உள்ளன. அவைகள் நிரப்பப்படவே கூடாது.
 • 10 வருடங்களுக்கு புதியதாக யாரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாது.
 • அதிக வேலைத்திறனை வெளிப்படுத்துவோருக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டும்.
 • தப்பித்தவறி சில ஆயிரம் பேர் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், அதற்கு இணையாக விருப்ப ஓய்வுத்
  திட்டங்களின் மூலம் ஆட்குறைப்பைச் செய்யவேண்டும்.
 • அரசு நிர்வாகத்தை “அதிகாரிகளைக் கொண்டு நடத்தும்”-Officer Based Administration முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • வேலைகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்.அது முடியாதபோது ஊழியர்களை ஒப்பந்த முறையில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

90-களில் பரிந்துரைக்கப்பட்ட 5-வது சம்பள கமிஷனின் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகள் ஏட்டளவிலேயே உள்ளன. 2008-இல் வெளிவந்த 6வது சம்பள கமிஷனும் மேற்குறிப்பிட்டதைப் போன்ற பரிந்துரைகளையே அளித்துள்ளது. இவற்றைப் போன்ற பரிந்துரைகளை சீண்டுவார் இல்லை. ஆனால் 40 சதவிகித சம்பள அதிகரிப்பு மட்டும் தவறாமல் நடந்து விடுகிறது.

இந்தியாவின் தற்பொழுதைய தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் அத்தியாவசியம். தொழிலாளர் நலனை முன்னெடுப்பது என்பது, “என்ன செய்தாலும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது” என்ற கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

நாம் இன்று “மதில்மேல் பூனை” நிலையில் இருக்கிறோம். 1991-இல் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்களினால் சுவர் மீது ஏறி விட்டோம். மேலும் சீர்திருத்தங்களைச் செய்து முன்னேறுவதே சிறந்த வழி. பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு இனி நமக்கு இல்லவே இல்லை. பாதி சீர்திருத்தங்களின் பயன்களையும் ஒரு சாரார் அனுபவித்து விட்டார்கள். எவ்வளவு நாள்தான் மதில் மேலேயே நின்று கொண்டிருப்பது. அரேபிய நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி எழுதிய, புலிட்ஸர் பரிசு பெற்ற நிருபர் திரு. தாமஸ் ஃப்ரீட்மேன்  எழுதியது–

“கடந்த 20 ஆண்டுகளாக (அரேபிய நாடுகளில்) அனுசரிக்கப்பட்ட சந்தை பொருளாதார முறை அப்பட்டமான அரசியல் சுயநலன்களுக்காகவும், ஊழல்வாதிகளால் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டது. ஆனால், மாறியுள்ள சூழலில், சரியான வழி, சந்தைப் பொருளாதாரம் அனுசரிக்கப்படும் முறைகளை சீர்படுத்துவதுதானே தவிர, பழைய சோஷலிஸ முறைக்குச் செல்வது அல்ல.

 சந்தையின் அடிப்படையில் இயங்கும் பொருளாதாரம், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் போக்கு, சட்டத்தின் வழி வியாபாரம் என்பதை நடைமுறைப்படுத்துவது மற்றும் கீழ்நிலையில் வசிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் சரியான மானியங்களை அளிப்பது போன்றவற்றை நடைமுறைபடுத்துவதே சரியான வழியாக இருக்கும்.

 இதை நடைமுறைபடுத்த அரேபிய நாடுகளில் புதிய சிந்தனைகளைக் கொண்ட புதிய தலைவர்கள் முன்னுக்கு வர வேண்டும். இந்த புதிய தலைவர்கள் பட்டவர்த்தனமான உண்மைகளை, கடினமான உண்மைகளைக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்.”

இதை படித்த எனக்கு, இந்தச் செய்தி அரேபிய நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் முற்றிலுமாகப் பொருந்தும் என்று புரிந்தது.

 

எனக்கு பிடித்தது சப்பாத்தி கதைதான்.

நம் நாட்டிற்கான சப்பாத்தியின் அளவை கொஞ்ச-நஞ்சமல்ல மிகப்பெரியதாக மாற்ற வேண்டும். இதற்கு கடுமையான முடிவுகளை எடுத்துத் தான் தீர வேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்.

 

சப்பாத்தியைப் பெரியதாக மாற்றியவர்

இன்றைய இந்தியாவை வளர்ச்சியின் அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல, தேசபக்தி நிறைந்த, மனோதிடம் கொண்ட, அப்பழுக்கற்ற, நேர்மைக்கு இலக்கணமான, தலைமைப் பண்புகள் நிறைந்த ஒரு பிரதமர் வேண்டும். அடுத்து அரசியல் ரீதியாக ஏழைகளை வசப்படுத்தும் திறமையும் வேண்டும். அரசியல் ரீதியாக ஏழைகளை வசப்படுத்துவது என்றால் என்ன என்று நமக்கு நன்றாகவே தெரியும். வெளியில் கூற முடியவில்லையா? அதையும் நானே சிறு அளவில் பட்டவர்த்தனமாக எழுதுகிறேன். ஏழைகளிடம் சென்று பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பற்றி பிரஸ்தாபிக்க முடியாது. பொருளாதாரம் அல்லாத வேறு விஷயங்களைக் குறித்தே பேச வேண்டும். அவ்விஷயங்களில், தான் பிரதமராக பதவியில் இருந்தால், ஏழைகளுக்கு அந்த சிரமங்களிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று பரப்ப வேண்டும். பொருளாதாரத்தில் அனைத்து ஏழைகளுக்கும் நன்மை செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்று பேசுபவருக்கே தெளிவாக தெரியும். ஆகவே அரசியல் எதிரிகளை மையமாக வைத்தே அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம் இந்தியச் சூழலில் உள்ளது. அந்நிய முதலீட்டைப் பற்றி பேச ஆரம்பித்தால், வெள்ளையர்களுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் முயற்சி என்று அரசியல் எதிரிகள் பரப்பி விடுவார்கள்.

பெரும்பான்மையான ஓட்டு ஏழைகளிடமே உள்ளது. அவர்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் இலவசங்களையும் மானியங்களையும் அளிக்க முடியாது. ஏழைகளுக்கு நன்மை செய்வது என்பது, தற்காலிகமாக ஏழைகளுக்கு சிரமங்களை அளிப்பதுதான். இப்படிப்பட்ட அரசியல் சாதுரியம் கொண்டவர் இந்தியாவில் இருக்கிறாரா? ஏன் இல்லை?

ஆனால் போனஸ் போன்று அதிகப்படியான இன்னொரு குணாதியமும் கொண்ட ஒருவர் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் சப்பாத்தியின் அளவை பெரியதாக மாற்றிக்காட்டியவர். அந்த மாநிலத்தை உலக அரங்கில் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர். விவரம் அறிந்த பலரால் பாராட்டப்படுபவர். வேற யாரு? நம் மோடிதான்.

குஜராத்தில் பெரும்பாலான மக்களுக்கு வாய்ப்புகள்; உழைப்புக்கு அங்கீகாரம்; நவீனப் பொருளாதார முறைகளை சட்டப்படி அனுசரிப்பது போன்ற பல நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்திக் காட்டியுள்ளார். கடந்த 10 வருடங்களாக திரு.மோடி அவர்கள் நடைமுறைப்படுத்தியிருப்பது, சந்தைப் பொருளாதார முறைமைகளைத்தான். அதனால் கிடைத்த வளர்ச்சியினால்தான் அவரின் பெயர் பிரசித்தி பெற்றிருக்கிறது. ஒரு பத்திரிகையில் வெளியான திரு.மோடி அவர்களின் பேட்டியைப் படியுங்கள்– சந்தை பொருளாதார முறை, தனியார்மயமாக்கத்தின் அவசியம், அந்நிய முதலீட்டின் அவசியம் என்று இக்கட்டுரையில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட விஷயங்களைத்தான் திரு.மோடி அவர்கள் பேசுகிறார்.

திரு.மோடி அவர்களை ஆதரிக்கிறோம். ஆனால் அவர் நடைமுறைப்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்க மாட்டோம் என்று எவரேனும் கூறினால் அவருக்கு மனநல மருத்துவமனையில்தான் இடம் அளிக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளித்துள்ளார் திரு.மோடி. குஜராத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற திரு.மோடிக்கு, ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை அளிப்பதே இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது. 80-களில் பிரிட்டனின் பிரதமராகப் பதவியில் இருந்த திருமதி.மார்கரேட் தாட்சர், பதவியேற்றவுடனேயே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலைகளை ஆரம்பித்தார். வரலாறு காணாத அளவிற்கு எதிர்ப்புகளைச் சந்தித்தார். சில நாட்களுக்கு பிரிட்டனே ஸ்தம்பித்து விட்டது. ஒரே ஒரு படி கூட அவர் இறங்கி வரவில்லை. பொதுமக்களுக்கு தனியார்மயமாக்கத்தின் இலாபங்களை எடுத்துக் கூறினார். நெடுங்காலத்திற்கு பொதுத்துறையை அரசு கட்டிக்காப்பாற்ற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பரப்பினார். யூனியன் மாஃபியா கும்பலின் எதிர்ப்பு பிசுபிசுத்து போனது. வழிக்கு வந்தார்கள். வேலைக்கும் வந்தார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் தனியார் மயமாக்கம் நடக்கவே செய்தது. பிரிட்டனின் வரலாற்றில் திருமதி. மார்கரே தாட்சர் “இரும்பு பெண்மணி” என்றே கருதப்படுகிறார். 1980-இல் தன் கட்சியினரிடையே உரை ஆற்றுகையில், “என் அரசு பொருளாதார தாராளமயமாக்கத்தை தொடர்ந்து செய்யும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசின்பார். அவர் பேசிய இந்த வாக்கியம் பிரசித்தி பெற்றது– “You turn if you want to. The lady’s not for turning!

எந்த நாட்டிலும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் இந்த யூனியன் மாஃபியா கும்பலை “நேருக்கு நேராக” எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. எனக்கு மட்டும் திரு.மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் அவரிடம் ஒரே ஒரு விஷயத்தை கூறவே விரும்புவேன்.

“இந்தியாவில் 2-ஆம் தலைமுறை அலைக்கற்றை ஊழலினால், 2-ஆம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்கள் துவங்கப் படவே இல்லை. அவற்றில் முக்கியமாக வங்கிகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் முழுவதும் தனியார்மயமாக்கப்படும்போதுதான்  இந்தச் சீர்திருத்தங்கள் முழுமையடையும். நம் நாட்டில் மோசமாக நிர்வகிக்கப்படும், மிகவும்  சமான போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வேயின் வேலைகளை ஒரேயடியாக  தனியாருக்கு ஒப்பந்தத்தில் அளித்துவிடுங்கள். 2001இல் வெளிவந்த திரு.ராகேஷ் மோஹன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை, ரயில்வே துறையை ஒரு கார்பொரேட் நிறுவனமாக மாற்றி, தனியாரின் பங்களிப்பையும் பெற்று இலாப நோக்கத்துடன் நடத்தவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. கட்டண விதிப்பு, நிர்வாகத்தை நடத்தும் முறை, முதலீட்டைப் பெறும் வழிகள் போன்றவற்றை அமல்படுத்தும் அதிகாரம் முழுமையாக அரசு அல்லாத நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 11

வருடங்கள் கழிந்த நிலையில், கார்பொரேட் நிறுவனமாக நடத்த முயற்சித்தாலும் யூனியன் மாஃபியா கும்பல் எதிர்க்கவே செய்யும். தனியாருக்குக் கூறு போட்டு விற்றாலும் எதிர்ப்பே மிஞ்சும். எதற்கு படிப்படியாக இதை நடைமுறை படுத்த வேண்டும்? ஒரேயடியாக ரயில்வே துறையின் வேலைகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் அளித்து விடுங்கள்.

பேருந்துகளையும், ரயில்களையும், விமானங்களையும் அரசு இயக்குவது முட்டாள்தனம்.”

 

ரயில்வே துறையில்தான் அதிகமாக ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். எதிர்ப்பும் மிக அதிக அளவில் இருக்கும். இந்த எதிர்ப்பை மட்டும் சந்தித்து வென்று விட்டால், மற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் ஒரு சிரமமும் இருக்காது. மேலும் சீர்திருத்தங்களைச் செய்த பிற நாட்டு அனுபவங்களையும் நாம் பார்த்து விட்டோமே! எதற்கு ஒவ்வொரு படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரே அடி. நெத்தி அடி. யூனியன் மாஃபியா கும்பல், தலையும் புரியாமல், வாலும் புரியாமல் பேதலித்துப் போய்விட வேண்டும். நம் நாடு வளம்பெற, பெருவாரியான மக்கள் நல்ல வாழ்க்கைத்தரம் அடைய, இந்த கும்பல் சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும். “எல்லோரும் நலமோடிருக்கப் பிரார்த்திக்கிறேன் பராபரமே!” என்றெல்லாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க முடியாது. யூனியன் மாஃபியா கும்பல் சிரமங்களை எதிர்கொண்டால்தான் நம் வாழ்வு வளம் பெறும்.

ஒரு விஷயத்தை கவனித்தாக வேண்டும். திருமதி.மார்கரேட் தாட்சர், 11 வருடங்களுக்குப் பின் அடுத்தக்கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீண்டும் ஆரம்பிக்கும் போது, அவர் கட்சியிலேயே எதிர்ப்பு அதிகமாகி பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். திரு. மோடி அரசியல் சாதுரியம் மிக்கவர். எதிர்ப்புகளையே 10 வருடங்களாக சந்தித்து வருபவர். ஆகவே அவர் வெல்வார் என்றே நான் நம்புகிறேன்.

மேற்கூறியவை எல்லாம் என் ஆசைகள்தான். நடைமுறையில் நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட மானியங்கள் அவ்வளவையும் திரு.மோடி தடாலடியாக நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது இந்திய அரசியல் சூழலில் சாத்தியமும் இல்லை. ஆனால் மானியங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு நிதிநிலை சீர்செய்யப்படும் என்ற சமிக்ஞையை கண்டிப்பாக அளிப்பார் என்றே நம்புகிறேன். நான் எதிர்பார்க்கும் வேகத்தில் மானியங்கள் குறைக்கப்படாது. ஆனால், எதிர்காலத்தில் அந்நிலையை அடைவதை நோக்கியே அவரின் பயணம் இருக்கும். மேலும் நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். கடினமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மட்டுமல்ல, அதைப் பெரும்பாலான பொதுமக்களுக்கு சரியாக, அரசியல் ரீதியாக எடுத்தும் செல்வார். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

“விதுர நீதியில் கூறப்பட்டிருப்பது போல், யார் செல்வத்தை தகுதியுள்ளோரிடம் சேர்க்கிறானோ, மனிதர்களிடையே உள்ள வித்தியாசங்களின் அடிப்படையில் அவர்களை  நடத்துகிறானோ, அறிவுள்ளவனோ, சுறுசுறுப்பாக இருப்பவனோ அவனே மனிதர்களில் அதிகாரம் கொண்டவன்.”

 

நான் திரு.மோடிக்கு ஓட்டு போட முடிவெடுத்து விட்டேன். அப்ப நீங்க?

முடிவுரை:-

இவ்வளவு எழுதிய பிறகும், கம்யூனிஸத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஏழைகளுக்கு உதவத்தான் வேண்டும்; வாழ்வாதாரங்கள் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் உங்களுக்கு அருமையான வழி உள்ளது. காலம் காலமாக, ராபின் ஹூட்டின் வழி செல்லும் அந்த குழு என்றுமே இருக்கும். அதன் கொள்கை பிரகடனம் கீழ்வருமாறு இருக்கும்.

தோழர்களே, வாருங்கள். உங்களுக்கு உன்னதமான எதிர்காலத்தை தருகிறோம். ஆயுதப்  போராட்டத்தின் மூலம், அயோக்கிய பணக்காரர்களிடமிருந்து சொத்துகளைப் பறித்து, நாம்  பகிர்ந்து கொண்டு, அற்புதமான எதிர்காலத்தை அடைவோம். பணக்காரர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் இராணுவத்தையும், காவல் துறையையும்  பூண்டோடு அழிப்போம். சோவியத் யூனியனும், சீனாவும் பொதுவுடைமையைத் தவறாக நடைமுறைப்படுத்தி விட்டன. வர்க்கப் போராட்டத்தை வர்த்தகப் போராட்டமாக்கி விட்டன. நாம்  சரியாக நடைமுறைப்படுத்தலாம். சப்பாத்தியின் அளவை பணக்காரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கும் வளங்களைக்  கொண்டே பெரிதாக்கிக் கொள்ளலாம். (பணக்காரர்கள் இல்லாது போனால் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு சாப்பிடலாம்.). நம் அனைத்துத் தேவைகளையும் நம் போலிட்ப்யூரோ கவனித்துக் கொள்ளும்.”

 

பணக்காரர்கள் சாமர்த்தியத்துடன் உழைத்து சொத்துகளை சேர்த்து வைத்துக் கொள்வார்களாம். இந்த கொரில்லாக்கள் பறித்துக் கொள்வார்களாம். குழப்பம் உள்ளவர்கள் அங்கே சேர்ந்து கொள்ளலாம். அனைத்துச் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ளலாம். அதாவது வினவி(!) க்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன. இது போர். அவர்களின் சிந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியாக வேண்டும். கருணை இல்லாத பிறவிகள் என்று நம்மீது விமர்சனம் வந்தாலும் சரி, நாங்கள் இயற்கை நியதியை பெருமளவில் அனுசரித்து, என்றென்றும் எங்கள் கலாசாரத்தின் விழுமியங்களை மூலதனமாகக் கொண்டே வாழ்வோம் என்று சிந்திக்கத் தெரிய வேண்டும். லூஸுத்தனம் என்பது, “செய்த காரியத்தையே மறுபடி மறுபடி செய்து கொண்டு, வேறுவிதமான முடிவு வரும் என்று எதிர்பார்ப்பது” என்று கூறுவர்.

சோவியத் யூனியனும், சீனாவும் பொதுவுடைமையைச் செயல்படுத்த முயன்றன. சோவியத் யூனியன் அதில் வெற்றி பெற்றதாக வெளியில் உதார் விட்டு, உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு, கடைசியில் அழிந்து விழுந்தது. சீனாவும் அதையே செய்ய முயன்று, பாதிப் பயணத்தில் லூசுத்தனம் அகன்று, சந்தைப் பொருளாதார முறையை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது. ஐரோப்பிய நாடுகள், கல்வியையும், மருத்துவத்தையும், அனைவர்க்கும் அளிப்பதில் வெற்றிகரமாக செயல்படுத்தியே விட்டன. ஆனால் வளங்கள் பல இருந்தாலும், சோம்பேறிகள் பெருகியதால், நெடுங்காலத்திற்கு இதைத் தொடர முடியாமல், கீழே விழுந்து விட்டன.

அமேரிக்கா, சந்தைப் பொருளாதாரம் என்று கூறிக் கொண்டே, பல மட்டங்களில் மானியங்களை அள்ளி வழங்கி கல்வி மற்றும் மருத்துவத்தை கிட்டத்தட்ட அனைவர்க்கும் வழங்கியே வருகிறது. நாட்டின் பொருளாதாரம் ஆட ஆரம்பித்தவுடன், அதன் பல கூறுகளும் விழ ஆரம்பித்துள்ளன. உலக சமுதாயத்தின் பல முயற்சிகளை நாம் கண்டும் கூட, நம் இந்தியாவும் அதே இலக்கை அடைய பயணம் மேற்கொண்டுள்ளது. ஜனநாயகத்தை நாம் அனுசரிப்பதால், “கல்வி மற்றும் மருத்துவம்” அனைவர்க்கும் கிடைத்து விட்டது என்று போக்குக் காட்டவும் முடியாது. 121 கோடி மக்கள் தொகை இருப்பதால் நம்மால் அந்த இலக்கை அடையவும் முடியாது. அதிக மக்கள்தொகை உள்ளதால், இந்தியாவில் மானியங்கள் கூடாது என நான் கூற வில்லை. மக்கள்தொகை குறைந்த நாடுகளிலும் இது தோற்றுப்போயிருக்கிறது. தோற்றுத்தான் போகும் என்பதுதான் என் வாதம். அதைப் போலவே, ஏழை நாடாக உள்ளதால், இந்தியாவில் மானியங்கள் கூடாது என நான் கூற வில்லை. பணக்கார நாடுகளிலும் இது தோற்றுப் போயிருக்கிறது. தோற்றுத்தான் போகும் என்பதுதான் என் வாதம்.  சில விதிவிலக்குகளைத் தவிர, மற்ற அனைவர்க்கும் எக்காலத்திலும் மானியங்கள் அளிக்கப்படக்கூடாது.

நமக்கு 3 வழிகளே உள்ளன.

முதலாவது வழி, பொதுவுடைமையை முழுமையாக அனுசரிப்பது. இது தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. தோல்வியில்தான் முடியும். இல்லை என்று கூறுபவர்களுடன் விவாதித்து பயனில்லை.

இரண்டாவது வழி, நடைமுறைச் சாத்தியமில்லாத, நெடுங்காலத்திற்குத் தொடர முடியாத, பொதுநலன்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை அனுசரிப்பது. இன்று பெரும்பாலான நாடுகளில் இதுவே நிலை. தோற்றுப் போய்க் கொண்டிருந்தாலும் வெற்று உதாருடன் அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மையக்கருத்து.

மூன்றாவது வழி, எக்காலத்திலும் தொடரக்கூடிய, தாக்குப்பிடிக்கக் கூடிய, இயற்கையுடன் இயைந்து செல்லக்கூடிய முறை என்பது இன்றைய மோசமான மானிய திட்டங்களிலிருந்து வெளிவருவதுதான். இல்லையேல் விளைவுகளை நாம் அனைவரும் சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கும். தற்பொழுதைய உலக சமூகங்களை அவதானிக்கும்போது, நாம் அது போன்ற விளைவுகளை மேலும் கொடூரமாக சந்திக்க இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.

“காதல் என்பது பொதுவுடைமை” என்று ஒரு திரைப்படப் பாடல் வரும். காதலைப் போன்ற வர்த்தகப்படுத்த முடியாத குணாதிசயங்கள் பொதுவாக அனைவர்க்கும், பொதுவுடைமையாக இருந்து விட்டு போகட்டும். தோல்வியை ஒப்புக் கொள்வோம். பொதுவுடைமை கூறுகளை அதிகம் கொண்ட பயணத்தை இடை நிறுத்துவோம்.

சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு (Human Spirit) மனித சக்திக்கு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்குவோம். “எல்லார்க்கும் எல்லாம்” எதார்த்தத்திற்கு விரோதமானது, இயற்கைக்கும், அறிவியலுக்கும் எதிரானது.

நம் மரபுகளுக்கு எதிரானது.

முற்றும்.

19 Replies to “கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]”

 1. ” 80களில் பிரிட்டனின் பிரதமராக பதவியில் இருந்த திருமதி.மார்கரேட் தாட்சர், பதவியேற்றவுடனேயே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலைகளை ஆரம்பித்தார். வரலாறு காணாத அளவிற்கு எதிர்ப்புகளை சந்தித்தார். சில நாட்களுக்கு பிரிட்டனே ஸ்தம்பித்து விட்டது. ஒரே ஒரு படி கூட அவர் இறங்கி வர வில்லை. பொதுமக்களுக்கு தனியார்மயமாக்கத்தின் இலாபங்களை எடுத்துக் கூறினார். நெடுங்காலத்திற்கு பொதுத்துறையை அரசு கட்டி காப்பாற்ற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக பரப்பினார். யூனியன் மாஃபியா கும்பலின் எதிர்ப்பு பிசுபிசுத்து போனது. வழிக்கு வந்தார்கள். வேலைக்கும் வந்தார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் தனியார் மயமாக்கம் நடக்கவே செய்தது.
  பிரிட்டனின் வரலாற்றில் திருமதி. மார்கரே தாட்சர் “இரும்பு பெண்மணி” என்றே கருதப்படுகிறார். 1980ல் தன் கட்சியினரிடயே உரை ஆற்றுகையில் அவர் பேசிய இந்த வாக்கியம் பிரசித்தி பெற்றது. என் அரசு பொருளாதார தாராளமயமாக்கத்தை தொடர்ந்து செய்யும் என்று அழுத்தம் திருத்தமாக அவர் பேசியது.
  “You turn if you want to. The lady’s not for turning! “-

  மார்க்கரெட் தாட்ச்சரை போன்ற ஒரு இரும்பு பெண்மணி நமக்கு கிடைக்கமாட்டார். பதிலாக நாம் ஒவ்வொருவருமே அவரைப்போல ஆக வேண்டும். அப்போது தான் இந்தியா நிச்சயம் பிழைக்கும். இந்த 2012 -ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க நாட்டுக்கு பொருளாதார பேரழிவு ஏற்படும். அதனால் அமெரிக்காவில் ஏராளமாக முதலீடு செய்துள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, இந்தியா போன்ற நாடுகளும் பெரும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். ஆனால் என்ன கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் , மனம் தளராமல் போராடி நம் நாட்டை பாதுகாப்போம். அமெரிக்க நிதி உதவி கிடைக்காமல் பாகிஸ்தான் தீவிரவாதம் அழியப்போகிறது. எல்லாம் நன்மைக்கே என்று கொள்வோம். இன்பம், சோதனை இரண்டும் இணைந்ததுதான் உலக வாழ்க்கை என்பதை புரிந்துகொள்வோம்.

  வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

 2. அன்பு பாலாஜி
  தாட்சரிசத்தையும் ரீகனிசத்தையும் சிரமேற் கொள்வோர் ஹிந்துத்துவர்கள் அல்ல ஏன் ஹிந்துக்கள் என்று அழைக்கப்படகூடத்தகுதி அற்றவர்கள். ஏன் என்றால் சமூகம் என்பதே இல்லை தனிமனிதர்கள் மட்டுமே உள்ளனர். என்று சமூகத்தைப்பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காத ஆங்கிலேயர்கள் இவர்கள். நமது ஹிந்து சமுக அடிப்படையே சமூகம் தனிமனிதனைக்கட்டிலும் குடும்பம் முக்கியம், குடும்பத்தைக்காட்டிலும் கிராமம் முக்கியம், ஊரைக்கட்டிலும் நாடு முக்கியம் என்பது. இது ஹோலிசம் எனப்படும். இதற்க்கு மாறான இன்டிவிஜுவவலிசம் தாட்சர் ரீகன் போன்ற தீவிர வலது சாரி நியோ லிபரல்களுடையது. இந்த பணப்ப்பேய்களின் பொருளாதார சமூகக்கொள்கைகள் நம் சமூகத்தை அதன் ஒற்றுமையைக்குலத்துவிடும்.
  தடையற்ற வாணிகம் சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் என்பதெல்லாம் வடிகட்டின பொய்யுரைகள். அமேரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் பகாசுர பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாரத நாட்டை வேட்டைக்காடாக்கும் முயற்சி இந்த சந்தை அடிப்படை வாதம். உலகில் பெருகியுள்ள வன்முறைக்கு மூலம் இந்த ஆபிரகமியர்களின் சந்தை அடிப்படைவாதம்.
  ஹிந்து பாரம்பரியத்தில் எந்த ஒரு புரிதலும் இல்லாத வலது சாரிகளான அமெரிக்காவின் ஏஜெண்டுகள் ஹிந்துத்துவக் குடும்பத்தில் ஊடுருவி விட்டார்கள் போலும். இது பெரும் ஆபத்து.
  ஒருகாலும் எந்த ஒரு மெய்யான பாரதியனும் அமெரிக்காவுக்கு கொடி பிடிக்கமாட்டான்.
  விபூதிபூஷன்

 3. “கிராமப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிப்பது, மருத்துவரை நியமிப்பது, குறிப்பிட்ட அளவில் வரி வசூல் செய்து கொள்வது போன்றவை சரியான அணுகுமுறைதான்”.
  பாலாஜி
  அப்படிசெய்தால்
  பள்ளி ஆசிரியர் நியமத்தில் எந்த ஒரு நேர்மையும் இருக்காது. பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர்கள் ஆகியோரின் உறவினர்கள்தான் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

 4. “வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொது விநியோக நிறுவனங்கள் போன்றவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்”,
  பாலாஜி
  அந்நிய தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் திவாலானால் என்ன செய்ய. அந்நிய நாட்டிற்கு வாழ் பிடிக்கும் நீங்கள் ஹிந்துத்துவரோ பாரதீயரோ.

 5. “இந்தியாவின் எதிர்காலத்திற்காக” இதையெல்லாம் செய்துதான் தீர வேண்டும்”.
  பாலாஜி
  இந்தியாவின் எதிர்காலத்திற்கா? இல்லை அமெரிக்காவின் எதிர்காலத்திற்கா?, அதன் பொருளாதார நிலைப்புத்தன்மைக்கா?
  இந்தியா என்றால் எந்த இந்தியா படித்துவிட்டு பன்னாட்டு கம்பெனிகளில் பணியை எதிபார்த்து அடிமை சேவகம் செய்ய விரும்பும் ஒருசிலருக்கா. சொந்தக்காலில் நின்று உழைத்து முன்னேரத்துடிப்பவர்களுக்கா அல்லது உழைத்துக் ஓடாய் இருக்கின்ற சிறு குறு தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கா?.

 6. “எல்லார்க்கும் எல்லாம்” எதார்த்தத்திற்கு விரோதமானது, இயற்கைக்கும், அறிவியலுக்கும் எதிரானது.
  பாலாஜி
  யாருடைய யதார்த்தம் இது. யாருடைய அறிவியல் அது. மனிதன் ஒரு விலங்கு என்பது உங்கள் அறிவியல். அதன்படி எந்த விலங்குகளின் சமூகத்தில் எல்லாருக்கும் எல்லாம் இல்லை. ஒருசிலருக்கே மட்டற்ற தடையற்ற அரசியல் பொருளாதார அதிகாரம். பெரும்பாலான மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் வாட ஒருசிலர் போகத்தில் துய்க்க வழி வகுக்கும் பொருளாதார அமைப்புதான் சரியில்லை ஏன் எனில் அது நிலையில்லை, உண்மையில்லை வெறும் மாயை. தனிமனிதனை மையமாகக்கொண்ட அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை.
  எல்லார்க்கும் எல்லாம் என்பதே ஸ்ரீ ராம ராஜ்ஜியம். மகாகவி பாரதி சொன்ன கிருத யுகம் எழுக மாதோ என்று சத்திய யுகம் வரப்பணி செய்வதே உண்மையான ஹிந்துத்துவம். அமெரிக்காவிற்கு வால்பிடிக்கும் வலதுசாரி போக்கெல்லாம் போலி ஹிந்துத்துவம் அன்றி வேறில்லை.
  எல்லோரும் உயர்ந்த ஆண்மநேயராய் வாழும் சத்திய யுகம் சமைப்போம்.
  வாழ்க பாரதம் வெல்க மானுட நேயம்

 7. திரு.சிவஸ்ரீ.வீபூதிபூஷண்,
  With due respect, உங்கள் கருத்துடன் என்னால் ஒத்துப்போக இயலவில்லை. எனினும் உங்களின் மறுமொழிகளுக்கு நன்றி.

 8. பாலாஜி சார்,

  முதலில் இந்த தொடரை படிக்க ஆரம்பித்த போது மிகவும் சந்தோஷப்பட்டேன் ,பின்னர் நீங்கள் கூறிய சில விஷயங்களை ஏற்று கொள்ள முடியாமல் “கம்ம்யுனிஸ எதிர்ப்பை தாண்டி வேறு எங்கோ செல்கிறதோ” என்று
  மறுமொழி கூட எழுதியிருந்தேன் ..தற்போது படிக்கும் போது நீங்கள் கூறுவது சரியோ என்று தோன்றியது…..அனால் சிவஸ்ரீ அவர்களின் மறுமொழிகளை பார்த்த பிறகு சற்று குழப்பமாக உள்ளது …நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா…

  நமஸ்காரம்
  Anantha Saithanyan

 9. திரு.பாலாஜி அவர்களின் கருத்தே நேர்மையானதாக, இயற்கையானதாக, அரசியல் கலப்பற்றதாகத் தெரிகிறது. திரு.சிவஸ்ரீ.வீபூதிபூஷண் என்னதான் ஹிந்துத்துவம், பாரதீயம் என்று பேசினாலும், அவர் கம்யூனிசமே பேசுகிறார். கம்யூனிஸ்டுகள் எப்போதும் அவர்களது எதிரிகளை சிஐஏ ஏஜென்ட் என்பார்கள், ஆனால் தன்னையே அறியாமல் அவர்கள் ரஷியாவுக்கும் சீனாவுக்கும் கியூபாவுக்கும் ஏஜென்டாக இருப்பது அவர்களுக்கு தெரிவதேயில்லை.

  கம்யூனிசம் சர்வ உலகத்தையும் ஒரே குடையின்கீழ் சர்வாதிகாரம் செய்யும் ஆசை கொண்டது. அதற்கு மாற்றான நல்ல ஜனநாயகப்பூர்வமான அரசை ஏற்படுத்த எது முக்கியமோ (பொருளாதாரம்) அதைத்தான் திரு.பாலாஜி அவர்கள் சொல்வதாக நினைக்கிறேன்.

 10. தொடர் இன்னும் நீண்டிருந்தால் இன்னும் பல நல்ல விளக்கங்கள் வந்திருக்கும். அதையொட்டி ஆரோக்கியமான விவாதங்களும் நடந்திருக்கும். இப்படி சீக்கிரமே முடித்துவிட்டீர்களே! பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

 11. திரு.அரசன்,
  இக்கட்டுரையை இன்னும் பெரியதாகவே எழுதியிருந்தேன். முக்கியமாக அதிகமான புள்ளிவிவரங்களை தொகுத்து பின் நீக்கி விட்டேன். ஏனெனில் அது வரட்டு வரட்டென்று ஆகிவிடும். அடுத்து முன்னேறிய நாடான அமேரிக்காவின்
  பொருளாதார கூறுகள் பலவற்றைக் குறித்து எழுதியிருந்தேன். ஆனால், இந்திய சூழலில், இன்னும் அமேரிக்காவிற்கு எதிரான பொதுபுத்தி அதிகமாக இருப்பதால், குறைந்த அளவில் வைத்துக் கொண்டேன்.

  நான் பா.ஜ.கவிற்குத்தான் ஆதரவு அளிக்கிறேன் என்றாலும், திரு.மோடி அவர்கள் பிரதமராக வர வேண்டும் என்று விரும்பினாலும், நான் ஒன்றும் அல்லக்கையில்லை. சில கொள்கை முடிவுகளில் என்னால் பா.ஜ.கவுடனும், ஏன்
  திரு.மோடி அவர்களிடமிருந்தும் கூட எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.

  உதாரணத்திற்கு, இந்திய-அமேரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க எதிர்க்கிறது. நான் ஆதரிக்கிறேன்.
  சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை பா.ஜ.க எதிர்க்கிறது. நான் ஆதரிக்கிறேன்.
  (ஆனால் கூடங்குளத்தை ஆதரிப்பார்கள். ஏன். So simple! போராட்டம் க்றிஸ்தவர்களால நடத்தப்படுகிறது. எனக்கு இந்தப் பிரச்சினையில்லை. ஹிந்துக்கள் அணு உலையை எதிர்த்தாலும், அவர்களை எதிர்க்கவே செய்வேன்!)

  (WikiLeaks வெளியிட்ட தகவலின்படி, பா.ஜ.கவின் தலைவர்கள் வெளியில், அரசியல் காரணங்களுக்காக அமேரிக்காவிற்கு எதிராக சாம்பிராணி போட்டாலும், தனிப்பட்ட முறையில் அமேரிக்க ஆதரவையே கொண்டுள்ளனர் என்பதை
  நினைவில் கொள்ள வேண்டும்.)

  அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இடதுசாரி பொருளாதார சிந்தனைகளைக் கொண்டவர்கள் வெளிப்படையாக அதை அவ்வப்பொழுது பேசுகின்றனர். ஆனாலும், பொருளாதார தாராளமயமாக்கலையே அதிகம்பேர் விரும்புகின்றனர்.

  அதேபோல், பா.ஜ.கவிலும் அதைச்சார்ந்த ஹிந்து அமைப்புகளிலும், இரு வேறு கருத்துகளைக் கொண்டுள்ளோர் இருக்கின்றனர். பொருளாதார தாராளமயமாக்கலை ஆதரிப்பவர்களே அதிகம். அதே நேரத்தில், சுதேசி பொருளாதாரம், அமேரிக்க எதிர்ப்பு, இந்தியாவால் எல்லாம் முடியும் என்ற ரீதியில் உலகை அவதானிப்போரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். நான் இவர்களுடன் முற்றும் முழுவதுமாக விலகி நிற்கிறேன் என்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

  (எனக்கு சத்தியமாக இவர்கள் அளிக்கும் பொருளாதார பிம்பம் புரியவில்லை. இவர்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்துவதும் சரியாக இருக்காது. ஆனால் வேறு எப்படி அழைப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை.)

  பா.ஜ.க ஆட்சியில் இல்லாததால், இந்த குழுவினரின் சத்தம் அதிகமாக கேட்கிறது. திரு.வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இவர்கள் எங்கு இருந்தார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? என் கருத்துப்படி திரு.மோடி பிரதமரானால் இவர்கள் மீண்டும் Dormant நிலைக்கு சென்று விடுவார்கள். (எனக்குப் பிடித்தமான இந்திய இரயில்வேயை விற்கும் வேலையில் இறங்கிவிடலாம்)

  அடுத்து, நான் கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதைப் போன்றே, பொது நலன்களை (அதாவது மானியங்களை அடிப்படையாகக் கொண்ட) சார்ந்த பொருளாதாரத்தை அனுசரிப்போரையும் சேர்த்தே நான் எதிர்த்துள்ளேன். பா.ஜ.கவில் உள்ள இந்த
  குழுவினரையும் சேர்த்துத்தான் நான் கூறுகிறேன்.

  அடுத்து, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள், ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி போன்ற அங்காடிகள் இந்தியாவில் இருப்பதை பேச மறுத்து விடுவார்கள். இந்திய வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்தால் நேர்மையான (!) விலையை கொடுப்பார்களா? வெள்ளையன் வந்தால் மட்டும்தான் ஏமாற்றுவானோ? இந்தியாவில் உள்ள வியாபாரிகள் நேர்மையின் சிகரமோ?

  என்னைப்பொருத்தவரை வியாபாரி என்பவன் உலகம் முழுவதும் ஒரே இனம்தான். வியாபாரம் செய்வான். இலாபத்தையோ நஷ்டத்தையோ அடைவான். நேர்மையின் சிகரமாக வியாபாரத்தை செய்ய என் அப்பன் சங்கரனின் சிஷ்ய கோடிகளைத்தான் தேட வேண்டும். ஒரே வியாபாரத்தில் ரிலையன்ஸ் இருக்கலாம். வால்மார்ட் இருக்கக்கூடாதா? அழுகும் விளை பொருட்களையும், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் காத்து வியாபாரம் செய்ய 50 இலட்சம் கோடி ரூபாய்கள் தேவை. இந்திய அரசால் இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் கேட்கும் 35000 கோடி ரூபாயைக்கூட அளிக்க முடியவில்லை. சோமாலிய பைரேட்டுகளைப் போன்று கொள்ளைதான் அடிக்க வேண்டும். 50 இலட்சம் கோடி ரூபாயை நம் அரசாலோ, தனியார் நிறுவனங்களாலோ புரட்ட முடியாது என்ற அடிப்படை உண்மையை நாம் எப்போது ஏற்க போகிறோம். நம்மால் முடியும், முடியும் என்று எவ்வளவு நாள் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோம்?

  நான் அமேரிக்காவை அதிகமாக ஆதரிக்கத்தான் செய்கிறேன். இல்லை என்றெல்லாம் நான் கூறத் தயாரில்லை.

  அறிவியல் உபகரணங்களைக் கண்டுபிடித்து, பின் அதை சந்தைபடுத்தி, பின் விளம்பரப்படுத்தி, சில தசாப்தங்கள் மேலும் ஆராய்ச்சிகள் மூலம் அதன் விலையை பெருமளவில் குறைத்து சாதாரண மக்களுக்கும் கிடைக்கச்செய்வது
  ஒரு மிகப்பெரிய கலை. இதில் வெள்ளையர்கள் இந்தியர்களை விட மிக மிக அதிக உயரத்தில் உள்ளனர்.

  கிறிஸ்தவ பரப்பல் போன்ற பிரச்சினைகளை இதற்குள் நான் நுழைக்க விரும்ப வில்லை.

  தொழில்நுட்பம், வங்கி, காப்பீடு செயல்முறைகள், வியாபார யுக்திகள் என்று நவீன பொருளாதார முறைமைகள் மேற்கத்தியர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு முதிர்ந்துள்ளன. இதை மறுப்பது மூடத்தனமே!

  இந்திய மொத்த பொருளாதார உள்நாட்டு உற்பத்தியையும், அமேரிக்க நாட்டினுடையதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துவிடும். நாம் இந்த 20 வருடங்களில்தான் சில படிகள் ஏறியுள்ளோம். அமேரிக்கா சில படிகள் சறுக்கியிருந்தாலும், நம்மைவிட பல படிகள் உயர்ந்துள்ளது. வெட்டி வீராப்பெல்லாம் எனக்கு கிடையாது.

  கடைசியாக இப்படி முடிக்கிறேன்.
  மானியங்களை நான் இயற்கை நியதிகளின் அடிப்படையில் முழுவதுமாக எதிர்க்கிறேன். ஒரு பேச்சிற்காக அதை அனுசரித்தாலும், எல்லோர்க்கும் வாழ்வாதாரங்கள் அளிக்கத் தேவைப்படும் பணம் நம்மிடம் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். 1+1=2 என்பதைப் போன்ற குழந்தை கணக்கு இது. நம்மிடம் தேவையான பணம் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. இந்தியாவில் உள்ள மானிய திட்டங்களை நெடுங்காலத்திற்கு தொடர வாய்ப்பே இல்லை.

 12. ஸ்ரீ பாலாஜி தன்னுடையக் கொள்கை நிலைப்பாட்டைத்தெளிவாக கூறியுள்ளார். அது நிச்சயம் பாராட்டிற்குரியது. அவரது சித்தாந்தம் தெளிவாக அமெரிக்க ஆதரவிலான வலது சாரி கருத்தியல். அது ஹிந்துத்துவம் அன்று. ஏன் எனில் ஹிந்துத்துவம் என்பது ஸ்வதேசி மட்டுமே.
  ஸ்ரீ பாலாஜி
  “அடுத்து, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள், ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி போன்ற அங்காடிகள் இந்தியாவில் இருப்பதை பேச மறுத்து விடுவார்கள். இந்திய வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்தால் நேர்மையான (!) விலையை கொடுப்பார்களா? வெள்ளையன் வந்தால் மட்டும்தான் ஏமாற்றுவானோ? இந்தியாவில் உள்ள வியாபாரிகள் நேர்மையின் சிகரமோ? நேர்மையின் சிகரமாக வியாபாரத்தை செய்ய என் அப்பன் சங்கரனின் சிஷ்ய கோடிகளைத்தான் தேட வேண்டும். ஒரே வியாபாரத்தில் ரிலையன்ஸ் இருக்கலாம். வால்மார்ட் இருக்கக்கூடாதா? ”
  பாலா சிறு வணிகத்தில் இந்தியப் பெரும் தொழில் நிறுமங்களின் முதலீட்டையும் எம்மைப்போன்ற சுதேசிகள் ஏற்பதில்லை. சிறுவணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானால் என்ன செய்ய? வணிகர்கள் அழிந்து போக அன்னிய வியாபாரிகள் ஏகபோகமாக விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்யும் போது விவசாயிகளீன் வாழ்வாதாரமும் கேள்விககுறியாகும். என்பதே எம் அச்சம்.

  வலது சாரி சித்தாந்தம் அது முதன்மைப்படுத்தும் சுதந்திரமான சந்தை என்ற கருத்து பொய் என்பதை வணிகத்தில் எங்கும் நேர்மையில்லை என்ற பாலாஜியின் கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.
  ஸ்ரீ பாலாஜி
  “பா.ஜ.க ஆட்சியில் இல்லாததால், இந்த குழுவினரின் சத்தம் அதிகமாக கேட்கிறது. திரு.வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இவர்கள் எங்கு இருந்தார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? என் கருத்துப்படி திரு.மோடி பிரதமரானால் இவர்கள் மீண்டும் Dormant நிலைக்கு சென்று விடுவார்கள். (எனக்குப் பிடித்தமான இந்திய இரயில்வேயை விற்கும் வேலையில் இறங்கிவிடலாம்)”
  இது உண்மையானால் அதாவது இந்திய தேசத்தினை அன்னியர்க்கு சந்தையாக்கும் பொருளாதாரக்கொள்கைகளை திரு மோடி கொண்டுவருவாரானால். திரு மோடி மட்டுமல்ல பாஜகவோ இருக்காது இன்று தேய்ந்து கொண்டிருக்கும் இத்தாலிய சோனியா காங்கிரஸ் போல் அதுவும் அழிந்துவிடும். ஒரு புதிய சுதேசி இயக்கம் இந்தியாவில் நிச்ச்யம் மலரும். பாரத தேசம் என்பது அரசு(state) மட்டும் அல்ல ஒருபெரும் மக்கள் தொகுதி மட்டுமல்ல அது ஒரு சமூகம் ஒரு நெடிதுயர்ந்த பாரம்பரியம். அதை மக்கள் பொருட்களை வாங்கவும் விற்கவும் கூடும் ஊடாடும் சந்தையாக சுருக்கிவிடக்கூடாது.

  (edited and published)

 13. திரு அரசன்
  திரு.சிவஸ்ரீ.வீபூதிபூஷண் என்னதான் ஹிந்துத்துவம், பாரதீயம் என்று பேசினாலும், அவர் கம்யூனிசமே பேசுகிறார். கம்யூனிஸ்டுகள் எப்போதும் அவர்களது எதிரிகளை சிஐஏ ஏஜென்ட் என்பார்கள், ஆனால் தன்னையே அறியாமல் அவர்கள் ரஷியாவுக்கும் சீனாவுக்கும் கியூபாவுக்கும் ஏஜென்டாக இருப்பது அவர்களுக்கு தெரிவதேயில்லை.

  திரு பாலாஜி மறும் அரசு அவர்களுக்கு முதலில் கம்யூனிசம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்பது யாது என்று புரிந்து கொள்ளுங்கள். அனைத்து சொத்தும் அரசுடமை அனைத்து த்தொழில்களும் அரசின் வசம். அதனை நிர்வகிப்பது பாட்டாளி வர்க சர்வாதிகாரம் அதாவது கம்யூனிஸ்டுகட்சி என்பது பொதுவுடமை கம்யூனிசம். நான் அதனை சொல்லவில்லை. நான் சொல்வது மக்கள் நல அரசு(ஆங்கிலத்தில் welfare state என்று சொல்வார்கள்). அரசாங்கம் போலீஸ் மற்றும் ராணுவத்தை மட்டும் நிர்வகிக்கட்டும் போதும் என்பது தலையிடாக்கொள்கை.ஸ்ரீ பாலாஜி போன்ற வலது சாரிகள் அதனை விரும்புவார்கள்.
  என்னைப்பொருத்தவரை சந்தை(மார்கெட்) என்பது ஒருசிலரின் அதிகாரத்தின் கீழே எப்போதும் இயங்கு கிறது அதில் நேர்மை ஜனனாயகம் எதுவும் இருப்பதில்லை. ரவுடிகளின் ராஜ்யம் அங்கே எப்போதும் இருப்பதால் மக்களை க்காக்க அரசு வலுவானதாக திட்டமிடுவதாக வணிகத்தினை தொழில் துறைகளை ஒழுங்கு படுத்துவதாக. சுற்றுச்சூழலைப்பாது காப்பதாக அமையவேண்டும். இல்லாவிட்டால் இயற்கை வளங்களையும் மக்களையும் கொள்ளையடித்துவிடுவார்கள் நேர்மையற்றவர்கள். ஆக நான் பேசுவது ஸ்மூக நலம், மக்கள் நலம், ஸ்வதேசி அன்றி நேர்மையற்றவர்க்கு வால்பிடிப்பது அன்று.

 14. ஸ்ரீ பாலாஜி போன்ற வலதுசாரிகள் ஸ்வதேசி சிந்தனையான ஹிந்துத்துவத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவிலான உலகவங்கி மற்றும் பன்னாடு நிதியத்தின் பொருளாதரக் கொள்கைகளுக்கு ஆதரவாக கொண்டு செல்ல முயல்கின்றனர். அவர்களுக்கு சிந்தனைக்கு அடியேன் சொல்வது
  ஹிந்து என்பது சர்வே ஜனா சுகினோ பவந்து என்பதை விழுமியமாகக்கொண்டது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்பார் தாயுமான சுவாமிகள் இதையே தமிழ் மொழியில். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி. இந்த அடிப்படையில் எல்லாரும் உணவு, உடை, வீடு, கல்வி, வேலை, சுகாதாரம்(மருத்துவ உதவி) இவையெல்லாம் பெற்றிட வழிவகுக்கும் பொருளாதார சமூக அரசியல் அமைப்பினை சுதேசிய வழியில் உருவாக்குவதே உண்மையான ஹிந்துத்துவம்.
  வலதுசாரி பொருளாதார சிந்தனை குறிப்பாக அன்னிய முதலீடு பாரத சமூகம், பண்பாடு ஆகியவற்றை சிதைக்கும் அணுகுண்டு.கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு சரியான வாய்பு தடையற்ற சந்தைப் பொருளாதாரம் அன்றி வேறில்லை. பொருளாதாரவளர்ச்சி ஒன்றையே கொள்ளாமல் முழுமையான சமூக மனித மேம்பாடு பாரத தேசம் காண வலுவான அரசு சமூகக்கொள்கை, சமூக நல மற்றும் சமூக வளர்ச்சித்திட்டங்கள் தேவை. பாரததேசத்தின் பொருளாதாரத்தில் அரசியலில் அன்னியர் தலையீடு எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைக்கப்படவேண்டும். இல்லையெனில் 1947 இல் சுதந்திரம் பெற்றது பயனற்றுப்போகும்.
  ஜெய ஜெய பாரதம் ஜெய வந்தேமாதரம்.
  விபூதிபூஷண்

 15. ஸ்ரீ பாலாஜி
  “மானியங்களை நான் இயற்கை நியதிகளின் அடிப்படையில் முழுவதுமாக எதிர்க்கிறேன். ஒரு பேச்சிற்காக அதை அனுசரித்தாலும், எல்லோர்க்கும் வாழ்வாதாரங்கள் அளிக்கத் தேவைப்படும் பணம் நம்மிடம் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். 1+1=2 என்பதைப் போன்ற குழந்தை கணக்கு இது. நம்மிடம் தேவையான பணம் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. இந்தியாவில் உள்ள மானிய திட்டங்களை நெடுங்காலத்திற்கு தொடர வாய்ப்பே இல்லை”.
  1. பாலாஜி எந்த இயற்கையை நீங்கள் சொல்லுகிறீர்கள். அந்த இயற்கையின் படி இந்த முன்னேறிய நாடுகளில் அதாவது உங்கள் அமெரிக்காவில் உள்ள அத்துணை மானியத்தையும் நீக்கிவிட்டு பேசச்சொல்லுங்கள்.
  2. எல்லாருக்கும் வாழ்வாதாரத்தை அளிக்கச்சொல்லவில்லை. இருப்பதை பன்னாடு கம்பெனிகளுக்காக பிடுங்காதீர்கள் என்கிறோம்.
  3. அரசிடம் பணம் இல்லை என்று பஞ்சப்பாட்டு பாடுகிறீர்களே. நடுத்தரவர்கத்தின் மீது வருமானவரியென்று அரசு வசூலிக்கின்ற அளவிற்கு கம்பெனிகளிடம், பெரு முதலாளிகளிடம் நல்ல வரி விதித்து வசூல் செய்யலாமே. நான் கேள்விப்பட்டபடி “The Indian corporate sector is most under taxed in the world”. அவர்களிடம் வசூல் செய்தல் ஒருவழி. மற்றோரு வழி நாட்டின் இயற்கை வளங்களை நியாயமான முறையில் தனியாருக்கு ஏலம் விட்டு வருவாய் ஈட்டலாம் என்பது. இன்னும் கூட ஒன்று உண்டு அது அனாவசியமாக் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக்கூறி பலப்பல சலுகைகளை கம்பெனிகளுக்கு அளிப்பதை குறைத்தல். ஸ்ரீ பாலாஜி உங்களுக்குத்தெரியும் கோடிக்கணக்கில் நாட்டுடமையான வங்கியில் கடன் பெற்றுவிட்டு் திரும்ப கட்ட்டாத கோடீஸ்வர நிறுவனங்கள் பெயர்கூட வெளியிடப்படவில்லை. அதேசமயம் சில ஆயிரம் கடனுக்காக நிலத்தினை இழந்த விவசாயிகள் பலர் உண்டு என்பது.
  திரு பாலாஜி போன்றவர்கள் விவாத மேடைக்கு வாருங்கள். நீங்கள் யாருக்காக யாரை மையப்படுத்தி சிந்திக்கிறீர்கள் என்பதனை அருள் கூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

 16. ஆமாம், மரண வியாபாரிதான்:-

  பெரும்பாலான டம்மி பீஸ் அரசு ஊழியர்களின் தரமற்ற வேலை,
  சோம்பேறித்தனம், யூனியன் மாஃபியாத்தனம், திமிர், பதவியினால் வரும் கர்வம்,
  அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குணாதிசயங்களுக்கு மரண வியாபாரிதான்;

  கம்யூனிஸ கொரில்லாத்தனத்திற்கு மரண வியாபாரிதான்;

  தீவிரவாதம், நக்ஸல்வாதம் போன்றவற்றிற்கு மரண வியாபாரிதான்;

  இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு மரண வியாபாரிதான்;

  போலி மதச்சார்பின்மைக்கு மரண வியாபாரிதான்;

  குறியீட்டு அரசியலுக்கு மரண வியாபாரிதான்;

  மனிதர்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மரண வியாபாரிதான்;

  “ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள்” என்ற புராணத்தை பாடிக்கொண்டே
  அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கும் சோஷலிஸ சித்தாந்தத்திற்கு
  மரண வியாபாரிதான்;

  புது டில்லியில் வெள்ளைக்காரன் காலத்தில் அரசாங்கத்தின் பெரும்புள்ளிகளுக்கு,
  Leutens பகுதியில் கட்டப்பட்ட 65 அரண்மனை போன்ற பங்களாக்களில், 65
  வருடங்களாக தாத்தா, பையன் , பேரன் என்று அரசு செலவில், சோஷலிஸத்தை
  பேசிக்கொண்டே ஏழைகள் கட்டும் வரியிலும் ராஜபோக வாழ்க்கை வாழும்
  பா.ஜ.க உட்பட அனைத்து கட்சிகள், பெரும்புள்ளிகள் போன்ற High Caste / High Class
  மேட்டிமைவாதத்திற்கு Low Caste / Low Classல் பிறந்த எங்கள் தலைவர்
  சத்தியமாக மரண வியாபாரிதான்;

  உனது அசுர வேட்டை இனிதே தொடங்கட்டும்!

 17. ஒரு குறிப்பு: என் மறுமொழியில் எழுதிய Leutens பங்களாக்கள் குறித்த Tavleen Singhன் கட்டுரை Indian Expressல் வந்தது. புது தில்லியில் உள்ள பெரும்புள்ளிகள்
  ஏன் திரு.மோடியை எதிர்க்கிறார்கள்? என்ற அற்புதமான கட்டுரை அது.

 18. இந்தியக் கனவு-திரு.மோடியின் பார்வையில்
  நேற்று 15/09/2013 ஹரியானாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திரு.மோடி
  அவர்கள் பேசுகையில், இந்தியா தனக்குத் தேவையான ஆயுதத்தளவாடங்களின்
  பெரும்பகுதியை இறக்குமதிதான் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலை
  மாறி, நமக்குத் தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதியை நாமே உற்பத்தி
  செய்து கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கு
  ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேற வேண்டும் என்றார்.

  எனக்குத் தெரிந்தவரை, சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் எந்த
  அரசியல்வாதியும் நினைத்தும் பார்க்காத சிந்தனை இது. சாமான்யன் அனுசரிக்க
  வேண்டிய அஹிம்சையை, அரசாங்கத்திற்கே அளித்து அழகு பார்த்த
  திரு.காந்தியிடமிருந்து தொடங்கிய வாழ்க்கை நம்முடையது. அரசாட்சியில் கூட
  ஆயுதங்களுக்கான தேவையை புரிந்து கொள்ளாமல், நடைமுறைக்கு
  சாத்தியமில்லாத “உலக அமைதி” புராணத்தைப் பாடி வருடங்களை கடத்தியவர்
  திரு.நேரு. பின் வந்த காலங்களிலும், நாட்டின் தேவைக்கு மாத்திரமாவது
  ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று சிலர் பேசவாவது
  செய்தனர். ஆனால் ஆயுதங்களை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து அதை
  பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து, பணத்தையும் சம்பாதிக்க வேண்டும்; உலக
  அரங்கில் கௌரவத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்ற திரு.மோடியின் பேச்சு
  அதி அற்புதமானது. 65 ஆண்டு கால இந்தியர்களின் சப்பையான மனநிலையை,
  நேரடியாக, தைரியமாக சுண்டி விட்ட பேச்சு இது.

 19. @Balaji: Manufacturing weapons and exporting them is fine, but India should not go in big brother America’s path of peeking its nose in others territory. The neighbouring countries should have a respect( bayam kalanda mariyaadai) for India and not compromising in our security, we should be going in this path. Hope Modi will be able to take us in the right direction.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *